தொட்டால் பூ உதிரும்..!






(2003ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம்-7

“நான் மதுரைண்ணே. பேர் ரங்கன். ரொம்ப ஏழைப்பட்ட குடும்பம். அக்கா தங்கச்சிங்கன்னு அஞ்சு பேர். நான்தான் நடுவுல ஆம்பளைப் புள்ளை. பதினொன்னாவது படிச்சேன். குடும்ப கஷ்டத்தைப் பார்க்க எனக்கு மனசு தாளலை. சென்னைக்கு வந்து சினிமாவுல சேர்ந்து லட்சம் லட்சமா சம்பாதிச்சு குடும்பத்தைக் காப்பாத்தி அக்கா தங்கச்சிங்களை நல்லவிதமா கலியாணம் பண்ணி குடுக்கனும்ன்னு ஆசை. ஊரை விட்டு ஒரு வாரத்துக்கு முன்னாடி இங்கே ஓடி வந்தேன். சினிமா கம்பெனி கம்பெனியாய் ஏறி இறங்கினதுல கொண்டு வந்த வந்த காசெல்லாம் சரியாப் போச்சு. ஓட்டல்ல வேலை செய்ஞ்சி பொழைக்கலாம்ன்னு கண்ணுல பட்ட ஓட்டல் எல்லாம் போய் வேலை கேட்டேன். ஆள் கேட்டேன். ஆள் ஊருக்குப் புதுசுன்னு நம்பாம யாரும் எனக்கு வேலை கொடுக்கலை. பசி பட்டினியோட நேத்து ராத்திரி பிளாட்பாரத்துல படுத்துக்கிடந்தேன்.
ராத்திரி பத்து மணி இருக்கும். நான் படுத்துக்கிடந்த இடத்துக்குப் பக்கத்துல ஒரு மாருதி வந்து நின்னுச்சி. போலீசோன்னு பயம் தலையைத் துாக்கிப் பார்க்கலை. அதிலேர்ந்து சினிமாவுல வர்ற சமூக சேவகிபோல கொண்டை உதட்டு சாயம் பூ சிக்கிட்டு ஒரு அம்பது வயசு பொம்பளை இறங்கி என் பக்கத்துல வந்து நின்னாள். செண்ட் வாசம் கும்ன்னு அடிச்சுது. தம்பி எழுந்திரின்னு என் உடம்பைத் தொட்டு அசைச்சாள். சமூக சேவகி பரிதாபப்பட்டு நமக்கு நல்லது செய்யும்ன்னு நெனைச்சி எழுந்தேன். நீ யாரு என்ன விபரம்ன்னு கேட்டாள். சொன்னேன். இப்படியெல்லாம் படுத்துக்கிடக்கிறது தப்பு வீட்டுக்கு வா நல்ல சாப்பாடு நல்ல துணிமணி வேலை தர்றேன்னு சொல்லி கூட்டிப்போனாள்.
நானும் ஆசையாய் போனேன். வீட்டுக்குப் போனதும் கையில வாசனை சோப்பை குடுத்து நீ குளிச்சு முடிச்சு சுத்தமா வா சாப்பாடு எடுத்து வர்றேன்னு சொல்லி புதுத் துண்டையும் திணிச்சிச்சு. நான் குளிச்சு முடிச்சு வந்ததும் புது வேட்டி புது சட்டை குடுத்துச்சி. அப்புறம் நல்ல விதமா சாப்பாடு. கோழி பிரியாணி. துாக்கம் வரலைன்னா படம் பாருன்னு சொல்லி சி.டி பிளேயரைத் தட்டிவிட்டுட்டு அறைக்குள்ளே போச்சு போச்சு. கொஞ்ச நேரத்துல சி.டியில பலான படம். வயசு… எனக்கு குப்புன்னு உடம்பு சூடாகிப் போச்சு. தப்பா குடுத்துச்சோன்னு தவிச்சேன். அணைக்கத்தெரியாம முழிச்கேன். அடுத்து கொஞ்ச நேரத்துல அந்த பொம்பளை கதவைத் திறந்துகிட்டு வெளியே வந்துது உள்ளாற ஒன்னுமே போடாம உடம்பு தெரியற மாதிரி ஒரு நைட்டி. பார்க்க சகிக்கலை. தலை குனிஞ்சேன். பக்கத்துல பக்கத்துல வந்து உட்கார்ந்து ஏன் படம் பிடிக்கலையான்னு ஒரு மாதிரியாக் கேட்டு சடக்குன்னு கட்டிப் பிடிச்சிது. எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை.
மேடம்! எனக்கு ஒன்னும் தெரியாது. பழக்கமில்லே. விட்டுடுங்கன்னு பயந்து நடுங்கி அழுதேன். அதுக்கு அந்த பொம்பளை நான் சொல்லித்தர்றேன்னு சொல்லி கட்டிப் புடிச்சி…..கதற கதற…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் விம்மினான்.
“ஒரு தடவை இல்லேண்ணே நாலைஞ்சு தடவை. ஒவ்வொரு முறையும் அந்த பொம்பளை தண்ணி அடிச்சி அடிச்சி வந்துது. என் கண் முன்னாலேயே அடிச்சுது. எனக்கும் நாலு தடவை ஊசிப்போட்டு போட்டு அந்த மாதிரி வெறி புடிச்ச பொம்பளையை நான் பார்க்கவே இல்லேண்ணே. கை கால் இடுப்பு உடம்பு எல்லாம் ஒடைஞ்சு போச்சு . கடைசி ரவுண்ட் என்னையும் அறியாம மயக்கமாகிட்டேன். அதுக்கப்புறம் என்ன நடந்துன்னே எனக்கு தெரியாதுண்ணே!” அழுதான்.
“கார்ல கொண்டு வந்து போட்டிருக்கும்ன்னு நெனைக்கிறேன். நான் பொண்ணு வாசனையே அறியாதவண்ணே. என்னைப் போய் இப்படி…” விம்மினான்.
“இந்த மாதிரி ராட்சசிகளைக் கொல்லனும்ண்ணே. கொல்வேன்!” சபதம் செய்பவன் போல் கண்களைத் துடைத்துக் கொண்டு முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு சொன்னான். அவன் கண்களில் தீயின் ஜ்வாலை அடித்தது.
பாலுவிற்கு அவனைப் பார்க்கப் பயமாக பரிதாபமாகவும் இருந்தது.
“இப்போ அவளைக் கொல்ற அளவுக்கு உன் உடம்புல தெம்பு இல்லே. உடம்பைத் தேத்தலாம் அப்புறம் செய்யலாம்.” அவனை ஆறதல் படுத்தினான்.
ரங்கன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
“உன்னை நாளைக்கே ஒரு வேலையில சேர்த்துவிட்டு அங்கேயே தங்கவும் ஏற்பாடு பண்றேன். அடுத்து நீ கொலை பண்ணு சினிமாவுல சேர்.” பாலு தெம்பு தைரியம் சொன்னான்.
‘ஆதரவற்றவர்களையெல்லாம் கொண்டு வந்து சேர்த்து கை தூக்கிவிட இவனென்ன ஆபத்பாந்தவனா அநாதை ரட்சகனா?!’ – ஆனந்திற்கு நண்பனை நினைக்க வியப்பு திகைப்பாய் இருந்தது.
“அந்த பொம்பளை பேர் விலாசம் தெரியுமா?” பாலு அக்கரையாய் அவனைக் கேட்டான்.
“தெரியும்ண்ணே!” ரங்கன் விபரம் சொன்னான்.
இரண்டு நாள் கழித்து அந்த பெண்மணி விஜயதர்ஷிணி கூவம் ஓரத்தில் பிணமாக கிடந்தாள். அவளுடைய மாருதி பள்ளத்தில் இறங்கி உடலருகே கதவு திறந்து நின்றது.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் உள்ளே நுழைந்தார். பின்னால் நாலைந்து போலீஸ்காரர்களும் சென்றார்கள்.
அவர் பிணத்தைச் சுற்றி ஆராய்ந்தார். வயிற்றில் கத்திக் குத்துப்பட்டிருந்தது. இரத்தம் வெளி வந்து பரவி உறைந்திருந்தது. “இங்கே நிக்கிறவங்க யாருக்காவது இந்த பொம்பளையைப் பத்தி தெரியுமா?” இன்ஸ்பெக்டர் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்.
நின்றவர்களில் பாதி ஒவ்வொருவராய்க் கழன்றார்கள்.
“தெரிஞ்சா சொல்லுங்க. உங்களுக்கு இது விசயமா எந்த தொல்லையும் தரமாட்டேன்!” உத்தரவாதம் அளித்தார்.
அப்படியும் சில பேர் கழன்றார்கள். நின்ற நாலைந்து பேர்களில் ஒருத்தன் மட்டும் ஏதோ சொல்ல வேண்டும் போல் தவித்தான்.
“தம்பி ! உனக்குத் தெரியும்ன்னு நெனைக்கிறேன்.” சங்கர் அடையாளம் கண்டு அவன் தோளைத் தொட்டார்.
“தெ…தெரியும் சார்…!”
“சொல்லு?” தன்னோடு சினேகமாக அணைத்தார்.
“இந்த அம்மா பேர் விஜயதர்ஷிணி சார். வயசு அம்பத்தஞ்சுன்னு நெனைக்கிறேன். புருசன் வயசானவர் அறுபது வயசு. முடியாதவர்ன்னு தொரத்தி விட்டுடுச்சு. இப்போ அவர் ஒரு முதியோர் இல்லத்துல அனாதையாய் இருக்கார். இதுக்கு சமூக சேவகின்னு ஒரு முகம். ஏதோ ஒரு மகளிர் அமைப்புல தலைவியாய் இருக்கு. அந்த பேனர்ல அங்கே இங்கேன்னு ஒன்னு ரெண்டு இடத்துல சமூக சேவை. அதுவும் பட்டு பகட்டுல புகைப்படத்துக்குப் போஸ் குடுக்கிறதுக்காக இந்த வேலை. மத்தபடி இதுல நாட்டம் கிடையாது. எங்களை மாதிரி இளைஞர்கள்ன்னா குறி. ஒரு மாதிரியாய்ப் பார்த்து கிட்ட வந்து தொட்டுத்தொட்டு பேசும். உரசும். தப்பா நடக்கிறதா காத்து வாக்குல சேதி. ஆனா அது உண்மையா பொய்யான்னு எனக்குத் தெரியாது. நான் கண்ணால பார்க்கலை.”
“அது ராத்திரி பத்து மணிக்கு மேல தானே காரை ஓட்டிக்கிட்டு தனியே சுத்தும் சார். வீட்டைவிட்டு ஓடி வந்து அனாதையாய்ப் பிளாட்பாரத்துல படுத்துக்கிடக்குற சின்ன வயச பசங்க மேல இதுக்கு அலாதியான அன்பு பாசம் பிரியம். காரணம் அவன்தான் தனக்கு எது நடந்தாலும் தட்டிக் கேட்க மாட்டான். நாலு பேரை அழைச்சி வந்து ஞாயம் கேட்க மாட்டான். கலாட்டா ரகளை செய்ய மாட்டான். அவனுக்கு உதவி செய்யறாப் போல வீட்டுக்கு அழைச்சுப் போய் தன் தாகத்தைத் தீர்த்து அனுப்புமாம் சார்.”
கவனமாய்க் கேட்டு உள் வாங்கிக் கொண்ட சப்- இன்ஸ்பெக்டர் சங்கர். “நன்றி தம்பி!” அவன் முதுகை தட்டிக் கொடுத்து அகன்று வேலையில் சுறுசுறுப்பானார்.
பிணத்தைப் போட்டோ எடுக்க சொல்லி உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினார். மாருதியைக் குடைந்து ஓட்டுநர் உரிமம் எடுத்தார். அதிலுள்ள விலாசத்தைப் பார்த்து ஏட்டைத் துாக்கி வண்டியில் போட்டுக் கொண்டு போய் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே போய் ஆராய்ந்தார். சில பலான சி.டிக்கள் கையில் சிக்கியது,
“நாகரீகம் முன்னேறி கையில உலகம் இருந்தாலும் நாட்டுல இன்னும் அடிதடி வெட்டுக் குத்து கொலை கொள்ளை ஒழிய மாட்டேங்குதுப்பா!” என்று முணுமுணுத்து ஆயாசமாக இருக்கையில் சாய்ந்தார்.
“யாருப்பா கொலை செய்ஞ்சிருப்பா?” அருகிலிருந்த ஏட்டைப் பார்த்தார்.
“இந்த மாதிரி பொறம்போக்கையெல்லாம் கொல்ல ஆள் பொறந்தா வரனும்…?! எத்தினியோ சாக்கடைங்க காத்திருக்கும் சார்!” என்றார் அவர்.
“தாதா கீரமணி சம்பந்தப்பட்டிருப்னாய்யா?”
அவன் பேரைக் கேட்டதுமே ஏட்டுக்குக் குலை நடுக்கம் வந்தது. “வேணாம் சார். அவனைத் தொட்டா நமக்கு ஆபத்து.” எச்சரித்தார்.
“அவன் ஆட்கள் சம்பந்தப்பட்டிருப்பாங்களா?”
“தெரியலை சார்”
“சரி விசாரிக்கலாம்!” எழுந்தார்.
அரைநாளில் திரும்பி வந்த சங்கர் “என்னப்பா எல்லாரும் அந்த பொம்பளையைப் பத்தி தப்பா சொல்றாங்களேத் தவிர யார் கொலை செய்ஞ்சிருப்பான்னு சொல்லமாட்டேங்குறாங்க.” அமர்ந்தார்.
“இவளால பாதிக்கப்பட்டவன் யாராவது ஒருத்தன்தான் சார் இந்த வேலையைச் செய்ஞ்சிருக்கனும்.”
“அதான் யாரு?” அதுதான் ஏட்டுவிற்கும் கேள்வி குறியாக இருந்தது.
அத்தியாயம்-8
வசந்தபவன் மூன்றாவது மாடியில் உள்ள அந்த அழுக்கு அறையை நோக்கி நடந்தான் பாலு.
கதவு சாத்தி இருந்தது
மெல்ல தள்ளினான். திறந்தது. உள்ளே படுத்திருந்த ரங்கன் ஆளைப் பார்த்ததும் “வாங்கண்ணே!” திடுக்கிட்டு வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தான். அவசரமாய்ச் சென்று மூலையில் கிடந்த பாலிமர் நாற்காலியை எடுத்துப் போட்டு தன் தோளில் கிடந்த துண்டால் துடைத்து “உட்காருங்கண்ணே!” சொன்னான்.
பாலு அமர்ந்து அறையை நோட்டமிட்டான். ஓட்டலில் வேலை செய்பவர்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட அறை. அடுப்பங்கரையைவிட அழுக்காய் இருந்தது. கொடியில் தொங்கிய நாலைந்து வேட்டி சட்டைகளும் மர அழுக்கு பிடித்துப் போய் இருந்தது. ஒரு சில மட்டும் துவைத்து மடித்து ஷெல்பில் வைக்கப்பட்டிருந்தது.
“என்னண்ணே இந்தப்பக்கம்?” ரங்கன் பாலுவைப் பணிவாய் பார்த்தான்.
“இன்னைக்கு எனக்கு அரை நாள் வேலை. உன்னைப் பார்க்கனும்ன்னு ஆசை. நீ வேலையில இருக்கியா ஓய்வா இருக்கியான்னு ஓட்டலுக்குப் போன் போட்டேன். ஓய்வா இருக்கிறதா முதலாளி சொன்னார். அதான் பார்க்க வந்தேன்“
“ரொம்ப சந்தோசம்ண்ணே!” ரங்கனின் முகம் மலர்ந்தது,
“எப்படி ஓட்டல் வேலை பிடிச்சிருக்கா. முதலாளி நல்ல மாதிரி நடந்துக்கிறாரா?”
“உங்க தயவுல எல்லாம் நல்லா இருக்குண்ணே”.
“அப்புறம் ஒரு விசயம். கிட்ட வா.” குரலைத் தாழ்த்தி அழைத்தான்.
அவன் அருகில் வந்தான்.
“நீ அந்த பொம்பளையைக் கொன்னியா?” மெதுவாய்க் கேட்டான்.
“எந்த பொம்பளையைண்ணே?” ரங்கன் திடுக்கிட்டு பாலுவைப் பார்த்தான்.
“அதான்ப்பா உன்னைக் கற்பழிச்ச கடன்காரி கெழவி விஜயதர்ஷிணி!”
“அண்ணே!” அலறினான்.
“அந்த பொம்பளை நேத்து கூவத்துல கொலை செய்ஞ்சி கிடந்தாப்பா?”
“உண்மையாண்ணே?!” அவனுக்கு முகம் வெளுத்தது,
“ஆமாம்!”
“நான் பண்ணலைண்ணே!” நடுங்கினான்.
“எனக்கு நம்பிக்கை இல்லே!” பாலு உதடு பிதுக்குவதைப் பார்க்க அவனுக்குத் திகிலாய் இருந்தது.
“சத்தியமா எனக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தமில்லேண்ணே!” பதறினான்.
“பின்னே யார் பண்ணியிருப்பா?”
“தெரியலைண்ணே….!”
ரங்கனுக்கு இன்னும் உதறல் விடவில்லை.
“எனக்கு உன் மேல நம்பிக்கை இல்லே. அவ வயித்துல கத்தி குத்துப்பட்டிருக்கு.” என்றவன் “ஆமா குத்தின கத்தியை எங்கே மறைச்சு வைச்சிருக்கே?..” எழுந்து அறையின் ஒவ்வொரு இடமாக நோட்டமிட்டான்.
“ஐயோ! அதெல்லாம் கெடையாதுண்ணே!” ரங்கன் அலறினான்.
பாலு எல்லா இடத்தையும் ஆராய்ந்தான். “ஏன் ரங்கன்! இந்த கத்தியாலதான் அவளைக் குத்தினியா?” என்றபடி துணி மடிப்பின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த அகலமான கத்தியை எடுத்தான்.
ரங்கனுக்குத் துாக்கிவாரிப் போட்டது.
“அது வெங்காயம் வெட்டுற கத்திண்ணே. என்னது இல்லே. இந்த அறையில தங்கி இருக்கிற வேற ஒருத்தனுது. இங்கே நாலு பேர் தங்கி இருக்கோம்.”
“அவன் கொன்னிருப்பான்னு சொல்றீயா? இல்லே நீ கொன்னுட்டு அவன் மேல பழியைப் போடுறீயா?” பாலு கத்தியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். ரத்த வாடை அடிக்கிறதா என்று முகர்ந்து பார்த்தான்.
ரங்கனுக்கு வேர்த்தது.
சந்தேகமாய் மறுபடியும் அதை புரட்டி பார்த்து முகர்ந்த பாலு “சரி. போலீஸ் மோப்பம் புடிச்சு உன்னை வந்து விசாரிச்சா இல்லேன்னு சொல்லு. உளறாதே! இந்தா பிடி.” அவன் கையில் கத்தியை கொடுத்துவிட்டு அறையை விட்டு அகன்றான்.
ரங்கன் திகிலில் உறைந்து அப்படியே மரம் போல நின்றான்.
இரண்டு நாட்களாக ஆனந்த் அலுவலகத்துக்கு வராதது ஆச்சரியமாக இருந்தது நளினிக்கு.
“ஏன் அமுதா! ஆனந்த் லீவா ?” பக்கத்து இருக்கையில் இருந்தபடி மெல்ல கேட்டாள்.
இவள் வேலையை விட்டு நிமிராமல் “தெரியலை!” என்றாள்.
“என்ன காரணம் லீவு?”
“எனக்குத் தெரியாது!”
“என்னம்மா! மேனேஜர் அவரை உன் பொறுப்புல விட்டு வேலை கத்துக்க சொல்லி இருக்காரு. அவர் ஆளையே காணோம். நீ தெரியாதுன்னு சொல்றே!”
“சந்தேகம் கேட்டால்தான் சொல்லிக் கொடுக்கச் சொல்லி உனக்கு உத்தரவு. மத்தப்படி அந்த ஆளைப் பத்தி எனக்கு அக்கரை கெடையாது.”
“கலியாணம் பொண்ணு பார்க்கன்னு புறப்பட்டு போயிருக்கலாமா?”
“தெரியலை!”
“ஏன் அமுதா இப்படி வெறுப்பா பேசறே? உன் விவகாரத்துக்குப் பிறகு அந்த ஆள் கலியாணமே பண்ணமாட்டார்ன்னு நெனைக்கிறீயா?”
“நான் எதுவும் நெனைக்கலை.”
“ஜெயிலுக்குப் போய் வந்தவர்ன்னா பொண்ணு குடுக்கத் தயங்குவாங்களா?”
அமுதாவிற்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
“மன்னிசுக்கோ நளினி. ஆனந்த் பேச்சு எனக்குப் பிடிக்கலை!” முகத்தை இறுகி ஆத்திரத்தை அடக்கி சொன்னாள்.
“உனக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனா எனக்குப் பிடிக்குதே!” நளினி அவளை விடுவதாய் இல்லை.
“அப்படின்னா வேற யார்கிட்டேயாவது போய் பேசு. ஏன்..?. நீ அந்த ஆளைக் கலியாணம் பண்ணிக்கோ. எனக்கு ஆட்சேபணை இல்லே.” வெடித்தாள்.
“உன் ஆட்சேபணை யாருக்கு வேணும். நீ இல்லேன்னா நான் முடிச்சிருப்பேன்!” அவளும் சண்டைக்கு வருபவள் போல் சளைக்கவில்லை.
“என்னடி சொல்றே?” இவள் திடுக்கிட்டு அவளைப் பார்த்தாள்.
“ஆமாம். நீதான் நந்தி மாதிரி இருக்கே. அந்த ஆள் உன் எதர்க்க இன்னொருத்தியை நெருங்க பயப்படுறான்”.
அமுதாவிற்குள் திகைப்பு வந்தது
“நான் சொல்றது சரி அமுதா. அன்னைக்கு ஏதோ விதிவசம். அம்மா அப்பாவோட சேர்ந்து வரதட்சணை பேசி உன் கலியாணத்துல கலாட்டா பண்ணிட்டாரு அதுக்குத் தண்டனையும் அனுபவிச்சிட்டாரு. இன்னைக்கு அவர் நல்ல மனுசன். கெட்டவனாய் இருந்தா உன் முகத்துலேயே முழிச்சிருக்க மாட்டான். தேடிப் பிடிச்சு வெட்டி சாய்ச்சிருப்பான்! மனுச மனசுகளைப் புரிஞ்சுக்கனும்.”
‘மனுச மனசு புரியலையா?’ அமுதாவிற்குக் குழப்பமாக இருந்தது,
‘வெட்டி சாய்க்க வரலைன்னு எப்படி சொல்றே? அப்படி வெட்டி சாய்க்காதவர் என் பின்னாடி ஏன் வரனும்?’ – சரமாரியாக கேட்க துடித்தாள். பேசினால் வீண் விவாதம் வரும். நளினி சண்டைக் கோழியாக நிற்கிறாள். அடங்கினாள்.
“ஏன் அமுதா கம்முன்னு ஆகிட்டே?” நளினி மீண்டும் கொக்கிப் போட்டாள்.
‘இரண்டு நாட்களாக ஆள் இல்லை அவன் முகத்தில் முழிக்காமல் நிம்மதியாக இருந்தால் இவளென்ன தன்னை மடக்கி மடக்கி வதைக்கிறாள்..?! அவனைப் பற்றி பேசி வெறுப்பேற்றுகிறாள்? காதலிகக்கிறாளா?! காதலிக்கட்டுமே! எனக்கென்ன வந்தது?!’ நளினி மீது இவளுக்குக் கோபம் வந்தது. கோபத்தைத் தணிக்க தன் இருக்கையை விட்டு எழுந்து வேளியே வந்தாள். கேண்டீன் பக்கம் வந்து காற்றாட நின்றாள்.
‘ஆனந்த் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது? மனதில் கேள்வி எழுந்தது. அவனைப் பற்றி நினைவு வேண்டாம் ஒதுக்கினாள். இவனையும் ஒருத்தி நேசிக்கிறாள்! நினைக்க அருவருப்பாய் இருந்தது.
‘அருண் தருணுக்கு இன்றைக்கென்ன மாதாந்திர தேர்வு ஆங்கிலமா கணிதமா.?’ – அந்த நினைவிலிருந்த தப்பிக்க மனதை இப்படி ஓட்டினாள்.
“உங்க பசங்க ரெண்டு பேரும் நல்லா படிக்கிறாங்க..” அவர்கள் வகுப்பு ஆசிரியை சொன்னது நினைவிற்கு வந்தது. அவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இப்படி பேர் சொல்லும்படி படித்து பள்ளி இறுதி வகுப்பில் மாநிலத்திலே முதல் ஆட்களாக வரவேண்டும் கற்பனைக் கோட்டை கட்டினாள்.
திரும்பி வந்து வேலையைப் பார்த்தாள். மாலை 4.10க்கெல்லாம்தான் அந்த போன் வந்தது.
அத்தியாயம்-9
பியூன்தான் எடுத்தான். வேலையில் மும்முரமாக இருந்தவளிடம் வந்து “அமுதாம்மா! உங்களுக்குப் போன்!” சொன்னான்.
இவள் விரைந்து சென்று ஒலிவாங்கியைக் காதில் வைத்து “ஹலோ! நான் அமுதா!” என்றாள்.
“நான் ஆட்டோக்காரன் பள்ளிக்கூடத்து வாசல்லேர்ந்து பேசறேன்ம்மா!”
“என்ன விசயம்?”
“நம்ம புள்ளைங்க மத்தியானம் லீவுங்களாம்மா?”
“இல்லியே……!”
“பள்ளிக்கூடம்விட்டதும் வேற யாரையாவது கூட்டிப்போகச் சொல்லியிருக்கீங்களாம்மா?”
“இல்லை. ஏன் ?!”
“வழக்கம்போல சவாரிக்கு வந்தேன் பசங்களைக் காணோம்…!”
அமுதாவிற்குள் திக்கென்று ஏதோ உதைத்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “உள்ளே வகுப்பு நடக்கும். இல்லே விளையாட்டு மைதானத்துல விளையாடுவாங்க.” சொன்னாள்.
“பார்த்துட்டேம்மா. உள்ளாற எந்த வகுப்பும் நடக்கலை. புள்ளைங்க யாரும் விளையாடலை.”
“என்னய்யா சொல்றே?!” இவளுக்கு முகம் மாறியது.
“பள்ளிக்கூடம் விட்டு எல்லா பசங்களும் போயாச்சும்மா. கேட்டும் பூட்டியாச்சு. வாசல்ல நாலைஞ்சு பசங்கதான் பேருந்து ஏற நிக்கிறாங்க. மத்தபடி யாரையும் காணோம். எனக்கு அடுத்த சவாரிக்கு நேரமாச்சு. விசயத்தைச் சொல்லிட்டேன் வர்றேம்மா.” அணைத்தான்.
அமுதா இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை. அது கான்வென்ட். பெரும்பாலான ஆசிரியைகள் கன்னிகாஸ்திரிகள் அவர்களுக்கு உணவு தங்கும் விடுதி எல்லாம் உள்ளேயே.
இருந்தாலும் அமுதாவிற்கு வயிற்றில் அமிலம் சுரக்க அங்கே போன் போட்டாள்.
“நான் மதர் மேரி போசறேன்.” தலைமை ஆசிரியை எடுத்தாள்.
“நான் அருண், தருண் அம்மா பேசறேன்ம்மா. அவுங்க வகுப்பாசிரியை வேணும்.”
“சகாயம்!” அவள் ஒலிவாங்கியை கீழே வைத்து விட்டு அழைத்தாள்.
அவள் நொடியில் வந்து எடுத்தாள். அமுதா தன்னைப் பற்றிய விபரங்களைச் சொல்லி “புள்ளைங்களைக் காணோம் மேடம்!” என்றாள்.
“மத்தியானம் சாப்பாட்டுக்குப் பிறகு அவுங்க பள்ளிகூடம் வரலை”. அவள் குண்டைப் போட்டாள்.
“என்ன மேடம் சொல்றீங்க ?!”
“ஆமாம் மத்தியானம் நான்தான் அட்டெண்டன்ஸ் எடுத்தேன் அருண், தருண் வரலை.”
அமுதாவிற்கு இப்போது கைகால்கள் நடுக்கத் தொடங்கியது. உடனே சுதாகருக்குப் போன் போட்டாள்.
“நம்ம புள்ளைங்களைக் காணோம் உடனே என்னை வந்து கூட்டிப் போங்க.” வைத்தாள்
அவன் வரும்வரை நிற்க நிலைகொள்ளாமல் தவித்தாள். அலுவலகத்தில் அனுமதி அனுமதி சொல்லிவிட்டு கணவன் வந்ததும் அவனுடன் வண்டியில் ஏறி பறந்தாள்.
வீட்டு வாசலில் இல்லை. பதறாமல் சிதறாமல் அக்கம் பக்கம் பார்த்து இல்லையென்றதும் “ஐயோ காணோம்ங்க…” ஓங்கி குரல் கொடுத்து அழுதாள்.
சுதாகருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.
“அழாதே! நாம போலீசுக்கு விசயம் சொல்லுவோம்!” அவளை அழைத்துக் கொண்டு ஓடினான்.
அங்க அடையாளத்தோட புகார் கொடுக்க… “நீங்க அழாம போங்க நாங்க சீக்கிரம் குழந்தைங்களைக் கொண்டு வர்றோம்.” அனுப்பிய பரமசிமவம் துரித கதியில் வேலையில் இறங்கினார். எல்லா காவல் நிலையத்திற்கும் தகவல் சொல்லி சுறுசுறுப்பானார்.
வீட்டுக்கு வந்த அமுதாவால் தாங்க முடியவில்லை. “இந்த பயதான் என் புள்ளைங்களை எங்கேயோ துாக்கிக்கிட்டுப் போய்ட்டான்.” தரையில் விழுந்து புரண்டு அரற்றினாள்.
“அழாதே அமுதா. போலீஸ்ல புகார் கொடுத்தாச்சு அவனையும் புள்ளைங்களையும் எப்படியும் புடிச்சிக்கிட்டு வந்துடுவாங்க.” தேற்றினான்
“இல்லே. இவுங்க அவனைக் கண்டு பிடிக்கிறதுக்குள்ள கொன்னுடுவான். அவன் என்னைச் சுத்தி சுத்தி வரும்போதே இவனால என் குடும்பத்துக்குக் கெடுதல் யாருக்கோ எமன்னு நெனைச்சேன். புடிச்சுட்டான்.” புரண்டாள்.
சுதாகரால் அவளை அடக்கவும் முடியாமல் தேற்றவும் முடியாமல் பிரம்மைப் பிடித்தவனாய் நின்றான்.
பிள்ளைகள் கிடைக்காத துக்கம் இரண்டு நாட்களாக அமுதாவிற்குச் சோறு தண்ணி இறங்கவில்லை. படுத்தப் படுக்கையாய் இருந்தாள்.
சுதாகரனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு பக்கம் மகன்களைக் காணாத துக்கம். இன்னொரு பக்கம் படுக்கையாய் இருக்கும் மனைவி கவலை. இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவித்தான்.
போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்தும் நடந்தும். அலுத்தான். பிள்ளைகள் என்ன கதி ஆனார்களோ என்கிற கலக்கம் வேறு அவனை வாட்டியது. வாழ்க்கையே வெறுத்துப் போனவனாய் இருந்தான்.
தொலைபேசி ஒலித்தது. எடுத்தான்.
“நான் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் போசறேன்..”
“குழந்தைங்க கிடைச்சுட்டாங்களா சார்?!” துள்ளி எழுந்தான்.
“கிடைச்சுட்டாங்க. ஆனா…அது உங்க குழந்தைங்களான்னு அடையாளம் தெரியனும்…”
“என்ன சார் சொல்றீங்க ?!…”
“வந்து…வந்து….”
“சொல்லுங்க சார்!?” இவனுக்கு பதற்றம் எகிறியது,
“உடல் தலை வேறு முண்டம் வேறா இருக்கு. செங்கல்பட்டுக்குக் கிழக்கே ரெண்டு கிலோமீட்டர் தொலைவுல தோண்டி எடுத்திருக்கோம்.”
“சார்!!!!!” வீடே கிடுகிடுக்கும்படி அலறினான். பைத்தியம் பிடித்தவன் போல் ஹீரோ ஹோண்டாவை எடுத்துக் கொண்டு பறந்தான்.
தொலைவிலிருந்து பார்க்கும் போதே தெரிந்தது. மலையடிவாரத்துக்குக் கீழே கிராமத்து மொத்த சனங்களும் கூடி இருந்தார்கள். காக்கி உடுப்பு போட்ட போலீஸ்காரர்களும் பத்துப் பதினைந்து பேர்கள் தெரிந்தார்கள். குழிக்கு மேலே பிணங்கள் கொண்டு வரப்பட்டு இருந்தது. கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு நுழைந்த சுதாகர் உடல்களைப் பார்த்து, “ஐயோ!!” அலறினான். “கொன்னுட்டாங்களே!” தலையிலடித்துக் கொண்டு கதறினான்.
பரமசிவம் அவனைத் தாங்கிப் பிடித்தார். “பொறுமை! பொறுமை!” என்று அவனை அசமடக்கினார். இருந்தாலும் அவரால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“ஒன்னும் அறியாத அப்பாவிப் புள்ளைங்களைக் கொன்னுட்டாங்க சார். நான் எப்படி தாங்குவேன். என் பொண்டாட்டி எப்படி பொழைப்பா?” துடித்தான்.
அவன் கதறைப் பார்த்து கிராமத்து மக்களுக்கே கண்ணீர் வந்தது,
“எப்படி எப்படி சார் இது நடந்தது?” பரமசிவம் கைகளைப் பிடித்துக் கொண்டு பாவமாக கெஞ்சினான்.
“நரபலி கொடுத்திருங்காங்கன்னு நெனைக்கிறேன். எதுக்கு என்னன்னு விசயம் தெரியலை. குற்றவாளிகளைக் கண்டு பிடிச்சா தெரிஞ்சுடும். சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவோம்.”
“கிழிச்சீங்க…” கூட்டத்தில் எவனோ முணுமுணுத்தான்.
“இந்த கொடுமையை எப்படி சார் என் மனைவிகிட்ட சொல்லுவேன்?!” சுதாகர் தலையிலடித்துக்கொண்டு அழுதான்.
“தேவையில்லே. நானே வந்துட்டேன் !” அமுதா குரல் கறாராக ஒலித்தது.
பரமசிவமும் அவனும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். தலைவிரி கோலம் முகத்தில் இறுக்கமாய் அவள் கூட்டத்தின் முன் நின்றாள். கூட்டத்துக்கு அப்பால் துாரத்தில் ஒரு அழைப்பு வாடகைக் கார் நின்றது, அவள் பார்வை பிணங்கள் மேல் நிலை குத்தி இருந்தது,
“அமுதா!” சுதாகர் பயந்து பார்த்தான்.
“கவலைப்படாதீங்க. எனக்கு ஒன்னும் ஆகலை. நீங்க போன் பேசி அலறி அடிச்சிக்கிட்டு புறப்பட்ட போதே புள்ளைங்களுக்கு என்னவோ விசயம் விபரீதம் புரிஞ்சுபோச்சு. இனி அழுது பிரயோசனமில்லேன்னு மனம் மரத்துப் போச்சு. உடனே போலீஸ் ஸ்டேசனுக்குப் போன் பண்ணி விசயம் என்ன எந்த இடம்ன்னு கேட்டேன். சொன்னாங்க. உடனே ஒரு வாடகைக் கார் வரச் சொல்லி வந்துட்டேன். வாழ்க்கை முடிஞ்சு போச்சுங்க.” சொல்லி முடித்து உடனே பேச்சு மூச்சற்று சாய்ந்தாள்.
“அமுதா…ஆ!” அலறி சுதாகர் மனைவியைத் தாங்கிப் பிடித்தான். சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவமும் அவளைப் பிடித்தார். அடுத்த வினாடி அவளை அள்ளிப் போட்டுக் கொண்டு கார் மருத்துவமனை நோக்கி பறந்தது.
– தொடரும்…
– பாக்யா வார இதழில் தொடர் கதையாக வெளி வந்தது.