சி.சு.செல்லப்பா





(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சுமார் மூன்றரை வருடங்களுக்கு முன் நான் மதுரை யில் சில நாட்கள் தங்க நேரிட்டபோது, திடீரென்று நினைத்துக்கொண்டு வத்தலக்குண்டுக்குப் பஸ் பிடித்து ஏறி இறங்கி செல்லப்பா அவர்களின் வீடு விசாரித்துக்கொண்டு அடைந்து, கதவைத் தட்டினதும் அவரேதான் திறந்தார். என்னைக் கேட்ட முதல் கேள்வி “என்ன காரணம் வந்தீர்கள்?”

நீண்ட காலத்துப்பின் சந்திக்கையில், முதல் பேச்சே இதுவானால் வந்தவனை அருட்டியிருக்கும். ஏது, ஒருவேளை நான் வந்திருக்கக் கூடாதோ? ஆனால் செல்லப்பாவை எனக்கு நேற்று இன்றா பழக்கம்? இப்படிக் கேட்டாரே ஒழிய, என் கைப்பெட்டியை எப்பவோ வாங்கிக்கொண்டு விட்டாரே!
இதை எதற்குச் சொல்ல வந்தேனென்றால், எந்த விஷயத்திலும் அவருடைய அணுகுமுறையில், சக்கரவட்ட மீலாத ஒரு நேரடித்தனம் (Directness) வெளிச்சம் (Openness) எளிமை (Simplicity) இவைகளுக்கு அவர் வரவேற்பு ஒரு சாம்பிள்.
அவரோடு நான் தங்கின மூன்று நாட்களுக்கும் அன்புக்குக் குறைச்சலே இல்லை. என் தாயார் உயிரோடு இருந்தபோது என் வீட்டில் என் மனம் எப்படி ஒருவிதமான விடுதலையி லிருந்ததோ, அப்படியிருந்தேன்.
உபசரிப்பென்றால் உதட்டு உபசாரமில்லை. சிலபேர் மிகைப்பட ஒழுகுவார்கள். மேலே கவ்விக்கொள்வார்கள்.
இதோ பாருங்கள் ராமாமிருதம், நான் கவனித்தேன். எப்பவுமே ரஸம் உங்களுக்குப் பிரியம்போலத் தெரிகிறது. ஏந்திக் குடிக்கிறீர்கள். அது உடம்புக்கு நல்லதல்ல. சாதத் துடன் கலந்து சாப்பிடுங்கள். ஒன்றும் பண்ணாது
இதனால்தான் தாயார்மாதிரி என்றேன்
நான் போயிருந்த சமயம், கண்ணுக்கு ரண சிகிச்சை ஆகி. இன்னும் மருந்திலிருந்தார். சிக்கலான சிகிச்சை என்று அறிந்தேன். மதுரையில் புகழ்பெற்ற கண் ஆஸ்பத்திரி (பேர் சமயத்துக்கு நினைவு வரவில்லை, இது ஒரு சாபம்) டாக்டர்கள், சிப்பந்திகள் தன்னைக் கவனித்துக்கொண்ட முறைபற்றி உற்சாகத்துடன் புகழ்ந்து பேசினார்
சாயங்காலம் பையன் (ஒரே மகன்) ஆபீஸிலிருந்து வந்தான். விசுப்பலகையில் படு கவைத்து (சும்மா படு அப்பா! எனக்கு எப்படிப் போடணும்னு தெரியும். படு என்கிறேனே!’) கண்ணில் சொட்டு மருந்தை ஊற்றினான். பையனின் உரிமையான அதட்டலும், அவர் அதற்குப் பணிந்துபோகும் பாங்கும் பார்க்க இன்பமாயிருந்தது.
செல்லப்பா வீட்டைப் படுசுத்தமாய் வைத்திருந்தார். (இதில் வீட்டுப் பெண்டிருக்கு அதிகப் பங்கு கொடுக்க எனக்குத் தோன்றவில்லை) செல்லப்பாவின் கைதான் எனக்கு தெரிந்தது, முக்கியமாகத் தோட்டத்தில் – ஏனோதானோ இலாது எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் முழு மனதோடு அவருடைய ஈடுபாடும், அந்த ஒழுங்கான பாத்தி களும் பூச்செடிகளும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தண்ணீர் பாய வெட்டியிருக்கும். கால்வாய்களும், தென்னை களின் அடியைச் சுற்றி ஒழுங்கான அந்த வட்டக் குழிவுகளும் செல்லப்பாவின் கை மட்டுமன்று, ஆதிக்கம் பளிச்சிட்டது. அரைகுறைக் காரியம் அவரிடம் கிடையா து.
மூன்றாம் நாள் காலை நான் கிளம்பத் தயாரானதும் சொன்னார். என்ன அவசரம் போய் வெட்டி முறிக்கப் போகிறீர்கள்? இன்று மாலை சிட்டி வருவதாக எழுதியிருக் கிறார். கலகலப்பாய்ப் பேச நமக்கு விஷயங்கள் நிறைய இருக்கும். இருந்துவிட்டுப் போங்களேன்!”
இரண்டு மூணு தரம் சொல்லிவிட்டார். அவர் சொன்னதும் உண்மைதான். ஆனால் ஏதோ சாக்குச் சொல்லிக்கொண்டு நழுவிவிட்டேன். எனக்கே காரணம் இன்னும் தெரியவில்லை. புத்திக் கிறுக்கு.
செல்லப்பாவும் நானும் முதன் முதலாகச் சந்தித்த தெப்போ? சரியாக ஞாபகமில்லை.
எனக்கு 18, 19 வயதில் என் முதல் தமிழ்க் கதையுடன் ஹனுமான் வாரப் பத்திரிகை (ஆசிரியர் — சங்கு சுப்ரமணியம்) ஆபீசுக்குப் போனேனே, அங்கே அவர் உதவி ஆசிரியராக இருந்தாரே அப்பவா? அப்போது நாங்கள் பேசினதாக நினை வில்லை. எனக்கு அங்கு தி.ஜ ர. வைத்தான் தெரியும்.
அல்லது. மரீனா கடற்கரையில் மணிக்கொடி எழுத் தாளர்கள் மாலை மாலை சந்தித்துப் பேசுவார்களே, அப்போதா?
ஒன்று தெரியும். செல்லப்பாவுக்கு என் ஆரம்ப கால எழுத்துக்களைப் பற்றி நல்ல அபிப்பிராயமில்லை. இந்தப் பையன் நன்றாக எழுதுகிறான்” என்று தி.ஜ.ர என்னை அறிமுகப்படுத்தியபோது “என்ன நல்ல எழுத்து? எதிலும் ஒரு வக்கிர பார்வை!” என்று அவருடைய உரத்த குரலில் ஒரு விளாசு விளாசினாரே பார்க்கலாம்! அப்போது அவரிடம் எனக்குக் கண்ட நடுக்கம், நாளடைவில் அன்பும் ஆழ்ந்த மரியாதையாகவும் மாறிவிட்டாலும் இப்பவும், எப்பவும் அவரிடம் எனக்குச் சற்றுப் பயம்தான். காரணம் அவருடைய நேர்மை (honesty) என்று இப்போது உணருகிறேன்.
பரமசிவன்போல் அவர் கோபத்தின் ப்ரபையுள் நின்றார் என்று எனக்குத் தோன்றிற்று. முதல் தாக்கம். ஒற்றை நாடித் தேகம். கதர் அரைக்கை சொக்காய், கதர் வேட்டி, கையில் எப்பவும் ஒரு துணிப்பை. அனேகமாக அதில் புத்தகங் களும் எழுதுகோலும் தானிருக்கும். சற்றுக் குறுகலான நீண்ட முகத்தில் குழிவான கண்களில் கோபம் பறப்பதாக என் எண்ணம். அந்த நாளைப் பற்றிப் பேசுகிறேன். செல்லப்பா மன்னிக்கணும்.
அப்போது வை.கோவிந்தன் வெளியிட்டு வந்த சக்தி மாதப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தி.ஜ.ர என் கதை களை வெளியிட்டு வந்தார். அடுத்து, அந்தக் கூட்டத்தில் என் எழுத்து, பொதுவாகவோ குறிப்பிட்டோ அடிபடும் போதும் செல்லப்பாவின் அபிப்பிராயம் மாறவில்லை. என் கதைகளைப்பற்றி அவரிடம் நான் வாதிக்கவில்லை, அந்த அளவுக்கு எனக்குத் துணிச்சல் ஏது? என் பயம்தான் அதிகரித்துக்கொண்டு வந்தது.
பிறகு ஒரு சமயம். புதுக் கதையுடன், ‘சந்திரோதயம்’ (ஆசிரியர் – க.நா.சு) ஆபீசுக்குச் சென்றபோது அங்கு ஆசிரியர் குழுவில் செல்லப்பா உட்கார்ந்து கொண்டிருக் உட்கார்ந்துகொண்டிருக் கிறார்! கதையைக் கொடுத்துவிட்டு, சரி என் கதை வெளி வந்தாற்போலத்தான்’ என்று நினைத்துக்கொண்டே வெளியேறினேன். என் தப்பான எடைக்கும் என் சின்னத் தனத்துக்கும் அத்தாட்சி வேறே வேண்டாம்.
‘அபூர்வராகம்’ சந்திரோதயத்தில் வெளிவந்தது பெரிதல்ல. வந்த சுருக்கில், திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடில் செல்லப்பாவைச் சந்திக்க நேர்ந்தது. அதே சாலையில் பத்து நிமிடங்களுக்கு முன்தான் ந.சிதம்பர சுப்ரமண்யத்துடன் பேசினேன்.
செல்லப்பா, கதையைப் பாராட்டினார். அவர் யாராட்டிய வாசகம் ஞாபகமில்லை. ஆனால் முடிவில் வார்த்தைகள் இன்னமும் நினைவில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன
“என்ன ராமாமிருதம், வாழையிலை ஏட்டில் அல்வாத் துண்டைப் பரிமாறிவிட்டு அதில் முடி அகப்பட்டாற்போல் கதை முடிவில் உங்கள் வழக்கமான சேஷ்டையைக் காண் பித்துவிட்டீர்களே!”
‘அபூர்வராகம்’ எனக்கு எழுத்துத் துறையில் ஒரு திருப்பம். வாசகர்களும் சக எழுத்தாளர்களும் ‘இதென்ன புதுக் குரல் கேட்கிறது?’ என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.
அதற்குப் பின்னாலும் என் கதைகள் வெளிவந்து கொண் டிருந்தன. செல்லப்பா என்ன அபிப்பிராயம் சொல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஜனனி, யோகம், புற்று, ப்ரளயம்… ஊஹும் செல்லப்பா வாய் திறக்கவில்லை. நானும் கேட்கவில்லை. எனக்கு மட்டும் ரோசம் இல்லையா? அவர் வரையில் என்னிடம் ஏதோ ஒரு அத்திபூத்து, உதிர்ந்துவிட்டது என் என்று என்னைப்பற்றி நினைத்துக்கொண்டேன். என்னில் ஏதோ விசனம் கண்டேன்.
காலம் கடந்தது.
ஒருநாள் மாலை பெரிய தெருவில் (நாங்கள் திருவல்லிக் கேணி வாசிகள்) ஏதோ குருட்டு யோசனையில் எதிரே யார், என்ன வருகிறது என்றுகூடத் தெரியாமல் –
“என்னய்யா இது. இந்த மாதிரி தெருவில் நடந்தால் பத்து இல்லையா?””
அதட்டல் கேட்டு உலகுக்கு மீண்டால் என் வழியில் செல்லப்பா நின்றுகொண்டிருந்தார், கையில் அவர் யுடன். முகத்தில் சிரிப்பு இல்லை. தெருவில் என் அஜாக்ர தைக்குக் கோபம் தானிருக்கும்.
ஒரு நிமிஷம் பொறுத்து சுதேசமித்ரன் வார இதழில் உங்கள் கதை –இதழ்கள் (பார்கவி) படித்தேன். ரொம்ப நன்றாக இருக்கிறது. ஒரு அப்பு அழுக்குக் கிடையாது. Perfect Endingஇல் வைத்திருக்கும் முத்தாய்ப்பு பிரமாதம். யார் இப்படிச் சொல்வது? செல்லப்பாவா? வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷியா? இல்லை, சிற்பம் சிரக்கம்பம் செய்கிறது.
எனக்கு வாயடைத்துப்போய்க் கண் கலங்கிவிட்டது. செல்லப்பா எதிரில் உணர்ச்சிவசப்படுவதில் எனக்கு வெட்கம் கிடையாது, அவரைவிட நான் ஐந்து, ஆறு வயது இளையவன்தான்.
செல்லப்பா, கனிவுடன்-“என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நல்ல பண்டம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டேயிருக்கிறோம். கிடைத்தால் உங்களைவிட சந்தோஷம் எங்களுக்குத்தான் அதிகம்.”
இந்த நாளில் இப்படி யாரேனும் சொல்வார்களா? மணிக்கொடி எழுத்தாளர்களின் விசேஷம் அதுதான். அதிலும் செல்லப்பா.
மேலும், ‘உங்கள் கதையை சுதேசமித்ரன் வார இதழில் விமர்சனம் செய்யலாம் என்றிருக்கிறேன்.
ஏதேது, கொண்டைபோட்டு, மயில் ரக்கை சூட்டல் வேறா? அங்குமிங்குமாக, துணுக்காக, ஒரு வரி இரு வரியாக. தினசரி பேப்பரிலோ, வாசகர் கடிதங்களிலோ, பாராட்டு வந்தால் அதை ஃப்ரேம் போட வழியிருக்கிறதா என்று யோசிக்கும் நாள் அது. தொடர்ந்து அந்த ஒரு கதையை மூன்று வாரங்கள் விமர்சனம். என் கதையைப் படிப்பதைக் காட்டிலும் என்னைப் பற்றிப் படிக்க என்ன ருசி!
செல்லப்பாவின் அலசல் விமர்சனம் என்றால் என்னென்று நினைக்கிறீர்கள்? வரிக்கு வரி check post. தப்பான யூகத்துக்கு இடந்தரக்கூடாது என்கிற கவலையில் விவரமான விளக்கங்களில் எடுத்துக்காட்டுகளில் அவருடைய தமிழ் நடையே மாறிவிட்டது என்பது என் கருத்து.
என் கதை அமைந்திருந்த மனோதத்து ரீதியும் அதன் விளம்பகால அசைவும் (movement) அவருடைய அலசல் விமர்சனத்துக்கு ஈடுகொடுத்தன. அவருக்கும் புகுந்து விளையாட சௌகரியமாயிருந்தது என்று நினைக்கிறேன்.
அவருடைய எழுத்துப் பத்திரிகையில் ‘நான்” எனும் என் சொல் சித்திரம் வந்து ப்ரகாசம் அடைந்தது. அதில் ஒரு வாக்யம், “நெருப்பு என்றால் வாய் வேக வேண்டும். (அதாவது சொல்லுக்கும் செயலுக்கும் இடைக்கோடு அழியும் நிலையை எழுத்தில் சாதிக்க வேண்டும் எனும் என் ஆசையைக் குறிக்கிறது) இப்பவும் பாராட்டாகவோ. ஏளனமாகவோ,வியப்பிலோ, இலக்கிய வரலாறு,விமர்சனக் கட்டுரைகள், நூல்களில் என் பெயர் வருகையில் – இந்த வாக்யம் குறிப்பிடப்படுகிறது.
செல்லப்பா பிடிவாத குணம் படைத்தவர். இதற்கு ருசு வேறெங்கும் தேட வேண்டாம். பத்துவருடங்கள் எழுத்துப் பத்திரிகையை நடத்தினாரே அது போதாதா? பொழுது போக்கு அம்சம் ஏதுமில்லாமல் முழுக்கவே விமர்சனத்துக் கென்றே ஆன பத்திரிகை. இதனுடைய வெற்றி நிச்சயம் வியாபார ரீதியில் இல்லை. முழுப்பொழுதை எழுத்தாக்கிக் கொண்டவனுக்கு தினமும் சோதனையான அந்நாளில் (இப்போது மட்டும் என்ன வாழ்ந்தது?) “செல்லப்பா எப்படி உங்களால் சாத்தியமாகிறது என்று கேட்சு முடியுமா? அவ்வளவு துணிச்சல் எனக்கேது? அது என் சொந்த விஷயம். இலக்கியம் பேச வந்தீர்களா,வம்பு பேச வந்தீர்களா?’ என்று கேட்டுவிட்டால்? கேட்பாரோ மாட்டாரோ, செல்லப்பாவிடம் அந்த அத்து எனக்கு எப்ப வும் நாக்குத் துடித்ததுடன் சரி.
‘எழுத்து’ வின் வெற்றி வேறுவிதத்தில், விமர்சனத்தின் அந்தஸ்தை அது எடுத்துக்காட்டிற்று.
புதுக்கவிதை இயக்கத்துக்குத் தொட்டில் என்கிற முறையில் எழுத்து என்றும் பேசப்படும். செல்லப்பா லட்சியவாதி. அவருக்கு அது போதும். இல்லை, அதுகூட அவருக்கு அவசியமில்லை. தனக்குச் சரி, இல்லை, தன் மனச் சாட்சிக்குச் சரியென்று பட்ட ஒரு காரியத்தில் ஈடுபட்டோம் என்கிற திருப்தி போதும்.
பிடிவாதம், வீம்பு – அரிச்சந்திரனிலிருந்து காந்தி வரை, ராமபிரானிலிருந்து துரியோதனன்வரை பீஷ்மனிலிருந்து செல்லப்பா வரை நான் பூஜிக்கும் குணங்கள். இந்தக் குணங் களால் என்றுமே லாபம் இல்லை. நன்மைகூட இல்லை.
ஆயினும் அவை குணங்கள். அவையில்லாவிட்டால், முதுகெலும்பே இல்லை Compromise செல்லப்பாவின் அகராதியிலே கிடையாது.
விமர்சனம் என்பது – இல்லை, விமர்சனத்தைப் பற்றி நான் எண்ணுவதை, இடமும் நேரமும் கிடைத்தால் பின்னால் எழுதுகிறேன். உண்மையான விமர்சகனின் தகுதி கள் என்னென்று எனக்குத் தெரியும்.
- புத்தி கூர்மையிலும் கத்தி கூர்மை.
- நுனிப்பில் மேயாமை. (பத்துப் மேலெழுந்தவாரியாகக் கண்ணோட்டம் புத்தகத்தையே விமர்சனம் செய்யும் இல்லாமை)
- எடையிலும், தராசிலும் துல்லியம்.
- இரக்கமற்ற நாணயம்.
பக்கங்கள் விட்டுவிட்டு, போலித்தனம்
- சமயத்துக்குத் தாளம் போடாத நேர்மை.
விமர்சன லட்சணங்களைச் சொல்வதாக நினைத்து மனித வட்சணங்களையே சொல்லிக்கொண்டு போகிறேன். இவை அத்தனைக்கும், செல்லப்பாவிடம் குறைவேயில்லை
செல்லப்பா பெரிய மனுஷன்.
பெரியோரைப் புகழ்வோம்.
– குங்குமம்.
– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.