நீ என் மகனல்ல
கதையாசிரியர்: என்.ஸ்ரீதரன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2026
பார்வையிட்டோர்: 134
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு அடர்ந்த காடு காட்டில் இந்திய ராணுவ வீரர்கள் வரிசையாய் போய்க் கொண்டிருக்கின்றனர். பசுமையான மரங்கள் நிறைந்த மலைப் பிரதேசம். திடீரென்று சில இடங்களில் வெடிகுண்டு வெடிக்கின்றது. கூடவே துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கிறது. பதிலுக்கு நம் இராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுடுகிறார்கள். ஆங்காங்கே மரம் தீப்பற்றி எரிகின்றது . தீ ஜ்வாலை கொழுந்து விட்டு எரிகிறது.
”அம்மா” என்று அலறிக் கொண்டே தூக்கத்திலிருந்து கோதை விழித்தெழுந்தாள். மிகுந்த பதற்றத்தோடு காணப்பட்டாள்.
”என்னம்மா ஆச்சு?” தேன்மொழி மருமகள் கோதையை வினவினாள்.
”கனவில் நெருப்பைக் கண்டேன். அவருக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று கவலையாய் இருக்கிறது.”
“இந்தத் தண்ணீரைக் குடி.. கடவுளை வணங்கிவிட்டுப் படு.. அகிலனுக்கு எந்த இடரும் வராது.” தண்ணீர் தம்ளரை நீட்டினாள்.
அவள் தண்ணீர் குடித்துவிட்டு படுத்துக் கொண்டாள்.
”திரிசடையின் கனவு போல, கனவுகள் நல்லது கெட்டதை வருமுன் தெரிவிக்கும். மகன் அகிலனுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது” என்று வேண்டிக் கொண்டு படுத்தாள் தேன்மொழி. உறக்கம் உடனே வரவில்லை. இருள் அவள் வேதனையை அதிகரித்தது.
தேன்மொழிக்கு இரட்டைப் பிள்ளைகள். மூத்தவன் அகிலன் இராணுவத்தில் இருக்கிறான் திருமணம் ஆகிவிட்டது மனைவி கோதையும் இரண்டு வயதுக் குழந்தை ஜோதியும் தேன்மொழியுடன் இருக்கிறார்கள். இன்னொரு பிள்ளை முகிலன். அவன் ஹைதாராபாத்தில் இருக்கிறான். ஊர் சுற்றும் வேலை. என்ன வேலை என்று யாருக்கும் தெரியாது. வருடத்துக்கு ஒருமுறை அம்மாவைப் பார்க்க திருச்சி வருவான். தேன்மொழியின் கணவர் ராமன் மறைந்து மூன்று வருடம் ஆகிறது. அவர் தபால் இலாகாவில் வேலை செய்ததால். தேன்மொழிக்கு மாதம் மாதம் பென்ஷன் வருகிறது. அவளுக்குப் பணத்தால் குறை எதுவுமில்லை.. ராமனின் தங்கை பெண் சுடர்விழி குழந்தையிலிருந்து தேன்மொழியிடம் வளர்ந்து வருகிறாள். தேன்மொழியின் குறையெல்லாம் முகிலனுக்கும் கல்யாணம் ஆகவில்லை என்பதுதான். பெண்ணும் வீட்டிலே தயாராக இருக்கிறாள். அவள் கணவர் உயிரோடு இருக்கும்போதே முகிலனுக்குச் சுடர்விழிதான் வாழ்க்கைத்துணை என்று முடிவு செய்தாகிவிட்டது. ஆனால் முகிலன்தான், ”எனக்கு நிலையான வேலையில்லை. எதுக்கு கல்யாணத்துக்கு அவசரப் படணும்” என்று பிடி கொடுக்காமல் இருந்தான். இந்த வருடம் முகிலன் வரும்போது அவனுடன் பேசி கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்னும் தீர்மானத்திலிருந்தாள் தேன்மொழி.
சுடர்விழி வழக்கம்போல் அன்றும் விடியற்காலையில் எழுந்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அப்போது காகம் கரைந்தது . அது அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
”அத்தை, காகம் கரைந்ததால் விருந்தினர் வருவார்கள் என்று சொல்லுவார்கள். இன்னைக்கு முகிலன் அத்தான் வருவார்” என்று எனக்குத் தோன்றுகிறது. என்றாள்.
”நீ சொல்வது சரி. முகிலன் வந்து ஒரு வருடம் ஆகிறது . அவன் வரக்கூடிய சமயம்தான்..எனக்கும் அவனைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது. உன் விஷயத்தைப் பற்றி அவனிடம் பேசி விடுகிறேன். அவன் எவ்வளவு நாள்தான் தள்ளிப் போடுவான்? பாரடி நீ, இந்த முறை அவன் சம்மதித்து விடுவான் ”
சுடர்விழியின் முகம் வெட்கத்தில் அழகுடன் ஒளிர்ந்தது.
காகம் கரைந்த்தால் அவன் வந்தானோ அல்லது ஏதேச்சையாக வந்தானோ தெரியவில்லை. தேன்மொழி சொன்னபடி முகிலன் அன்று காலை வந்தது எல்லோருக்கும் ஒரு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. தூங்கி எழுந்து வந்த ஜோதி முகிலனைப் பார்த்துவிட்டு, “அப்பா எப்போ வந்தே? என்னை விட்டுப் போகக் கூடாது . இங்கேயே இருக்கணும்” என்று மழலையில் பேசி அவன் காலைக் கட்டிக் கொண்டது. அப்பாவும் சித்தபாவும் ஒரே மாதிரி இருப்பதால் குழந்தைக்கு வித்தியாசம் கண்டு பிடிக்க முடியவில்லை..
“ஜோதி அது அப்பா இல்லே, சித்தப்பா . அப்பா டில்லியிலே ருக்கார்”. என்றாள் கோதை.
“உனக்கு பிஸ்கட் வாங்கி வந்திருக்கேன்” என்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டை குழந்தையிடம் நீட்டினான் அதை வாங்கிக் கொண்ட குழந்தை விளையாட ஓடியது.
அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த முகிலனைப் பார்த்து, “உன் முகம் ரொம்ப கறுத்துப் போயிடுச்சே. உனக்கென்ன வெளியிலே அலையற வேலையா? ஹைதராபாத்தில் ஏன் ஒண்டியா கஷ்டப் படணும், நீயும் அகிலனும் எனக்கு இரட்டை குழந்தைங்க. அவன் இராணுவத்திலே சேர்ந்துட்டான். . வருடத்துக்கு ஒரு முறைதான் திருச்சி வரான். எனக்கோ அறுபது வயசாகி விட்டது. உடல் தள்ளாடுது. இங்கே ஏதாவது வேலை தேடிண்டு வந்துடேன். உன் அண்ணன் அகிலன் எங்ககூட இல்ல. . நீயாவது என் கூட இருந்தால் எனக்கு ஒத்தாசையாய் இருக்கும் “ என்றாள் தேன்மொழி தன் இளைய மகனிடம்.
”நான் நாடோடியாய் ஒவ்வொரு ஊராய் சுற்றிக் கொண்டிருக்கேன். உனக்குத்தான் தெரியுமே நான் முதல்லே வேலை செய்த அலுவலகத்தில் என் மீது அநியாயமாய் திருட்டு பழி சுமத்தினதாலே ஜெயிலுக்குப் போனேன். செய்யாத குற்றத்திற்குச் சிறைத் தண்டனை அனுபவிச்சேன். எனக்கு ஹைதாராபாத்தில் கிடைத்த வேலை ஊர் சுற்றும் வேலையானலும் எனக்குப் பிடித்திருக்கிறது. நான் இப்போதைக்குத் திருச்சி வர முடியாது. என்னுடைய தலைவர் என் எல்லாத் தேவைகளையும் பார்த்துக் கொள்வார். அடுத்து எந்த ஊருக்குப் போக வேணும் என்பது அலைபேசியில் வரும் . நான் இங்கிருந்து நேராக அங்கு போய்விடணும்.”
“சுடர்விழி உனக்காகக் காத்திருக்கிறாள். நீ சரின்னு சொன்னால் உங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சுட்டு நான் பாட்டுக்கு அக்கடான்னு இருப்பேன்.”
அப்போது சுடர்விழி ஒரு தம்பளரில் மோர் கொண்டு வந்தாள்.
”இந்தாங்க அத்தான் மோர்”
முக வசீகரத்துடன் உடல் அழகு சேர்ந்து பருவச்செழிப்புடன் பொற்குடம் போல் பிரகாசித்தாள்.
முகிலன் மோரை வாங்கிப் பருகினான். இன்னொரு தம்பளர் மோரை அத்தையிடம் கொடுத்தாள்.
”வர்ற பங்குனிக்கு சுடர்விழிக்கு இருபத்தி ஆறு வயசு முடியப் போகிறது., கல்யாணத்துக்கு உன் சம்மதம்தான் தேவை” என்றாள் தேன்மொழி..
“இப்போ எதுக்கம்மா எனக்கு கல்யாணம். நான் பஞ்சாப் போக வேண்டும் . அதுக்கு முன்னால் உன்னைப் பார்த்துட்டு போகலாம் என்று வந்தேன். நான் இப்போ ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். அதில் வெற்றியடையாமல் நான் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்.”
ராமாயணத்தில் சீதை மேல்மாடத்திலிருந்து ராமனை நோக்கியதைப் போல் சுடர்விழி முகுந்தனை நோக்கினாள். முகுந்தனும் சுடர்விழியை நோக்கினான். விழியோடு விழி நோக்கினாலும அவள் பார்வை வேறு . அவன் பார்வை வேறு . அவன் விழியில் அன்பு எள்ளவுமில்லை. அந்த மான்விழிகளும் செதுக்கி வைத்தச் சிலை போன்ற மேனியழகும் அவன் மனதில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
”இவர் ஏன் இப்படி இருக்கிறார்? என் அழகு அவரை ஆட்கொள்ளவில்லையா? எப்போது கேட்டாலும் திருமணம் வேண்டாம் என்று மறுத்து விடுகிறாரே ? என்று இவர் மனசு மாறும்” என்று நினைத்தாள் சுடர்விழி.
அவன் இவளை லட்சியம் செய்யாமல் வீட்டுக்கு வெளியே போய் அலைபேசியில் யாருட னோ பேசினான். பேசி விட்டு உள்ளே வந்தமர்ந்த முகிலன் தன் அலைபேசியைப் பக்கத்திலுள்ள நாற்காலியில் வைத்து பேச்சைத் தாடங்கினான். அப்போது அவ்வறைக்குள் வந்த ஜோதி அந்த அலைபேசியை எடுத்தது. முகிலனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அதை என்கிட்டே கொடு என்று ஜோதியிடமிருந்து முரட்டுத்தனமாக அலைபேசியைப பிடுங்கினான். குழந்தை அழ ஆரம்பித்தது.
சுடர்விழி குழந்தையைச் சமாதானப் படுத்தினாள். முகிலனிடம் “குழந்தை கிட்டே மென்மையாய் நடந்துகொள்ளக் கூடாதா?” என்றாள்.
”என் அலைபேசியில் முக்கியமான செய்திகள் இருக்கின்றன.அது அழிந்துவிட்டால் என்ன செய்வது? என் அலைபேசியை யாரிடமும் கொடுக்க மாட்டேன்”
அவன் முகம் பதற்றத்தோடு இருந்தது. அதற்கேற்றாற்போல் அடிக்கடி அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வந்துகொண்டேயிருந்தது.
”நீங்க என்ன வேலை செய்கிறீர்கள்? எங்கிட்டேயாவது சொல்லக் கூடாதா ?” என்று குழைந்தாள் சுடர்விழி.
“நான் ஒரு முக்கியமான வேலையில் இருக்கேன். நித்திய கண்டம் பூர்ணாயுசு என்பார்களே . அதுமாதிரிதான் என் வேலையும் . அதனால்தான் பஞ்சாப் போவதற்கு முன்பு அம்மாவைப் பார்த்துட்டுப் போகலாமென்று வந்தேன்.”
அப்படியென்றால் என்னைப் பார்க்க வரவில்லையா” மென்மையாகக் கேட்டாள் சுடர்விழி
”என்னை மன்னித்துவிடு சுடர்விழி . நமக்குக் கல்யாணம் நடக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. நான் செய்யும் வேலை அந்த மாதிரி. என்னுடைய குறிக்கோள் நிறைவேற வேண்டும். மத்ததெல்லம் அதற்கப்புறம்தான்.” என்றான் திட்டவட்டமாய்.
சுடர்விழிக்கு அவன் கூறியது ஏமாற்றமாய்தான் இருந்தது.
தேன்மொழி முகிலனுக்குப் பிடித்த சமையலைச் செய்திருந்தாள்.
அவன் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி, அகிலன் நன்றாகப் படிப்பான். சிறுவயது முதல் நாட்டுப் பற்று அதிகம்.. முகிலனுக்கு படிப்பு வராது, தறுதலையா சுற்றிக் கொண்டிருப்பான். இரண்டு பேருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம். இனிமேல் இவன் ஒழுங்காக இருந்தால் சரி.” என்று எண்ணினாள்.
முகிலன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
“நீ எங்கே வேலை செய்கிறாய் என்று சொல்ல்லிவிட்டுப் போ. யாராவது கேட்டால் சொல்லவேணுமல்லவா?”
”அது ரொம்ப ரகசியம் நான் சொல்ல கூடாது.”
“நீ இருப்பது போலீஸிலா ? அல்லது இராணுவத்திலா? ஏதோ இராணுவ ரகசியம் போல் சொல்லுகிறாயே?”
“வேளை வரும்போது சொல்கிறேன்.”. சுடர்விழியைப் பார்த்துக்கொண்டே நகர்ந்தான். ஏக்கத்துடன் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுடர்விழி.
”நான் எவ்வளவோ முயன்று பார்த்தேன். அவன் ஏன் ஒத்துக் கொள்ளவில்லை என்பது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம். காலம்தான் அவன் மனதை மாற்ற வேண்டும்” என்றாள் தேன்மொழி..
”நான் அவருக்காக எவ்வளவு நாள் வேணுமானாலும் காத்திருக்கேன் அத்தை. எனக்கென்னவோ அவர் கூடியச் சீக்கிரம் மனம் மாறிவிடுவார் என்று தோன்றுகிறது.”
சுடர்விழி சோகக் கடலில் மூழ்கியிருந்ததைப் பார்த்த கோதை, “ஏன் வருத்தமாயிருக்கிறாய். முகுந்தன் கல்யாணத்திற்குச் சம்மதிப்பான். கவலைப்படாதே” என்றாள்
”என் உண்மையான அன்பு அவருக்குப் புரியவில்லை. நான் நெருங்கிப் போனாலும் விலகிப் போகிறாரே.. அவர் வேறெந்தப் பெண்ணையாவது காதலிக்கிறாரோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.” “அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது. மென்மையான உன்னைச் சீக்கிரம் அவர் புரிஞ்சிப்பார் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
”எவ்வளவு காலமானாலும் அவருக்காகக் காத்திருக்க நான் தயார். அவருடைய முரட்டுத்தனம்தான் எனக்கு அச்சமாயிருக்கிறது. அரசாங்கத்தை எப்பவும் குறை சொல்லுவார்.”
“நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும்.”
முகிலன் போய் ஒரு வாரம் கழித்து மூத்தவன் அகிலனிடமிருந்து கோதைக்கு ஒரு கடிதம் வந்தது. அவன் தற்போது சதீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை இராணுவவீரனாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான் என்று எழுதியிருந்தான்.
கோதை, “நாம் இங்குச் சந்தோஷமாக இருக்கிறோம். அங்கு அகிலன் பனியிலும் வெயிலிலும் மிகவும் கஷடப் பட்டுக்கொண்டிருப்பாரே” என்று வருந்தினாள். ..
ஜோதியும் அடிக்கடி, “அம்மா, அப்பா எப்போ வருவார்” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.
‘சீக்கிரம் வருவார் நீ வந்து படு’ என்று அவளைத் தூங்க வைத்தாள் கோதை.
அப்போது அவளுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.
அலைபேசியில் செய்தியைக் கேட்டதும். ‘அப்படியா….?’ என்று கோதை அலறினாள். அவள் கையிலிருந்து அலைபேசி கீழே விழுந்தது. கண்ணிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் வந்தது. “அவர் போய்விட்டார். என் தலையில் இடி விழுந்து விட்டது! கப்பல் கவிழ்ந்து விட்டது! அத்தை” பேசிக்கொண்டிருக்கும்போதே தரையில் சரிந்து விழுந்தாள் அவள் அருகில் ஓடி வந்த தேன்மொழி,
“என்னம்மா நடந்தது? ஏன் அழுகிறாய்? கோதை அழாதே. விவரத்தைச் சொல்லு.”
கோதை அழுதுகொண்டே சொன்னாள்.
”அவர் இறந்து விட்டார் என்று செய்தி வந்திருக்கு அத்தை. இன்று காலை தீவிரவாதி கும்பல் பாதுகாப்பு படைவீரர்களைத் தாக்கிச் சுட்டார்களாம். அதில் இருபத்தி ஐந்து படைவீரர்கள் பலியாயினர். அவரும் அதிலே ஒருத்தர் அத்தை “ .அவள் கதறி கதறி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய தேன்மொழியும் துன்பத்தைப் பொறுக்க முடியாமல், எனக்கு ஏன் கடவுள் இந்தத் தண்டனையைக் கொடுத்தான்” என்று அரற்றினாள்.
அகிலன் 90 வது பட்டாலியனில் பணியாற்றி வந்தான். எங்கிருந்தோ வந்த மாவோயிஸ்ட் தீவிரவாதி கும்பல் கொடுர கொலைவெறி தாக்குதல் நடத்தி நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கியை உபயோகப்படுத்தி இந்திய படைவீர்ர்கள் சிலரைக் கொன்றனர். அந்தத் தாக்குதலில் தீவிரவாதிகளிலும் சிலர் இறந்தனர்.
இந்த விஷயத்தை அறிந்த அகிலனின் குடும்பமே சோகக்கடலில் மூழ்கியது. அவர்கள் வசித்த தெருவே துக்கம் கொண்டாடியது. செய்தித்தாளில் எல்லாம் அகிலனைப் பற்றி புகைப்படத்துடன் செய்தி வந்தது. இராணுவ மரியாதையுடன் அவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முகிலனை அலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. அவன் அடிக்கடி அலைபேசி எண்ணை மாற்றி விடுவான் என்று சுடர்விழி தெரிவித்தாள்.
தேன்மொழி அழுதாலும் நாட்டிற்காக தன் மகன் உயிரைக் கொடுத்தான் என்று தன் மனதை தேற்றிக் கொண்டாள். கோதைதான் மிகவும் ஆடிப் போனாள். பித்துப் பிடித்தவள் போலானாள். சரியாகச் சாப்பிடாமல் தூங்காமல் அடிக்கடி அழுதுகொண்டே இருப்பாள். காலம்தான் அவள் துக்கத்தை ஆற்றவேண்டும்.
ஒருவாரம் கழித்து ஒருநாள் காலை தேன்மொழி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தாள். கோதை ஜோதிக்குத் தலைவாரிப் பின்னிக்கொண்டிருந்தாள். அப்போது முகிலன்வீட்டுக்குள் நுழைந்தான். தலை மொட்டையடித்து, மீசையை எடுத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தான்.
சுடர்விழி, “வாங்க, வாங்க, அத்தை, அத்தான் வந்திருக்கார் ” என்று கத்தினாள்.
அவன் தன்னுடைய பையை நாற்காலியின் மீது வைத்துவிட்டு கோதையிடம் துக்கம் விசாரித்தான்.
”என்னடா அடையாளம் தெரியாமல் மாறிட்டே. விஷயம் தெரிஞ்சுதான் வந்தியா? அகிலன் நம்மை விட்டுப் போய்விட்டான். தீவிரவாதிகள் வெடிகுண்டு போட்டதிலே இருபத்தி ஐந்து ராணுவ வீர்ர்கள் மரணமடைந்தனர் அவர்களில் அகிலனும் ஒருத்தன். போய் ஒரு வாரம் ஆகிவிட்டது, நீ இப்போ வந்திருக்கே. உன்னை தொடர்பு கொள்ளப் பார்த்தோம். முடியவில்லை. நீ எங்கிருந்தாய்?” என்றாள் தேன்மொழி.
”நான் வெளியூரில் இருந்ததால் உடனே வரமுடியவில்லை. செய்தித்தாள் படித்து விவரம் அறிந்தேன். உன்னைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன். நான் உடனே போக வேணும். எனக்கு நேரமில்லை.”
“முகிலா, நீ இப்படிச் சொன்னால் எப்படிடா? இரட்டையரில் ஒருத்தனைப் பறி கொடுத்துட்டு நான் துடிச்சுண்டு இருக்கேன். நீ என் பக்கத்திலே இருக்கணும்.. என்னை விட்டுவிட்டு எங்கேயும் போயிடாதே. உன்னைப் பார்த்தாவது நான் ஆறுதல் அடையறேன். தயவு செய்து என்னை விட்டுவிட்டு ஓடிடாதே ”என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.
“எனக்குச் சில கடமைகள் உண்டு . அதை முடிச்சிட்டு வருகிறேன்.”
அப்போது அவன் அலைபேசி சிணுங்கியது . அவன் அதை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள் போனான்.
அவன் பேசிய அறைக்குப் பக்கத்து அறை சமையல் அறை. இரண்டு அறைகளுக்கும் நடுவில் ஒரு சன்னல் உண்டு. சமையல் அறையில் சுடர்விழி இருந்தாள்..தான் பேசுவது பக்கத்து அறையிலிருப்பவருக்குக் கேட்குமென்பது முகிலனுக்குத் தெரியாது. அவன் பேசியது அவளுக்கு நன்றாகக் கேட்டது
“சதீஸ்கர் ஆப்ரேஷன் வெற்றி. திருச்சிக்கு வந்துவிட்டேன்.அடுத்த ஆப்ரேஷன் லக்னோவா? நான் இங்கேயிருந்து லக்னோ போய் விடுகிறேன்.“
அவன் பேசுவதைக் கேட்ட சுடர்விழியின் மூளையில் பொறி தட்டியது. அதனால்தான் மொட்டை அடித்துக் கொண்டு விட்டாரா? உண்மை அவளுக்குப் புலப்பட்டுவிட்டது. தேன்மொழி அமர்ந்திருந்த இடத்திற்கு விரைந்து சென்றாள் : காதில் மென்மையாகச் சொன்னாள்.
அவள் சொன்னதைக் கேட்டு தேன்மொழி அதிர்ந்தாள்.
”அப்படியா?”.
”நான் கேட்டது அதுதான்.”‘
சுடர்விழியின் காதில் தேன்மொழி மெல்லிய குரலில் மொழிந்தாள்,
”அப்படியே செய்றேன் அத்தை” என்ற சுடர்மொழி வெளியே கிளம்பினாள்.
முகிலனும் வந்துவிட்டான்.
நான் உடனே கிளம்ப வேண்டும். எனக்கு அழைப்பு வந்துவிட்டது.
அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்து விட்டுச் சொன்னாள்.
”உன்னை என் பிள்ளைன்னு சொல்லிக்கிறதுக்கு வெட்கமாயிருக்கு. செய்யக் கூடாத காரியத்தை நீ செய்து விட்டாய். நீ தீவிரவாதி என்பதைச் . சுடர்விழி என்னிடம் சொல்லிவிட்டாள். நான் பெத்ததில் ஒண்ணு நாட்டுக்காக உயிரை விட்டது. இன்னொன்னு நாட்டுக்கு எதிரா தீவிரவாதியா மாறிவிட்டது. குழந்தையிலே இரண்டு பேருக்கும் சமமாகத்தான் பால் கொடுத்தேன். நீ ம்ட்டும் ஏன் தீவிரவாதி ஆகிட்டேன்னு தெரியல்லே?. பாழாய்போன தீவிரவாதத்தின் வன்செயலை நினைத்தால் .நெஞ்சு பொறுக்குதில்லையே “ விடாமல் பேசியதால் அவளுக்கு மூச்சு வாங்கியது.
”ஆமாம். நான் மாவோயிஸ்ட்தான். நாட்டின் மேல் எனக்கிருந்த வெறுப்பால் மாவோயிஸ்ட் ஆகிவிட்டேன். போன வாரம் கலபதாரில் தீவிரவாதிகள் படைவீர்ர்களைச் சுட்டார்களே. அந்தத் தீவிரவாதி கும்பலில் நானுமிருந்தேன். அகிலன் அங்கேயிருந்தான் என்பது எனக்குத் தெரியாது. நடந்தது நடந்துவிட்டது . போனதை நினைத்து வருத்தப்படாதே.”
“எப்படிடா? நீ இப்படி பேசறே. வருத்தப் படாமே எப்படியிருக்க முடியும்? அகிலன் என் பிள்ளை, உன் அண்ணாடா. அவனை கொன்னுட்டு வேறே யாரோ மாதிரி வருத்தப்படவேண்டாம்ங்கிறே. உன் மனசென்ன கல்லா இல்ல இரும்பா ? இரத்த பாசம் உனக்குக் கிடையாதா ? காதலுக்குக் கண் இல்லே என்பார்கள். தீவிரவாதத்துக்குக் கண், காது, மனசு எதுவுமே இல்லை என்பது உன் மூலம் நிரூபணம் ஆகிறது.”
“நான் மாவோயிஸ்ட் ஆனவுடனே பாசமெல்லாம் போய்விட்டது சமுதாயம் சீரழிந்து கிடக்கிறது? எங்கும் ஊழல்தான் மண்டிக் கிடக்கிறது நாங்கள் தப்பைத் தட்டி கேட்கும் கும்பல். எங்கிட்டே ஏகே 47 துப்பாக்கி இருக்கிறது. மனித குண்டுகளாகவும் செயல் படுவோம். தவறு செய்யும் அரசாங்கத்துக்குப் வன்முறையில் பாடம் புகட்டுவதுதான் எங்கள் இயக்கத்தின் கொள்கை. இந்தியா எனக்கு என்ன செய்தது ? என்னை மாதிரி சமுதாயத்தில் பழி வாங்கப் பட்டவர்கள் ஒன்று சேர்ந்து போராளிகளாகப் போராடுகிறோம்.”
”நல்லாயிருக்கடா நீ சொல்றது . நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்கிறாயே. நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று யோசித்துப் பார் ? உண்மை உனக்குப் புரியும். தீவிரவாத இயக்கத்திலிருந்து நீ மீண்டு வரவேண்டும் உன்னை நான் போகவிடமாட்டேன்” என்று அவன் கைகளைப் பிடித்தாள்.
“என்னுடைய குறிக்கோளிலிருந்து நான் பிறழ மாட்டேன். எனக்கு நேரமாகிவிட்டது. நான் கிளம்பறேன். என்னைத் தடுக்காதே “ அவளைத் தள்ளிவிட்டு கதவை நோக்கி நடந்தான். கதவைத் திறந்தவன் அதிர்ந்து நின்றான்.
அங்கே சுடர்விழியும் நான்கைந்து போலீஸ்கார்ர்களும் நின்றிருந்தார்கள்.
”சுடர்விழி நீ கூடவா…” தன் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்தான்.
”அத்தான்” சுடர்விழி அவனருகில் சென்றாள்.
”எங்கிட்டே வராதே, உன்னைச் சுட்டுவிடுவேன்.”
”உங்க கையாலே தாலிதான் கட்டிக்க முடியல்லே. சாகிற பாக்கியாமாவது எனக்குக் கொடுங்க” சொல்லிக்கொண்டே அவனை நோக்கித் தாவினாள்.
அவன் துப்பாக்கியிலிருந்து கிளம்பிய குண்டு அவள் மார்பில் பாய்ந்தது.
‘அத்தான்’ என்று அலறிக்கொண்டே அவள் கீழே சரிந்தாள்.
அதற்குள் கீழே விழுந்த தேன்மொழி முகிலனின் அருகில் சென்று, ”என்னைச் சுடு” என்று அவன் கையைப் பிடித்து இழுக்கவும் அவன் கையிலிருந்து துப்பாக்கி பறக்க, ஒரு போலீஸ் அதிகாரி ஒடிப் போய் கிரிகெட பந்தைக் கேட்ச் பிடிப்பது போல் அதைப் பிடிக்க மற்ற போலீஸ்காரர்கள் ஓடி வந்து அவன் கையைக் கெட்டியாகப் பிடித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அவன் கையில் விலங்கை மாட்டினார். அவன் திமிறினான். ”இந்த வீட்டைச் சுற்றிப் போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள்.. நீ தப்பிப் போக முடியாது” என்றார்.
”உன் மேலே இருக்கிற பாசத்தைவிட நாட்டின் மேல் எனக்கு நேசம் அதிகம்…நீ என் மகனல்ல. நீ ஒரு தேசத் துரோகி ஒரு தீவிரவாதியைப் பிடித்துக் கொடுத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.” என்றாள் தேன்மொழி.
– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com
தொடர்புள்ள சிறுகதைகள்
பாரத்தை சுமப்பது சுகமா! பாரமாக இருப்பது சுகமா!
உரு.வளவன்
July 29, 2026
நோன்பு
ஜே.எம்.சாலி
July 29, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
July 29, 2026