சின்னஞ் சிறுசுகள்





(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)

அமலதாசனை நான் முதலிற் கண்டது பாகிஸ்தானிற்தான். பாகிஸ்தானில் எங்களது கம்பனி புதிதாக ஒரு புறஜெக்டை ஆரம்பித்திருந்தது. குவைத்தில் சுமார் நான்கு வருடங்கள் பணிபுரிந்த என்னை அங்கு மாற்றியிருந்தார்கள்.
பாகிஸ்தானில் ஆரம்பத்தில் ஒரு ஹோட்டலிற்தான் தங்கியிருந்தோம். அங்குதான் அமலதாசனைச் சந்தித்தேன்.
அமலன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். இயந்திரப் பொறியியலாளன். எங்கள் கம்பனியின் நைஜீரியா கிளையில் பணி புரிந்தவன். அங்கிருந்து இந்த வேலைத்தலத்திற்கு மாற்றப்பட்டிருந்த சிலரில் அவனும் ஒருவன். இங்கு வந்து சேர்ந்த ஏனையவர்களில் அவன் மட்டும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். அதனால்தானோ என்னவோ அறிமுகமானதுமே அவனுடன் சட்டென ஒரு நெருக்கம் ஏற்பட்டது.
ஒரு சில சிங்கள என்ஜினியர்கள், மற்றும் ஜோர்தான், ஜேர்மனி, கிரீஸ் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களுமாக பத்துப் பதினைந்து பேர் வரை நிரந்தரமான இருப்பிடம் ஒழுங்கு செய்யும் வரையில் ஓரிரு மாதங்கள் ஹோட்டலில் தங்கியிருக்க வேண்டும். வேற்று நாட்டவர்களாயினும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல எங்கள் நாளாந்த வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. ஒரே வாகனத்தில் வேலைக்குப் போய் வருவது, ஒரே நேரத்தில் சாப்பாட்டு மேசைக்குப் பிரசன்னமாவது, சுவைத்துச் சாப்பிடுவது, சிரித்துப் பேசுவது… என எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லாது அந்த நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அமலதாசனை அறிமுகமானதும் நான் முதலில் கேட்ட கேள்வி, “உனக்குத் திருமணமாகிவிட்டதா?” என்பதுதான்.
அவன் அட்டகாசமாகச் சிரித்தான். அவனது சிரிப்பு அப்படியானதுதான். அவனைப் பழகிய குறுகிய நேரத்திற்குள்ளேயே அதனைக் கவனித்திருந்தேன். அதனால் அந்தச் சிரிப்பு என்னுள் ஏதும் மிரட்சியை ஏற்படுத்தவில்லை.
“என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது?” எனக் கேட்டுவிட்டு மீண்டும் அதே சிரிப்புச் சிரித்தான்.
அவனது உச்சியில் கொஞ்சம் ஐஸ் வைக்கலாம் என்று தோன்றியது எனக்கு, “தோற்றத்தைப் பார்த்தால் இளம் ஆள் போலத்தான் இருக்கு” என்றேன்.
அவனுக்குக் குளிர்ந்து விட்டது. அப்போது அந்தச் சிரிப்பு வெளிப்படவில்லை. நாணப்படுவது போற் தோன்றியது.
“அப்பிடித்தான் எல்லாரும் சொல்லுகினம். ஆனால் எனக்குக் கல்யாணமாகி வயசுக்கு வந்த மகளும் இருக்கிறாள்.”
“நல்ல விஷயம்தானே? அதுக்கு ஏன் கவலை?”
“கவலை அதுக்கில்லை… மனிசி பிள்ளைகளைப் பிரிஞ்சு எவ்வளவு காலம் இப்படி வெளிநாடுகளிலை வேலை செய்யிறது? அதுதான் கவலை.”
“மனைவியை இங்கு கூட்டிவர விருப்பமா?” என நான் மறுகேள்வி கேட்டேன். அவனது கறுத்த முகம் வெளித்தது.
“விருப்பம்தான்… ஆனால் எப்பிடி?… இந்தக் கொம்பனியிலை இருக்கிறவரை அது சரிவராது…”
“சரிவரும்.. கவலையை விடு. முதலிலை நிர்மாண வேலைகள் முடியட்டும். புறடக்சன் தொடங்கட்டும்…’
அந்தக் கணத்திலிருந்து அவன் எனது உற்ற நண்பனாகினான். எனினும் மனைவியை இங்கு அழைத்துக் கொள்ளலாம் என்பதில் அவநம்பிக்கையாயிருந்தான். ஏனெனில், கம்பனியின் நிபந்தனைகளில் அதுவும் ஒன்று. வேலை செய்யும் நாட்டுக்கு குடும்பத்துடன் வந்திருக்க முடியாது. அமலதாசன் அந்த விடயத்தைக் குறிப்பிட்டுச் சொன்னான். “இவங்கள் ஒருபோதும் உடன்பட மாட்டாங்கள்.
இப்படியான ஆட்களை எனக்குக் கொஞ்சம் பிடிக்காது.
எந்த விஷயத்தையும் ‘சரிவராது’ என எண்ணி சோர்வடைபவர்களால் ஏதும் சாதிக்க முடியாது. நான் அவன்மேல் கோபப்படவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. என் மனைவியையும் இங்கு கூட்டிவரும் எண்ணம் எனக்கு. அமலதாசன் மனைவியை அழைத்து வந்தால் என் மனைவிக்கும் ஒரு துணையாக இருக்குமே என்ற நல்லெண்ணம்தான் காரணம்.
“அமலன்… எல்லாம் சரிவரும்.. கவலைப்படாதை. அதுக்குரிய ஒழுங்குகளை நான் செய்வன்..!”
அந்தக் கூற்றை அவன் முழுமையாக நம்பவில்லையாயினும் என்னுடன் ஒட்டிக் கொண்டான். எப்படியாவது காரியம் ஆகட்டும் என்ற எண்ணமாயிருக்கலாம். நிர்மாண வேலைகளிலும் உற்சாகமாக ஈடுபட்டான். அமலன் ஒரு திறமையான என்ஜினியர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நிர்மாண வேலைகள் முடிவடைந்து உற்பத்தி வேலைகள் சீராக இயங்கத் தொடங்கின. உரிய நேரத்தில் உரிய முறையில் நிர்வாகத்தினருடன் பேசி குடும்பத்தினரை அழைத்துக் கொள்வதற்கு அனுமதியும் பெற்றுக் கொண்டேன்.
இரு குடும்பத்தினரும் ஒரே வீட்டில் இருப்பதே நல்லது எனத் தீர்மானித்தோம். புதிய இடம். நாங்கள் வேலைக்குப் போன பின்னர் மனைவிமார் ஒராளுக்கொராள் துணையாக இருக்கக்கூடியதாயிருக்கும். சகல வசதிகளுடனும் கூடிய ஒரு வீட்டை கம்பனி எடுத்து வழங்கியது.
“ஒரே வீட்டில் இரண்டு சமையல் எதற்கு? அதையும் ஒன்றாகவே வைத்துக் கொள்ளலாம்…” என்றான்
அமலதாசன். “ஆகட்டும்…” என்றேன். ஆகியது.
அமலதாசனுக்கு இரு பெண்கள். மூத்தவள் அமலாவுக்கு பதின்மூன்று வயது. இளைய மகள் ஜீவாவுக்கு ஆறு வயது. அவர்களுக்கும் கராச்சியிலுள்ள ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் இடம் எடுத்தோம்.
எனக்கு வழங்கப்பட்டிருந்த காரில் பிள்ளைகளைப் பாடசாலையில் விட்டுவிட்டு நானும் அமலனும் வேலைக்குப் போவோம். இப்படியாக ஒரே வீட்டில் இரு குடும்பங்களின் அன்னியோன்ய வாழ்க்கை…! குதூகலத்தில் அவர்கள் துள்ளிக் குதித்தனர். (ஃபிளாட்டின் நாலாவது மாடி உச்சியில் வீடு அமைந்திருந்தது.)
பிள்ளைகள் என் மனைவியுடன் ஒட்டிக் கொண்டனர். அப்போது பிள்ளைச் செல்வங்கள் இல்லாதிருந்த எங்களுக்கு (மணம் முடித்த புதிது!) அமலாவும் ஜீவாவும் பிள்ளைகள் போலாயினர். எப்போதும் ‘அன்ரீ…அன்ரீ… அங்கிள்…” எனும் கீச்சிடும் குரல்கள் வீட்டில் ஒலித்துக் கலகலப்பாயிருந்தது. மாலை வேளைகளிலும் லீவு நாட்களிலும் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கடற்கரை, பூங்கா எனப் புதிய புதிய இடங்களை உல்லாசமாகச் சுற்றி வந்தோம்.
இந்தக் கட்டத்திற்தான் எனக்குக் கம்பனியில் உதவி முகாமையாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. பொது முகாமையாளராக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் இவ்வேளையில் சில விடயங்களைக் கூறினார்.
“உங்களை முகாமையாளர் பதவிக்கு உயர்த்தும் நோக்கம் கம்பனிக்கு உள்ளது. நிர்வாக நிலைக்கு வருவதால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பிஸினஸ் ரகசியங்களைக் காப்பாற்ற வேண்டியது மிக முக்கியம். வேலைத் தலத்தில் உங்கள் நண்பர்களை விட்டு விலகியிருக்க வேண்டும். இங்கு ஃபிரண்ட்சிப் எல்லாம் வேண்டாம். நிர்வாக முறையிலான தொடர்புகள் மட்டும் இருக்கட்டும். சாப்பாட்டு வேளையிற்கூட உங்களுக்குக் கீழ் பணிபுரியும் நண்பர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து அமர வேண்டாம். காலையில் வேலைக்கு அமலதாசனை ஏற்றி வருவதற்கு இனி கம்பனியின் மினிபஸ் வரும். நீங்கள் உங்கள் காரில் தனியாக வரலாம்.”
அடுத்த நாள் தொடக்கம் மினிபஸ் வந்தது. எனக்கு வருத்தமாயிருந்தது. இந்த விடயங்களை அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ?
அப்படித்தான் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. பதவி வந்ததும் எனது தலைக்குக் கனதி வந்துவிட்டது என நினைத்தார்கள். அல்லது எனது பதவி உயர்வை அவர்களால் கிரகிக்க முடியவில்லை. அமலதாசன் சற்று மனத்தாங்கலுடனேயே எனக்கு முகம் கொடுத்தான். வேலைத் தலத்திலும் வீட்டிலும் என்னைத் தவிர்க்கத் தொடங்கினான்.
வேலைத்தலத்தில் நிர்வாக வேலை வேறு, வீட்டில் உறவு முறைகள் வேறு என அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சித்து முயற்சித்துத் தோற்றுக் கொண்டிருந்தேன்.
வீட்டில் “அன்ரீ…அன்ரீ… அங்கிள்…” எனக் கீச்சிடும் இனிய குரல்கள் அடக்கப்பட்டன. எங்களோடு சேர்ந்து பிள்ளைகள் எங்காவது வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அம்மாவின் அறைக்குள் பிள்ளைகள் அடைக்கப்பட்டார்கள். அல்லது வெளியே போய் வேறு பாகிஸ்தானிய நண்பர்கள் வீட்டில் விளையாட விடப்பட்டார்கள். என் மனைவி அழுது தீர்த்தாள்.
வீடு இருண்டுபோனது போலிருந்தது. ஒரே வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரினதும் முகங்கள் இருண்டுபோனால் வெளிச்சம் எந்தப் பக்கம் இருந்து வரும்?
“அந்தப் பிள்ளைகளைக் கூட என்னுடன் சேர விடுகிறார்கள் இல்லையே..” என மனைவி கவலைப்பட்டாள்.
“என்ன செய்வது?…. வளர்ந்தவர்கள் சின்னஞ்சிறுசுகள் போல சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்…!” என்று மட்டும் கூறி மனைவியைத் தேற்ற முயன்றேன்.
ஒன்றாக நடந்து கொண்டிருந்த சமையலும் சொல்லாமல் கொள்ளாமல் முறித்துக் கொள்ளப்பட்டது.
“அதுவும் நல்லதுக்குத்தான்” என மனைவியைச் சமாதானப்படுத்தினேன். எதுவரை போகுமோ அதுவரை போகலாம் எனக் கூறினேன். ஒரே வீட்டில் ஒரே சமையல் அறை. அங்கு இரண்டு வேறு சமையல்கள். “தடாங்…படாங்…!” என பாத்திரங்களின் சத்தங்கள்.
ஒரு நாள் அமலதாசன் மனைவியுடன் வெளியே போயிருந்தான். பிள்ளைகளைக் கீழே ஒரு வீட்டில் விட்டுப் போயிருந்தார்கள். அவர்கள் போன சற்று நேரத்தில் வீட்டுக் கதவு சட சட’வென (அவசரமாக) தட்டப்பட்டது. கோலிங் பெல்லும் ஒலித்தது. கதவைத் திறந்தோம்.
அமலாவும் ஜீவாவும் –
“அன்ரீ…!” என அழைத்தபடி ஓடிவந்து என் மனைவியைக் கட்டிக்கொண்டார்கள். அழத் தொடங்கினார்கள். விம்மலெடுத்து அழுதார்கள். என் மனைவியும் அழத் தொடங்கி விட்டாள். எனக்குக் கூட கண்கள் கலங்கிவிட்டன.
பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மனைவி அறைக்குள் வந்தாள்.
“அன்ரி… எங்களிலை கோபமா?”
“இல்லையே…”
“அன்ரி… உங்களிலை எங்களுக்கு சரியான விருப்பம்… ஆனால் அப்பாவுக்கும் விசர்… அம்மாவுக்கும் விசர்…”
“அப்பா அம்மாவை அப்பிடிச் சொல்லக்கூடாது…அமலா..”
சொல்வதற்கு நிறைய வைத்திருந்து சந்தர்ப்பம் கிடைத்தபோது எல்லாவற்றையும் கொட்டுவது போல பிள்ளைகள் பேசிக்கொண்டிருந்தார்கள். மனைவி அவர்களைச் சமாதானப்படுத்தினாள். தேநீர் தயாரித்துக் கொடுத்தாள்.
“போயிட்டு வாறம் அன்ரி. அம்மா வந்தால் கத்தும்…!” எனக் கதவைத் திறந்துகொண்டு ஓடினார்கள்.
மனைவி என்னிடம் கூறினாள். “பார்த்தீங்களா… சின்னஞ் சிறுசுகள் போல சிறுபிள்ளைத்தனமாக நடக்கினம் என்று சொன்னீங்கள்… ஆனால் பெரிய ஆட்கள்தான் அப்படி நடப்பினம். சின்னஞ் சிறுசுகள் கள்ளம் கபடம் தெரியாததுகள்.”
ஒரு வருடத்தின் பின்னர் எனக்கு இத்தாலிக்கு மாற்றம் கிடைத்தது. அமலதாசனும் கம்பனியை விட்டு விலகி விட்டதாக பின்னர் அறிந்தேன்.
நீண்ட இடைவெளி.
தொடர்புகள் விட்டுப்போயிருந்தது. அமலாவினதும் ஜீவாவினதும் நினைவு அவ்வப்போது வரும். ப்போது என்ன செய்கிறார்களோ? எங்கே இருக்கிறார்களோ?’ என்று தோன்றும்.
இரு வருடங்களுக்கு முன்னர் நான் எகிப்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
“கனடாவிலிருந்து பேசிறன்… ஆரென்று தெரியுதா?” எனக் கேட்டது அந்தக் குரல்.
“கேட்ட குரல் மாதிரி இருக்கு…” நான் யோசித்தேன்.
“ஓம்… ஓம்… உங்களுக்கு எப்படி எங்களை நினைவிருக்கும்?” என்ற கேள்வியை அடுத்து அந்த அட்டகாசமான சிரிப்பு.
“அட! அமலதாசனே? எப்பிடி நம்பர் கிடைச்சுது?”
‘உண்மையான அன்பிருந்தால்.. எப்படியும் தேடி எடுக்கலாம் தானே?” – இது அமலதாசன்.
‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்…!’ என்ற நிலைக்குட்பட்டு நான் பேசாமடந்தனாகினேன். (பேசா மடந்தை என்பதற்கு ஆண் பால்!)
பின்னர் சுதாரித்துக் கொண்டு, “அதுசரி, பிள்ளைகள் என்ன செய்யினம்?” எனக் கேட்டேன்.
“மூத்தவள் ஒரு கனடியன் என்ஜினியரை கலியாணம் முடிச்சிருக்கிறாள். ஒரு கொம்பனியில் வேலையும் செய்யிறாள். இளையவள் யூனிவசிட்டியிலை படிக்கிறாள். பார்ட்ரைம் வேலைக்கும் போய் வாறவள். எல்லாரும் நல்லாயிருக்கிறம்.”
அந்தத் தகவல் எனக்குப் போதுமானதாயிருந்தது. மனதில் வெற்றிடமாய்ப் போயிருந்த அவர்களது இடம் திரும்ப நிறைந்த மாதிரியும் இருந்தது.
– மல்லிகை, 2002.
– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க... |