நான் ஒன்ன நெனைச்சேன்….?! நீ என்ன நெனைச்சே?!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2026
பார்வையிட்டோர்: 883
ஒரு கனவு…ஒரு லட்சியம்… ஆசை., ஒருத்தனுக்கு! அந்த சாலை ஓரம் மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான் அந்த பிச்சைக்காரன். யார்கிட்டயும் “சார்… பிச்சை போடுங்கன்னோ… அம்மா தாயே தர்மம் பண்ணுங்கன்”னோ கேட்டதில்லை., கேட்பதில்லை…! பின்ன எப்படி வயிறு வளர்க்கிறான்?! இதுதான் மனசுக்குள் பாடாய்ப் படுத்தும் கேள்வி!
ஓருநாள்.. அவனை அதிசயிக்க வைக்கணும்..! ஆச்சரியப் பட வைக்கணும்., முடிவெடுத்தான். ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை அவன் கைகளில் அவன் கேட்காமலேயே கொண்டு கொடுத்துத் திணித்தால்.. என்ன ஆகும்? என்ன சொல்வான்? என்ன நினைப்பான்? என்ன பண்ணுவான் அதை? எதாவது டாஸ்மாக்குக்குப் போயிடுமோ? இத்தனை எதிர்பார்ப்பில்.. அவனை நெருங்கினான்.
ஏடிஎம்மில் எடுத்த சலவை நோட்டுகளில் ஒரு ஐநூறு ரூபாயைத் திணிக்க, பாண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து அவனை நெருங்கினான். கைகளில் திணித்துவிட்டு, விலகி நின்று வேடிக்கை பார்த்தான்.
பிச்சைக்காரன்…நிமிர்ந்து பார்த்தான். பிச்சைக்காரன்னு இனி மேல் யாரையும் சொல்லக்கூடாது! ‘பணம் விரும்பின்னு’ வேணா சொல்லுங்கன்னு அரசு ஆணை போட்டாலும் போடலாம் யார் கண்டா?!
அவனை ‘பணம் விரும்பீன்னே’ வச்சுக்குவோம். அவன் கைகளில் திணிக்கப்பட்ட அந்த ஐநூறு ரூபாயை கண்ணருகே வைத்துப் பார்த்தான்.. ரெண்டு மூணு முறை திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஆச்சரியப்பட்டான். சாளேஸ்வரமாகக்கூட இருக்கலாம்.
தவறுதலாய் கொடுத்துட்டாரோன்னு நெனைச்சு கொடுத்தவரை நிதானமாய்ப் பார்த்தான். இல்லைனு தெரிஞ்சதும், பணத்தைச்சுருட்டி லுங்கியைத் தூக்கி அணிந்திருந்த அண்டர்வேர் பையில் வைத்துவிட்டு, இருகைகளையும் கூப்பினான்.
நல்லா இருங்கன்னு மனசார வாழ்த்தினா மாதிரி இருந்தது… காசுக்காக இதுவரை உயராத அந்தக் கைகள் வாழ்த்த உயர்ந்தன முதல் முறையாக!
இந்த ஆத்மார்த்த ‘வாழ்த்தை’ அந்தப் பணம் விரும்பியிடமிருந்து பெற, அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும்னு நெனைக்கத் தோணியது.
நான் ஒன்ன நெனைச்சேன்…! நீ என்ன நெனைச்சே?! ரெண்டான உள்ளம் ஒன்றாச்சு!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
