நீறுபூக்கும் நெருப்புத்துண்டு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2025
பார்வையிட்டோர்: 710 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்போதுதான் சுந்தரம் சாப்பிட உட்கார்ந்தான். மனதுக்குள் ஏனோ ஒருவித எரிச்சல். வாழ்க்கை மொத்தமும் தன்னை நரகத்தில் தள்ளிவிட்டதைப்போல கொடிய சலிப்பு, அந்த எரிச்சலுக்கு எண்ணை வார்த்தது. கொழுந்துவிட்டெரிந்த எரிச்சல்… சோற்றுப் பானையின் மூடியை தள்ளிய கோபத்திலும், தண்ணீர் அள்ளும் போது வெங்கலப் பானையை அலறச்செய்த வேகத்திலும், ஜ்வாலை விட்டது. 

‘ச்சே… இதுவும் ஒரு பொழைப்பா?’ என்று உஷ்ணத்துடன் முணுமுணுத்துக் கொண்டான். 

சோற்றில் தயிரை ஊற்றினான். பிசைந்தான். சோறு கூழானது. பங்கஜத்தை நினைத்துக்கொண்டான். அவள் பக்கத்திலிருந்து, இவன் நோக்கம் புரிந்து பரிமாறி… இவனும் அவளும் பல பல கதைகள் பேசிச் சாப்பிட்டால்… அந்தச் சாப்பாட்டுக்கே தனி ருசி; அலாதியான திருபதி! 

ஆனால், அதற்குத்தான் கொடுத்து வைக்கவில்லையே! மெயின் ரோட்டில் ஒரு பெட்டிக்கடை வியாபாரம். ஜீவித ஆதாரமே அதுதான். சாப்பிட இவன் வீட்டுக்கு வரவேண்டுமென்றால்… அவள் கடையைக் கவனித்துக்கொள்ள வேண்டும். என்ன செய்வது! பிரம்மச்சாரிச் சாப்பாடுதான்… 

சுந்தரத்தின் கணக்கில்… இந்தக் கடைவியாபாரம் உலகத்திலேயே மோசமான தொழில். தனது சுதந்திரத்தையெல்லாம் பிடுங்கி, கடுகு டப்பாவுக்குள் போட்டுக்கொள்கிற தொழில். தனது உன்னதமான மனசாட்சியை, ஓசி பீடி கேட்பவனைப்போல இழிவாகப் பார்க்கும் ஓர் அவலத் தொழில். 

ஆனால், இதைத் தவிர வேறென்ன செய்வது? எப்படியாச்சும் வாழ்ந்தாகணுமே! வாழ்ந்த நாட்கள் போக, மீதமுள்ள நாட்களை நகற்றியாக வேண்டுமே! தன்னை நம்பி கழுத்தையும் வாழ்க்கையையும் நீட்டியுள்ள பங்கஜத்தைக் காப்பாற்றியாகணும்… சந்தோசமாக வாழணும்… சந்ததிகளை உருவாக்கணும்… அதுக்கெல்லாம் வருமானம் வேணும். அதுக்கொரு தொழில் வேணும்… 

குழிக்குள் விழுந்துவிட்ட யானைக்குட்டிபோல, கையறு நிலையில் சுந்தரத்தின் மனம் கதறியது. 

வீட்டுக்கு வெளியே ஒரு நிழல் தெரிந்தது. சாப்பிட்டுக் கொண்டே தலையைச் சற்று நீட்டி, எட்டிப்பார்த்தான். கடைக்குப் பக்கத்திலுள்ள வீட்டுப் பையன். 

“என்னப்பா… சிங்காரம்…?’ 

“கடைக்கு சீக்கிரம் வருவீகளாம். அக்கா சொல்லிச்சு.” 

“என்னவாம் அதுக்குள்ளே? எழவா விழுந்துடுச்சு…” என்று சுந்தரம் சொன்னது, அவனுக்குக் கேட்கவில்லை. 

“என்ன மாமா?” 

“ஒன்னுமில்லை போ…நா இதோ வர்ரேன்…” 

விடுபட்ட குருவியைப்போல, சந்தோஷமாகப் பறந்தான். சலிப்பும் எரிச்சலும் மேலும் சில டிகிரிகள் ஏறிக்கொள்ள, அவசர அவசரமாக அள்ளிப்போட்டுக்கொண்டு கிளம்பினான். 

தன்னுடைய தொழிலை-பிழைப்பை – பங்கஜத்தை- சகலத்தையும் சகட்டுமேனிக்குத் திட்டினான். கெட்ட வார்த்தைகள் சிறகு முளைத்துப் பறந்தன. வாழ்க்கையில் அவன் சலிக்காமல் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் அந்த வாக்கியத்தையும் உதிர்த்துக் கொண்டான். 

‘ச்சே… நாய்கூட பொழைக்குமா… இந்தப் பொழைப்பு, கேவலம்…’ 

சுந்தரம், அறிவு விழிப்புற்ற அந்தப் பன்னிரண்டு வயதுப் பருவத்திலிருந்து ‘ஃபயர் ஒர்க்ஸி’ல் வேர்வை சிந்தி… மேலெல்லாம் கருமருந்துத் துகளைப் பூசியே வளர்ந்தவன். அந்தக் கருமருந்தின் நெடியை சகித்து…ருசித்து, லயித்து… அதையே ரசிக்கிற அளவுக்கு அந்தத் தொழிலுடன் ஒன்றிப்போனவன். 

வாரத்திற்கு மூன்றரை ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்து ‘ரசிக்கிற’ அளவுக்கு ஒன்றிப்போனபோது, 35 ரூபாய் வாங்கினான். அப்போதுதான் அவன் தொழிற்சங்கத்துடன் பரிச்சயம் கொண்டான். 

அற்புதமான பரிச்சயம்; தன் வாழ்க்கைப் பயணத்தின் திசையையே மாற்றியமைத்துவிட்ட வல்லமைமிக்க பரிச்சயம்; அறியாமைப் பேதைமைக்குள் அடைபட்டுக்கிடந்த அவனது சிந்தனையில், ஒரு பிரளயத்தை சிருஷ்டித்த பரிச்சயம்! 

தங்கள் உதிரத்தை உறிஞ்சி உருவாகும் வெடிகள், வேட்டுகள் யாவும் அமெரிக்காவுக்குக்கூடப் பயணமாகிறது என்பதில் பெருமிதப்பட்டுக்கிடந்த அவன்… அதன் லாபங்கள் மொத்தமும் தேசத்துக்கல்ல, சில நபர்களின் கைக்குள் முடங்கிக் கொள்கின்ற உண்மையைப் புதிதாக உணர்ந்தபோது குமுறினான். தங்களுக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய சர்வ சாதாரணமான, சட்டரீதியான சலுகைகளும் உரிமைகளும்கூட மறுக்கப்பட்டு வந்திருப்பதை அறிந்தபோது… ஆத்திரப்பட்டான். 

சுந்தரத்தின் வாலிப மனதில் தூங்கிக்கிடந்த போர்க்குணம், விசுவரூபமெடுத்தது. 

‘நாம இப்படியே கண்ணை மூடிக்கிட்டு ஒழைச்சோம்னா… எவனும் நம்ம தொடையிலே கயறு திரிச்சிட்டுப் போயிடுவான்…’ என்று சக தொழிலாளர்களிடம் பேச ஆரம்பித்தான். ‘சங்கம் சேரணும்’ என்றான். சங்கத்தில் இவனுடன், இன்னும் சிலரும் உறுப்பினரானார்கள். 

முதலாளி காதுக்கு செய்தி எட்டியது. அழைத்தார். விசாரித்தார். 

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லே முதலாளி.. சங்கமாவது ஒன்னாவது… எவனோ உங்ககிட்டே ‘வத்தி’ வச்சிருக்கான்” என்ற பின்வாங்கலை எதிர்பார்த்து, விசாரித்த முதலாளிக்கு திக்குமுக்காடி விட்டது. 

“உங்க உல்லாசத்துக்கு லயன்ஸ் கிளப். உங்க தொழில் நலனுக்கு ஒரு உற்பத்தியாளர் சங்கம்… எங்களுக்கு மட்டும் சங்கம் இருக்கக்கூடாதோ? இதென்ன ஞாயம்?” 

சுந்தரத்தின் கேள்வியில், நியாய ஆவேசம் அனல் வீசியது. ”நாளையிலேயிருந்து வேலைக்கு வரவேணாம். கணக்கை முடிச்சுக்கோ…” என்பதாக அந்த விசாரிப்பு முடிந்தது. 

தொழிற்சங்கத் தலைவர், இவனது புகாரைப் பெற்றுக்கொண்டு முதலாளியை நேரில் சந்தித்தார். 

அவனது சர்வீஸ் காலத்தை நினைவூட்டினார். வேலையிலிருந்து அவனை அகற்றமுடியாத சட்ட பலத்தைச் சுட்டிக்காட்டினார். வேலையை விட்டு நீக்குவதற்கு முன்பு நடந்தேற வேண்டிய… ‘சோகாஸ்’ நோட்டீஸ் வழங்குவது… விசாரிப்பது… இத்யாதியெல்லாம் நடக்காத சர்வாதிகாரப் போக்கை குறிப்பிட்டுக் காட்டினார். ஊஹும்! முதலாளி ‘தான் பிடித்த முயலுக்கு ஐந்தே கால்தான்’ என்று அடம்பிடித்தார். 

கேஸ், லேபர் கோட்டுக்குப் போனது. வாய்தாக்கள் நீண்டன. காலம் இழுத்தடிக்கப்பட்டது. இடைவெளிக் காலத்தில், வேறு எங்காவது வேலை செய்யலாம் என்று அலைந்தான். 

இவன் போகிற இடத்துக்கெல்லாம், இவனுக்கும் முன்பாக முதலாளியின் டெலிபோன் தனது ஒலிபரப்பின் மூலம், உயர்ந்த மதில்சுவர்களை எழுப்பிவிடும். வேறு வழி, சாப்பாட்டுக்கு? 

கேள்விக்குறி மேலும் மேலும் வளைந்தது; அவனை நெருக்கியது. தொழிற்சங்கம்தான் அந்தக் கேள்விக்குறியை தற்காலிமாக நிமிர்த்தியது. சங்க வேலைகளைச் செய்தான். சாப்பாட்டுக் கவலை தீர்ந்தது. கேஸ் தொடர்ந்தது. “மீண்டும் வேலை, இல்லையேல் நஷ்டஈடு”. 

கேஸ் நடந்துகொண்டிருக்கும் காலத்திலேயே, ஏழைப் பெண்ணான பங்கஜத்தை மணந்துகொண்டான். கேஸ் முடிந்தது. நஷ்ஈடு கிடைத்தது. 

வாழ்விற்கான ஒரு தொழில் வேண்டும். முதலாளியின் இடையூறுகளை மீறிய தொழிலாக இருக்கவேண்டும். என்ன தொழில்? 

பாதைகள் யாவும் அடைபட்டுபோன நிலையில், இந்தப் பெட்டிக்கடை பலசரக்கு வியாபாரத்தில் நுழைந்தான்; நுழைக்கப்பட்டான். 

…சந்து பொந்துகளையும் கடந்து, சாக்கடைகளைத் தாவி, எதிர்ப்பட்ட மனிதர்களை விலக்கி கடையை நெருங்கிய போது சிந்தனை அறுபட்டது. 

கடையின் முன் இரண்டு பெண்கள் சரக்கு வாங்கிக் கொண்டிருந்தனர். அரிசி,பருப்பு… சீரகம்… மல்லி… வற்றல்… 

இடையில் ஒருவன் புகுந்து… ‘ரெண்டு கத்திரி’ என்றான். இடித்துக்கொண்டு நுழையும் அவனை எரிச்சலுடன் பார்த்தவாறு பெண்கள் விலகுவதைக் கவனித்து, சுந்தரம் ஆத்திரப்பட்டான். 

“யாரைய்யா இது… கத்தரிக்கென்ன கொள்ளையா போகுது. மெல்ல விலகி நின்னு வாங்கேன்.” 

“அவசரம் அண்ணாச்சி…” 

“நல்ல அவசரம்…” கோபத்துடன் கூறினான். அவன் பாவம், வெலவெலத்துப் போய் நகன்றான். 

பெண்கள் சரக்கு வாங்கிக்கொண்டு போனபின்… கடைக்குள்ளிருந்த பங்கஜத்திடம் கேட்டான்: 

“என்ன கூப்டியாமே?” 

“ம்ம்…” ரெண்டு பிள்ளைகளை சுமந்து, பெற்று, பறிகொடுத்துவிட்டு, மூன்றாவதை சுமந்து சிரமப்பட்டுக் கொண்டிருக்கிற பங்கஜம், உபாதையுடன் உறுமினாள். 

“என்னவாம்?” 

“முருகேசன் அண்ணாச்சி வந்திருந்தார்…” 

ஐஸ் கட்டி விழுந்ததுபோல, சுந்தரத்தின் நெஞ்சில் ஒரு ஜில்லிடல் பரவியது. “ம்ம்” என்று திணறினான். 

“உங்களுக்காகக் காத்திருந்தார். இப்பத்தான் போறார்.” 

“என்ன சொன்னான்?” 

“என்னத்தைச் சொல்வாரு? வழக்கம்போலத்தான் ‘காச்சு மூச்சு’ன்னு கத்தினார். ஏழாந்தேதிக்குள்ளே பணம் வரல்லேன்னா… சரிப்பட்டு வராதுன்னு மிரட்டிட்டுப் போறார்.” 

காலண்டரைப் பார்த்தான். தேதி இரண்டு. இன்னும் ஐந்து நாட்கள். அதற்குள் அறுநூறு ரூபாயை எப்படிப் புரட்டுவது? ஜில்லிட்ட ஐஸ் கட்டி, இப்போது நெருப்பாக மாறியது. முருகேசன் காலண்டர்களுக்கு ஆர்டர் பிடிக்கப் போவதாக பெங்களூர், பூனா என்று வருஷத்தில் ஆறுமாதம் வெளி மாகாணத்தில் அலைவார். வேறு வேறு துணைத் தொழில் செய்வதுண்டு. கொழுத்த வருமானம். வட்டிக்குக் கொடுத்து வாங்குவார். வட்டியும், ராட்சஸ வட்டி. நூற்றுக்கு ஐந்து ரூபாய் வட்டி. 

பங்கஜத்தின் முதல் பிரசவம் ரொம்பச் சிரமப்படுத்திவிட்டது. பெட்டிக்கடை, சரக்கு இல்லாமல் காலி பெட்டியாக – தாலியற்ற வெறுமையாக -தோற்றம் அளித்தது. 

கடையைத் தொடர்ந்து நடத்துவதெப்படி? இந்தக் கேள்வி அவனையும், எதிர்காலத்தையும் அச்சுறுத்திக்கொண்டிருந்த வேளையில், முருகேசன் கை கொடுத்தார். ஆயிரம் ரூபாய் கடன் தந்தார். 

கடை புதுப்பிக்கப்பட்டது. பிறந்த பிள்ளை இறந்தது, இரண்டாவது பிள்ளையும் பிறந்து மடிந்தது. செலவுக்கு வழி வகுத்தது. அத்தனை செலவுகளுக்கு மத்தியிலும், முருகேசனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடனைத் திருப்பினான். 1200 ரூபாய் அடைத்தாகிவிட்டது, அசல் ஆயிரம்தான். ஆனால், இன்னும் அறுநூறு ரூபாய் பாக்கி நிற்கிறது. அதற்குத்தான் முருகேசனின் ‘காச்சு மூச்சு’ மிரட்டல்! 

சுந்தரத்தின் மனதில் தர்மாவேசம், கொந்தளிப்பலையாக எழுந்தது. 

“வட்டி, வட்டின்னு நம்ம குடும்பத்தையே நாசப்படுத்திப் போடுவான் போலிருக்கே. இந்த மாதிரியான மிருகங்களையெல்லாம் நடுத்தெருவிலே கட்டி வைச்சு…?” 

தான் அதீதமாக சுரண்டப்படுவதை சகித்துக்கொள்ள முடியாமல், அவன் வார்த்தையில் அனல் பறந்தது. பங்கஜம் எதுவும் சொல்ல மனமில்லாமல், கர்ப்ப உபாதையில் “உஸ்ஸு…” என்று பெருமூச்சுவிட்டாள். 

“வரட்டும்…ஏழாந்தேதி… அவனை மூஞ்சியில் அடிச்சாப்பலே பேசி விரட்டுகிறேன்…” என்றான் சுந்தரம். ஒரு கலகத்துக்குத் தயாராகி விட்டான். 

அவனது ஆத்திரம் அளவுக்கு மீறியதாகப் பட்டது பங்கஜத்துக்கு. எடுத்துச் சொல்லவும் சிரத்தையின்றி, சோர்வாக இருந்தாள். 

சண்டைக்குத் தயாராகி நின்ற புருஷனைப் பார்த்தாள். என்னவோ சொல்ல நினைத்தாள். சொல்லுக்குப் பலனிருக்குமோ. இராதோ என்ற சஞ்சலத்தில் மௌனமாக இருந்தாள். 

ஏழாந்தேதி, கடையில் இருந்தான் சுந்தரம். சரக்குகள் வாங்க வேண்டியதற்காக லிஸ்ட் தயாரித்தான். கல்லாப்பெட்டியில் கிடக்கும் பணத்தை எண்ணிப்பார்த்தான். லிஸ்ட்டுக்கும் பணத்துக்கும் தகராறாக இருந்தது. 

பணத்துக்கு என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தான். மனதுக்குள் உளைச்சல். பங்கஜம் வந்தாள். 

“என்ன, முருகேசன் அண்ணாச்சி வந்தாரா?” 

இந்தக் கேள்வி… மறந்து போயிருந்த ஒரு பிரச்னையை நினைவுபடுத்தியது. மனதுக்குள் ஒரு கலவரம். கோபமும் அனல் வீசியது. வந்தால் சண்டை போட்டு விரட்டி விட வேண்டியதுதான். வருவது வரட்டும். ராஸ்கல்… அசலுக்கு மேலே வசூல் பண்ணியும், இன்னும் அறுநூறு ரூபாய் வசூல் பண்ண வருகிறானாம்! 

“என்ன உம்மென்று இருக்கீக…? வந்தாரான்னு கேட்டேனே.” 

“இன்னும் வரல்லே…” உணர்ச்சியற்றுக் கூறினாலும், அடியில் ஒரு குமுறல் பதுங்கியிருந்தது. 

எதையோ யூகித்துக் கொண்டவளைப்போலப் பயந்தாள். 

“என்ன சொல்லப் போறீக…?” 

“வரட்டும்…’இன்னும் வட்டின்னு கேட்டு, இந்தப் பக்கம் வந்தால், உதைச்சிடுவேன்…’னு சொல்லப்போறேன்…” 

“சொல்லுங்க… சண்டை போடுங்க… ஜெயிலுக்குப் போங்க. கடையை சாத்திட்டு வீட்டிலே பட்டினியா கெடக்கேன்-வாயும் வயிறுமா நாதியத்துப்போய்க் கிடக்கிறேன். ஊரெல்லாம் நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கட்டும்…” 

சுயவதைப்புடன் பேசுவதுபோலப் பேசினாலும், அது ஒரு கடுமையான விமர்சனமாக- கண்டிப்பானதாக இருந்தது. அதன் அடி நாதமாக ஒலித்த சோகமும், துக்கமும், சுந்தரத்தின் நெஞ்சில் கூர்மையான ஊசிகளைப் பாய்ச்சியது. மனதில் கோபம் வந்து… ஒரு நெகிழ்வு. 

“நீ என்னத்துக்கு நாதியத்துப்போகணும்?” உயிரற்ற கேள்வி, ரொம்ப பலஹீனப்பட்டு வந்தது. 

“அதுதானே ஏந் தலையெழுத்து. உங்களுக்கு ஞாயம்தான் முக்கியம். பொண்டாட்டி முக்கியமில்லே. வீரம் காட்டத்தான் தெரியும். குடும்பம் தெரியாது. காலமெல்லாம் கடை நடத்தனும்ங்கிற அக்கறையில்லை. கவலையில்லை. கடை நடத்தனும்னா, மத்தவங்க தயவு வேணும். உதவுறவன் லாபமில்லாம உதவமாட்டான். உதவுறவன்கூட எல்லாம் சண்டை போட்டு ஞாயம் பேசினா… தயவு எப்படிக் கிடைக்கும்? கடை எப்படி நடத்துறது?” 

“நிறுத்துடீ..” உஷ்ணமான குரலின் சீற்றம். ஒரு சரணாகதிக்குத் தன்னை நிர்ப்பந்திக்கும் பெண். தனது ஆதரவுக்காக ஏங்கிக் கிடப்பவள். தனது முரட்டுத்தனத்தால் அந்த ஆதரவு எந்த நேரமும் நழுவிப் போய்விடுமோ எனப் பயந்து தவிக்கும் மனைவி. அவளைக் கோபிப்பதில் அர்த்தமில்லை. நான் யாரைக் கோபிப்பது? 

இந்தத் திகைப்பே. அவனுக்கு மகா எரிச்சலை ஏற்படுத்தியது. பங்கஜம் போய்விட்டாள். போகும்போது ஒன்று சொல்லிவிட்டுப் போனாள். 

“ஒத்தக் கட்டையாயிருந்தப்போ… வச்சிருந்த நெனைப்பு, வீரம் எல்லாம், குடும்பமாகிவிட்டப்புறமும் வைச்சிருந்தா… காலம் கழிக்க முடியாது. அவ்வளவுதா நான் சொல்வேன். அதுக்கு மேலே உங்க இஷ்டம்…” 

சுந்தரத்தின் சிந்தனை தள்ளாடியது. துன்பங்களில் அடிபட்ட காயவடுக்களுடன் அவள் சொல்லிச் சென்ற அனுபவ வார்த்தைகளும், சோகச்சித்திரமாகத் தோற்றமளிக்கும் அவள் முகமும் மனதை அலைக்கழித்தன. 

பங்கஜம் பேச்சு, தனது தர்மாவேசத்தையே குற்றப்படுத்தி விட்ட விந்தையை, வியப்புடன் நினைத்துக்கொண்டான். 

உழைப்பை மட்டுமே நம்பி உயிர் வாழும் ஒரு தொழிலாளியைப்போல, அநீதியை எதிர்த்துப் போரிடுவதில் வளையாத வைராக்யத்தைக் காட்டுவது, பலதரப்பட்ட நபர்களை அனுசரித்து வாழவேண்டிய ஒரு வியாபாரியால் நிச்சயமாக முடியாது போலும்! 

முருகேசன் வருவான். வரட்டும்… வந்தால் என்ன செய்வது… என்ன சொல்வது…? 

இந்தக் கேள்வி விஸ்வரூபமெடுத்து அவனை மறித்தது. நெஞ்சு கனத்தது. கல் விழுந்த கூட்டின் தேனீக்களைப் போல் எண்ணங்கள் ஆர்ப்பரித்துச் சுழன்றன. ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். 

பங்கஜம் வார்த்தைகள்… துயர ராகமிட்டுச் செவியில் ரீங்கரித்தன. சோகத் தீயில் கறுத்து, அறுத்துப்போட்ட பூங்கொடியாக வாடித் தோன்றிய முகம் நினைவுக்கு வந்தது. எதிர்கால வாழ்க்கையின் இருட்டு, நெஞ்சைக் கவ்வியது. 

“முருகேசன் வரட்டும்… வந்தா… அனுசரித்துப் பேசி, தவணை கேட்க வேண்டியதுதான்…” 

இந்த நினைவே அவனுக்கு அவமானமாக – அவலமான வீழ்ச்சிக்கு உள்ளாகிவிட்டது போலிருந்தது. யார் மீதோ ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இப்படியும் வாழணுமா… அநீதிக்கும், அக்கிரமக்காரர்களுக்கும் பணிந்து வாழ்றதும் வாழ்க்கையா…? 

சே… இதுவும் ஒரு பொழைப்பா? ஆனா… வாழ்ந்தாகணுமே! 

தனது சுதந்திரத்தையெல்லாம் கடுகு டப்பாவுக்குள் போட்டுக் கொள்ளும் தொழில். தனது உன்னதமான மனசாட்சியை, ஓசிப் பீடி கேட்பவனைப்போல இழிவாகக் கருதும் தொழில். 

ஆனால், வேறென்ன செய்யறது? தன்னை நம்பி கழுத்தையும், வாழ்க்கையையும் ஒப்படைத்துள்ள பங்கஜத்தைப் பாதுகாத்தாகணுமே! அதுக்கு ஏதாச்சும் ஒரு தொழில் வேணுமே! 

குழிக்குள் விழுந்துவிட்ட யானைக்குட்டியின் கையறு நிலையில், சுந்தரத்தின் மனம் கதறியது. 

முருகேசனின் வருகையை மிரட்சியுடன் எதிர்பார்க்கும் கணத்தில் – தான் வீழ்த்தப்பட்டுவிட்டதை நினைத்தபோது- அவனுள் ஏதோ ஒன்று அக்கினிப் பந்தாகத் திரண்டு எழுந்தது. 

– செம்மலர், அக்டோபர் 1979.

– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு:  2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *