பசி




காலையில் “மொட மொடத்த யூனிபார்ம்” மாட்டியவுடன், அவன் மனைவி சொன்னாள், அஞ்சு நிமிசம் இருங்க, இட்லி ரெடியாயிடுச்சு, சாப்பிட்டுட்டு போலாம்.
வேணாம், இன்னைக்கு ‘மினிஸ்டர் வர்றாரு’ காலையில ‘கேம்ப்ல’ சாப்பிட்டுட்டு அப்படியே ஸ்பாட்டுல இறக்கி விட்டுடுவாங்க. மினிஸ்டர் அங்கிருந்து போனப்புறம் கேம்ப்லயே மதியம் சாப்பிட்டுட்டு அப்படியே ஸ்டேசன் வந்துடுவேன். வண்டியை எடுத்து ஸ்டேசனை நோக்கி முறுக்கினான். அங்கு ஆஜர் கொடுத்து கிளம்ப வேண்டும்.
நல்ல வெயில் சூடு உடல் முழுவதும் பரவி வியர்வையை தானாக வெளியேற்றி கொண்டிருந்தது. தலையில் சுரக்கும் வியர்வையை தொப்பியை கழட்டி துடைத்து கொண்டவன், காலில் சுரக்கும் வியர்வையை ஷூவை கழட்டி துடைத்து கொள்ள முடியாமல் தவித்தான்.

உடையும் முரட்டு துணியாய் இருந்ததால் வியர்வை அப்படியே உடையோடு ஒட்டி கச கசவென ஒரு வித ‘அசூயை’ உருவாகியது. அங்கும் இங்கும் சுற்றி பார்த்தான், உட்கார அக்கம் பக்கம் ஒரு திண்டோ, கல்லோ கூட காணப்படவில்லை. ஒரு மரம் கூட இந்த ரோட்டில் காணப்படவில்லை.
தேசிய நெடுஞ்சாலை வேறு, வாகனங்கள் கொஞ்சம் கூட வேகத்தை குறைக்காமல் அவனை கடந்து சென்று கொண்டிருந்தன. அவ்வப்பொழுது அதிகாரிகள் அங்கும் இங்கும் ‘ஜீப் காரில்’ பறக்க இவனுக்கு எரிச்சலாய் வந்தது.
அவசரமாய் ‘இயற்கை உபாதையை’ கழிக்க வேண்டும். எங்கு போவது. கொஞ்ச தூரம் போனால் ஒரு ‘வேலி’ தெரிந்தது. அதை ஒட்டி கொஞ்சம் புதர் செடிகள் தெரிந்தன. அங்கு போய் இயற்கை உபாதையை கழிக்கலாம்.
ஆனால் அதற்குள் யாராவது அதிகாரி அந்த வழியாக வந்து இவனை காணாமல் தேடினால் ! அவ்வளவுதான், இவ்வளவு நேரம் நின்றது பலனில்லாமல் அவர்களிடம் கண்டபடி பேச்சு வாங்கவேண்டும்.
பரவாயில்லை என்று இங்கு வந்து ஒதுங்கினாலும் எவனாவாது செல்போனில் படம் எடுத்து அதை வெளியிட்டு “பார்த்தீர்களா சீருடையாளரின் பணி லட்சணத்தை” என்று தலைப்பிட்டு வெளியிடுவான். எங்காவது தப்பு தண்டா நடந்தா, இல்லை நல்ல விஷயங்கள் நடந்தா, அதை படம் பிடிச்சு போட்டா கூட சந்தோசமாயிருக்கும், இந்த மாதிரி விசயங்களை போட்டு நம்ம மான மரியாதையை கெடுக்காறாங்க, தனக்குள் பேசிக்கொண்டான்.
இப்படி வெளியிட்டு இரசிப்பவனை, ஒரு நாள் இப்படி மூன்று, நான்கு மணி நேரம் இந்த வெயிலில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்காமல் நிற்கும் தண்டனை கொடுத்தால் அவன் என்ன செய்வான் ? அவசரத்தை அடக்கிக்கொண்டு இப்படி நிற்கும்போது..! அதையும் பார்க்கவேண்டும்.
இப்படி நினைத்தாலும், மனதுக்குள் சிரித்தபடி, அவன் கண் முன்னால் வந்தா படம் பிடிப்பான், எங்காவது வசதியாக உட்கார்ந்துட்டுத்தான நம்மளை படம் பிடிப்பான். என்ன செய்ய முடியும்?
