கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2025
பார்வையிட்டோர்: 278 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“இந்தாங்க, உங்களுக்குச் சாப்பாடு ரெடி, பாயசமும் வைத்திருக்கேன். ஒரு பையை என்னிடம் கொடுத்தாள் என்னருமை மனைவி சுதா. அவள் ஒரு உணர்ச்சிப் பிம்பம். என் மீது உயிரை வைத்திருப்பவள். இன்று என் பிறந்த நாள் வேறேயா . பாயசம், வடைன்னு ஜமாய்ச்சிட்டா.

”சாயந்தரம் ஆறு மணிக்கு வந்து விடுகிறேன். வந்த பிறகு கோவிலுக்குப் போகலாம்” என்றேன்.

”இன்னைக்காவது சீக்கிரம் வாங்க.எப்பவும்தான் ஆபீஸ் இருக்கவே இருக்கு. டிபன் கேரியர் பத்திரம் . டப்பர் வேர் . நேற்றுதான் வாங்கினது . ஐநூற்று முப்பது ரூபாய். ரயிலிலே எங்கேயாவது விட்டுடப் போறீங்க.. ஜாக்கிரதை” என்று மனைவிக்கே உரிய அக்கறையுடன் கூறினாள்.

அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். மீண்டும் ஒருமுறை பத்திரம் டிபன்கேரியர் என்று மொழிந்தாள் என் இல்லத்தரசி.

பத்திரம், பத்திரம், பத்திரம் என்று கோர்ட்டிலே சொல்வது போல் சொல்கிறாயே என்றேன். சுதா சிரித்தாள்.

பிளாட்பாரம் முழுவதும் பரபரப்பாய் மக்கள் சிக்னலில் சிவப்பு மாறி பச்சை நிறம் வந்துவிட்டது. தூரத்தில் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்குத் தயாராய் காத்திருப்பவனைப் போலக் காத்திருந்தேன். தோளில் ஒரு பை . கையில் ஒரு பை . டிபன் கேரியர் இருக்கும் பை. ரயில் நின்றதும் முட்டி மோதி ஏறி பயணிகளின் ஊடே நுழைந்து கம்பார்ட்மெண்டின் கடைசியில் உள்ள இருக்கையில் அமர்ந்தேன். டிபன் கேரியர் இருந்த பையை என் காலுக்கு இடையில் வைத்துக் கொண்டேன். தோளில் மாட்டியிருந்த பையை மடியில் வைத்துக் கொண்டேன். வண்டி கிளம்பியது. பையில் படிப்பதற்கு எப்போதும் ஒரு நாவலை வைத்திருப்பேன். நாவலை எடுத்துக் கொண்டு எதிரே உட்கார்ந்திருந்தவர்களை நோட்டம் விட்டேன்.

என் எதிரில் கண்ணைப் பறிக்கும் ஒரு பேரழகி அமர்ந்திருந்தாள்.அவளுக்கு வயதொன்றும் அதிகமில்லை. பார்ப்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் மதமதப்பான உடம்பு. பொன் நிறத்துடன் தங்கப்பதுமை போல் தளதளவென்றிந்தவளின் அழகைக் கண்டு மலைத்தேன். என் கண்கள் வெட்கப்படாமல் தன் வேலையைச் செய்தது. ஒய்யாரமாய் அமர்ந்திருந்தவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். நானும் பதிலுக்கு முறுவலித்தேன்.

“ஞான் ஏர்ஃபோர்ட் இறங்கணும் . அது எத்தனாவாவது ஸ்டாப்” தேனொழுக கேட்டாள் மலையாளத்து மங்கை..

ஆஹா! என்ன இனிமையான குரல். என் மெய் சிலிர்த்தது.

“அடுத்த ஸ்டாப்.”

“ஓ” என்று விளித்துக்கொண்டே தோளைக் குலுக்கினாள்.

என் நெஞ்சம் குலுங்கியது.

”திரிசூலம் ரயில் ஸ்டேஷனில் ஏர்போர்ட் போகிறவர்கள் இறங்க வேண்டும். ஸ்டேஷன் வந்து விட்டது. இப்பவே எழுந்து முன்னால் போங்க.” என்றேன்.

”தேங்ஸ் ” என்றவள் இருக்கையை விட்டு எழுந்தாள். அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த குள்ளமா குண்டாயிருந்த ஒரு நபரும் எழுந்தான்.. அவளுடைய கணவனாக இருக்க வேண்டும். அவள் நளினமாய் நடந்து சென்றாள். .

அவர்கள் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த ஸ்டேஷனில் சிலர் .ஏறினர். என் எதிரில் இரண்டு பேர் அமர்ந்தனர். வண்டி நகர ஆரம்பித்தது.

ஒரு கண்ணில்லாத பிச்சைக்காரன் பாட்டு பாடிக் கொண்டு வந்தான்.

என் முன்னால் அமர்ந்திருந்தவர்கள், ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் மோசமான பாதிப்பைப் பற்றி சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.

”என்ன லே விழுப்புரத்திலே நடந்த விஷயத்தைப் படிச்சியா?”

”என்ன ஆச்சு?”

ஒரு ஆள் வங்கியிலிருந்து கடன் வாங்கியிருக்கான். பணத்தைத் திருப்பி தரவில்லை. வட்டியும் அசலும் அதிகமாயிடுச்சி. தன்னிடம் உள்ள பழைய ஐநூறு ஆயிரத்தை வங்கியில் டிபாசிட் செஞ்சுட்டான். மொத்தம் ஒரு இலட்சம் . அப்புறம் இரண்டு நாள் கழித்துப் பணம் எடுக்கப் போயிருக்கான். அவன் அக்கவுண்டிலே பணம் எதுவுமில்லை. எல்லாப் பணத்தையும் வங்கி அவன் வாங்கிய கடனுக்கு எடுத்துக் கொண்டுவிட்டது. மன்றாடிப் பார்த்தும் அவனால் பணம் எடுக்க முடியவில்லை. தற்கொலை செய்து கொண்டு விட்டான்.

“இந்த மாதிரி வங்கிகள் செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. பணம் எடுப்பவர்கள் படும் அவதி சொல்லி மாளாது” என்றான் மற்றொருவன்.

அப்போது கைதட்டும் ஒலி கேட்டது. வேறுயாருமில்லை. ஒரு திருநங்கைதான். அவள் பச்சை நைலக்ஸ் புடவை கட்டியிருந்தாள். வண்டியிலுள்ளவர்களிடம் யாசகம் கேட்டுக் கொண்டே வந்தாள். இறைவன் படைப்பில் திருமங்கையும் நம்மைப் போல் ஒர் ஜீவன். இயற்கை அவளை அப்படி மாற்றி விட்டது. பாவம் ! அவள் என்ன செய்வாள் ? எப்பவாது பணம் போடுவேன். இல்லாவிட்டால் பேசாமல் இருந்து விடுவேன்.

அவள் என்னருகில் வந்தாள். செல்லம் பணம் கொடு. காசு கொடு ராஜா . நீ நல்லா இருப்பே. என் தலையில் கையை வைத்தாள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையில் சிறிது முன்னுக்கு வந்தேன். அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவள் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். அப்போது மாம்பலம் ஸ்டேஷனும் வந்து விடவே நானும் எழுந்து விட்டேன். என் அலுவலகம் மாம்பலத்தில் இருக்கிறது எனபதால் நான் இறங்க வேண்டும்..

படிக்கட்டுகளில் ஏறி வெளியே வந்தவுடன் எனக்கு மூளையில் பொறி தட்டியது. டிபன் கேரியரை ரயிலிலே விட்டு விட்டு வந்துவிட்டேன். தூக்கி வாரிப் போட்டது. என் இல்லாள் அருமையாய் சமைத்துக் கொடுத்த உணவு அதை விட முக்கியமானது டப்பர்வேர் டிபன் கேரியர். இரண்டு நாள் முன்னால்தான் வாங்கியது. தொலந்துவிட்டது என்று சொன்னால் அவள் உயிரையே விட்டு விடுவாள். உடனே ஸ்டேஷனுக்கு ஓடி னேன் . அதற்குள் நான் வந்த ரயில் போய்விட்டிருந்தது. டிடிஆரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் இப்போது ஒரு பாஸ்ட் லோக்கல் வரும் அதில் போனால் அந்த மின்சார ரயிலைப் பிடித்து விடலாம் என்று கூறினார். அவருக்கு நன்றி கூறி விட்டு இரண்டு நிமிடம் கழித்து வந்த பாஸ்ட் லோக்கலில் ஏறினேன். எதிர் பக்கம் இரண்டு மின்சார வண்டிகள் நான் போய்க்கொண்டிருந்த ரயிலைக் கடந்து சென்றன. நான் பதைபதைத்தேன். நான் டிபன் கேரியரை விட்ட ரயிலைப் பிடித்துவிட வேண்டும். என்னுடைய கேரியர் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் றைஞ்சினேன். ஒரு அழகான பெண்ணைப் பார்த்துக் கொண்டு டிபன் கேரியரைக் கோட்டை விட்டு விட்டேனே என்று வருத்தப்பட்டேன். ரயில் மிகவும் மெதுவாகப் போய்க் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றியது. எப்படியோ ஒரு வழியாக ரயில் பீச் ஸ்டேஷ்னை அடைந்தது. கிளம்புவதற்குத் தயாராய் ஒரு வண்டி பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. கார்ட் பச்சைக் கொடி காட்டிக் கொண்டிருந்தார். நான் ஓடிப் போய் கடைசிக் கம்பார்ட்மெண்டில் ஏறினேன். அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றதும் ஒடிச் சென்று நடுவில் இருந்த ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறி என்னுடைய டிபன் கேரியர் இருக்கிறதா என்று பார்த்தேன். கிடைக்க வில்லை. எனக்கு எந்த கம்பார்ட்மெண்டில் ஏறினோம் என்று சரியாய் தெரியவில்லை. எனவே பக்கத்துக் கம்பார்ட்மெண்டில் ஏறித் தேடினேன். இப்படியே பைத்தியக்காரன் போல் மாமபலம் ஸ்டேஷன் வரும் வரை தேடிக்கொண்டிருந்தேன். கடைசி வரிசைக்குப் போய் காலை அகட்டுங்க. என்று குனிந்து பார்ப்பதைக் கண்டு ரயிலிருந்த ஒருவர், ”என்ன சார் தேடறீங்க ?” என்று கேட்டார். “டிபன் கேரியரை மறந்து விட்டு இறங்கிவிட்டேன். அதைத் தேடுகிறேன்” என்றேன். அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். மாம்பலம் ஸ்டேஷ்ன் வரப் போகிறது. டிபன் கேரியர் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. என் முயற்சி தோல்வியடைந்து விட்டது என்றே எண்ணினேன். .மாம்பலம் ஸ்டேஷ்னில் இறங்கி மாம்பலம் ஸ்டேஷ்னில் இறங்கி ஏக்கத்துடன் ரயிலைப் பார்த்தேன். வருத்தத்துடன் காலடி எடுத்து வைத்தபோது என்ன ஆச்சர்யம் ! நான் காலையில் பார்த்த அதே திருநங்கை கையில் பையுடன் அடுத்தக் கம்பார்ட்மெண்டில் ஏறுவதைப் பார்த்தேன். என் பையைக் கண்டு கொண்டேன். ஓடிப் போய் அவளுடன் ஏற முயன்றேன். அவசரத்தில் அது லேடீஸ் கம்பார்மெண்ட் என்பதைக் கவனிக்கவில்லை. “லேடீஸ் கம்பார்ட்மெண்ட்” என்று பெண்கள் கூச்சலிட்டதும்தான் எனக்குப் புரிந்தது. பதைபதைப்பில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் திருநங்கையின் கையைப் பிடித்து. “ கொஞ்சம் கீழே இறங்குங்க. உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கினேன்.. அவளும் புறப்பட்டுக் கொண்டிருக்கிற ரயிலிருந்து கீழே குதித்தாள்.

”என்னா கண்ணு ? ஏன் என் கையைப் பிடிச்சே? நீயும் திருநங்கையாகனுமென்னு ஆசையா?”

நல்ல காலம் . வேறொரு பெண்ணின் கையைப் பிடிச்சிருந்தா இவ்வளவு நேரம் அவ கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரையே கூட்டியிருப்பா. போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியிருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டே, சேச்சே, எனக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் இல்லே. உங்க கையில் இருக்கும் பை என்னுடையது. நான் மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கும் போது மறந்து வைச்சுட்டேன். பீச் ஸ்டேஷன் போய் தேடிக் கொண்டு வருகிறேன். என பையை என்கிட்டே கொடுத்து விடுங்க . அதில் சாப்பாடு இருக்கிறது.”

