தரித்திரவாசி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தீபம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 2,138 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த வீட்டு, சாரும் அம்மாவும் வெளியே போயிருக்காங்க. சொந்தக் காரில் போகல்லே. எங்கோ இண்ணைக்குச் சாயந்திரம் சாரின் மீட்டிங்காம். அதுக்காக ரெண்டு பேருங்க கார் கொண்டு வந்து கொஞ்ச முந்திதான் சாரைக் கூட்டிக்கிட்டு போறாங்க… கூட அம்மாவும் போயிருக்காங்க… போய் அரை மணி நேரம் இருக்கும்… ஆறு ஆறரைக்குள் வந்து விடுவோமுன்னு சொல்லிக்கிட்டுத்தான் போனாங்க… ஆனா ஏனோ இன்னும் காணவில்லையே… 

அன்னைக்கு ஒரு நாள் இப்படித்தான் ஒரு வெள்ளைக்கார அம்மா இங்கே வந்த அண்ணைக்கும், ஆறு மணிக்கு வருவதா சொல்லி விட்டுப் போனாங்க… ஆனா… வர ராத்திரி ஒன்பது மணி ஆச்சு… எனக்கானா ஒரே பசி… வந்த பிறகு, இண்ணைக்குச் சப்பாத்திக்கு மாவு குழைக்க வேண்டாமுண்ணு சொல்லிட்டாங்க அம்மா. சார் ரொட்டியும் பாலும் சாப்பிட்டார். அந்த வெள்ளைக்கார அம்மாவை ஹோட்டலுக்குக் கூட்டிக்கிட்டுப்போய் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாங்க. மத்தியானம் சாப்பிட்டது போக மீதி வச்சிருந்த சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு நான் படுத்தேன். இன்னும் காணல்லையே சார்… 

காலம்பர அவங்க மாடியிலிருந்து எழுந்திரிச்சி கீழே வரும்போது மணி எட்டு ஆகி விடும். நான் ஆறு மணிக்கே எழுந்திரிச்சுடுவேன்… முற்றமெல்லாம் பெருக்கி செடிக்கெல்லாம் தண்ணி ஊற்றிவிட்டு, நான் போய் கேட்டை திறந்துபோடுவேன். பிறகுதான் பேப்பர் கொண்டுவந்து போட்டுட்டு போவான் பேப்பர்காரன். பேப்பரில் கொஞ்சம் எங்காவது மடங்கியிருந்தால் போதும். பேப்பரைக் கெடுத்துட்டான் தரித்திரவாசி என்று அம்மா திட்டுவாள். எனக்கு வருத்தமா இருக்கும்… எதுக்கு சார் இப்படி தரித்திரவாசின்னு ஏசணும். சாமி சிலரைப் பணக்காரரா படைச்சிட்டாரு… ரொம்ப பேரை தரித்திரமாய் படைச்சிட்டாரு. எதுக்கு அதைப்போய் இப்படிக் குத்திக் காட்டணும்… 

நான் போர்த் பாரம்வரை படிச்சிருக்கேன் சார்… அதுக்கு மேலே படிக்க வசதியில்லை. அப்பா செத்துப் போனாரு. மூணு மாசம் முந்தி எங்க வீட்டுப் பக்கத்தில் குடியிருக்கும் கிட்டு மாமா, அவர்கூட எனக்கு ஒரு விதத்தில் தூர உறவுதான். அவர்தான் என்னை இங்கே கூட்டிக்கிட்டு வந்து ஏற்படுத்தினார். எங்க வீட்டுக்கு இங்கிருந்து நாப்பது மைலிருக்கும் சார்… அங்கே எங்க வீட்டு பக்கத்தில் இருந்துதான் இந்த மாமா முதலில் எங்க சொந்தத்தில் என்னைப்போல் ஒரு பையனை இங்கே கூட்டிக்கிட்டு வந்து விட்டாங்க… பையன் வந்து ஒரு வாரத்தில் அவுங்க ரெண்டு பேரும் இப்படித்தான் ஒருநாள், வீட்டைப் பூட்டிட்டு எங்கேயோ வெளியே போனாங்க… அண்ணைக்கு ராத்திரி பூரா ரெண்டு பேரும் வீட்டுக்கு வரவே இல்லை. 

அடுத்த நாள் காலையில் வந்து பாத்தா பையனைக் காணல்லே… பாவம், பஸ்ஸுக்கு காசு வாங்கக்கூட நிக்காம, இந்த நாப்பது மைலையும் தப்பிச்சோம், பிழைச்சோமுண்ணு நடந்தே கடந்து எங்க ஊருக்கு வந்துட்டான். ஏண்டா திரும்பி வந்துட்டேண்ணு கேட்டா, ராத்திரி வேறு யாருமே இல்லாம அந்தப் பெரிய வீட்டில் நான் மட்டும் தனியா படுக்க பயமா இருக்கு. நான் இனி அங்கே போகவே மாட்டேன்… இங்கேயே கூலி வேலை செஞ்சு பிழைச்சுக்குவேன். அப்படீன்னு சொல்லிவிட்டான். கிட்டு மாமாவுக்குப் பெரிய அவமானமா போச்சு… நாமோ பெரிய காரியமா கொண்டுவிட்ட பையன் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துட்டானே… அப்படீன்னுதான் அவர் என்னை இங்கே கூட்டிக்கிட்டு வந்தார். 

‘டேய் கோவாலா… அவரு பெரிய ஆபீஸரு… ஒரு மகன் பாம்பேயில் என்ஜினியராக இருக்கான்… மகள் மதராஸில் டாக்டர்… இப்போ வீட்டில் அவரும் அவர் பெண்டாட்டியும் மட்டும்தான். உனக்கு பெரிய வேலை ஒண்ணும் இருக்காது… மூணு நாலு வருஷம் மரியாதையா வேலை செஞ்சா அவரு பெரிய ஆபீசர், ஏதாவது ஆபீசில் உனக்கு பியூன் வேலை வாங்கித் தருவார்’ இப்படியெல்லாம் சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார் கிட்டு மாமா. அம்மா சொன்னாள்… ‘டேய் உனக்கு வீட்டுக் கஷ்டம் எல்லாம் தெரியுமே… அந்த வீட்டு சாருடையவும் அம்மாவுடையவும் மனசு கோணாம நடந்துக்கணும்…!’

நானும் பார்த்தேன். நாமதான் படிக்கல்லே. என் தங்கச்சி அஞ்சாவது கிளாஸில் படிக்கிறா… தம்பி மூணாவது கிளாஸில் படிக்கிறான்… அவுங்களையாவது நல்ல முறையில் படிப்பிக்கணும்… எனக்கானா கூலி வேலை செய்வதுக்குள்ள ஆரோக்கியம் இல்லை… இங்கே வந்து இந்த வீட்டு வேலை பார்த்து நல்லவன்னு பேரு எடுத்தா ஏதாவது ஆபீஸில், கிட்டு மாமா சொன்னவாறு, பியூன் வேலையாவது கிடைக்காதா – இப்படியெல்லாம் நினைச்சுதான் இங்கே வேலைக்கு வந்தேன். ஆனா…ஒரு அருமையில்லை சார் இந்த வீட்டு அம்மாவுக்கு. நான் என்ன செய்தாலும் குற்றம்தான்? 

சார்… இந்த அம்மாவின் காரியங்கள் எல்லாம் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருக்கும். நான் அதையெல்லாம் பார்த்து மனசுக்குள் சிரிச்சுக்குவேன்… உலையில் போட அரிசியை அளந்து கொடுப்பாங்க… பிறகு என்னைக் கூப்பிட்டு கொஞ்சம் அரிசியைத் திரும்ப எடுத்துடுவாங்க… பிறகு, மறுபடியும் கொஞ்சம் எடுத்துப் போடுவாங்க… ஒருநாள் ஒரு பிச்சைக்காரன் வந்தான். கொஞ்சம் அரிசி எடுத்துப் போடச்சொன்னாங்க… நான் போடப் போகும்போது கூப்பிட்டு, பாக்கட்டும் என்றாங்க. நான் ரெண்டு கையையும் திறந்து காட்டினேன். இவ்வளவு எதுக்கு என்று பாதியை வாங்கி வச்சுட்டு, இவ்வளவு போதும் அப்படீண்ணாங்க. இதைப்போய் பெரிய காரியமாக எப்படிக் கொண்டு போடுவதுண்ணு எனக்குக் கூச்சமா இருந்தது. ஆனா என்ன செய்ய! கொண்டு போட்டேன். அவன் என்னவோ முணுமுணுத்தவாறு வாங்கிட்டுப் போனான். 

நல்ல அரிசியை அவுங்க சாப்பாட்டுக்காக உலை போடணும். கறிகாய், இறைச்சி, மீனு எல்லாம் நறுக்கிக் கழுவிக்கொண்டு போய் கொடுப்பேன். மிளகும், தேங்காயும் வெங்காயமும் எல்லாம் அம்மியில் வச்சு அரச்சுக் கொடுப்பேன். நான் உப்பு விட்டால் ஒண்ணெலே கூடிப்போச்சு, இல்லாட்டி குறைஞ்சு போச்சுண்ணு சண்டை பிடிப்பாங்க. அதனால் அவுங்களே உப்பைக் கரைச்சு ஊற்றிக்குவாங்க. ஒரு தடவை அவுங்க இறைச்சியைப் பாத்திரத்தில் போட்டு பிரஷர் குக்கரில் வச்சு விட்டு பேப்பர் படிச்சுக்கிட்டிருந்தாங்க. எனக்கு மட்டுமா தனியாக சமைக்க கொஞ்சம் ரேஷன் பசை பச்சரிசியைத் தருவாங்க. அது முழுதும் கல்லும் மண்ணும்தான். நான் பொறுக்கிட்டிருந்தேன். குக்கரில் கிடந்த இறைச்சி கொதிச்சு சிந்தியது. என்னக் கூப்பிட்டாங்க, நான் போக கொஞ்சம் நேரமாயிட்டுது… கூப்பிட்டா வராமெ எங்கேடா போய்க் கிடந்தே, தரித்திரவாசி – அப்படீன்னு சொல்லி புடிச்சுத் தள்ளினா. நல்ல வேளை அருவாமனையில்போய் விழவில்லை. ஆனா என்னை எவ்வளவுதான் அடிச்சாலும் நான் அழ மாட்டேன் சார்… சிரிச்சுக்கிட்டே நிற்பேன். அப்படி ஒரு சுபாவம் எனக்கு. 

எனக்கு இப்போ பதினாலு வயசாச்சு சார். ஆனா… இங்கே ஒரு நாள் காலம்பரெ சார் சொன்னாரு. தோட்டத்துக்குப் போய் ரெண்டு குழி வெட்டுடாண்ணு. இதுவரை வீட்டில் மம்மட்டி எடுத்து வெட்டிப் பழக்கமில்லை. ஆனா தென்னம்பிள்ளை வைக்கணும், குழி வெட்டணுமுண்ணு நாலடி ஆழத்தில் குழி தோண்டினேன் மம்மட்டியால். 

ஆனா அவருக்குப் பிடிக்கவில்லை. ஆமா… அம்மா – சார் ரெண்டு பேருக்கும் என்னைப் பிடிக்கவே மாட்டேங்குது… என்னைக்கும் ராத்திரி ஒன்பது மணிக்கெல்லாம் ரேடியோவில் நியூஸ் கேட்டுவிட்டு சாரும் அம்மாவும் மேலே மாடியில் படுக்கப் போயிடுவாங்க… நான் வெளி வராந்தாவில் படுப்பேன். போர்த் பாரம் வரை படிச்சதல்லவா, படிச்ச எழுத்து மறந்து போயிரக் கூடாதேன்னு பேப்பரை எடுத்துக் கூட்டி வாசிச்சுக்கிட்டிருப்பேன். மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்த்து விட்டு அம்மா சத்தம் போடுவாள். ‘டேய் கோவாலா, லைட்டை அணைடா…’ நான் உடனேயே லைட்டை அணைச்சு விட்டுப் படுத்துடுவேன். 

காலம்பரெ, நீ எதுக்குடா ராத்திரி பூரா லைட்டை போட்டிருந்தேண்ணு கேட்டப்போ, நான் சொன்னேன் பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தேண்ணு, ‘தரித்திரவாசி… நீ பி.ஏ., பி.எஸ்.ஸி. பரீட்சைக்குப் படிக்கிறியா… ராத்திரி பேசாம லைட்டை அணைச்சு விட்டு படுத்துக்கணும்’ – அப்படீண்ணு ஏசினாங்க அம்மா. அம்மா நல்ல குணமாக இருக்கும்போது நான் சொன்னேன். ‘அம்மா என் பேரு கோவாலன்… என்னை இப்படி தரித்திரவாசீண்ணு கூப்பிடாதீங்க’ அப்படீண்ணு! ‘ஏண்டா நீ என்னை உபதேசிக்கிறியா… அவ்வளவு தூரத்துக்கு வந்திட்டியா தரித்திரவாசி’ – அப்படீண்ணு அம்மா மறுபடியும் ஏசினாங்க. 

என் வேலையில் நான் சோம்பேறித்தனம் எதுவும் காட்ட மாட்டேன் சார். அது எனக்குத் தெரியாது சார்… காலையிலும் சாயந்திரமும் வீட்டுக்குள்ளேயும் முற்றம் எல்லாம் பெருக்கணும்… செடி கொடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றணும்… பிறகு சமைக்கணும்… கீழேயும் மாடியிலும் மொஸைக் தரை முழுதும் கண்ணாடிபோல் துடைக்கணும்… இந்த வீட்டில் மூணு பாத்ரூம் சார். அதையெல்லாம் நல்லா கழுவி விடணும்… கடைக்குப்போய் காய்கறி, மீனெல்லாம் வாங்கி வரணும்… ராத்திரி சப்பாத்தி மாவை குழைச்சுக் கொடுக்கணும்… இப்படி இப்படி… 

எப்போவானாலும் நம் வேலையை நாமொதானே செய்யணுமுண்ணு சுறுசுறுப்பா வேலை செஞ்சுக்கிட்டிருப்பேன். அப்போ சீக்கிரமா வேலை முடிஞ்சுட்டா அம்மா ஏசுவாள், ஏண்டா தரித்திரவாசி… நீ சரியா செய்யல்லே. அதுதான் வேலையெல்லாம் இவ்வளவு சீக்கிரத்தில் முடிஞ்சு போச்சு! நான் என்ன செய்வேன். அம்மா சொல்றாங்களேண்ணு வேணுமுண்ணே நாள் பூராவும் வேலையை மெல்ல மெல்ல இழுத்தடிச்சுக்கிட்டு செய்யவும் எனக்கு வர மாட்டேங்குதே சார்… பாருங்கோ சார்… ஒரு தடவை எனக்குக் கடுமையான வயிற்று வலி. அம்மா கூப்பிட்டாங்க. என்னாலெ எந்திரிச்சிப் போகமுடியல்லே. அதுக்கு என்னை ரொம்ப ஏசினாங்க, ‘தரித்திரவாசி… சும்மா வயிற்று வலீன்னு கிடக்கிறான்’ அப்படீண்ணு. அடுத்தநாள் முதல் மூணு நாளைக்கு அம்மா மாடியிலிருந்து கீழே இறங்கவே இல்லை… அவுங்களுக்கும் வயிற்று வலி. ஆமா சார் எல்லாத்துக்கும் கடவுள் ஒருவர் இருக்கார். 

எனக்குப் பதினைஞ்சு ரூவா சம்பளம் தருவாங்கண்ணு நினைச்சேன் சார்… ரெண்டு நாள் முந்தி பள்ளிக்கூடம் திறந்தாச்சு. புஸ்தகம் எல்லாம் வாங்கணும், சட்டை ஒண்ணும் இல்லை, அப்படீண்ணு தம்பிகிட்டெயிருந்து காயிதம் வந்தது… நான் சார்கிட்டெ போய் காயிதத்தைக் காட்டி வீட்டுக்கு ரூபா அனுப்பணுமுண்ணு சொன்னேன்… நீ வந்து ரெண்டு மாதம்தானே ஆச்சு. வீட்டுக்கு இப்படி அப்பப்போ ரூபா அனுப்பி வச்சா, நீ வீட்டுக்கு ஏதாவது விசேஷமுண்ணு போகும்போது ரூபா ஏதும் சேர்த்துக் கொண்டுபோக முடியாது அப்படீண்ணு சொன்னார் சார். அப்போ வேண்டாம்; இப்போ தம்பிக்கும் தங்கச்சிக்கும் புஸ்தகம் வாங்கணுமுண்ணு சொன்னேன். மணியார்டர் பாரம் வாங்கிக்கொண்டு வரச் சொன் னார். நான் வாங்கி வந்தேன். இருபது ரூபாவும் பாரமும் தந்து போஸ்டாபீஸில் போய் அனுப்பிவிட எங்கிட்டெ சொன்னார். அப்போ பத்து ரூவா வச்சிதான் எனக்கு சம்பளம் போட்டிருக்கிறாரு… நான் செய்யுற வேலைக்கு அது கொறவுதான். ஆனா… போஸ்டாபீஸுக்குப் போனபோது மணி ரெண்டாயிடுச்சி. இனி நாளைக்குத்தான் எடுப்போமுண்ணு சொல்லிட்டாங்க. சார் கிட்டே வந்து சொன்னேன். உம்… இப்படிக் கொடு. நாளைக்கு ஆபீஸ் பியூன்கிட்டே சொல்லி அனுப்பி விடுகிறேன் – அப்படீண்ணு திரும்ப வாங்கிக்கிட்டார். அனுப்பியாச்சாண்ணு சார் கிட்டே கேட்க எனக்குப் பயம். அனுப்பியிருப்பார்… 

இப்படித்தான் சார். ஒரு தடவை சாரும் அம்மாவும் ஏதோ ஒரு கல்யாணத்துக்கு வெளியே போயிருந்தாங்க… திரும்பி வர ராத்திரி ரொம்ப நேரமாச்சு. கேட்டை உள்ளிருந்து பூட்டி விட்டு இந்த வராந்தாவில் குந்தியிருந்தேன். அப்படியே தூங்கிப் போனேன்… கார் ஹாரன் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழுந்தடிச்சுக்கிட்டு பார்த்தா வெளியில் கேட்டின் முன்னால் கார் நிற்பது தெரிந்தது… ஓடியே போய்க் கதவைத் திறந்தேன். என்னடா தரித்திரவாசி அதுக்குள்ளே தூக்கம்… என்று சத்தம் போட்டாள். நேரம் நடுநிசி கழிந்திருக்கும். உள்ளே வந்ததும் கார் ஷெட் லைட்டைப் போட்டார். லைட் எரியவில்லை. வீட்டைத் திறந்து உள்ளே லைட்களைப் போட்டபோது அந்த லைட் எல்லாம் எரிந்தது. காலையில் வந்து பார்த்த போதுதான் தெரிஞ்சுது கார் ஷெட் பல்பைக் காணல்லே. 

சாரும் அம்மாவும் திருட்டுப் பட்டத்தை என் மீது சுமத்தினாங்க. தரித்திரவாசி நீதான் பல்பைக் கழற்றி விற்றிருப்பேண்ணு! நான் கண்ணயர்ந்த நேரம் யாரோ வந்து திருடிக்கிட்டு போயிருக்கான். எதுக்கு சார் எனக்கு இந்தப் பல்பு? 

அண்ணைக்கு மத்தியானம்தான் இந்த டிரைவர் வேலையிலிருந்து நிண்ணு விட்டான். மத்தியானம் சாருக்கு எங்கோ வெளியே போகணும். டிரைவர் சாப்பிடப் போகும்போது மூணு மணிக்கு அவனை வரச் சொல்லியிருந்தார். அண்ணைக்கு ஒரே மழை. அவன் சர்ச்சுக்கும் போயிட்டு வரும்போது மணி மூணரை… சாருக்கு கோபம் வந்துட்டுது. உன் இஷ்டம்போல் வந்தால் இங்கே முடியாது – அப்படி இப்படீண்ணு சத்தம் போட்டாரு. காரை எடுக்கட்டுமான்னு அவன் கேட்டப்போ, வேண்டாமுண்ணுட்டாரு – அவன் சாயந்திரம் வீட்டுக்குப் போகும்போது, நாளைக்கு எப்போ சார் வரணுமுண்ணு கேட்டான். என் இஷ்டத்துக்கா நீ வர்றே? உன் இஷ்டம் போல் வா – அப்படீண்ணு சார் சொன்னார்… அவன் பெரிய மானஸ்தன். அவன் ஒண்ணுமே பேசாம இங்கே கேட் கிட்டே வந்து, தம்பி நாளைக்குத் தொட்டு நான் வர மாட்டேன். நீ அம்மாகிட்டெ சொல்லிடுண்ணு எங்கிட்டெ சொல்லிட்டு நடந்தான்.நான் அம்மாகிட்டே போய் சொன்னேன். உடனையே அம்மா, ‘டேய் தரித்திரவாசி… நீயாடா இந்த வீட்டு சாரு? உங்கிட்டெ அவன் சொன்னாண்ணு நீ எப்படி வந்து சொல்லலாம்’ அப்படி இப்படிண்ணு என்னை ஏசினாங்க. 

நான் ரோடில் இறங்கி டிரைவர் பின்னாலேயே ஓடிச் சென்று வழியில் வச்சி, அவனைக் கண்டு சொன்ன பிறகு அவனே நேரடியாக சார்கிட்டெ வந்து சொன்னான். சார் அண்ணைக்கு வரையுள்ள சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து அனுப்பி வச்சார். பிறகு ஒன்றிரண்டு வேறெ டிரைவர்மார்கள் எங்கிட்டெ வந்து, ‘தம்பீ இங்கே டிரைவர் வேலை காலியாக இருக்கா? ஆள் வேண்டுமாண்ணு’கேட்டாங்க… நான் சொன்னேன். ‘ஐயையோ எனக்கு ஒண்ணும் தெரியாது. நான் இந்த வீட்டு சாரில்லை. நீங்க போய் அம்மாகிட்டே கேளுங்க…!’ எதுக்கு சார் வீண் வம்பு? வயத்துப் பிழைப்புக்கு வேலை பார்க்க வந்தேன். சலம்பாமெ வேலை செஞ்சுக்கிட்டு கிடக்கணும். இல்லையா சார்? இதையெல்லாம் உங்களைக் கண்டதும் ஏனோ சொல்லணுமுண்ணு எனக்குத் தோணிச்சு சார். சொல்லிட்டேன். 

சார் இப்போ அம்மாவும் சாரும் வந்ததும் சொன்னால் எனக்கு வேலை போயிடும். பரவாயில்லை சார்… அண்ணைக்கு அந்த வெள்ளைக்கார அம்மா போகும்போது எனக்கு ரெண்டு ரூவா தந்தாங்க… மூணு வருஷம் கழிஞ்சு நான் இந்தியாவுக்கு மறுபடியும் வருவேன். அப்போ நீ இங்கேயே இருக்கணும். அப்படீண்ணு சொன்னாங்க… சார். இந்த ம மாதிரி போயிட்டிருந்தா இன்னும் மூணு மாசம்கூட இங்கே தள்ளிட முடியுமாண்ணு எனக்கு தோணல்லே… என்ன சார் மணி எட்டாயிட்டுதா சார். சாதாரணமா ஏழு மணிக்கு முந்தி வந்திடுவாங்க சார். இண்ணைக்கு ஏனோ இன்னும் காணல்லையே சார். இவ்வளவு நேரம் காத்து நிண்ணு விட்டு, சாரை பார்க்காமெ போவது கஷ்டம்தான்… சார் போகப் போறிங்களா…? அப்போ நான் சொல்லுறேன் சார். சார் போனில் பேசிக்குவீங்களா சார்… ரொம்ப நல்லது சார்… சரி சார். போயிட்டு வாங்க மறுபடியும் சார். இங்கே வரும்போது நான் இங்கே இருப்பேனோ என்னம்மோ சார், சரி சார். போயிட்டு வாங்கோ சார்… சரி… 

– 15.06.1973

– தீபம் 8.1973

– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *