தொட்டால் பூ உதிரும்..!






(2003ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம்-10

சொர்க்கம் மதுபானக்கடையில் இரவு ஒன்பது மணிக்கு மேலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒளிமங்கிய அறையில் ஒரே மேசையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரும் பரமசிவமும் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தார்கள். மேசையில் முழு பாட்டில் விஸ்கியில் பாதி காலியாகி இருந்தது. இரண்டு தட்டுகளில் இருந்த எறால் வறுவல், சிக்கன் -65கள் கொஞ்சம் காணாமல் போயிருந்தன. அவரவர் கிளாசுகளில் அந்த பொன்னிற திரவம் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. இருவரும் பாதி போதையில் புகைத்தபடி இருந்தார்கள் கண்கள் சிவந்திருந்தது.
“எனக்கென்னவோ இதுக்கு முன்னாடி ஒரு பொம்பளை கொலை, அடுத்து விஜயதர்ஷ்ணி, இப்போ இந்த புள்ளைங்க மூணு கொலைக்கும் சம்பந்தம் இருக்கிறாப் போல தெரியுது..!” பரமசிவம் புகையை சுருள் சுருளாக விட்டு விட்டத்தைப் பார்த்துச் சொன்னார்.
“எப்படி சொல்றே?” சங்கர் அவரைக் கூர்மையாகப் பார்த்தார்.
“என் மனசுல படுது.”
“ஏன் உன் விசாரணையில் ஏதாவது முடிச்சு தெரியுதா?”
“தெரியலை. ஆனா நாளைக் காலையில நான் வேம்பூர் போறேன்.”
“ஏன்?”
“அங்கே முக்கியமான ஒரு ஆள் இருக்கான். ஆனந்த்!”
“அவன் எப்படி?”
“வரதட்சணைக் காரணமாய் அவன் அமுதாவால் சிறைக்குப் போய் வந்தவன். இந்த குழந்தைக் கடத்தலுக்கு அவன்தான் காரணமாய் இருக்கமுடியும்ன்னு அமுதாவும், அவள் கணவனும் நம்புறாங்க. என்கிட்ட புகார் கொடுத்திருக்காங்க.” என்றார்.
வேம்பூரில் சிவப்புண்ணியம் செட்டியாரின் விலாசம் விசாரித்து தேடி கண்டு பிடித்து கதவைத் தட்டும்போது ஆனந்த்தான் வந்து கதவைத் திறந்தான்.
சாதாரண உடையில் வாட்டசாட்டமான ஆளை வாசலில் பார்த்ததும் புரியாமல் நின்றான்.
“நீங்கதானே ஆனந்த்?” அமுதா சுதாகர் காட்டிய புகைப்படத்தை ஞாபகம் வைத்து கேட்டார்.
அவனும் மறைக்காமல் “ஆமாம்!” தலையாட்டினான்.
“நீங்க…?” குழப்பமாய்க் கேட்டான்.
“வாங்க உள்ளாற போய் பேசுவோம்!” பரமசிவம் இவன் பதிலை எதிர்பாராமல் வீட்டின் நிலைமை தெரிய உள்ளே நுழைந்தார்.
ஆனந்த் பின் தொடர்ந்தான்.
ஹாலில் ஒரு வயதான தம்பதியர்கள் சோபாவில் அமர்திருந்தார்கள்.
“அது பெரியம்மா, இது பெரியப்பா..” ஆனந்த் அவர்களை இவருக்கு அறிமுகப்படுத்தினான்.
பரமசிவத்திற்கு அவர்கள் முன் ஆனந்த் குட்டை உடைப்பது நல்லதல்ல என்று தெளிவாக தெரிந்தது.
அவனுக்கு அருகில் நின்றவர் “நான் ஆனந்த்தோட நண்பன்!” என்று அவர்கள் காதில்விழுகிறாற் போல் சத்தமாக சொல்லி “ஆனந்த்! ஒரு நிமிசம் என்னோட நீங்க வெளியில வரணும்!” சொல்லி வாசல் நோக்கி நடந்தார்.
இருவரும் வாசலைத் தாண்டி வெளியே வந்தார்கள். ஓரிடத்தில் நின்ற பரசிவம் “இதுதான் நான்!” தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் கைவிட்டு அடையாள அட்டையை எடுத்து அவனிடம் நீட்டினான்.
அடையாள அட்டையில் சப்-இன்ஸ்பெக்டராய் அவரைப் பார்த்த ஆனந்த் முகத்தில் பேயடித்தது.
“இங்கே வீடு பெரிசா இருக்கு. உள்ளே இருக்கிறவங்க மதிக்கிறாப்போல இருக்காங்க. அவுங்க உங்க கவுரவம் பாதிக்கப்படாம இருக்கனும்ன்னா உங்க கையில விலங்கு மாட்டாம அழைச்சிப் போகனும். அதுக்கு நீங்க ஒத்துழைப்புத் தரனும்”. மெல்ல சொன்னார்.
“எ…எதுக்கு சார்?” ஆனந்த் உடல் நடுங்கினான்.
“இந்த கேள்வி பதிலெல்லாம் ஸ்டேசன்ல்ல வைச்சுக்கலாம். இங்கே விசாரணை வீண் கலாட்டா நீங்க கைதுன்னா அங்கே உள்ளாற இருக்கிற வயசானவங்களுக்கு உசுர் பொட்டுன்னு போயிடும்ங்குறது என் அபிப்பிராயம். போனா பராவாயில்லேன்னு நீங்க நெனைச்சா நான் எதுக்கும் தயார். இதோ உங்களைக் கைது செய்ய வாரண்ட்!” என்று சொல்லி ஒரு தாளை எடுத்து நீட்டினார்.
பார்த்த ஆனந்த் பெட்டிப் பாம்பாக அடங்கினான்.
ஸ்டேசனில் வைத்து சக்கையாய்ப் பிழிந்தும் “ஐயா! நான் குழந்தைங்களைக் கடத்தலை கொலை செய்யலை!…” ஆனந்த் அடி மாறாமல் சொன்னதையேத் திருப்பித் திருப்பிச் சொன்னான்.
பரசிவத்திற்கே கை வலித்துப் போனது.
“பின்னே ஏன்டா அமுதாகிட்ட குழந்தைங்க எத்தினின்னு கேட்டே?” அடிப்பதை நிறுத்தி சீறினார்.
“அவங்களுக்கு எத்தினி என்ன குழந்தைங்கன்னு தெரிஞ்சுக்க கேட்டேன்ய்யா”
“குழந்தைங்களைக் கடத்தி கொல்லத்தான் சொல்லாம கொள்ளாம அலுவலகத்து லீவுபோட்டிருக்கே. செய்யிறதைச் செய்ஞ்சிட்டு இந்த ஊருக்கு வந்திருக்கே.”
“இல்லைங்கைய்யா….என் பெரியப்பா பெரியம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லே உனக்கு சீக்கிரம் கலியாணம் முடிச்சுப் பார்க்கனும் உடனே உடனே புறப்பட்டு வான்னு போன் பண்ணினாங்க. அதனாலதாய்யா வந்தேன். நேத்திக்குப் பொண்ணு பார்க்கப் போனோம்.”
“எல்லாம் நடிப்பு.”
“சத்தியமா நான் பொய் சொல்லலைங்கைய்யா. இது பொண்ணு வீட்டு விலாசம் போன் நம்பர். உண்மையா பொய்யான்னு கேட்டு தெரிஞ்சிக்குங்கைய்யா.” பாக்கெட்டிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து அவரிடம் நீட்டி அழுதான்.
பரமசிவம் அதைப் படித்துப் பார்த்தார். பத்திரமாய்ப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தொய்வுடன் வந்து அமர்ந்தார்.
“என்னய்யா இவன் இப்படி சொல்றான்?!” ஏட்டைச் சலிப்புடன் ஏறிட்டார்.
எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு வந்த அவர் “அவன் சொல்றதுல உண்மை இருக்கும் போலிருக்கு சார்!” தயக்கமாய் தன் கருத்தைச் சொன்னார்.
“முன் விரோதம். அவுங்க சந்தேகப்படுறதும் சரியாத்தானே இருக்கு?”
“அப்படித்தான் இருக்கு. ஆனா உண்மை என்னன்னு விசாரணையில தெரிஞ்சுடும்ய்யா..”
“இன்னும் என்ன விசாரணை கைப் புண்ணுக்கு கண்ணாடி?” என்று விறைத்தவர். திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவராய் ஆனந்த்தைப் பார்த்து “டேய்! உனக்கு சென்னையில யார் யார் கூட்டாளிங்க?” கேட்டார்.
வலி உபத்திரவம் அவனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. ஏன் கேட்கிறார். நினைத்தான்.
“மவனே! இன்னொரு அடி கொடுத்தேன்னா செத்தே போயிடுவே. ஒழுங்கு மரியாதையா உண்மையைச் சொல்லனும்!” விழித்துப் பார்த்தார்.
அவரைப் பார்ப்பதற்கே இவனுக்குப் பயமாக இருந்தது. “பா…லு சார்!” என்றான்.
“அவன் எங்கே இருக்கான்?” விலாசத்தைச் சொன்னான்.
“எங்கே வேலை பார்க்கிறான்?” அதையும் சொன்னான்.
“நீ சொன்னது பொய்யான தகவலாய் இருந்துது… உரிச்சு தொங்க விட்டுடுவேன் படுவா. இன்னும் எவனாவது நண்பன் இருக்கானா?”
“எங்க கம்பெனி மேனேஜரைத் தவிர வேற ஒருத்தரையும் தெரியாது.” பலமாக தலையசைத்தான்.
“வாங்க ஏட்டு?” கையில் புல்லட் சாவியை எடுத்துக் கொண்டு எழுந்தவர் “சாமிநாதா!” அழைத்தார்.
ஒரு இளவயது கான்ஸ்டபிள் அவர் முன் வந்து “எஸ் சார்!” பவ்வியமாக நின்றான்.
அவன் தோளில் கை போட்டு தனியே அழைத்துச் சென்றவர் அவனிடம் ஏதோ குசுகுசுப்பாக சொன்னார்.
அவனும் இவர் சொல்ல சொல்ல தலையாட்டினான். சேதியைச் சொல்லி முடித்து வந்த பரமசிவம் “போவலாம்..” ஏட்டு நடந்தார்.
அத்தியாயம்-11
மூன்றாவது தளத்தில் உள்ள அறை பூட்டி இருந்தது. பரமசிவமும் ஏட்டும் கீழே இறங்கினார்கள். கீழ் வீட்டு வாசலில் ஒரு வயதான அம்மாள் இவர்களைப் பார்த்தபடி நின்றாள். அவர்கள் அருகில் வந்ததும் “யாரைத் தேடுறீங்க?” கேட்டாள்.
“நீங்கதான் வீட்டுக்கார அம்மாவா?” பரமசிவம் கேட்டார்.
“ஆமா”
“மேல் அறையில யார் குடியிருக்கா?”
“பாலு!”
“ஆள் எப்படி?”
“தங்கம்!”
“அதை உரசிப் பார்த்து நாங்க சொல்லனும்!” ஏட்டு இடையில் சொன்னார்.
“என்ன சார் இப்படி சொல்றீங்க?”
“நாங்க கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்க? ஆள் எங்கே?” பரமசிவம் தொடர்ந்தார்.
“யாருக்குத் தெரியும்?”
“என்னம்மா இப்படி சொல்றீங்க?”
“வயசான காலத்துல முட்டிக்கால் வலி. மூணு மாடி ஏறி நான் எங்கே கவனிக்கிறேன்..? அது காலையில கிளம்பிப் போனா ராத்திரிக்கு எப்போ திரும்புதுன்னு தெரியாது. அதைக் கவனிக்கிற வேலையும் எனக்கில்லே. மாசம் பொறந்தா டாண்ணு வாடகை. வேற நண்பர்கள் போக்குவரத்து வீண் அரட்டைன்னு எந்த சோலியும் கெடையாது. ஏன் ஆள் இருக்கா இல்லியான்னே தெரியாது, அக்கு தொக்கு இல்லே.” அவள் அவன் புராணம் பாடினாள்.
கிழவியால் எந்த பிரயோஜனமுமில்லை என்பது பரமசிவத்திற்குத் தெளிவாக தெரிந்தது,
“ஆனா ஆள் ரொம்ப பரோபகாரி!” அவள் வாயை விட்டாள்.
“பரோபகாரின்னா?!” பரமசிவம் புரியாமல் பார்த்தார்.
“அதுக்கு யார் கஷ்டப்பட்டாலும் புடிக்காது. உதவி செய்யும். மூணு மூணு மாசத்துக்கு முந்தி தன்னோட படிச்சவன்னு ஒருத்தனை அழைச்சிக்கிட்டு வந்து ‘இருக்க இடம் இல்லாம கஷ்டப்படுறாம்மா. ரெண்டு நாள் வைச்சிருந்து அனுப்புறேன்’னு என்கிட்ட சொல்லி அவனை தங்க வைச்சி அவனுக்கு ஒரு வேலையும் வாங்கிக் குடுத்து வெளியே அனுப்பிச்சுது”.
“அவன் பேரென்ன?”
“ஆனந்தனோ அருச்சுனனே…. பேர் சரியாய்த் தெரியலை. அடுத்து ஒரு சின்ன பையன் சினிமா ஆசையால வந்து பிளாட்பாரத்துல படுத்து கஷ்டப்பட்டானாம். அவனையும் கூட்டி வந்து தங்க வைச்சி புத்திமதி சொல்லி ஒரு ஓட்டல்ல வேலை வாங்கி குடுத்து அனுப்பிச்சுது.”
“அவன் பேர் என்னம்மா?”
“ஞாபகம் இல்லே.”
“நல்லா நினைவுபடுத்திப் பாருங்கம்மா?”
“இல்லே. ஞாபகம் இல்லே.”
“எந்த ஓட்டல்ல வேலை வாங்கி கொடுத்தார்ன்னாவது தெரியுமா?”
“ம்ம் வடபழனியில வசந்தபவன்னு நெனைக்கிறேன்!”
“என்ன வேலைம்மா?”
“சர்வரோ கிளீனரோ…ஆமா எங்க வீட்டுப் பையனை ஏன் தேடுறீங்க?”
‘இவள் பாலுவின் மேல் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறாள். குழந்தை கடத்தல், கொலை என்று சொன்னால் நம்பமாட்டாள். இல்லை தாங்க மாட்டாள்!’ உணர்ந்த பரசிவம் “ஒரு விசாரணைக்காகத் தேடுறோம்மா?” என்றார் பொதுவாக.
“அதானே… நம்ம பையன் தப்பு தண்டா எதுவும் பண்ண மாட்டானே…!” அவள் நகர்ந்தாள்.
பரமசிவம் புல்லட் உதைத்தார். அம்பத்தூரில் பாலு வேலை செய்யும் கம்பெனியை நோக்கி விட்டார்.
அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்ற அடுத்த வினாடி வீட்டுக்கார அம்மாளிடம் போலீஸ் நடத்திய விசாரணையெல்லாவற்றையும் துாரத்திலிருந்து ஒளிந்திருந்த பார்த்த பாலு தன் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு அவசர அவசரமாக வந்து மாடி ஏறினான்.
அறையைத் திறந்து உள்ளே நுழைந்தவன் ஒரு முக்கியமான டைரியை எடுத்துக்கொண்டு ஏறிய வேகத்தில் கீழே வந்தான். வசந்தபவன் நோக்கி வண்டியை விட்டான்.
மாலை நேரம். வசந்தபவன் கூட்டமாக இருந்தது. ரங்கன் வாளி வாழை மட்டையைக் கைவிட்டு இப்போது புது சீருடையில் சர்வராக எவருக்கோ தட்டில் தோசை எடுத்துக் கொண்டு வந்தான்.
வேர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்த பாலு அவன் அருகில் சென்று “ஒரு நிமிசம் என்கூட வா” காதைக் கடித்தான்.
“இதோ வந்துட்டேன் வாத்தியாரே!” சொல்லி ஆர்டர் கொடுத்தவரிடம் வைத்துவிட்டு ஓரம் ஒதுங்கி நின்ற பாலுவிடம் வந்தான்.
“இதைக் கொண்டு போய் உன் டிரங்கு பெட்டியில வைச்சுட்டு வா.” இவன் டைரியை அவன் கையில் திணித்தான்.
“கூட்டம் இப்போ முடியாதே வாத்தியாரே…!” அவன் விழிக்க
“மொதலாளிகிட்ட சொல்லிட்டு ஓடிப் போய் வந்துடு.” அவசரப்படுத்தினான்.
“சரி வாத்தியாரே!” அவன் சொன்னபடி கல்லாவில் உட்கார்ந்திருக்கும் முதலாளிடம் அனுமதி சொல்லிவிட்டு ரங்கன் மாடிப்படியில் மறைந்து ஐந்து நிமிடத்தில் வேர்த்து வந்து “வைச்சிட்டேன் வாத்தியாரே!” தகவல் சொன்னான்.
பாலுவிற்கு டைரியைப் பதுக்கிய திருப்தி. நிம்மதி மூச்சு வந்தது. “சரி போ”. அவனை அனுப்பிவிட்டு வெளியே வந்தான்.
புல்லட்டை விட்டு இறங்கி நின்ற பரமசிவமும் ஏட்டும் இவனுக்காகவே காத்திருந்தவர்கள் போல் அருகில் வந்தவனை கப்பென்று பிடித்தார்கள்
“சார்ர்ர்!” அதிர்ந்தான்.
“ஒன்னும் பேசக்கூடாது.!!” அடித்தொண்டையில் எச்சரித்த பரமசிவம் தொடர்ந்தார். “நான் அடியில புகுந்தா ரொம்ப மோசமானவன். அதுவும் இப்போ இங்கே உன்னை நடு ரோட்டுல உதைச்சேன்னா பார்க்கிறவங்க மனித உரிமை கழகத்துக்குப் புகார் கொடுப்பாங்க. இந்த வம்பெல்லாம் வேண்டாம்.!” என்றவர் “என்கிட்ட எப்போதுமே ஒரு கெட்ட பழக்கம். நான் சந்தேகப்பட்டு யாரை விசாரிக்கப் போனாலும் என் விசாரணைக்குப் பின்னால அந்த இடத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க ஒரு போலீஸ்காரனை சிவில் உடையில அங்கே நிக்க வைச்சுட்டு வருவேன். இப்பவும் உன் வீட்டு எதிர்ல அப்படி ஒருத்தனை நிக்க வைச்சு வந்தேன். நாங்க அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் நீ அவசர அவசரமா மேலே போனது கையில ஒரு டைரியோட திரும்பினது வண்டியை வடபழனி பக்கம் திருப்பியதையெல்லாம் கைபோன்ல அவன் சொன்னான். நீ வசந்தபவன்தான் வருவேன்னு நெனைச்சு வந்தேன். மாட்டிக்கிட்டே!” இறுகப்பிடித்தார்.
பாலு விழித்தான். அவர் புத்திசாலித்தனத்தை நினைத்து மலைத்தான்.
“டைரி எங்கே?” அவன் வெறுங்கையைப் பார்த்தார்.
“அ….அது அது… வந்து….”
“செவிட்ல ஒரு அறை விட்டேன்னா காது கொய்ங்கும். வாயில உள்ள பல்லெல்லாம் கழன்று காணாம போயிடும். எங்கே வைச்சிருக்கே. என்ன செய்ஞ்சேன்னு சொல்லு?”
“….”
“பையன்கிட்ட கொடுத்து வைச்சிருக்கியா?”
“அ…ஆமா சார்….”
“நீ செய்யிற அயோக்கியத்தனத்துக்கெல்லாம் அந்த பையனும்கூட்டா?”
“இ..இல்லே சார்.”
“பரவாயில்லே நான் விசாரணையில தெரிஞ்சுக்கிறேன். வா.” அழைத்துக்கொண்டு வசந்தபவன் உள்ளே நுழைந்தார்.
போலீஸ் பிடியில் வரும் பாலுவைப் பார்த்ததும் ரங்கனுக்கு நடுங்கியது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். உள்ளே சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அவர்களைக் கலவரமாகப் பார்த்தார்கள். கல்லாவில் இருந்த கனகசபை வியாபாரம் கெட்டுவிடும் நினைப்பில் போலீஸ் பின்னால் ஓடி வந்தார்.
“என்ன சார் பிரச்சனை?” பரமசிவத்தைக் கேட்டார்.
“இந்த ஆளை உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியும் சார்.”
“இவன் கூட்டாளி இங்கே வேலை செய்யிறானா?”
“அதோ அவன்தான் சார்.” அவர் ரங்கனைக் கைகாட்டினார்.
‘வம்பு!’ ரங்கனுக்குத் தலை சுற்றியது.
அத்தியாயம்-12
ரங்கன் அந்த டைரியை டிரங்கு பெட்டிக்கு அடியில் வைத்திருந்தான். பரமசிவம் டைரியோடு சேர்த்து ரங்கனையும் அழைத்துச் சென்றார்.
ஸ்டேசனில் கொண்டு அவர்களை நிற்க வைத்து நாற்காலியில் அமர்ந்து டைரியைப் புரட்டினார்.
படிக்கப் படிக்க மலர்ந்தார். ஒரு வழியாக முடித்து மூடியவர் “ஏம்பா! உன் சித்தி விஜயா விஜயதர்ஷிணியெல்லாம் கொலை செய்யனும்ன்னு காரண காரியத்தோட எழுதி இருக்கே சரி. இந்த அருண் தருண் கொலையைப் பத்தி ஒன்னுமே எழுதலையே ஏன்?…” பாலுவைப் பார்த்து கேட்டார்.
“நான் யாரையும் யாரையும் கொலை செய்யலை சார்.” பாலு கைகளைக் கட்டி தலையைக் குனிந்து கொண்டு நடுங்கியபடி சொன்னான்.
“இந்த வெளையாட்டுத்தானே வேணாம்ங்குறது!” என்று நிமிர்ந்த அவர் “அத்தாட்சியோட மாட்டிக்கிட்டு இப்போ எதுக்குப் பொய் சொல்றே?” எழுந்தார்.
அவர் எழுந்த தோரணையே அடுத்து அடிதான் என்பது உறுதியாக தெரிந்தது, ஆனாலும் பாலு பயப்படவில்லை.
“சத்தியமா நான் யாரையும் கொலை செய்யலை சார்.” சொன்னதையேச் சொன்னான்.
“கொலை செய்யாமலா இப்படி எழுதி யிருக்கே?.”
“ஆமாம் சார்.”
அவன் சொல்லி வாய் மூடவில்லை. பரமசிவத்தின் கை அவன் கன்னத்தில் பதிந்தது.
பாலுவிற்குப் பொரி கலங்கியது. இருந்தாலும் சமாளித்து “சத்தியமாக என் ஆத்திரம் ஆதங்கத்தையெல்லாம் எழுதி இருக்கேனேத் தவிர எந்த ஒரு கொலைக்கும் எனக்கும் துளி சம்பந்தம் கெடையாது சார்.” என்றான்.
“என்ன நக்கலா?” என்று விழிகளை உருட்டியர் “சம்பந்தமில்லாத நீ ஏன் எங்களைக் கண்டதும் ஓடி ஒளிஞ்சு டைரியைக் கொண்டு வந்து இங்கே பதுக்கினே?” முறைத்தார்.
“என் பழக்கம் தெரியாம நீங்க என்மேல சந்தேகப்பட்டு என்னை உள்ளாற அனுப்பிடுவீங்களோங்குற பயம் சார்!” என்றான்.
மேசை மேலிருந்த தொலை பேசி ஒலித்தது. “நான் சப்- இன்ஸ்பெக்டர் பரமசிவம் பேசறேன்“ எடுத்தார்.
“என்ன பண்றே?” எதிரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் பேசினார்.
“விசாரணை நடத்திக் கிட்டு இருக்கேன்.”
“என்ன கேஸ்?”
“அதான் உன் ஸ்டேசனும் என் ஸ்டேசனும் சம்பந்தப்பட்ட விஜயதர்ஷிணி குழந்தைங்க கொலை கேஸ்.”
“யார் மாட்டினா?”
“ஒரு ஆள் ஒரு பையன்.”
“விசாரணையை அப்படியே தள்ளி வைச்சிட்டு உடனே என் ஸ்டேசனுக்கு வா.
“ஏன்?”
“குற்றவாளிங்க மாட்டிக்கிட்டானுங்க.”
“யார்?”
“ஒரு சோசியக்காரன் ஒரு சாமியார் அடுத்து இன்னொரு ஆள்.”
“எப்படி மாட்டினாங்க?”
“கொலை நடந்த நேரம் காலத்தைக் கணக்கு வைச்சு கண்டுபிடிச்சேன்.'”
“புரியலை?”
“கொலை நடந்த நாள் பூரண அமாவாசை. கொலை செய்யப்பட்டது குழந்தைங்க. ஒன்னு தலைச்சன் அடுத்து இடைச்சன். ஆக நரபலி. இதுக்கு முக்கிய காரணம் யாராய் இருக்கக்கூடும்? ஒரு சோசியன், ஒரு சாமியார், இல்லேன்னா மந்திரவாதி அடுத்து எவனோ ஒரு ஆளாய்த்தான் இருக்க முடியும்ன்னு யூ கம் பண்ணினேன். நம்ம கான்ஸ்டபிள்களை விட்டு ரகசியமா ஊர்ல இருக்கிற சோசியன் சாமியார்களைக் கவனிக்கச் சொன்னேன். நம்ம கான்ஸ்டபிள் கதிர்வேல் ரொம்ப புத்திசாலி. ரொம்ப சீக்கிரம் பேர் பெத்த கரிச்சாங்குடி கலாசிவன் சாமியார் மேல் அவனுக்குக் கண். அவன் ரொம்ப பணக்காரத்தனமா கழுத்துல செயின், கையில மோதிரம் போட்டுக்கிட்டு சாமியார் எதிர்ல போய் “ஐயா! நான் பெரிய பணக்காரன். பொண்டாட்டிங்க ரெண்டு மூணாவதாய் ஒன்னு செட்டாகி இருக்கு. மூத்தவளுங்க கரைச்சலில்லாம இவளோடையும் நான் வாழனும்ன்னு சொல்லி இருக்கான்.”
“அதுக்கு அந்த பிரகஸ்பதி தாள்ல கூட்டல் கழித்தல்லாம் போட்டுப் பார்த்து நரபலி பரிகாரம்ன்னு சொல்லி இருக்கார். இவன் நரபலி எனக்குப் பயம். மாட்டிப்போம்ன்னு நடிச்சிருக்கான். ‘பயம் வேணாம் கஜேந்திர பூபதி சாமியார்கிட்ட கச்சிதமாய் முடிச்சிடுவார். போலீஸ்காரங்களால பொணத்தைத் தோண்டித்தான் எடுக்க முடியுமேத் தவிர ஆளைக் கண்டு பிடிக்க முடியாது அந்த அளவுக்கு பூ சை புனஸ்காரங்கள் செய்து ஆள் தெரியாம செய்திருவார் இப்பக்கூட ரெண்டு குழந்தைங்க தோண்டி எடுத்த சமாச்சாரம் அவர் கைங்கரியம்தான்னு சொல்லி இருக்கான்.”
“இது உண்மையான்னு தெரிய இவன் உடனே அவர்கிட்ட போயிருக்கான். திருட்டுப்பயலான அவரும் இவனுக்குச் சாதகமாய் நிரை அமாவாசை தலைச்சன் புள்ளையோட வான்னு அனுப்பி இருக்கான். கான்ஸ்டபிள் விசயத்தை வந்து என்கிட்ட சொன்னான். நான் படையோட போய் ரெண்டு நாய்ங்களையும் இழுத்து வந்து கவனிக்கிற விதத்துல கவனிச்சேன். நாய்ங்க உண்மையைக் கக்கினதோட மூணாவது நாயையும் காட்டிக் குடுத்துடுச்சு.” நிறுத்தினார்.
“அந்த மூணாவது நாய் யார்?” பரமசிவம் வியப்பு தாங்க முடியாமல் கேட்டார்.
“வந்து பார்!” அவர் போனை வைத்தார். இவர் வண்டியை எடுத்துக் கொண்டு விரைந்தார்.
அந்த காவல் நிலையத்தில் மூன்று பேர்கள் கந்தலாக கிடந்தார்கள். முதல் ஆள் சாமியார். அவரின் அங்கவஸ்திரத்தை அவிழ்க்க வைத்து வெறும் கோவணத்துடன் நரபலி செய்வியா? செய்வியா? என்ன அடித்திருப்பார்கள் போல ஆளின் ஜடா முடியெல்லாம் அலங்கோலமாகிப் போக கறுப்பு பன்றி போல கொழுத்த அவர் உடல் முழுக்க அடி கருமையையும் மீறி கன்றி வீங்கி போயிருந்தது.
அடுத்து சோசியன். ஒல்லியான உடம்பு உதை விழுந்து தடித்திருந்தது. அடுத்து நின்றவனைப் பார்த்ததும்தான் பரமசிவத்திற்கு துாக்கிவாரிப் போட்டது. அமுதா ஆனந்தின் மானேஜர்.
“இவரா?! இவன் ?” வியப்பு திகைப்பு மேலிட அவர் தன் நண்பன் சங்கரைப் பார்த்தார்.
“அவன்தான் முக்கிய குற்றவாளி!” என்றார் அவர் அழுத்தம் திருத்தமாக.
“எ…எப்படி?” பரமசிவத்திற்கு வியப்பு திகைப்பு கூடியது.
“டேய் ! சொல்டா?” சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் அவனைப் பார்த்து அதட்டினார்.
அவன் வாயைத் திறந்தான்.
“இந்த கொலையெல்லாம் நான்தான் சார் செய்ஞ்கேன். ஏன்?…பெண்கள் மேல் வெறுப்பு. காரணம் எனக்கும் ஆனந்த் போல முன் அனுபவம். என்னையும் ஒருத்தி மணவறைவரை வந்து நான் வரதட்சணைக் கேட்டதா மகளிர் காவல் நிலையத்துக்குப் போன் பண்ணி புகார் கொடுத்து வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பினாள். அவள்தான் விஜயா. அப்படி செய்ஞ்சதுக்குக் காரணம் அவள் ஒருத்தனைக் காதலிச்சிருக்காள். அம்மா வற்புருத்தல்னால அவனைக் கைவிட்டுட்டு என்னைக் கட்டிக்க சம்மதிச்சிருக்காள். ஆத்திரமடைஞ்ச அவன் திருமணத்துல வந்து கலாட்டா செய்ய வந்திருக்கான். இது தெரிஞ்ச விஜயா அவன் கலாட்டா செய்தால் குட்டு வெளியாகி அவமானப்படனும்ன்னு பயந்து என் மேல வரதட்சணை பழி போட்டு திசை திருப்பி அவன் கலாட்டாவை தன் கலாட்டாவால் தடுத்து காதலிச்சவனையே கலியாணம் கட்டிட்டாள். இது எனக்கு பின்னாலதான் தெரிஞ்சுது. இதை வைச்சே நான் வழக்குப் போட்டு தண்டனையிலேர்ந்து தப்பிச்சேன்.”
“தன் தப்பை மறைக்க என் மேல பழி போட்டு அவமானப்படுத்தியவள் பெண்ணான்னு அன்னைக்கே எனக்குப் பெண்கள் மேல வெறுப்பு வந்துது. முதல் குறி அவளைக் கொன்னேன். அந்த கொலை வெளியே தெரியாம பெண் மனசொடிஞ்சு தற்கொலை செய்துகிட்டாள்ன்னு கதையாகிடுச்சு. அடுத்து பாலு எனக்குப் பழக்கமானான். சித்தி கொடுமையால பெண்ணை வெறுத்து வெளியானவன். அவனுக்குக் கெட்ட பொம்பளைங்களையெல்லாம் கொல்லனும்ன்னு வெறி இருந்துதுதே தவிர அதை செயல் படுத்துற அளவுக்குத் துணிச்சல் இல்லே. டைரியில எழுதி தன் வெறியைத் தணிக்கிற ஆளாய் இருந்தான்.”
“அப்போ அமுதா என்கிட்ட வேலையில சேர்ந்தாள். நண்பனைப் பழி வாங்கினவள். இவளை எப்படியாவது கொலை செய்யனும்ன்னு சமயம் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனந்த் விடுதலையாகி வந்தான். சரியான ஆள் இவனை வைச்சு கொல்லனும்ன்னு திட்டம் போட்டேன் திட்டம் போட்டேன். அமுதாவைக் கொலை செய்யனுங்குற வெறியோட வந்த அவன் நாம ஏன் வீணா கொலை செய்து மறுபடியும் சிறைக்குப் போகனும்ங்குற நெனப்புல மனசு மாறிட்டான். அது தெரியாத நான் அவகிட்ட என்னை நெருங்க விடு சொன்னதும் கொலை செய்யத்தான் இப்படி கேட்கிறான்னு நெனைச்சு அவனை அவகிட்ட வேலை கத்துக்கிறாப் போல விட்டேன். பாவி அவகிட்ட மன்னிப்புக் கேட்கத்தான் என்கிட்ட அப்படி கேட்டிருக்கான்.”
“இவனும் சரிபட மாட்டான். இவளையும் நாமதான் முடிக்கனும்,ஆணுக்கு எதிர்ப்பு பெண் இருக்கக் கூடாது, ஆணை எவளும் மிஞ்சக்கூடாதுன்னு முடிவுக்கு வந்தேன். இந்த நேரத்துலதான் விஜயதர்ஷ்ணி குறுக்கே வந்தாள். இவ பொண்ணுதான் என்னை மணமேடையில நாடகம் ஆடி சிறைக்கு அனுப்பின விஜயா. பொண்ணைக் கொலை செய்ததோட என் காரியம் முடிஞ்சு போச்சுன்னு நெனைச்ச எனக்கு விஜயதர்ஷ்ணி நடவடிக்கை சுத்தமா பிடிக்கலை. மகள் போன துக்கத்தை மறந்தாள். படுத்தப்படுக்கையாய் இருந்த புருசனை முதியோர் இல்லத்துக்குத் துரத்தி விட்டுட்டு நாலு மாதர் சங்கத்துல பழக்கம் வைச்சிக்கிட்டு சமூக சேவகிங்குற போர்வையில வலம் வர்றதோட நிறுத்தாமல் காம் வெறியில சின்னப் பசங்கமேல பார்வையைச் செலுத்தினாள். பிளாட்பாரத்துல படுத்து இருக்கிற பசங்களைப் புடிச்சு கெடுத்தாள் கார் விபத்து, பிரேக் பெயிலியர்ல சாகட்டும்ன்னு நெனைச்சு மெரினாவுல அனாதையாய் நின்னுகிட்டிருந்த கார் பிரேக்கைக் கழற்றி விட்டு அவள் பின்னாடி வந்தேன். நான் எதிர்பார்த்தபடி கார் கூவம் பக்கம் சரிஞ்சுது ஆனா விஜயதர்ஷிணி காயம் எதுவும் இல்லாம தப்பிச்சாள். எனக்குப் பொறுக்கலை. கத்தியால குத்தி கொலை பண்ணினேன். வெளிப்படையாய் செய்த இந்த கொலையில மாட்டிப்போம்ன்னு பயம் வந்துச்சு. சோசியம் பார்த்தேன். கண்டம் இருக்கு மாட்டிப்பீங்க. பரிகாரம் இருக்குன்னு அவன் சொன்னான். சாமியாரைக் காட்டி விட்டான். அவர் நரபலி கொடுக்கனும்ன்னார். தலைச்சன் வேணும்ன்னார். அமுதா புள்ளைங்களைக் குறி வைச்சேன். அப்படி வைக்கிறதுக்குக் காரணம் ஒரு கல்லுல ரெண்டு மாங்காய். ஒன்னு அமுதாவுக்குப் பாதிப்பு அடுத்து என் காரியமும் நிறைவேறும். மதிய நேரம் பள்ளிக்கூடத்துக்குப் போய் அம்மா கூட்டி வரச் சொன்னாங்க வாங்கன்னு அழைச்சேன். அமுதா ரெண்டு மூணு தடவை பிள்ளைங்களை அலுவலகத்துக்கு அழைச்சு வந்ததால அருண் தருணுக்கு என்னைத் தெரியும். அழைச்சதும் வந்தாங்க. காருக்கு வந்ததும் மயக்க மருந்து கொடுத்து அவுங்களைப் படுக்க வைச்சு சாமியார்கிட்ட கொண்டு போய் காரியத்தை முடிச்சேன்.”
“நான் முடிச்ச காரியத்திலேயே பெரிய பாவம் குழந்தைங்களைக் கொன்னதுதான். அதுதான் மாட்டிக்கிட்டேன். எனக்கு மன்னிப்பு கெடையாது மரண தண்டனை வேணும் சார். அதோட இல்லாம இனி எவனும் நரபலி கொடுக்கக்கூடாது ஏன் அதைப் பத்தியேப் பேசக்கூடாது. மக்கள் முட்டாள், மூடத்தனத்தை சாமியார் சோசியனுங்க முதலாய் வைச்சு பாவம் புள்ளைங்களைப் பலி வாங்கி காசு சம்பாதிக்கிறானுங்க. இந்த கெட்டபுத்தி படவாக்களை நடு ரோட்டுல நிக்கவைச்சு பொதுமக்கள் கையில கல்லோ, செருப்போ கொடுத்து அடிக்கச் சொல்லி சாகடிக்கனும் சார். இவனுங்களை எந்த தெய்வம் வந்து காப்பாத்துன்னு பார்க்கனும். ஒரு தெய்வமும் காப்பாத்தாது. இவனுங்க முகமூடி கிழியும். எந்த தெய்வமும் மனுசனுக்கு நல்லதுதான் சார் செய்யும், கெட்டது செய்யாது. இது மக்களுக்குப் புரியனும். இவனுங்களுக்கு அப்படி ஒரு சரியான தண்டனை கொடுக்க ஏற்பாடு செய்யனும் சார்”. முடித்தான்.
சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மட்டுமில்லாது கொலையாளிகள் பிடிபட்டுவிட்டார்கள் என்னு கேள்விப்பட்டு ஸ்டேசனுக்கு வந்த அமுதா சுதாகர்கூட அவன் வாக்குமூலம் கேட்டு சிலையாகி நின்றார்கள்.
(முற்றும்)
– பாக்யா வார இதழில் தொடர் கதையாக வெளி வந்தது.