தர்ஷிணிப்பூ





அந்தப் பெயரை அப்பா உச்சரிக்கும் போதெல்லாம் இனம் புரியாத சந்தோஷ அலைகள் என்னுள் எழும். வனக் காவலராக பாபநாசத்தில் வேலை செய்கிறார் அப்பா. எங்கள் வீடும் மலையடிவாரத்தில்தான் இருக்கிறது. பானதீர்த்தம் அருவியில் குளிக்க வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதே அவரது வேலை. பலமுறை அப்பாவுடன் அருவிக்கு சென்றிருக்கிறேன்.
போன மாதத்தில் ஒருநாள் இரவு வீடு திரும்பிய அப்பா, அம்மாவிடம் முதன் முதலாய் அந்தப் பெயரை உச்சரித்தார் . அதுவரை அப்படியொரு பெயரை நான் கேட்டதேயில்லை. அம்மாவிடம் வேறெதுவும் சொல்லாமல் உறங்கிவிட்டார் அப்பா. அதன்பிறகு அப்பாவின் நடவடிக்கைகளை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னிரவில் வெளியில் போவதும் திரும்பி வருகையில் மலர்ந்த முகத்துடனும் வருகின்ற அப்பா தூக்கம் தொலைத்த, சோகம் கவ்விய முகத்துடன் மாறியிருந்தார்.
—–o0o——-
மந்திரமாய் அப்பா முணுமுணுக்கும் அந்த பெயருக்கு சொந்தமானவரை சந்தித்துவிட துடியாய் துடித்துக்கொண்டிருந்தேன். ஒரு சனிக்கிழமை இரவு, உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தபோது அப்பா வெளியே கிளம்புவது தெரிந்தது. அவருக்குத் தெரியாமல் தொடர்ந்து செல்ல முடிவெடுத்தேன். அம்மா நல்ல உறக்கத்தில் இருந்தாள். டார்ச்சை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பினார் அப்பா.மெல்ல பின் தொடர்ந்தேன். குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. பலமுறை அருவிக்கு போய் வந்த வழி என்பதால் இரவிலும் சரியான பாதையில் பயணிக்க முடிந்தது.
அவர் பார்வைக்குப் படாதவாறு, சற்று தொலைவிலிருந்த பாறைக்குப் பின்னால் மெதுவாக மலையில் ஏற ஆரம்பித்தேன். மனிதர்கள் தனது தேவைக்கு இன்னும் நுழையாத இடமாக இருந்தது. இரவில் தனியாக இங்கே வருவது ஆபத்தானது. உள்ளுக்குள் இதயம் படபடத்தாலும் அப்பா யாரைப் பார்க்க இந்த இரவில் இங்கே வருகிறார் என்ற ஆவல் பயத்தை ஒதுக்கியது. வேகமாக அருவி விழுகின்ற திசைநோக்கி நடந்தேன். அருவியில் நீர்வரத்து அதிகமாக இல்லை என்றபோதும் அது விழுகின்ற சத்தம் அதிகமானதாக இருந்தது. அவ்வனத்திலிருந்த மிகப்பெரிய மரத்தின் அடியில்தான் அந்த அபூர்வமான காட்சியைக் கண்டு, முதுகுத்தண்டு சில்லிட அங்கேயே நின்றுவிட்டேன்.
——o0o———
அந்த மரத்தடியில் ஒரு பெண் படுத்திருந்தாள். இதுவரை இப்படி ஓர் அழகியை நான் பார்த்ததே இல்லை. இன்னும் அருகில் சென்று ஒரு மரத்தின் பின்னால் நின்று பார்த்தபோது அவளது முகம் மிகத்தெளிவாக தெரிந்தது. அந்த பேரழகான முகத்தில் சொல்ல முடியாத வலியின் ரேகைகள் தென்பட்டன. அவளது அழகிய கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது. எதற்காக அழுகிறாள் இவள்? அப்போதுதான் அந்த விசித்திரத்தை கண்டேன்.அவளது முதுகில் சிறகுகள் இருந்தன. வலியில் இவள் அச்சிறகுகளை அசைத்தபடி இருந்தாள். அவளது காலில் வெண்நிற திரவம் வழிந்துகொண்டிருந்தது. முதன் முதலாய் இப்பொழுதுதான் வெள்ளை நிறத்தில் ரத்தத்தை காண்கிறேன். அப்பா அவளுக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவளது முனகல் நின்றுபோனது. சிறகுகள் அசைவற்றுக் கிடந்தன. அவளது காலில் அப்பா கட்டியிருந்த சிகப்பு நிற துணியில் வெள்ளை ரத்தத்தின் கறை திட்டுத்திட்டாக தெரிந்தது. அவள் கண்கள் மூடியிருந்தன. அப்பா அவளது கருநிற கூந்தலை சில நிமிடம் வருடிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இரவுப்பூச்சிகளின் சப்தம் அதிகரிக்க தொடங்கியது. மரத்திற்கு பின்னால் ஒண்டியிருந்தேன். அப்பாவின் மோட்டார் படகு கிளம்பும் சப்தம் கேட்டது. உறங்கிக்கொண்டிருக்கும் அவளையே பார்த்தபடி இருந்தேன். இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும் அப்போது இவள் எங்கே செல்வாள்? சிறகுகள் இருப்பதால் பறந்துவிடுவாளா? அவளிடம் போய் பேசலாமா? குழப்பத்தில் தவித்தபோது அவள் கண் விழித்தாள். எழுந்து தன் காலில் காயம்பட்டிருந்த இடத்தை தடவிக்கொடுத்தாள். பின் யானைக்கால் மரத்திற்கு முன்பாக நின்று ஒரு முறை சிறகுகளை அடித்தாள்.சட்டென்று இரண்டாக பிளந்தது அந்த மரம். அதனுள் அவள் உள்நுழைந்ததும் மரம் மீண்டும் இணைந்துகொண்டது. நான் மயக்கம் வரும் நிலையில் இருந்தேன்.தலைசுற்றியது.அங்கிருந்து படகை நோக்கி மிக வேகமாக ஓடத்துவங்கினேன்.
—-o0o——–
மறு நாள் நண்பர்களிடம் நான் பார்த்த விஷயங்களை சொன்னபோது சிரித்தார்கள். எல்லாம் வெறும் கனவு என்றார்கள். இரவு அப்பாவிற்கு முன்பே போய் விட தீர்மானித்து பதினோரு மணிக்கு கிளம்பினேன். அணையில் பயணித்து அருவியை அடைந்து யானைக்கால் மரத்தை நெருங்கினேன். அவளைக் காணவில்லை. மரம் சலனமற்று நின்றிருந்தது. நிலா வெளிச்சத்தில் பெரும் நிழலுருவமாக நிற்கும் அந்த மரத்தின் அருகே சென்றேன். சருகுகள் நொறுங்க நான் நடக்கும் சப்தம் கேட்டதும் அந்தக் குரல் கேட்டது.
“வந்துவிட்டீர்களா?” அவளது குரல். பதிலேதும் பேசாமல் நகராமல் அங்கேயே நின்றேன். மீண்டும் அந்த அற்புதமானவளின் குரல் கேட்டது “வந்துவிட்டீர்களா?”. மூச்சின் சப்தம்கூட வெளிக்கேட்கா வண்ணம் நின்றிருந்தேன். நான்கு நிமிட மெளனத்திற்கு பின் மரம் இரண்டாக பிளந்தது. உள்ளிருந்து வந்தவள் என்னைக் கண்டதும் திடுக்கிட்டாள். உடனே திரும்ப எத்தனித்தவளிடம்
“என்னை பார்த்து பயப்படாதீர்கள் நேற்று உங்களுக்கு சிகிச்சை அளித்தவரின் மகன் நான்”
மெல்ல திரும்பி என்னிடம் வந்தாள்.
“அவர் எங்கே?”
“அப்பா இனிதான் வருவார்”
“நீங்கள் ஏன் என்னை பார்க்க வந்தீர்கள்?”
“முதல்முறை உங்கள் பெயரை அப்பா உச்சரித்தபோதே எனக்கு உங்களை பார்க்கவேண்டும் போலிருந்தது அதனால்தான் வந்தேன். நீங்கள் யாரென்று தெரிந்துகொள்ளலாமா?”
“நான் வனப்பூக்களின் அரசி.”
“பூக்களின் அரசியா? இதெப்படி சாத்தியம்? உங்களுக்கு சிறகுகள் இருப்பதை பார்த்தவுடன் ஏதோ வனதேவதை என்று நினைத்தேன்”
“இரவில் மட்டுமே இந்த உடலில் என்னால் உலவ முடியும். வனம் என் தாய் என்பதால் நானும் ஒரு வகையில் தேவதைதான்.”
“பகலில் என்ன ஆகும் இந்த சரீரத்துக்கு?”
“பகலில் இந்த மரத்தை சுற்றியிருக்கும் கொடியில் பூவாக கிடப்பேன்”
“உங்கள் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் என்னுள் இனம்புரியாத உணர்வுகள் ஏற்படுகிறது. யார் வைத்தது “தர்ஷிணிப்பூ” என்கிற இந்த அற்புதப்பெயரை?”
“தர்ஷிணி என்றால் அழகு என்று பொருள். உங்கள் அப்பாதான் இந்தப்பெயரை எனக்கு சூட்டினார்”
“ஓ என் அப்பா வைத்த பெயரா” எனக்கு கோவிந்தசாமி என்று பெயர் வைத்ததற்காக மனதிற்குள் அப்பாவை திட்டினேன்.
“சரி,என் அப்பாவை எப்படி சந்தித்தீர்கள்?”
“சில நாட்களுக்கு முன் இரவில் அருவியில் குளித்துக்கொண்டிருந்தேன் அந்நேரம் உங்கள் அப்பா என்னை பார்த்துவிட்டு அருகில் வந்தார். எனக்கு மனிதர்கள் என்றாலே பயம் ஆனால் அவர் என்னைக்கண்டு பயப்படவே இல்லை. அன்பாக பேசினார்.”
“மனிதர்களை கண்டால் மட்டும்தான் உங்களுக்கு பயமா?”
“என் விலங்கு தோழர்களையும், என் இருப்பிட எழிலையும் அழிக்கும் அராஜவாதிகள் அவர்கள். எனக்கு மனித இனத்தில் பிறந்ததற்காக வெட்கமாக இருந்தது. என் மெளனத்தை புரிந்துகொண்டவள் போல் அவளே தொடர்ந்தாள்.
“சில நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் அப்பாவை போல”
அப்பாவை நினைத்து பெருமையாக இருந்தது. அம்மா கொடுத்துவைத்தவள்.
“சரி நான் கிளம்புகிறேன். இன்னொரு நாள் வருகிறேன்”
“சரி உங்கள் பெயரை சொல்லவே இல்லையே”
“கோவிந்தசாமி”
அவள் புன்னகைத்தபடி விடைகொடுத்தாள். திரும்பும் வழியெங்கும் அவளை நினைத்துக்கொண்டே இருந்தேன்.
—-o0o——–
அந்தக் காட்சியும் பேச்சும் கடும் காய்ச்சலில் என்னை இரண்டு நாட்கள் கிடத்தியது. வீட்டருகே வந்தமரும் எல்லாப் பறவைகளின் முகமும் அவளைப் போல் இருந்தது. அதே நேரம் அப்பாவின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறியிருந்தன. இரவில் வீடு திரும்பும் அவரது முகம் இப்போது கோரமாக தோன்றியது. எப்போதும் அமைதியாக தோன்றுபவர் இந்த இரு நாட்களில் மிகுந்த படபடப்புடன் தோன்றினார்.
இரவில் அவளை பார்ப்பதற்காக கிளம்பினேன். அவளுக்கு பரிசாக ஏதாவது தரவேண்டும் என்று தோன்றியது. அருவிக்கரையை அடைந்து யானைக்கால் மரத்தின் அருகே சென்றபோது வித்தியாசமானதொரு உணர்வு என்னை ஆட்கொண்டது.
“தர்ஷிணிப்பூ” பதிலில்லை.
மீண்டும் அழைத்தேன், “தர்ஷிணிப்பூ”.
பதில் இல்லை. சுற்றி வரப் பார்த்தேன்.
பூட்ஸ் கால்தடங்கள், ரத்தம் வடிய தந்தம் பிடுங்கப்பட்டு செத்துக்கிடந்த யானை, அடுப்புமூட்டிய அடையாளமாய் சில கரித்துண்டுகள், தரையெல்லாம் இறகுகள்…. உறைந்து சிலையாகிப்போனேன். எப்போதும் பெரும் சத்தத்துடன் விழும் அருவி இன்று சத்தமின்றி விழுந்துகொண்டிருந்தது. இப்போது அது என் இனத்தின் குறியீடாயிருந்தது.
– கல்கியில்(28-03-2010 தேதியிட்டது) வெளியான சிறுகதை