இன்னும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டுமோ? அந்த சூட்டின் எரிச்சலில் அவனை தாண்டி சென்ற அதிகாரியின் வண்டியை கவனிக்காமல் நின்றான். அவர் தன் வண்டியின் ஹாரனை ஒலிக்க விட்டு இன்னும் அரை மணி நேரம் சொல்லி விட்டு பறந்தார்.
இன்னும் அரை மணி நேரமா? இவனால் தாங்க முடியவில்லை, ஆனது ஆகட்டும், வேகம் வேகமாக நடந்தான். அந்த வேலியை அடைந்தவன் புதர் அருகே நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் அவனை கண்டு கொண்டதாக தெரியவில்லை அந்த புதரை விலக்கி கொஞ்சம் உள் பக்கமாக சென்றான்.
ஐந்து நிமிடங்களில் வெளியில் வந்தவனுக்கு “அப்பாடா” என்றிருந்தது. வேகம் வேகமாக தான் நின்ற இடத்துக்கு வந்தான். வரும்போது வலது காலில் ‘சுருக் சுருக்’ என குத்துவது போல் இருந்தது. நடக்க நடக்க வலி அதிகமாக தெரிந்தது. இங்கேயே ஷூவை கழட்டலாமா யோசித்தான், வேண்டாம், வலியோடு நாம் நின்ற இடத்துக்கே போய் விடலாம்,
நொண்டி நொண்டி நின்ற இடத்துக்கே போனவன், அவசரமாய் தன்னுடைய ஷூவை கழட்டி எறிந்தான். அதற்குள்ளாகவே சாக்சில் கச கசவென்ற ஈரப்பசையுடன் இரத்தம் வெளி வந்திருந்தது.
சாக்சையும் வேகமாய் கழட்டினான். முள் ஒன்று பாதி உடைந்த நிலையில் குத்தி நின்றது. ஒரு காலில் நின்று முள் குத்திய காலை முட்டி வரை எடுத்து “முள்ளை” பிடுங்க முயற்சி செய்தான். தடுமாற்றமாய் இருந்தது. கீழே விழுந்தால் அசிங்கமாகி விடும்.
சைரன் ஓசையுடன் ஜீப் கார் அவனை கடந்து செல்ல திடுக்கிட்டு சட்டென அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டு நிமிர்ந்து நின்றான்.
ஜீப் கார் அவனருகே நின்று முன்னால் உட்கார்ந்து இருந்த அதிகாரி அவனை சைகை காட்டி அழைத்தார். அவன் ஒரு காலில் ஷூவுடன் மற்றொரு காலை நொண்டியபடி ஜீப்பருகே ஓடினான்.
என்னயா? அவனை மேலும் கீழுமாய் பார்த்தார். எந்த ஸ்டேசன்?
பி ஒண்ணு சார், தடுமாற்றமாய் பதிலளித்தான். பேர் என்ன?
பழனியப்பன் சார், சொல்லிவிட்டு சார் முள் குத்திடுச்சு சார், வலது காலை தூக்கி காண்பிக்க அதில் இரத்தம் மெல்ல வடிந்து கொண்டிருந்தது.
நீ முடிச்சுட்டு கேம்ப்புக்கு வந்துடு, நீ கிளம்புயா, டிரைவரிடம் சொல்ல ஜீப் கார் அந்த இடத்தை விட்டு பறந்தது.
போச்சு எல்லாம் போச்சு, இனி இந்த வெயில்ல மினிஸ்டர் போன பின்னால கேம்ப்புக்கு போய் அவங்க கிட்ட ‘மெமோவா’ ‘பனிஸ்மெண்டோ’ வாங்கியாகனும், தன் விதியை நொந்தபடி நொண்டி நொண்டி தான் நின்ற இடத்துக்கே சென்றான்..
கடவுளே எங்காவது சாய்ந்து நிற்கவாவது ஒரு தூண் கிடைத்தால் போதும், அதில் உடம்பை சாய்த்தாவது இந்த முள்ளை எடுத்து விடலாம்.
அவன் அதிர்ஷ்டம் சற்று தொலைவில் சிக்னல் போர்டு ஒன்று ஒற்றை கம்பியில் நின்றிருந்தது. நொண்டி நொண்டி அந்த கம்பி அருகே சென்றவன், மெல்ல தன்னுடலை அதன் மீது சாய்ந்து வலது காலை தூக்கி தன் தலையை கீழே குனிந்து குனிந்து ஒரு வழியாய் அந்த முள்ளின் முனையை தன் நகத்தின் நுனியில் பிடித்து மெல்ல மெல்ல வெளியே இழுக்க அப்பாடி.. முள் வெளியே வர கொஞ்சமாய் இரத்தம் வெளி வந்து நின்றது. கடு கடுவென்ற வலி போயிருந்தது. காயத்தின் எரிச்சல் மட்டும் இருந்தது.
