சைக்கிள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2025
பார்வையிட்டோர்: 284 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாகன வீதி. 

நடுப்பகல். 

கடும் வெம்மை. தார் உருகி பளபளக்கிறது. 

வாகனங்களின் நெரிசலான ஓட்டம். புத்தம் புது கார்களின் இசை மயமான ஹார்ன் சப்தங்களும், சைக்கிள் வண்டிகளின் ‘கிணிங் கிணிங்’ ஜலதரங்க ஓசையும் அமளி துமளியாக அல்லோலப்படுகின்ற வீதி. 

‘சடக் சடக் சடக்’ கென ஒரு விநோத ஓசையுடன் தம்புவின் சைக்கிள் ஓட்டமாய் ஓடுகிறது. 

நொண்டி நாயொன்றின் வேகமான ஓட்டம். 

வியர்வை ‘சளசள’வென பெருகிக் கொட்ட, கரும்மேனியில் கழுத்து, கால், கைகளில் அடர்ந்துள்ள நரம்புகள் சர்ப்ப நெளிவுகளாகப் புடைத்து வீங்க, தம்பு பெடலை உந்துகிறான். 

சக்கரங்கள் பாதையை விழுங்குகின்றன. வீதி பின்நோக்கி நகர, சைக்கிள் முன்னோக்கி விரைகிறது. 

சடக்!சடக்! சடக்! சடக்! 

வண்டியின் பின் பாகத்தில் சோற்றுப் பார்சல்கள் அடுக்கப்பட்ட பெட்டி. 

வெயிலென்ன, வீதி நெரிசலென்ன தம்புவை ஒன்றும் செய்துவிட முடியாது. 

சடக்! சடக்! சடக்! சடக்! 

பழைய, ஒடிசலான சைக்கிள்தான். என்றாலுமென்ன அநாயசமாகத்தான் பறக்கும். 

சடக்!சடக்! சடக்! சடக்! 

தம்பு சோற்றுப் பார்சல்களை விநியோகிப்பதற்காக பறந்து கொண்டிருக்கிறான். 

“அடோ பிஸ்ஸா பலாஹென பலயன்….!” 

(“ஏய் பைத்தியக்காரனே பார்த்துப் போ!”) 

லொரி டிரைவர் ஒருவன் கொதிப்புடன் கத்துகிறான். கத்தல் ரப்பர் பந்தாக வீதியில் மோதி எகிறிச் செல்கிறது.

பெரிய லொரி ஒன்று ‘விசுக்’கென தம்புவின் ‘சடக்! சடக்கை’ கடந்து பறக்கிறது. 

தம்புவின் காதில் சத்தம் விழவில்லை. 

சிந்தனை எங்கோ! உணர்வுகள் எங்கோ! 

சுழலும் சக்கரங்கள் பாதையை விழுங்குகின்றன. 

சடக்!சடக்! சடக்! சடக்! வண்டியின் தாவலான ஓட்டம். 

வீதியின் பின்னோக்கிய நகர்வு. 

இருபத்தைந்து ஆண்டுகள், முதுமையை நோக்கிய உடம்பின் நகர்வு போலவே, சைக்கிளின் உருவமும் தகர்ந்துவிட்டது. 

என்றாலும் பேய்த்தனமான ஓட்டம். 

வயோதிகத்தை வேகமாக நெருங்கி சாவை சைக்கிள் அண்மிக் கொண்டிருக்கின்றது. 

அது தம்புவின் மூத்த பிள்ளை…. 

ஆமாம், அது அவனுடைய மூத்த குழந்தைதான். அவ்வாறுதான் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கிறான். 

கைகளின் இறுகிய பிடிக்குள் சைக்கிள் ‘எண்டல்.’ 

லேசான நடுக்கம் ஆனாலும். 

‘உடும்புப் பிடி’, முன் சக்கரத்தில் இமைகளில் அசைவின்றி லயித்துவிட்ட கண்கள், மேலும் கீழும் ஏறி இறங்கி பெடலை உந்தும் பழகிப்போன கால்கள்…. 

கண்களில் முத்து முத்தாகத் திரண்டு பெருகி வழியும் கண்ணீர்த் துளிகள். 

‘கடவுளே! தம்புவிற்கு என்ன நடந்துவிட்டது?’ 


தம்புவிற்கு உழைப்புத் தான் அச்சாணி. அவனுடைய கடுமையான உழைப்பு காரணமாக பசளையாக குடும்பச் செடியில் பூத்துள்ள ஐந்து பூக்களும் ஒரு வேளையாவது பசியாறுகின்றன. 

ராசு – மூத்தவன், எஸ்.எஸ்.சி. வரை படித்துவிட்டான். பெல்பொட்டம் வேறு அணிந்து துரை மாதிரி திரிகிறான். 

தம்புவிற்குப் பெருமையோ பெருமை. படிப்பெல்லாம் தம்புவிற்குப் பிடிபடாத விசயங்கள். பிள்ளைகளை கொஞ்சமாவது படிப்பிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வுகூட அவனுக்கு இல்லை. 

ஒரு நாள்…. 

ராசு பள்ளிக்கூடம் போக சப்பாத்துக் கேட்டான்! 

“அட, என்னடா சப்பாத்து. ஐயாவிற்கு படிப்பு என்ன வேண்டி கிடக்கு படிப்பு. ஏதோ ரெண்டு எழுத்தைப் படி அது போதும். எனக்கு வயசாயிற்று. சைக்கிள் இருக்கு, சோத்துப் பார்சல்களை வீடு வீடாய் எடுத்து நாலு ஆபீசிற்கு கொண்டுபோய் கொடுத்தா ஒரு பொழப்பாய் போச்சி….’ 

அவன் எடுத்தெறிந்து பேசினான். 

வாய் நிறைய வெற்றிலை. ஆட்டைப்போல் சொத சொதவென சப்பிக்கொண்டே அரை குறையா விட்டு விட்டுச் சொன்னான். 

பார்வதியின் காதில் விசயம் நாராசமாகப் பாய்ந்தது. 

சுரீர் என மனசில் நெருப்புப் பற்றிக் கொண்டவளாகப் பதறினாள். 

“என்ன மனுஷன் ஐயா நீ! ஒவ்வொரு நாளும் எத்தின ஆபீஸ் ஏறி எறங்குற. எத்தின தொரமாரைப் பாக்குறே. நம் புள்ளையும் அந்த மாதுரி ஆகணும் எண்ட ஆசை ஒனக்கு இருக்கா. 

ஆபீஸ் வழியா சோத்துப் பார்சல் கொண்டுபோய் கொடுக்கணுமா இல்ல, சோத்துப் பார்சல். ஒன் புத்தி ஒன்ன விட்டு போகுமா. செருப்பால அடிச்சாத்தான் உருப்படுவ. சொரணை இல்லாத பொறவி.” 

சமத்தான சொல்லடி. 

கண்கள் அக்கினிக் குழம்பாக எரிந்து விழுந்து ஹாக்கென காறித் துப்பினாள் பார்வதி. 

தம்புச் சாமி வெலவெலத்துப் போனான். 

‘பாரு, ஒரு நாளும் எடுத்தெரிஞ்சு பேச மாட்டாளே!’ 

மனதிற்குள் உதறலெடுக்கின்றது. 

வெற்றிலையை சப்ப முடியாமல் குழுக்கென விழுங்கிக்கொண்டு தலைக்குள் பூச்சிகள் பறக்க சுரீர் என விறைத்துப் போய் நிற்கிறான். 

‘பார்வதி சொல்லுறது நெசம், பெத்த தகப்பன் நான் என் புள்ளைக நல்ல தொழில் பாக்கணும் எண்டு என்னிக்காவது நெனச்சிப் பாத்திருக்கேனா…’ 

நெஞ்சைத் தொட்டு கேட்டுக்கொண்டான். 

திகைப்பு அலைகள் முட்டி மோதுகின்றன. 

பார்வதி கொடுத்த அடி நல்ல அடிதான். அது ஈரமணலில் விழுந்த விதையாக தம்புவின் நெஞ்சை ஊடறுத்து வேரோடி உறுதி என்ற நல்ல மரமாக வளர்ந்து விட்டது. 

படிப்பு என்பது இலவசமாகத்தான் வழங்கப் படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் தம்பு கசங்கித்தான் போனான். ராசுவை எஸ். எஸ். சி வரைக்கும் படிப்பிக்க அவன் பட்ட பாடு 

இப்படி வளர்க்கப்பட்டவன் அருமை மகன் ராசு.

இன்று காலையில் : 

அவன் சைக்கிள் அருகில் வந்தபோது தம்பு சோற்றுப் பார்சல்களை வண்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். 

“டெடி!” 

ஓ! தம்புவின் உடல் புல்லரிப்பால் சிலிர்த்தது.

‘அப்பா’வென ராசு அழைத்தாலே உடல் விதிர் விதிர்த்து ஆத்மா மெய் மறந்து போகும். அவன் ‘டெடி’ என்ற அழைப்பில் கிறங்கிப் போனான். 

“என்ன ராசு?” 

கேள்வியில் ஆனந்தம் பீறிடுகிறது. 

“எனக்கு சைக்கிள் வேணும்.” 

சைக்கிள் எண்டலை நக விரலால் சுரண்டிய ராசு மென்மையாகக் கேட்டான். 

எதுவும் தேவை என்றால் அப்பாவை மடக்குவது எப்படி என்ற மனோ தத்துவக் கலை அவனுக்கு கைவந்தது. முதலில் புன்னகை, பிறகு ‘டெடி’ என அன்பொழுக அழைப்பு. 

“எதுக்கு ராசு?” 

“பிரன்சுகளோடு ஈவினிங் ரவுண் போக!” 

“அதுக்கென்ன மகன்! அந்தியிலே சைக்கிள் சும்மாதானே கெடக்கு. எடுத்துக்கிட்டுப் போவன். நான் வேணாம்னா சொல்றேன்.’ 

“இதையா?” 

“ஆமா, வேற எதை?” 

“சீச்சி! இத கழுதத்தான் ஓட்டும். நான் கேட்டது இது இல்ல லேட்டஸ்ட் சிங்கப்பூர் சூப்பர் சைக்கிள்…” 

ராசு வெறுப்புடன் சொன்னான். வண்டியின் பின்புறம் ‘மடா’ரென ஓர் உதையும் விழுந்தது. 

தம்பு அதிர்ந்து போனான். 

அந்தக் கால் உதை அவன் நெஞ்சில் பாறாங்கல்லாய் மோதியது. 


“ஓய்! பத் பார்சல் கெதர கியலத ஆவே…”

டேய் ! சோத்துப் பார்சல், வீட்டுலே சொல்லிட்டா வந்தே…” 

பஸ் சாரதி ஒருவன் ஆத்திரமாகக் கத்துகிறான். 

பஸ் டிரைவர்கள் எல்லோருமா கத்துவார்கள். வண்டியொன்று முன்னால் மடேலென இடித்துவிட்டது. 

ஆகாயத்தில் பறந்துசென்ற தம்பு பொத்தென் தரையில் விழுந்தான். 

முக்கல் முனகலுடன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு எழும்பி நின்று பார்த்தபொழுது…

வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் சோற்றுப் பருக்கைகளுக்கு நடுவே அவனுடைய வண்டி துண்டு துண்டாக நொறுங்கிக் கிடக்க முன் சக்கரம் விர்ர்ரென சுழன்று கொண்டிருக்கிறது. 

– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

கே.விஜயன் கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *