சோரமாகுமோ சொந்தம்……..!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 9,515
‘இன்று துபாயிலிருந்து கஸ்தூரி நேராக தங்கள் வீட்டிற்கு வருகிறாள் !’- என்று செந்தில் சேதி சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சேதி சொல்லி வைத்த அடுத்த விநாடியிலிருந்து கண்ணணைவிட சுமதிக்குத்தான் வயிற்றில் கலக்கம். வீட்டில் வேலை ஓடவில்லை.
இதே நிலைதான் மூன்று வருடங்களுக்கு முன்பும். அன்றைக்கும் இப்படித்தான் இவளுக்கு வேலை ஓடவில்லை.
”சுமதி ! கஸ்தூரியை எவ்வளவு சீக்கிரம் நம்ம வீட்டை விட்டு வெளியேத்த முடிமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேத்திடு !” – கணவன் காலையில் காதில் கிசுகிசுத்துவிட்டு அலுவலகம் சென்ற விநாடியிலிருந்து அப்படி.
ஏன், என்ன காரியம், அவசரமாக வெளியேற்றுமளவிற்கு அவள் என்ன தவறு செய்தாள்? மனதில் ஓட அப்படியே அன்று மூலையில் உட்கார்ந்து விட்டாள்.
கஸ்தூரி எங்கெங்கெல்லாமோ சுற்றி கடைசியில் இங்கு வந்து சேர்ந்து ஒரு மாதமாகிறது. அவள் கதை மிகவும் மோசமானது,சோகமானது. காதல் என்கிற பெயரில் எவன் ஆசை வார்த்தையிலேயோ மயங்கி கலியாணமாகமலேயே கர்ப்பம் தரித்தவள், தவறியவள். அதனால்தான் சொந்த வீட்டிலிருந்து அப்பனும் அண்ணன்களும் அவமானத்தால் ‘வெட்டிப்புடுவேன்!’; என்று அறிவாளைத் தூக்க…. தாயால் காப்பாற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டாள்.
கஸ்தூரி முதன்முதலில் அடைக்கலம் புகுந்தது. ஒரு கிருஸ்துவ மடம். அங்கேயே பிள்ளையைப் பெற்று ஒப்படைத்துவிட்டு…. அப்புறம் அங்கிருந்தாள், இங்கிருந்தாள் என்று ஒவ்வொரு உறவினர்கள் வீட்டிலாய் இருந்து இறுதியில் இவர்கள் வீட்டிற்குச் சேர்ந்துவிட்டாள். இருபத்திரண்டு வயதிற்குள் வாழ்க்கையில் ஏகப்பட்ட அடிகள், அவமானங்கள், அவலங்கள், படிப்பினைகள். இவ்வளவு சிறு வயதில் எவருக்கும் வாய்க்கக்கூடாதது.
கஸ்தூரி அன்னியப் பெண்ணில்லை சொந்தம். நாத்தி வாழ்க்கைப்பட்ட இடத்தில் அவளுடைய நாத்தியின் மகள். இவள் இ.ங்கு வந்து சேர்ந்தபிறகு சுமதியை அக்காவென்றும் கண்ணனை அண்ணாவென்றும் மரியாதையாக அழைக்கிறாள். கண்ணியமாக நடக்கிறாள். உண்டல், உடுத்தலில் நாகரீகம். என்ன….சமயத்தில் கல்லாய்ச் சமைந்திருக்கும்போதுதான் வேதனை.
வாழ்;க்கையில் வெந்து நொந்து வந்தவளுக்கு அடைக்கலம் கொடுக்காமல் துரத்தி அடிப்பபென்பது என்ன மனிதாபிமானம். அதனால் கணவன் மனைவி இருவரும் வந்தவள் மனம் நோகுமாறு எதுவும் வாய் திறந்து பேசுவதில்லை.
கஸ்தூரியின் வருகையால் சுமதிக்கு நிறைய சவுகரியங்கள். அவள் சமைக்கிறாள். குழந்தைகளைப் பொறுப்பாக பள்ளிக்குக் கிளப்பி அனுப்புகிறாள். குறிப்பாக சொல்லப்போனால் ஒரு தங்கையாய், தாதியாய், சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் உழைக்கிறாள்.
அவள் வந்து சேர்ந்த புதிதில், ”கஸ்தூரி பாவம் சுமதி. நம்மைத் தேடி வந்துட்டாள். நாமளாவது இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கனும்….” என்று தினம் கண்ணனுக்கு அக்கறை , அனுதாபம்.
அப்படிப்பட்ட கணவனுக்கு இன்று என்ன நேர்ந்தது என்றுதான் சுமதிக்குள் குழப்பத்திற்கு மேல் குழப்பம்.
‘அந்த நல்லமனதைப் புண்படுத்திவிட்டாளா ? இல்லை, தான் ஊரிலில்லாத போது….’ என்று தவறாக யோசிக்க….
‘சேச்சே ! உறவில் மகள். உரிமையில் அண்ணன். யாருக்கு மனசு வரும்? ‘- என்று மனம் குறுக்கே பாய…..அவசரஅவசரமாக அந்த நினைவை அப்படியேக் கலைத்தாள்.
பின்னே காரணம் ?
கஸ்தூரி வந்திதிருந்தே பக்கத்து வீட்டுக்காரன் பார்வை சரி இல்லை. ஏற்கனவே தவறி விட்டவள் மீண்டும் தவறு செய்துவிட்டாளா ? சபலத்திற்கு ஆட்பட்டு விட்டாளா ? கண்ணன் கண்கூடாகப் பார்த்து….அதனால்தான் துரத்து சொல்கிறாரா ?
இதனால்தான் நான்காண்டுகாளில் நாலைந்து இடம் மாறிவிட்டாள். சரி இல்லை என்று அனுப்பிவிட்டார்களா ? சம்பநதப்பட்டவளையே நேரடியாகக் கேட்டாலென்ன ? எண்ணம் தலைதூக்கியது.
வேண்டாம்.! மனசு வேதனைப்படுவாள். பிடிக்கவில்லையா….. இந்தா ஆயிரம் இரண்டாயிரம். செலவுக்கு வைச்சுக்கோ. போதலையா இன்னும் கேள். என்று ஏதாவது சொல்லி ஆளை அனுப்புவதுதான் நாகரீகம். நோகடித்து அனுப்புதல் அநாகரீகம்.
எப்படி, எங்கே, என்ன சொல்லி செய்ய ? சுமதிக்கு கணவனைக் காணும்வரை மனசுக்குள்ளும் மண்டைக்குள்ளும் குத்தல், குடைச்சல்.
மாலை ஆள் வந்ததுமே கேட்டாள்.
”நடந்தது நடந்து போச்சு. கெட்ட கனவாய் மறந்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கோ. நான் எற்பாடு பண்றேன்னு அவள்கிட்ட தனியா கேட்டு கெஞ்சிப் பார்த்துட்டேன். அவள் மாட்டேன்னு மறுக்கிறாள். கறந்த பால் காம்புல ஏறாது சொல்றாள். வாழ்க்கையில் ஒரு தரம் அந்த சுகம், சொர்க்கம், அடிசறுக்கு, அவமானமெல்லாம் போதும். இனி எனக்கு கனவிலும் வேணாம். இப்படி நாலு வீட்டுல வேலை செய்து பொழுதைப் போக்கிப் போறேன்னு சொல்றா. எனக்கு அவளை நெனைக்க வருத்தம். இங்கே வயித்துச் சோத்துக்கு வேலை செய்யிறாப்போல மனசு கஷ்டம். எனக்குத் தாங்க முடியலை. அதான் கிளப்பச் சொல்றேன் சொன்னான்.”
‘கணவனின் நல்ல மனசுக்கு இது நியாயமான வலி!’ என்று உணர்ந்த சுமதி கஸ்தூரிக்கு சொல்லும் விதத்தில் சொல்லி நல்லபடியாக அனுப்பி விட்டாள்.
இதோ அவள் இப்போது துபாயிலிருந்து இங்கு வருகிறாள் என்று சேதி வர… கண்ணனுக்கு அவள் முகத்தில் விழிக்க வெட்கம்.
சுமதிக்கு… சங்கடம்!
என்ன செய்ய? காலம் மாறுகிறது! என்று உணர்ந்து பெருமூச்சு விட்டு மனசை தளர்த்திய சுமதி எழுந்து வேலைகளை முடித்தாள். படுத்தாள்.
மாலை.
வாசலில் வாடகைக் கார் வந்து நின்றது. கணவன் மனைவி இருவருமே எட்டிப் பார்ததார்கள்.
கஸ்தூரி கொஞ்சம் மினுமினுப்பு பளபளப்பாக…காரைவிட்டு இறங்கினாள். கூடவே அவளுடன் வேலை பார்க்கும் அத்தை மகன் செந்தில். கண்ணன் தங்கை மகன்.
வாங்க என்று கணவன் மனைவி வரவேற்பதற்குள் உள்ளே நுழைந்த கஸ்தூரி..சட்டென்று கண்ணன் – சுமதி காலடியில் விழுந்தாள்.
அவர்கள் திகைக்க…..
எழுந்து…”அக்கா ! உங்க ஏற்பாட்டுக்கும் என்னை ஆளாக்கினதுக்கும் கடன், காணிக்கை!” கட்டுப் பணத்தை நீட்டினாள்.
கண்ணன் புரியாமல் பார்த்தான்.
”அண்ணே ! அண்ணிதான், நீ ஒவ்வொரு வீடாய்ப் போய் வயிறு வளர்த்து வாழ்க்கை நடத்திக்கிட்டிருந்தா எதிர்காலம் சரியா வராதுன்னு அண்ணன் வருத்தப்படுறார் சொல்லி என்னை வெளியே அனுப்பி…உங்களுக்குத் தெரியாம வெளிநாட்டு வேலை தேடி பண உதவியும் செய்து துபாய்க்கு அனுப்பினாங்க. கடன் ஒரு லட்சம். காணிக்கை ஒரு லட்சம். மொத்தம் ரெண்டு லட்சம். தயவு செய்து ஏத்துக்கோங்க.” சொன்னாள்.
கண்ணனன் மனைவியைப் பார்த்தான்.
”ஆமாங்க. என் அண்ணன் வீட்ல வாங்கி உதவி செய்தேன். உங்ககிட்ட சொல்லலை மன்னிச்சுக்கோங்க.” சுமதி பயத்துடன் கணவனைப் பார்த்தாள்.
கண்ணன் மனம் குளிர அவளை நெகிழ்ச்சியாய் அணைத்தான்.