தடம் மாறிய காதல்
குமாரதாசும் சுமித்திராவும் இப்படி ஒருநாள் சந்திப்பார்கள் என்று நினைக்கவில்லை.
சுமித்திராவுக்கு அந்த எதிர்பாரத சந்திப்பு உகப்பாய் இல்லை. அவ அதனை வெளிப்படுத்தாது குமாரதாசைப் பார்த்து கடமைக்குச் சிரித்தா ஆயினும் உள்ளுக்குள் ஒருவிதமான சங்கடமான மனநிலையிலேயே இருந்தா என்றே சொல்ல வேண்டும்.

குமாரதாசுக்கோ முப்பதாண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து சிரிப்பை வரவழைத்தது . அவரும் அதனை மறைத்து புன்னகை செய்தார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக்கல்லூரியில் குமாரதாசோடும் சுமித்திராவோடும் படித்த மாணவர்கள் சிலர் கூடி மிகுந்த உற்சாகத்தோடும் உணர்புபூர்வமாகவும் இந்த ஒன்று கூடும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். 96 திரைப்படத்தைப் பார்த்ததன் எதிர்வினையாக இருந்திருக்கலாம், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழ்ந்த இக் கல்லூரி மாணவர்கள் அப்பப்போ சந்தித்து தம் நினைவுகளைப் பறிமாறிக் கொள்வார்கள். அங்கிருப்பவர்கள் பலர் தாய்நாட்டுக்கு வந்து தமது பாடசாலை நண்பர்களோடு அளவலாவி தமது பழைய நினைவுகளை மீட்டெடுக்க விரும்பினார்கள். சிலருக்கோ தமது தற்பெருமைகளைப் பறைசாற்ற இத்தகைய ஒன்று கூடல்கள் தேவைப்பட்டன . அவர்கள் அதற்காகப் பெரும் தொகைப் பணத்தைச் செலவிடவும் கடல் கடந்து பயணிக்கவும் தயங்குவதில்லை.
சுமித்திராவுக்கு அந்த ஒன்று கூடலில் பங்கு கொள்ள ஆர்வம் சிறிதும் இருக்கவில்லை. அவ தான் கல்விகற்ற கல்லூரியிலேயே ஆசிரியையாகக் கடமைபுரிகிறா. அதனால் இந்த நிகழ்வை அவவால் தவிர்க்க முடியவில்லை.
ஆனால் குமாரதாசோ இந்த நிகழ்வுக்காகவே லண்டனில் இருந்து நாட்டுக்கு வந்திருந்தார்.
சுமித்திராவும் சுகன்னியாவும் அக்கா தங்ககைகள். ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள் இல்லைத்தான். சுமித்திராவின் அம்மாவும் சுகன்னியாவின் அம்மாவும் கூடப்பிறந்தவர்கள். சுமித்திரா ஆண்டின் முதல் பாதியில் பிறந்தவள் சுகன்னியா டிசம்பர் மாதத்தில் பிறந்தவள், அதனால் ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருந்தனர்.
சுமித்திராவுக்கோ பந்தையக்குதிரை போன்ற கட்டுமஸ்தான சிவந்த உடல் வாகு. சுகன்னியாவுக்குச் சற்று பருத்த உடல். மானிறம் தான். பொதுவாக பார்த்தவர்கள், இருவரில் சுமித்திராவே அழகி என்று சொல்வார்கள்.
ஆனால் சுகன்னியாவின் கண்களே குமாரதாசைக் கவர்ந்தன. அந்தக் கண்களை ஒத்த கண்களை அவன் இதுவரை கண்டதே இல்லை. அவற்றை காவியக்கண்கள் என்பான் அவன், அவள் கண்களின் கவர்ச்சியில் தன்னை இழந்து காதலில் விழுந்தவன் தான் குமாரதாஸ்.
சுகன்னியா தனது சித்திவீட்டில் தங்கி இருந்தே படித்ததால் இருவரும் பெரும்பாலும் இணைந்துதான் பள்ளிக்கு வருவார்கள். ஒரே வகுப்பில் படித்ததால் அருகருகிலேயே இருப்பார்கள்.
குமாரதாஸ் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தன் மனச்சிறைக்குள் அகப்படுத்தியே தீருவேன் என்ற வேட்கையுடன் சுகன்யாவை விழுங்கி விடுவது போல பார்த்திருப்பான். அப்பொழுதெல்லாம் சுமித்திரா தன்னையே குமாரதாஸ் பார்ப்பதாக கருதிக்கொள்வாள். அவளுக்கு அது பெருமையாகவும் இருந்தது.
சுகன்யாவுக்கு விடலைப் பருவக்கவர்ச்சியைக் காட்டிலும் படிப்பில் அதீத கவனம் இருந்தது. வகுப்பில் முதல் மதிப்பெண்களைப் பெறுவதே அவள் இலட்சியமாக இருந்தது. குமாரதாசோ வகுப்பில் முதல் மாணவனாக வந்து கொண்டிருந்தான். தவிரவும் கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகளிலும் பல பரிசில்களைப் பெற்று பாடசாலையில் பிரபல்லியமானவனாகவும் இருந்து வந்தான். அவனை ஒரு தடவையாவது வென்று தான் வகுப்பில் முதலாவதாக வரவேண்டும் என்று மிகவும் முயற்சி செய்து கொண்டிருந்தாள்
சுகன்னியா-
“குமாரதாஸ் என்னைக் காதலிக்கிறான் போல…அவன் என்னைப் பாக்கிற பார்வையைக் கவனி”
என சுமித்திரா, சுகன்னியாவின் காதில் கிசுகிசுத்தாள்.
சுகன்னியா குமாரதாசைக் கடைக்கண்ணால் பார்த்தபோது அவன் தங்கள் பக்கமே பார்த்திருப்பது தெரிந்தது.
சுகன்னியாவுக்கு சுமித்திரா தன்னை விட அழகானவள் என்ற எண்ணமும் தன்னைப் பற்றிய தாழ்வுச் சிக்கலும் இருந்தது..எனவே அவளும் சுமித்திராவையே குமாரதாஸ் சயிற்றடிப்பதாக நம்பினாள்.
“அவன் சயிற் அடிக்கிறானெண்டு அவண்ட காதல் வலையில விழுந்திடாத..படிக்கிற வயதில படிக்கிற வேலைய மட்டும்பார்..” கிழவி போல அறிவுரை கூறினாள் சுகன்னியா..
சுமித்திராவுக்கு அவளது இந்த அறிவுரை உவப்பாக இல்லை. சுகன்னியா பொறாமையால் இப்படிக் கதைப்பதாக அவள் எண்ணினாள். முதிர்ச்சியடையாத பருவத்தவளான அவளால் அப்படித்தான் எண்ணத் தோன்றும் போலும்.
“உனக்கு உன்னை ஆரும் பாக்கினம் இல்லை எண்டு பொறாமை”
சுகன்னியாவால் சுமித்திராவின் இந்தச் சுடு சொற்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முகம் சிவந்து கண்களில் நீர் கோடிட்டது. கோபத்தில் சுமித்திராவுடன் சில நாட்கள் கதைக்காமல் கூட இருந்தாள். ஆனால் ஒரே வீட்டில் இருந்து கதைக்காமல் இருப்பது சாத்தியமாக இருக்கவில்லை. இருவரும் பேசாதிருப்பதற்குக் காரணம் எது எனத் தன் தாய் கேட்டால் பிரச்சினையாக முடியும் என்பதால் சுகன்னியாவிடம் மன்னிப்பு பலமுறை கேட்டு சமாதானம் செய்தாள் சுமித்திரா..அதற்குப் பின் சுகன்னியா இந்த விடயத்தில் எந்த அக்கறையும் காட்டவில்லை.
ஆனால் அவர்கள் போகும் இடமெல்லாம் குமாரதாசினதும் அவன் நண்பன் மோகனதும் பிரசன்னம் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் குமாரதாசுக்கோ சுகன்னியாவுக்கு கடிதம் ஒன்றினை எழுதித் தன் தீராக் காதலை வெளிப்படுத்தும் துணிவு இருக்கவில்லை. அவள் தன்னில் விருப்பமில்லாதிருப்பின்… அக்கடிதத்தை ஆசிரியரிடமோ அதிபரிடமோ காட்டி முறையிட்டால்…வினையே வேண்டாம்.வகுப்பில் கெட்டிக்காரன்..நல்ல பிள்ளை எனப் பெயர் பெற்ற குமாரதாசின் நிலை இதனால் தலைகீழாக மாறிவிடுமே…
மோகன் குமாரதாசுக்கு உதவ விரும்பினாலும் அவனோ பெண்கள் விடயத்தில் குமாரதஸைவிடப் பெரும் கோழை…
ஆனால் அவன் ஒரு ஆலோசனை வழங்கினான். முதலில் சுகன்னியாவின் உறவுகளுடன் பழக்கத்தை எற்படுத்தி அவர்களிடம் நல்லெண்ண்த்தை எற்படுபுத்துவது. அதனூடாக சுகன்னியாவின் மனதில் குமாரதாஸ் நல்லவன் என்ற எண்ணத்தை எற்படுத்தி அவளுடன் நெருங்கிப்பழக வாய்ப்பை ஏற்படுத்துவது. பின்னர் மெல்ல மெல்ல காதலை வெளிப்படுத்துவது.
குமாரதாசுக்கு தலையைச்சுற்றி மூக்கைத் தொடும் இந்த ஆலோசனையில் விருப்பமில்லைத்தான்.. ஆனால் அவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை…
அவர்கள் பள்ளியில் ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் சகயமாகப் பேசிப் பழக அனுமதிப்பதில்லை. அதிபர் விடலைப் பருவப்பிள்ளகளை ஒன்றாகப் பழகவிடுவது நெருப்பினையும் பஞ்சினையும் ஒன்றாக பக்கத்தில் பக்கத்தில் வைப்பதற்குச் சமம்….படிக்கும் காலத்தில் காதலிப்பது மாணவர்களது கவனத்தைச் சிதறவிடக் காரணமாக அமைந்துவிடும் என்ற பிற்போக்கு எண்ணங்களைக் கொண்டவர்.
சுமித்திராவின் தம்பி கபிலனும் விமலனும். சுமித்திராவைவிட இரண்டு வயதுகளே குறைந்த இரட்டையர்கள். சுத்த உதவாக்கரைகள் அவர்களும் சுமித்திரா படித்த கல்லூரியிலேயே படித்தார்கள்.
குமாரதாசும் மோகனும், கபிலனையும் விமலனையும் நண்பர்கள் ஆக்கிய படாத பாடு படவேண்டியிருந்தது.கடைசியில் விமலனுக்கு கிரிக்கட் என்றால் உயிர் என்பதை அறிந்து கொண்டார்கள்.
குமாரதாசுக்கு கிரிக்கடில் அதிகமாக நாட்டமில்லைத்தான். ஆனால் தனது நண்பர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி கிரிக்கட் அணியில் விமலனை சேர்த்து விட்டான். ஆனால் குழப்படிக்கும் சேட்டைக்கும் பெயர்போன கபிலனின் விருப்பு எது என்பது கடைசி வரை தெரியவில்லை. ஆனால் அவனையும் சரிக்கட்ட ஒரு சந்தர்பம் கிடைக்கத்தான் செய்தது. கபிலன் சிக்கின்புணியா நோய் ஏற்பட்டு மானிப்பாய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தான் அதனைச்சாட்டாக வைத்து குமாரதாசும் மோகனும் கோர்லிக்ஸ் பிஸ்கட் என்று எடுத்துக்கொண்டு சென்று பார்த்து அவனையும் ஒருவாறு வளைத்துக் கொண்டார்கள்.கபிலன் விமலன் ஆகியோரின் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு சுமித்திராவின் வீட்டுக்கு அடிக்கடி வந்தார்கள்.
இருவரும் சுமித்திராவின் விதவைத் தாயை தங்களுடைய அக்கறையான விசாரிப்புக்களினால் கவரமுற்பட்டார்கள்.
அப்பொழுதெல்லாம் சுமித்திராவின் சிறிய கண்களில் ஆயிரம் வாற்ஸ் பல்ப் எரியும் , அவள் குறுக்கும் நெடுக்கும் நடந்து தனது இருப்பை குமாரதாசுக்கு வெளிப்படுத்துவாள். அவ்வப்போது அவர்களோடு எதார்த்தமாக கதைப்பது போல உரையாடவும் செய்தாள். ஆனால் குமாரதாசின் கண்களோ சுகன்னியாவைத் தேடும். சுகன்னியாவின் தரிசனம் எப்பொழுதாவது தான் குமாரதாசுக்குக் கிடைக்கும். அவளது தரிசனத்துக்கக்கக் காத்திருப்பது கூட ஒரு வகைச் சுகமாக இருந்தாலும் அவளிடம் தனது காதலை வெளிப்ப த்துவது மிகவும் கடினமானது எனற நிதர்சனம் அவனுக்கு உறைக்கத்தான் செய்தது. இவ்வளவு கஸ்ரப்பட்டது எல்லாம் வீண்தானோ?
மோகன் தான் அந்த ஆலோசனையையும் குமாரதாஸுக்குச் சொன்னான்.
“டேய்! சுமித்திரா சுகன்னியாபோல ஊமனாம் மூஞ்சி இல்லை. அவளிடம் வேணுமெண்டா நீ சுகன்னியாவைக் காதலிப்பதாகவும் அதற்கு சுமித்திராதான் உதவவேண்டும் எனவும் ஏன் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுக்கக்கூடாது..? அப்படி நீ எழுதினால் நான் அந்தக் கடிதத்தை அவளிடம் கொடுக்கிறன்”
உண்மையில் மோகனுக்கு சுமித்திராவால் ஒரு கண் இருந்தது. குமாரதாஸின் காதலை சுகன்னியா ஏற்றுக்கொள்ள சுமித்திரா உதவினால் அவளிடம் தனது காதலை சற்றுத்துணிவாக வெளிப்படுத்தலாம் எனக் கணக்குப் போட்டிருந்தான்.
இந்த ஐடியா குமாரதாசுக்கு மிகவும் சரியானதாகப்பட்டது. உயர்தரப் பரீட்சைக்கு ஒரு சில மாதங்களே இருந்தது. இன்னும் மௌனமாக இருந்தால் ஊமைகண்ட கனவாகவே போய்விடும் .
மோகன் “குமாரதாஸ் எழுதின கடிதம்” என்று சொல்லியபடி சுமித்திராவிடம் அந்தக் கடிதத்தைக்கொடுத்தபோது மகிழ்ச்சியில் சுமித்திராவின் உள்ளம் துள்ளிக் குதித்தது.
குமாரதாஸ் தனது கவிதைத் திறன் அனைத்தையும் ஒன்று திரட்டி அந்தக் கடிதத்தை எழுதியிருந்தான்…அவனது கவிதை வரிகள் அவனது சொந்தச் சரக்கு இல்லைத் தான்..அவன் படித்த இலக்கியங்கள் சிலவற்றில் இருந்தும் அவன் காலத்தில் வெளிவந்த திரையிசைப் பாடல் வரிகளில் இருந்தும் அழகாகக் கோர்த்து இரசனையுடன் கடிதத்தை எழுதியிருந்தான்.
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
எனத்தொடங்கிய அந்தக் கடிதத்தில் சுகன்னியாவின் கண்களை அழகாக வர்ணித்திருந்தான்.
உன் கண்கள் பனி விழும் மலர்வனம் உன் பார்வை ஒருவரம் …இது ஒரு தொடக்கம்தான். ஆனால் எந்த இடத்திலும் சுகன்னியா என்ற பெயரக் குறிப்பிடவில்லை. சுமித்திரா தனக்கு எழுதிய கடிதமாகத்தான் முதலில் கருதினாள்- அவள் தன் நெஞ்சில் அக்கடிதத்தை வைத்தபடி கண்மூடிக் கிடந்தாள்.
அவள் இந்த உலகில் இல்லை எங்கோ வானத்தில் சஞ்சரிக்கத் தொடங்கியிருந்தாள். வானில் நட்சத்திரங்கள் அவளைப் பார்த்து கண்சிமிட்டியதாய்….வானத்து மதியோ மலர்தூபி வாழ்த்தியதாய்…
ஆனால்… இந்த மகிழ்ச்சி பிரபாகம் கானல் நீர்தான் என்பதை அவள் தெரிந்தபோது அவள் தன்னுள் சுக்கு நூறாய் உடைந்துதான் போனாள்.
ஆம் அந்தக் கடிதக் கவரில் மீண்டும் கடிதத்தைப் பக்குவப் படுத்த எண்ணி அதனைத் திறந்த போதுதான்…ஒரு துண்டுப் பேப்பர் கவரில் இருந்து விழுந்தது.
அதன் சாராம்சம் இதுதான்.
சுமித்திரா
உங்கள் சகோதரி சுகன்னியாவுக்கு எழுதப்பட்ட இக்கடிததை அவவிடம் நேரில் வழங்கும் துணிவு எனக்கில்லை. நீங்கள் அவவிடம் இக்கடிதத்தினைக் கொடுத்து எனது மனநிலையைப் பக்குவமாக அவளிடம் விளக்கி அவளின் பதிலை எனக்கு விரைவில் அறியத்தருவீர்கள் என நம்புகிறேன் . உங்கள் உதவியினை என்றென்றும் மறக்கமாட்டேன்.
அன்புடன் குமாரதாஸ்.
அன்று முழுதும் அழுது அழுது அவள் கண்கள் சோர்ந்து போயின. அழுகைக்கான காரணத்தைச் சுகன்னியா கேட்ட போது எரிந்து விழுந்தாள். சுகன்னியாவின் மேல் குரோதம் கொப்பளித்தது. குமாரதாசின் மீது கொபம் கோபமாய் வந்தது. அடுத்த நாள் தலைவலி எனத்தாயிடம் சொல்லிவிட்டு பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொண்டாள்.
சுகன்னியாவிடமிருந்து பதிலை எதிர்பார்த்து ஏமாறப்போகும் குமாரதாசை நினைக்கையில் ஒரு வகையான குரூர திருப்தி உண்டானது.
சுகன்னியா மீது உண்டான பொறாமையால் அவள் வெதும்பிப் போனாள்.
அன்று பகல் முழுதும் படுக்கையில் குப்புறப்படுத்து வேதனையும் சிந்தனையுமாய்ப் படுத்திருந்தவள் மனதில் திடீரென ஒரு மின்னல்…. நான் துண்டுக் கடிதத்தைப் பார்க்காதது போல இக்கடிதத்துக்குப் பதில் எழுதினால் என்ன… சுகன்னியாவில் நான் அழகல்லவா…ஒரு வேளை குமாரதாசுக்கு இது எதிர்பாராத சேர்பிரைஸாகக் கூட இருக்கலாம் தானே….குமாரதாஸ் தனது காதலை ஏற்றுக் கொண்டால்…நினைக்கவே மனம் இனித்தது…அதன் பின் அவள் சற்றும் தாமதிக்கவில்லை.
குமாரதாசைப் போல அவளால் கவிதை கொஞ்சக் கொஞ்ச எழுத முடியாது தான்.. ஆனால் தன் உணர்வுகளைக்கொட்டி அவனுக்குப் பதில் எழுதி அடுத்தநாள் மோகனிடம் கொடுத்தாள். அவளது கடிதம் குமாரதாசுக்கு மட்டுமன்றி மோகனுக்கும் பேரதிர்ச்சியானது.
விட்டன் கொண்டலடி என்று குமாரதாஸ் எண்ணினானோ என்னவோ சுமித்திராவின் கடிதத்துக்குப் பதில் எழுதவே இல்லை.
உயர்தரப் பரீடசைக்கு மூன்று மாதங்கள் இருந்தன. சுமித்திராவும் குமாரதாசும் முகம் கொடுத்துக் கதைப்பதோ சிரிப்பதோ இல்லை என்றானது.
உயர்தரப் பரீட்சையின் பின் குமாரதாசும் சுமித்திராவும் இன்றுதான் முப்பது வருடங்களின் பின் சந்திக்கிறார்கள்.
மூன்று நாட்கள் நடந்த ஒன்று கூடலில் சுமித்திரா குமாரதாசை தவிர்க்கவே பார்த்தா.
ஆனால் குமாரதாஸ் தேடிவந்து கதை கொடுத்தபோது அவளால் முகம் திருப்பி நடக்க முடியாது தானே..
உயர் தரத்தில் குமாரதாஸ் மருத்துவப் பிரிவிக்கு தெரிவாகி கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு சென்றுவிட்டார். பத்தாண்டுகளின்பின் லண்டனுக்குச் சென்று அங்கு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
சுகன்னியாவால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்கே தெரிவாக முடிந்தது.
சுமித்திராவால் மூன்று பாடங்களில் சாதாரண சித்தி மட்டுமே பெற் முடிந்தது, பரதநாட்டியத்தில் அவ தேர்ச்சியடைந்திருந்ததால் இராமனாதன் கலைக்கல்லூரியில் இணைந்து இன்று நடன ஆசிரியையாக கடமை ஆற்றிக்கொண்டிருக்கிறா.
மோகன் இயக்கத்தில் இணைந்து மாவீரனாகிவிட்டார்.
ஒருகாலத்தில் ஒர் இடத்தில் படித்தவர்கள் இன்றோ நால்வரும் நான்கு திக்குகளில் பயணம்….
“எப்படி இருக்கிறீங்கள்… குடும்பத்தினர்….?”
தொக்கி நின்ற இந்தக் கேள்வியில் பரஸ்பரம் ஒருவரைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் மேலிடக் காணுகிறா சுமித்திரா..
“என்னுடைய கணவரும் ஆசிரியர்தான். மகள் யாழ்ப்பாணபல்கலைக் கழகத்தில் படிக்கிறா மகன் மொரட்டுவப் பல்லகலைக் கழகத்தில் படிக்கிறார்” , சுருக்கமாக தன்னைப்பற்றி க் கூறுகிறா சுமித்திரா.
“எனக்கு ஒரு மகன் தான் அவன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழாத்தில் பொறியியல் துறையில் படிக்கிறான். “
“மோகன் மாவீரர் ஆனதாக இப்பத்தான் கேள்விப்படுகிறன்.” பெருமூச்சு ஒன்று அவரிடமிருந்து வருகிறது.
எங்கட வகுப்பில படிச்ச சுகன்னியா என்ன செய்கிறா..?ஆர்வத்தை மறைக்க முடியாதவராய் கேட்கிறார் குமாரதாஸ்-
“அவவும் ரீச்சராத்தான் இருக்கிறா.. ஒரே ஒரு மகன் வெளிநாட்டுக்கு போயிட்டார். அவவிண்ண்ட கணவர் பாங்கில வேலை செய்தவர். ஒரேகுடி அதால கலியாணம் முடிச்சு மூண்டு வருசத்திலேயே செத்திட்டார்.”
சொல்லும்போதே நாத்தழு தழுக்கிறது சுமித்திராவுக்கு..
குமாரதாசின் கண்களில் கண்ணீர்… அவர் சுமித்திரா அறியாதவாறு மறைக்க முனைந்து தோற்றுப் போகிறார்.
குமாரதாசின் முதற் காதல் …அவர் இதயத்தின் எங்கேயோ ஒரு மூலையில் இன்னும் உயிர்ப்புடனே இருப்பதைக் கண்டு சுமித்திரா திகைத்துப் போகிறா.
ஒரு வேளை சுகன்னியாவிடம் குமாரதாசின் கடிதத்தைக் கொடுத்து இருவரும் காதலித்து கலியாணம் செய்திருந்தால்….இன்று சுகன்னியா குமாரதாசின் மனைவியாக நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்…அவர்களைப் பிரித்த பாவி நான் – சுமித்திராவின் மனம் குற்ற உணர்வாலும் கழிவிரக்கத்தாலும் உழலுகிறது.
வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் "சங்க இலக்கியங்களில் மருதத்திணையின்…மேலும் படிக்க... |