சஞ்சலம்
சரண்யா அடுத்த சனிக்கிழமை தன் கணவர், இரண்டு குழந்தைகளுடன் பெங்களூர் வருகிறாளாம். அவள் கணவரின் தம்பிக்கு மல்லேஸ்வரத்தில் ஞாயிறு அன்று கல்யாணமாம். இரண்டு நாட்கள் இருப்பாளாம். போன் பண்ணிச் சொன்னாள்.
அதை என் மனைவி ரோஹினியிடம் சொன்னபோது உற்சாகமில்லாமல் “அப்படியா” என்றாள்.
சரண்யா என் அத்தை மகள். கெட்டிக்காரி. ஸி.ஏ படித்துவிட்டு ஒரு அயல் நாட்டு வங்கியில் பணி புரிகிறாள். பார்க்க அழகாக இருப்பாள். அவளைத்தான் நான் கல்யாணம் புரிந்திருக்க வேண்டும். என் அப்பாவும், அத்தையும் என்னிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். ஆனால் நான்தான் திமிர் எடுத்துப்போய் சொந்தத்தில் பெண் வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லி நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டேன்.
அதன் பிறகு எனக்கு ரோஹினியுடன் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் எங்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் எங்களுக்குப் பிறகு, நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட சரண்யாவுக்கு ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள்.
என் திருமணத்திற்கு முன்பு ரோஹினி எனக்குச் சொந்தம் கிடையாது. திருமணம் பற்றி நான் போட்டு வைத்திருந்த கணக்குகள் மிகவும் தப்பாகிவிட்டன. கிளி கொஞ்சும் அழகில், ஏராளமான சொத்துக்கள், பண வசதிகளுடன் இருந்த சரண்யாவை இழந்தது என் அடி முட்டாள்தனம்.
சொந்தம் இல்லாமல் வெளியே திருமணம் செய்துகொண்டால் நிறைய உறவுகள் புதிதாகக் கிடைக்கும். அவர்கள் அனைவரும் எனக்கு புதியதாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பார்கள். மச்சினன்கள் கார் வைத்திருப்பது, மாமனார் மாப்பிளைக்கு பெரிய செலவாளியாக இருப்பது, மாமியார் வகை வகையாகச் சமைத்துப் போடுவது; மனைவிக்கு நிறைய நண்பிகள் இருப்பது, அழகான மச்சினிகள் அமர்க்களமாக கோலம் போடுவது, மாமியார் வீட்டில் கிளியோ, நாயோ வளர்ப்பது, அந்த வீட்டில் ஏராளமாக அயல்நாட்டு பொருட்கள் இருப்பது…என்று எல்லா விஷயங்களுமே புதுமை பொதிந்தவையாக இருக்கும் என்று அதீத கற்பனையில் திளைத்திருந்தேன்.
தவிர சில பெரிய இடங்களில் மாப்பிள்ளைக்கு என்று தனியாக ஒரு அறையே ஒதுக்கி விடுவார்கள். மாப்பிள்ளை அறையில் இருக்கும்போது கூடத்தில் மச்சினிகள் கலர் கலரான தாவணி அல்லது சுடிதாரில் அப்படியும் இப்படியும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே போகும் அழகு இருக்கிறதே அது ஒரு கிளுகிளுப்பான இன்பக் கிளர்ச்சி…!
பல வீடுகளில் மாமியார் மாப்பிள்ளையின் எதிரேகூட வரமாட்டார். .
அவ்வளவு பயம் கலந்த மரியாதை. மாமனாரோ மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று வாஞ்சையாக அடிக்கடி உருகுவார்.
இப்படியாக மனோரம்மியமான புத்தம் புதிய மாமியார் வீட்டை எனக்குள் நான் வரைந்து வைத்திருந்தேன். மேலும், சின்ன வயதிலிருந்தே பார்த்துப் பேசி பழகி இருக்கின்ற அத்தைமகள் சரண்யாவைவிட, முன்பின் பார்த்தேயிராத ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொள்வதில் இருக்கிற த்ரில்லும், எக்சைட்மென்ட்டும் அலாதியானது என்று நம்பினேன்.
ஆனால் நான் நினைத்தமாதிரி எதுவுமே எனக்கு நடக்கவில்லை. திருமணமான மூன்று மதங்களுக்குள் நிகழ்ந்த தலை தீபாவளிக்கு அப்புறம் மாமனார் வீட்டில் எவனும், எவளும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. அதற்கப்புறம் நான் அங்கு ஒரு நமுத்துப்போன வெடிதான்.
ரோஹினி வேறு எதற்கெடுத்தாலும் என்னிடம் சண்டை போடுவாள். அடிக்கடி மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வாள். இன்னமும் எங்களுக்குள் சரியான புரிதல் ஏற்படவில்லை.
என் வாழ்க்கை பயணத்தில் எனக்கு மட்டும் கடவுள் ஒரு ரிவைண்ட் பட்டன் கொடுத்தால், அதன் மூலம் ஒரு ஆறு வருடங்கள் பின் நோக்கி சென்றுவிடுவேன். ரோஹிணியை சந்தித்தே இருக்க மாட்டேன். நிம்மதியாக என் அத்தைமகள் சரண்யாவை திருமணம் செய்துகொண்டு…. ம்ஹும் என் தலையெழுத்து.
சனிக்கிழமை காலை சதாப்தியில் சென்னையிலிருந்து கணவர், குழந்தைகளுடன் சரண்யா வந்தாள். நல்லவேளை ரோஹினி அவர்களிடம் கலகலவென்று பேசினாள். சரண்யா வளப்பமாக பூசினாற்போல் முன்னைவிட அழகாக இருந்தாள். இரண்டு குழந்தைகளும் கொழு கொழுவென இருந்தன. அவள் கணவன் சிரிக்க சிரிக்க பேசினான்.
மறுநாள் மல்லேஸ்வரம் திருமணத்திற்கு எங்களையும் அழைத்தனர். ஆனால் ரோஹினி என்னிடம், “நீங்க மட்டும் போய்ட்டு வாங்க” என்றாள். சரியென்று நாங்கள் அனவைரும் என் காரில் மல்லேஸ்வரம் கிளம்பினோம்.
திருமணம் முடிந்து பதினோரு மணிக்கு பெண்ணையும் மாப்பிள்ளையையும் மறுவீடு அழைத்துச் சென்றார்கள். ஒருமணி நேரத்தில் திரும்பி விடுவதாகச் சொன்னார்கள். அப்போது சரண்யாவின் கணவன் அவர்களுடன் சென்றான். குழந்தைகளும் அவனுடன் ஒட்டிக்கொண்டன.
அவர்கள் திரும்பி வந்தபிறகுதான் முகூர்த்தச் சாப்பாடு என்பதால் நானும் சரண்யாவும் கல்யாண மண்டபத்தில் அமர்ந்து நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். .
பேச்சின் நடுவில் “உன்னையே நான் கல்யாணம் பண்ணியிருக்கலாம் சரண்… சொந்தம்னு சொல்லி கொழுப்பெடுத்துப் போய் உன்னை வேண்டாம்னு சொன்னதுக்கு இப்ப நான் அனுபவிக்கிறேன், நான் செய்தது மிகப்பெரிய தப்பு…” என்றேன்.
என் குரலில் இருந்த உண்மைத் தன்மையை உணர்ந்தவளாக,
“வாட் இஸ் திஸ் கண்ணன்… எனக்கு கல்யாணம் ஆகி இப்ப இரண்டு குழந்தைகள். என் வாழ்க்கைல எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என் ஹஸ்பெண்ட். ரோஹினியும் ரொம்ப நல்லவள்தான். எங்களிடம் நேற்றும் இன்றும் ரொம்ப கேரிங்காக வாஞ்சையுடன் நடந்து கொண்டாள். உன்னைவிட ரோஹினி ரொம்பக் கெட்டிக்காரி. ஆனால் உன் மனசுதான் தறிகெட்டு சஞ்சலப் படுகிறது.
“………………………..”
“உன்கிட்டதான் ஏதோ ப்ராப்ளம் இருக்கு கண்ணன். சீக்கிரம் அவளுக்கு ஒரு குழந்தைய கொடு. தேவைப்பட்டால் ஒரு நல்ல டாக்டரிடம் போய் கன்ஸல்ட் பண்ணு. பழச நினச்சு உன் மனசை அலையவிடாத. கொழுப்பெடுத்துப் போய்ன்னு சொன்னியே, அது உனக்கு இப்பதான்.” என்றாள்.