டியூஷன் – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,158
“மாலா, நாளையிலிருந்து சாயந்திரம் 4 மணிக்கு பேத்தி ஆர்த்தியை டியூஷனுக்குக் கூட்டிப் போகணும். டியூஷன் முடிந்ததும் மறுபடியும் கூட்டி வரணும் என்ன?’ என்றாள் மல்லிகா.
“சரிம்மா. யாரும்மா டியூஷன் எடுக்கறாங்க. நல்லா சொல்லித் தருவாங்களா?’ என்றாள் வேலைக்காரி.
“ஏன் உன் பேத்தியையும் அங்கே சேர்க்கலாம்னு நினைக்கிறயா?’
“ஏம்மா, அங்கே என் பேத்தியைச் சேர்க்கக் கூடாதா?’
“அங்கே படிக்கிற பசங்கெல்லாம், பணக்கார வீட்டுப் பசங்க. மாதம் 7400 சம்பளம் தரணும். உன் மாதிரி வேலைக்காரி வீட்டுப் பசங்க அங்கே எப்படிச் சேர முடியும்?’ கர்வத்துடன் கேட்டாள் மல்லிகா.
“அம்மா, டியூஷன் சொல்லித்தர்ற வாத்தியாரம்மா பேர் என்ன?’
“ஏன், பெயரைத் தெரிந்து என்ன செய்யப் போறே? பக்கத்துத் தெருவிலே… விமலான்னு பேரு. போதுமா? இல்லை இன்னும் ஏதாவது கேட்கணுமா?’ நக்கலாகக் கேட்டாள்.
“அம்மா அந்த விமலா என் பொண்ணுதான்’ என எப்படிச் சொல்வாள் மாலா.
– கஞ்சநாயக்கன்பட்டி மணியன் (நவம்பர் 2011)