“போடா போக்கத்தவனே. இந்தப் பைக்காகவா என் கையைப் பிடிச்சு கீழே இறக்கினே. இந்தப் பை எனக்குக் கிடைச்து. அதனாலே இது என்னது. .

“டிபன் கேரியர் நீல நிறத்திலிருக்கும். இன்னைக்கு என் பிறந்த நாள். என் மனைவி பாயசத்தோடு வைத்திருக்கும் சாப்பாடு இருக்கும். இதைவிட என்ன ஆதாரம் வேணும்?”

”அதெல்லாம் எனக்குத் தெரியாது . எனக்குக் கிடைச்சது எனக்குத்தான் சொந்தம் . நான் உனக்குத் தரமாட்டேன்.”

”எனக்குப் பகிர் என்றது. பணம் ஏதாவது கொடுத்து எப்படியாவது பையை வாங்கி விடலாம்” என்று தோன்றியது. என் பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாயை எடுத்து, என் பையை என்னிடம் கொடுத்துவிடு. இந்தப் பணத்தை வைத்துக் கொள் ”என்றேன்,

அப்போது அலைபேசி ஒலித்தது. என் மனைவியிடமிருந்துதான் அழைப்பு.

“ஆபீஸ் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்திட்டீங்களா. டிபன் பாக்ஸ் பத்திரமாய் இருக்கா? என்று வினவினாள்.

அவளிடம் நிலமையைச் சொன்னால் டென்சன் ஆகி விடுவாள் என்பதால் ”எல்லாம் பத்திரமாய் இருக்கு ” என்று சொல்லிவிட்டு திருநங்கையைப் பார்த்தேன்.

திருநங்கை யோசித்து விட்டு சொன்னாள்.

”உனக்கு இன்னைக்குப் பிறந்த நாள்ன்னு சொல்றே. அதனாலே நீயே இதை எடுத்துக்க. எனக்குப் பணம் எதுவும் தரவேண்டாம் ”என்று பையை என்னிடம் நீட்டினாள்.

திடீரென்று என் மனசில் ஒரு எண்ணம் உதித்தது..

அந்தப் பையை வாங்காமல் “காலையிலிருந்து ரயிலிலே அலைஞ்சு பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கீங்க. இதில் இருக்கிற சாப்பாட்டைச் முதல்லே சாப்பிடுங்க. நான் காத்திருக்கிறேன்.” என்ற போது திருநங்கை திகைத்து, “என்ன சொல்றே?” என்று கரகரத்த குரலில் கேட்டாள்.

”டிபன் கேரியர் பையிலே இருக்கு. நீங்க முதல்லே சாப்பிடுங்க”

அதைக்கேட்டு அவள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, உணவைத் திருப்தியுடன் சாப்பிட்டாள். டிபன் கேரியரை அலம்பி என்னிடம் கொடுத்து “நாங்களும் மனுசங்கடா ! எங்களிடத்தில் யாரும் கருணை காட்டுவதில்லை. கேவலமாய் பார்க்கிறார்கள். நீ சாப்பாட்டு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. என் பெயர் ‘ரேவதி’. உனக்கு எப்போவாது திருநங்கைகளிடமிருந்து பிரச்சனை ஏற்பட்டால் என் பெயரைச் சொல்லு .” என்றாள்.

அப்போது ஒரு மின்சார ரயில் பிளாட்பாரத்தில் நுழைந்தது. ”நான் வரேன்” அவள் ஓடிப் போய் ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறினாள். ரயில் நகர்ந்தது.

வாழ்க்கையே சிலருக்குத் தேடல். தேடல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இருப்பதை, இழந்ததை, மறந்ததை, மறைத்ததை… எதுவானாலும் தேடலில் கிட்டும். அதனால் மனசு குதூகலமடையும்.

தொலைந்தது கிடைத்த மகிழ்ச்சியுடனும், அன்னதானம் செய்த மன நிறைவுடனும் அலுவலகத்தை நோக்கி என் கால்கள் நடந்தன.

– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *