நெகிழ்வு – ஒரு பக்க கதை






‘‘என்னது? பதினஞ்சு நாள் அத்தை இங்க வந்து இருக்கப் போறாங்களா! இப்படி திடுதிப்புன்னு சொன்னா எப்படி? என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேணாமா? அப்பப்பா, அந்தப் பதினஞ்சு நாளும் நான் கஷ்டம் அனுபவிக்கணுமே!’’
உமா சொன்னதைக் கேட்ட தினேஷ், அதிர்ச்சியானான். ‘‘உமா! நீயா இப்படிப் பேசுறே? இத்தனை நாளா என் அம்மாவை உன் அம்மா மாதிரிதானே நினைச்சுப் பழகினே! இப்ப எங்க அம்மா வந்தா உனக்குக் கஷ்டம்ங்கறே..?’’ – அவன் கவலை, வார்த்தைகளாய் வந்து விழுந்தன.
‘‘அய்யோ, நான் சொல்ல வந்ததே வேறங்க. அத்தை இங்கே வந்தா, என்னை எந்த வேலையும் செய்ய விடாம அவங்களே செய்வாங்க. அது அவங்க ஹெல்த்துக்கும் நல்லதில்ல. சளி பிடிச்சு மூச்சிரைப்பு வந்து அவங்க அவஸ்தைப்படும்போது,
‘மாமியாரைக் கொடுமைப்படுத்துறா பாரு’ன்னு அக்கம் பக்கத்துல எல்லாரும் என்னைத்தான் கேவலமா பேசுறாங்க. அந்தக் கஷ்டம் வேண்டாம்னுதான் நான் சொன்னேன். இந்த முறை அவங்க எந்த வேலையும் செய்யாம இருக்கறதுன்னா வரச் சொல்லுங்க. எத்தனை நாள் வேணும்னாலும் இருக்கட்டும்!’’
விளக்கம் சொன்ன உமாவைப் பார்த்துப் பெருமைப்பட்டான் தினேஷ்!
– மார்ச் 2014