தினசரிப் பிழைப்பு
கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2026
பார்வையிட்டோர்: 223
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இந்த ஒலியுடன் ‘கடகட’ என்ற சக்கர ஓசையும் கலந்தது. குதிரை தலையை ஆட்டிய வண்ணம் ‘ஜல ஜல்’ கீதம் பாடிக்கொண்டு அடிமேல் அடி எடுத்து வைத்தது. அதன் கானத்திற்குப் பின்னணிபோல் இருந்தது வண்டி உருளும்பொழுது எழும் ஓசை.
தீனியே கண்டறியாத தெனாலிராமன் குதிரை யைப்போல் விளங்கிய அந்த ஜந்துவின் உடலிலே அந்த வண்டியை இழுப்பதற்கும் சக்தி இருக்கிறதா என்று எண்ணத்தூண்டியது அதன் தோற்றம்.
அதைக் கவனியாமலே ஹைஹேய்!’ எனச் சவுக் கைச்சுண்டி ‘சுளீர்’ எனும் ஒலியை எங்கும் பரப்பி னான் வண்டிக்காரன். இன்னும் ஒருள்…. ஓராள்… டவுனுக்கு வரீங்களா ஐயா?’ என அவன் வாய் பல் லவி பாடிக்கொண்டிருந்தது.
வண்டிக்குள் மூன்றுபேர் இருந்தனர். அவர்கள் மூவரும் சற்று படுத்து வண்டி முழுவதையும் அடைத் துக்கொண்டு இடமின்றித் திண்டாடினார்கள். அவர் களில் ஒருவர் முணுமுணுத்தார். இன்னும் ஒரு ஆளா! அட ஆண்டவனே!?
‘அவனுக்கு ஆசைதான், ஆனால் அவன் குதிரை தான் ஊர்போய்ச் சேருமோ என்னவோ?’ என்றார் மற்றொருவர்.
மூன்றாம் ஆசாமி, ‘குதிரை இப்பவோ இன்னும் செத்த நேரத்தலோன்னு இருக்கு, சாகப்போறாம் பிலே! குதிரை வளர்க்கிறானாம் குதிரை!’ என முனங்கினார்.
‘கிடைக்கிற காசைக் குடியிலே தொலைச்சால்? குதிரைக்குத் தீனி வாங்கிப்போட்டான்னா….’
‘அதுதான் கிடையாதே! உழை, உழை, உடல் ஓய உழை; உழைக்கத்தான் உரிமை உண்டு உண்டு களிக்கவன்று. இதுதான் இவங்க குதிரைகளிடம் காட்டும் கொள்கை அது உழைக்கிது. கொஞ்சம் கூடத் தீனி போடவேணாம்? என்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார் இரண்டாவது நபர். அவர் ‘சமதர்மம், அபேதவாதம்’ என்றெல்லாம் சொல்கிறார்களே அதன் காற்றை புத்தகங்களின்மூலம் உணர்ந்தவர் என்பதை அவரது பேச்சே எடுத்துக்காட்டியது.
இது ஒன்றையும் காதில் வாங்கிக் கொள்ளாது வன்போலவே ஹைஹேய்…. ஓராள்… அரையணா டவுனுக்கு!’ என்று ஓலமிட்டுக் குதிரையையும் சாட்டையால் தட்டிக்கொண்டிருந்தான் வண்டிக்காரன்.
வண்டி ‘கடகட’ ஒலி எழுப்ப, குதிரை தலையை அசைத்துக்கொண்டு தனது சங்கீதத்திலேயே ஆழ்ந்துவிட்டதுபோல ‘ஜல்…ஜல்….ஜலஜல்’ என்ற சப்தத்திற்கிசைய காலடி எடுத்துவைத்து நடந்தது.
“ஏய் வண்டியைக் கொஞ்சம் ஓட்டு. என்னப்பா அசையுது!” என்று குரல் கொடுத்தார் உள்ளே இருந்த ஒருவர்.
அதற்குப் பதிலாக ‘ஹைஹேய்’ என்ற அதட்டலே அதிகரித்தது. வண்டி அதேகதியில்தான் நகர்ந்தது குதிரையும் அதே நடையில்தான் அசைந்தது, ‘ஜல் ஜல் ஜலஜல்’ நாதத்துடன்.
‘அவன் எங்கே சார் கேட்கப்போறான்! இன்னும் அரையணா கிடையாதான்னு கொட்டாவி விடுவான் பேராசை!’ என்றார் ‘தோழர்’. இவர்களது பேச்சு வண்டிக்காரன் காதில் விழாமல் இல்லை. ஆயினும் அவன் மனம் வேறு எங்கோ சுழன்றுகொண்டிருந்தது.
‘அரையணா….ஆமாம். அரை அணாத்தான்? இவர் களுக்கு பெரிதல்ல என் வீட்டிலே ஒரு அரை அணு எவ்வளவு ஒளி வீசும் என்பது இவர்களுக்குத் தெரி யுமா? உயிர் அற்றதுபோன்ற தேகத்திலே அது எவ் வளவு உணர்வு புகுத்தும் என்பதுதான் இவர்களுக்குத் தெரியுமா? ஹூம்….’ என அவன் இருதயம் குமுறியது.
அவன் மனத்திரையிலே எத்தனையோ காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. அவன் காதிலே உணர்ச்சியில் பிறந்த புலம்பல்கள் எவ்வளவோ எதிர்நாதம் செய்தன. அவன் உள்ளமே உணர்ச்சியுடன் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
***
அவன் கண்முன் ஒரு மங்கலான காட்சி. ஒரு சிறு குடிசை அழுக்குத் துணிகளும் தகர டப்பாக்களும் தாறுமாறாகச் சிதறிக் கிடக்கின்றன. ஒரு ஓரத்திலே படுக்கையில் கிடக்கிறது ஒரு உருவம். வெறும் எலும்புக்கூடுபோன்ற தோற்றம். சிறிது நேரத்திற்கு ஒரு முறை ‘அம்மா…. அப்பா ….’ என்ற முனகல் எழுவதே அவள் உயிருடன் கிடக்கிறாள் என்பதைக் காட் டுகிறது. மாலைநேரம். இருள் எங்கும் சூழ ஆரம்பிக்கும் வேளை. அவன் விளக்கு ஏற்றலாம் என்று தீப்பெட்டியைத் தேடுகிறான்.
பெட்டியில் குச்சி இல்லை. பக்கத்துத் தெருக் கடைக்குப்போய் இரண்டு குச்சிகளை ‘ஓசி’ வாங்கி வந்து பார்த்தால், விளக்கிலே எண்ணெய் இல்லை. யார் டன் கொடுப்பார்கள்? கிடந்த எண்ணெயில் திரியை கனைத்து விளக்கை ஏற்றினான்.
அவன் இருமும் சப்தம் கேட்டது. அவளருகே ஓடி “செல்லம்….செல்லம் என்னம்மா செய்கிறது?” என இரக்கமும், கனிவும் தொனிக்கும் குரலில் விசாரித்தான். அவள் குடிப்பதற்கு ஏதாவது கேட்டாள்.
கஞ்சி இருக்கிறதா என்று சட்டியைப் பார்த்தான். கஞ்சி இல்லை.வெந்நீர் மாத்திரம் கொடுக்கும் பொழுது அவன் இதயம் துடித்தது. அவ்வேளையிலே உள்ளே ளே ஓடிவந்த அவனது குழந்தை அன்பாக “அப்பா, எனக்கு சீனிமிட்டாய்” என்று கேட்டது.
“போ மூதேவி! மிட்டாயாம்? இங்கே கஞ்சிக்கே ‘லோல் போடுது’ இந்த லெக்ஷணத்தில் மிட்டாய்! தூ….” என எரிந்து விழுந்தான்.
குழந்தை என்ன கண்டது? “எனக்கு மிட்டாய் வேணும்….ஊம்….ஊம்” எனக்கோரக்குரல் எடுத்து அழ ஆரம்பித்தது.
அவனுக்கு ஆத்திரம் கிளம்பியது “நான் சொல்லுறேன் நீ அழுவுறையா?’ என ஓங்கி அறைந்துவிட்டான் குழந்தையை.
‘ஐயோ …ஐயோ! வேண்டாம்’ எனப் பொறுமினாள் தாய்.
குழந்தை தரையில் படுத்து விம்மி விம்மி அழு தது. சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கி விட்டது. அதையே கவனித்த தாயின் அன்பும் இரக்கமும் கண் ணீராக கரைந்து ஓடியது. தாயையும் குழந்தையை யும் பார்த்துக்கொண்டிருந்த அவன் உள்ளமும் ரத்தக் கண்ணீர் சிந்த ஆரம்பித்தது. அருகில் எண்ணெய் இல்லாது உள்ளே போய்க்கொண்டிருந்த மங்கிய விளக்கைப்போல, சோகத்தால் நிறைந்த அவனது உள்ளமும் சாம்பிக்குவிந்தது.
‘அட கடவுளே, தினசரி இதே பிழைப்புத்தானா!’ என ஓலமிட்டது அவன் மனம்.
***
திடீரென குதிரைவண்டிக்காரன் கனவைத் துரத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ‘ஜல்ஜல் ஜல ஜல்’ என்று நாதத்திற்குத் தக்க நர்த்தனமிட்டு நடந்த குதிரை ‘சடக்’ எனக் கீழே விழுந்தது.
‘ஐயோ’ என்று அலறியவண்ணம் கீழே குதித் தான் வண்டிக்காரன். அதே வேளையில் பின்பக்க மாக ஒருவர் வெளியே தாவினார். உள்ளே இருந்த இருவரும் ஒருவர்மேல் ஒருவர் இடித்துக்கொண்டு வெளியே உருண்டனர். அவர்களுடன் போட்டி இடு வதுபோல, ஒருவர் கூடையில் வைத்திருந்த ஆரஞ்சு பழங்கள் உருண்டு சிதறின. ரோட்டில் இந்தச் சம்ப வம் நடந்தது என்றால் கேட்கவேண்டுமா? சிறு கூட்டம் கூடிவிட்டது.
‘ஒண்ணுமில்லே வாரு அறுந்துபோச்சு’ என்று சொல்லி குதிரையைத் தூக்கி நிறுத்தினான் அவன்.
‘நீயோ, உன் குதிரையோ! வண்டியும் லட்சணமும்! இதிலே ஏறியதே தவறு. ஏதோ பிழைத்தோம். இந்தா தொலை’ என்று அரையணாவைக் கொடுத்து விட்டுக் கம்பி நீட்டினார் பின்புறமாகக் குதித்தவர்.
மற்ற இருவரும் ‘வண்டியில் ஏறலாமா, வேண் டாமா?’ என யோசித்து நின்றனர். அப்பொழுது ஒருவருடைய கண்களும் மனமும் சிதைந்த ஆரஞ்சுப் பழங்களையே வட்டமிட்டன. அவற்றைப் பொறுக்கிக் கொண்டிருந்தார் அவர். அவர்களது அதிர்ப்தி முணுமுணுப்பாக வெளிவந்தது. வேடிக்கை பார்த்து நின்றவர்களும் பலபல புலம்பினர்.
வண்டிக்காரன் குதிரையைத் திரும்பவும் மாட்டி வண்டியைச் சரிப்படுத்தினான். ‘ஐயா, சும்மா ஏறுங்க’ என்றான். அவர்கள் தயங்கவே ‘சும்மா ஏறுங்க சாமி, இனி பயமில்லை’, என்று உற்சாகப்படுத்தினான்.
அவர்கள் முனங்கியபடியே வண்டியில் ஏறினார்கள். ‘சுளீர்’ என்று சாட்டையடி. ‘கடகட’ என வண்டி மீண்டும் கிளம்பியது. முன்போலவே குதிரை தலையை ஆட்டிக்கொண்டே அசைந்தது “ஜல்…ஜல் ….’ நாதத்தை ஒலிபரப்பிய வண்ணம்.
இவற்றுடன் அவன் குரலும் கலந்தது – ஓராள்…. ஓராள்…. டவுனுக்கு வாரீங்களா? அதைக் கவனியாமல் குதிரை ‘ஜல் ஜல்’ கானத்திற்கு அபிநயம் பிடித்த வண்ணம் நடை போட்டது வண்டியும் உருண்டு கொண்டே இருந்தது. வண்டிக்காரன் மனமும் அவனது வாழ்வுப்பாதையில் சுழல ஆரம்பித்தது. அது தானே அவனது தினசரிப் பிழைப்பு.
– இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளில் சில 1942ம் வருஷம் எழுதப்பட்டவை, 1943ல் சிலவும், 44, 45ல் மற்றவையும் உருவானவை.
– நாட்டியக்காரி, முதல் பதிப்பு: 1964, கவிக்குயில் நிலையம், தென் திருவிதாங்கூர்.
