நிறை மனம்!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2024
பார்வையிட்டோர்: 1,390
பெண் பார்க்கப்போகுமிடங்களிலெல்லாம் மாப்பிள்ளைக்கு அது இல்லை, இது இல்லையென்று சொல்லி பெண் கொடுக்க மறுத்ததால் சில காலம் கடினமாக உழைத்து அவர்கள் இல்லையெனச் சொன்னதை இருப்பதாகச் செய்தான் மாதவன்.
பின்பு, தன்னிடம் இல்லாத வேறொன்றை அதே பெண் வீட்டினர் இல்லையெனச்சொல்வதை மறுபடியும் முயன்று உருவாக்க சில வருடங்கள் தேவைப்பட, ஒவ்வொரு பெண் வீட்டிலும் குறை சொல்வதை நிறை செய்ய முயன்றதால் வயது நாற்பதைத்தாண்டிட, தற்போது’எல்லாம் இருக்கு, ஆனா வயசு அதிகமா இருக்கே…’ என வயதைக் குறையெனச் சொல்லி பெண் தர மறுத்தனர்.
‘ஒரு வெள்ளை ரோஜாவை குருவி காதலிச்சிதாம். தான் எப்போ முழு சிவப்பா மாறுவேனோ, அப்போ உன்னைக்காதலிக்கிறேன்னு ரோஜா குருவிகிட்ட சொன்னதைக்கேட்டு, நீ எப்போ சிவப்பா மாறுவது? எப்போ என்னைக் காதலிப்பது? ன்னு தன்னை ரோஜா செடியில் இருக்கிற முள்ளில் குத்திடுச்சாம். குருவியோட ரத்தம்பட்டுப்பட்டு வெள்ளை ரோஜா முழு சிவப்பா மாறுனப்ப குருவி உயிரோட இல்லையாம்…. ராஜேந்தரோட சினிமா கதை மாதிரி நம்ம நிலையும் ஆயிடுச்சே…’ என திருமணத்தையே வெறுத்தான்.
குறைகளை மட்டுமே பார்ப்பவர் கண்களுக்கு நிறையென்பது தெரிவதில்லை. குறை என்று ஒன்றை சரி செய்தால் இன்னொன்று தெரிய ஆரம்பித்து விடுகிறது. புலி வாலைப்பிடித்த கதையாக சரி செய்ய முயன்றால் ஆயுள் போதாது. குறை தெரிவதெல்லாம் பெற்றோருக்குத்தான். பெண்ணுக்கல்ல. பெண்ணோ, ஆணோ பருவ வயதில் எதிர்பாலினத்தினரிடம் நிறையை மட்டுமே காண்பார்கள். அதனால் தான் காதலுக்கு கண்ணில்லை என்றார்கள்.
“என்னடா மாப்ளே எப்பத்தான் பொண்ணப்புடிக்கப்போறே…? உங்கூட படிச்ச எனக்கு என்ற புள்ளையே வயசுக்கு வந்திட்டா… கட்டுன சேலையோட வந்தா போதும்னு சொன்னதும் சட்டுனு பொண்ணு அமைஞ்சிருச்சு. நீ ரொம்ப வசதி எதிர்பார்க்கிறீன்னு ஊர்ல பேசிட்டாங்க” என சம வயது உறவினர் ரங்கன் பேசியது தன் நிலைக்கு எதிராகப்புரிந்துகொண்டதாகப்பட்டது.
‘திருமணம் தாமதமானாலே வரதட்சணை எதிர்பார்பது தான் காரணம்’ எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர்.
‘உண்மை நிலையே வேறு. பெண் வீட்டினர் தான் தனக்கு அதில்லை, இதில்லை என பெண் கொடுக்க மறுத்தனரே தவிர தான் ஒரு நாளும் எந்தப்பெண்ணையும் குறை சொல்லி தவிர்க்கவில்லை’ என வருந்தினான்.
“சொல்லவும் முடியல, சொன்னாலும் புரியல. எல்லாம் விதிதான். ஊர்ல எந்த சம்பாதனையும் இல்லாம, குடியிருக்க ஊடும் கூட இல்லாதவன் ஒன்னுக்கு ரெண்டு கட்டிக்கிறான். பொண்டாட்டி கூலி வேலைக்கு போயி குடும்பத்தையும், கொழந்த குட்டிகளையும் காப்பாதிபாபோடறா. கடைசி வெரைக்கும் கல்லாமரத்து நெழல்ல பட்டச்சாராயத்தக்குடிச்சுட்டு சீட்டாடியே காலத்தக்கடத்தீட்டு பொண்டாட்டி புள்ளய மெரட்டி தாஞ்சொல்லறதக்கேக்கற மாதர வெச்சிருக்கறானுக. அவனுக ஒரு மாதர பொறப்பு. என்னால அப்படி இருக்க முடியலையே…?” சொல்லி வருந்தினான்.
“ஒலகம் எப்படிப்போகுதோ அப்படி நீயும் போனாத்தா வேணுங்கறது வேணுங்கற போது கெடைக்கும். குடிக்கிறவங்க கூட்டத்துக்கு போயிட்டு கூல் டிரிங்க்ஸ் தான் குடிப்பேன்னு அடம்புடிச்சீன்னா அடுத்த தடவ உன்ன கூப்பிட மாட்டாங்க. அளவாக்குடிச்சிட்டாவது வந்தரேணும். அந்த மாதர தான் பழகோணும். இது பொண்ணுங்களே குடிக்கிற காலம். நீ சாமியாராட்ட கறி, புளி ஒதுக்கீட்டு வாழ்ந்தீன்னா அதுக்காசப்படற பொண்ணுக உன்னைக்கட்டிக்க ஒத்துக்க மாட்டாளுக. உண்மையச்சொல்லிப்போட்டேன். ஒன்னி உன்ற சௌரியம்” என பேச்சை முடித்தார் உறவுக்காரரும், பள்ளித்தோழருமான ரங்கன்.
‘ஒன்றைப்பெறுவதற்காக, அது வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருப்பினும் பிடிக்காத பழக்கத்துக்கு எவ்வாறு ஆட்படுவது? ஒரு தவறைச்செய்து தான் தேவையைப்பெற வேண்டுமென்றால் அது தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா?’ என பலவாறு யோசிக்கலானான்.
மாதவன் பெண் கேட்டு கொடுக்காத பெண்ணின் குடிகாரத்தந்தை, அவருக்கு தினமும் மது வாங்கிக்கொடுக்கும் குடிப்பழக்கம் உள்ள ஒருவனுக்கு பெண்ணைக்கொடுத்து அவன் நோயால் உயிரிழக்க, அப்பெண் இரண்டு குழந்தைகளுடன் தனித்திருக்கும் நிலையில் பெண்ணின் தாய் மாதவனிடம் வந்து ” பத்து வருசத்துக்கு முன்ன நீங்க பொண்ணுப்பார்த்துட்டு போனதுக்கப்புறம் எங்க பொண்ணுக்கு உங்களை ரொம்ப புடிச்சிருந்தது. ஆனா என் புருசன் கொடுத்தா சிந்தனுக்குத்தாங்கொடுப்பேன்னு ஒரு குடிகாரனுக்கு கொடுக்க சம்மதிச்சுட்டாரு. இப்ப அவனும் போனதோட என்னோட புருசனும் குடிச்சுக்குடிச்சு கொடல் வெந்து செத்துப்போனாரு. நேத்துங்கூட எம்பொண்ணு ‘மாதவனக்கட்டியிருந்தா மாங்கல்யத்தோட இருந்திருப்பே’ன்னு சொல்லி உங்கள நெனைச்சுட்டு அழுதா. ஒன்னமும் உங்கள மனசுல மறக்காம நெனைச்சிட்டு இருக்கற எம்பொண்ண கண்ணாலமே ஆகாம இருக்கற நீங்க கைப்பிடிச்சா உங்களுக்கும் வயசான காலத்துல ஒரு துணையாச்சு. அவளுக்கும் ஆதரவாச்சுன்னு நெனைச்சுத்தான் உங்களப்பார்க்க வந்தேன்” எனக்கூறி மகிளாவின் தாய் மங்களம் கண்ணீர் சிந்தினாள்.
வெளியில் குறை போலத்தெரியும் வாழ்வில் அக்குறையையே மனதளவில் நிறையாக்கி வாழ்தலும் ஒரு கலைதான். அக்கலையை அனுபவத்தின் வாயிலாக அறிந்துகொண்ட மாதவன் தன் குறையை பிறர் கண்டு தன்னை ஒதுக்கினாலும், பிறர் குறையை, குறையாக மனதால் எண்ணாமல் அக்குறையை நிஜத்திலும் தன் முயற்ச்சியால் நிறையாக்கி, மற்றவர்களுக்கு மாற்றாக வாழ வேண்டுமென நினைத்தான். இப்படியொரு வாய்ப்பை உண்மையிலேயே எதிர்பார்த்தும் இருந்தான். உலகினர் குறையாகப்பார்த்த, கணவனை இழந்த மகிளாவை மனதாரக்கைப்பிடித்து அவளை மணந்து கணவனானதோடு, அவளது குழந்தைகளுக்கு தந்தையுமானான் மாதவன்.