தெளிவு!
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2026
பார்வையிட்டோர்: 295
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘அவ்வளவு அவசரமோ?’
மௌனம்
‘ஏனிந்த அவசரம்?’
‘மூண்டு நாலு வரிசமாய்ப் பூட்டிக் கிடந்ததே”
‘இவ்வளவு காலமாய் நீ அவசரப்படேல்லையே. இப்ப ஏனிந்த அவசரம்?’
‘மோகன் வரப்போறான். என்ட ஆதங்கமோ? ‘பதில்லை.
இந்த அமுதசுரபியின் ‘கேற் மூன்று நாலு வரிசமாய்ப் பூட்டிக் கிடக்கு.
வீட்டிலேயுள்ள நாங்கள் வெளியாலை போகேக்கையும் உள்ளை வரேக்கையும்தான் கேற் பூட்டுத்துறந்து பூட்டப்படும்.
நீ இஞ்சை வந்தபிறகு என்ரை சொந்தக்காறரோ, அயலவர்களோ இந்த அமுதசுரபிக்கு வாறேல்லை. ஏன்?
உங்கடை மச்சாள்மாரை விட்டிட்டு நீங்கள் என்னைக் கலியாணம் கட்டினதெண்ட கோவம் அவையளுக்கு எண்டு நீ சொன்னாய்.
நீ இஞ்சை வரமுந்தி இந்த கோப்பாய் மாப்பாண முதலியாற்றை அமுதசுரபி வீட்டு கேற் ஒருநாளும் பூட்டப்படுகிறதில்லை.
ஆடுமாடுகள் உள்ளை வராமலிருக்க கேற் சாத்திக் கொளுவித்தான் கிடக்கும். எந்த நேரமும் ஆர்வேணுமெண்டா லும் வரலாம். போகலாம்.
நீ வந்த பிறகு இந்த கேற் நிரந்தரமாய் பூட்டித்தான் கிடக்கு.
கேற் ஏன் பூட்டினதெண்டு துவக்கத்திலை நான் உன்னைக் கேட்டன்.
காலம் கெட்டுப் போச்சு. இப்ப சில இடங்களிலை பகலிலையும் களவுகள் நடக்குது. எதுக்கும் முன் எச்சரிக்கை யாய் இருக்கிறது நல்லதெண்டு நீ சொன்னாய். நான் நம்பினன் உன்னை.
நீ வாறதுக்கு முன்னம் எந்த நேரமும் ஆர் வேணு மெண்டாலும், உள்ளை வரலாம். போகலாம்.
ஆர் வந்தாலும் கடைசி தாக சாந்தியாவது தீர்த்துத்தான் போவினை.
மோர் அல்லது எலுமிச்சம் பழத்தண்ணி குடிச்சுத்தான் போவினை.
ஆனா இப்ப?
ஒருதரும் உள்ளை வரமுடியாதே.
முந்தி வீட்டிலை சாப்பாட்டுப் பஞ்சமேயில்லை.
சொந்தக்காரர்கள், அயலவர்கள், வெளியார் எவராயிருந் தாலும் பசியாறித்தான் போவினை. இல்லாட்டி பெரியம்மா விடா.
ஒரு நாளைக்கு குறைஞ்சது மூன்று நாலு கொத்து அரிசி வேகும்.
என்ன வீட்டிலையுள்ள அஞ்சாறு பேருக்கு இவ்வளவு அரிசியா?
எங்கடை மாடுகளைப் பராமரிக்கிறதுக்கு மருது, வள வைக் கூட்டி சுத்தம் பண்ணிறதுக்கும் வெளி வேலையள் செய்யிறதுக்கும் மருதின்ரை பெண்சாதி. தொட்டாட்டு வேலை யள் செய்யிறதுக்கு அவையின்ர பிள்ளையள். இரண்டு. வயல் வேலை செய்யிற இளையவன். இடைக்கிடை சொந்தக்காரர் மாறிமாறி வருவினம். எல்லாருக்கும் மதியச் சாப்பாடு எங்கடை வீட்டிலைதான்.
இதெல்லாத்துக்கும் எங்கடை வயல் நெல்லுத்தான்.
சோத்துக்கு மொட்டைக் கறுப்பன் அரசி. பலகாரத்துக்கு சாதாரண நெல்லரிசி.
யாராவது சொந்தக்காரரிலை அல்லது அயலட்டையிலை பிள்ளை பெத்தால் எங்கடை வீட்டிலையிருந்துதான் மொட் டைக் கறுப்பன் நெல்லு போகும்.
காலையிலை புட்டு அல்லது இடியப்பம், இடைக்கிடை தோசை அல்லது இட்லி. சனி ஞாயிறிலை அப்பம்.
‘அப்பத் தேங்காய் ‘மரங்கள் இரண்டு மூண்டு எங்கடை வளவுக்கை நிக்குது. பதினைந்து தென்னையள்.
‘மால் ‘மூலைக்கை செத்தல் தேங்காய்க் குவியல்.
என்ரை ஐயா,அம்மாவாக்கடை ‘திவசம் ‘எண்டால் ஒரு மூட்டை அரிசிக்கு மேலை அவிபடும்.
குறைஞ்சது மூன்று ‘சபை ‘இருந்தெளும்பும்.
சொந்தக்காரருக்கும் அயலட்டைகளுக்கும் பெட்டி பெட்டியாய் திவசச்சோறு போகும்.
மருது, இளையவி அவையின்ரை குடும்பங்களுக்கும் சொந்தங்களுக்கும் பொட்டியளிலை சோறு போகும்.
எங்கடை ஊரிலையுள்ள மூண்டு கோயில்களின் தேர்த் திருவிழாக்கள் உபயம் நாங்கள்தான்.
மூன்று திருவிழாக்களையும் நடத்திற செலவுக்காக மூண்டு கிணத்தடித் தோட்டங்கள் குத்தகைக்கு குடுத் திருக்கிறம். அந்த மூன்டு தோட்டங்களையும் கோயில் கிணத் தடித் தோட்டங்கள் எண்டு எங்கடை பாட்டனார் தில்லையம் பலம் எழுதிவைச்சார்.
கோயில் திருவிழாப் பலகாரங்கள் எங்கடை சொந்தங் களுக்கும் அயலட்டைகளுக்கும் மருது ளையவியாக்களுக் கும் தாராளமாகக் கொடுத்தனுப்பப்படும்.
எங்கடை வீட்டிலை ஏதாவது நன்மை தீமையெண்டால் ஐஞ்சாறு நாட்கள் அயலவர்களதும் சொந்தக்காரர்களதும் வீடுகளில் உ‘ைஏறாது எல்லாருக்கும் எங்கடை வீட்டிலை தான் மூன்டு வேளையும் சாப்பாடு.
ஆனா நீ வந்த பிறகு மூன்டு நாலு வரியங்களாய் காலையிலை பாணும் பட்டரும் அல்லது ஜாம்.
அஞ்சாறு பேருக்கு ஒண்டரை றாத்தல் பாண் போதும். மதியச் சாப்பாட்டுக்கு இரண்டு சுண்டு சம்பா அரிசி போதும்.
நாட்டரிசிச் சோறு செமியாதாம்.
இரவிலை மெல்லிய சாப்பாடு.
பால், தயிர், மோர், நெய் எல்லாம் மறந்த கதையாச்சு.
இப்ப எங்கடை வீட்டிலை அங்கர் அல்லது நெஸ்பிறே மாப்பால்தான்.
முந்தி மூன்டு நாலு பசுமாடுகள் எங்கடை வீட்டிலை. வயல் உழுகிறதுக்கும் வண்டி இழுக்கிறதுக்கும் ஒரு சோடி எருதுகள்.
பெரியம்மாவைச் சுற்றி ஏழெட்டுக் குழந்தைகள். உறவினர்களதும் அயலவர்களினதும் குழந்தையள்.
பெரியம்மா மாம்பழத்தோலைச் சீவி, பழத்தை வெட்டி குழந்தைகளுக்குக் குடுப்பா.அல்லது பலாப்பழச்சுளைகளைப் பிடுங்கிக் குடுப்பா.
பிள்ளையளுக்குக் கொள்ளை ஆனந்தம்.
எங்கடை வளவு பசுஞ்சோலை.
மா, பலா, தென்னை போன்ற வான் பயிர்கள், எலுமிச்சை, தோடை போன்ற மரங்களும் நாலஞ்சு வளவைச் சுற்றி தென்னை, செவ்விளனி, கமுகு மரங்களும்.
மாம்பழக் காலத்திலை வீட்டு மூலைக்கு மூலை மாம் பழக் குவியல்கள்.
கொழும்பான், அம்பலவி, செம்பாட்டான், விலாட் மாம்பழக் குவியல்கள்.
அயலவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எங்களை வளவிலும் வயல்களிலும் வேலை செய்யிறவர்கள் எல்லாருக் கும் பெரியம்மா மாம்பழங்கள் குடுத்தனுப்புவா.
இப்ப எல்லா மாமரங்களும் பிலா மரங்களும் போக காலத்திலை யாழ்ப்பாணத்திலையிருந்து வாற பழ வியாபாரி களுக்கு மரத்தோடை குத்தகைக்கு விற்கப்பட்டுவிடும்.
நோயாளிகளுக்கும் கோயில் அபிஷேகத்துக்கும் குடுக்கப் பட்டு வந்த செவ்விளநீர் குலைகள் வெளியேயிருந்து வருகிற வியாபாரிகளுக்க விற்கப்படுகின்றன.
எங்கடை வயல்கள் மூண்டும் குத்தகைக்கு குடுக்கப்பட்டு விட்டன.
வயல்களில் முதல் வரியம் நல்ல விளைச்சல். அந்த வரியம் மாத்திரம்தான்.
அடுத்த வருடம் வயல் குத்தகைக்கு இரட்டிப்பாக் கப்பட்டது.
வயல்களைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் இதற்கு உடன்படவில்லை.
வயல்களுக்குள் இறங்க வேண்டாமென்று அவர்களுக் குக் கூறப்பட்டது. அவர்கள் இரண்டு வரியங்களாக வயல் களுக்குள் இறங்கவில்லை. மற்றவர்களையும் அவர்கள் வயல்களுக்குள் இறங்கவிடவில்லை.
விளைவு?
மூன்டு வரியங்களாய் வயல்கள் விதைக்கப்படவில்லை. அவை காடுபத்துகின்றன.
தோட்ட நிலங்களின் குத்தகையும் இரண்டு மடங்காக்கப்பட்டன. மூன்டு வரியங்களாய் தோட்டங்களும் பயிரிடப்பட வில்லை. அவை தரிசாய்க் கிடக்கின்றன.
பெரியம்மாதான் வயல் நிலங்களதும் தோட்ட நிலங்களதும் குத்தகையைக் கூட்டினதெண்டு நான் நினைச்சுக் கொண்டிருக்கிறன்.
இதெல்லாத்தையும் பாத்த மருது குழம்பிப் போனான்.
‘நாச்சியார், இந்தக் கூத்தெல்லாம் நடக்குதே. நீங்கள் ஏன் பேசாமலிருக்கிறியள்? ‘
பெரியம்மாவை மருது கேட்டுது.
‘மருது, இது அவையின்ரை குடும்ப விடயம். நாங்கள் திலை தலையிடக்கூடாது. நீயும் பேசாமலிரு ‘
பெரியம்மாதிட்டவட்டமாய் கூறிப்போட்டா.
நாலு வரியங்களுக்கு முந்தி நீ எங்கடை கோப்பாய் கிறிஸ்ரியன் கல்லூரியிலை படிப்பிக்க வந்தாய்.
எங்கடை வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு சிறிய வீடு.
நீயும் உன்ரை அம்மாவும் அங்கை தங்கினியள். கொஞ்ச நாளைக்குப் பின் உன் அண்ணனும் அவற்றை குடும்பமும் வந்து உங்களோடை தங்கிச்சினை.
ஒரு நாள் உங்கள் அண்ணன் எங்கள் வீட்டிற்கு வந்தார்.
ஆங்கிலச் செய்திப் பத்திரிகை வாசிப்பதற்குத்தான் வந்தார். அன்று தொடக்கம் தினசரி மாலையில் பத்திரிகை வாசிப்பதற்கு அவர் வந்து கொண்டிருந்தார்.
‘என்ரை தங்கச்சி ஆங்கிலம் படிக்க விரும்புகிறாள். உங்களால் உதவ முடியுமா?’
உன்ரை அண்ணன் கேட்டார். நான் உதவ உடன்பட்டன்.
விளைவு?
ஒட்டகம் கூடாரத்துக்கை தலை வைச்ச கதையாச்சு.
அந்தவேளை மோகன் உங்களோடை வரேல்லை.
எனக்காக என்ரை மூன்டு முறை மச்சாள்மார் காத்திருந்தினை.
நீ வந்ததாலை அவை நிரந்தரமாகவே பெருமூச்சு விடவேண்டி வந்தது.
இண்டுவரை அவை கல்யாணம் கட்டேல்லை.
நீ வந்து இரண்டு மூன்டு மாதங்களாய் எங்கடை குடும்ப நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்தாய்.
பெரியம்மாக்கள் உன்னை மனப்பூர்வமாய் தங்கள் மருமகளாய் ஏற்றுக் கொள்ளும்வரை நீ காத்திருந்தாய். பின்னர் படிப்படியாய் பெரியம்மாவின்ரை நடவடிக்கைகளிலை நீ தலையிட ஆரம்பிச்சாய். இது எனக்குத் தெரியாது.
ஒரு நாள் திடீரென எங்கடை அமுதசுரபியின் ‘கேற் பூட்டப்பட்டது.
‘ஏன்கேற் பூட்டிறியள் எண்டுதான் கேட்டன்.
காலம் கெட்டுப் போச்சு. இப்ப சில இடங்களிலை பட்டப் பகலிலும் களவுகள் போகுதாம். எதுக்கும் முன்னெச்சரிக்கையாய் இருக்கிறது நல்லதுதானே நான் உன்ரை சொல்லை ஏற்றுக்கொண்டன்.
அந்த வேளையில் நான் உன்ரை உள்நோக்கத்தை புரிந்து கொள்ளேல்லை.
அடுத்தநாள் வளமையாய் எங்கடை வீட்டை வாற் குழந்தையள் வந்துதுகள்.
கேற் பூட்டிக்கிடந்துது.
‘பெரியம்மா! பெரியம்மா!’ அதுகள் கூப்பிட்டுதுகள். பதிலில்லை. கேற்றும் திறக்கப்படவில்லை.
ஒரு மூலையிலிருந்து பெரியம்மா அழுதுகொண்டிருந்தா.
எனக்கொண்டும் விளங்கேல்லை.
‘ஏன் கேற் திறக்கேல்லை? ‘
பெரியம்மாக்களுக்கு நீ சொன்னதாய் பிறகுதான் எனக்குத் தெரியவந்தது.
மூண்டு நாலு நாட்கள் குழந்தைகள் வந்து கத்திப்போட்டு ஏமாற்றத்துடன் திரும்பின.
‘இந்தப் பஞ்சப் பிசாசுகள் வந்து எந்த நேரமும் கத்தித் எங்கடை துலையுதுகள். அமைதியைக் குலைக்குதுகள். நிம்மதியைக்கெடுக்குதுகள். அதுதான் கேற் திறக்கேல்லை’
உனக்கு முதல் வெற்றி.
‘என்ரை இரண்டாவது மகள் செல்வி பெரியபிள்ளை யாகிவிட்டாள்.
அயல் வீட்டு அன்னம்மா வந்து ஆனந்தத்துடன் கூறினா.
பெரியம்மாவுக்கு மனம் நிறைந்த சந்தோசம். ‘கொஞ்சம் பொறு அன்னம்மா
உள்ளை சென்றா பெரியம்மா.
ஆறு கொத்து மொட்டைக் கறுப்பன்நெல். ஒரு கொத்து உழுந்து, ஒரு போத்தில் ஆனைக்கோட்டை விளக்கின நல்லெண்ணையுடன் வருகின்றா.
அன்னம்மாசந்தோசத்துடன் அவற்றை வாங்குகின்றா. ‘கொஞ்சம் பொறு.
புயலாய் வந்த நீ எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு உள்ளே செல்கின்றாய்.
‘அந்தப் பிள்ளைக்கு தண்ணி வாக்கிற அண்டைக்கு ஐஞ்சோ பத்தோ குடுத்தா போதும். இப்ப இதெல்லாத்தையும் கொண்டுபோய் அவை எல்லோரும் பங்குபோட்டுத் திண்டிடு வினை.
நீ சொன்னாய்.
அன்னம்மா ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா.
பெரியம்மா இடிஞ்சுபோய் இருந்த இடத்திலே இருக்கின்றா.
இப்பிடி அள்ளி அள்ளிக் குடுத்துக் கொண்டிருந்தா, எங்கடை குடும்பம் கெதியிலை குட்டிச் சுவராய்த்தான் போகும்.
உன்னை நான் கேட்டதுக்கு நீ இப்படிக் கூறி என்ரை வாயை அடைச்சுப் போட்டாய்.
‘பெரியம்மா, எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. ஓடோடி வந்து ஆனந்தத்துடன் கூறுகின்றான் மருதன்.
‘அப்படியா!’
பெரியம்மாவுக்கு சரியான சந்தோசம்.
அரைப்பறை மொட்டைக் கறுப்பன் நெல்லைக்குகொண்டு வாறா.
நீ அந்த நெல்லை எடுத்துக்கொண்டுபோய் வைச்சிட்டு பத்து ரூபாவை மருதனுக்கக் குடுக்கிறாய்.
மருதன் அந்தக் காசைக் கைநீட்டி வாங்கவில்லை. திரும்பிப்போட்டான்.
பெரியம்மா என்ன செய்வதெண்டு தெரியாமல் திகைத்த வளாய் நிற்கின்றா.
எங்கடை குடும்ப விடயங்களிடை நீங்கள் இனிமேல் தலையிட்டால் நான் எங்கடை மாமா வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுவன்.
நீ பெரியம்மாவை எச்சரித்தாய்.
இது எனக்குத் தெரியாது. பெரியம்மாக்களும் எனக்குச் சொல்லேல்லை.
படிப்படியாய் நீ பெரியம்மாவை அலட்சியப்படுத்தி அவமானப்படுத்தி. மிரட்டி, அவவை இந்த வீட்டிலையிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளிட்டாய்.
பெரியம்மா இது பற்றி ஒரு வார்த்தை கூட எனக்குச் சொல்லேல்லை.
‘தம்பி, இவ்வளவு காலமும் நாங்கள் உன்னோடை இருந்தம். சிறுவயதிலேயே நீ உன்ரை பெற்றோரை இழந் திட்டாய். நாங்கள் உன்னை வளத்து வழிகாட்டி படிப்பிச்சு எல்லாரும் உன்னை மதிச்சு பாராட்டக் கூடிய மனிசனாக்கி விட்டிருக்கிறம்’
‘இப்ப நீ குடும்பக்காறன்,இனி உன்ரை பெண்சாதிதான் உன்னைக் கவனிப்பா. இந்தக் குடும்பப் பொறுப்பை இனி அவதான் எடுத்து நடத்த வேணும். அதுதான் முறை.
‘அப்ப நீங்கள்? ‘
‘இனி நாங்கள் என்ரை மகனோடை இருக்கப் போறம். பக்கத்திலை தானே அவன்ரை வீடும்’
அவவைப் போக வேண்டாம் எண்டு எவ்வளவோ மன்றாடி அழுது குழறித் தடுத்துப் பார்த்தன்.
அவ கேட்கேல்லை.
என்னை விட்டிட்டுப் போட்டா.
எனக்கு தாய்க்குத் தாயாயிருந்து என்னை ஆளாக்கின பெரியம்மா என்னை விட்டுட்டுப் போனது எனது மனதை சரியாய்ப் பாதிச்சுது. நான் நடைப்பிணமாய்த்தான் திரிஞ்சன்.
நீ வந்து ஆறு மாதங்களுக்குள் பெரியம்மாவையும் பெரியப்பாவையும் என்னட்டையிருந்து பிரிச்சு வெளியேற்று வதில் வெற்றி கண்டாய்.
தாங்களாய் விரும்பித்தான் பெரியம்மாக்கள் அண்ண ணோடை இருக்கப் போனவை எண்டு நான் நினைச்சுக் கொண்டிருந்தன். பெரியம்மான்ரை சொல்லைக் கேட்டு நான் பொறுமையாயிருந்தன்.
இப்ப நான் தனிமரம்
சித்தப் பிரமை பிடிச்சவனாய்த் திரியிறன்.
இப்ப நீ நினைத்தபடி என்னை ஆட்டிப் படைக்கிறாய்.
உன்ரை அண்ணனும் அவற்றை குடும்பமும் எங்கடை வீட்டிலை வந்து நிரந்தரமாய் குடியேறிட்டனை. நீங்கள் எல்லாரும் சேர்ந்து கும்மாளமடிக்கிறியள்.
இப்ப அல்லி ராஜ்யம்.
ஒரு நாள் நான் எங்கடை வீட்டுக் கிணத்துக்கை தவறி விழுந்து போனன்.
விசரிலை நான் கிணத்துக்குள் குதிச்சிட்டன் எண்டு கதை கட்டி விட்டியள். எனக்கு பயித்தியப் பட்டம் கட்டி விட்டியள்.
எங்கடை சொத்தெல்லாத்தையும் அபகரிக்கத்தான் அப் பிடிச் செய்தியள்.
வீடுவாசல், காணி பூமி, பணக் குடுக்கல் வாங்கல் சகல பொறுப்புக்களையும் பெரியம்மாக்களிடமிருந்து பறிச்சிட்டாய்.
என்ரை சம்பளத்தைக்கூட நீ தான் இப்ப எடுக்கிறாய். பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்கக்கூட எனக்குப் பணமில்லை.
எங்கடை சமூகமுன்னேற்ற சங்கத்துக்குக்கூட இப்ப நான் நிதி உதவி செய்யிறேல்லை.
வயல்கள் தோட்டங்களின் குத்தகைக் காசைக்கூட நீ தான் வாங்கி எடுக்கிறாய்.
நான் இப்ப சரி பிழை ஒன்றும் பேசுறேல்லை. நீ பிழை விடமாட்டாய் எண்டுதான் நான் நம்பினனான். ஏனென்டால் எனக்கு உன்னிலை அவளவு நம்பிக்கை.
கல்லூரியிலை கூட நீ ஒழுங்காய் படிப்பிக்கிறேலை. அதிபர் அடிக்கடி முறையிடுகிறார்.
எங்கடை முகத்துக்காக அவர் பொறுமையாயிருக்கிறார்.
உனக்கு மகளிர் மன்ற வேலையள்.
எந்த நேரமும் நீ வெளியாலைதான்.
மகளிர் மாநாடுகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் எண்டு எப்ப பார்த்தாலும் நீ வெளியாலை தான்.
கொழும்பு, கண்டி, திருமலை, மட்டக்களப்பு எண்டு சுத்தித்திரியிறாய்.
உங்கடை மன்றத்தின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள், அறிக்கைகள், உங்கள் படங்கள் எல்லாம் அடிக்கடி செய்திப் பத்திரிகைகளிலும் றேடியோவிலும் வரவேண்டும் எண்ட வெறியுடன் நீ செயல்படுகிறாய். உன்னை முன்நிலைப் படுத்தித்தான் உன்ரை செயல்பாடுகள். ஆனால் எங்கடை கிராமத்திலையுள்ள பெண்களின் வாழ்வில் எவ்வித முன் னேற்றமுமில்லை., உன்னைச் சுற்றியுள்ள ஒரு சின்னக் கூட்டம் பெண்கள்தான் முன்னேறியுள்ளதாகப் பாவனை செய் கிறார்கள்.
எனக்குப் பயித்தியம் எண்டு கூறி என்னை என்ரை சொந்தக்காரர்களிடமிருந்தும் என்ரை நண்பர்களிடமிருந்தும பிரித்து என்னைத் தனிமைப்படுத்திப் போட்டாய்.
இந்த ஊரையே முன்னேற்ற வேண்டும் எண்ட லட்சியத் துடன் போராடி வருகின்ற சங்கத்திலை நான் மாணவனாக இருந்த காலத்திலேயேயிருந்தே செயல்பட்டு வந்தன்.
எனக்குப் பயித்தியம் எண்டு சொல்லி என்னை என்ரை சமூகத்திலையிருந்து பிரித்துத் தனிமைப்படுத்திப் போட்டாய். என்னை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திப் போட்டாய். இண்டைக்கு நான் நிற்கதியான நிலையில்.
இண்டைக்கு தைப்பொங்கல். எங்கடை சொந்தக்காரர், அயலவர்கள், நண்பர்கள் எல்லாரும் ஒண்டு சேர்ந்து பொங்கல் நாளைக் கொண்டாடிக் கலகலப்பாய் இவ்வளவு காலமும் இருந்து வந்தம்.
நீ வந்த பிறகு எல்லாம் போச்சு இப்ப பகல் ஒரு மணி.
இண்டைக்கு காலை பத்து மணியளவில் மருது றோட் டாலை போறதை எங்கடை கேற்றடியிலை நிண்ட நான் கண்டன்.
‘மருது இஞ்சை வாரும்’
அது வரத் தயங்கியது.
நான்கட்டாயப்படுத்திக் கூப்பிட்டன்.
பதட்டத்துடன் வந்தது.
நீங்கள் எல்லாரும் ஏன் எங்கடை வீட்டுக்கு வாறேல்லை. பெரியம்மா உங்களை வரவேண்டாமெண்டு சொன்னவவா?
மருது பேசாமல் நிக்குது.
‘சொல்லும். பெரியம்மாவா வரவேண்டாமெண்டு சொன்னவ?‘
‘ஐயோ தம்பி, அப்பிடிச் சொல்லாதையும். அந்தப் புண்ணியவதியிட்டை இப்படிப்பட்ட அற்பத்தனம் எள்ளளவு மில்லை. உங்களை பரம்பரையிலை இப்படிப்பட்ட கேவல் மான, கொடுமையான மனப்பான்மையுடைய ஒருதரிட்ட கூடக்காணேலாது.
அப்ப ஆர்உங்களை வரவேண்டாமெண்டு சொன்னது. ‘சின்னம்மாதான் எங்களை வரவேண்டாமெண்டு சொன்னவ‘
‘ஏன் அப்பிடிச் சொன்னா?‘
‘அது எங்களுக்குத் தெரியாது தம்பி’
‘பெரியம்மாட்டை நாங்கள் முறையிட்டம்’
‘எங்கடை தம்பி நிம்மதியாயிருக்க வேணுமெண்டால் நீங்கள் ஒருத்தரும் இனி இஞ்சை வராதேங்கோ. இந்த விசயத்தை தம்பிக்கும் சொல்லிப்போடாதேங்கோ’
மண்டாட்டமாய் சொன்னா அந்தப் புண்ணியவதி அதுதான் நாங்கள் ஒருதரும் இஞ்சை வாறேல்லை.
‘என்ன சொல்லுறாய்? இது உண்மையா’
‘அது மாத்திரமில்லை தம்பி. பெரியம்மாக்கள் தாங்களாய் விரும்பி இந்த வீட்டை விட்டுட்டுப் போகேல்லை. சின்னம்மாவும் அவவின்ரை அண்ணன்களும் பெரியம்மாக்களுக்கு சரியான நெருக்கடிகள் குடுத்துக் கொண்டிருந்தினை. அவையின்ரை தொல்லையள் தாங்கேலாமல்தான் அவை உங்கடை விட்டை விட்டுப் போனவை. நீர் ஆத்திரப்படுவீர் எண்டுதான் பெரியம்மாக்கள் இந்தக் கொடுமைகளை உங்களுக்குச் சொல்லேல்லை. அதாலைதான் அவை இந்த வீட்டைவிட்டுப் போனவை
மருது மனம் வெதும்பிச் சொல்லிப்போட்டு போனான். இப்ப ஒரு மணி. நீங்கள் வந்து கேற்றைத் திறவெண்டு நிற்கிறியள்.
என்ன வெய்யில் வெக்கையாய்க் கிடக்கே?
நாலஞ்சு வரியமாய் எனக்கும் பெரியம்மாக்களுக்கும் எப்படி வெக்கையாயிருந்திருக்கும்? நாங்கள் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பம்?
இப்ப நேரம் ஒரு மணி. இவ்வளவு நேரமும் ஏறுவெய்யில்.
இனி இறங்கு வெய்யில்.
எங்களுக்கல்ல உங்களுக்கு.
என்ன றோட்டாலை போறவை வாறவை எல்லாரும் கேற்றுக்கு வெளியிலை கன நேரமாய் நிக்கிற உங்களைப் பாத்து கேலியாய் சிரிக்கினையா?
உங்கடை மானம் போகுதா?
உங்களுக்கு மானம் எண்ட ஒண்டு இருந்தால் தானே போறதுக்கு?
கொஞ்சம் பொறுங்கோ பெரியம்மாக்கள் வந்திடுவினை. எங்கடை தோட்டங்களையும் வயல்களையும் குத்த கைக்கு எடுத்து செய்யிறவையும் வந்திடுவினை.
பெரியம்மாக்கள் வந்திட்டினை.
மருது இளையவியாக்களும் வந்திட்டினை.
நான்தான் எல்லாரையும் வரச் சொன்னான்.
சரி. இப்ப நான் கேற்றை திறக்கிறன்.
எல்லாரும் வீட்டு விறாந்தையில்.
‘வீட்டுத் திறப்பை எடுத்துவா’
நான்.
‘ஏன்?‘
நீ.
‘திறப்பைக் கொண்டா, ‘நான் சொல்லுறன்.
நீ மரமாய் நிக்கிறாய்.
‘என்ன? எனக்கு திரும்பவும் விசராக்கிப்போட்டு தெண்டு நினைக்கிறியளா? ‘
நான் அமைதியாக மால் பக்கம் போறன்.
கொஞ்ச நேரத்திலை திரும்பிவாறன்.
என்ரை கையிலை மாடு சாய்க்கிற துவரம் கம்பு.
பதறிப்போய் நீ வீட்டுத் திறப்பை எடுத்துவாறாய்.
“எங்கடை வீட்டுத் திறப்பை பெரியம்மைாவிட்டை குடு’
‘ஏன்?’ திகைப்புடன் நீ,
‘இண்டையிலையிருந்து பெரியம்மாதான் எங்கடை வீட்டுக்குப் பொறுப்பு. அத்தோடை எங்கடை காணி,பூமி, குடுக்கல் வாங்கல் எல்லாம் அவவின்ரை பொறுப்பிலைதான்’.
‘அப்ப நான்?‘ பதறிப்போய் நீ
‘நீ மாத்திரமில்லை உன்ரை அம்மா, அண்ணன், அண்ணி அவையின்ரை இரண்டு பிள்ளையள் ஒருதருக்கும் இந்த வீட்டிலை இனி டமில்லை. எல்லாரும் வெளிக்கிட்டிட வேணும் ‘
உறுதியாய் நான் சொல்லுறன்.
‘ஏன்? ‘
அதிர்ச்சியுடன் நீ.
‘அது அப்படித்தான்’
‘அப்ப நாங்கள் எங்கை போறது? ‘
‘நீங்கள் எல்லாரும் அக்கராயனுக்குப் போங்கோ’
‘அங்கை ஏன்?’
அக்கராயனுக்கு மோகனதாஸும் வாறானாம். உன்னை அவன் அங்கை வரட்டாம்
‘மோகனதாஸா? ‘
‘என்ரை முறைமச்சாள்மார் மூண்டு பேரிலை ஒருத்தியை உன்ரை மோகனதாஸுக்கு கலியாணம் கட்ட வைக்கச் சொல்லி நீ என்னை எவ்வளவு பாடுபடுத்தினாய்? அதுக்கு நான் அடியோடை மறுத்திட்டன்.
‘கொலைக் குற்றத்துக்காக மறியலுக்குப் போன ஒருதனைக் கலியாணம் கட்ட எந்தப் பெண்தான் சம்மதிப்பாள்?
அக்கராயன் குளத்திலை மோகனதாஸின்ரை தகப்பனுக்கு நாப்பது ஏக்கர் வய்ல் காணியும் வீடு வளவும் கிடக்காம் ‘
‘மோகன் இன்னும் மூண்டு நாளையிலை அக்கராயனுக்கு வாறானாம்.’
‘வதனா. எண்ட பொம்பிளையையும் அக்கராயனுக்கு வரச்சொல்லி மோகன் கடிதம் எழுதியிருக்கிறானாம்’
‘ஆர் அந்த வதனா?’
பீதியுடன் அவள் கேட்கிறாள்
‘எனக்கெப்படித் தெரியும்?’
‘எனக்கொண்டும் புரியேல்லையே. ஒரு ருவேளை மோகன் எனக்குத் தெரியாமல் அந்த வதனாவை வைச்சிருந்தானோ? *
அவளுக்கு ஒரே குழப்பம் பதற்றம்.
‘வதனா நான் மறியலுக்குப் போக முந்தி, இரண்டு வரியங்களாய் நீ என்னை வைச்சிருந்தாய். அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை. இன்பமானவை.
‘அந்த இன்ப நாட்களின் இனிய நினைவுகளை என்ரை இதயத்தின் புனித இடத்தில் வைத்துப் பூசித்தபடியே ஆறு வரியங்களை நான் சிறையில் கழிச்சுவாறன் ‘
இன்னும் மூன்று நாட்களிலை நான் விடுதலையாகி விடுவன். அதன் பின் நான் நேராய் அக்கராய னுக்கு வாறன்
‘வதனா, நீயும் அங்கை வந்திடு ‘
‘என் அன்பே!’
‘பழையபடி நாங்கள் இன்பமாய் வாழ்வோம்! ‘
‘இந்தா,மோகன்ரை கடிதம்’.
‘வதனாவுக்குத்தானே அந்த மோகன் கடிதம் எழுதியிருக்கிறான். அப்ப நான் ஏன் அக்கராயனுக்குப் போக வேணும்?’
கடிதத்தை வாங்கியபடியே கேட்கின்றாள் அவள்.
‘அந்த வதனா நீதான்.’
– காலவெள்ளம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: செப்டம்பர் 2010, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |
