தூங்க 108 வழிகள்





வளர்ந்து வரும் புதிய ‘வளர் பதிப்பகம்’ நிலையத்திற்கு ஒரு அன்பர் போனில் விசாரித்தார்.

“ஹலோ, மிஸ்டர் சுகப்பிரியன் எழுதிய ‘நிம்மதியா தூங்க 108 வழிகள்’ புத்தகம் கிடைக்குமா?. எங்க அப்பார்ட்மண்ட்லே ஒரு 108 புக்ஸ் வேண்டியிருக்கு. எங்க ஊரிலே ஸ்டாக் இல்லேங்கறாங்க. அதான் கேட்கிறேன்”.
பதிப்பாளர் வியப்புடன் பதிலுரைத்தார். “எங்களுக்கே ஆச்சர்யம் சார். இத நாங்க எதிர்பாக்கலே. முதல் பதிப்பில ஆயிரம் புக் தான் பிரிண்ட் பண்ணினோம். அதையே அதிகமென்று நினைத்தோம். ஒரே மாசத்தில் தீர்ந்துப் போயிருக்கு. ரெண்டாவது பதிப்பு போடப் போறோம். நீங்க உங்க பேரு அட்ரஸ் கொடுங்க. நாங்களே உங்கள காண்டாக்ட் பண்றோம். உங்க விமர்சனம் எங்களுக்கு ரொம்ப உதவியாயிருக்கும். நூல் எழுதின ஆசிரியர் கூட இங்கே தான் இருக்காரு. நீங்களே அவர்கிட்டப் பேசுங்க. அவரும் சந்தோசப்படுவாரு”.
பதிப்பாளர் போனை அந்த நூல் எழுத்தாளரிடம் கொடுத்தார்.
“இது என்னோட மொதல் புத்தகம். இந்த புக்கு-க்கு இந்த அளவு டிமாண்ட் இருக்கிறதப் பார்த்து எனக்கு ரொம்ப ஆனந்தமா இருக்கு. ஒரு வருஷம் இரவும் பகலும் தூக்கமில்லாம ஆராய்ச்சிப்பண்ணி எழுதின ஆயிரம் பக்க சாதனை புத்தகம் இது. லாபம் எதுவும் வைக்காம மலிவு விலையில் ரிலீஸ் பண்ணியதால் இவ்வளவு சீக்கிரம் விற்பனை ஆகியிருக்கு. ஒன்னுத் தெரியுமா உங்களுக்கு? உலகத்தில 18 வயதுக்கு மேற்பட்டோரில் மூணுல ஒருத்தர் தூக்கமின்மையால் அவதிப்படுறாங்க. தூக்கமின்மை எப்படி எதனால வருதுன்னு அறிவியல் பூர்வமா இன்னும் கண்டுப்பிடிக்க முடியல. ஆண்களை விடப் பெண்கள் தான் இந்த தூக்கமின்மையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வியட்நாமை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் 60 வருசமா தூங்கவே இல்லையாம். ஆனா பெரிசா ஒன்னும் பாதிக்கப்படவும் இல்லையாம். தூக்கம் ஜாஸ்தி ஆனா என்னவாகும், கம்மியானா என்னவாகும் – இந்த மாதிரி நெறய தகவல் இருக்கு. ஆயுர்வேதத்தின் படி, நம்ம உடலில் 108 உயிர் சக்தி புள்ளிகள் இருக்கு. அதையெல்லாம் எப்படி நம்ம தூக்கத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்கேன். புக்-ல சொல்லியிருக்கிற ஒவ்வொரு டிப்ஸ் பத்தியும் நானே அனுபவிச்சி எழுதியிருக்கேன்னு சொல்லலாம். அந்த விதத்தில், என் படைப்பு நிறையப் பேருக்கு ரொம்பப் பயனுள்ளதாக இருக்கும்னு நினைக்கிறேன். உங்க சைடிலிருந்து புத்தகத்தைப் பத்தி நிறை-குறை எதாவது இருந்தாச் சொல்லுங்க. ரெண்டாவது பதிப்பில் அதைச் செயல் படுத்துவோம். பதிப்பாளரும் ஒத்துக்குவார்னு நினைக்கிறேன். உங்க ஆதரவு என்னைப் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்குக் கண்டிப்பா நல்ல ஊக்கமளிக்கும்”. மூச்சு விடாமல் பேசிய நூல் ஆசிரியர் கொஞ்சம் விட்ட இடைவெளியில் மறுமுனை அன்பர் பேச நுழைந்தார்.
“கண்டிப்பா !. என்னைப் பொறுத்த வரை ஒரே ஒரு குறை இருக்கு. அதை நிவர்த்திச் செய்ய நீங்க முயற்சிக்கணும். என்னென்னா, அது ரொம்ப சிம்பிள். உங்கப் புத்தகத்திற்கு நல்லதா உறை ஒன்னு போட்டுக் கொடுக்கணும். தலையணைக்குப் போடற உறை மாதிரி. உங்க புத்தகத்தைத் தலைக்குத் தலைகாணியா யூஸ் பண்ணா ரொம்ப நல்லா தூக்கம் வருதுன்னு நெறய பேர் சொல்றாங்க. உறை இருந்திச்சின்னா புத்தகம் ரொம்ப நாளைக்கு உழைக்கும் இல்லையா!. இந்த வேண்டுதல் மாத்திரம் நீங்க பரிசீலனைச் செஞ்சாப் போதும்”.
எழுத்தாளர் மூர்ச்சையாகி விழ, பதிப்பாளர் மறுமுனையில் இருந்த நபர் அப்படி என்னப் பேசியிருப்பார்? இவர் ஏன் இப்படி தடாலென்று மயங்கி விழறார் என்றுத் தவித்தவாறு மயக்கம் தெளிய வைக்கத் தண்ணீர் பாட்டிலைத் தேடினார்.
– குவிகம் டிசம்.2023 மின்னிதழில் வெளியானது.