சின்னத்தம்பியும் குத்தகைக் காணியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2025
பார்வையிட்டோர்: 874 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கால்கள் இரண்டையும் நீட்டி ஒன்றுக்கு மேல் ஒன்றாய்ப் போட்டுக் கொண்டு கைகள் இரண்டையும் இறுகக் கோர்த்துத் தலைக்குக் கீழ் வைத்தபடி முகட்டை அண்ணாந்து பார்த்துக்கொண்டு கிடந்தான் சின்னத் தம்பி. வீட்டின் மூலையில் குப்பி விளக்கொன்று சாதுவாக எரிந்து கொண்டிருந்தது. அவனது கண்கள் நிலைகுத்தி முகட்டையே அண்ணாந்து பார்த்துக் கொண்டாலும், அன்று காலை பிரசவ நோக்காடு கண்டு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவனது மனைவி பொன்னம்மாவைப் பற்றியே நினைவுகள் இருந்தன. 

பொன்னம்மாவுக்கு வெறும் கூப்பன் அரிசிச் சோற்றையும் தொட்டு நக்கிக் குடிக்கும் வெறும் தேனீரையும் தவிர வேறொன்றையும் பிரத்தியேகமா சின்னத்தம்பியால் கொடுக்க முடியவில்லை. இதனால் அவள் மெலிந்து வெளிறி கண்களும் உள்ளுக்குள் தாண்டு போயிருந்தாள். 

‘இந்தப் பிள்ளையை அவள் என்னெண்டுதான் பெத்தெடுக்கப் போறாளோ?’ என்ற கேள்வியும் ‘எப்பிடியும் விடியிறதுக்கு முன்னம் பெத்திடுவாள்… பெத்தாலும் சில நேரம் இரத்தம் தேவை என்றால் நான் ஆரட்டைப் போறது….என்னிலையும் எங்கை இரத்தம் கிடக்கு… தற்செயலாக அவளுக்கு ஒண்டெண்டால், புள்ளையாரே… நானும் இந்த ஆறு புள்ளையளும்’ என்ற எண்ணங்களும் அவனது மனத்துள் மீண்டும் மீண்டும் ஓடி ஓடி வந்தன. அவனுக்கு இன்னும் நித்திரை வரவில்லை. அவன் கைகளை எடுத்துவிட்டு மறுபக்கம் புரண்டு படுத்தான். அப்பொழுதுதான் அவனது கடைசிப் பெண்குழந்தை தங்கமணி பாயில் மூத்திரத்தைப் பெய்துவிட்டு எழுந்திருந்து அழுதது. உடனே அவன் அந்தக் குழந்தையைத் தூக்கி தனது நெஞ்சின்மேல் கிடத்தித் தட்டி நித்திரையாக்கிக் கொண்டிருந்தான். 

பக்கத்து தண்டவாளத்தில் மூன்று தடவை அடித்துக் கேட்டது. மைமல் பொழுது வர இன்னும் இரண்டொரு மணித்தி யாலங்கள் இருந்தன. சின்னத் தம்பியும் சாதுவாகக் கண் அயர்ந்துவிட்டான். 

2 

பொன்னம்மாவுக்குச் சிறிது பிரசவ நோக்காடு கண்டு அவள் ஆஸ்பத்திரிக் கட்டிலால் இறங்கி அடிவயிற்றை மெதுவாகத் தடவிக் கொண்டு அங்குமிங்குமாக நடந்தாள், அவள் அங்குமிங்குமாக நடந்துதிரிந்த பொழுது ஆஸ்பத்திரி யன்னலுக்கூடாக வந்த சோழகக் காற்று அவளுக்குச் சற்று இதமளித்தது. எனவே, அவள் யன்னலுக்கரு காமையில் வந்து ஒரு கையால் யன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு மற்றக் கையால் தனது அடிவயிற்றை மெதுவாகத் தட விக் கொண்டாள். இப்படி அவள் யன்னலருகே நின்று பார்த்த பொழுது ஆஸ்பத்திரிக் குச் சற்று அப்பால் நின்ற பனை மரங்கள் சோழகக் காற்றுக்கு பேய்பிடித்தாடியது போல் அசைந்து சுழன்று ஆடின. அந் தப் பனைமரங்கள் அப்படி ஆடிய தைக் கண்டதும் அவளுக்கு தனது வீட்டிற்குப் பின்னால் நிற்கும் இரண்டு உயர்ந்த பனை மரங்களின் நினைவுதான் வந்தது. 

‘ஐயோ புள்ளையாரே என்ரை குஞ்சுகள் என்ன பாடோ… தற்செயலாக அந்தப் பனையிலை ஒண்டு சரிந்தால்.. குத்தகைக் காசும் நாலைஞ்சு மாசமாகக் குடுக்கேல்லை… குத்தகைக்காரனட்டை போய் பனை மரத்தை வெட்டச் சொன்னாலும் ஏசுவான். அந்தாளும்தான் என்ன செய்யிறது பாவம். உழைப்புப் பிழைப்பு ஒண்டுமில்லாமல் கிடக்குது. அந்தாளுக்கு உழைப்பிருந்தாலும் அந்தக் காசைக் கொண்டுபோய் எறிஞ்சு போட்டு அந்தப் பனையிலை இருக்கிற ஒலையைத் தன்னும் வெட்டச் சொல்லிப்போடும். அதுக்கு மொரு வழியுமில்லை……’ இப்படிப் பொன்னம்மா நினைத்துக் கொண்டிருந்த பொழுது அடி வயிற்றில் சற்று ஊன்றிக் குத்தவே ‘உச்.. ச்ச்…’ என்று வலி தாங்க முடியாது குனிந்து அடி வயிற்றைப் பிசைந்தாள். அப்பொழுது அவளைக் கடந்து போன மருத்துவச்சி, 

‘நல்லாக் குத்தெழும்பட்டுக்கும், நட நட நடந்து திரி. கம்பியிலை பிடிச்சுக் கொண்டு ஒரு இடத்திலை நிக்காதை, அஞ்சாறைப் பெத்துப்போட்டு கன்னிப் புள்ளைத்தாச்சி மாதிரி நிக்கிறாய். இது எல்லாம் சொல்லியே தாறது, நடந்து திரி…’ 

பொன்னம்மாவுக்கு மருத்துவிச்சி சொன்னது ஒருவகையில் சரியாகப் பட்டாலும் அவள் சொன்னவிதம் பிடிக்கவில்லை. பொன்னம்மாவின் கட்டிலுக்கு சற்று அப்பாலுள்ள போஸ்ட் மாஸ்டரின் பெண்சாதி, டி.ஆர்.ஓவின் பெண்சாதிமாரோடு மிகவும் மரியாதையாகக் கதைத்தாள். தான் சிறிது வறுமைப் பட்டதுதான் இதற்குக் காரணம் என்று நினைத்தாள். 

பொன்னம்மாவின் அனுபவத்தின்படி இன்னும் அரை மணித்தியாலத்தில் தனக்குக் குழந்தை பிறந்து விடுமென்று தெரிந்தது. குத்து வர வர அதிகரிக்கவே கீழ் உதட்டைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டு மெல்ல மெல்லவாக தனது கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டாள். 

3 

பொழுது நன்றாகப் புலர்ந் ததும் சின்னத்தம்பி எழுந்து கோப்பி வைக்கக் குசினுக்குள் சென்றான். சென்ற பொழுது அவனது மூன்றுவயதுக் குழ்ந்தை தங்கமணியும் எழுந்து அழுது கொண்டு அவனுக்குப் பின்னால் சென்றது. அவனுக்கு ஆஸ்பத் திரிக்குப் போக நேரமாகினதினால், பிள்ளை எழுந்து அழுதது அழுதது சினமாக இருந்தது. இருந்தும் அடிகொடுக்க மனமில்லாததால் அந்தக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு போய் குசினிக்குள் விட்டுவிட்டு கோப்பியை வைத் தான்’ இதற்கிடையில் அவனது மூத்த மகன் துரைசிங்கம் வந்தான். எழுந்து வெளியில் அவனிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்துவிட்டு வைத்த கோப்பியை ஒரு போத்தலுக்குள் ஊற்றிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக ஆஸ்பத்திரிக்குப்போனான். ஆனால் அவன் போவதற்கு முன் மணி அடித்து நோயாளர்களைப் பார்க்கப் போனவர்கள் எல்லாம் திரும்பிக் கொண்டிருந்தார்கள். சின்னத்தம்பி ஒருவாறு காவல்காரனை மன்றாடி ‘ஐயா’ போட்டு பொன்னம்மாவைப் பார்க்கச் சென்றுவிட்டான். 

பொன்னம்மா அப்பொழுது தான் ஓர் ஆண்குழந்தையைப் பெற்றுக்கொண்டு வந்து கிடத்தப்பட்டிருந்தாள். சின்னத்தம்பியைக் கண்டதும் மனத்தில் ஓர் தென்பு வந்தது. சந்தோசத்தில் பக்கத்தில் கிடத்தியிருந்த ஆண் குழந்தையைத் திரும்பிப் பார்த்தாள். அப்பொழுது அவளுக்கு சின்னத்தம்பின் சாயல் குழந்தையில் தெரிந்தது. 

சின்னத்தம்பி தான் கொண்டுபோன கோப்பியை மூக்குப் பேணியில் வார்த்துப் பொன்னம்மாவுக்குப் பருக்கினான். கோப்பியைக் குடித்ததும் பொன்னம்மாவுக்குச் சாதுவாகக் கதைக்கலாம் போல இருந்தது. எனவே அவள், 

“பிள்ளையள் என்ன செய்யுதுகள்? சின்னவள் அழேல்லையே வரப்போறன் எண்டு…’ 

‘அவள் அழுதவள்தான். அவளைப் பெரியவனோடை விட்டுட்டு வந்தனான். அவனைப் பள்ளிக்குப் போகாமை நிப்பாட்டிக் கிடக்கு’ 

‘கூப்பன் எடுத்ததே’ 

‘இன்னும் எடுக்கேல்லை… போய்தான் மாறிச்சாறிப் பாப்பம்’ 

‘குத்தகைக்காரன் வந்தவரே. வந்தால் அந்தக் கோடிக்குப் புறத்தாலை நிக்கிற பனையிலை ஓலையளை ஆவுதல் இருக்கிற வெட்டிவிடச் சொல்லுங்கோ. அல்லாட்டி பனையைத் தறிச்சு விடச் சொல்லுங்கோ. உந்தக் காத்துக்குப் பனையள் ஆடுற ஆட்டத்தைப் பார்க்கப் பயமாகக் கிடக்கு’ 

‘குத்தகைக்காரன் என்னை வரச்சொல்லி ஆள் அனுப்பி இருக்கிறார். போனால் சொல்லுறன்’ – இப்படிக் கதைத்துக் கொண்டு நிக்கிற பொழுது ஒரு கங்காணி வந்து, 

‘ஏய், மணி அடிச்சு இவ்வளவு நேரமாப் போச்சு உனக்கு பொண்டிலை விட்டுப் போக மனமில்லையே. கெதியாப் போ….பெரிய டாக்குத்தர் வரப் போறார்’ என்றான். 

சின்னத்தம்பி அதற்குமேல் அங்கு கு நிற்கமுடியாதவனாக குழந்தையை மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு வீடு திரும்பினான். 

சின்னத்தம்பி திரும்பி வரும் பொழுது காணிக் குத்தகைக்காரனைப் பார்க்க வேண்டு மென்று, குத்தகைக்காரன் வீட்டிற்குச் சென்றான். கோயில் காணியைக் குத்தகைக்கு விட்டு கோயிலைப் பராமரிக்கும் பொறுப்பை பிள்ளையார்கோவில் மனேச்சரான சுந்தரம்பிள்ளை ஏற்றுக் கொண்டார். பொறுப்பை அவர் கடந்த இரு இந்தப்பத்தைந்தோ முப்பது வருடங்களாகக் கவனித்து வருகிறார். பஞ்சுபோல நரைத்த தலை. ஆஜானுபாகுவான தோற்றம். கண்ணில் கண்ணாடி. கையில் ஓர் தடி. கோயில் ‘மனேச்சர்’ என்ற பெருமையைக் காட்டும் கம்பீரமான நடை. சின்னத் தம்பி சுந்தரம்பிள்ளையைக் காணப் போனபொழுது அவர் சாய்மனைக் கட்டிலிலிருந்து அன்றையத் தினசரிப் பத்திரிகை யொன்றைப் படித்துக் கொண்டிருந்தார். 

சின்னத்தம்பி கிட்டப்போய் துவாயை எடுத்து அரையில் கட்டிக் கொண்டு, குழைவாக ‘ஐயா’ என்றான். 

சத்தம் கேட்டு, தினசரியை மேசைமேல் வைத்துவிட்டு, ‘ஆர் சின்னத்தம்பியோ….’

‘ஓமய்யா’ 

‘குத்தகைக் காசு கொண்டு தந்திருக்கிறாய் போலை’ 

‘இல்லை ஐயா இந்தமுறை…’

‘என்ன இண்டைக்கும் கொண்டு வரேல்லையே, இப்ப எத்தினை மாதம். இனி எனக்குத் தவணை சொல்லவேண்டாம்’. 

‘இல்லை ஐயா, எனக்கு இப்ப கொஞ்சநாளா உழைப்புப் பிழைப்பு இல்லை ஐயா. கூப்பன் எடுக்கக் கூடத் தட்டுப்பாடாய்க் கிடக்கு. அவளும் புள்ளைப் பெத்துக்கொண்டு கிடக்கிறாள்’ 

‘அதுக்கு நான் என்ன செய்யிறது. நீ உந்த வளவுக்குள்ளை பதினைஞ்சு இருபது வருசம் இருந்திட்டாய் எண்டு பார்க்கிறன். உந்த வளவைக் கூடின குத்தகைக்குக் கனபேர் கேக்கினம். இனிமேல் பொறுக்க ஏலாது. இண்டைக்குச் சனி. சனியோடை சனி எட்டு. அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்கிடையிலை குத்தகைக் காசைக் கொண்டுவந்து கட்டிப் போடு வேறை கதை வேண்டாம். முடியாதெண்டால் நீ காணியை விட்டு எழும்பு’ 

‘இல்லை ஐயா ஒரு இரண்டு மாதம் பொறுத்துக் கொள்ளுங்கோ. புள்ளையாருக்கும் என்ரை கஷ்டங்கள் தெரியும்’ 

‘என்னப்பா நளினமே வீடுகிறாய். வேறைகதை வேண்டாம். அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்கு முதல் எனக்குக் காசு வேணும்’

சின்னத்தம்பி மேலும் அங்கு நின்று குழைந்து கைகளைப் பிசைந்தான். 

‘வேறை என்ன போட்டு ஞாயிற்றுக்கிழமை வா…’

‘ஐயா அந்த கோடிப்புறத்தாலை நிக்கிற பனையள் இரண்டாலையும் பயமாக் கிடக்கு. இந்தக் காத்துக்கு ஆடுற ஆட்டத்தைப் பார்த்தால் வீட்டுக்கு மேலை விழுந்திடும் போலைக் கிடக்கு. குழந்தை குஞ்சுகள் ஓடி ஆடித் திரியிற இடமய்யா. அந்தப் பனை இரண்டையும் தறிப்பிச்சு விட்டீர்கள் எண்டால்….’ 

‘என்ன பனையைத் தறிக்கிறதோ? ஓகோ நீ குத்தகைக் காசும் தரமாட்டாய் இருக்கிற பிரயோசனத்தையும் தறிச்சுக் கொட்டச் சொல்லுறாய். நீ நல்ல ஆளப்பா. அது கள்ளுக்குக் குடுக்கிற பனை. அது தறிக்கேலாது’ 

‘அந்த ஓலையளை ஆவுதல் வெட்டி விட்டால்…’

‘ஓலையள் என்னெண்டு இப்ப வெட்டுறது. இப்ப ஒருதரும் ஓலை வெட்ட வரமாட்டாங்கள். நீ போய்க் காசைக் கொண்டு வா… பிறகு பாப்பம் ஓலை வெட்டுறதை’ என்று கூறி விட்டு மீண்டும் பத்திரிகை படிக்க ஆரம்பித்துவிட்டார் சுந்தரம்பிள்ளை. 

சின்னத்தம்பி மிகவும் மனவேதனையோடு வீட்டிற்கு வந்தான். 

பொன்னம்மாவுக்குச் சற்றுப் பெலவீனமாக இருந்ததால் மூன்றாம் நாள் துண்டு வெட்டாது ஐந்தாம் நாளே துண்டு வெட்டப்பட்டது. கார் பிடிக்கக் காசு போதாத படியால் றிக்ஷோவில் பொன்னம்மாவையும் பிள்ளையையும் ஏற்றிவிட்டு அவன் ஆஸ்பத்திரியிலிருந்து மூன்று மைல்வரை நடந்து வந்தான். 

இரண்டு நாள் வேலி அடைக்கப் போன கூலியைக் கொண்டு கூப்பன் அரிசியையும் மாவையும் வாங்கி பொன்னம்மாவுக்கு இரண்டு மூன்று நாள் சோறு ஆக்கிக் கொடுத்தான். அதன் பின்பு அரிசி தீர்ந்து போகவே கோதம்பை மாவில் பிட்டு அவித்துக் கொடுத்தான். அதுகும் தீர்ந்து போகவே இரண்டு நாட்களாக எல்லோரும் பட்டினி கிடந்தார்கள். 

‘பச்சைப் பிள்ளைத்தாச்சி’ பட்டினியாகக் கிடக்கின்றாள் என்றதைச் சின்னத்தம்பியால் பொறுக்க முடியவில்லை. அவன் தனது துவாயைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு எங்கோ புறப்பட்டுவிட்டான். 

அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்கு முதல் குத்தகைக் காசு கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் மனத்தை நெருடிக் கொண்டிருந்தாலும் பொன்னம்மாவும் பிள்ளைகளும் பட்டினியாகக் கிடப்பதுதான் அவனுக்குப் பொறுக்க முடியவில்லை. 

அன்று சாயந்திரம் திரும்பி வரும்பொழுது கையில்கறி உமலும் மடியில் காசு பத்து ரூபாவும் இருந்தது. 

இப்பொழுது பொன்னம்மா சிறிது எழுந்து நடக்கத் தொடங்கினாள். ஆனால் சின்னத்தம்பி தான் அனேகமான குசினி வேலைகளை வேலைக்குப் போகமுன்போ அல்லது வேலையால் வந்தோ கவனிப்பான். 

பொன்னம்மாவுக்குத் துணையாக அவளது மூத்த மகன் துரைசிங்கம் இருக்கின்றான். அவன் இன்னும் பள்ளிக்கூடத்திற்கு மீண்டும் போகத் தொடங்கவில்லை. 

6 

ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் பொன்னம்மாவுக்குச் சாடையான காய்ச்சலோடு உச்சிக் குத்தும் இருந்தது. ‘சுவாதம்’ வந்து விட்டதோவென்று சின்னத்தம்பி பயந்து கொண்டிருந்தான். அவன் கிட்டத்தட்ட மூன்றரை நான்கு மைல்வரை நடந்து போய் ஆயுள் வேதப் பரிகாரியாரிடம் மருந்து வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தான். 

பொன்னம்மா வீட்டிற்குள் படுத்துக் கொண்டிருந்தாள். 

திங்கட்கிழமை சாயந்திரம் ஆறு மணிபோல் குத்தகைக் காசு வாங்குவதற்காக சுந்தரம் பிள்ளை சின்னத்தம்பியின் வீட்டிற்கு வந்தார். 

சுந்தரம்பிள்ளையைக் கண்டதும் நாய் ‘அவக், அவக்’ என்று குரைத்தது. 

வீட்டிற்குள் படுத்திருந்த பொன்னம்மா மூத்த மகனைக் கூப்பிட்டு ஆர் வந்திருக்கின்றதென வினவினாள். 

அவர் ‘கோயில் மனேச்சர் ஐயா’ குத்தகைக் காசுக்கு வந்திருப்பதாகச் சொன்னான். 

காய்ச்சலும் உச்சிக்குத்தும் சற்றுக் குறைவாக இருந்ததால் பொன்னம்மா வெளியில் வந்து கப்போடு சாய்ந்து கொண்டிருந்தாள். 

‘எங்கை சின்னத்தம்பி – சுந்தரம்பிள்ளை கேட்டார். 

‘அவர் எங்கனையோ போட்டார்’ 

‘குத்தகைக் காசுக்கு என்னவாம்?’ 

‘குத்தகைக் காசு இப்ப இல்லை ஐயா, பொறுத்த தோடை இரண்டு மாதம் பொறுங்கோ. இப்ப கொஞ்சம் கஷ்டமாகக் கிடக்கு’ 

‘கஷ்டம் எல்லாருக்கும்தான் இருக்கு. இனி எனக்குத் தவணை வேண்டாம். இந்த மாதத் தோடை நீங்கள் வேறை எங்கையும் இடத்தைப் பாருங்கோ. எனக்குக் காசு வேணும்’ 

‘இல்லை ஐயா, இவ்வளவு காலமும் நாங்கள் நாணயமாகத் தரேல்லையே. இப்ப கொஞ்சம் கஷ்டம் வந்திட்டுது.’ 

‘எனக்கு வேறை தவணை வேண்டாம். நீங்கள் இடத்தை விட்டால் போதும்’ 

‘ஐயா, அந்த உயரிப்பனையள் இரண்டாலையும் இராப்பகலா எங்களுக்குப் பயமாக இருக்கய்யா. பனையைத் தறிக்க ஏலாதெண்டால் ஓலையாவுதல் வெட்டிச்சு விடுங்கோய்யா…’ என்ரை குழந்தை குஞ்சுகள் ஓடி ஆடி விளையாடுறதுகள். 

‘பனை என்னெண்டு தறிக்கிறது. அது கள்ளுக்குக் குடுக்கிற பனையள். நீங்கள் குத்தகைக் காசும் தரமாட்டியள். உள்ள பிரயோசனத்தையும் அழிக்கச் சொல்லி நிக்கிறியள். செய்ய அது இப்ப ஒண்டும் செய்ய ஏலாது. வேணும் எண்டால் வேறை இடத்தைப் பாருங்கோ’ 

அப்பொழுதுதான் சின்னத்தம்பி எங்கோ வேலைக்குப் விட்டு களைத்துப்போய் வந்தான். கடைசியாகப் சுந்தரம்பிள்ளை பேசியவை அத்தனையும் அவன் காதில் தெளிவாக விழுந்தன. படலையைத் திறந்ததும் சுந்தரம் பிள்ளை முற்றத்தில் நிற்பதையும் பொன்னம்மா கப்போடு சாய்ந்திருப்பதையும் கண்டான். 

சின்னத்தம்பியைக் கண்ட சுந்தரம்பிள்ளை, ‘குத்தகைக் காசுக்கு என்ன முடிவு’ என்றார்.

‘காசு இப்ப கையிலை இல்லை. உந்தப் பச்சைப் பிள்ளைத்தாச்சியும் குழந்தைகளும் இண்டு முழுக்கப் பட்டினி கிடக்குதுகள். காசிருந்தால் வைச்சுக்கொண்டு சும்மா இருப்பனே’ அவன் வழக்கமாக உபயோகிக்கும் மரியாதைப் பதமான ‘ஐயா’ வை வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டான். 

‘நான் உதுகள் கேக்க வரேல்லை, காசுதான் கேட்க வந்தனான்’ 

‘காசு இல்லை….’

‘குத்தகைக்காசு குடுக்கேலாது அவருக்கொரு குடும்பம் புள்ளைப்பெறு… ச்சீ… வெட்கம் இல்லை’ 

இந்த ஏச்சைக் கேட்டதும் சின்னத்தம்பியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவனுக்குக் கோபம் சீறிக்கொண்டு வந்தது. 

‘இனி நான் எடாப்புடாப் பாசைதான் பேசுவன். மரியாதையாகச் சொல்லுறன் காசு இப்ப இல்லை. இரண்டு மாதம் கழிச்சுத்தான் தருவன்…’

‘உன்னைப் போல போக்கிலி ஆர் இருக்கினம். குத்தகைக் காசு குடுக்க ஏலாது, அவருக்கு ஒரு புள்ளையும் பெறவேணும். ச்சீ தூப். நானெண்டால் இப்பிடிச் சீவிக்கிறதிலும் பார்க்க தூங்கிச் செத்துப் போடுவன் ச்சீ… மானம் கேட்ட சீவியம்’ 

சின்னத்தம்பிக்குக் கோபத்தால் கண்கள் சிவந்து கைகால்கள் பதறின. தோளில் போட்டிருந்த துவாயை சுழட்டி எறிந்துவிட்டு ஆவேசமாக ஓடிப் போய் கோடாலியை எடுத்துக் கொண்டு வந்தான். பொன்னம்மாவும் பிள்ளைகளும் ‘ஐயோ’ என்று சத்தமிட்டுக் கத்தினார்கள். இந்தச் சத்தத்திற்கு அயலவர்கள் வந்து கூடி, அதில் ஒருவன் சின்னத்தம்பியைப் பிடித்தான். அவன் திமிறிக் கொண்டு கோடரியைக் காட்டி, 

‘டேய் நீ ஆரடா என்ரை மானம் வெட்கம் கேக்கிறதுக்கு. என்ரை புள்ளைகுட்டியளை உன்னட்டை ஒரு நேரச் சோத்துக்கு அனுப்பினனானோடா. மாசம் மாசம் அள்ளித்தந்தநானடா… இனி உனக்கு காசு இல்லையடா. காசு தரமாட்டன் எண்டால் தரமாட்டன். வெட்டித் துலைப் பனடா உன்னை. எங்களை மிருகங்கள் எண்டு நினைச்சியோடா. கோயில் வள விலை உனக்கு அவ்வளவு ஆதிக்கமோ. டேய் இந்தக் காணி இனி எனக்கடா… இனிமேல் ஒரு வெள்ளைச் சல்லி என்னட்டை வாங்குவியாடா… போடா வெளியிலை’ 

‘ஓமடா…போக்கிலிகள் வேறை என்னண்டடா சொல்லுவாய்’ 

‘என்னடா போக்கிலியோ. என்னை விடு. ஆர் சிதம்பரியண்ணையோ… என்னை விடு. நானும் பொறுத்துப் பொறுத்துத்தான் பார்த்தன். ஆரடா போக்கிலி இந்தப் பனையை ஒருக்காத் தறிச்சு விடு அல்லது ஓலையாவது வெட்டி விடு எண்டு எத்தனை தரம் மன்றாடிக் கேட்டன். அதுக்கு அவர் சொன்ன பதில்கள். டேய் என்னைக் கொலைகாரன் ஆக்காதை. போடா வெளியிலை. சிதம்பரி அண்ணை என்னை விடு’ சின்னத்தம்பி திமிறினான். 

‘நீ போடா வெளியிலை’

‘இந்தக் காணி எனக்குச் சொந்தம். நீ போய் வழக்குப் போட்டா’. 

‘ஓ… நீயும் இதுக்கை இருக்கத்தான் போறாய். உனக்கும் ஒரு எண்ணமோடா’ 

‘டேய் இது என்ரை காணியடா, என்ரை காணி. சின்னத் தம்பியனுக்குச் சட்டம் தெரியாதெண்டு நினைச்சியோடா. நானும் பேப்பர்படிக்கிறனானடா. என்னை உசுப்பேலாதடா’ சின்னத்தம்பி தனது நெஞ்சில் தட்டி உரக்கக் கத்தினான். 

இப்படி இருவரும் ஏச்சுப் பட்டுக் கொண்டிருக்கும்போது சுந்தரம்பிள்ளையை யாரோ கூட்டிக்கொண்டு போனார்கள். அதே நேரத்தில் பொன்னம்மா வந்து சின்னத்தம்பியை இழுத்துக்கொண்டு போனாள். 

சின்னத்தம்பி தனது நெஞ்சில் தட்டி ‘இது என்ரை காணி யடா, என்னை உசுப்பேலாதடா’ என்று சொல்லி கோடரியையும் ஓங்கிப் பிடித்துக் கொண்டு நின்ற காட்சி சுந்தரம்பிள்ளையின் மனத்தை விட்டுப் போக மறுத்தது. 

இரண்டு நாட்களின் பின் பனைதறிக்கும் சத்தம் சின்னத்தம்பியின் வீட்டுப்பக்கத்திலிருந்து மிகவும் தெளிவாகச் சுந்தரம்பிள்ளைக்குக் கேட்டது. 

– மல்லிகை, ஜனவரி 1977.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *