தலைப்பு செய்தி தாறுமாறு!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2026
பார்வையிட்டோர்: 2,637 
 
 
டீக்கடையில் இருந்த செய்தித்தாளை எடுத்து விரித்து தலைப்புச்செய்தியைப்படித்தவுடன் வாழ்வில் முதலாவதாக கணேசனை அதிர்ச்சி முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது.
‘ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை’ எனும் செய்தியானது பத்து வருடங்களுக்கு முன் ஒரு பவுனின் மொத்த விலைதான் தற்போதைய ஒரு நாளின் விலையேற்றத்தின் தொகை என்பதை படித்து தெரிந்தது தான் அதிர்ச்சிக்கு காரணம்.
தங்கம் என்பது பணக்காரர் ஏழை பாகுபாடில்லாமல் அனைவரும் விரும்புவது, அனைவருக்கும் தேவைப்படுவது. கார், பங்களா, நிலங்கள் என வசதியானவர்கள் வாங்கி உயர்ந்தாலும் மற்றவர்கள் அதைக்கண்டு தங்களுக்கும் அந்த வசதி இல்லை என கவலைப்படுவதில்லை. ஆனால் தங்களுக்கு அடிப்படைத்தேவைக்கான பொருட்கள் விலையேறுவதைத்தான் சாதாரண மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் துவண்டு போய் விடுகின்றனர்.
“படிச்சுப்படிச்சு சொன்னனே கேட்டீங்களா? பொம்பளப்புள்ளைகளை ரெண்டப்பெத்து வெச்சுட்டு ஆம்பளப்பசங்கள பெத்தவன் சுத்தீட்டு திரியற மாதர பொறுப்பில்லாம சுத்தீட்டு திரியறீங்களே…? பவுனு ரெண்டு லட்சத்தத்தொட்டுறும்னு சொல்லறாங்க. பைக்கும் வாங்காம, காரும் வாங்காம, பணங்கட்டற ஸ்கூல்லயும் பொண்ணுங்களை சேத்தாம, மேல ரூமும் போடாம தங்கத்தையே எடுத்திருந்தா இன்னைக்கு நம்ப கிட்டயும் முன்னூறு பவுனுக்காட்டா சேந்திருக்குமே….? கடவுளே..‌. நான் ஒன்னி என்ன பண்ணுவேன்….?” கண்ணீர் மல்க பேசி கவலைப்பட்டாள் சுனந்தி.
“ஆரு கண்டா இப்புடி விலை ஏறும்னு? உனக்குந்தா உங்கொம்மா ஆடு, மாடு மேச்சு, காய்கறி வித்து, பாலக்கறந்து வித்து, மோரு வித்து அரைப்பவுனும், காப்பவுனும் எடுத்து முழுசா முப்பது பவுனு போட்டாங்க. அது இன்னைக்கு வரைக்கும் இருபத்தஞ்சு வருசமா அப்படியே தான கெடக்குது. என்ன… மதிப்பு கொஞ்சம் கூடியிருக்குது. ஆனா அத வெச்சு சோறுண்டமா? ஊடு கட்டுனமா? துணிமணி எடுத்து உடுத்துனமா? முய்மொறை வெச்சமா? ஆஸ்பத்திரி செலவு பண்ணினமா? ஸ்கூலுக்கு பீஸ் கட்டுனமா? எதுக்குமே உதவாதது தூக்கத்தக்கெடுத்து, மனசக்கெடுத்து நம்மள மன உளைச்சல்லியே கொன்னே போடுமாட்ட இருக்குது….” சொல்லச்சொல்ல கணேசன் கண்களிலும் கண்ணீர் வந்தது.
“அம்மா…. அப்பா….” ரியா தனது அறையிலிருந்து சத்தமாக பெற்றோரை கத்தி அழைத்தாள்.
என்னமோ, ஏதோ என இருவரும் பதறியபடி ஓடினர். “ஏஞ்சாமி என்னாச்சு? ஏதாச்சும் ஒடம்புக்கு சரியில்லையா?” கேட்ட தாயை கோபமாக ஏறிட்டாள்.
“நகை, நகைன்னு முதல்ல செத்துகித்துத்தொலைஞ்சறாதீங்க. இத பாருங்க எனக்கும் அக்காவுக்கும் படிப்பு கைவசம் இருக்கு. அதனால வாழறதுக்கு வழி இருக்கு. நீங்க நகை எடுத்தாலும் அத நாங்க போடப்போறதில்லை. வீட்டப்பத்தியும் இதுக்கு மேல யோசிக்காதீங்க. மனை விலை ஏறுனா பதறறீங்க, தங்கம் விலை ஏறுனா பதறறீங்க, யாராச்சும் வீட்டுக்கு புண்ணியர்ச்சனைக்கு போயிட்டு வந்தா பதறறீங்க. கல்யாணத்துக்கு போயிட்டு வந்தா ஒரு வாரம் தூங்காம இருக்கறீங்க. என்ன பழக்கமிது? எங்களை வாழ வைக்ககறதுக்கு நீங்க சாகோணும்னு ஒன்னும் அவசியமில்லை. சென்னைல என்னோட பிரண்ட்ஸ் இருக்காங்க. அவங்கெல்லாம் படிப்பு தவிர எதப்பத்தியும் கவலைப்படறதில்லை. சம்பாதிக்கறாங்க. வாடகை வீட்ல கூட சந்தோசமா வாழறாங்க. நீங்கதான் எப்பப்பார்த்தாலும் நிம்மதியா இருக்ககறதில்லை. எங்களையும் நிம்மதியா இருக்க விடறதில்லை. எங்களுக்கு நகை வேண்டாம், பெரிய வீடு வேண்டாம். நீங்க ஆரோக்யமா, சந்தோசமா இருந்தா போதும்….” கண்ணீருடன் மகள் ரியா சொல்லச்சொல்ல ஆனந்தக்கண்ணீர் பெருகியது கணேசனுக்கும், அவன் மனைவி சுனந்திக்கும்.
கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *