தெய்வத்தின் குழந்தைகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2025
பார்வையிட்டோர்: 532 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்பலவாணக் குருக்களுக்கும் தெய்வானை அம்மாளுக்கும் திருமணமாகி எட்டுப் பத்து ஆண்டுகளாகப் பிள்ளைகள் எதுவும் உருப்படியாகப் பிறக்க வில்லை. சில மூன்று நான்கு மாதங்களில் கருவழிந்தும் சில பிறந்து இரண்டொரு மாதத்திலும் இறந்தன. இருந்தும், அம்பலவாணக் குருக்கள் மனம் தளரவில்லை. ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நெகுழும்’ என்ற உண்மையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு விடாப்பிடியாகப் பல கோயில்களுக்கும் நேர்த்திக்கடன் வைத்தார். 

குருக்கள் அவர்களின் சந்ததியிலோ அல்லது தெய்வானை அம்மாளின் சந்ததியிலோ குழந்தைப் பாக்கியம் குறைவுதான். இந்தப் பயமும் குருக்கள் அவர்களின் மனத்திற்குள் இருந்து இருந்து நெருடிக் கொண்டிருந்தது. இருந்தும் தெய்வானை அம்மாள் இறுதியில் கருவுற்றாள். இந்தத் தடவை அம்பலவாணக் குருக்கள் மிகவும் கவனமாக இருந்தார். தெய்வானை அம்மாளும் கருவுற்று, தேவையான உணவுகளை உண்டு செக்கச் செவேலென்று பார்ப்பதற்குத் தக்காளிப் பழம் போல இருந்தாள். 

வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல பேறுகளோடு அழகாக இருக்க வேண்டுமென்று தெய் வானை அம்மாள் இரவு பகலாக மனத்திற்குள் பல தெய்வங்களை வேண்டிக் கொண்டாள். தான் பார்ப்பது, யோசிப்பது எல்லாம் அசிங்கமில்லாத துப்புரவானவைகளாகவும், அழகானவைகளாகவும் சந்தோசம் தரக்கூடி யதுமாக அமையவேண்டுமென்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டாள். 

வீட்டின் பின் புறத்திலுள்ள சாளரத்தைத் திறந்தால் அப்பால் தெரிவது சேரி. அங்கே வாழும் சக்கிலிப் பிள்ளைகளைக் கண்டால் தெய்வானை அம்மாளுக்குக் குமட்டிக் கொண்டு வரும். அந்தச் சக்கிலிப்பிள்ளைகளின் தோற்றம், தவளை தப்பிய குளிப்பு அழுக்கேறிய உடைகள், குளிப்பு, முழுக்கு ஒழுங்கு இல்லாததால் அந்தக் குழந்தைகளின் தேகத்திலிருந்து வரும் ஒருவகை நாற்றம். இத்தனையையும் தெய்வானை அம்மாள் அடியோடு வெறுத்தாள். பின்புறத்துச் சாளரத்தை அவள் திறப்பதே இல்லை. தனது பிள்ளையையும் இந்தச் சக்கிலிப் பிள்ளைகளோடு கதைக்கவோ அல்லது அருகில்தானும் செல்லவோ விடக்கூடாதென்று மனத்திற்குள் திடமான முடிவும் எடுத்துக் கொண்டாள். 

அம்பலவாணக் குருக்களும் தெய்வானை அம்மாளும் நினைத்துக் கொண்டிருந்த படியே ஒரு ஆண்பிள்ளை பிறந்தது. தெய்வானை அம்மாளுக்கு மனதில் மிகவும் சந்தோசம். குருக்களுக்கும் அப்படித்தான். 

மகனுக்கு பிரணதார்த்திஹரன் என்று பெயர் வைத்தார் குருக்கள். தெய்வானை அம்மாள் மகனை ‘ஹரன்’ என்று ஆசையாக அழைத்தாள்.

குருகுலத்திற்கு மகனை அனுப்பி வேதம் படிப்பித்தார் குருக்கள். வேத முறைப்படி குடுமி வளர்த்து உரிய காலத்தில் பூனூலும் போடப்பட்டது. வேதம் படிக்கும் அதே வேளையில் மகன் மேற்படிப்புப் படித்து பெரியதோர் அரசாங்க உத்தியோகத்தனாக வேண்டும் என்றும் அம்பலவாணக் குருக்களுக்கு மனத்திற்குள் ஆசையிருந்தது. எனவே, அதற்கான ஒழுங்குகள் பார்த்து ஊரில் உள்ள பெரிய பள்ளிக்கூடமொன்றில் மகனைச் சேர்த்துக் கொண்டார். 

பிரணதார்த்திஹரனும் குருக்களின் எண்ணப்படியே நன்றாகப் படித்து வந்தான். தூயகணிதம், அட்சரகணிதம், பௌதிகம் ஆய பாடங்களில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்தான். 

தெய்வானை அம்மாள் மகனைப் பற்றியும் அவன் சேர்ந்து திரியும் நண்பர்களைப் பற்றியும் மிகவும் கவனமாக இருந்தாள். பெரும்பாலும் ‘பிராமணப்’ பிள்ளைகளோடு, சேர்ந்து திரிவதையும் நட்புக் கொள்வதையுமே அவள் விரும்பினாள். சக்கிலிப் பிள்ளைகள் யாரேனும் அந்தப் பள்ளிக்கூடத்தில் மகனது வகுப்பில் படித்தாலும் அவர்களோடு எந்தவிதத் தொடர்பும் வைத்திருக்க வேண்டாமென்பது தெய்வானை அம்மாளின் திட்டவட்டமான கண்டிப்பான உத்தரவு. 

ஹரனின் வகுப்பில்தான் அரிச்சுனன் என்ற மாணவனும் படிக்கிறான். அவன் அந்த ஊராட்சி மன்றத்தில் வேலை செய்யும் நகரசுத்தித் தொழிலாளர்களின் கங்காணியான நடசேத்திரத்தின் மகனாகும். கங்காணி நட்சேத்திரம் சிறிது வசதி படைத்தவன். ஆதலால் மகனை அந்தப் பெரிய பள்ளிக் கூடத்தில் விட்டுப் படிப்பிக்கும் தகுதி இருந்தது. 

அரிச்சுனனும் மற்ற மாணவர்களைப் போலவே ஓரளவு சுத்தமாக ஒழுங்காக இருந்தான். அதுமட்டுமல்லாது கேத்திர கணிதத்தில் மிகவும் கெட்டிக் காரனாக இருந்தான். ஹரனிலும் பார்க்க்க மிகவும் கெட்டிக்காரன் என்றே சொல்லலாம். கேத்திர கணிதத்தில் எழும் சில பிரச்சினைகளை ஹரன் அரிச்சுனனிடம் கேட்டுத் தீர்த்துக் கொள்வான். 

ஒருநாள் அரிச்சுனனின் அப் பியாசப் புத்தகத்தை ஹரன் வீட்டிற்குக் கொண்டுபோய் ஏதோ எழுதவேண்டி இருந்ததால் அதை வீட்டுக்குக் கொண்டு சென்றான். இரண்டு நாட்கள் சென்றும் அதைத் திருப்பிக் கொடுக்காததினால் அரிச்சுனன் ஹரனின் வீட்டிற்குச் சென்று அப்பியாசப் புத்தகத்தை கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அரிச்சுனனை விபரம் கேட்டு அறிந்த தெய்வானை அம்மாள், அரிச்சுனன் நின்ற இடம் மட்டு மல்லாது வாசல் வரை மஞ்சள் தண்ணீர் தெளித்தாள். மனத்திற்குள் பெரியதொரு அருவருப்பாக இருந்தது அவளுக்கு. ‘கண்ட நிண்ட சாதியளை எல்லாம் வீட்டுக்குக் கொண்டு வாறதோ?’ என்றும் ஏசினாள். 

3

பிரணதார்த்தி ஹரனுக்கு படிப்பு முடிந்ததும் மட்டக்களப்பில் உதவி என்ஜினியராக வேலை கிடைத்தது. யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கு மகனை வேலைக்கு அனுப்புவது அம்பலவாணக் குருக்களுக்கு மனதில் என்னவோ போல் இருந்தது. 

ஏன், தெய்வானை அம்மாளுக்கும் மனம் இருண்டுபோய் இருந்தது. மட்டக்களப்பில் மகனைப் பாயோடு ஒட்டவைத்து விடுவார்கள் என்ற ஆதாரமற்ற பழைய கிழவிகளின் கதை தெய்வானை  அம்மாளை உலுக்கிக் கொண்டிருந்தது. இருந்தாலும், கூடிய சீக்கிரத்தில் பிரணதார்த்தி ஹரனுக்கு ஒரு நல்ல பிராமணக் குடும்பத்தில் முடிச்சுப் போட்டு விடுவதென்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டாள். அதுபோலவே இரண்டு வருடம் கழித்து மாதுளம்பழம் போல ஒரு பெண்ணுக்கும் ஹரனுக்கும் முடிச்சுப் போட்டே விட்டாள். 

ஹரன் தனது மனைவியை யும் கூட்டிக்கொண்டு மட்டக்களப்பிற்குப் போய் தனிக் குடித்தனம் நடத்தினான். இரண்டு வருடங்கள் குடும்பம் மிக அமைதியாக நடந்தது. அதன்பிறகு ஹரனுக்கும் மனைவிக்கும் சிலசில பிணக்குகள் வந்தன. 

பிணக்குகள் சூடுபிடிக்கும் போது, ஹரனின் மனைவி யாழ்ப்பாணம் போய்விடுவாள். ஒரு சில வாரங்களுக்கு ஹரன் தனியவே இருப்பான். 

பின்பு பெரியவர்களின் தலையீட்டால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். ஆனால், சுட்ட மண்ணும் பச்சைமண்ணும்போல குடும்பம் இருந்தது. 

இந்தக் குடும்பச் சண்டை ஹரனுக்கு மன நிம்மதியைக் குறைத்துக் கொண்டு வந்தது. அவன் மன நிம்மதிக்காக சிறிது சிறிதாக மதுவையும் பாவிக்கத் தொடங்கி விட்டான் 

தனது மனத்திற்கு நிம்மதியைத் தேடுவதற்கே மது அருந்துவதாக அவன் தனது மனத்தில் நினைத்து மனத்தை சாந்தப் படுத்திக்கொள்வான். மது அருந்தும் பொழுது பூநூலைக் கழற்றி யாருக்கும் தெரியாமல் ஒளித்து விடுவான். 

4

குடும்பச் சண்டையின் நிமித்தம் ஹரனின் மனைவி யாழ்ப்பாணம் போயிருந்தாள். ஹரன் தன்னை துன்புறுத்துவதே காரணமென்று தனது வீட்டிற்குச் சொன்னாள். ஆனால் குடும்பப் பிரச்சினைக்கு மூல காரணம் என்ன என்பதை இருவருமே வெளியில் யாருக்கும் சொல்ல வில்லை. 

ஒருநாள் ஹரன் கொழும்பிற்குப் போவதாக நான்கு நாட்கள் லீவு எடுத்தான். அதற்காக ‘றெயில்வே வாறன்ட்’ டையும் பெற்றிருந்தான். 

ஹரனின் வீடு நான்கு நாட்களாகப் பூட்டியிருந்தது. 

மூன்றாம் நாளே ஹரனின் வீட்டைச் சுற்றியிருந்தவர்களுக்கு ஏதோ பொறுக்கமுடியாத துர்நாற்றம் வீசியது. அயலில் உள்ளவர்கள் ‘இதென்ன பிண நாற்றம்’ போலல்லவா இருக்கின்றதென்று கதைத்துக் கொண்டார்கள். 

நான்காம் நாள் அந்த அயலில் உள்ளவர்களால் அந்த நாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த நாற்றம் எங்கிருந்து வருகின்றதென்று கண்டுபிடிப்பதில் ஈடுபட்டார்கள். 

அந்த நாற்றம் பிரணதார்த்திஹரனின் வீட்டுப்பக்கமாகவே இருந்து வருகின்றதென்று எல்லோரும் முடிவெடுத்துக்கொண்டு ஹரனின் பூட்டியிருந்த அறை யன்னலின் நீக்கலுக்கு இடையாக ஒவ்வொரு அறையாகப் பார்த்தார்கள்.

கடைசி அறையில் ஹரனின் பிரேதம் ஊதி, ஊனம் வழிந்து, புழுக்கள் நெளிந்த நிலையில் கிடந்தது. 

உடனே பொலிசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு பொலிசார் வந்து கதவைத் திறந்தார்கள். 

பொலிசார் அறைக்குள் புக முடியாதவாறு ஹரனின் பிரேதத்திலிருந்து நாற்றம் எடுத்தது. எனவே, பொலிசார் நகரசுத்தித் தொழிலாளர்களின் உதவியை நாடியே தமது ‘போஸ் மோட்ட’த்தை செய்து முடித்தார்கள். 

அதன் பின்பு பிரணதார்த்தி ஹரனின் பிரேதத்தை தெய்வானை அம்மாளிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் தெய்வானை அம்மாளாலோ அல்லது அம்பலவாணக் குருக்களாலோ அந்தப் பிரேதத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

கடைசியில் நகர சுத்தித் தொழிலாளர்களிடம் தெய்வானை அம்மாள் தஞ்சம் புகுந்தாள். ஆனால், அவர்களும் அந்தப் பிணத்திற்குக் கிட்டப் போக முடியாதென்று ஆளுக்கு ஒவ்வொரு போத்தல் சாராயம் வேண்டுமென்றார்கள். வேறு வழியின்றி அவர்களுக்குச் சாராயம் வாங்கிக் கொடுக்கப்பட்டது. 

சாராயத்தை நன்கு பருகிய பின்பே அந்த நகரசுத்தித் தொழிலாளர்கள் அதுவும் ‘ஹரி ஜனர்’கள் பிரணதார்த்தி ஹரனின் பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டிற்குச் சென்றார்கள். 

ஹரனின் பிரேதத்தை அந்த நகரசுத்தித் தொழிலாளர்கள் காவிக்கொண்டு சுடுகாட்டிற்குப் போகும் பொழுது, 

‘இதுதான் அந்தப் பிராமணப் பொடியன், பொஞ்சாதி யோடை கோவிச்சுக் கொண்டு நஞ்சு குடிச்சுச் செத்தது…மற்ற வேழையில் என்றால் எத்தனை கிருத்தியங்கள்…உந்தச் சக்கிலியரைப் பிரேதத்திற்குக் கிட்டப் போக விடுவாங்களா…’ என்று ஒரு கிழவி கதைத்தது தெய்வானை அம்மாளின் காதில் தெளிவாக விழுந்தது. 

தெய்வானை அம்மாளுக்கு, தான் முன்பு ஒருநாள், நகர சுத்தித் தொழிலாளர்களின் கங்காணி நட்சத்திரத்தின் மகன் அரிச்சுனன், ஹரனிடம் அப்பியாசப் புத்தகம் வாங்க வந்த பொழுது, அவனிடம் ஊர், பெயர் அறிந்து, அவன் நின்ற நடந்த இடமெல்லாம் படலை வரை மஞ்சள் தண்ணி தெளித்து ஆசூசம் போக்கியது ஞாபகத்துக்கு வரவே, இன்று, அதே ஹரனின் பிரேதத்தை நகர சுத்தித் தொழிலாளர்களாகிய ஹரிஜனர்களிடம் (தெய்வத்தின் குழந்தைகள்) அழுது அந்தப் பிணத்தைக் காவிக் கொண்டு போகும்படி மன்றாடிக் கேட்க வேண்டி இருக்கின்றதே என நினைத்து ‘ஓ’ வென்று கதறி அழுதாள். ‘பிராமணத்துவம்’ ஆசூசப்பட்டு விட்டது கவலையும் அவளுக்கு. 

பிரணதார்த்தி ஹரனின் பிரேதத்தை நகரசுத்தித் தொழிலாளர்களாகிய சிலுவைராசா, அந்தோனி, கோவிந்தன் இன்னும் நாலைந்து பேர் சுமந்து கொண்டு சென்றார்கள்.

மதுபோதையில் பிணநாற்றம் அவர்களுக்குத் தெரியவில்லை. 

அம்பலவாணக் குருக்க கண்களில் நீர்வழிந்தோட பிணத்திற்குப் பின்னால் வெகுதூரத்தில் தலை குனிந்தபடியே நடந்து கொண்டிருந்தார். 

பிரணதார்த்தி ஹரனுக்கும் அவனது மனைவிக்கும் உள்ள குடும்பத்தகராறின் மூலகாரணத்தை, ஹரனின் பங்களா விற்கு முன்வீட்டில் இருக்கும் ரகுநாதனைத் தவிர வேறொருவருக்கும் இதுவரை தெரியாது. இத்தகராறில் முக்கியபங்குண்டு. 

ரகுநாதனும் தெய்வத்தின் குழந்தைகளில் (ஹரிஜனன்) ஒருவன்தான் என்ற உண்மையை தெய்வானை அம்மாள் அறிந்து விட்டால் நாக்கைப் பிடுங்கிச் இல்லை செத்துவிடுவாளோ? அம்பலவாணக் குருக்கள் தான் என்ன செய்து விடுவார்? பூநூலைப் பிடுங்கி எறிந்துவிடுவாரோ?

– மல்லிகை, ஜனவரி 1975.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *