கடவுளின் குழந்தைகள்
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2026
பார்வையிட்டோர்: 95
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புள்ள நண்பன் அருணகிரிக்கு,
உன்னை என்றும் மறவாத நண்பன் வரையும் மடல். நான் யார் என்று உன்னால் அறிந்து கொள்ள முடிகின்றதா? என் முத்தான கையெழுத்தைப் பார்த்தும் உன்னால் உணர முடியவில்லையா? உன் மண்டையைப் போட்டு அதிகம் குழப்பிக் கொள்ளாதே. நான் யார் என்பதைச் சொல்லிவிடுகின்றேன். நான் தான் உயிருக்கு உயிரான நண்பனான உன்னிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடிவந்த நம்பி,
‘என்னிடம் கூட கூறாமல் ஓடிய அவனை நாம் ஏன் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்?’ என்றெண்ணி என்னை நீ மறந்திருந்தாலும் மறந்திருக்கலாம். ஆனால் உன்னை என் மனதிற்குள் நினைக்கத்தான் தெரிகிறதே ஒழிய மறக்க தெரியவில்லை. எதை மறப்பது, எப்படி மறப்பது? அந்தப் பன்னிரண்டு வயதிற்குள் நம்மிடையே மலர்ந்திருந்த நட்பை ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த அன்பை, ஆடிய ஆட்டத்தை, பாடிய பாட்டை, கூறிய கதையை, வாங்கிய அடியை, உன்னால் மறக்கவே முடியாது.
அன்று உன் தங்கை நன்முல்லையின் பிறந்த நாள் விழா. அதற்கு நான் அப்பா அம்மாவோடு வந்திருந்தேன். அப்போது, என் தாய் உன் தாயிடம், “நன்முல்லையை நான் மருமகளாக்கிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அண்ணி?” என்று உன் தாயிடம் கேட்க, அதற்கு என்ன? அப்படியே செய்து கொள்வோம் என்று உன் தாய் கூறினார்கள். மறுநாள் நான் உன் வீட்டிற்கு உன்னைப் பார்க்க வந்தபோது, நீ என்ன மாப்பிள்ளை சொல்லிக் கொள்ளாமல் பெண் பார்க்க வந்திருக்கிறரா என்று கேட்க, அதைக்கேட்டு, உன் தங்கை வெட்கப்பட்டுக் கொண்டு ஓட, அதைக்கண்டு. உன் பெற்றோர் நகைத்ததை என்னால் மறக்க முடியுமா?
திடீரென்று, ஒரு நாள் என் தாய் இறந்ததை மறக்க முடியுமா! ஒரு நாள் என் தந்தை ஒரு பெண்ணை அழைத்து வந்து இவர் தான் உன் சித்தி என்று அறிமுகப்படுத்தி வைத்ததை மறக்க முடியுமா? சித்தி என்ற பெயரில் என்னைக் கொல்ல வந்த பேயை எப்படி மறப்பது. நான் சாப்பிடாமல், வாடி வதங்கி பள்ளிக்கு வந்தபோது, வாடிய பயிரைக் கண்டு வாடிய இராமலிங்க அடிகளார் போல், உன் உணவை எனக்களித்து நீ மகிழ்ந்ததை மறப்பதா?
சித்தியின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரிக்க, அதைக் கண்டும் காணததுபோல் என் தந்தை இருக்க, உழைத்த உழைப்புக்குக்கூட ஊதியம் கிடைக்காதைக் கண்டுதான் வீட்டை விட்டு ஓடி வந்தேன். பசியின் கொடுமையைத் தாங்க முடியவில்லை. கண்கள் இருண்டன. கால்கள் நடக்க மறுத்தன. விழுந்தேன். தண்ணீரால் முகத்தில் அடிக்க கண் விழித்தேன். என் அருகில் என் வயதுடைய இரண்டு சிறுவர்கள் நின்றார்கள். ஒருவன் ஒரு பொட்டலத்தை என்னிடம் நீட்டினான். வாங்கிப் பிரித்து பார்த்தேன். எனக்குப் பிடித்தமான கோழிக்கறி சோறு. சோற்றைச் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரைக் குடித்தவுடன், உடம்பில் ஒரு தெம்பு. புத்துணர்ச்சி ஏற்பட்டது.
‘உண்டிக் கொடுத்து உயிர் காத்த உங்களுக்கு நன்றி’ என்றேன்.
‘நன்றி இருக்கட்டும். உன் பெயர் என்ன? உன் ஊர் எது?’ என்று கேட்டார்கள்.
முன்பின் அறியாதவரிடம் பெயரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது என்று என் மனதில் தோன்றியது. உண்மை பெயரையும் கூறாமல், நாகமுத்து என்று பெயரை மாற்றிச் சொன்னேன். நான் யாரும் இல்லாத அனாதை என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
‘இனிமேல் நீ யாருமற்ற அனாதை என்று மட்டும் கூறக்கூடாது. தாய்தந்தை இல்லாதவர்களுக்குச் சாமிதான் அப்பா-அம்மா. நாம் எல்லோரும் கடவுளின் குழந்தைகள்’ என்று சொன்னான் ஒருவன்.
அவர்கள் இருவரும் என்னைத் தங்களின் நண்பர்களாக்கிக் கொண்டார்கள். அவர்கள் நல்லது என நினைத்திருந்த பழக்கங்களை எல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். சுருங்கச் சொன்னால் இரவினில் ஆட்டம் பகலில் தூக்கம். ஆனால் அடிக்கடி நீ எனக்கு கற்றுக் கொடுத்திருந்த, ஒழுக்கம், வாய்மை, உண்மையை நினைத்துக் கொள்ளத் தவறியதில்லை. என்ன செய்வது பன்றியோடு சேர்ந்த கன்றும் பவ்வி உண்டுதானே ஆக வேண்டும். கழுதை கெட்ட பிறகு குட்டிச்சுவர்தானே?
என் நண்பர்கள் மூலம் எனக்கு ஒரு பெரிய மனிதரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் இருக்கும் பொருளை, அவர் குறிப்பிடும் இடத்தில், குறிப்பிட்ட ஆளிடம் கொண்டுபோய் ஒப்படைப்பது என் தொழிலாளாக அமைந்தது. அதற்காக உண்ண உணவும் உடுத்த உடையும், கைச்செலவுக்குக் கொஞ்சம் பணமும் கிடைத்தன. அந்தப் பெரிய மனிதர் இருக்கச் சொன்ன வீட்டில் குடி இருந்து வந்தேன். வருடம் ஒன்று அழிந்தால் வயது ஒன்று கூடும் தானே? வாலிபப்பருவம். அந்த வீட்டில் பருவப் பெண் ஒருத்தி இருந்தாள். சொல்லவும் வேண்டுமோ? உறவு வளர்ந்தது. ஒரு நாள் அவள் பத்தினி வேஷம் போட்ட பரத்தை என்பதைத் தெரிந்து கொண்டேன். கட்டிய கணவனை விட்டுவிட்டு. கைக்கு கைமாறும் காரிகை அவள்.
என்றும் போல் அன்றும், பெரிய மனிதன் கொடுத்த பொருளை எடுத்துக் கொண்டு சென்றேன். சென்ற இடத்தில் திடீரென்று, காவலர் பலர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். கண் மூடி கண் திறப்பதற்குள் கைகளில் விலங்கு மாட்டப்பட்டுவிட்டது. காரணம் என்ன, என்று நான் கேட்க? பொட்டலத்தைப் பிரித்து காட்டினார்கள் கஞ்சாவை. இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வதற்குள், எண்ணுடா கம்பியை என்று இட்டார்கள் சிறையில் ஏழு ஆண்டுகள்.
இன்று உனக்கு விடுதலை என்று. உள்ளே இருந்தவனை வெளியில் விட்டார்கள். முன்பு இருந்த வீட்டிற்குச் சென்றேன். அவளும் இல்லை. தங்க அங்கு இடமும் இல்லை. பெரிய மனிதரைக் காணச் சென்றேன். கண்டும் காணாதவர் போல் நடந்து கொண்டார். என்னை வைத்து, எவ்வளவோ பணத்தைத் தேடிக் கொண்டவருக்கு இனிமே என் உதவி தேவை இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
இவன் செய்த வேலையை வைத்தே இவனை மடக்க வேண்டும். இவனுக்கு ஈடாக வாழ வேண்டும் என்று எடுத்தேன் உறுதி. பெரிய மனிதன் வைத்திருந்த பெரும்புள்ளிகளின் தொடர்பைத் துண்டித்தேன். அனைவரும் என்னிடம் பொருள் வாங்க முற்பட்டார்கள். பிறகு என்ன? நேர்மைக்கும் உண்மைக்கும் இது காலம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
கையிலே பணம் இருந்தால் கழுதை கூட அரசனாகும் இந்நாளில், பையில் பணம் நிறைந்துள்ள நான். பெரிய மனிதன் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டேன்.
ஆனால் என்னால் தொடர்ந்து சேற்றிலே இருக்க முடியவில்லை. எனவே தேடிய பணத்தை நேர்மையான வழியில் முதலிட்டு, பயன் பெற வேண்டும் என்று எண்ணினேன். அதன்படி முதலீடு செய்யவும் தொடங்கினேன். அப்போது எனக்கு அன்பரசு என்ற நண்பன் அறிமுகமானான். அவன் மிகவும் நல்லவன். வர்த்தகக் கல்வி பயின்றவன். அதனால், வியாபாரம் விரைவில் வளர்ச்சிக் கண்டது. வருவாயும் பெருகியது.
வறுமையில் வாடிய போது நான் கற்றுக் கொண்ட சில தீய பழக்கங்களை, வளமான வாழ்க்கையில் இருக்கும்போது விட்டுவிட்டேன். அதனால் நான் தனிமையில் இருக்கும்போது பெரும் துன்பப்பட்டேன். அத்துன்பத்திலிருந்து விடுபட நான் அறிஞர்களின் நூல்களையும், சான்றோர்களின் கூற்றுகளையும் படிக்கக் கற்றுக் கொண்டேன்.
ஒரு நாள், என் நண்பன் அன்பரசு, என்னை அவன் வீட்டிற்கு அழைத்தான். ஏன்? என்று கேட்டேன். என் தங்கையின் பிறந்த நாள் விழா. அதற்கு மிகவும் நெருங்கிய ஒரு சிலரை தான் அழைத்துள்ளோம். அதில் நீங்களும் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று சொன்னான்.
“என்னையும் உங்களுக்கு நெருங்கியவர்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டுவிட்டீர்களா?” என்றேன்.
”ஆமாம்” என்றான் அன்பரசு.
“நன்றி. நான் நிச்சயம் வருவேன்” என்றேன்.
மறுநாள் அவன் வீடு சென்றேன். அன்பரசன் குறிப்பிட்டிருந்தபடி ஒரு சிலரே விருந்தினர்களாக வந்திருந்தார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள்.
அன்பரசனின் தங்கை வெண்மதி. பேரழியாக இல்லாவிட்டாலும் நல்ல அழகி. அவளின் கலகலப்பான பேச்சு, பழகும் முறை எல்லாம் நன்றாகவே இருந்தன. விருந்து முடிந்து விடை பெற்று வந்தேன். ஆனால் அவளின் உருவம் ஏதோ என் உள்ளத்தில் திரைப்படமாக ஓடிக் கொண்டிருந்தது. விளைவு? இது நாள் வரையில் மறந்திருந்த அந்த பந்த பாச உணர்வு உதித்தது. திருமணம், மனைவி – பிள்ளை என்ற உறவு வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. வெண்மதியை ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று எண்ணினேன். அதே நேரத்தில் என் கடந்த கால வாழ்வை நினைத்தால் பயமாகவும் இருந்தது.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை ஏன் நல்லவையாக இருக்கக் கூடாது? என்ற உணர்வுடன், வெண்மதியைப் பெண் கேட்டேன். அவர்கள் நடந்து கொண்ட முறையிலிருந்து, இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள் என்பது தெரிந்தது.
ஆடம்பரமாகத் திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை. அதற்கு அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
காலையில் பதிவுத்திருமணம். மாலையில் ஒரு சிறிய விருந்து முடிந்தது திருமணம்.
வெண்மதி என் நலனில் மிகவும் அக்கறைக் காட்டி நடந்து கொண்டாள். அன்புக்கும் பஞ்சமில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. நான் வெளியில் செல்லும்போது அவள் வீட்டில் இருப்பாள். நான் வீட்டிற்கு வந்தால் அவள் வெளியில் செல்வாள். அவள் குடும்பம் என்ற ஒரு கூண்டுக்குள் வாழ்வதை வெறுத்தாள். உல்லாசப் பறவையாக, ஊர்ச்சுற்றி திரிவதை அவள் விரும்பினாள். விருந்து வைப்பதையும் வீட்டிற்கு வருபவர்களுடன் குடித்து கும்மாளம் போடுவதையும் அவள் விரும்பினாள். அவள் என் மீது மோகம் கொள்வதற்குப் பதில் என் பணத்தின் மீதுதான் அதிக மோகம் கொண்டிருந்தாள். ஒரு குடும்பப் பெண் இவ்வாறு நடப்பதும், எதிர்ப்பார்ப்தும் சரியில்லை. நமக்கு என்று ஒரு வாரிசு தேவை. நல்ல வாழ்க்கை தேவை என்றேன். அவை எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.
ஒரு நாள், என்னுடைய பெயரில் இருக்கும் சொத்துக்களில் எல்லாம் தனக்கும் பங்கு வேண்டும் என்று கூறினாள். அவளின் பங்குக்கு அவளின் குடும்பத்தார்களும் ஒத்துப்பாடினார்கள். வேலியில் விழுந்த சேலையை எப்படி எடுப்பது என்று சிந்தித்தேன்.
நான் தேடிய செல்வம், என் கண் எதிரிலேயே அழிவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. எனவே பல நாட்கள் சிந்தித்து. ஒரு நல்ல முடிவுக்கு வந்தேன்.
என் சொத்துக்களை எல்லாம், கடவுளின் குழந்தைகளான பெற்றோர்களின் கவனிப்பற்ற குழந்தைகளின் நலனுக்காக எழுதி வைத்துவிடுவதென்ற முடிவு செய்தேன். அத்துடன், கணவனை மதிக்காத வெண்மதி வாழவே கூடாது என்றும். இனி நான் வாழ்வதில் அர்த்தமில்லை என்றும் எண்ணினேன்.
என் விருப்பப்படியே சொத்துக்களில் உனக்கும் பங்கு தருவதாகக் கூறினால் வெண்மதி மகிழ்ச்சி அடைவாள். அன்று நாம் என்ன சொன்னாலும் அவள் கேட்பாள் என்பதும் எனக்கு தெரியும். எனவே நாங்கள் இருவரும் சேர்ந்து சாப்பிடுவதென்றும், அன்று இரவு குடிக்கும் பாலில் நஞ்சு கலந்து குடித்துவிடுவதென்ற முடிவுக்கும் வந்தேன்.
இடையில் பிரிந்து வந்தபோது சொல்லாமல் வந்த நான், நிரந்தரமாகப் பிரியும்போது சொல்லிவிட்டுப் போகிறேன்.
இக்கடிதம் உனக்குக் கிடைக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். எனக்காக நீ அழ வேண்டாம். ஏனெனில் என் போன்ற அனாதைகள் எல்லாம் ஆண்டவனுடைய பிள்ளைகள். அதனால் அந்த ஆண்டவன் தான் அழ வேண்டும். நீ அல்ல.
இப்படிக்கு
உயிருள்ள வரை உன்னை மறக்காத நண்பன்
நம்பி.
– எல்லைக்கோடு (சிறுகதைகள்), பதிப்பாண்டு: 2006, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உண்மைச் சுதந்திரம்
அல்போன்ஸ் மோசஸ்
August 25, 2026
கிழக்கின் வெளிச்சம்
தாட்சாயணி
August 25, 2026
அந்த நிமிடம்
சந்திரகௌரி சிவபாலன்
August 25, 2026