மெல்ல நின்ற இடத்துக்கே வந்தவன், இரத்தம் வந்து ஈரமாயிருந்த சாக்சையே எடுத்து போட்டு கொண்டான். ஷூவையும் மாட்டியவனுக்கு ஏதோ பெரிய சாதனை செய்தது போல இருந்தது.
சைரனுடன் ஒரு போலீஸ் ஜீப் அவனை கடந்து செல்ல சட்டென விரைப்பானான். ஆனால் அதன் பின் ஒன்றும் வரவில்லை. உடல் இறுக்கத்தை தளர்த்தி மீண்டும் எரிச்சலுக்கு போனான்.
காவல் துறை வேன் ஒன்று அவனருகே வந்து அவனை அழைத்தது. இவன் அதனருகில் செல்ல வா “புரோகிராம் கேன்சலாயிடுச்சு” மந்திரி அப்படியே பிளைட்டுல சென்னை கிளம்பிட்டாராம்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வெயிலில் நின்றிருக்கிறோம், மனதுக்குள் நினைத்தாலும் தன்னை கேம்பில் வந்து பார்க்க சொல்லி சென்ற ஆபிசர் சொன்னது ஞாபகம் வர பயத்துடனே வேனில் ஏறி உட்கார்ந்தான்.
பசி வயிற்றை கிள்ளியது. காலையில் சரியாக ஒன்றும் சாப்பிடவில்லை. இவன் காலையில் அங்கு போய் சேரும்போதே எல்லாம் தீர்ந்திருந்தது. சரி பரவாயில்லை என்று இங்கு வந்து நின்ற பின்னால், வெயில் ஏற ஏற கண்னை இருட்டு கட்டியது. எப்படியோ சமாளித்து முடித்து விட்டோம், மனதுக்குள் பாராட்டிக்கொண்டான். அங்கு நின்றிருந்த எல்லோரையும் ஏற்றிக்கொண்டு வேன் ‘மெயின் காம்ப்’ இடத்துக்கு வந்து சேர்ந்தது.
பசி வயிற்றை கிள்ள அவசர அவசரமாக சாப்பிடும் இடத்துக்கு சென்று கொண்டிருந்தவனை ஐயா அழைக்கிறார். ஒரு காவல்காரர் அவனை அழைத்தார்.
பக்கென்றது., கடவுளே பசியில் இருக்கிறேன், சாப்பிட்டு விடலாமே, என்று மனம் துடித்தது. கூப்பிட வந்தவர் அவனை அழைத்து போகாமல் விட மாட்டார் போலிருக்கிறது, அருகிலேயே நின்றார்.
பரிதாபமாய் அவரை பார்த்தவன் சரி வாங்க போய் பார்க்கலாம் அவருடன் நடந்தான்.
அவர் சாப்பிட போயிருப்பதாக சொன்னார்கள். இவன் பசியில் காத்திருந்தான். இவனை அழைத்து வந்தவர் பசிக்குது நான் சாப்பிட்டு வந்துடறேன், அவனிடமே சொல்லி விட்டு சென்றார்.
இவனுள் பசி மெல்ல மெல்ல அவனுடைய கோப உணர்ச்சியை தூண்டி விட்டபடி இருந்தது. என்ன ஒரு கொடுமை, இந்த ஆள் சாப்பிட போகுபவன் அவனையும் சாப்பிட்டுட்டு வந்து என்னைய பாக்க சொல்லுன்னு போயிருக்கலா மில்லை, அட என்னை கூப்பிட வந்த ஆளாவது சாப்பிட்டுட்டு வா அப்படீன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.
தான் பசியோடு தண்டனைக்காக காத்திருக்க அவர்கள் அனைவரும் சாப்பிட போயிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தான். வந்தவுடன் அவனிடம் எதுவும் கேட்கவில்லை, நைட்டு ஏழு மணியில இருந்து நாளை காலை ஏழு மணி வரைக்கும் பாரா டியூட்டியாக போட்டு விட்டு போய் விட்டார்.
தலை தெறிக்க சாப்பிடும் இடத்துக்கு ஓடி வந்தான். அங்கு எதுவும் மிச்சம் இருக்கவில்லை. பசி காதை அடைக்க அங்கும் இங்கும் பாத்திரங்களில் மிச்சம் இருக்குமா என தேடினான். எல்லாம் முடிந்து அவரவர்கள் இடத்துக்கு போயிருந்தனர்.
பசியின் தீ வயிற்றுக்குள் உறும, காலில் குத்திய முள்ளின் காயம் உறுத்த எப்படியோ ஸ்டேசனுக்கு வந்தான்.
உள்ளே ஒரு ஆள் கையை கட்டியபடி உட்கார்ந்திருந்தான், பார்ப்பதற்கே பரிதாபமாய் இருந்தான், ஏட்டு அவனிடம் இவனை விசாரி, சந்தேகப்படற மாதிரி நின்னுகிட்டிருந்தான்னு ‘அன்பு நகர்’ ஆளுக கொண்டு வந்து விட்டுட்டு போனாங்க.
பசியின் தீ வயிற்றில் எரிந்து கொண்டிருக்க, பயத்துடன் இவனை பார்த்தபடி குத்து காலிட்டு உட்கார்ந்தவனை “இங்க வா” கையை காட்டி அழைத்தான். யாருடா நீ? ஆங்காரமாய் கேட்டு சட்டென்று ஓங்கி ஒரு அறை, வாங்கியவன் அப்படியே தடுமாறி கீழே விழ இவனது கோபம் அதிகாரி, வெயில், முள்குத்தியது, பசி, இத்தனையும் அடங்கிய ஆங்காரம் கொண்ட மன நிலையில் மாட்டியவன் வடிகாலாய் தெரிய அவனிடம் நெருங்கினான்.
அதுவரை அமைதியாய் அவன் சட்டை பையில் இருந்த ‘செல்போன் ரிங்’ அவனை உசுப்பியது. எரிச்சலுடன் எடுத்தான். வீட்டில் இருந்துதான் வந்திருந்தது.
என்னடி?…உறுமினான். சட்டென எதிரில் மெளனம், சாப்பிட்டாச்சான்னு கேக்கறதுக்குத் தான் கூப்பிட்டேன், சரி வச்சிடறேன், போனை அணைக்க போனவளை, இவனது குரல் தடுத்தது. இன்னும் இல்லடி.
என்ன பண்ணறது, அவளிடம் கோபித்து கொண்டோமே என்கிற குற்ற உணர்ச்சியில் சொல்ல, அவள் நீங்க அங்கேயே இருங்க, பக்கத்து வீட்டு பாலண்ணன் அந்த பக்க வேலை இருக்குன்னு கிளம்பிட்டாரு, சாப்பாடு கொடுத்து விடறேன், கொஞ்சம் நிறையவே கொடுத்துடறேன், மிச்சம் வக்காம சாப்பிடுங்க.
ரொம்ப ரொம்ப நன்றி..இப்படி சொல்லத்தான் நினைத்தான், கெளரவம் தடுத்தது. இவனது கோபத்தை மனைவியிடம் காட்ட தெரிந்தவனுக்கு, அவளிடம் நன்றியை காட்ட மனம் வரவில்லை.
டேபிளில் சாப்பாடு பாத்திரத்தை பிரித்து சாப்பிட போனவன், இவனிடம் அறை வாங்கி மூலையில் குறுகியபடி பயத்துடன் இவனையே பார்த்து கொண்டிருந்தவனை பார்த்தான்.
இங்க வா அவனை சைகையில் அழைக்க அவன் பயத்துடன் கால் நடுங்க இவனருகில் வந்தான்.
அவன் சாப்பிடுவதற்காக மனைவி கொடுத்த தட்டில் சாப்பாடு கொஞ்சம் எடுத்து வைத்து அதில் குழம்பையும், பொரியலையும் வைத்து அவனிடம் கொடுத்து சாப்பிடு என்றான்.
அவன் பயந்து நடுங்கி வேணாம், வேணாம் தலையாட்ட, இவன் சிரிப்புடன் சும்மா சாப்பிடு, பயப்படாதே, அவன் தோளை தட்டி தட்டை கொடுத்தான்.
அவன் அரக்க பரக்க அதை சாப்பிடுவதை பார்த்தவனுக்கு “இந்த பசிதான் இவனையும் சரி என்னையும் சரி மாற்றி விடுகிறது”
அமைதியாய் மனைவி கொடுத்தனுப்பிய சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தான்.