தீக்குச்சிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 7,566 
 
 

கண் விழிக்கும் போது காலம் அழகாய்த்தானிருந்தது பூரணிக்கு.
வழக்கம்போல பம்பரமாக ஆடி, ஓடி உழைத்து மகனையும், மகளையும் கல்லுhரிக்கு அனுப்பிவிட்டு ஓய்வெடுக்க நினைக்கையில்தான் – காலிங்பெல் சத்தத்துடன் அவளைக் கலங்கவைக்கவே வந்தது ஏர்மெயில் தபால் ஒன்று.

நயம் துலங்கும் பொன்னின் மெருகைப்போல் கையில் எடுக்கும்போதே, உணர்ச்சிகள் துல்லியமாய்ப் பொங்கி, மலர்போல் அழகாக விரிந்து மணம் வீசும் தோழியின் கடிதம் தான் இன்று வாழ்வின் ஆணிவேரையே அசைக்கும் கோடரிக்காம்பாக அவள் நெஞ்சைப் பிளந்தது.

அதுவரை அவளின் எதிர்பார்ப்புகள், கற்பனைகள் அனைத்தும் பொடிப்பொடியாகி விட்டதொரு அதிர்ச்சியில் நெஞ்சம் தடக், தடக்கென அடித்துக்கொண்டது.

காலம் முழுதும் அவனுடன் சேர்ந்துவாழும் யோகம் கிட்டப்போகிறது என்று கனவுகளில் மிதந்துகொண்டிருந்தவளுக்கு எத்தனை பெருத்த வீழ்ச்சி.

மனம் தேய்ந்து போனாள் பூரணி. கண் இமைகளை நனைத்துக் கண்ணீரைச் சட்டென்று தடுத்துக்கொண்டாள்.

தோழி சொல்வது உண்மையாக இருக்குமா? பிரசாத் அப்படிப்பட்டவர் அல்லவே!

பெற்றவர், உற்றவர்களை எதிர்த்து என்னை இதய சிம்மாசனத்தில் ஏற்றியவராச்சே! அவரா வெளிநாட்டில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பார்? நம்ப முடியவில்லையே! ஆனால்… தோழியையும் நம்பாமல் இருக்க முடியவில்லையே!

பணம் சம்பாதிக்கத்தானே வெளிநாடு போனார், வேறொரு பெண்ணையுமா சம்பாதிக்கப்போனார்?

கேள்விகள் சுழித்து சுழித்து அவளையே இன்று சுழல வைத்தன.

அவரைச் சொல்லிக் குற்றமில்லை. கம்பெனி மானேஜரான அந்தச் சீமாட்டிதான் தன் பணபலத்தைக் காட்டி அவரைத் தன் வலையில் விழச் செய்திருக்கிறாள். அப்படிப் பட்ட பெண்கள் இங்கு மட்டுமல்ல, வெளிநாட்டிலும் விரிந்து கிடக்கிறார்கள் போலும்.

இப்பொழுது என்ன செய்வது? யாருக்கும் தெரிந்தால்… குறிப்பாகப் பிள்ளைகளுக்குத் தெரிந்தால் வெட்கக்கேடு அல்லவா? ஒருபெண் எதையும் விட்டுக் கொடுப்பாள் கணவனைத் தவிர, நினைவின் சூட்டில் மனம் வலித்தது. சோபாவிலேயே படுத்தபடி தன் நிலையைப் பற்றிய பிரக்ஞை உணர்ச்சியின் வேதனையோடு அப்படியே இருந்தாள். அமுங்கிய ஒலியற்ற குரலில் அழுதாள்.

அந்த அழுகுரலில் அவளது புண்பட்ட இதயத்தின் வேதனை முழுவதும் பொங்கி வழிந்தது. மனதிலே கவிந்திருந்த சோக உணர்ச்சியால் சுற்றுப்புறத்தில் இருந்து பழகிப் போன பொருள்கள் அனைத்தும் உயிரற்றவையாகவும், அன்னியமாகவும் தோற்றம் அளித்தன.

பின் ஆவேசம் கொண்டவளைப்போல் எழுந்து நின்றாள். இப்போது என்ன? என்று தனக்குத் தானேக் கேட்டுக் கொண்டாள்.

பேசாமல் இந்தமுறை அவர் வந்த பிறகு மறுபடி அங்கு போகவிடாமல் தடுத்துவிட்டால்… அதுதான் சரி. பணம் இன்று வரும் நாளை போகும். அதற்காகக் கணவனையா விட்டுக் கொடுக்க முடியும்? நல்லவேளை சமயத்தில் இந்த விவரத்தை எழுதினாள் தோழி.

அவர் வர இன்னும் ஒருவாரம் இருக்கிறது. வரட்டும்.

ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்து தன் வீட்டு வேலைகளில் ஈடுபட்டாள்.

அடுத்த இரண்டுநாளில் உறவினர் கூட்டம் பிரசாத்தை வரவேற்க வீட்டை நிறைத்தது.

விருந்தும், உற்சாகச் சிரிப்புகளும் பூரணியின் நெஞ்சுக்குக் களிப்பூட்டவில்லை. சஞ்சலத்தோடேயே வேண்டா வெறுப்பாக நடமாடிக் கொண்டிருந்தாள்.

உறவினர்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அமர்ந்தார்கள். பூரணி மட்டும் சமையற்கட்டில் ஏதோ உருட்டிக் கொண்டிருப்பதை பார்த்த அவளின் குட்டி நாத்தனார் சொன்னாள்.

“அண்ணி, வந்து உட்காருங்க, மெதுவா ஒழிச்சுப் போட்டா போறது, மணி இரண்டு தானே ஆறது”

பூரணி ஒருவித மனச் சுமையுடன் மரியாதைக்காக அவர்களுடன் வந்து அமர்ந்தாள்.

“ஏன் அண்ணி, அண்ணன் இந்தத் தடவை என் கணவருக்கு ஒரு எலக்ட்ரிக்ஷாப் வைச்சுத்தர்றதா எழுதியிருக்கு” என்றாள் உற்சாகத்தோடு.

அதற்குள் பூரணியின் தகப்பனார் குறுக்கிட்டார்.

“ஆமாம்மா, மாப்பிள்ளை உன் தங்கை மைதிலியின் கல்யாணச் செலவைத் தானே ஏத்துக்கிறதாவும், மாப்பிள்ளை பாருங்கன்னும் எழுதியிருக்கிறாரம்மா”

மைத்துனர் சாரங்கன் “எனக்கு எப்படியாவது லஞ்சம் கொடுத்து இஞ்சீனியர் சீட் வாங்கிடலாம்னு உறுதியா எழுதியிருக்கார் அண்ணி”

மகனும் மகளும் தங்களுடைய எதிர்பார்ப்புகளையும் விழி மலர, மலரச் சொன்னார்கள்.

ஆளுக்கு ஆள் தங்கள் அபிலாட்சைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூரணியின் கொதிப்பை அறியாமலேயே கொட்டிக் கொண்டிருந்தார்கள்.

அவளால் எல்லோருக்கும் முன்னால் அழமுடியவில்லை. இவர்களில் ஒருவராவது அவர் நல்லபடி வரவேண்டுமே என்று கவலைப்படுகிறார்களா? இவர்களுக்கு வேண்டியது எல்லாம் அவரின் சம்பாத்தியம், என் உணர்வுகளை யாராவது உணருகிறார்களா?
அவள் உள்மனம் வேதனையோடு முணுமுணுத்தது.

உண்டு, கொழுத்து, மதர்த்துப்போன உதவாக்கரை மனிதர்களின் முட்டாள்தனமான நப்பாசைகளை எல்லாம் பூர்த்தி செய்து வைப்பதற்கா அவருடைய உழைப்பையும், என் வாழ்க்கையையும் பணயம் வைப்பது?

மௌனமாக அமர்ந்திருந்த பூரணியிடம் அவளின் எண்ண ஓட்டத்தையறியாமலேயே நாத்தனார் சொன்னாள்.

“என்னவோ அண்ணி, நீங்க தான் எங்க குடும்பத்திற்கெல்லாம் விளக்கேற்றி வைக்கறீங்க.”

பற்றில்லாத பந்தங்களே, என்விளக்கை வித்திட்டுல்ல உங்க விளக்கை ஏற்றி வைக்கிறேன்”, மனசுக்குள்ளேயே குமுறினாள் பூரணி.

அத்துடன் நில்லாது குரூரமாக மற்றவர்களை ஆழம் பார்க்க எண்ணினாள்.

“எனக்கு எழுதிய லெட்டரில், எல்லோருக்கும் ஆசை காட்டிவிட்டேன். அதை நிறைவேற்றமுடியாது போலிருக்கு மறுபடி நான் வெளிநாடு போவதாக இல்லை. உன் பக்கத்திலேயே இருக்க விரும்பறேன்” என்று கடிதம் எழுதியிருந்தார்.

“உண்மையாகவா?!” ஏக குரலில் அதிர்ந்தார்கள் எல்லோரும்.

பூரணி ஒரு கணம் எல்லோருடைய முகத்தையும் ஊடுருவிப்பார்த்தாள். அப்பட்டமான ஏமாற்றம் அனைவரது முகத்தையும் இருட்டாக்கியிருந்தது.

அனைவரும் முகத்தைத் துhக்கிவைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

பூரணிக்கு அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உற்சாகமின்றி உறவினர்கள் நெருப்பின்மேல் அமர்ந்தது போல் இரண்டு நாட்கள் அமர்ந்திருந்தார்கள்.

பிரசாத், ஏராளமான சாமான்களோடு வந்து சேர்ந்தான்.

அவனைப் பார்த்ததும் தான் உறவினர் அனைவருக்குமே உற்சாகம் வந்தது. அவன் சொன்னபடியே எல்லோருக்கும் பண உதவி செய்ததும் எல்லையற்ற மகிழ்ச்சியோடு பூரணியையும், பிரசாத்தையும் வாழ்த்திச் சென்றார்கள்.

பூரணி சிந்தித்துப் பார்த்தாள். தன்னிடம் அவன் காட்டும் அன்பில் எள்ளளவும் குறைவில்லை. அதுபோதும் அவளுக்கு. அவனால் மற்றவர்களுக்கு நன்மை கிடைக்கும்னா அதைத்தடுக்க அவளுக்கென்ன உரிமை இருக்கிறது?

அவனாக அவளிடம் வெளிநாட்டுப் பெண்ணைப் பற்றிப் பேசவில்லை. தானாக அதைக்கேட்டு ஏன் அவனையும் துன்புறுத்தி, தன் இன்பத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் இந்தச் செயலக்காக நான் கணவரை வெறுத்தால் அவரிடம் எனக்கு அன்பு இல்லையென்றல்லவா ஆகிவிடும்.

எதனாலும் கசந்துபோகாமல், எதனாலும் வெறுப்படையாமல், எதையும் ஏற்று, எல்லாவற்றுக்குமாகப் படர்ந்து விரிவதுதானே அன்பு.

ஒரு முடிவுடன் தோழிக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினாள்.

அன்புள்ள மீனா,
தக்க சமயத்தில் எனக்குக் கடிதம் எழுதி உண்மை நிலையைத் தெரிவித்திருந்தாய், மிக்க நன்றி! என்ன செய்வது ஒரு விளக்கை ஏற்றணுமின்னா தீக்குச்சி எரிந்து தானே ஆகணும். அதைப்போல் தான் நானும். அவரால் நாலைந்து குடும்பங்கள் வாழ்கிறது. அதை ஏன் தடுக்கவேண்டும் பக்கத்திலுள்ள செடிகள் எல்லாம் தனக்கு ஊற்றுகிற நீரை உறிஞ்சுகிறதேன்னு மரம் செத்தா மடியுது? இல்லே, எரிஞ்சு போகுதா? கேவலம் தாவரத்துக்குள்ள பரந்தநோக்கு கூட மனிதர்களுக்கு இல்லாமல் இருக்கலாமா? நாட்டிலுள்ளவர்கள் சுதந்திரமா வாழணும்கிறதுக்காகப் பல பெரியோர்கள் செய்த தியாகத்துக்கு முன்னால் என் தியாகம் துhசுக்குச் சமானம். அத்துடன், அந்தப் பெண்ணிடம் ஏற்பட்ட உறவுபற்றி அவர் என்னிடம் எதுவும் கூறவில்லை. நானாக அதைக்கேட்டு அவரை ஏன் அமைதியிழக்கச் செய்யவேண்டும்? வளர்ந்த பிள்ளைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையைத் தொலைக்க ஏன் நான் முயலவேண்டும். இந்த ரகசியம் நம் மனதோடு மண்ணாகட்டும்! என் பிள்ளைகளுக்குத் தெரியவேண்டாம். இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் என் நிலையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனென்றால் கௌரவம் கருதி! கௌரவம் மட்டும் அதற்குக் காரணம் அல்ல, சொல்லி ஒன்றை சரிப்படுத்த முடியாது என்பதாலும் தான். ஆம், மீனா. நானும் அதை எண்ணியே அமைதியடைகிறேன். ஆற்ற முடியாததைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்! சரிதானே!
இப்படிக்கு உன் அன்புத்தோழி
பூரணி.

பூரணி பழைய பூரணியாகவே வளையவந்தாள். கணவனிடம் அன்பைச் சொரிந்தாள். வேண்டாத பழைய நினைவுகளைத் துhர எறிந்தாள். இயல்பாக வாழ்க்கைத் தேரை உருட்டினாள்.

பிரசாத் ஆறுமாதம் முதல் மனைவியோடு கழித்து விட்டு இரண்டாவது மனைவியைப் பார்க்க வெளிநாடு புறப்பட்டுச் சென்றான்.

மறுபடி ஆத்திரமும் கோபமும் அவளை அலைக்கழித்தது. இருப்பினும் பிள்ளைகளின் முகத்தைக் கண்டு ஆறுதலாகிப் போனாள். வேறென்ன செய்யமுடியும் அவளால்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *