நாலு சமோசா – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 15,344 
 
 

பாஸ்கரும் அவனுடைய நண்பன் பிரணதார்த்தியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். இருவரும் சேர்ந்து ஜவஹர்லால் நேரு டெக்னலாஜிக்கல் யூனிவர்சிட்டி யில் (JNTU) கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் பி.டெக். படித்துக் கொண்டிருந்தார்கள்.

பரீட்சை நெருங்கி விட்டது.

கொஞ்சம் ஊன்றிப் படிக்க வேண்டுமென்பதால் இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து படிப்பது என்று தீர்மானமாயிற்று. ஒரு மாதம் லீவு போட்டிருந்தார்கள்.

பிரணதார்த்தியின் வீட்டின் முன்புறம் ஓர் அறை காலியாக இருந்தது. அந்த அறையில் படிக்கலாமென்று அவன் சொன்னான்.பாஸ்கரின் வீடு இங்கிருந்து கொஞ்சம் தூரம் தான் என்றாலும், மனைவி, குழந்தையின் தொல்லையில்லாமல் நிம்மதியாகப் படிக்க முடியுமென்பதால் அவனும் ஒப்புக் கொண்டு தினம் பிரணதார்த்தியின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

பிரணதார்த்தியின் மனைவி சற்றைக்கொருதரம் சிற்றுண்டிகள் கொண்டு வந்து தர ஆரம்பித்தாள். டீ வரும், தேன்குழல் வரும், உப்புமா, தோசை வரும். ஜுஸ் வரும்.

பாஸ்கர் சொல்லிப் பார்த்தான், “பிரணதார்த்தீ, நீ வீட்டுக்குள் போய் வேளைக்குச் சாப்பிட்டுவிட்டு வந்து விடு. எனக்கும் சேர்த்து எல்லாம் கொண்டு வந்து தருகிறாள் உன் மனைவி. எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என்று.

அவன் கேட்டால் தானே? “அதனாலென்ன? நம் படிப்பும் தடைப் படாமல் இருக்கிறது. நீயும் அவ்வளவு தூரம் உன் வீட்டுக்குப் போய்வர வேண்டாமல்லவா?” என்றான்.

அன்று மாலை டீ போட்டு அதோடு சேர்த்து ஏதோ கொண்டு வந்து வைத்தாள் பானு. அதில் ஒரு தட்டை பாஸ்கரின் பக்கம் நகர்த்தினான் பிரணதார்த்தி.

தலையை நிமிர்த்தி என்னவென்று பார்த்தான் பாஸ்கர். வெஜிடபுள் சமோசா நாலு இருந்தன. அவனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.

வேண்டுமென்றே…

ஒன்றை எடுத்துக் கடித்தவன், “ஏன் இது நன்றாகவே அமையவில்லை? என் மனைவி கூட ஒரு முறை செய்தாள். மிகவும் நன்றாக இருந்ததே!” என்று சொல்லி விட்டு டீயைக் குடித்தான்.

அறைக்கு வெளியே பிரணதார்த்தியின் மனைவி நிற்பது தெரிந்து சற்று உறக்கவே சொன்னான்.

அவன் திட்டம் வீண் போகவில்லை. மறுநாள் மதியம். டிபன் நேரத்துக்கு யாரும் வரவில்லை. எதுவும் வரவில்லை.

“ஒரு நிமிஷம், இதோ வந்து விடுகிறேன்,” என்று சொல்லிவிட்டுப் பிரணதார்த்தி மட்டும் உள்ளே சென்றுவிட்டு, சற்று நேரத்தில் வாயைத் துடைத்தபடி திரும்பி வந்தான்.

‘வாழ்க சமோசா!’ என்று பாஸ்கர் தனக்குள் கூறிக் கொண்டான்.

– குமுதம் ஒரு பக்கக்கதை – 14-5-1987ல் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *