பசி வந்திட…





அந்த பிரபல ஹோட்டலுக்குக் குடும்பத்தோடு சாப்பிட நுழைந்தான் சத்யன்.
வாசலில் வயசான ஒரு கிழவி, ‘ஒருசாப்பாடு வாங்கிக் கொடுங்க…! பசி பிராணன் போகுவது!’ என்றாள்.
வந்ததே கோபம் ஒரு சாப்பாடு அந்த ஹோட்டலில் இருநூறு ரூபாய்..! ஏதோ பத்து ரூயா ஐந்து ரூபா தர்மமாக்கொடுன்னு கேட்டா நியாயம்! மரியாதை! இருநூறு ரூபா சாப்பாடு வாங்கித்தரக் கேட்டால், என்ன நியாயம்?! உலகம் எங்கே போகிறது?

கண்கள் சிவக்க அவளைக் கடுப்பாகப் பார்த்தான்.
பசிவந்திடப் பத்தும் பறந்து போகுமாம். ‘மானம் …குலம்… கல்வி… எல்லாம் சரி!’
பத்து பேராகச் சேர்ந்து வந்து குடும்பத்தோடு அந்த ஹோட்டலில் சோறு தின்றால் ‘பில்’ எவ்வளவு வரும்?! பத்தோடு பதினொன்றாக அந்தக் கிழவியை சும்மானாச்சுக்கும் கணக்கில் மட்டுமாவது சேர்த்துக் கொண்டால் என்ன தப்பு?
தங்கள் குடும்பத்தோடு உடன் உக்கார வைத்து உபசரிக்காவிட்டாலும், உறுப்பினரில் ஒன்றாக கணக்கில் சேர்க்கவும் கசக்குதே..!??
பசி வந்திட கிழவிக்கு பத்தில் ஒன்றான மானம் போனாதால்தான் சத்யனை மனுஷனாய் நம்பிக் கேட்டாள்.
அவளுக்குப் பசிவர பத்தில் ஒன்றாக சொல்லப்படாத பிரஸ்டீஜ் சத்யனை இடிக்க இவனிடமிருந்தல்லவா பரிவு பறந்துபோனது?!
சங்கு சுட்டாலும் வெண்மை தருமாமே தரவில்லையே…?! தர்மம் செய்வதைக்கூட ‘எப்படி இருநூறு’ ரூபா சாப்பாட்டைக் கேட்கலாம்?’ என்னும் இறுமாப்பு இடிக்காமல் போகலையே?!?! தராதரம் தடுக்கிறதே??.