தாம்பூலம் – ஒரு பக்க கதை





ஓர் ஊரில் கணவனும் மனைவியும் சந்தோசமா வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இருவரும் காட்டுக்கு விறகு வெட்ட போவர்கள். வெட்டிய விறகினை ஊருக்குள் சென்று விற்று வருவார்கள்.
அப்படி ஒருநாள் விறகு வெட்ட காட்டுக்குள் போகும்போது, அங்கு ஒரு இளைஞன் ஒருவனும் விறகு வெட்டிக்கொண்டிருந்தான். தம்பதிகளுக்கு அவ்வவ்போது உதவியும் செய்த வந்தான் அந்த இளைஞன். நாட்களும் சென்றன. மனைவிக்கு இந்த இளைஞன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
கணவன் ஒரு பக்கத்தில் விறகை வெட்டிக் கொண்டிருக்கிறான். மனைவியும் அந்த இளைஞனும் இன்னொரு பக்கம் விறகு வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இளைஞன், வாயில் வெற்றிலை தாம்பூலம் போட்டுக் கீழே துப்புகிறான். இளைஞனுக்குத் தெரியாமல் கீழே கிடந்த வெற்றிலை தாம்பூலத்தை மனைவி எடுத்து தன்னுடைய வாயிலே போட்டுக்கொள்கிறாள்.
மனைவியின் செயலைக் கணவன் பார்த்து விடுகிறான்.
“உனக்கு அவன் மேல் விருப்பம் உண்டெனில், அவனும் உன்னை ஏற்றுக்கொண்டால் நீ அவனுடன் செல்லலாம்” என்றான் கணவன்.
அவர்கள் இருவரும் சம்மதம் தெரிவிக்கிறார்கள். மனம் உடைந்து போகிறான் கணவன்.
கணவன் அந்த இளைஞனிடம்,
“அவள் செத்துப்போனதும் கண்டிப்பாக எனக்கு சொல்லி அனுப்பு” என்று அவர்களை அக்காட்டிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான்.
அவர்கள் இருவரும் கொஞ்ச நாட்கள் சந்தோசமாகக் குடித்தனம் நடத்துகிறார்கள். ஒருநாள் அந்தப் பெண் உடம்பு சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறாள். கணவனுக்குச் செத்துப்போனதைச் சொல்லி அனுப்பப் படுகிறது. கணவனும் கையில் ஒரு கோடரியோடு வருகிறான்.
படுத்திருந்த அவளுடையத் தலையை ஒரே வெட்டாக வெட்டி இரண்டாகப் பிளக்கிறான். ஒருப்பக்கம் அழுகிய நிலையில் மூளையும் நெருப்பு கங்குகளும் இருந்தன. இன்னொருப் பக்கம் பூவும் குங்குமமும் மஞ்சளும் இருந்தன.
அவள் வாழ்ந்த இரண்டு வாழ்க்கையும் வெட்டிய தலையில் பிரதிப்பலித்தன.
ஆசிரியர் குறிப்பு:
கொரோனா வைரஸ் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பல மாதங்களுக்குப் பிறகு அம்மா அப்பாவுடன் நீண்டதொரு உறவு. அப்போதுதான் அம்மாவிடம் கதை கேட்க ஆரமித்தேன். சின்ன வயசில் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையென கடந்த பத்து நாட்களிலும் பத்துக் கதைகள் கேட்டேன். இந்தக் கதைகள் யாவும் என்னுடைய கற்பனையில் உருவானவை அல்ல என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இக்கதைகள் முழுவதும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சொல்லக்கூடிய கிராமத்துக் கதைகளே ஆகும். கதைகள் பெரும்பாலும் சின்னச்சின்ன கதைகளைக் கொண்டே அமைந்துள்ளன.