தண்டனை…!




அழகாக வளைந்து நெளிந்து செல்லும் கொடைக்கானல் செல்லும் மலைகளின் சாலை.
வழியில் காரை ஓரம் கட்டி நிறுத்தி இறங்கிய ரகுராமன் தன்னோடு வந்திருக்கும் மனைவி ராணியை ‘ வா ‘ வென்று அழைக்காமல் சாலையோர தடுப்புச் சுவரில் ஏறினான்.
எதிரே… பச்சைப் பசேல் காடு. குனிந்து பார்த்தால் மரம், செடி, கொடிகள், பாறைகள் அடங்கிய கிடுகிடு பள்ளம். இதமான குளிர் காற்று. எல்லாம் இயற்கையின் வரம்.! கைகள் கட்டி நின்றான்.
அவனைத் தொடர்ந்து…இவளும் இறங்கி அவன் அருகில் ஏறி நின்றாள்
இளஞ்சோடி. இருவர் மனங்களிலும் கனத்த சுமை.
இருவருக்கும் சுமார் ஆறு மாத காலமாக மனக் கஷ்டம்.
வெளி உலகத்திற்குத்தான் இவர்கள் கணவன் , மனைவி. உள்ளுக்குள் ஒட்டுமில்லை, உறவுமில்லை. ஒரு காத இடைவெளி.!!
ரகுராமனுக்கும் ரோசலினுக்கும் தொடர்பாம்?!
அவள்….. இவன் அந்தரங்க காரியதரிசி. அந்தப் பழக்கம் அந்தரங்கத்திலும் தவறாய்த் தொடர்வதாய் ராணியின் குற்றச்சாட்டு. !
மனைவியின் வீண் சந்தேகம். கற்பனைப் பேச்சு, குற்றச்சாட்டிற்குப் பயந்து ரோசலினை வேலையை விட்டு போகச் சொல்ல முடியாது. இல்லை… இதற்காக இவன்தான் வேலையை விட்டுச் செல்ல முடியுமா..?
இரண்டுமே முடியாது. காரணம்… இருவருக்கும் வாழ்வாதாரம், வருமானம்.
ரகுராமன் மனைவியிடம் மறுத்துப் பார்த்துவிட்டான். எந்தவித தொடர்பும், தொடுதலும் இல்லை என்று இவள், அம்மா, அப்பா, பிள்ளைகள் என்று சாமி வரை சத்தியமும் செய்து பார்த்து விட்டான்.
ராணிக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று பிடிவாதமாக நிற்கிறாள்.
விளைவு…?
இவனின் ஒவ்வொரு அசைவு , நடவடிக்கையும் அவளுக்குத் தவறாகத் தெரிகிறது!.
இதனால் குடும்பத்தில் குழப்பம், மனவருத்தம், இருவருக்கும் பேச்சில்லை, எதுவுமில்லை, நிம்மதி இல்லை. எப்போதும் மன உளைச்சல்.
“ஒரு மாற்றத்திற்காக நாம் கொடைக்கானல் போகலாம்!” என்று அவளிடம் கூறி ஒரு முடிவுடன் ராணியை அழைத்து வந்திருக்கிறான்.
அவளும் அதுதான் சார் என்று அவனுடன் கிளம்பி வந்திருக்கிறாள். அவளுக்குக் கணவனின் போக்கு இன்னதென்று தெரியவில்லை!! – குழப்பம்.
‘ஒருவேளை… நம்மை இங்கே தள்ளி கொலை செய்ய திட்டமோ..?!’ என்று மனதில் தோன்ற…
‘செய்யட்டும் ! கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்து, அடுத்தவளுடன் படுத்து எழுந்து வருபவனோடு வாழ்வதை விட அவன் கையாலேயே முடிந்து போவது நல்லது! – துணிந்தாள்.
“ராணி…!” வெகு நேரத்திற்குப் பின் ரகுராமன் அழைத்தான்.
“சொல்லுங்க…?”
“நமக்குள் ஆறு மாதங்களாக பெரிய இடைவெளி. என் பேச்சை நம்பாமல், என் நடைத்தையில் சந்தேகப்பட்டு நீயும் நிம்மதி இல்லாம இருக்கே. நானும் நிம்மதி இல்லாம இருக்கேன். உன் வீண் சந்தேகத்தால் நாம ரெண்டு பேரும் கத்தி இல்லாம, ரத்தம் சிந்தாமல் அணு அணுவா சாகறோம். இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன். அந்த முடிவு……உன்னை…” சொல்லி நின்று திரும்பிப்பார்த்தான்.
முடிவு தெரிந்த ராணி…மனதைத் திடப்படுத்திக் கொண்டு இறப்பதற்குத் தயாராய் கண்களை இறுக்கி மூடினாள்.
“விதவையாக்கப் போறேன்!” சொன்ன ரகுராமன் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்தான்.
அடுத்த வினாடி…
“ஐயோ அத்தான்!” ராணி அலறி கண் விழித்தாள்.
அவன் மரம் செடிகளில் உரசி…. பாறையில் சொத்தென்று மோதி ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
அதிர்ச்சியில் ராணி மயங்கி சாலையில் சாய்ந்தாள். !!