தாதன்




முன்னும் பின்னுமாக சுற்றி மிக அழுத்தமாக தலைப்பாகையைக் கட்டினார். மேலே கம்பளியைப் போர்த்திக் கொண்டார். கயிறு கட்டியிருந்த சேகண்டியை ஒரு பக்கத்தோளில் மாட்டியவர், மறு தோளில் தொங்கும் துணிப் பைக்குள் வெண்ணிற சங்கையும், சேமக்கலத்தை இசைப்பதற்குரிய தடித்த தேக்குக் குச்சியையும் வைத்தார்.

நீண்ட மூங்கில் கம்பையும், ஆறு செல்போட்ட பெரிய டார்ச் லைட்டையும் எடுத்து கொண்டு புறப்பட்டார். வீட்டை விட்டு வெளியேறும் போது இவ்வளவு நேரமும் உள்ளுக்குள்ளே அலை வீசிக் கொண்டிருந்த சோகம் தணிந்து பெருமாள் பண்டாரத்தின் தோற்றத்தில் ஒரு வித கம்பீரத் தன்மைக் கூடியிருந்தது. டயர் செருப்புகள் சரட் சரட்டென்று சப்தமெழுப்ப நடந்து போகும் கணவனை சிறிது நேரம் பார்த்திருந்து விட்டு லட்சுமி கதவை மூடி படுத்து கொண்டாள்.
அத்தெருவின் திருப்பத்தில் அமைந்திருந்த சிவாலயத்தின் முன்பாக வந்ததும் பெருமாள் நின்றார். பூட்டியிருக்கும் கதவுகளுக்கு முன்னால் பெரிய கற்பூரக் கட்டியொன்றை கொளுத்தி வைத்து கும்பிட்டு விட்டு வழக்கமான தனது பணியைத் தொடங்கினார். கடும் பனிக்காற்று கம்பளியைக் கடந்து அவருடலை நடுங்க செய்தது.
அகன்ற வீதியில் நடக்கத் தொடங்கியதும் சங்கெடுத்து ஊதினார். அந்த ”பூம் ” மென்ற பெருஞ்சத்தம் இருளைக் கிழித்து கொண்டு நாலாதிசையிலும் பாய்ந்தோடியது. சேகண்டியை எடுத்து ” டண் டண் டண் ” என்று அடித்ததும் சிதிலமடைந்த ஒரு வீட்டின் கட்டைச்சுவரில் உட்கார்ந்திருந்த பூனையொன்று வாலைத் தூக்கிக் கொண்டு தெறித்தோடியது. அத்தெருவைக் கடந்து அடுத்த தெருவுக்கு சென்றபோது அங்கே படுத்திருந்த ஒருசில நாய்கள் எழுந்து குரைக்கத் தொடங்கின. வருவது பெருமாள்தான் என்பதை தெரிந்ததும் அவை சாதுவாக மறுபடியும் படுத்து விட்டன,
இவ்வூரில் ஊதிவிட்டு பக்கத்து ஊருக்கு நடக்க ஆரம்பித்தார். பல வருடங்களுக்கு முன்னால் இவ்வூரில் மட்டுமே அவர் ஊதிக்கொண்டிருந்தார். தாதன்களின் எண்ணிக்கை குறைந்து போனதால் அருகேயிருக்கும் இரு கிராமங்களுக்கும் சேர்த்து அவரே ஊதவேண்டியதாயிற்று.
மக்களின் வசிப்பிடங்களைக் கடந்து காட்டுப் பாதைக்கு இப்பொழுது வந்திருந்தார். இப்பகுதியில் சென்றிட பகல் நேரத்தில் கூட மக்கள் அஞ்சுவார்கள். ஆனால் பெருமாள் பண்டாரம் நெஞ்சுரம் கொண்டவர். அவர் வீரத்திற்கு சாட்சி சொல்கின்ற எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. குறிப்பாக ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னால் இப்பகுதியில் ஒளிந்து கொண்டு ஊராரின் செல்வங்களைச் சூறையாடி வந்த கள்ளன் மாயாண்டியை அவர் பிடித்து கொடுத்தது ஒன்றே போதும்.
அன்றைக்கு இக்காட்டு வழியாக அவர் வருகிறபோது ஒரு அடர்ந்த விருட்சத்திற்கு பின்னால் சின்ன தீ கங்கு ஒன்று தெரிவதைக் கண்டார். ஜாக்கிரதையாக அரிக்கேன் விளக்கை தணித்து வைத்தவாறு நெருங்கி சென்றபோது பீடி குடித்துக் கொண்டிருந்தது கள்ளன் மாயாண்டி தான் என அறியமுடிந்தது.
வாடைக் காற்றையும் மீறி அவருடம்பு சூடானது. தீ செயல் புரியும் திருட்டு பயல் தன் கையில் அகப்பட்டுக் கொண்டான் என்ற உற்சாகமும் உண்டானது. மெல்ல சத்தமின்றி இன்னும் அருகே அவனை நெருங்கியபோது சடாரென சுதாரித்து அவன் எழுந்து நின்றான். கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாக்கத்தியை உருவி பெருமாளின் மீது வீசினான். அவர் சடுதியில் பின்வாங்கி மூங்கில் தடியால் கத்தியைத் தட்டிவிட்டதோடு அவனது தலையில் சாத்திடவும் செய்தார். வலுவிழந்து அவன் தடுமாறினாலும் அவனுடன் போராடி ஜெயித்திட பெரும் முயற்சி தேவைப்பட்டது. அவனை அம்மரத்தில் கட்டிப்போட்டு விட்டு ஊருக்கு தெரிவித்தார். ஊரே அவரைக் கொண்டாடி மகிழ்ந்தது.
இப்பொழுது மார்கழி மாதத்து தேய்பிறை வானில் காய்ந்து கொண்டிருந்தது. ஈசானி மூலையில் வெண்மேகங்கள் திரண்டிருந்தன. நிசப்தத்தை உடைக்கும் விதமாக சில்வண்டுகள் ரீங்காரம் செய்தன.
ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்த பெருமாள் சட்டென்று நின்று விட்டார். அதற்கு காரணம், பாதையின் குறுக்காக ஒரு ஸர்ப்பம் சென்று கொண்டிருந்தது. அவர் தன் வாழ் நாளில் எத்தனையோ சீவன்களைப் பார்த்து இருக்கிறார். ஆனால் இதுபோல மிக பெரிதான ஒரு நாகத்தை அவர் கண்டதே இல்லை.
டார்ச் ஒளியை அதன் மீது பாய்ச்சினார். பாம்பு தலைதூக்கி அவரைப் பார்த்தது. ஆயினும் அச்சமின்றி தன் போக்கில் நெளிந்து சென்று எதிர்புறமுள்ள அடர்ந்த முட்செடிகளுக்குள் நுழைந்து விட்டது. ஒருகணம் அவர் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கக்கூடும் என்றால் அது தீண்டியிருக்கும். அப்படி தீண்டியிருந்தால் என்ன….., உயிர் போயிருக்கும் அவ்வளவு தானே, என்ற விரக்தியே அச்சமயம் அவரை சூழ்ந்தது.
ஏற்ற இறக்கங்கள் பலவற்றை தன் வாழ்வில் கடந்து வந்திருந்த அவருக்கு இப்பெரும் சரிவைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ” வள்ளுவா, இந்த வருஷத்தோட ஊதுவதை நிறுத்திக் கொள்ளலாம் ” என்று கிராம முக்கியஸ்தர்கள் சொன்னதும் அவர் மிரண்டு போனார். இருபத்தைந்து வருடங்களாக அவர் தாதனாக இருக்கிறார். அவருக்கு முன்னால் அப்பா தாத்தாவென்று பரம்பரையாக வந்த தொழில் தன்னோடு அழிந்து போவது மனவலியைக் கொடுத்தது. இதனை ஒரு வேலையாக அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. தன்னுடைய கடமையாகவே உணர்ந்திருந்தார். மார்கழி மாதம் மட்டுமல்ல, வருடம் முழுவதும் இந்த வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியிருக்கிறார். மற்ற பதினோரு மாதங்கள் கிடைக்கிற கூலி வேலைகளை செய்து வந்தாலும் சாவுக்கு ஊதுவதற்கு அழைத்தபோது அவர் போவதில்லை. தெய்வ காரியம் ஒன்றே தனது இலட்சியம் என்பதில் உறுதியாய் இருந்தார்.
மூன்று கிராமங்களுக்கும் நடந்து நடந்து கால் வலியால் பகலில் தூக்கமின்றி அவதிப்பட்டாலும் இதிலொரு சுகமிருப்பதைக் கண்டார். ஜனங்களைத் துயில் எழுப்புவதற்கு தன்னுடைய சங்கொலியும், சேமக்கல ஓசையும் உதவுவதை நினைத்து பெருமை கொண்டார். சைக்கிள் ஓட்ட பழகாமல் போன வருத்தம் மட்டும் அவருக்கு எப்பொழுதும் உண்டு.
தொழிலில் வருமானத்துக்கு ஒன்றும் குறைவில்லை. மார்கழி முடிந்து தை பிறந்ததும் பொங்கள் சமயத்தில் அவர் வசூலில் இறங்கி விடுவார். போகும் போது ஐதாறு சாக்குப் பைகளை எடுத்து போவார். நெல், அரிசி, கம்பு, சோளம் என்று பைகள் நிரம்பி வழியும். அவரது மகன் சைக்கிளில் வந்து மூட்டைகளை எடுத்து சென்று வீட்டில் வைத்து விட்டு மறுபடியும் மறுபடியும் வந்து கொண்டு போவான். மூன்று கிராமங்கள் என்பதால் ஏராளமாக கிடைத்தன. வருடம் முழுவதற்குமாக தங்களுக்கு தேவையானதை வைத்து கொண்டு மிகுதியை விற்று காசு பார்ப்பார். இன்று எல்லாமே முடிவுக்கு வந்து விட்டது. இதுவே கடைசி நாள் என்ற நிஜம் கசப்பைக் கொடுத்தது.
காட்டுப் பாதையைக் கடந்து அடுத்த கிராமமான புள்ளம்பாடிக்கு வந்து விட்டார். சங்கூதி மணியடித்தவாறே விரைவாக நடந்தார். வடக்கு தெருவில் இருக்கிற மச்சு வீட்டு கோபாலனின் நினைவு வந்தது.
எப்பொழுதும் அவர் வருகிறபோதும் அவன் விழித்தெழுந்து திண்ணையில் வந்து உட்கார்ந்திருப்பான். இன்றும் அவன் எழுந்து விட்டானா என்ற ஆவலோடு சங்கை சற்று அதீத சத்தத்தோடு ஊதியபடியே அவன் வீட்டை நெருங்கியபோது அவர் எதிர்பார்த்தவாறே அம்மனிதன் திண்ணையில் அமர்ந்திருந்தான்.
அவரைப் பார்த்ததும் சிரித்தபடியே ” வாங்க ” என்றழைத்தான். தன் பொருட்களை திண்ணையில் வைத்து விட்டு அவர் தூணில் சாய்ந்து உட்கார்ந்து கால்களை நன்றாக நீட்டிக் கொண்டார். அவன் தயாராக வைத்திருந்த தண்ணீர் செம்பை எடுத்து கொடுக்க அவர் குடித்ததும் சற்று ஆசுவாசம் உண்டானது. ஆயினும் அவரது முகம் இருளடைந்திருப்பதை அவன் கவனித்தான். அவரது மனவோட்டத்தை அவன் நன்று அறிவான். ஏற்கனவே அவர்கள் நிறைய பேசியிருக்கிறார்கள். அவன் ஆறுதல் சொல்லியிருக்கிறான். இப்பொழுதும் அவன் அனுசரனையான வார்த்தைகளை உச்சரித்தபோது அவன் கொடுத்த வெற்றிலையை மென்றவாறே அவர் மெளனியாக இருந்தார்.
சங்கொலிக் கேட்டு தன் பிள்ளைகள் இரண்டும் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்திருப்பதை கோபாலன் அப்பொழுதுதான் பார்த்தான். ” ஏய்… தாத்தா வந்திருக்காரு, வாங்க” என்று அவர்களை அழைக்கவே சிறுவர்கள் இருவரும் கண்களைத் தேய்த்தபடியே எழுந்து வந்து அவர்களின் அருகில் அமர்ந்து கொண்டார்கள்.
குழந்தைகளைக் கண்டதும் பெருமாளின் முகம் மலர்ந்தது. போன வருடத்தின் போது அவர் சங்கை ஊதி வருகையில் பிள்ளைகள் பயந்து அழுததாக கோபாலன் சொன்னான். இதனால் அவர் பகலில் ஒரு நாள் அவர்களது வீட்டுக்கு சென்றார். ” இவர்தான் ராத்திரியில் வருகிற தாத்தா ” என்று அவர்களுக்கு பெருமாளை அவன் அறிமுகம் செய்து வைத்ததும் அவர்களின் பயம் போய்விட்டது. அதன் பிறகு அவர் வரும் போது தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பிள்ளைகள் வாயாடுவது வழக்கமாகிப் போனது.
கண நேர மகிழ்ச்சிதான். மறுபடியும் மனசு துயர் நிலைக்குப் போனது. தன் பேரப்பிள்ளைகளும் இப்படி தானே இருப்பார்கள் என்ற நினைப்பு எழுந்தது. அவரது மகன் சங்கரனை நன்றாக படிக்க வைத்தார். அவனுக்கு நல்ல உத்தியோகமும் கிடைத்தது. ஆனால் யாருக்கும் தெரியாமல் அவன் ஒரு கிறுஸ்துவப்பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அவர்களை வீட்டில் சேர்த்திட மனைவி பிரியப்பட்டாலும் பெருமாள் பிடிவாதமாக மறுத்து விட்டார். ஊரை விட்டு சென்ற மகன் ஏதோ வெளி மாநிலத்தில் குடும்பம் நடத்துவதாக காற்று வாக்கில் செய்தி கிடைத்தது.
வருடம் எட்டாகிறது. அவன் இந்த பக்கம் வந்து போகவே இல்லை. மனைவியின் அழுகையைப் பொறுக்க முடியாமல் அவர் ஒரு முறை அவனைத் தேடி அலைந்து பார்த்தார். அவன் அகப்படவே இல்லை.
நெஞ்சுக்குள் கொந்தளிப்பு அதிகரித்தது. தன் உணர்ச்சியை மேலும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாமல் அவர் அவர்களிடமிருந்து விடை பெற்று நடக்கத் தொடங்கினார்.
மூன்றாவதாக அன்பில் கிராமத்திலும் தன்னுடைய பணியை முடித்து கொண்டு பெருமாள் புறப்பட்டபோது லேசாக விடிய துவங்கியிருந்தது. அப்பொழுதெல்லாம் இம்மாதம் மிக கொண்டாட்டமாக இருக்கும். குளிரைப் பொருட்படுத்தாமல் மனிதர்கள் விடியலில் கண்மாயிக்கு குளிக்க போவார்கள். குழந்தைகள் கூட ஆர்பரித்தபடி உடன் செல்வார்கள். பெண்கள் வீட்டு வாசலில் மாக்கோலமிட்டு நடுவில் சாணிப்பிள்ளையார் பிடித்து அதில் மஞ்சள் நிற பரங்கிப் பூவை வைத்திருப்பார்கள். திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி என்று வீடுதோறும் தெய்வீக மணம் நிறைந்து வீதியில் வந்து வழியும். ஹார்மோனியப் பெட்டியும், கஞ்சிராவோடும் ஆழ்வார் பாசுரங்களை இசைத்தவாறு பெரியவர்கள் பஜனைக்கு கிளம்புவார்கள். அதெல்லாம் அந்த காலம்.
ஊரை நெருங்கியதும் செவியைத்துளைக்கும் விதமாக ஒலிப்பெருக்கிகளின் ஓசை கேட்டது. வீதிக்கு வீதி கட்டியிருந்த அக்குழாய்களிலிருந்து பக்தி பாடல்கள் கலவையாக மிதந்து கொண்டிருந்தன. தளர்ந்த நடையோடு பெருமாள் வீட்டையடைந்ததும் சேகண்டியை ஆணியில் மாட்டினார். சங்கையும் மற்றவற்றையும் எடுத்து வைத்தபோது பிரமை பீடித்திருக்கும் அவர் முகத்தைக் கண்டு லட்சுமி துணுக்குற்றாள்.
”என்னாச்சு… மாமா” என்றவாறே அவள் அருகே வந்ததும் அவர் அப்படியே மடங்கி உட்கார்ந்து ”ஓ” வென்று வாய்விட்டு அழ ஆரம்பித்தார்.