சொல்லாமல் புரிந்தது
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2026
பார்வையிட்டோர்: 152
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோகிலா அயர்ந்து தூங்கி ஆண்டுகள் சில ஓடி மறைந்துவிட்டன. பெற்ற பிள்ளை பக்கத்தில் இருந்தாலும், தன்னை விட்டுவிட்டு தனியே போய்விட்ட தன் அக்காவின் பிள்ளை நினைவு அவளின் ஆழ் மனதில் வந்து வந்து அலை மோதியது.
தேசிய சேவையில் இருக்கும் தன் மகன் மாறன் இன்றைக்கு வீட்டுக்கு வரும் நாள். அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் கோகிலா.
“டொக் டொக்” என கதவைத் தட்டும் சத்தம் அவளின் காதில் விழுந்த மாதிரி இருந்தது. மாறன் வரும்போது, அம்மா! அம்மா! என்று கூப்பிட்டுக் கொண்டுதான் வருவான் என்று எண்ணியபடியே கதவைத் திறக்கப் போனாள் கோகிலா.
கதவைத் திறக்க தாழ்ப்பாளில் கையை வைக்க, போகும்போது, ”அம்மா! அம்மா! என்று கூப்பிட்ட ஒரு குரல் வெளியிலிருந்து அவளின் காதில் விழுந்தது. இந்தக் குரல் மாறனின் குரல் இல்லையே. என் அன்பு மகன் மணியின் குரல் போல இருக்கிறதே என்று எண்ணியபடியே அவசர அவசரமாகக் கதவைத் திறந்தாள். அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. தன் கையைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
“அம்மா! அம்மா! என்னை மன்னிப்பீங்களா? என்று கேட்டுக் கொண்டு நின்ற மகன் மணியின் கையில் இருந்த குழந்தையைக் கவனித்தாள் கோகிலா.
மணியின் கையில் இருந்த அந்தக் குழந்தையை வாரி அணைத்து, அப்போது மலர்ந்த ரோஜாவைப்போல் இருந்த கண்ணத்திலே மாறி மாறி முத்தமிட்டாள் கோகிலா.
வெளியிலே நின்று கொண்டிருந்த மணியைப் பார்த்து, “வாடா உள்ளே” என்றாள்.
“என்னை மன்னித்தேன் என்று சொன்னால்தான் உள்ளே வருவேன்” என்றான் மணி.
“உள்ளே வாடா” என்று அழுத்தமாகவே கோகிலாவின் வார்த்தை வெளியே வந்தது.
அதுவரையில் மூடியிருந்த மொட்டு மலர்ந்தது போல். அக்குழந்தையின் கண்கள் திறந்தன. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அழத் தொடங்கியது.
“என் கண்ணுக்கு வயிறு பசிக்கிறதா? “இதோ! பாட்டி உனக்குப் பால் தர்றேன்” என்று சொல்லியபடியே குழந்தையைத் தூக்கிக் கொண்டு சமையலறைக்குள் போனாள் கோகிலா.
கலக்கிய பாலை குழந்தைக்குக் கொடுத்தபடியே வெளியில் வந்தாள்.
எந்த நேரத்திலும் மழை பொழிய காத்திருக்கும் கருமேகத்தைப்போல, மணியின் கண்கள் கண்ணீரைக் கொட்ட காத்திருந்தன.
மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு, சோபாவில் உட்கார்ந்த கோகிலாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதான் மணி.
“டேய் மணி, என்னடா இது? நீ அழுது நான் பார்த்ததே இல்லையடா! என்னைத்தான் நீ அழ வைத்திருக்கிறாய். உன்னை நான் அழ வைத்ததே இல்லையடா. ஏண்டா அழுகிறாய்?’ என்று கோகிலா கண் கலங்கியவாறே கேட்டாள்.
“அம்மா! அம்மா! என்னைக் கொஞ்ச நேரம் அழவிடுங்கம்மா” என்றான் மணி.
பாலைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்ட குழந்தை. பாட்டியின் காலடியில் தலை குனிந்து கிடந்த தன் அப்பாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்தது. தன் அன்பை எல்லாம் அள்ளி அள்ளி கொட்டி, பாசத்தோடு வளர்த்த மகன் மணியின் தலையைத் தடவியபடியே. எழுந்து சோபாவில் உட்காரும்படி சொன்னாள் கோகிலா.
சில ஆண்டுகளாகத் தன் கையாலே சாப்பிடாத மகனுக்கு ஏதாவது பலகாரம் செய்து கொடுக்க நினைத்த கோகிலா. பிள்ளையை மணியின் கையில் கொடுத்துவிட்டு, சமையலறைப் பக்கமாக போனாள் கோகிலா.
அவள் பின்னாலேயே பிள்ளையைத் தூக்கிக் கொண்டு போனான் மணி.
அவனுக்குப் பிடித்த வெங்காயப் பச்சியைச் செய்தாள். அதனை அவனுக்குக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள்.
மணியும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அவன் சின்னப்பிள்ளையாக இருந்தபோது இன்னொன்னு, இன்னொன்னு, கடைசியா ஒன்னு என்று சொல்லி சொல்லி அவனைச் சாப்பிட வைத்தது அவள் நினைவுக்கு வந்தது. அவள், அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொன்றாக எடுத்து. எடுத்து வைக்க மணியும் மறுப்பு ஏதும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான்.
”இன்னும் கொஞ்சம் செய்து கொண்டு வர்றேன்” என்று சொல்லியபடி எழுந்த போதுதான் மணி கோகிலாவின் கையைப் பிடித்து, போதும்மா என்றான்.
ஏன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தனியே வந்திருக்கிறான்? ஏன் அழுகிறான்? எதுவுமே கோகிலா கேட்கவில்லை.
“இந்தாங்க! இதைப் பிடியுங்க. நான் வெளியே போயிட்டு இதோ வர்றேன்” என்று சொல்லிவிட்டு ஓர் உறையை அவள் கையில் கொடுத்துவிட்டு, விரைந்து வெளியே போனான் மணி.
குழந்தையைத் தூக்கி சோபாவில் போட்டுவிட்டு அவன் போன பாதையையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் கோகிலா.
மணி போன கொஞ்ச நேரங்கழித்து, மாறன் வந்தான்.
சோபாவில் குழந்தை தூங்குவதைப் பார்த்த மாறன் “யாருடைய குழந்தை அம்மா இது?” என்று கேட்டவாறே குழந்தையின் அருகே போனான். குழந்தை அழகாக இருக்குதே. என்றான்.
“இது உன் அண்ணன் குழந்தையடா”
“என்னம்மா சொல்றே? உங்க பாச மிகுந்த மகன் வந்தானா? ஆச்சரியமா இருக்கே.”
“எனக்கும் தாண்ட மாறன். ஆச்சரியமா இருக்குது. இந்தக் குழந்தையைத் தூக்கிக்கிட்டு வந்தவன், இது என் குழந்தை” என்று சொல்லிவிட்டு, இந்த உறையையும் கொடுத்துவிட்டு போய்விட்டான்.”
“வேறு எதுவும் சொல்லவில்லையா? நீங்களும் எதுவும் கேட்கவில்லையா?” என்று தன் தாயைப் பார்த்துக் கேட்டான் மாறன்.
“இல்லையே அப்பா! அவன் கிட்டே என்ன கேட்பது என்று எனக்குப் புரியவில்லை. அவனும் ஒன்னும் சொல்லவில்லை. இதோ! வர்றேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாகப் போய்விட்டான்.
அங்கே கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. எதிரி வீட்டு குழந்தையானாலும் எடுத்துக் கொஞ்சுவதுதானே மனிதப் பண்பு. குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா?
மாறன் மெதுவாகக் குழந்தையைத் தூக்கினான். தன் உதட்டை அந்த மென்மையான கன்னத்தில் பதித்தான். அதைப் பார்த்த கோகிலாவின் முகம் சூரியனைக் கண்ட தாமரை போல மலர்ந்தது.
இதோ! வர்றேன் என்று போனவன் இரவு நெடும் நேரமாகியும் வரவே இல்லை.
போனவன் வருவான், வருவான் என்று கோகிலாவும் மாறனும் விடிய விடிய கண் விழித்திருந்ததுதான் மிச்சம். போனவன், போனவன்தான்.
மறுநாளும், வரவில்லை. கோகிலா குழம்பி போய்விட்டாள்.
அப்போதுதான் மணி கொடுத்துவிட்டுப் போன உறையைத் திறந்து பார்த்தான் மாறன்.
“அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். மீண்டும் உங்களுக்குத் தொந்தரவு தருவதற்காகவா என்னை வளர்த்தீர்கள். நான் உங்கைள மதிக்கவில்லை. என்னால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லே. இந்தப் பெண் குழந்தையை எனக்கு வளர்க்கத் தெரியவில்லை. அதனாலே உங்களிடம் கொடுக்கிறேன். நீங்கள் வளர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையிலே” என்று எழுதியிருந்த தாளைப் படித்தான் மாறன்.
அப்போது கோகிலாவின் காலச்சக்கரம் பின் நோக்கிச் சுழல ஆரம்பித்தது.
தன் தாய் மாமன் ரகுவை மணந்து கொண்டாள் மலர்விழி. ரகுவும் மலர்விழியும் நகமும் தசையும் போலவும் மணமும் மலரும் போலவும் இணைந்து இல்லறம் நடத்தி வந்தார்கள். இருவருமே நன்றாக படித்தவர்கள். நல்ல முறையில் சம்பாதித்து, நல்ல முறையில் வாழ்ந்தார்கள்.
எவ்வளவு செல்வம் பெற்று, எவ்வளவுதான் சீறும் சிறப்புமாக வாழ்ந்தாலும், பெண் என்பவள் முழுமை பெண்ணாக மாறுவது எப்போது என்றால், அவள் ஒரு குழந்தைக்குத் தாய் ஆகும் போதுதான். இதை மலர்விழி அறிந்தவள்தான். அதனால் ரகுவிடம் தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்றாள்.
ரகுவும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. இறைவனின் அருளால் அவர்கள் எண்ணியபடியே ஐயிரண்டு திங்களில் ஓர் அழகான ஆண் குழந்தைப்ை பெற்றெடுத்தாள் மலர்விழி.
மகனை வளர்ப்பதற்காக ஒரு செவிலித்தாயைத் தேடாமல், தன் வேலையை விட்டுவிட்டு, பிள்ளையை, வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.
வளர்பிறையென வளர்ந்து வந்த மகனைப் பார்த்தப் பார்த்து மலர்விழி பூரித்துப் போனாள்.
அவளுடைய அப்பாவும் அம்மாவும் தங்கையும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ரகுவைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
எல்லாருக்கும் அளவுக்கு அதிகமாக இன்பத்தைக் கொடுத்த இறைவன், எண்ணி பன்னிரண்டு மாதங்களில் மீள முடியாத துன்பத்தைத் தந்துவிட்டான்.
இதுநாள் வரையில் இறைவனுக்குக் கண் உண்டு, என்று சொன்னவர்கள், அப்போது இறைவன் கண் இல்லாத குருடன் மட்டும் இல்லே. அவன் தான் ஒரு கல்லு என்பதைக் காட்டிவிட்டான். என்றார்கள். இப்படி அவர்கள் கூற காரணம் என்ன? மலர்விழியை அற்ப ஆயுளில் அவள் பெற்ற பிள்ளையை அனாதையாக ஆக்கிவிட்டு, அழைத்துக் கொண்டுவிட்டான் ஆண்டவன். மகனுக்குப் பாலூட்டிக் கொண்டு படுக்கையில் படுத்திருந்த மலர்விழி, படுக்கையிலேயே கண்மூடிவிட்டாள்.
தன் மகளை இழந்துவிட்டு தனிமரமாக நின்ற தன் மைத்துனன் ரகுவைப் பார்த்து மலர்விழியின் அப்பா கண் கலங்கினார். அவரின் மனைவி, தன் தம்பியின் நிலையைக் கண்டு, பித்துப்பிடித்தவள் போல் ஆகிவிட்டாள். அக்காவின் வாழ்வு அற்ப ஆயுளில் போனதையும், அவள் பெற்ற பிள்ளை அனாதையாய் இருப்பதையும் கண்ட மலர்விழியின் தங்கை கோகிலா கோலமிழந்த மயிலானாள்.
தனக்காக இல்லாவிட்டாலும் தான் பெற்ற பிள்ளைக்காவது தன் மைத்துனன் ரகுவை மறுமணம் செய்து கொள்ளுமாறு கோகிலாவின் தாயும் தந்தையும் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை.
பெற்ற பிள்ளையைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போகும் இந்தக் காலத்தில் இன்னொருத்தி வந்து. வேறு ஒருத்தி பெற்ற, பிள்ளையைத் தன் பிள்ளையைப் போல வளர்ப்பாள் என்பது என்ன நிச்சயம்? வருபவள் சும்மா இருப்பாளா? பெற்றவுடனேயே பெத்தவளை விழுங்கிய இந்தச் சனியனை நான் வளர்ப்பது பாவமில்லையா? என்று கேட்பாள்.
தன் பிள்ளையை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் எவ்வாறு எல்லாம் படிக்க வைக்க வேணும் என்று எந்த நேரமும் எண்ணிக் கொண்டிருந்த மலர்விழியின் ஆசையை வருபவள் நிறைவேற்றுவாள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால், திருமணம் வேண்டாம் என்று அடியோடு மறுத்துவிட்டான் ரகு.
தன் அக்காளின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றால். தன்னால் தான் முடியும் என்று நினைத்த கோகிலா மணியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அவள் ஏற்றுக் கொண்ட பிறகு குடும்பத்தில் கொஞ்சம் நிம்மதி நிலவியது. ஆனால், பருவப்பெண். மனைவியை இழந்த, ஆண் மகனுடன் தனியாக ஒரே வீட்டில் வாழ்வதைப் பார்த்துக் கொண்டு இந்தப் பொல்லாத சமூகம் சும்மா இருக்குமா? அண்ணனும் தங்கையும் சேர்ந்து கடைத் தொகுதிக்குப் போனாலே, கதை கட்டிவிடுமே. அக்கா மகளை வளர்க்க அந்த வீட்டிலே இருக்கிறா கோகிலா என்று சொன்னால் ஊர் நம்புமா? சும்மா மெல்ற வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி கதை ஆயிடதா? ஊர் வாயை மூடுறதைவிட உலை வாயை மூடுவது சுலபம் அல்லவா?
மறுமணம் செய்து கொள்ள விரும்பாத ரகுவைக் கோகிலா தானே மணந்து கொண்டாள்.
தனக்கொரு குழந்தை பிறந்துவிட்டால், தன் அக்காளின் மகன் மீது உள்ள அன்பில் கடுகளவாவது, குறைந்து விடுமே என்று நினைத்துக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொள்ள அவள் விரும்பவில்லை. தன் அக்காளின் மகன் மணியைத் தன் மகனாகவே கருதிக் கொண்டு கண்ணை இமை காப்பாது போல் காத்து வளர்த்து வந்தாள்.
நடந்து செல்பவர்கள், சில நேரங்களில் வழியில் இருக்கும் குழியைப் பார்க்காமல், காலை வைத்து நொடிக்கும்போது ஏற்படும் சுலுக்குப் போல, கோகிலாவுக்கும் சுலுக்கு ஏற்பட்டது. அதாவது,
அவள் வயிற்றில் கரு வளர்ந்தது. கருவைக் கலைக்கப் போகும்போது ரகு தடுத்துவிட்டான்.
வேறு வழியில்லை. மாறனைப் பெற்றுக் கொண்டாள்.
மாறன் பிறந்த பிறகுதான், மணிக்குக் கோகிலா தனது சொந்தம்மா இல்லை. சின்னம்மா என்பது தெரிய வந்தது.
மாற்றான் தாய் படுத்தும் பாட்டை விளக்கும் படங்களைப் பார்க்கும்போதும், மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும்போதும், மணி தன் சின்னம்மாவும் இனிமேல் அப்படிதான் செய்ய போகிறாள் என்று எண்ணிக் கொண்டு கவலைப்பட்டான். இந்தக் கவலையே நாளடைவில் கோகிலாவிடமிருந்து பிரிய காரணமாயிற்று.
தாய் மாமனை மணந்து கொண்டு முதல் பிள்ளையைப் பெற்ற ஓராண்டில் மலர்விழி மரணமடைந்தாள். அதே மாமனை மணந்து பிள்ளை ஒன்றைப் பெற்றுக் கொண்ட கோகிலா, தன் கணவனை இழந்தாள்.
ரகுவை இழந்த கோகிலா சொல்ல முடியாத துன்பத்தில் துடிதுடித்தாள். அழுது அழுது கண்ணீர் வற்றியதுதான் மிச்சம்.
கணவனை இழந்த பிறகு தன் மகன் மணியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு கோகிலா நிலை குலைந்து போனாள். அவன் மீது கொண்டிருந்த அன்பில் கடுகளவு கூட குறைவில்லாமல் தான் அன்பு கொண்டிருந்தாள். ஆனால் மணி நேரத்தோடு வீட்டுக்கு வருவதில்லை. வந்தாலும் கோகிலாவிடம் பேசுவதில்லை. தன் தம்பியோடு விளையாடுவது கூட கிடையாது. அப்போதெல்லாம் கோகிலா இது எல்லாம் தன் தலைவிதி என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வாள்.
மணி விரும்பியபடியே அவனைப் படிக்க வைத்தாள். தன் கணவனுக்குக் கிடைத்த மத்திய சேமநிதி பணத்தை எல்லாம் செலவழித்து மணியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துப் படிக்கச் செய்தாள். அந்தப் பணமும் பற்றாத போது, தான் வாழ்ந்த நான்கறை வீட்டை விற்றுவிட்டு, மூன்றறை வீட்டை வாங்கிக் கொண்டு, மீதமுள்ள பணத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னாள். தன் மகன் மாறனின் படிப்பைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. காரணம், மகன் மணி, மாறனைப் படிக்க வைத்துவிடுவான் என்ற நம்பிக்கைதான். மணி பட்டப்படிப்பு படித்த பிறகு ஒரு நல்ல வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்தான். ஆனால் அவன் கோகிலாவுக்கு மாறனுக்கும் ஒரு காசுகூட கொடுக்கவில்லை.
தன் அப்பா பணத்தைக் கொண்டுதான் தான் படித்ததாகவும், தன் சின்னம்மாவும் மாறனும் தங்களுடைய பணத்தைக் கொடுத்து தன்னைப் படிக்க வைக்கவில்லை என்றான்.
இறுதியில் வீட்டை விட்டே போய்விட்டான். போனது மட்டும் இல்லை. தன் தாயிடமே சொல்லாமல், திருமணம் செய்து கொண்டான்.
தானாடவில்லை என்றாலும் தன் தசை ஆடும் என்பார்கள். கோகிலா மகன் மணி எங்கிருந்தாலும், நல்லபடியாக இருந்தால் போதும் என்று சொல்லிக் கொண்டாள்.
அந்த மகன்தான் இன்று குழந்தையைக் கொண்டு வந்து கொடுத்து வளர்க்கச் சொல்லிவிட்டு போய் இருக்கிறான். எண்ணிக் கொண்டிருந்தவளின் நினைவுச் சக்கரத்தை சக்கரத்தை நிறுத்தியது குழந்தையின் அழுகுரல்.
பெற்ற பிள்ளையை வேண்டாம் என்று தன் மருமகள் போய்விட்டாள் என்பதைத் தன் மகன் சொல்லாமலேயே புரிந்து கொண்டாள் அன்புத்தாய் கோகிலா.
– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உண்மைச் சுதந்திரம்
அல்போன்ஸ் மோசஸ்
August 25, 2026
கிழக்கின் வெளிச்சம்
தாட்சாயணி
August 25, 2026
அந்த நிமிடம்
சந்திரகௌரி சிவபாலன்
August 25, 2026
