கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 4,142 
 
 

கதிர்வேலுவிற்குச் சங்கடமாக இருந்தது. எப்படி யோசித்தும் மனம் சமாதானமாகவில்லை.

மனதளவில் நிறையவே நினைத்து நொந்தான்.

அலுவலகம் விட்டு முகம் தொங்கி, வாடி, வதங்கி… வீடு திரும்பினான்.

மாலாவிற்கு கணவனைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது.

ஒருநாள் கூட இப்படி சோர்ந்து, சோம்பி, துவண்டு ஆள் வீடு திரும்பியதில்லை.

“என்னங்க…?”பதறி துடித்து கதிர்வேல் எதிரில் வந்தாள்.

இவனுக்கு மனைவியை ஏறெடுத்துப் பார்க்கப் பிடிக்கவில்லை. பேச மனமில்லாமல் தலைகுனிந்து உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தான்.

மாலாவிற்குப் பதறியது.

“உடம்பு சரி இல்லையா..?”சட்டென்று அவன் நெற்றியில் அக்கறையாய்க் கை வைத்து தொட்டுப் பார்த்தாள்.

“இல்லை..”தலை நிமிராமல் முணுமுணுத்தான்.

மாலாவிற்குக் கணவன் வருத்தம் மேலும் கிலியை ஏற்படுத்தியது.

”அலுவலகத்தில் ஏதாவது சண்டை, பிரச்சனையா…?”.

“இல்லே..”

“பின்னே ஏன் வீட்டுக்குள்ள வந்து இப்படி இடி விழுந்த மாதிரி உட்கார்ந்திருக்கீங்க..?”

“ஆமாம். இடிதான் ! ”

“விபரமா சொல்லுங்க…”

“உண்மை உன்னைத் சுடுமோன்னு பயமா இருக்கு..! ”

“பரவாயில்லே சொல்லுங்க..? ”

“சத்தியமா… நீ மனசுல எதையும் வைச்சுக்கக்கூடாது.”கை நீட்டினான்.

“இல்லே.”- இவள் அவன் கை மீது தன் கையை அடித்து சத்தியம் செய்தாள்.

கதிர்வேல் நிமிர்ந்தான்.

“நீ நம்ப திருமணத்துக்கு முன் யாரையாவது காதலிச்சிருக்கியா..?”பார்த்தான்.

“இல்லே. ஏன் ..?”அவனைத் திகைப்பாய்ப் பார்த்தாள்.

“சத்தியம் செய்திருக்கே. பொய் சொல்லக்கூடாது ! ”

‘ ஓ….. இதுக்குதான் அந்த சாத்தியமா…? ‘ -நினைத்த மாலா…

”காதலிச்சிருக்கேன் !”எந்தவித தயக்கமுமில்லாமல் சொன்னாள்.

“எப்போ..? ”

“நான் பட்டப்படிப்புப் படிக்கும்போது. ”

“யாரை…? ”

“என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பையன். ! ”

“பேர்..? ”

“சிவா..! ”

“அவன் நல்லவனா…? ”

“நல்லவன் ! ”

“ஏன் திருமணம் முடிக்கல…? ”

“சாதி, மதமெல்லாம் குறுக்கே புகுந்து கெடுத்துடுச்சு ! ”

“தப்பா நடந்திருக்கீங்களா..? ”

கேள்விக்குறியாய்ப் பார்த்தாள்.

“ஒருத்தரை ஒருத்தர் தொட்டிருக்கீங்களா..? ”

“இல்லே ! ‘

“பொய் ! ”

“சத்தியம் ”

கதிரவேலு அதற்கு மேல் பேசாமல் மௌனமானான்.

‘ தன் மனைவி ஒருத்தனைக் காதலித்த்ருக்கிறாள் ! ‘ – நினைவே கசந்தது.

”…………………………….”

“அத்தான் !”மாலா அழைத்தாள்.

ஏறிட்டான்.

“நீங்க… ஏன் என்னை இந்த கேள்வி கேட்டீங்க.?, எதுக்காக, எந்த அடிப்படையில் யார் என்ன சொல்லி கேட்டீங்க என்கிற விபரமெல்லாம் எனக்குத் தேவை இல்லே. இருந்தாலும் என் மனசுல பட்டதைச் சொல்றேன்.

கணவன் மனைவிக்குள் ஒளிவு, மறைவு, ரகசியம் கூடாதுன்னு நெனைச்சி நீங்க கேட்டிருந்தாலும் தப்பு. திருமணத்துக்கு முன்…. நீங்க யாரோ, நான் யாரோ. அதனால் காதல், கற்பு எல்லாம் அவுங்க அவுங்க சொந்த விசயம். அது நல்லதா இருந்தாலும், கெட்டதா இருந்தாலும்… ஒருத்தருக்கொருத்தர் கேட்டு தெரிஞ்சிக்கக் கூடாது.

திருமணத்துக்குப் பின்….. நாம ஒருத்தருக்கொருத்தர் சொந்தமானவர்கள். ரெண்டு பேருமே பிறரை மனசால நினைச்சாலும், காதலிச்சாலும், கள்ள உறவு வச்சிக்கிட்டாலும் தப்பு. நான் இந்த நிமிசம் வரைக்கும் எந்த ஒரு தப்பும் செய்யலை. இதுக்கு முன்னாலும் செய்யலை. நீங்க சந்தேகப்பட்டு கேட்டதுனால அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன். அது தப்பு. மன்னிச்சிடுங்க.”சொன்னாள்.

எவளும் உத்தமி இல்லே ! ‘ ன்னு எவனோ சொன்னதை நம்பி….! ச்சே ! – துடைத்த கதிர்வேல் …

தெளிவாய்…

“என்னை மன்னிச்சிடு மாலா… !”என்று மானசீகமாக சொல்லி அவளை அணைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *