நீளும் பாலையிலும் நிஜமாகும் வேதங்கள்
மனம் முழுக்க உதிரம் கொட்டும் ரணகள வடுக்களுடன் தான் ஒன்றரை வருட கால இடைவெளிக்குப் பின் ரகுவைச் சுகம் விசாரித்துப் போகவல்ல அவனிடம் கையேந்திக் காசு பெற ஜானகியின் திடீர் வருகை அந்த வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு புறம்போக்குத் தீட்டு நிகழ்வாகவே மனதை அரித்தது. அவர்களில் ஒருவனாக மட்டுமே தன்னைக் கருதி வாழ்ந்த மனோகரனோடு மனம் பிளவுபட்டு, வாழ நேர்ந்த அவளின் சந்தோஷம் விட்டுப் போன இருப்பு நிலையை, இன்னும் கருவறுத்துக் கூறு போடும் நிகழ்வாகவே அதுவும் இருந்தது. .அவள் சோகம் கனத்த முகத்துடன் படியேறி வரும் போதே, உள்ளிருந்து ஓர் ஆவேசக்குரல் அவளை அடித்து நொறுக்கி வீழ்த்துகிற மாதிரிப் பறந்து வந்ததை, வேறு வழியின்றி எதிர் கொண்டவாறே தனது இயல்பான சகிப்புத்தன்மை கொடிகட்டிப் பறக்கத் தான் அவள் உள்ளே வந்து சேர்ந்த்திருந்தாள். இன்னும் மாமியின் குரல் அடங்கவில்லை. யார் மாமி? யாருக்கு யார் சொந்தம்? ஆழ வேரோடி உயிர் கொண்டு நிலைத்து நிற்கும் உறவுகளா இவை? இல்லையே சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்ட முடியாமல் போகிற கதை தான் இதுவும்.
மாமியின் குரல் வராந்தா முழுவதும் வியாபித்துத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. வாசலில் ஜானகியைக் கண்டதும் சின்ன மைத்துனன் நரேன், ஏதோ சொல்ல வாய் திறக்கும் போதே, அதை இடை மறித்துத் தான் மாமியின் வாய்க் கொழுப்பு அடங்காத சூடு சுரணயற்ற குரல் காற்றில் கனத்து இன்னும் கேட்கிற நிலை தான். அவள் என்ன சொல்ல வருகிறாள்? வேதம் வருமா அவள் வாயிலிருந்து.? தீமையை விட்டு விலகாத இருப்பு நிலையில் இருந்தவாறே, அவளாவது வேதம் கூறுவதாவது. அதைச் சொல்லத் தெய்வமே புறப்பட்டு வந்த மாதிரி ஜானகியின் நிலைமை. அவள் ஆழப் புனிதம் வேரோடி நிற்கிற ஒரு மகா விருட்சம். சத்தியம் ஒன்றைத் தவிர வேறு எதையுமே அறியாமல் போன தர்ம தேவதை. அவள் மீது காறி உமிழ்வதற்காகவே இந்த எச்சில் பிறவிகள். அவர்கள் வாழ்கின்ற இந்தப் பாவப்பட்ட மண்ணில் தான் அவளும். அவர்களுக்குப் பாவ விமோசனம் கொடுக்கவே வந்த தேவதை அவள். அதை அறியாமலே மாமியின் மிகக் கொடூரமான வக்கணைப் பேச்சு. அவள் சொல்கிறாள்
“ எல்லாம் கொடுத்தாச்சு பதினையாயிரம் கொடுத்திட்டம்{“
கணக்கு வழக்குத் தெரியாத பேதை சொல்கிறாள். ஜானகிக்குத் தெரியும். தான் இழந்த இழப்புகளை ஈடு செய்ய இந்தப் பதினையாயிரம் போதுமா? இந்தப் பாவிகளுக்காக நகைகளை மட்டுமா அவள் இழந்தாள் ஒவ்வொரு கதையாகச் சொல்லத் தொடங்கினால் கண்ணீர் தான் மிஞ்சும் இந்தக் கண்ணீரும் அவளுக்குத் தான் அபிஷேகமாகும். கண்ணீர் நதியிலேயே தினமும் அவளைக் குளிப்பாட்டி அழகு பார்த்துச், சந்தோஷம் கொண்டாடிய ஓர் அன்பு வரண்ட கணவன் இருக்கையிலே, இவர்கள் வாயிலிருந்து தீப்பிழம்பு வெடிக்காமல் வேறென்ன செய்யும்
அதில் வீழ்ந்து வீழ்ந்தே அவள் உடனுக்குடன், மனம் கருகி உணர்வுகள் கருகி, ஒழிந்து போனாலும் உள்ளே அவள் மட்டும் அறிந்து கிரகிக்கக் கூடிய விதமாய் உள் நின்று பிரகாசிக்கின்ற தான் ஓர் அழியாத சத்திய தேவதை என்பதை, அவள் ஒரு போதும் மறந்ததில்லை அப்பேர்ப்பட்ட அவளின் காலடியின் கீழே தான் இந்த மாயச் சருகுகள். ஒன்றா இரண்டா? பொறுக்கி எடுப்பதற்கு? அவள் குனிந்த இடமெல்லாம் சருகு தான். அதன் மீது மனிதம் மினு மினுக்க அவள் நிற்பது கூட அவள் கொண்டு வந்த தவ நிலைக் காட்சி தான்
அதென்ன பதினையாயிரம் கணக்கு என்று கேட்கிற நிலை கூடத் தனக்கு வரக் கூடாது என்பதே அவளின் பிராத்தனையாக இருந்தது. அப்படி அவள் வாய் திறந்து கேட்கத் தொடங்கினால் ஆயிரம் கேள்விகள் மட்டும் தான் மிஞ்சும். இப்படிக் கேள்விகளை மட்டுமே தன்னுள் மெளனத் திரை போட்டு வைத்துக் கொண்டு அவள் கட்டிக் காக்கிற பொறுமை நிலைக்கு ஈடாக, இவர்களால் எதைத் தான் தர முடியும்? அவள் மீது நெருப்பு மழை பொழிந்தே பழகிப் போன அவர்களுக்கு, நீதியென்பதே அறிவுக்கு எட்டாத மறு துருவத்தில் இருட்டில் மறைந்து போய் விட்ட நிலைமையில், அது குறித்து அவள் கேள்வி கேட்கப் போனால் வெறும் கேள்விகள் தான் மிஞ்சும் வேண்டாம் இப்படியே இருப்போம் என்று அவளுக்குத் தோன்றியது.
மாமியின் குரல் அடங்கி நிசப்தம் சூழ்ந்த வேளையில் வெளியே தெருவிலிருந்து, கேட் திறந்து கொண்டு சைக்கிள் உருட்டியவாறு, ரகு வரும் சத்தம் கேட்டு அவள் நிமிர்ந்து பார்த்தாள். லண்டனிலே இப்போது அவன் ஒரு பெரிய கனவான். அதிலும் டாக்டர் என்றால் சும்மாவா? எவ்வளவு கோடி பெறுகிறானோ? யாருக்குத் தெரியும்? இந்தக் கணக்கு வழக்குக் கேட்க அவள் வரவில்லை. தன் நட்டக் கணக்குக்குச் சிறு பரிகாரம் தேடியே ,அவளின் இருள் சூழ்ந்த வருகை. ரகு உட்பட அவர்களின் கண்களைத் திறக்கவல்ல அவள் வந்து சேர்ந்தது. அப்படி அவர்களில் ஒருவராவது கண் திறக்க நேர்ந்திருந்தால் அவள் மீது பூமழையாகவே கொட்டியிருக்கும். காசு தேடித் தெருவில் அலைகிற ஒரு பிச்சைக்காரி நிலைமை அவளுக்கு வந்திருக்காதே. இவர்கள் இவளின் நகைகளைத் தின்றது மாத்திரமல்ல, இவள் உணர்ச்சி மனதையே தின்று விட்டார்கள் உயிரைக் கொன்று நெருப்பில் போட்ட பின்னும் சன்னதம் கொண்டு ஆடுகிற இவர்களை அவள் எப்படித் தான் மன்னிப்பாள்?
மன்னிக்கத் தெரிந்த அவளும் கடவுள் தான். அப்பேர்ப்பட்ட அவள் முன்னிலையில் தான் ரகு தன் பெருந் தோரணை மாறாமல் நெஞ்சை நிமிர்த்தியபடியே வந்து நின்ற போது நிலமும் நடுங்குவதாய் அவள் உணர்ந்தாள். அவள் தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்ற போது அவன் குரல் கேட்டது
“அப்பவே கேட்டிருந்தால் தந்திட்டுக் கை கழுவி விட்டிருப்பேனே “ என்றான்
அவள் கேட்டது குற்றமென்றால் அவர்கள் செய்ததெல்லாம் என்ன? அதுவும் கை கழுவி விடுவதாகச் சொல்கிறானே. நல்ல வேடிக்கை தான். அண்ணன் பெஞ்சாதி பிள்ளைகள் என்ற நினைவே இல்லாதொழிந்த ஒரு வெறும் மனிதன் அவன். கல்யாணமாகிய பின் மனைவி சகிதம் அவர்களைக் காண வாரமல் திரை மறைந்து நிழற் புள்ளியாய் தோன்றுகிற அவனா இதைச் சொல்கிறான் என்ற புரியாத மயக்கம் அவளுக்கு. அவன் ஒரு நல்ல தாய் வயிற்றில் பிறந்திருந்தால் வேதமல்லவா சொல்லியிருக்க வேண்டும்
“என்னை மன்னியுங்கோ மச்சாள். ஐயா உங்கடை நகைகளை எடுத்தது பிழை தான். இதற்குப் பரிகாரமாக நான் இந்த ஒரு சிறு தொகையல்ல எவ்வளவோ செய்ய வேணும்” என்று கூற அவன் என்ன மகானா? ஒரு கிரிமினனுக்குப் பிறந்தவனால் இப்படித் தான் பேச முடியும் அதுவும் சத்தியமேயறியாத ஒரு தரம் கெட்ட தாய் வயிற்றில் பிறக்க நேர்ந்த பாவி அவன். அவன் வேறு எப்படித் தான் பேசுவான்/ அதைக் கேட்க நேர்ந்த பாவம் அவளுக்கு. எல்லாம் அவள் கொண்டு வந்த பாவக் கணக்கின் கொடூர விளைவுகளே இவையெல்லாம்// அப்படிப் பாவ நெருப்பில் தகனமாகியே எரிந்து பழக்கப்பட்டிருந்தாலும், உள்ளிருந்து உயிர் மரித்துப் போகாமல் ஜோதிமயமாகவே மாறி விட்ட ஒரு சத்தியதேவதையாக அவள் உயிர்த்தெழும் அந்த ஒரு கணம் அவளுக்கு ஒன்றும் புதிதல்ல அதைக் கண்டு கொள்ளாதவன் மாதிரியே ரகுவின் அசமந்த நிலைமை.
கேவலம் ஒரு பத்தாயிரம் ரூபாய். அவள் கணவன் வேலையை இழந்த பிறகு படி தாண்டிப் போய், பத்தினி வேஷம் கலைந்து அவள் அந்நிய மனிதர்களிடம் கை நீட்டிக் காசு வாங்கி அவள் பட்ட கடனுக்கும் இருண்டு போன யுகமாகவே அவள் வாழ்ந்து தீர்த்த வாழ்க்கை இழப்புகளுக்கும் முன்னால் அவன் வார்த்தைகளால் வறுத்து எடுத்துத் தரப் போகிற இந்தப் பத்தாயிரம் எந்த மூலைக்கு என்று அவளுக்கு யோசனை வந்தது. அதை அவன் உணர்ந்ததாகத் தெரியவில்லை
காசு வாங்கும் படலம் வெறும் கண்களில் ஒரு காட்சி மயக்கம். எல்லாம் கடந்து வந்த நிலையில் அவள் இருந்தாள். மதியம் பன்னிரண்டு மணிக்கு அவளுக்குச் சாப்பாடு போட்டார்கள். பெரிய மனது பண்ணி ரகுவின் கட்டளைக்கிணங்கப் படைக்கப்பட்ட விருந்தை, வேறு வழியின்றித் தின்று தீர்த்த நிலையில் அவள் வீடு போகக் கிளம்பும் போது பவானியின் கருந்தீட்டு நிழல் அவள் மீது வந்து கவிந்தது. அவள் புருஷன் சார்ந்த பத்துப் பிள்ளைகளில் வந்து முளைத்த கடைசி விழுது. அவள் விழுது அல்ல விஷம் தான் வாயெல்லாம். அவளுக்கு ஆளும் கறுப்பு. மனதிலும் கறுப்பு நிழல் நிஜமான தோரணையில் கொடி கட்டிப் பறந்தது. அவள் வாயிலிருந்து. மீண்டும் ஒரு வேதம். வேதம் சொல்வதற்கு இவர்கள் என்ன கடவுளா? மிருகங்களை விடக் கேவலமான ஒரு மனிதன் வேதமா கூறுவான்?
சாத்தான் வாய் திறந்த கணக்கில் ஜானகியை வழி மறித்து அவள் சொல்கிறாள்
“ எங்கள் மூன்று பேருக்கும் நீ தான் செய்தனி”
அதென்ன மூன்று பேர் கணக்கு? கணக்கு வழக்குத் தெரியாதவளா அவள்? பத்தாம் வகுப்பு வரை விஞ்ஞானப் பிரிவில் படித்துக் கிழித்த மேதையாயிற்றே அவள். எனினும் அவள் சொன்னது வேதமல்ல என்ன சொன்னாள் அவள் ?
“நான் செய்தேனாமே? அப்படி எதைச் செய்து விட்டேன் நான்? நான் செய்வினை செய்து தான் அந்த மூவருக்கும் இப்படியொரு பாழும் தலைவிதியாம். அவர்களில் இருவருக்குப் பைத்தியம். நரேன் என்ற பையன் என்ஞினியருக்கு எடுபட்டு இடையில் மனம் குழம்பித் தோற்றுப் போனவன் அடுத்தது மாலதி. அவளும் பைத்தியம். இந்தப் பவானியோ கல்யாணமாகிப் புருஷனை விட்டு விலகி வாழவெட்டியாக இருக்கிறாள். இதற்கெல்லாம் நானா பொறுப்பு? அவள் புருஷன் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த தாரக மந்திரங்களில் இதுவும் ஒன்று. அவள் மட்டுமல்ல அவள் அம்மாவும் ஒரு சூனியக்காரியென்றே அவன் நினைப்பு
செய்வினை சூனியம் என்ற எதுவுமேயறியாத அப்பாவி வெள்ளை மனம் கொண்ட அவள் மீதா இப்படியொரு பழிச் சொல்? என்னவொரு கொடுமை அவர்களுக்கெல்லாம். இப்படி ஒரு விதி நேர்ந்ததற்கு உண்மையில் யார் காரணம்? படுபாவியான பக்கா கிரிமினலான அப்பன் மூட்டி விட்ட பாவநெருப்பில் அவர்கள் வீழ்ந்து மடிந்து போனதை அறியாமல், என்னைக் குத்தீட்டி கொண்டு பிளக்க நேர்ந்த கொடுமையை எண்ணித் தனக்குள் மூண்டெரிகிற அந்தத் தர்மாவேச நெருப்பில், வீழ்ந்து முழுவதும் பஸ்மமாகி கருகி ஒழிந்து விட்டதாய் உணர்வு கொண்டு, வாய் விட்டு அழக் கூட முடியாதவளாய் முகம் மறைந்து போன இருளில் முக்காடு போட்டு மறைந்தவாறே மெளமாக அவள் அங்கிருந்து போகக் கிளம்பினாள்
தன் மீது வந்து இப்படிக் கவிந்து மூடுகின்ற இருள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல கல்யாண விலங்கு காலில் இறுகிய போதே வந்து மூடிய இருள் ஒரு யுகமாகத் தொடர்ந்து தன்னைப் பலியெடுக்கும் நிலையில் இதற்கெல்லாம் தர்க்க வாதம் புரிந்து நீதியை நிலை நாட்டி வெற்றி பெறுவதென்பது வெறும் பகற் கனவாகவே முடியும். தர்மம் நீதி எதுவுமே அறிவுக்கெட்டாமல் இருள் மூடி வாழ்கிற இவர்களிடம் போய் உண்மையை எடுத்துக் கூறி வாதிடத் தொடங்கினால் தன் சத்தியமே தலை குனிந்து தோற்றுப் போன மாதிரி அதில் வருகிற நட்டக் கணக்கில் உலகமே அழிந்து போகும் நிலை வரக் கூடாதென்பது ஒன்று மட்டுமே அப்போதைய நிலையில் அவளின் பிராத்தனையாக இருந்தது, அதிலும் பாவிகளைத் தண்டிக்க நான் யார்? கடவுள் இருக்கிறார் இதற்கான தண்டனையைத் தீர்ப்பை அவரே வழங்குவார் என்ற நம்பிக்கையொளி மனதில் குடை விரிக்க ஒன்றுமே நடவாத மாதிரி வாசல் தாண்டிப் போன அவள் நடைப் பயணமும் அவ்வாறே கொடி கட்டிப் பறந்தது.