தற்கொலை – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,063
நீங்க யாராவது பரீட்சையிலே ஃபெயிலாகியிருக்கீங்களா? அதனாலே… அப்பா, அம்மாட்டே திட்டு வாங்கியிருக்கீங்களா?
அந்த வேகத்தில் தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கீங்களா?
அந்த நிலைமைதாங்க நம்ம ஷர்மிக்கு வந்துடிச்சி! ஆனா….அதுக்கு முன்னாலே சமந்தா மிஸ்ஸை மட்டும் பார்க்கணும்னு
ஆசை?
மிஸ் வீட்டுக்கு போனாள், பார்த்தாள்…. அழுதாள்! தற்கொலையை மட்டும் மறைத்து விட்டாள். ஆனால்…. “கடைசியாய் உங்களைப் பார்த்துட்டு போவலாம்னு…’ சொன்ன அவளது வார்த்தை மட்டும் சமந்தா மிஸ்ஸை உறுத்தியது.
“அட…. அசட்டுப் பெண்ணே!’ என்று புத்திமதிகளைச் சொன்னாள்.
எதிரே இருந்த பூக்காரியிடம், பூ வாங்கி அவள் தலையில் சூட்டினாள். அவளை தனியே அழைத்து… “இந்தப் பூக்காரி இருக்காளே… அவா எங்க அக்கா கிளாஸ்மேட்! உன்னெ மாதிரி பத்துலெ ஃபெயிலானவதான்! ஒரு தொழிலைக் கத்துகிட்டா…
இப்போ அவாபேருக்கு நாலு காம்பவுண்ட் இருக்கு! ஆனா அவாகூட படிச்சி பாஸ் பண்ணுன எங்க அக்காவுக்கு ஒரு வீடு இல்லை!’ என்றாள்.
இப்பமெல்லாம் நம்ம ஷர்மி தையல் கத்துக்க போய்கிட்டு இருக்கா! “எப்படியும் நாலு காம்பவுண்ட் வாங்கிடணும்னு…’
ஆனா… அதுல பாருங்க…. இந்தப் பூக்காரி அக்கா கிளாஸ் மேட்டும் இல்லே! அவளுக்கு சொந்தமா காம்பவுண்டும் இல்லே!
– கீர்த்திமலர் (ஜூன் 2013)