சுதந்திர சறுக்கம்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சர்ப்பமென நீண்டு செல்லும் நெடிய பாதை.
இ.போ.சா.வின் மின்னலான ஓட்டம்:
சுதந்திர வர்த்தக வளையம் நோக்கி மனச்செடி சொரியும் கனவுப் பூக்களோடு பயணம்.
சூரியன் நடுவானைத் தொட்டு வெம்மையை வெளியிடுகிறான். பஸ் வண்டியின் முன் ஆசனத்தில் அமர்ந்து, முன்னும் பின்னும் வேடிக்கை பார்க்கும் உணர்வுகளோடும் மனத்தில் என்னென்னவோ கனவுகளோடும் இருப்புக் கொள்ளாத தவிப்பு.
வண்டி நின்றது.
என் தோளைத் தட்டிய கண்டக்டர் ‘இங்கே இறங்கி யாரிடமாவது விசாரித்துக்கொண்டு நடவுங்கள்’ என சிங்களத்தில் மெதுவாகச் சொன்னான். வெற்றிலைக் காவி படிந்த அவனுடைய பற்களையும் உதடுகளையும் சில வினாடிகள் வெறித்த நிலையில் நின்ற நான், சட்டென பரபரப்படைந்து கீழே இறங்கினேன்.
‘ஊவ்! நெருப்பு மழை!’
இறங்கிய இடத்தில் கொஞ்ச நேரம் நின்று, தலையில் கை வைத்து முன் நீண்டு செல்லும் பாதையில் கண்பதித்த பொழுது இ.போ.சா. கடகடவென பறந்து கொண்டிருந்தது.
நடக்க வேண்டுமே?
எத் திசையில்?
கேள்விப் பாம்பு சிந்தையில் நெளிய மெதுவாகப் பயணம். நடக்க, நடக்க சனச் செறிவு குறைந்து வாகன நெரிசலும் இரைச்சலும் நலிந்து, வீதி சந்தடி மறைந்து வெறிச்ச நிலைக்கு நழுவுகிறது.
கட்டிடத் தொழில் புரியும் இரண்டு பெண்களும் ஒரு வாலிபனும் சுவாரஸ்யமாக பேசியவாறு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கைதட்டி அவர்களை அழைத்து, கையிலுள்ள கடிதக் கவரைக் காட்டி, அதிலுள்ள விலாசத்தை வாசித்து விசாரித்தேன்.
அவர்கள் முக மலர்களில் கேள்வி முட்கள், உதடுகளில் பிதுக்கம். ‘என்ன இது, பெரிய கம்பெனி என்று சொன்னார் யாருக்கும் தெரியவில்லையே…’
முணுமுணுப்போடு மறுபடியும் பயணம்.
‘என்ன சூடு! என்ன சூடு’ என சூள் கொட்டிக் கொண்டு நடக்கிறபொழுது தந்தை சொன்ன வாசகங்கள் நெஞ்சில் முட்டி முட்டி மனத்தை ஆனந்தப் புனலில் நீராட்டுகின்றன.
‘வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துலே ஊருலே என்ன சொகுசு. ரெண்டு ரூபா இருந்தா ஒரு குடும்பத்துக்கு ஒரு நாள் முழுதும் போதும்…’
நான் வாய்பிளந்தவாறு கேட்பேன்.
மனம் பிரமிப்புக் கடலில் விழுந்து தத்தளிக்கும்.
‘அந்த வெள்ளைக்காரன் இல்லேன்னா, இந்த நாட்டுலே ஒரு நல்ல ரோடுகூட இருக்குமா? எல்லாம் அவன் போட்டதுதானே!’
‘வரலாறும் புவியியல் பாடங்களும் மனத்திரையில் வெளிச்ச நிழல்களாகச் சலனமிட ஓ…! அந்த வெள்ளைக்கார ஆட்சி எவ்வளவு உன்னதமானது’ என் மனக் கோகிலம் சங்கீதமிசைக்கும்.
‘எங்கட சனங்க மடையங்க, அதனாலதானே சொதந்திரம் அடைஞ்சிட்டோம் என்று சொல்றாங்க, நெசமா சொன்னா அத எழந்திட்டோம், நாப்பத்தெட்டோட சொதந்திரம் போய்ட்டு!
அப்பா பள்ளிக்கூடம் போனதில்லை என்றாலும் அவருக்கு எவ்வளவு அறிவு. ஆமாம், இதையெல்லாம் எப்படித் தெரிஞ்சுக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் துரைதான் காரணம். அப்பா அவருக்கு சமையல்காரனாக இருந்தாலும், துரை அவரிடம் மனம் திறந்து பேசுவார். அவரிடம் பெறுகின்ற பாடங்களைத்தான் அப்பா என்னிடம் ஒப்புவிப்பார்.
சுதந்திர வர்த்தக வளையம், இந்த நாட்டில் பெரிய பொருளாதார விடுதலையையும், நம் மக்களுக்கு இழந்த சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்குமென துரை சொன்னதாக அப்பா வீட்டில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
‘அப்பா! அங்கே எனக்கொரு வேலை எடுத்துத் தரும்படியாக துரைக்குச் சொல்லுங்களேன்!
ஒரு பலகைக் கடை.
ஒரு சின்ன மேசை. அதில் நாலைந்து போத்தல்கள். அதில் நிறைந்தும் நிறையாமலும், அரை குறையாக இனிப்புகள். அந்த மேசைக்குப் பின்னால் உட்கார்ந்து சுருட்டுப் புகைத்தவண்ணம் ஒரு கிழவர், உள்ளே ஒரு வாங்கில் உட்கார்ந்து ரொட்டித்துண்டுகளைப் பிய்த்துப் பிய்த்து சொதியில் நனைத்து நனைத்து விழுங்கியவண்ணம் இரண்டு பையன்கள்.
‘டயமென் பெரடைட்ஸ் கம்பனி கொயத தீன்னே?
“டயமென் பெரடைட்ஸ் கம்பனி எங்கே இருக்கிறது?’
என் குரல் செவிகளில் விழுந்ததும், கிழவன் தலைநிமிர, சுருங்கிய நெற்றியில் சிந்தனைக் கோடுகள் கால்வாய்களாகப் பள்ளம் கிழிக்க சில கணங்களில் அனைத்தும் மறைந்து கறுப்பு உதடுகளில் புன்னகையின் ஜனிப்பு.
கிழவன் சுட்டிய திசையில் பார்வை.
ஒரு தென்னந் தோப்பு. அதனை நடுவாகப் பிளந்து விரையும் செம்மண் பாதை. அதில் ஆங்காங்கே சேறும் சகதியுமான நீர்ப்படிவின் தேக்கம்.
நடக்கிறேன்.
வெயிலின் காங்கை மடிகிறது. தென்னந் தோப்பினூடாகப் பயணம். அடர்த்தியான தருக்களின் வருகையால் பசுமை நிழலின் சுகம்.
இதென்ன இதற்குள்ளாகவா கம்பெனி. அலிபாபா கதையில் வருகின்ற கள்வர் குகையைத் தேடிப்போவது போலிருக்கிறதே. ‘சட்’டென ஒரு பரந்த வெளி தோன்றுகிறது. மின்சாரக் கம்பங்கள் தெரிகின்றன. கொஞ்சம் தொலைவில் சீன பெருஞ் சுவரைப் போன்ற மண் நடுவிலே சிறு சிறு கட்டிடங்கள்.
நெருங்க நெருங்க மனத்தில் திகில் பாம்பு நுழைந்து கடிக்கிறது. ஒருமுறை ராணுவ முகாமொன்றில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அதுபோலவே அந்தப் பிரதேசம் இருக்கிறது.
‘திடுதிப்பென வயிற்றில் புளியைக் கரைப்பது போல ஒரு சம்பவம் நடந்தது. வாயிற் கதவினருகிலிருந்த ஒரு கொட்டிலிலிருந்து ஒருவன் வேகமாக என்னை நோக்கி வந்தான். ஓர் இராணுவ வீரனைப் போன்று தோன்றிய அவனுடைய தோளில் நீண்ட துப்பாக்கியிருந்தது.
“என்ன வேண்டும்?” அவன் ஆங்கிலத்தில் விறைப்பாகக் கேட்டான்.
கடிதக் கவரை நீட்டினேன். அவன் கண்கள் அதன் மீது விரைந்து ஓடின.
அவன் என்னை அழைத்துக்கொண்டு போக, ஒரு கைதியாகப் பின்தொடர்ந்தேன்.
அந்த வாயிலைக் கடந்து உள்ளே போனதும் தலையைச் சுற்றியது. முன்னும் துப்பாக்கியோடு அல்லவா நிற்கிறார்கள்.
ஒரு வெள்ளைக்காரனின் முன்பாக என்னைக் கொண்டுபோய் நிறுத்தினான்.
கடிதக் கவரை நீட்டினேன்.
அவன் முகத்தில் மலர்ச்சி.
அது ஒரு மாணிக்கக்கல் கம்பெனி. இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து கொண்டுவருகின்ற கற்களை துப்புரவுப்படுத்தி வெளிநாட்டிற்குக் கொண்டு போவதுதான் தொழில். இங்கே கிட்டத்தட்ட நூறு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்குத் தேனீர் தயாரித்துக் கொண்டுபோய் கொடுப்பது என் வேலை.
வெளிநாட்டான் வெளிநாட்டான்தான் என்ற மகிழ்ச்சிப் புனல் நெஞ்சில் பெருக்கெடுத்துப் பாய்கிறது. வேலை செய்து களைத்துப் போகின்ற தொழிலாளிக்குத் தேனீர் வேறு கொடுக்கிறானே.
எப்பொழுதும் மழை வருஷிப்பது போன்ற சப்தம். இயந்திரங்களின் ஓசை. தொழிலாளிகள் ஒருவரோ டொருவர் பேசுவதுமில்லை. வேலையிலே கண்ணும் கருத்தும். ஒவ்வொரு அறைக்குள்ளும் இரண்டோ, மூன்றோ சிகுரிட்டிக்காரர்கள் இருப்பார்கள். ஒரு வேளை நின்ற நிலையிலே வேலை செய்கின்ற தொழிலாளர்கள் களைத்து விழுந்துவிட்டால் அவர்களைத் தாங்கிக் கொள்வதற்காக நிற்கிறார்கள் போலும். நான் டீ கொண்டுபோகும் பொழுதும் ஒரு சிகுரிட்டிக்காரன் என் கூடவே வருவான். இதுகூட நான் டீ கப்புகளைக் கைதவற விட்டுவிடுவேனோ என்ற காரணத்திற்காகவும், உதவுவதற்காகவுமிருக்கக் கூடும்.
மாலை மயங்கி இருள் சூழத் தொடங்கியபொழுது வேலை விட்டது. முதல் நாள் வேலை முடிந்து வெளியில் ஓட ஆவல் ததும்பி நின்றேன். வாசற் கதவருகில் நீண்ட வரிசை. எதனையோ விழுங்கிய மலைப்பாம்பு மெதுவாக ஊர்வது போலவே வரிசை நகர்ந்தது.
நன்றாகவே இருள் சூழ்ந்து, மேற்கு வானிலும் கரும் திரை. மெர்கூரி விளக்குகள் கம்பெனிக்குள் நாலா பக்கமும் ஒளி வீச்சை தொடங்கியிருந்தன.
அப்பாடா, என் முறை வந்தது.
சும்மா தட்டிச் சோதிப்பார்கள் என்று நினைத்த மனத்தில் மண் விழுந்தது. என் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு சிகுரிட்டிக்காரன் என்னை அழைத்துக்கொண்டு பாதுகாப்பு அறைக்கு சென்றான். நான் திகிலடைந்து நின்று கொண்டிருந்தபொழுதே என்னை முழு நிர்வாணமாக்கினான்.
ஒரு பெண்ணைப் போன்ற லஜ்ஜை குணம் படைத்த நான் கூனிக் குறுகிப் போனேன். அவன் செய்த சோதனைகளில் என் ஆத்மா மரணித்தது.
என் சர்வாங்கத்திலும் அவன் மாணிக்கக்கல் தேடுகிறான். என் மலவாசலையும் ரப்பர் கையுறை அணிந்த அவனுடைய கைவிரல் விட்டு வைக்கவில்லை.
‘பொருளாதார விடுதலையும் இந்த நாட்டு மக்களுக்குச் சுதந்திரமும்…’ தந்தையின் பிரசங்கம் செவிக்குள் ஒலிக்கின்றன.
– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க... |