கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 1,162 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30

அத்தியாயம் இருபத்தொன்று 

செந்தாமரை மகிழ்வுடன், துள்ளிக்குதித்த வண்ணம் பியசேனாவின் கொந்தரப்பு மலையை நோக்கி ஓடி வந்தாள். 

அவள் வருவதைக் கவனிக்காத பியசேனா, ஏதோ யோசனையுடன் கற்பாறையொன்றின் மேல் அமர்ந்திருந்தான். அருகே நெருங்கிய செந்தாமரை பின்புறமாகச் சென்று குறும்புத்தனமாக அவனது கண்களை திடீரெனப் பொத்தினாள். 

ஒரு கணம் திடுக்குற்ற பியசேனா, அவளது கைகளில் பலமாகக் கிள்ளினான். 

“ஆ…” எனச் செல்லமாகச் சிணுங்கியபடி கைகளை உதறிக்கொண்டே அவன் முன்னே வந்தாள் செந்தாமரை. 

”என்ன செந்தாமரை… எவ்வளவு நேரமா நான் ஒனக்காக இங்க காத்திருக்கேன் தெரியுமா?’ எனக் கேட்டுக் கொண்டே கைகளால் அவளது இடையைச் சுற்றி வளைத்துத் தன்னருகே இழுத்தான் பியசேனா. 

“இன்னிக்கு எங்க மலைக்கு கண்டக்கையா வந்திட்டாரு; இப்ப கொஞ்ச நேரத்துக்கு முந்தித்தான் மலையை வுட்டுப் போனாரு. அதற்கு அப்புறந்தான் நான் கங்காணிக் கிட்ட சொல்லிப்புட்டு வந்தேன்” எனக் கூறிய செந்தாமரை, அவனது கைகளை மெதுவாக விலக்கிவிட்டு அவனருகே அமர்ந்து கொண்டாள். 

“நீ வராமயேதும் இருந்திடுவியோன்னு நான் பயந்தே போயிட்டேன்” எனக் கூறிக் கொண்டே அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்து கொண்டான் பியசேனா. 

“எப்புடீங்க நான் வராம இருப்பேன். நீங்கதான் முக்கியமா ஏதோ கதைக்கணுமுன்னு ஒங்க கூட்டாளிகிட்ட சொல்லியனுப்பியிருந்தீங்களே” எனக் கூறிய செந்தாமரை பியசேனாவின் கைகளைத் தனது கைகளோடு கோர்த்துக் கொண்டாள். 

“ஆமாசெந்தாமரை, முக்கியமான விசயந்தான்… எங்க சித்தப்பா எனக்கு வேற கலியாணம் செஞ்சு வைக்கபாக்கிறாரு. எங்கம்மாகிட்ட போன கிழமை வந்து இதைப்பத்திக் கதைச்சாரு” எனக் கவலைதோய்ந்த குரலில் கூறினான் பியசேனா. 

“இதுதான் ஒங்க முக்கியமான வெசயமா?” எனச் செந்தாமரை சிறிது எரிச்சலுடன் கேட்டாள். 

“எங்கம்மாவும் சித்தப்பா பேச்சைக் கேட்டுக்கிட்டு, என்னை வேற கல்யாணஞ் செய்யச் சொல்லி கரச்ச பண்ணிக்கிட்டு இருக்காங்க” எனக் கூறிய பியசேனா அவளது கைகளை மெதுவாக வருடினான். 

“அப்படீன்னா… இதுவரைக்கும் நம்ப வெசயத்தைப் பத்தி உங்க அம்மாக்கிட்ட சொல்லவே இல்லியா?” எனக் கலக்கத்துடன் கேட்டாள் செந்தாமரை. 

”நம்ம வெசயமெல்லாம் அம்மாவுக்கு நல்லாத் தெரியும் செந்தாமரை…நான் எவ்வளவோ அவுங்ககிட்ட சொல்லிப்பாத்திட்டேன்; ஆனா அவுங்களும் பிடிவாதமா இருக்காங்க” எனக் கூறிய பியசேனா அவளது கைகளை உற்றுப் பார்த்தான். 

“இதுக்கு நம்ம என்னதான் செய்யலாம்” என யோசனையுடன் கேட்டாள் செந்தாமரை. 

“இந்த விசயத்தில நான் எங்க அம்மாவோட மனச கஷ்டப்படுத்த விரும்பல்ல; அவுங்க மட்டுந்தான் எனக்கு இருக்காங்க.” 

“அப்படின்னா ஒங்கம்மா பேச்சைக் கேட்டுத்தான் நீங்க நடக்கப்போறீங்களா?” என வெடுக்கெனக் கேட்டாள் செந்தாமரை. 

“என் நிலைமையில நான் என்னதான் செய்யலாம்; நீயே சொல்லு…” எனக் கெஞ்சும் குரலில் கூறினான் பியசேனா. 

“நீங்க சொல்லுறதைப் பாத்தா என்னைக் கைவிட்டுப் புடுவீங்க போல இருக்கு” செந்தாமரையின் குரல் கரகரத்தது. அவளது கண்களில் நீர் முட்டியது. 

“எங்கம்மா மட்டுமில்ல… நாட்டில இருக்கிற ஒருத்தருமே நம்ம தொடர்பை விரும்பல்ல செந்தாமரை; எல்லோரையுமே பகைச்சுக்கிட்டு இருக்க முடியுமா?” 

“என்னை நீங்க ஏமாத்தப் பாக்குறீங்க; புதிசா கலியாணம் பேசினவொடன ஒங்க மனசே மாறிப்போச்சு-” எனக் கூறிய செந்தாமரை திடீரென எழுந்தாள். அவளையும் மீறிக் கொண்டு அவளது கண்களில் நீர் முட்டி வழிந்தது. 

பியசேனா எழுந்து அவளது கைகளைப் பற்றினான்.

“என்னைத் தொடாதீங்க, வரவர ஒங்க பேச்சே மாறிக் கிட்டு வருது. நான்தான் ஏமாந்திட்டேன்” எனக் கூறிய செந்தாமரை முகத்தைப் பொத்திக்கொண்டு விம்மினாள். 

“இப்ப என்ன தான் சொல்லிட்டேன். ஏன் இப்புடி அழுறே. நம்ம வெசயத்துக்கு எல்லாரும் எதிர்ப்பா இருக்காங்கன்னுதானே சொன்னேன்” என அவளைத் தேற்றும் வண்ணம் கூறினான் பியசேனா. 

செந்தாமரை தொடர்ந்தும் பெரிதாக விம்மினாள். அவள் அப்படி விம்முவதைப் பார்த்த பியசேனாவின் உள்ளம் பதறியது. 

“செந்தாமரை, ஒன்னைப் பிரிஞ்சு என்னால இருக்கமுடியுமுனு நெனைக்கிறியா? அழாத செந்தாமரை…” எனக் கூறிய பியசேனா ஆதரவுடன் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான். 

“என்னை, நீங்க கைவிட்டுட்டீங்கன்னா அப்புறம் நான் உசிரோட இருக்கமாட்டேன்” செந்தாமரை விம்மலிடையே கூறினாள். 

“ஏன் செந்தாமரை… இப்புடி எல்லாம் கதைக்கிறே. நான் ஒன்னை ஒரு நாளும் ஏமாத்தமாட்டேன்” எனக் கூறிய பியசேனா அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான். 

”சரிங்க…நான் வந்து ரொம்ப நேரமாகுது. வூட்டுக்குப் போகனும்” எனக் கூறிக் கொண்டே அவனது கைகளை மெதுவாக விலக்கி விட்டாள் செந்தாமரை. 

“இந்தா பாரு செந்தாமரை…நான் எந்த நேரத்தில வந்து ஒன்ன கூப்பிட்டாலும் நீ என்னோட வாறதுக்கு ரெடியா இருக்கோனும். நான் எல்லா ஒழுங்குகளையும் செஞ்சிட்டு வந்து ஒன்ன கூப்பிடுவேன்; இத சொல்லத்தான் முக்கியமா ஒன்னை வரச்சொன்னேன்” எனக் கூறியபடி அவளது கன்னத்தில் வழிந்திருந்த நீரைத் தனது விரல்களால் துடைத்துவிட்டான் பியசேனா. 

அவள் அவனது கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு அவனிடம் விடை பெற்றாள். 

மகிழ்ச்சியுடன் துள்ளியபடி அவள் ஒற்றையடிப் பாதையின் வளைவில் ஏறியபோது அங்கே அவள் கண்ட காட்சி அவளது நெஞ்சை விறைக்க வைத்தது. 

அங்கு – கண்டக்டர் சிகரெட் புகைத்த வண்ணம் அவளையே உற்று நோக்கியபடி நின்று கொண்டிருந்தார். 

அத்தியாயம் இருபத்திரண்டு 

அன்று சனிக்கிழமை. 

வழமைபோல் அந்தப் பகுதியில் உள்ள தோட்டத் துரைமார்கள் எல்லோரும் கிளப்பில் சந்தித்தார்கள். 

பொதுவாக கிளப்நாள் என்றால் துரைமார் எல்லோ ருக்கும் சந்தோஷமாக இருக்கும். அன்றுதான் அவர்கள் தங்களது நண்பர்களான மற்றைய தோட்டத்து துரைமார்களைச் சந்தித்து உரையாடுவார்கள்; மது அருந்தி விட்டு ஆடிப்பாடி குதூகலமாகப் பொழுதைக் கழிப்பார்கள்; தமது சொந்தப் பிரச்சினைகளிலிருந்து தோட்டப் பிரச்சினைகள் வரை ஒருவரோடொருவர் கதைத்துப் பரிமாறிக் கொள்வார்கள். 

“ஹலோ மிஸ்டர் சில்வா, வாருங்கள் நாம் கரம் விளையாடலாம்.” 

‘பார்’ அருகே மது அருந்திக் கொண்டிருந்த ஒருவர் பக்கத்துத் தோட்டத் துரையை அழைத்தார். 

“கம் யூ ஓல்சே ஹாவ் ஏ.ட்ரிங்…” எனக் கூறிவிட்டு அவரின் பதிலைக் கேளாமலே பார் கீப்பரிடம் ஆடர் கொடுத்தார் சில்வா துரை. 

இருவரும் தனிமையான ஓர் இடத்தில்போய் அமர்ந்து கொண்டனர். 

அவர்களுக்கு ‘பார்கீப்பர்’ மதுவைக் கொண்டு வந்து பரிமாறினான். 

“எப்படி உங்களது எஸ்டேட் விஷயங்கள் யாவும் ஒழுங்காக நடக்கின்றதா? தேயிலை விலையெல்லாம் எப்படி?” எனக் கேட்டவாறு மதுவை கிளாஸில் ஊற்றினார் பக்கத்து தோட்டத் துரை. 

அவர்களது உரையாடல் ஆங்கிலத்தில் நடந்தது. 

“உலகச் சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்ததால் எமது தோட்டத் தேயிலையும் கூடிய விலைக்கே விற்கப்படுகின்றது. உண்மையில் நாம் தயாரிக்கும் தேயிலையின் தரம் மிகவும் குறைந்துவிட்டது” என்றார் மிஸ்டர் சில்வா மதுக் கிண்ணத்திற்குள் உற்றுப் பார்த்தவாறு. 

“ஆமாம். தேயிலைத் தோட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி வீழ்ச்சியை யாருமே புரிந்து கொள்ளாத வகையில் அதிர்ஷ்டவசமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார் பக்கத்து தோட்டத் துரை. 

“இந்த உற்பத்தி வீழ்ச்சியை இனிமேல் சரிப்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை-” 

“ஏன் திடீரென அப்படிக் கூறிவிட்டீர்கள், இப்போது தோட்டங்களில் மேலும் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க நிறையப் பணம் அரசாங்கத்தில் ஒதுக்கியிருக்கின்றார்கள் அல்லவா?” 

“ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனாலும் அந்தப் பணத்தை தோட்டத்திற்கு சரியான முறையில் உபயோகிக்க முடியாத நிலை உருவாகிக் கொண்டு வருகிறது” சில்வா துரையின் பேச்சில் கவலை தொனித்தது. 

“இப்போதுள்ள சூழ்நிலையில் நமக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும்-ஏன் இந்த நாட்டுக்குமே பெரிய பாதிப்பு ஏற்படப்போகின்றது. உடனே நாம் இதைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் போகப்போக இதைப் புரிந்து கொள்ளலாம்.” 

“தொழிலாளர்களது யூனியனிலிருந்தும் இது சம்பந்தமாக எனக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்கள்” என்றார் சில்வாதுரை. 

“அப்படியா, அந்தக் கடிதத்தில் என்ன விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்?” 

“தொழிலாளர்களது சலுகைகள் பெரிதும் குறைக்கப் பட்டுவிட்டதென்றும், வழமையாக தோட்டங்களில் செய்து வந்த வேலைகள் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.” 

“இதற்கு நீங்கள் என்ன கூறுவதாக உத்தேசித்துள்ளீர்கள்?” 

“அதுதான் எனக்கும் புரியவில்லை. தோட்டத்துக் கண்டக்டர், தோட்டத்தில் ஒழுங்காக வேலை செய்யாது தோட்டத்தைச் சுரண்டுகிறார்; அதைப்பற்றி இரகசியமான முறையில் நான் மாவட்டக் காரியாலய மனேஜரிடம் கூறினேன். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு எனக்கு அனுமதி தரவில்லை” 

“ஆமாம்… மாவட்டக் காரியாலயத்தில் இருப்பவர்கள் கூட கட்சி அமைப்பாளரின் ஆட்கள்தானே.” 

“எனது தோட்ட கோப்பிரட்டிவ் மனேஜர் கூட அரிசியைக் குறைத்து நிறுக்கின்றார் என்றும், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய ரேஷன் சாமான்களை கள்ள மார்க்கட்டில் விற்று விடுகிறார் என்றும் எனக்குத் தெரிய வந்துள்ளது. நான் யூனியனுக்குச் சென்று இதைப் பற்றி விசாரித்தும் பார்த்தேன். அந்தந்த மாதத்துக்கு வேண்டிய ரேஷன் சாமான்களை அவர்கள் கொடுத்து விட்டதாக என்னிடம் கூறினார்கள்.” 

“ஆமாம். அரசியல்வாதிகள் தங்களது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காக தோட்டங்களில் கூட்டுறவுச் சங்கக் கடைகளை அமைத்து, அதில் தங்களுக்கு சாதகமான ஆட்களையே வேலைக்கு அமர்த்துகின்றனர். ஆனால், அவர்களோ கடைகளில் உள்ள சாமான்களைச் சுரண்டி தொழிலாளர்களைக் கஷ்டத்துக்குள்ளாக்குகின்றனர்.” 

“இப்படித் தோட்டங்களில் அரசியல் புகுந்து நிர்வாகத்தில் பங்கம் விளைவிப்பதால் தோட்டங்களை நாம் சரியான பாதையில் கொண்டு நடத்த முடியாமல் இருக்கிறது.” 

“அது மட்டுமல்ல, இன்னுமொரு முக்கியமான விடயம் யாதெனில், தோட்டங்களில் இப்படி ஊழல் செய்பவர்களைத் தண்டிக்கவோ அல்லது தடைசெய்யவோ எத்தனிக்கும் போது நாம் எமது தொழிலையே இழக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி விடுகிறது.” 

“சரியாகக் கூறினீர்கள் மிஸ்டர் சொய்சா, எனது தோட்டத்துக்கு புதிதாக வந்திருக்கும் பெரிய கிளாக்கர் மீதுகூட எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. என்ன செய்வது, ஏதோ ஒருவாறு சமாளித்துத்தான் தோட்டத்தைக் கொண்டு நடத்துகிறேன்” எனக் கூறிய சில்வாத் துரை கிளாஸில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்துவிட்டு கிளாசைக் கீழே வைத்தார். 

“மிஸ்டர் சில்வா, உங்களுக்கு கோப்புரேட்டிவ் மனேஜர் எங்கே சாமான்களை விற்கின்றார் என்பது தெரியுமா?” 

”ஆமாம். தொழிலாளர்கள் எனக்கு அனுப்பியிருந்த கடிதமூலம் தெரிந்து கொண்டேன். பக்கத்துக் கிராமத்தில் உள்ள கடையில் தான் விற்கின்றார்.” 

“அப்படியானால் இது விஷயமாக நீங்கள் பொலிசுக்கு அறிவித்தல் கொடுக்கலாமல்லவா.” 

“பொலிசாரும் எம்மைப்போல் அரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டுதானே இருக்கின்றனர்.” 

சொய்சா சிந்தனையுடன் சிகரெட்டைப் பற்றவைத்து புகையை வெளியே ஊதினார். 

“ஏன் இப்போதுள்ள இன்ஸ்பெக்டர் நமக்குத் தெரிந்தவர்தானே. அவரிடம் இரகசியமாகச் சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம். அவர் எம்மை அரசியல் வட்டாரங்களுக்குக் காட்டிக் கொடுக்க மாட்டார்” எனக் கூறினார் மிஸ்டர் சொய்சா. 

சிறிது நேரத்தின் பின்னர் இருவரும் எழுந்து இசைக் கச்சேரி நடக்கும் இடத்துக்குச் சென்றனர். 

இப்போது சில்வா துரைக்கு சிறிது மனப்பாரம் குறைந்திருந்தது. 

அத்தியாயம் இருபத்துமூன்று 

மடுவத்தில் தொழிலாளர்கள் நிறைந்திருந்தனர். ஒருபக்கத்தில் கண்டக்டர் அன்று வேலை செய்தவர்களுக்கு பேர் போட்டுக்கொண்டிருந்தார். மறுபக்கத்தில் கொழுந்துக் கணக்கப்பிள்ளை கொழுந்து நிறுத்துக் கொண்டிருந்தார். கொந்தரப்புக் கணக்கப்பிள்ளை கணக்குகளைச் சரி பார்த்துக்கொண்டிருந்தார், மடுவம் ஒரே கலகலப்பாக இருந்தது. 

ஆபீஸில் இருந்து ‘டயறிப் பொடியன்’ அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தான். தினமும் காலையில் அன்றைய வேலைகளைப்பற்றிய விபரத்தை டயறியில் குறித்து, துரையின் பார்வைக்காக கண்டக்டர் அனுப்பிவைப்பார். அதனைப் பார்வையிட்டு, ஒப்பம்வைத்தபின்பு மாலையில் அதனை கண்டக்டருக்கு திருப்பி அனுப்பி வைப்பார் துரை. 

டைப் செய்யப்பட்டு துரையின் ஒப்பத்துடன் ஒரு நிருபமும் அன்று டயறியில் வைத்து அனுப்பப்பட்டிருந்தது. 

அதனை வாசித்தபோது கண்டக்டரின் முகத்தில் குழப்பம் காணப்பட்டது. 

“நமது தோட்டத்தை நிலமற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. வெகு விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும். இப்போது தோட்டத்தில் குடியிருப்பவர்கள் எல்லோரும் தோட்டத்தை விட்டு வெளியேறவேண்டும். அதற்குரிய ஒழுங்கு களையும் அரசாங்கம் செய்யும்.” 

மேற்கண்டவாறு அந்த நிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கண்டக்டரின் முகம் மாறியிருப்பதைப் பார்த்த வயதான தொழிலாளி ஒருவர் அருகே வந்து, “என்னங்கையா வேலை ஏதும் சரியில்லேன்று தொர கடுதாசி அனுப்பியிருக்காருங்களா?” எனக் கேட்டார். 

“நம்ப தோட்டத்தை கொலனிக்கு கொடுக்கப் போறது சொல்லி அரசாங்கத்தில இருந்து தொரைக்கு லெட்டர் அனுப்பியிருக்கு” கண்டக்டர். இப்படித் திடீரெனக் கூறியதும் மடுவத்தில் இருந்த எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டனர். 

கண்டக்டர் கூறிய விஷயம் வீரய்யாவுக்கும் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. 

“தோட்டத்தைவூட்டு ஆளுங்க எல்லாத்தையும் வெளியே போகவேணுஞ் சொல்லி கடுதாசி வந்திருக்கு. நீங்க எல்லாம் என்ன செய்யப்போறது?” என அங்கு சூழ்ந்து நின்றவர்களைப் பார்த்துக் கேட்டார் கண்டக்டர் 

“தோட்டத்தைவுட்டு நாங்கெல்லாம் எங்க ஐயா போறது?” எனக் கலக்கத்துடன் கேட்டான் அங்கு நின்ற குப்பன். 

“அதைப்பற்றி நமக்கு ஒண்ணும் தெரியாது. தோட்டத்தைவுட்டுப் போகச்சொல்லித்தான் கடதாசி வந்திருக்கு.” 

“இது என்னங்க பெரிய அநியாயமா இருக்கு. நாங் கெல்லாம் இந்தத் தோட்டத்திலயே பொறந்து வளந்தவங்க… இதைவுட்டு எங்கை ஐயா போறது?” எனப் பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன. 

“அரசாங்கத்தில இருந்துதானே கடுதாசி வந்திருக்கு. யாருக்கும் ஒண்ணும் செய்யமுடியாது. நீங்க எல்லாம் போகவேண்டித்தான் வரும்” எனக் கூறினார் கண்டக்டர். கண்டக்டர் இப்படிக் கூறியதும் அங்கு நின்றவர்களின் திகைப்பு மேலும் அதிகமாகியது. 

இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு கொழுந்துச் சாக்குகளை எடுத்து அடுக்கியவண்ணம் இருந்த சுமணபால், கண்டக்டரின் அருகே சென்றான். 

“மொனுவத மாத்தயா கியன்னே; ஒக்கோமத யண்ட ஓனே?” அவனது குரலில் கலக்கம் தொனித்தது. 

“ஆமாம்.தோட்டத்தைவிட்டு எல்லோருமே போயாக வேண்டும்” என்றார் கண்டக்டர். 

“இது பெரிய அநியாயமாக அல்லவா இருக்கிறது?” எனக் கூறினான் சுமணபால. 

“அப்படியல்ல; அரசாங்கம் ஏதோ ஒரு முக்கிய கார ணத்தோடுதான் இதனைச் செய்கிறது? அதற்கு நாமெல்லோரும் உடன்பட்டுத்தான் ஆகவேண்டும்” எனக் கூறிய கண்டக்டர் அவனுடன் மேலும் கதைக்க விரும்பாதவராய் “சரி சரி, நீ போய் உனது வேலையைக் கவனி” எனச் சொல்லி அவனை அனுப்பிவைத்தார். 

சுமணபால கிராமத்திலிருந்து தினமும் வேலைக்கு வருபவன். வேலையில் நிதானமும், பொறுப்புணர்ச்சியும் மிக்கவன். எதையும் சிந்தித்து தெளிவோடுதான் பேசுவான். அதனாலே தான் முன்பிருந்த கண்டக்டர் அவனுக்கு, ‘சாக்குக்காரன்’ வேலை வழங்கியிருந்தார். 

கிராமத்திலிருந்து வேலைக்கு வரும் ஒருவன் தோட்டத் தொழிலாளர்களோடு சேர்ந்துகொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவது கண்டக்டருக்கு எரிச்சலை ஊட்டியது. 

“என்ன வீரய்யா ஒண்ணும் பேசாம இருக்கிற… நாமெல்லாம் போய்த்தான் ஆகணுமா?” ராமு கலக்கத்துடன் கேட்டான். 

“தோட்டத்தைவுட்டு அவுங்க போகச் சொல்லிட்டா அப்புடி ஒடன எல்லோரும் போயிடமுடியாது. நாமெல்லாம் ஒண்ணா சேர்ந்துயோசிச்சுத்தான் இதுக்கு ஒரு முடிவு செய்யணும்” என்றான் வீரய்யா யோசனையுடன். 

“இன்னிக்கே கூட்டம்போட்டு இதைப்பத்திப் பேசுவோம்” என்றான் பக்கத்தில் நின்ற செபமாலை. 

“ஆமா அந்திக்கு ஆறுமணிக்கு கூட்டம் வைப்போம். எல்லோரும் வந்திடுங்க” என்றான் வீரய்யா. 

ஒவ்வொருவராகக் கொழுந்துமடுவத்தைவிட்டு சஞ் சலத்துடன் கலைந்துசென்றனர். ஒவ்வொருவருடைய உள் ளத்திலும் பெருந் திகில் ஏற்பட்டிருந்தது. 

ஆண்டாண்டு காலமாக, அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரே குடும்பம் போன்று வாழ்ந்துவந்த சமூகப்பிணைப்பிலிருந்து சிதறிப்போவதை எவருமே விரும்பவில்லை. 

தோட்டத்தைவிட்டு வெளியேறுவதானால் அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் சென்று குடியேறிவிடவும் முடியாது. அப்படிக் குடியேறுவதற்கு இந்த நாட்டில் அவர்களுக்கு உரிமையும் இல்லை. 

தோட்டத்திலிருந்து சிதறிப்போய், வெவ்வேறு தோட்டங்களில் சேர்ந்து, புதிதாகத் தத்தமது வாழ்க்கையை ஆரம்பிப்பது அவர்களுக்கு ஒரு வேதனை தரும் விஷயமாக இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அது அவகளுடைய பிறந்த மண். சிறுவயதில் அவர்கள் ஓடியாடி விளையாடிய பூமி, ஏறியிறங்கிய மலைகள், குடியிருந்த லயங்கள், இரத்தத்தைப் பிழிந்து உழைத்து வளர்த் தெடுத்த தேயிலைச் செடிகள், இவை எல்லாவற்றையும் இழந்து போவதானால்-ஓ! அது மிகவும் கொடுமையான விஷயந்தான். 

அவர்களுக்கு இந்த உலகத்திலே இருப்பதெல்லாம் அவைகளின்மேல் அவர்கள் வைத்துள்ள பாச உணர்வு ஒன்றுதானே! 

எதிர்காலம் எப்படி அமையப்போகிறதோ என்று எதுவுமே தெரியாமல் சூனியப் பெருவெளியாக மனதிலே விரிந்துகிடக்க, எப்படித்தான் அவர்கள் தமது பாசப் பிணைப்புகளை அறுத்துக்கொண்டு வெளியே செல்லமுடியும்! 

அன்று இரவு மடுவத்திலே நடந்த கூட்டத்தில் பெருந்தாகையான தொழிலாளர்கள் பங்குபற்றினர். 

“தோட்டத்த அரசாங்கம் எடுத்தவொடன நாமெல்லாம் ரெம்ப சந்தோஷப்பட்டோம். அரசாங்கத்திலை நம்மளுக்கு நல்லது செய்வாங்கன்னு எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனா நாம நெனைச்சதுக்கு மாறாத்தான் எல்லாமே நடந்துக்கிட்டு வருகுது நாமெல்லாம் ஏமாந்திட்டோம்” வீரய்யா உணர்ச்சி ததும்பக் கூறினான். 

“தோட்டத்துக்குப் புதிசு புதிசா ஆளுங்க வந்தாங்க. இப்ப தோட்டத்த மூடுற நெலைக்கு கொண்டுவந்திட் டாங்க” என்றான் ராமு. 

“ஆளுகவூட்டு சம்பளத்தை வெட்டினாங்க, சாப்புடுற சாப்பாட்டை கொள்ளை அடிச்சானுக… நம்ப படிச்ச பொடியன்களுக்கு கெடைக்கிற வேலையளை அவுங்க புடிச்சி கிட்டாங்க. சிங்கள மாஸ்டர்மாரை அனுப்பி எங்க பிள்ளைங்களோட படிப்பையே சுரண்ட ஆரம்பிச்சாங்க. இதுக்கெல்லாம் நாம பொறுத்துக்கிட்டிருந்தோம். இப்ப நாங்க இருக்கிற எடத்தைவுட்டே நம்மளை துரத்தப் பாக்கிறாங்க. இனியும் நாம பொறுக்கணுமா?” உணர்ச்சிவேகத் துடன் கூறிவிட்டு எல்லோரையும் ஒரு தடவை பார்த்தான் வீரய்யா. 

“முடியாது…முடியாது… இனிமேலும் நாங்க பொறுத்திருக்கக் கூடாது”-பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன. 

“நாம் எதையுமே எதிர்த்துக் கேக்கமாட்டோமுனு நெனைச்சுக்கிட்டுத்தான், அவுங்க நெனைச்ச பாட்டுக்கு செஞ்சு கிட்டு வாறானுக… நாம இனிமே சும்மா இருக்கக் கூடாது. நம்ம எதிர்ப்பைக் காட்டணும்.” 

-வீரய்யா உறுதியுடன் கூறினான். 

அங்கிருந்த ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அசைக்கமுடியாத உறுதி கிளர்ந்தெழுந்தது. எவ்வித கஷ்டங்கள் வந்தாலும் எதையும் எதிர்த்துப் போராடக் கூடிய மனவலிமை இப்போது அவர்களிடத்தில் உருவாகியிருந்தது. 

அத்தியாயம் இருபத்துநான்கு 

அன்று நாட்டிலுள்ள புத்தவிகாரையில் கூட்டமொன்று நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.கிராம சேவகர், கூட்டம் நடைபெறுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னதாகவே பண்டா முதலாளியை அழைத்து வருவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். 

”வாங்க வாங்க ஜி.எஸ். மாத்தயா. எப்படி நமது விஷயமெல்லாம், சரிவந்திருக்கிறதா?” எனக் கேட்டபடி கிராமசேவகரை வரவேற்றார் பண்டா முதலாளி. 

“காரியங்கள் துரிதமாக நடக்கின்றன. நமது மனுக்களை விரைவில் உரிய இடத்திற்கு அனுப்பிவைத்துவிட்டால் எல்லாமே ஒரு கிழமையில் முடிந்துவிடும்” எனக் கூறிவிட்டு கிராமசேவகர் பண்டா முதலாளியின் வீட்டின் முன்புறமாக இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார். 

“கூட்டத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறதுதானே… நல்ல சரக்கு இருக்கிறது, அருந்திவிட்டுச் செல்லலாம்” எனக் கூறிய பண்டா முதலாளி கிராமசேவகரின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஒரு போத்தல் கள்ளை முட்டியில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தார். மெனிக்கா கடையிலிருந்து கிளாஸ் ஒன்றை எடுத்துவந்து மேசையில் வைத்தாள். 

“எப்படி அந்த வயல் விடயமெல்லாம் முடிந்துவிட்டதா, அல்லது ஏதும் பிரச்சினை இன்னும் இருக்கா?” என வினவியபடி கிளாஸில் கள்ளை ஊற்றிக் கிராமசேவகரிடம் கொடுத்தார் பண்டா முதலாளி. 

ஒரே மிடறில் கள்ளை உறிஞ்சிக் குடித்துவிட்டு வாயை புறங்கையினால் துடைத்தபடி கிளாசை மேசையில் வைத்தார் கிராமசேவகர். 

“டி.ஆர்.ஓ. நமது ஆள்தானே. அதனால் எல்லா விடயமும் சுலபமாக முடிந்துவிட்டது. தரிசாகக் கிடக்கும் நிலங்களையெல்லாம் பண்படுத்தி பயிர் செய்யும்படி தானே அரசாங்கம் கூறியிருக்கிறது.” 

“என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்…? அந்த இடத் கறுப்பண்ணன் கங்காணி வெகு காலமாக பயிர் செய்துகொண்டுவருகிறார். அது தரிசு நிலமாகக் கிடக்க வில்லையே’” எனக் கூறியபடி மீண்டும் கிளாஸில் கள்ளை நிரப்பினார் பண்டா முதலாளி. 

“நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனாலும் ஒரு விடயத்தை நீங்கள் மறந்துவிட்டீர்கள். இது எங்களுடைய நாடு. இந்த நாட்டின் பிரஜைகளாகிய எங்களுக்குத்தான் முதலில் எல்லா உரிமைகளும் இருக்கவேண்டும். அரசாங்கம் நமக்குச் சலுகைகளைச் செய்துகொடுக்கும்போது நாமாகவே அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமக்கு பயிர் செய்வதற்கு காணி இல்லாதபோது, இந்த நாட்டில் உரிமையற்ற ஒருவர் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை தனதாக்கிக்கொண்டு பயிர் செய்வது ஓர் அடாத்தான விஷயமல்லவா……” 

“அது சரி மாத்தயா… அந்த மடுவத்துக்குப் பக்கத்திலும் ஒரு வயல் இருக்கிறதல்லவா? அந்த வயலை நீங்கள் எப்படியாவது எனது பெயருக்கு மாற்றித் தாருங்கள்… நான் உங்களைக் கவனித்துக்கொள்கின்றேன்.” 

“இப்போது யார் அந்த வயலைச் செய்துவருகின்றார்கள் என்பது தெரியுமா…?” என யோசனையுடன் கேட்டார் கிராமசேவகர். 

“குண்டன் கங்காணி லயத்தில் வசிக்கும் தொழிலாளி ஒருவர்தான் அந்த வயலில் வேலைசெய்துவருகிறார். அந்த வயலுக்கும் நல்ல நீர் வசதி உண்டு.” 

“இப்போதுள்ள சூழ்நிலையில் அந்த வயலை உங்களுக்கு எடுத்துத் தருவது மிகவும் சுலபம். தோட்டத் தொழிலாளர்கள் எல்லாரும் இந்த மாத இறுதியில் தோட்டத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும். அந்தத் தோட்டத்தைத் தான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் காணியற்றவர்களுக்கு கொடுக்கப்போவதாக எனக்கு அறிவித்தல் கிடைத்திருக்கிறது. காணிகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது வயல் உள்ள பகுதியை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்” என்றார் கிராமசேவகர். 

அதைக்கேட்டதும் பண்டா முதலாளியின் உள்ளம் மகிழ்ச்சியில் நிரம்பியது. போத்தலில் கள்ளு முடிந்ததைக் கவனித்ததும் அவர் மேலும் 

ஒரு போத்தல் கள்ளு கொண்டுவரும்படி மெனிக்காவிடம் உத்தரவிடுகிறார். 

“வேண்டாம்… நாங்கள் இப்போது கூட்டத்திற்குப் போகவேண்டும். அதனால் அதிகம் குடித்துவிட்டால் பின்பு என்னால் எந்த வேலையும் செய்யமுடியாமல் போய்விடும்” என்றார் கிராமசேவகர் சிரித்தபடி. 

“தோட்டத்தில் காணி பகிர்ந்து அளிக்கும்போது எனது பெயரிலும் காணி கொடுக்கமுடியும்தானே…!” எனக் கண்களைச் சிமிட்டி சிரித்த மெனிக்கா, கிராமசேவகருக்கு முன்னால் சிகரட்பக்கற் ஒன்றை எடுத்துவைத்தாள். 

“குடும்பத்திற்கு ஒருவருக்குத்தான் முதலில் காணி கொடுப்பதாகத் திட்டம் இருக்கின்றது. ஆனால், உங்களைப்பொறுத்தவரையில் நான் விசேஷ சலுகைசெய்து தானே ஆகவேண்டும்” எனக் கூறிய கிராமசேவகர் சிகரட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தார். 

“நமது அண்ணன் மகன் பியசேனாவுக்கும், எமக்குக் கிடைக்கப்போகும் காணியின் பக்கத்திலேயே நிலம் கொடுத்து உதவவேண்டும்” என வேண்டினார் பண்டா முதலாளி. 

“ஓ…! இதெல்லாம் மிகவும் சின்ன விஷயம்; அதை நான் கட்டாயம் செய்துதருகிறேன். எனது சிபார்சின் பேரிலேதான் எல்லோருக்கும் காணி கொடுபடப்போகின்றது” எனக் கூறிய கிராமசேவகர் ஏதோ நினைத்துக் கொண்டவராக, 

“எப்படி அவனது விஷயம் இருக்கின்றது? இப்போதும் அந்த மாயாண்டியின் மகளுடன் அவன் தொடர்பு வைத்திருக்கின்றானா?” எனக் கேட்டார். 

”அவர்களது தொடர்பைத் தடை செய்வதற்கு நான் என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்திருக்கிறேன். நமது கண்டக்டர்கூட இந்த விஷயத்தில் எனக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்திருக்கின்றார்.” 

“அப்படியா? கண்டக்டரின் உதவியிருந்தால் நிச்சயமாக அவர்களைப் பிரித்துவிடலாம். அவர் தனது பதவியைப் பயன்படுத்தி, மாயாண்டியின் குடும்பத்தினருக்கு தொல்லைகள் கொடுத்தால் எல்லாமே சரியாகிவிடும்” என்றார் கிராமசேவகர். 

“அதே நேரத்தில் பியசேனாவுக்கும் வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துவைக்கும்படி அவனது தாயைத் தூண்டியிருக்கின்றேன்” என்றார் பண்டா முதலாளி. 

“இப்போது உள்ள சூழ்நிலை உங்களுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது. வெகு விரைவில் தோட்டத் தொழிலாளர்கள் எல்லோரும் தோட்டத்தைவிட்டுப் போய்விடுவார்கள். அதன் பின்னர் பியசேனாவுக்கு அவளைக் சந்திக்கும் வாய்ப்பு இருக்காது” என்றார் கிராமசேவகர். 

“இன்னும் சிறிது காலத்துக்கு அவன் அவளுடன் தொடர்புகொள்ளாதவாறு நாங்கள் பார்த்துக்கொண்டோமானால், பின்னர் பிரச்சினையே இருக்காது” என்றாள் பக்கத்திலே நின்ற மெனிக்கே. 

“நான்கூடப் பியசேனாவைத் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை செய்கின்றேன். அந்தப் பெண்ணுடன் இருக்கும் தொடர்பை அவன் நிறுத்திக்கொள்ளாவிட்டால். அவனுக்குக் காணி கிடைக்காதவாறு செய்யப்போவதாக பயமுறுத்திவைக்கிறேன்” என்றார் கிராமசேவகர். 

“அதுவும் நல்ல யோசனைதான். எல்லோருமே எதிர்ப்பைக் காண்பித்தால் அவன் அவளைக் கைவிட்டுத்தான் ஆக வேண்டும்” என்றார் பண்டா முதலாளி. 

“சரி, சரி நேரமாகிறது, நாங்கள் விகாரைக்குப் புறப்பட்டுப் போவோம். இதுவரையில் மக்கள் எமக்காகக் காத்திருப்பார்கள்” எனக் கூறி எழுந்திருந்தார் கிராம சேவகர். 

பண்டா முதலாளியும் தனது ‘கோட்டை’எடுத்து மாட் டிக்கொண்டு அவருடன் புறப்பட்டார். 

அவர்கள் விகாரையை அடைந்தபோது அங்கு சனக் கூட்டம் நிரம்பிவழிந்தது. 

கூட்டத்தில் பேசிய கிராமசேவகர், பக்கத்தில் உள்ள தோட்டம், கிராமத்தில் உள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படப் போவதாகவும், அதற்கு வேண்டிய நடவடிக்கைகள் யாவும் துரிதமாக நடக்கிறதெனவும், இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த கிராம மக்களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் ஏற்படப்போகிற தெனவும் விளக்கினார். அத்துடன் காணியற்றவர்கள் தங்களது விபரங்களை மனுப் பத்திரங்களில் நிரப்பித் தன்னிடம் தந்துவிட்டால், மிக விரைவில் எல்லோருக்கும் காணி பெற்றுத் தருவதாகவும் கூறினார். 

அங்கு நின்றவர்களது முகத்தில் உற்சாகம் தாண்டவ மாடியது. காணியற்றவர்கள் எல்லோருக்கும் இப்படிச் சுலபமாகக் காணி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வருமென ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர்களது உள்ளம் கிராமசேவகரையும், இவற்றுக்கெல்லாம் உறுதுணையாக நின்ற பண்டா முதலாளியையும் வாழ்த்தியது. 

கூட்டம் முடிவடைந்ததும் கிராமசேவகர் அங்குள்ள மக்களின் சார்பில் தாமாகவே மனுப்பத்திரங்களை நிரப்பி அவர்களிடம் ஒப்பம் வாங்கினார். அங்குள்ள கிராம மக்களுக்கு சரியான முறையில் மனுப்பத்திரங்களை நிரப்ப வேண்டிய அறிவு இல்லையென்பது அவருக்குத் தெரியும். 

பியசேனா தனது மனுப்பத்திரத்தைக் கிராமசேவகரிடம் கையளித்தபோது, “இது விடயமாக நான் உன்னி டம் தனிப்பட்ட முறையில் சில விடயங்களைப் பின்னர் கதைக்கவேண்டும்” எனக் கூறியவண்ணம் அவனது பத்திரத்தையும் அவர் பெற்றுக்கொண்டார். 

மனுப்பத்திரங்களில் கையொப்பமிட்ட மக்கள் மகிழ்ச்சிப் பிரவாகத்துடன் அவ்விடத்தை விட்டுக் கலைந்தனர். 

அத்தியாயம் இருபத்தைந்து 

கிராம சேவகர் வயலின் நடுவே குடை பிடித்த படி நின்று வேலை செய்பவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். முன்பு கறுப்பண்ணன் கங்காணிக்குச் சொந்த மாயிருந்த வயல் இப்போது அவருக்குச் சொந்தமாகிவிட்டது. கிராமத்திலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் பலர் இப்போது அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். 

சிலர் வரம்புகள் கட்டுவதிலும்; வேறுசிலர் ஏற்கனவே கருப்பண்ணன் கங்காணி நாற்றுப்போட்டு முளைக்க வைத்திருந்த நெற்பயிர்களைப் பிடுங்கி வயலில் நடுவதிலும் முனைந்திருந்தனர். வயலின் மறுபகுதியில் ஒரு சிலர் விதை நெல்லை விதைத்துக்கொண்டிருந்தனர், 

ஸ்தோப்பில் இருந்தபடியே முன்பு தனக்குச் சொந்தமாக இருந்த வயலில் இப்போது கிராமசேவகர் வேலை செய்விப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கறுப்பண்ணன் கங்காணிக்கு நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருந்தது. அவரது கண்கள் கலங்கியிருந்தன. 

தரிசாகக் கிடந்த நிலத்தை நெற்றி வியர்வை சிந்தி மாடாக உழைத்து வயலாக மாற்றியவர் அவர். பெரும் பணத்தைக் கொட்டி வயலைப் பண்படுத்தியவர் அவர். ஆனால், இன்று வேறொருவன் அடாத்தானமுறையில் அந்த வயலின் நடுவே நின்று வேலை செய்விக்கின்றான், அதனைப் பார்க்கும் போது அவரது அங்கங்கள் ஆத்திரத்தால் துடித்தன. 

கவ்வாத்துக் கத்தியால் அந்த ஆராய்சியின் கைகளைத் துண்டு துண்டாய் வெட்டி விட்டால் என்ன? அவரது கைகள் துருதுருத்தன. உணர்ச்சிகளை ஒருவாறு அவர் கட்டுப் படுத்திக்கொண்டார். 

அவரது மனைவி முதல் நாள் இரவு அவருடன் சண்டை பிடித்துக் கண்ணீர் சிந்தியதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார் கங்காணி. 

நிலத்தை உழுது பண்படுத்த வேண்டிய செலவுக்காக மனைவியின் சங்கிலியை வட்டிக் கடையில் அற வட்டிக்கு வைத்துத்தான் அவர் பணம் எடுத்திருந்தார்.அவரது மனைவிக்குத் தனது நகை மாண்டுவிடப் போகின்றதே என்ற ஏக்கத்தோடு, வயல் பறிமுதலாகிவிட்டதே என்ற கவலையும் சேர்ந்துகொண்டு அவளைப் பெரிதும் கலக்கியது, அவள் தான் என்ன செய்வாள்? கவலைகள் எல்லாம் கோபமாக மாறி, கணவனுடன் சண்டை பிடித்துத் தீர்த்தாள். 

“என்னாங்க கங்காணி ஒரே யோசனையா ஒக்காந்திட்டு இருக்கீங்க…இன்னிக்கு வேலைக்குப் போகலியா…?” சுரண்டியைக் கழுத்துக்குப் பின்னால் தோள்பட்டையின் மேல் வைத்தவாறு உள்ளே நுழைந்த குப்பன், கறுப்பண்ணன் கங்காணியின் அருகில் போய் அமர்ந்துகொண்டான். 

“காலம் போற போக்கப் பாத்தா நாமெல்லாம் இனிமே நல்ல முறையில வாழமுடியாது போலயிருக்கு. இது எங்க போயி முடியுமோ தெரியாது” என்றார் கறுப்பண்ணன் கங்காணி விரக்தியுடன். 

“என்னாங்க கங்காணி ஒரு மாதிரி சலிப்பா பேசுறீங்க; வயல் போனதிலயிருந்து ஆளும் ரெம்ப மோசமாப் போயிட்டிங்க.” 

“அந்த ஆராச்சிப்பய வயலை எடுத்ததிலயிருந்து எனக்குப் பயித்தியம் புடிச்சமாதிரி போயிருச்சு;சாப்பிடக் கூட மனசு வரல்ல; தூங்கவும் முடியல்ல.நம்ப ஜில்லா பிரதிநிதியையும் டி.ஆர்.ஓ. கிட்ட கூட்டிக்கிட்டுப் போய் கதைச்சுப் பார்த்தேன். அவரு என்னாடான்னா ஏதேதோ கேள்வியெல்லாம் கேக்கிறாரு.” 

“அப்புடி என்னதான் கேட்டுப்புட்டாங்க?” குப்பன் மேலும் விபரம் அறிய விரும்பி ஆவலுடன் கறுப்பண்ணனின் முகத்தைப் பார்த்தான். 

‘‘அத ஏங்கேக்கிற குப்பன்! நீ அந்த வயல்ல எவ்வளவு காலமா வேலை செஞ்சு வாற? வயல் வச்சிருக்கிறதுக்கு அரசாங்கத்துக்கு வரி கட்டுறியா… ஒனக்கு பிரஜா உரிமை இருக்கா? ஒன்னுடைய வயலென்னு என்ன ஆதாரம் இருக்கு? அப்புடி இப்புடினு கேள்வி மேல கேள்வி கேக்கத் தொடங்கிட்டான்.” 

“நம்ப வயலை அவுங்க புடுங்கிக்கிட்டதுமில்லாம, அவங்க கேக்கிற கேள்விக்கும் பதில் சொல்ற காலமிது…-ம்…” எனச் சலிப்போடு கூறினான் குப்பன். 

“நான் எல்லாத்தையும் வெவரமா சொன்னேன். பிரசா உரிமைக்கு இப்போதுதான் மனுப் போட்டிருக்கேன். தொரைதான் என்னை வயல் வெட்டிப் போடச் சொன்னாரு. எவ்வளவு காலம் செய்யுரோமுன்னு நான் எழுதி வைக்கல, ரொம்பப் பணமும் அந்த வயல்ல செலவு செஞ்சேன்னு சொன்னேன்; நம்ப பிரதிநிதியும் கூட எவ் வளவோ சொல்லிப் பாத்தாரு, அவுங்க கேட்டாத்தானே! ஒனக்கு பிரசாவுரிமை இல்லாததினால் நீ இந்தியாவுக்குப் போற ஆள். இந்த நாட்டிலே ஒனக்கு உரிமை இருந்தால் தானே காணி கொடுக்கலாமுனு சொல்லிப்புட்டாங்க. அப்புறம் என்னதான் செய்யிறது? நான் கவலையோட வூட்டுக்கு வந்துட்டேன்” என்றார் கறுப்பண்ணன் கங்காணி கவலை தோய்ந்த குரலில். 

“இது பெரிய அநியாயம்” என்றான் குப்பன், 

“அது மட்டுமில்ல குப்பன், நாங்க கதைச்சிட்டு வந்த வுடன் அந்த ஆராய்ச்சிப்பய ஏதோ புத்தகம் மாதிரி பெரிசா கொண்டுகிட்டு உள்ளுக்குப் போனான். ரெண்டு பேரும் சிங்களத்தில பேசிச் சிரிச்சாங்க. அப்பவே நெனைச்சன் இந்த ஆராய்ச்சிப் பயலும் டி.ஆர்.ஓ.வும் ஒரே கூட்டாளின்னு.” 

அப்போது வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்தான். 

“தாத்தா, தாத்தா அங்க பாருங்க, ஒங்க வாழைமரங்களை எல்லாம் வெட்டுராங்க.” 

“அட அநியாயக்கார பசங்களா… ஏண்டா வாழ மரத்த எல்லாம் வெட்டுறீங்க” எனப் பலமாக கூறிக் கொண்டு வயல் பக்கமாக ஓடினார் கறுப்பண்ணன் கஙகாணி. அவரைத் தொடர்ந்து குப்பனும் சென்றான். 

“ஐயா இது அநியாயமுங்க… நான் எவ்வளவு கஷ்டப் பட்டு உண்டாக்கினேன் தெரியுமா? வயலைத்தான் புடிங்கிக்கிட்டிங்கன்னா … வாழ மரத்தையும் வெட்டுறீங்களே. அதை வெட்டுரதுக்கு பதிலா என்னைய வெட்டுங்க” என்றார் கறுப்பண்ணன் கங்காணி ஆக்குரோசத்துடன். அவரது ரோமங்கள் சிலிர்த்தன. வார்த்தைகள் தடுமாறின. 
 
“இந்தா கங்காணி சும்மா சத்தம் போட்டு மெரட்ட வேணாம்… இந்த வாழ மரங்களால நெல்லுக்கு பூச்சி ரொம்ப வாரது. நீ கொண்டு போய் ஓங்க வீட்டுக்குகிட்ட வச்சுக்கோ” என்று கருப்பண்ணன் கங்காணியைப் பார்த்து முறைத்தார் கிராம சேவகர். 

“நானுந்தாங்க வருசக் கணக்கில வயல் செஞ்சிக்கிட்டு இருந்தேன். பூச்சி யொண்ணும் வரல்ல. இப்பதான் ஒங்களுக்கு புதுசா பூச்சி வருதா? சும்மா அது இதுன்னு சொல்லி அநியாயமா வாழ மரங்களை வெட்டாதீங்க…” 

“இந்தா அதிங் எல்லாங் எங்கிட்ட பேசவாணாங் போயி ஒங்க தொரகிட்ட பேசிக்க. நீ நம்பகிட்ட அடிக்கடி சண்டைக்கி வாரது, இனிமே நம்மளோட கரச்சலுக்கு வந்தா பொலிசில சொல்லி ஒன்னை ‘ரிமான்ட்’ பண்ணுவேன்” எனக் கோபமாக பேசிய கிராமசேவகர், மறுபக்கத்தில் விதைத்த நெல்லை லயத்திலிருந்த கோழிகளில் சில மேய்ந்து கோண்டிருந்ததைக் கவனித்தார். 

கிராம சேவகரின் ஆத்திரம் கோழிகளின் மேல் பாய்ந்தது. வரம்பின் மேல் இருந்த கல்லொன்றை எடுத்து மேய்ந்துகொண்டிருந்த கோழிகள் மீது பலமாக வீசினார். கோழியொன்று கல்லடி பட்டு சிறகைப் படபடவென்று அடித்துக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி நிலத்தில் வீழ்ந்தது. கிராம சேவகர் அந்தக் கோழியை எடுத்துக்கொண்டு லயத்துப் பக்கமாக வந்தார். 

மரணப்பிடியில் அகப்பட்டு துடித்துக்கொண்டிருந்த அந்தக் கோழியின் காலில் பிடித்துத் தலைகீழாகத் தூக்கிய படி, “இந்தா பாருங்க, இந்த லயத்து ஆளுங்களுக்கு இது தான் கடசி முறையா நாங் சொல்லுறது, இனிமே யாராச்சுங் ஆடு, மாடு, கோழியெல்லாம் வயல் பக்கம் விட்டா…நாங் இப்புடித்தான் அடிச்சி கொல்லுரது” எனக் கோபத்துடன் கூறினார். 

“நாங்க என்னங்கையா செய்வோம். காலையில கோழியத் தொறந்து வுட்டுட்டு வேலைக்குப் போயிடுரோம். அந்தக் கோழிங்களுக்கு என்னாங்க தெரியும், அது போயிட்டு மேயுது.” இப்போது லயத்தில் முன்னால் கூடிய கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 

“அதிங் எல்லாம் நமக்கு தெரியாது. நீயெல்லாம் கோழிய அடைச்சு தீனியப் போடு” 

“இது நாட்டுக் கோழிங்க, இதை அடைச்சிப்போட்டு வளக்க முடியாதுங்க, நீங்க குருவீங்க வராம எப்புடி ஆள் போட்டு வெரட்டுறீங்களோ அதேமாதிரி வயலுக்கும் ஒரு ஆள் போட்டு கோழிங்க வராம பாத்துக் கொள்ளுங்க…” எனச் சூடாக அங்கிருந்த பெண் ஒருத்தி கூறினாள். 

“நீங்க எல்லாம் நம்மகிட்ட மிச்சம் பேசவானாங் இனிமே ஆடு,மாடு,கோழி நம்மவூட்டு வயலுக்கு வந்தா, நா எல்லாத்தையும் புடிச்சுக்கொண்டு போறது” என அதிகாரத்துடன் கூறிய கிராம சேவகர் கையில் பிடித்திருந்த கோழியை சுழற்றி லயத்தின் முன்னால் வீசிவிட்டு வயல்பக்கமாகச் சென்றார். 

“இது என்னா பெரிய அநியாயமா இல்ல இருக்கு……. வழக்கமா யாரும் வயல்ல காவல் போட்டுத்தான் கோழி குருவி வெரட்டுவாங்க. இந்த ஆராய்ச்சி என்னடான்னா பெரிய சட்டமில்லியா போடுறான். லயத்திலே இனிமே ஒன்னும் வளக்க முடியாது போல இருக்கு” எனக் கூறினார் அப்போதுதான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெண் ஒருத்தி. 

“ஏண்டி சும்மா பெரிசா சட்டம் தெரிஞ்சமாதிரி கதைக்கிறீங்க… இன்னிக்கு கோழிய அடைச்சு வைக்கச் சொல்லுறான். நாளைக்கு ஆளுங்களெல்லாத்தையும் அடைச்சுப் போட்டாலும் போட்டிடுவான். அதுதாண்டி நமக்கு உள்ள சட்டம்” எனப் பலமாகக் கத்தினார் கருப்பண்ணன் கங்காணி. 

“அண்ணே, ஆத்திரப்படாம இருங்க; அவ்வளவு தூரத்துக்குப் போக நாங்க வுட்டுடுவோமா?” என கறுப்பண்ணன் கங்காணியைச் சாந்தப்படுத்தினான் குப்பன். 

”நீ ஒன்னும் வெளங்காம ஒளற குப்பன், இந்த நாட்டுல நமக்கு என்ன உரிம இருக்கு? நாமெல்லாம் அடிமைகளாத்தான் இருக்கோம். இன்னும் கொஞ்சக் காலம் போனா நாம செத்தாலும் பொதைக்கக்கூட இவுங்க எடம் குடுக்கமாட்டாங்க” எனக் கூறிக் கண் கலங்கிய கறுப்பண்ணன் கங்காணி, மறுகணம் ஆவேசம் வந்தவராகத் தன் இரு கைகளாலும் தலையில் அடித்தபடி. “இதெல்லாம் நம்ப தலைவிதியடா… நாமெல்லாம் உரிமையில்லாத நாய்கதாண்டா” எனக் கூறி விம்மத் தொடங்கினார். 

அவரைப் பார்த்தபோது அங்கு நின்ற அனைவரது கண்களும் கலங்கின.

– தொடரும்…

– குருதிமலை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 1979, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *