தோடு




(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
புவனா, அபிதா, முரளி – மூவரும் வீட்டு வாசலுக் கெதிரே சின்ன குறட்டுக்கல்லில் அப்பா-அம்மா விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அபிதா, தான்தான் அப்பாவாயிருப்பேனென்று சண்டி பண்ணினாள். மூவரில் அவள்தான் வயதில் சிறியவள்.
“அப்போ பாப்பா யார்?” என்று புவனா கேட்டாள். மூவரில் அவள்தான் மூத்தவள்.
”நீ”
“நான்?” – முரளி, தன் மார்பை சுட்டிக் காட்டிக் கொண்டான்.
“நீ -அம்மா”
“ஏது, எல்லாம் தலைகீழ்ப் பாடமாயிருக்கே!”
குரல் கேட்டு மூவரும் திரும்பினர். ஒரு கிழவர் பின்னால் நின்று கொண்டிருந்தார். நீண்ட மயிரை நெற்றியிலிருந்து பின்னுக்குக் கோதிவிட்டிருந்தார். கறுகறுவென்று தாடி.
“என்ன, வீடு பூட்டியிருக்கு?”
“அம்மா, ஆபிஸ் போயிருக்கா?”
“ஓ! குட்டி உன் பேர் என்ன?”
“அபிதா”
“அம்மா ஆபிசிலிருந்து வரவரைக்கும்?”
“நான், இவள் மாமா பெண். என் பேர் புவனா” – புவனா பேச்சை எடுத்துக்கொண்டாள்.
“இவன் முரளி, என் தம்பி. நாங்கள் அடுத்த தெருவிலிருக்கோம். அத்தை இப்போ ஆபிசிலிருந்து வர நேரமாச்சு. அதான் வந்திருக்கோம்.”
“அபிதா அப்பா?”
“அப்பாவுக்கு ஊரிலே ஆபிஸ். இன்னிக்கு ஊரிலிருந்து வவ்வா. எனக்கு ஜாங்கிலி வாங்கிண்டு வவ்வாளே!”
“முரளிக்கும் வாங்கிண்டு வருவாளே!” – முரளி தன்னைச் சுட்டி காட்டிக்கொண்டான். அவனுக்குக் கடை வாயில் எச்சில் வழிந்தது.
“போடா, நோக்குக் கிடையாது. எங்கப்பா எனக்குத் தான் வாங்கிண்டு வவ்வா…” -அபிதா புருவங்கள் நெரிந்தன. அவனை அடிக்கப் போய்விட்டாள். சித்திரம் கசங்கினாற் போல், அவள் முகம் சட்டென மாறிவிட்டது.
“குழந்தைகளா, சண்டை போடாதேங்கோ, இந்தாங்கோ, அப்பா வரவரைக்கும் ஆளுக்கொரு சாக்லேட்”
புவனா வாங்கிக்கொண்டாள்.
முரளிக்கு அவசரம் தாங்கவில்லை; வாங்கினதும் வாங்காததுமாக, மேல் ஜிகினாவைப் பிரித்து வாயில் திணித்துக் கொண்டு, சுவாதீனமாக அவர்மேல் உராய்ந்தான்.
அபிதா, கையை நீட்டிவிட்டு, பிறகு தயக்கத்துடன் பின் வாங்கிக்கொண்டாள்.
“என்ன யோசனை?”
“அம்மா வாங்கிக்கக் கூடாதுன்னா சொல்லியிருக்கா. கோவிச்சுப்பா.”
பெரியவர் புன்முறுவல் பூத்தார்.
“தோ, அம்மா வந்தூட்டாளே!”- அபிதா ஓடிப்போய் அம்மா காலைக் கட்டிக்கொண்டாள்
நடுக்கோடை அஸ்தமன நேரம். ஆனால் அஸ்தமனம் இன்னும் நேரவில்லை. ராஜராஜேஸ்வரி கோயிலில் சாயங் கால தீபாராதனை ஆலயமணி தீர்க்கமாக ஒலிக்கத் தொடங்கிற்று. கிரிஜாவின் கைகள் கூப்பின. பிறகும் அவளுக்குத் தெரியவில்லை, அவள் வணங்கியது மணியோசையையா அவரையா? ஏனெனில், இரண்டுமே அவளுக்குப் பழக்கமில்லை.
“அம்மா, நான் தாத்காவிடம் சாக்கலேட் வாங்கிட்டுமா?”
“முரளிக்கும் வேணும்” – முரளி, தன்னைச் சுட்டிக் காட்டிக்கொண்டான்.
அபிதா கையை ஓங்கினாள். “போடா, நோக்குக். கிடையாது. நீ தான் உன் பங்கைத் தின்னாச்சே!”
“முரளிக்கு நுன்னுன் நொன்னூணு வேணும்!”
”என்ன சர்ச்சை?” எல்லோரும் திரும்பினர், பெரியவரைத் தவிர.
“அப்பா! அப்பா!” அபிதா, அப்பாமேல் தாவினாள். “நேக்கு ஜாங்லி வாங்கிண்டு வந்திக்கையா?”
அந்தி மங்கல் வந்துவிட்டது. எப்படி இப்படிச் சட்டென வந்தது? கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவரும் பெரியவரைப் பார்த் தனர். அந்த க்ஷணமே ஆலயமணி, கண கண கண கண கண வென அடுக்காய் ஒலித்தது. ஜாலரின் அறையல் கொட் புளித்தது. அடுக்கு தீபாரதனை போலும்.
”வழிப்போக்கன். தாகத்துக்கு ஜலம் கேட்கலாமென்று இந்த வீட்டுக்கெதிரே நின்றேன். வீடு பூட்டிக் கிடக்கு. அதற்குள் குழந்தைகள் விளையாட்டில் கவனம் மாறி விட்டது.”
“Oh, that is alright. G, கதவைத் திறவேன்!”
எல்லோரும் ஊர்வலமாக நுழைந்தனர், பெரியவரைத் தவிர. அவர் வாசற்படிக்கட்டை ஒட்டி எழுப்பிய மேடை ஒன்றில் அமர்ந்துவிட்டார்.
“ஏன், உள்ளே வாங்கோளேன்”
“இல்லே, இங்கே காற்று ஜிலுஜிலுன்னு இருக்கு”
உடையைக் கழற்றி எறிந்துவிட்டு, லுங்கி உடுத்துக் கொண்டு, வெளியே வந்து எதிர் மேடையில் அமர்ந்தான். உடம்பு, ஆவி கக்கிற்று.
“உஸ், கிரி, காப்பிக்கு வழி இருக்குமா?” என்று கூவினான்.
உள்ளேயிருந்தபடி, கையைச் சிலம்பம் ஆட்டினாள் இல்லையென்று.
“நல்ல வீடய்யா இது து. வரது வாரத்துக்கு ஒருநாள் அங்கே, நாயர் கடை டீயை விட்டால் வேறு கதியில்லை. ஊர் ஊராய் ஓடிப்போய் சம்பாதிச்சாலும், நம் வீட்டில் நமக்கு ஒரு முழுங்கு காப்பிக்கு, வாய், முகம் எல்லாம் தீப மங்கல ஜோதி ஆயிடறது”
“புவனா ஆத்துக்குப் போய்ப் பாட்டியைக் கேட்டுப் பால் வாங்கிண்டு வா. கூடவே முரளியை அழைச்சுண்டு போ. ஜே, உங்களுக்கு வேற்றாள் எதிரே நம் அழுக்கை அலசறத்துலே தனிக் குஷி ! இல்லையா?”
“பின்னே என்ன, நீ மட்டும் உத்யோகத்துக்குப் போக வில்லை. நானும்தான் வேலை பார்க்கிறேன்- “
தெருவில் ஒன்றும் இரண்டுமாக, வாழைத்தண்டு விளக்கு கள் எட்ட எட்ட ஏற்றிக்கொண்டன.
“மல்லி! மல்லி!” – தெருவில் ஒருவன் கையில் மூங்கில் தட்டுடன் அறைகூவிக்கொண்டு போனான்.
கோபுர விளக்கு, பெரிய குங்குமப் பொட்டுப்போல் பிரகாசித்தது.
கிரிஜா, கூஜாவையும் தம்ளரையும் இருவருக்கும் நடுவில் வைத்துவிட்டுப் போனாள். நல்ல தேய்ப்பு. பாத்திரங்கள் பளிச்சிட்டன.
கிழவர், அடுத்தடுத்து இரண்டு தம்ளர் குடித்தார்.
“ஜலம் கடுக்குமே!” – அவனுக்கு வாய் கடுத்தது. “இந்த வட்டாரத்திலேயே தண்ணீர் சுகமில்லை.”
“அவள் கொடுத்தது.”
“அவளா? எவள்?”
கிழவர் பதில் பேசவில்லை. அவர் சிரம் லேசாய் கோபுர விளக்கை நோக்கிச் சாய்ந்தது. சொல்லிவைத்தாற்போல் மணிஓசை ஒருமுறை வீச்சிட்டது.
தன் அசடை மறைக்க எழுந்து வாசல் விளக்கைப் போட்டான்.
அரையில் ஒற்றை வேட்டி. மேலே ஒரு ஒற்றை வேட்டி. வேறு உடமைகள், கைப் பை இருப்பதாகத் தெரியவில்லை.
புவனா, சொம்புடன் உள்ளே சென்றாள்.
ரயில் நிலையத்திலிருந்து மின்சார வண்டி கிளம்புகிறது அதன் தாளம் வெகுதூரம் கேட்டு எட்டஎட்ட ஓயுமுன் எதிர் வண்டியின் சப்தம் நெருங்குகிறது.
அபிதா, உள்ளிருந்து வாய்க்கும் கைக்கும் ஜாங்கிரியுடன் வருகிறாள். சுவாதீனமாகப் பெரியவர் மடியில் உட்கார்ந்து கொண்டு, சட்டென்று திரும்பி, அவர் வாயில் ஒரு ஜாங்கிரிக் கொம்பை – சின்னதுதான்– திணிக்கிறாள். அவர்கூட எதிர் பார்த்திருக்கமாட்டார்.
அவள் தகப்பனார் அவளை வியப்புடன் நோக்குகிறான். அபிதா அப்படி சட்டென ஒட்டிக்கொள்ளும் பேர்வழி அல்ல. அவளே கொஞ்சம் லேடி.
“தாத்தா நான் ஜாங்கிரி தந்தேனோன்னோ, நீ சாக்க லேட் தா!'”
“உம். என்ன சொல்லணும்? பெரியவாளை நீ என்கிறதா?” – அவள் அப்பன் பல்லைக் கடிக்கிறான்.
“இருக்கட்டும். நாம் எல்லோரும் அவள் குழந்தைகள்”
புவனா உள்ளிருந்து இரண்டு தம்ளர்களுடன் வருகிறாள் பெரியவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
ஒரு முழங்கு உள்ளே போன பிறகுதான் அவனுக்கு உலகம் ரமித்தது.
”ஜி, ரொம்ப தாங்க்ஸ்'”
“அதிலே ஒண்ணும் குறைச்சலில்லே.”
“ஸார், பழக்கமில்லாதவர்கள்-கொடுத்து வைத்தவர் கள். எனக்கு மண்டையிடி பிராணன் போயிடுத்து”
“நானும் ஒரு காலத்தில் முடாக்குடியனாக இருந்தேன்”
“அப்போ ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?”
“வழிப்போக்கனுக்கு பழக்கங்கள் கட்டுப்படியாகாது. ஒருநாளைக்கு ஒன்று கிடைக்கும்; ஒருநாள் கிடைக்காது. ஒருநாள் வசதியிருக்கும்; ஒருநாள் இருக்காது. வழிப் போக்கன், பழக்கங்களுக்கு லாயக்கில்லை.”
“வழிப்போக்கன் என்றால் என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள்? சன்னியாசியா?”
“நான் சன்னியாசி இல்லை. வழிப்போக்கன் என்றால் வழிப்போக்கின் கால்போன வழி, போய்க்கொண்டிருப்பவன். கால்நடையாக நம்நாடு பார்க்க ஆயுசு போதாது.
“தேசாந்தரியா?”
“அப்படியும் கொள்ளலாம். அடேடே!”
“என்ன?”
“குழந்தை,மடியை நனைத்துவிட்டாள்.”
அவர் சொன்னது உறைக்க அரைக்கணம் சென்றது. உறைத்ததும் அவனுக்குச் சீற்றம் பொங்கிற்று. அடிக்கக கை ஓங்கிவிட்டான்,
“அவளைத் தொட வேண்டாம்” – குரல் என்னவோ மெத்துத்தான். ஆனால், அதில் ஒரு எஃகை அவன் இப்போது உணர்ந்தான். அவன், அவளைத் தொடமாட்டான். அதையும் உணர்ந்தான்.
“அவள் இதுபோல் இருந்ததில்லை.”
“அப்போ இது அவள் விளையாட்டு.”
“எவள்?”
“எனக்கு ஒரு அவள் தான் உண்டு. அவளேதான் எல்லாம். நம் அவலத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகிறாள்.”
“என்ன அவலம்?”
“குழந்தையின் ஸர்வ சகஜமான செயலில், சொந்தத்தில் தோ அவமானம் நேர்ந்துவிட்டதாகப் படித்தாகிறது அல்லவா? தன்மடியில் ஸகஜம், அதுவே பிறர்மடியில் அவமானம். அதுதானே?”
அவனுக்கு நா எழவில்லை. தெருவில் வாழைத்தண்டு விளக்கு ஒன்று சொடசொடத்தது. ஏதோ கோளாறு. நாக்குத் திரும்பியதும், “வேட்டியை அவிழ்த்துப் போடுங் கள். உடுத்திக்க வேறு தரேன். அவளை அலசச் சொல்றேன்.’
“நானே அலசிக்கிறேன். கிணற்றடியைக் காண்பித்தால் போதும்.”
அவரைப் புழைக்கடையில் கொண்டுபோய் விட்டுவிட்டு, சமையலறையுள் நுழைந்தான். அடுப்பில், ரசம் காய்ந்து கமாளித்துக்கொண்டிருந்தது. அவள் ஏதோ யோசனையில் ரஸம் தளைப்பதைப் பார்த்தவண்ணம் நின்றாள்.
அவன், அவள் முதுகைத் தடவினான். என்னதான் சொல்லு, உனக்குக் கை வாஸனை இருக்கு –
சண்டைபாட்டுக்குச் சண்டை; சமாதானம்பாட்டுக்குச் சமாதானம். குடும்பமே வரவர, வயிறு அலம்ப ஒரு கூட்டு ஏற்பாடாப் போச்சு. பால் கணக்கு, அரிசி விலை, எண்ணெய்ச் செலவு உங்களது. மார்க்கெட், சோப்பு, சீப்பு, ஸ்நோ, பவுடர் என்னது. இந்த மாதம் நெய் கிடையாது. நெய் நேத்திரவாயு. குடும்பமா இது? ஆயினும், ஏதேனும் பொய் உற்சாகங்களை மூட்டிக்கொண்டு இன்று போச்சா? நாளை வருகிறதா?
“விருந்தாளிக்கு என்ன பண்ணிப் போடறே?”
“விருந்தாளியா? அவர் சாப்பிடப் போறாரா என்ன?”
“ஏன், அவரை வாசலில் உட்கார வைத்துவிட்டு, என்னைக் கூடத்தில் சாப்பிடச் சொல்கிறாயா?”
“ஏன், அவர் இன்னும் போகவில்லை?”
“உன் பெண்தான் அவரைப் போகவொட்டாமல், அவர் மடியில் காரியம் பண்ணிவிட்டாளே!”
“அதுவே திகைச்சு முழிக்கறது; ‘அடக்கமுடியல்லே; எப்ப வந்தது தெரியல்லேம்மா’ என்கிறது”
“அதைவிடு, என் கேள்விக்கு என்ன பதில்?”
“தெரியல்லியே, ஏதோ மத்தியானம் மிச்சம் மீதாரியை வெச்சிண்டு ராப்பொழுதை ஓட்டிடலாம்னு பார்த்தேன்”
“வாஸ்தவம். அவர் வழிப்போக்கன். நான் ராப்பிச்சை. எனக்கு மூலைப் பழையதைப் பிழிந்து வெச்சுடலாம். சமயத்தில் நானே உனக்கு மிச்சப் பண்டம்தான். முடிந்தால், மடலில் குப்பையோடு குப்பையாய் வாரி விடுவாய் -”
“துணியை எங்கே உலர்த்தலாம்?’
கூடத்தில் அவர் குரல் கேட்டு, அவசரமாக வெளியே வந்தான். கூடத்து வெளிச்சத்தில் அவரைக் கண்டதும் பிரமித்து நின்றான்.
துணியைத் தோய்த்த கையுடன் அவரும் குளித்து விட்டிருந்தார். யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்டாற் போல் மேனி செந்தழலடித்தது. விழியேரம் செவந்திருந்தது. குளித்ததனாலோ! விற்புருவங்களினடியிலிருந்து விழிக்கதிர் அவன் நெஞ்சைத் துருவிற்று. அவன் மார்புள் ஏதோ கணப்பு பரவுவதை உணர்ந்தான். அவன் கைகள் கூப்பின.
வழிப்போக்கன்?
சன்னியாசி? தேசாந்தரி?
ரிஷி?
அந்த வயதுக்கு உடம்பில் ஒரு துளிச் சதைப் பிசிர்கூட இல்லை. அவருக்கு என்ன வயதிருக்கும்? நிர்ணயிக்க முடிய வில்லை. அவர் கையில் பிடித்திருந்த வேட்டியின் கொசுவத் தின் துல்லியம் அவன் நெஞ்சில் புலுபுலுத்தது. உலர்த்தணும் போல் ஆசையாயிருந்தது.
இப்படிக் கொடுங்கள். நான் உலர்த்தறேன்.”
அவர் பார்வை கூடத்தைச் சுற்றி அலைந்தது.
“பரவாயில்லை, கொடுங்கள். நான் உலர்த்தறேன். என் தகப்பனார் இருந்தால் அவருக்குச் செய்யமாட்டேனா?”
“தகப்பனார் மேல் சபலத்துக்கு வயது தாண்டிப் போச்சுன்னு நினைக்கிறேன். பிள்ளை கை சிசுருஷையை வாங்கிக்க ரெண்டு பேருமே பாக்கியம் பண்ணியிருக்கணும்.”
பேசிக்கொண்டே தேடும் அவர் நாட்டம். வாசல் தாண்டியதும் குறுகிய ரேழியில் கட்டியிருக்கும் நைலான் கயிறு மேல் விழுந்துவிட்டது. நிமிஷமாக உலர்த்தி, பட்சமாக வேட்டியை ஒருமுறை தட்டிவிட்டு மீண்டும் படிக்கட்டு மேடையில் அமர்ந்துவிட்டார். இடுப்பு வேட்டி ஈரம். ஆனால் அது இடுப்பிலேயே காய வேண்டியதுதான். அவன் நின்றபடி தன்னை ஒருமுறை பார்த்துக்கொண்டான். எங்கேயோ ரோசமாயிருந்தது. நெஞ்சில் எங்கோ சிலாம்பு உறுத்திற்று.
”ஏன், 43 வயதில் எனக்குத் தகப்பனார் இருக்கப் படாதா?” தனக்குத்தான் முனகிக்கொண்டான். ஆனால், வந்தவர் துடித்து எழுந்தார்.
“அபவாதம்! அபவாதம்! நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. என் தகப்பனார் ஐம்பதுகூட நெருங்க வில்லை. எனக்கு இருபத்திமூணாவது வயதில் காலமாகி விட்டார். என்னுடைய முதல் சம்பளத்தை அவர் கையில் கொடுத்து நமஸ்கரிக்க எனக்குக் கொடுத்துவைக்கவில்லையே என்கிற ஓயாத அரிப்பு, இத்தனை நாள் கழித்தும் என்னை அறியாமல் என்னை ஏதோ ஊறப் பண்ணிவிட்டது. நான் என்ன அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் தப்பு தப்புத்தான்! தாயே என்னைப் பொறுத்துக்கோ.”
அவருடைய வேதனையைக் கண்டு, அவன் மிரண்டு போனான் “நீங்கள் இந்த அளவுக்குப் பாராட்டும்படி ஒண்ணும் சொல்லிவிடவில்லை.
“இல்லை, அது அப்படியில்லை. இந்த வயசிலும் வாயை அலம்பற நிலையிலிருந்தால் இந்த வயசு இருந்ததற்கு என்ன அர்த்தம்? உசிரோடு எல்லாரும்தான் இருக்கோம். உசிர் போற வரைக்கும். வாழ்வு என்பது தனி .அதில் வாக்கு லேசுப்பட்டதல்ல. நாக்கு, அம்பாளின் பீடம். நாக்கு நுனியில் அவள் ஆக்ஞாசக்கரத்தில் புவனமே சுத்தறது”
‘பூம்’ கோவிலில் நகார் முழங்கிற்று. அவனுக்கு உடல் ஜிவ் விட்டது. நேரங்கள், அவருடைய சொல்பட்டு வேளை கனாக மாறிக்கொண்டிருந்தன. துவே அவனுக்குப் புது அனுபவம்.
எதிர் மேடையில் உட்கார்ந்துகொண்டான்.
“நீங்கள் ஒன்றும் தவறு சொல்லவில்லை. எனக்கு அப்பா இல்லை” என்றான்.
அவருக்குக் கேட்டதோ இல்லையோ? சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
“எனக்கு அப்பா இருக்காரோ இல்லையோ? எனக்குப் பத்து வயசிருக்கும், ஊமைக் கனவாயிருக்கு. அப்பா – அம்மா சண்டை. வீட்டை விட்டுப் போய்விட்டார்.”
கிழவர், சிலையடித்த மாதிரியிருந்தார். ஏதேனும் ஜபத்தில் ஆழ்ந்துவிட்டாரோ? அவர் கண்கள் மூடியிருந்தன.
ஆமாம், இதையெல்லாம் இவரிடம் ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? சொல்லி என்ன ஆகணும்? சொன்னால் என்ன? சொல்லிக்கணும்போல் இருக்கு. கோவிலுக்குப்போய் நாம் முறையிட்டுக் கொள்ளவில்லை? அங்கேயும் கல்தானே! இவராவது உயிருள்ள மனுஷன்.
அப்பா – அம்மா சண்டை எங்கு இல்லை? ஆனால், எங்கள் அம்மா கொஞ்சம் ஸ்பெஷல். நியாயம் உண்மையாக அவள் அறியாள். வாக்குவாதத்தில் வெற்றி எவ்வழியேனும். அது ஒன்றுதான் அவள் குறிக்கோள். அவள் இழைத்த தவறுகள் அவள் அகராதியில் கிடையாது. அத்தனையும் பிறருடையதே – பிள்ளையாகட்டும் புருஷனாகட்டும் அடுத்த வீட்டாராகட்டும் விதியாகட்டும் அது கடவுளே ஆகட்டும்.
சண்டையென்னவோ உப்பு – புளியில்லாத விஷயம்தான். உண்மையில், உப்பு – புளியில்தான் ஆரம்பித்தது. ரஸத் திலோ, குழம்பிலோ இப்போ ஞாபகமில்லை, மறதியாக உப்பை இருமுறை போட்டுவிட்டதோடல்லாமல், தவறு நேர்ந்துவிட்டதையும் ஒப்புக்கொள்ளாமல்,அப்பாவுக்குத் தான் நாக்குக் கோளாறு என்று வம்பு செய்தாள். தர்க்கம் முற்றி வம்சாவளியில் பாய்ந்ததும், “உங்கள் அம்மா கையில் இதைவிட உப்பு நீங்கள் தின்று இந்தக் கண்ணாரக் கண்டிருக் கேன்” இதுமாதிரி ஏதோ பேத்தினதும் –
அவ்வளவுதான் கூடத்தில் நிமிஷம் வெடித்தது. அப்பா, கையை உதறிக்கொண்டு கலத்தைவிட்டு எழுந்தார் -நாங்கள் உட்கார்ந்த இடத்தில், பயத்தில் அப்படியே உறைந்துபோனோம் – கையை அலம்பிக்கொண்டு, பூஜை யறையில் காத்ரெஜைத் திறந்து, தனக்கு வேணதை எடுத்துக் கொண்டு – தன்குழந்தைகளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை – சொக்காய்கூடப் போட்டுக்கொள்ளவில்லை, மேல் துண்டோடு வாசற்படியிறங்கினவர்தான். இன்னும் பார்க்கப் போகிறோம்.
எல்லாம் சாயந்திரம் திரும்பி வந்துடுவான்னு நெனைச் சோம். எனக்கு நன்னா இதுமட்டும் நினைப்பிருக்கு. அவருக்குப் பிரியமான வெங்காயத்தூள் பஜ்ஜி போட்டு அம்மா வெச்சிருந்தாள்.
சிங்கம் மாதிரி உத்யோகம். கொள்ளை வசதிகள். இத்தனையும் விட்டு மனுஷன் எங்கே போனான்? எப்படிப் போகத் துணிஞ்சுது? முடிஞ்சுது? கம்பெனி, பத்திரிகையில் விளம்பரம் செய்தது. சல்லடை போட்டுச் சலிச்சுப் பார்த் தாச்சு.பூமி விழுங்கிவிட்டது.
அப்பவும் அம்மாவுக்குத் தன் வாழ்வுக்கு உலை வந்தது பெரிசாகப் படவில்லை. அவளுடைய தோடைக் காணோம் என் மூணு நாளைக்கு விடாமே அலர்த்தினாளே பாக்கணும்!
இத்தனைக்கும் அவளுடைய தோடு இல்லை. பாட்டியி னுடையது. அப்படியே அப்பா எடுத்துச் சென்றிருந்தாலும், அவருடைய தாயாரின் தோடுக்கு, அவருக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கும் கிடையாது. மற்றப்படி, அம்மா சொந்தம் கொண்டாடும் நகைகள், பண்டங்கள் எல்லாம் அப்படி அப்படியே காத்ரெஜில் இருந்தன. அவைகூட அவர் வாங்கினவைதான்; அவர் பண்ணிப் போட்டவைதான். அம்மா பிறந்த வீட்டிலிருந்து கொட்டிக் குவித்துக்கொண்டு வந்துவிடவில்லை. இதை நாங்களே பொறுமையிழந்து என்றேனும் இடித்துக் காட்ட நேர்ந்தால்…
“ஆமாம் பொண்ணைத்தான் கொடுப்பா. இன்னும் வேறு என்னத்தைக் கொடுப்பா?”
எதற்கும் ஒரு பதிலில் அம்மா கில்லேடி.
திடுதிப்புனு அப்பா போயிட்டாரே ஒழிய யாரையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டுப் போகவில்லை. உயிலே எழுதி விட்டுப் போயிருந்தார். அவர் வழியில், ஆயுசுகட்டை எனும் முன்யோசனையோ என்னவோ? என் தாய்வழியில் ஆயிரம் பிறை பார்த்தவர்கள் இன்னும் இரண்டு மூன்றுபேர்கள் இன்றும் பல்கெட்டியாக இருக்கிறார்கள். ஆகையால், என் அம்மாவுக்கு ஜீன்ஸ் ப்ரகாரம் ஆயுசு கெட்டித்தான்.
அப்பா எதையுமே திட்டம் போட்டுச் செய்வார். அது அவருக்குப் பிடிக்கும். அவருடைய சுபாவம். ஆபிசிலும் அவர் மேஜை சுத்தம். ஆபிஸ் சாவிகள், ஆபிசுக்கு ரிஜிஸ்தர் தபாலில் அவர் – காணாமல் போன அன்றே வந்து சேர்ந்த தாகப் பின்னால் அறிந்தோம்.
அப்படி ஒன்றும் குறைகூறும்படியும் வைத்துவிட்டுப் போகவில்லை. அப்பா, கைராசிக்காரர், பொன்னன் அப்பவே கணிசமாகச் சேர்த்து வைத்திருந்தார்.
அப்பா, அப்படி ஒன்றும் முன்கோபியுமல்ல யாருடனும் அதிகம் பேசமாட்டார். அம்மா நேர் எதிர். பேசிப் பேசுமே அரித்து எடுத்துவிடுவாள். அவளை அப்பா எப்படி அது வரையே சகித்துக்கொண்டிருந்தார் என்பது நாளாக ஆகம் பெருகிக்கொண்டேயிருக்கும் கேள்விக்குறி. எட்டத்தும் பார்வையில்தான் விளிம்புக்கோடுகள் வெளிப்படுகின்றன. நாளாக ஆக அப்பாவைப் பற்றி நினைக்கையில். அதுவும் னோ தெரியவில்லை ஒரு வாரமா அடிக்கடி நினைப்பில் வருகிறார்; ஏதோ மலைத்தொடரைப் பார்க்கிற மாதிரி யிருக்கிறது. மலைத்தொடர் வளர்ந்துகொண்டே போகிறது. தொடரின் முடிவு எங்கே? தொடரின் மறுபக்கம் என்ன இருக்கும்? நீங்கள் எனக்குச் சொல்வீர்களா?
அவன் குரலில் தவிப்பு தெரிந்தது. லேசாக ஒரு தேம்பல் கூட வெளிப்பட்டதோ?
”சொல்வதற்கு நாம் யார்? நமக்கென்ன தெரியும்? அவள் விளிக்கும் விதம், சமயம், வழி எல்லாமே அவளு டையது. எதுவுமே நம்முடையதல்ல. நாமே நமக்கல்ல என்பதை உணர்வதுகூட அவள் கருணையால்தான் முடியும். அதுகூட நம்மில் இல்லை.
அபிதா, தூக்கக் கலக்கமாக வெளியே வந்து பெரியவர் மேல் சாய்ந்தாள்.
‘சேப்புத் தாத்தா!’- குழந்தையின் அதரங்கள் அவர் மார்க்குலையில் முத்தத்தில் ஒற்றின.
கிழவருக்கு உடல் பூரா அதிர்ந்தது. அப்படியே சொகு ஸாகச் சரிந்து, அவர் மடியில் படுத்துக் காலை நீட்டி க்ஷணத்தில் உறங்கியும் போய்விட்டாள்.
நேர்ந்த நேரம், அதைச் சொல்லும் நேரம் இல்லை.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு மேலும் புழுங்கிற்று.
“எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு. இத்தனை உரிமையா, என்னவோ பிறந்ததிலிருந்து உங்கள் மடியில் தவழ்ந்து விளையாடின மாதிரி-இது அபிதாதானா? எனக்கு அதிசய மாயிருக்கு. விட்டுச்சொல்றேனே, உங்களைப் பார்த்தால் இப்போ பொறாமையாயிருக்கு.”
“பூம் ரொய்ஞ்ஞ்…”
மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பினதோ அல்லது நோக்கி வருகிறதோ – ஆகாய விமான ரீங்காரம் இடத்தை நிறைத்தது. அதன் முன்னணியிலிருந்து குரல் அவனை எட்டிற்று. தணலில் வைத்த கனகன-
“அவள் நம்மை வாத்யமாக வாசிக்கிறாள். அவள் ஸங்கீதேசுவரி – நம் உடம்பின் கணக்கற்ற நரம்புகள், தந்தி கள் – நமக்குத்தான் கணக்கற்றவை, ஒவ்வொன்றின் வேர்ச் சுழிகூட – அவள் அறியாவிட்டால், அது அங்கு இல்லை- அவைகளின் ஸ்வரனுஸ்வரஸ் தானங்கள் அவளுடைய மீட்டலில் அதனதன் ஸாயுஜ்யத்துக்குக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதனதன் தனித்தனித் தாளப்ரமாணங்கள் லயப்ரமாணங்கள் அவளுக்குத்தான் தெரியும் அதனதன் பரமாணிக்கங்களும் அவளுக்குத்தான் சொந்தம். அவள் பண்ணிக்காட்டும் ஸ்ருதிபேதங்கள் நமக்கு அப்பாற்பட்டவை. ஆனால், அவள் ஸ்ருதிஸுத்தமானவள். பிந்து மாலினி. ஸுநாத விநோதினி. அமிர்தவர்ஷணி: லீலா கான லோலி.
நாமங்கள் கம்பீர சாட்டை. அவனுக்குத் தொண்டை வெளியே குதித்துவிடத் தவித்தது.
நாமங்கள், தாம் இறங்க இடம் தெரிந்து தைக்கும் ஏவுகணைகள்.
தகதிமி திமிதக- நெஞ்சை ஏதோ நடனம் மண்ணாய் மிதித்தது.
ஸமகஸஸமகரி நிமகஸ.
அந்தரத் தந்தியில் மந்திரத் தும்புரு.
தந்திர ப்ருகடை
தந்தினத்தனதான்.
ஏமேமோ பழக்கமிலா வார்த்தைகள், ஓசைகள். காலம் கடந்த நித்திரை கலந்து அவன் நரம்புகளில் விழித்தெழுந்த மாதிரியிருந்தது.
இவர் என்னை என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்? இந்த இன்ப பயங்கரம், இந்த நிலை இன்னும் சற்று நீடித்தால் நானே எனக்கில்லாமல் போய்விடுவேனோ? எனக்கு நான் வேணுமே! என் வீடு, என் கிரிஜா, என் அபிதா. என் அம்மா, இந்த மொஸாய்க் தரை, கொல்லைப்புறத்தில் துளசிமாடம், வாழைக்கன்று, தென்னங்கன்று, செம்பருத்தி, மல்லி, வேலிதாண்டி அதை மேயும் ஆடு எல்லாமுந்தான், நான் சர்வ சாதாரணமானவன். பாமரங்கள் தான் என் படுகை. துறவு எனக்கு வேண்டாம், வேணவே வேண்டாம்-
தன்னைக் கவியும் அழுத்தத்தை, அசுரப்ரயத்னம் தந்த அரக்கபலத்தில் குஹை வாயை மூடிய பாறாங்கல்லைத் தள்ளுவதுபோல் உதறினான். தன்னை அடித்துச்செல்லும் வெள்ளத்தில் கைநழுவும், பாமரங்களின் நினைவுக் கிளையை, கரைப்புல்லை, உயிர்ப்பிடியை மீண்டும் பற்றும் முயற்சியில், பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.
“ஆச்சு, நாங்களும் வயதுக்கு வந்து அவா அவா அச்சில் விழுந்தாச்சு. தம்பி, பிலாயில் இருக்கிறான். தங்கையைக் கோயமுத்தூரில் கொடுத்திருக்கிறது. அவளுக்கு பிரசவம் பண்ண அம்மா போயிருக்கா. சீடை, முறுக்கு, பருப்புப் பொடி, திரட்டுப்பால்… இல்லையா, இத்யாதிகளுடன்.
அம்மா ஒரு கவலையில்லா மனுஷி! அப்பாவைப்பற்றி அவள் கிணுங்கவேயில்லையே!
“செத்தவா பின்னாலேயே நாமும் போயிடறோமா? உடன்கட்டையேற்ற காலத்திலிருக்கறதா உங்கப்பா நினைச் சுண்டிருக்கா. ஏதோ திமிர்பிடிச்சுத் தன் பொறுப்பெல்லாம் விட்டுட்டு ஓடிப்போனால் அதுக்கு நான் ஆளா? திரும்பி வராத வரை, அப்பிடி இப்படி ஒண்ணும் தெரியாதவரை என் மஞ்சளுக்கும் பூவுக்கும் பங்கமில்லாமல் போயிடறேன்-
ஸர்வமங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதகே
அவளுக்குத் தெரிந்த தோத்திரம் அது ஒண்ணுதான். ஒருநாள் தவறாமல் சொல்லிக் கொண்டு குத்துவிளக்கை நமஸ்கரிப்பாள். ‘இப்படியும் ஒரு பிறவி உண்டா?” என்று அதிசயிப்பேன். ஆனால், அவளை என்ன செய்யமுடியும்?
“அவளுடைய நாமங்கள், அஸ்திரங்கள் நட்ட வேலி. அதன் பாதுகாப்பை அவளால்கூடத் தாண்டமுடியாது.”
பெருமூச்செறிந்தான்.
“எங்களைத்தான் பார்க்கிறீர்கள். நான். இவள், அபிதா. எங்களுக்கு ‘லேட் மாரியேஜ்’ காரணம்? ஜாதகத் தில் கேட்டை மூட்டை செவ்வாய்க்கிழமை. தோஷத்துக்குத் தோஷப்பொருத்தம் ஒருவரையொருவர் அடைய அப்படித் தேடி அலைஞ்சிருக்கோம். அ -ஹ் – ஹா”-வாய்விட்டுச் சிரித்தான். “நாளாகித்தான் அபிதாவும் பிறந்தாள். அதற்கே எத்தனை தவம், அரசமரம், ராமேசரம். பிள்ளை எதிர்பார்த்தாள்; கிடைத்தது அபிதா. அதுவும் ஏதோ இணங்காத கருவிலிருந்து பிடுங்கியெடுத்த மாதிரி,சிரம ப்ரசவம் அதனால்தான் எனக்கு 43, அபிதா 3, அவளுக்கு, முப்பத்திஅஞ்சு – அஹம் — ஆறு -”
“கணக்கெல்லாம் ஒப்பிச்சாச்சா? இனி சாப்பிட வரலாமா?”
“ஓஹோ, ஒட்டுக் கேக்கறையா? உன்னை மறந்தே போச்சு. நல்லவேளை, ஞாபகப்படுத்தினே. வயிற்றில் குழி விழுந்த மாதிரி ஒரே பசி. ஸார் எழுந்திருக்கிறேளா?”
“ராச்சாப்பாடு எனக்குக் கிடையாது”
“என்ன ஸார், என் வீட்டில் கை நனைக்கக்கூடாதுன்னு கங்கணமா?”
அவளுக்குக்கூட என்னவோ மாதிரியிருந்தது. புதுசா கத்திரிக்காய்ப் பொரிச்ச குழம்பு பண்ணியிருக்கேன். எழுந் திருங்கோ – இல்லை, ஒரு கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு-
கிழவர் புன்னகை புரிந்தார். வேறு பதில் பேசவில்லை. அவளுக்கு எரிச்சலாக வந்தது. வெடுக்கென்று அவர் மடியி லிருந்து பிடுங்குவதுபோல் குழந்தையைத் தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
இன்று ராத் தங்க ஒழுங்கையில் இடம் கொடுத்தால் போதும். பாய், படுக்கை எதுவும் வேண்டாம். பழக்கமில்லை. வாசற்கதவைப் பூட்ட வேண்டாம் ஓரிருமுறை இரவில் எழுந்திருக்க நேரிடலாம்.
ஆனால், ஜல உபாதைக்கு இருமுறை அவன்தான் எழுந் தான். முதல் தடவை அவர் மல்லாந்து நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்.
இரண்டாம் முறை, அவன் வாசலுக்கு வந்தபோது அவர் இல்லை.
வீல் என்று அலறல் கேட்டு, கிரிஜா அலறிப்புடைத் தாள். மூவரும் கூடத்தில்தான் மின்விசிறி அடியில் படுக்கை. நன்கு விடிந்திருந்தது.
வாசலைப் பார்த்த கூடத்து ஜன்னலை அவன் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தான்,
அவனுக்கு வாய் ஏதோ குழறிற்று. அவன் விழிவட்டங் கள் போன வழி அவள் பார்வை சென்றது.
ஜன்னல் சுவர்க்கட்டையில் ஒரு சாக்கலேட்.
ஒரு ஜோடி சிவப்புக்கல் தோடுகள் சிரித்துக்கொண்டு இருந்தன.
– நேசம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1989, வானதி பதிப்பகம், சென்னை.