சங்கர்லால் வந்துவிட்டார்!
கதையாசிரியர்: தமிழ்வாணன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: June 20, 2026
பார்வையிட்டோர்: 194
(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20
11

பகல் தனது கடமையைச் செய்து முடித்துவிட்டுப் பறந்து விட்டது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது!
என்னூருக்கு அப்பால் இருந்த, விளக்கு ஏதும் வெளியே இல்லாத அந்தச் சிறிய தீவிலே, அந்த மாடி வீட்டில் அமீதும் மணியரசும் அதே கூடத்தில் அடைப்பட்டுக் கிடந்தார்கள்.
காலையில் வந்துவிட்டுப் போன சின்னத்துரை மீண்டும் வரவேயில்லை. முனியப்பன் மட்டும் வேளை தவறாமல் உணவு கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான் இருவருக்கும். வேளா வேளைக்கு உணவாவது கிடைக்கிறதே என்று ஓரளவு மகிழ்ச்சி கொண்டான் அமீது. சங்கர்லால் எப்படியும் எந்த நேரத்திலும் வரலாம் என்ற நம்பிக்கை அவன் மனத்தில் நன்கு வேரூன்றிப் போயிருந்தது. மணியரசு அச்சத்தால் சரியாகக்கூட உணவு உட்கொள்ளாமல், அடிக்கடி அமீதை வினாக்கள் பல கேட்டுக் குடைந்து கொண்டிருந்தான்.
மணி எட்டு.
இரவு உணவும் சாப்பிட்டாகி விட்டது. முனியப்பன் கதவுகளை இழுத்துப் பூட்டிக் கொண்டு, பொழுதோடு தாழ்வாரத்தில் படுத்துக் கொண்டான். அவன் குறட்டை விடும் ஓசை அப்போதே வரத் தொடங்கிவிட்டது!
அமீதும் மணியரசும் சன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு என்ன பேசுவது என்றே இப்போது புரியவில்லை. கூடத்தில் நின்றிருந்த பெரிய கடிகாரம் ஓடும் ஓசை தொடர்ந்து கேட்டது.
மணியரசு அமீதைப் பார்த்தான்.
“என்னடா மணியரசு? ஏன் அப்படிப் பார்க்கிறாய்? இவனோடு வந்து இங்கே மாட்டிக் கொண்டோமே என்று விழிக்கிறாயா? அதைப்பற்றி இப்போது எண்ணிப் பயன் என்ன? இனி நடக்கப் போவதைப் பற்றி ஏதாவது எண்ணிப் பார்” என்றான் அமீது.
மணியரசு கேட்டான் : “நேற்றிரவு வந்த மனிதன் மீண்டும் வருவானா!”
அவன் எண்ணமெல்லாம் அந்த மனிதன் மீதே பதிந்திருந்தது. அந்த மனிதனைப் பிடித்துக் கொடுத்துவிட்டால், சின்னத்துரை தன்னையும் அமீதையும் விட்டுவிடுவார் என்று எண்ணினான் அவன்.
அமீது சொன்னான்: “பொறுத்திருந்து பார்ப்போம். இன்று அந்த மனிதன் வந்தால், அவனை எப்படியும் பார்த்து, அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்போம்”
மணியரசு வியப்புடன் அமீதைப் பார்த்தான். “அமீது, உயிருடன் திரும்பிப் போசு உனக்கு விருப்பம் இல்லையா?” என்று கேட்டான்.
“ஏன் இல்லை? உயிர்மீது விருப்பமில்லாவிட்டால் இவ்வளவு பொறுமையுடன் நான் இருப்பேனா? எதையும் ஒரு முடிவுடன் செய்ய வேண்டும்” என்றான் அமீது.
“உன்னுடைய துப்பறியும் வேலை எனக்கு ஒன்றும் புரியவில்லை.”
“சங்கர்லாலுக்குக் கொஞ்சம் உதவி செய்யலாம் என்று முயற்சிக்கிறேன். அவ்வளவுதான்!” என்றான் அமீது. பிறகு –
எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல், “மணியரசு” என்றான்.
“என்ன! என்ன!” என்றான் மணியரசு ஆவலுடன்.
“எனக்கு ஒரு வழி தோன்றியிருக்கிறது. நல்லதொரு வழி அது! அதன் படி செய்தால், நாம் விரைவில் இந்த இடத்திலிருந்து தம்பிப் போக முடியும்” என்றான் அமீது.
“அப்படியா? என்ன வழி அது? சன்னலை விட்டுக் குதித்து, நீரில் பாய்ந்து அக்கரைக்குப் போய்விட லேண்டும் என்று சொல்லமாட்டோயே!” என்றான் மணியரசு.
“உனக்கு நீச்சல் தெரியாது என்பது எனக்குத் தெரியாதா! அப்படியே நீச்சல் தெரிந்தாலும், இந்த நீரில் போவது பெரும் பிழை! இந்தப் பக்கங்களில் சுறா மீன்கள் மிகுதி. நான் சொல்லப் போகும் வழியைக் கவனமாகக் கேள்” என்று சொல்லிவிட்டு எழுந்தான். மெல்ல நடந்து போய், தாழ்வாரத்தின் பக்கமாக இருந்த சன்னல் பக்கம் எட்டிப் பார்த்தான். முனியப்பன் அமைதியோடு தூங்கிக் கொண்டிருந்தான்.
அமீது திரும்பி வந்து, “மணியரசு அதோ பார் அந்தப் பெரிய கடிகாரத்தின் பக்கத்தில் ஒரு சிறிய புட்டி இருக்கிறது பார்த்தாயா? அந்தப் புட்டியில் ஒன்றும் இல்லை. அது காலிப்புட்டி. அந்தப் புட்டிக்குள் ஒரு கடிதம் எழுதிப் போட்டு, புட்டியின் வாய்ப்புறத்தைக் கார்க்கினால் அழுத்தி மூடி விடுவோம். பிறகு புட்டியை இங்கிருந்த படியே, சன்னல் வழியாக எளிதில் தண்ணீரில் எறிந்துவிடலாம். அந்தப் புட்டி அப்படியே மிதந்து காற்றில் அடித்துச் செல்லும். கடலிலோ, மறுகரையிலோ எவராவது கண்டு எடுத்தால், எப்படியும் கடிதத்தைப் படித்து விடுவார்கள்! உடனே சங்கர்லாலிடம் போய்ச் செய்தியைச் சொல்லுவார்கள்! சங்கர்லால் உடனே நாம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து விடுவார்!” என்றான்.
மணியரசு வியப்புடன், “எப்படி உனக்கு இந்த வழி தோன்றியது?” என்றான்.
“கப்பல் விபத்தில் சிக்கி, சின்னஞ்சிறு தீவுகளில் அகப்பட்டுக் கொண்டு விழிக்கும் மனிதர்கள், தம்மைக் காப்பாற்றும் படி சீட்டு எழுதி, காலிப் புட்டிகளில் போட்டுப் புட்டிகளின் வாயை இறுக அடைத்துக் கடலில் போட்டுவிடுவார்கள். அது மிதந்து செல்லும்போது, வேறு கப்பல்களில் வரும் எவராவது தற்செயலாக அதைப் பார்த்தால், குறிப்பிட்டிருக்கும் தீவின் பக்கம் போய், தவிக்கும் மனிதர்களைக் காப்பாற்றுவார்களாம். இதைப் பற்றிப் பல புத்தகங்களில் படித்திருக்கிறேன்” என்றான் அமீது.
“அருமையான வழி” என்று சொல்லிக் கொண்டே மணியரசு ஓடிப்போய், கடிகாரத்திற்குப் பக்கத்திலிருந்த காலிப் புட்டியைக் கொண்டு வந்தேன்.
அமீது, அங்கேயிருந்த மேசையின் அறைகளைத் திறந்து துழாவிப் பார்த்தான், ஒரு துண்டு பென்சிலும், காகிதமும் கிடைத்தன. சுசங்கிய அந்தக் காகிதத்தில் அவன் எழுதினான்;
‘மதிப்பிற்குரிய சங்கர்வால் அவர்களுக்கு, நானும் மணியரசும் ஒரு சிறிய தீவில், மாடி வீட்டில் அடைப்பட்டுக் கிடக்கிறோம். உடனே வாருங்கள் – அமீது’
இவ்வளவு தான் அவனால் எழுத முடித்தது. இதற்கு மேல் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இருக்கும் அந்தத் தீவு. என்னூர் எல்லை என்பது அமீதுக்கோ மணியரசுக்கோ தெரியாது!
மணியரசு, புட்டியின் மூடியைத் திறந்தான். அமீது புட்டிக்குள் கடிதத்தை மடித்துப் போட்டான். மணியரசு மூடியைப் போட்டு அழுத்தினான். அமீது புட்டியை வாங்கி, சன்னல் வழியாக இருட்டில் வீசி எறிந்தான். அந்தப் புட்டி, தண்ணீரில் போய் விழும் ஓசை, அவர்கள் இருவருக்கும் நன்றாகக் கேட்டது!
மணியரசுக்கு இப்போதுதான் கொஞ்சம் துணிவு வரத்தொடங்கியது. எப்படியும் அந்தப் புட்டி. சங்கர்லாலிடம் போய்ச் சேர்ந்துவிடும். சங்கர்லால் வகாபுடன் இந்த இடத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்துவிடுவார் என்று எண்ணினான்.
பின், இருவரும் கீழே படுத்து அப்படியே தூங்கிப் போனார்கள்.
12
மறுநாள், பிற்பகல் மூன்று மணிக்கு வகாபின் கார் முல்லைவனம் எஸ்டேட்டை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருந்தது. அவர் காரைக் கொண்டு வந்து நிறுத்தியதும், வழக்கம் போல் பொன்னன் ஓடிவந்து சல்யூட் அடித்து விட்டுக் கதவைத் திறந்தான்.
வகாப் இறங்கி பங்களாவுக்குள் நுழைந்தார்.
கூடத்தில் சங்கர்லாலும் இந்திராவும், மாணிக்கமும் கயல்விழியும் உட்கார்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தார்கள்.
“வணக்கம் சங்கர்லால்” என்றார் வகாப்,
“வாருங்கள் வகாப்” என்றார் சங்கர்லால்.
வகாப், சங்கர்லாலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். மாது மற்றொரு தேநீர்க் கோப்பையுடன் தோன்றினார். வகாப், மாதுவின் கையிலிருந்த தேநீர்க் கோப்பையைப் பெற்றுக் கொண்டார். தேநீரை உறிஞ்சிக் குடித்துவிட்டுச் சங்கர்லாலைப் பார்த்தார்.
“எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார் சங்கர்லால். “அலுவலகத்திலிருந்து வருகிறேன். சவரிமுத்தைப் பற்றி ஒரு தேவையுள்ள செய்தி” என்றார் வகாப். அவர் முகம் சீற்றத்துடன் காணப்பட்டது.
“சொல்லுங்கள் வகாப்” என்றார் சங்கரிலால் அமைதியுடன். ஆனால் –
மாணிக்கம் கொஞ்சம் பரபரப்பு அடைந்தவனைப் போல் காணப்பட்டான். வகாப் சொல்லுவதற்குள், அவனே சிறைச்சாலைக்குப் போய் என்ன நடந்தது என்று விசாரித்துக் கொண்டு திரும்பி வந்துவிடுவான் போலிருந்தது!
வகாப், குரலைக் கொஞ்சம் தாழ்த்திக் கொண்டு ” சவரிமுத்து சிறைச்சாலையிலிருந்து தப்பிப் போக முயற்சிப்பதாகத் தெரிகிறது. அவன் மனம் வைத்தால் எப்படியும் தப்பிவிடுவான் சங்கர்லால்! அவனைத் தப்ப விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன சொல்லுகிறீர்கள்?” என்றார். சங்கர்லால் –
வாய்விட்டுச் சிரித்தார். அவருடைய சிரிப்பொலி அந்தக் கூடம் முழுவதுமே எதிரொலித்தது. இந்திராவும் கயல்விழியும் சங்கர்லால் ஏன் இப்படிச் சிரிக்கிறார் என்று புரியாமல் விழித்தார்கள்.
சங்கர்லால் சிரித்தால் அதற்குப் பொருள் உண்டு என்பது மாணிக்கத்திற்கு மட்டுமே தெரியும்.
வகாப், “ஏன் நீங்கள் அப்படிச் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
“சவரிமுத்து சிறைச்சாலையிலிருந்து தப்பிப் போனால் தானே நமக்குக் கவலை? இன்னும் அவன் சிறையிலிருந்து தப்பவில்லையே! இப்போது கவலை கொள்ள வேண்டியவர்கள் சிறைச்சாலைப் பொறுப்பாளர்கள்! நீங்கள் சவரிமுத்துவுக்கு ஆணைவாங்கிக் கொடுத்துவிட்டீர்கள். இனி உங்கள் பொறுப்பு விட்டது. அவன் சிறையிலிருந்து தப்பிபோனால், சிறையிலிருந்து சவரிமுத்து தப்பிவிட்டான் என்ற செய்தி வரட்டும். அப்புறம் நாம் பார்த்துக் கொள்ளலாம்” என்றார் சங்கர்லால்.
அவர் வேடிக்கையாகப் பேசுகிறாரா, அல்லது உண்மையாகத்தான் இப்படிச் சொல்லுகிறாரா என்று வகாபிற்குப் புரியவில்லை!
“என்ன சங்கர்லால்? எதற்கு இப்படிச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார் கொப்.
*காரணம் இருக்கிறது வகாப்! உண்மையாகப் பார்த்தால் நாம் சவரிமுத்து தப்பிப் போக எல்லா உதவிகளையும் மறைமுகமாகச் செய்ய வேண்டும். அவன் எங்கே போய்விடப் போகிறான்? அவன் தப்பியவுடன், அவனைத் தொடர்ந்து கவனிக்க வேண்டுமே தவிர, அவனிடம் நெருங்கவே கூடாது. சென்னையை விட்டுத் தாண்டியதும் மீண்டும் வெகு எளிதில் அவனைப் பிடித்து, மீண்டும் சிறையில் தள்ளிவிடலாம். இதற்காகவா துன்பம் கொள்கிறீர்கள்? என்றார் சங்கர்லால்.
சங்கர்லால் சொன்னதைக் கேட்ட இந்திரா, “வேடிக்கையாக இருக்கிறது அத்தான்! தலையைவிட்டு வாலைப் பிடிப்பது போல் இருக்கிறது உங்கள் முறை!” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டுக் கயல்விழிக்குச் சிரிப்புத் தாள முடியவில்லை.
சங்கர்லால் சொன்னார் “ஆமாம் இந்திரா, வாலைப் பிடிப்பதில் தான் வேடிக்கை இருக்கிறது! நாய் ஓடிக் கொண்டிருக்கிறது. பின்னாலேயே போய் வாலைப் பிடித்து இழுத்தால், அது தலையைத் திருப்பிக் குலைக்கும். அல்லது சுடிக்க வரும்! கடிக்க வருமுன் வாலை விட்டுவிட வேண்டும். நாயின் வாயில் ஏதாவது பொருள் இருந்தால், இந்த நேரத்தில் அது நழுவித் தன்னாலேயே கீழே விழுந்து விடும்! இல்லையா?”
கயல்விழி அதைக் கேட்டுவிட்டு இன்னும் கொஞ்சம் சிரித்தாள்.
சங்கர்லால் வகாபைப் பார்த்து, சவரிமுத்துக்குத் தனது மகள் மறைந்து போனதைப் பற்றி இன்னும் கொஞ்சம் கூடத் தெரியாது. அல்லவா?” என்று கேட்டார்.
“இன்னும் தெரியாது சங்கர்லால்!” என்றார் வகாப், பிறகு, “அவன் மனைவி, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறாள்” என்றார்.
சங்கர்லால் சிறிது நேரம் சிந்தனையுள் ஆழ்ந்தார். பிறகு, கோப்பையிலிருந்த தேநீரைக் குடித்துவிட்டுக் காலிக் கோப்பையை வைத்தார்.
“வகாப், உங்கள் இலாகாவுக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, சவரிமுத்தின் மகள் மறைந்து போனதைப் பற்றி, எப்படியாவது சவரிமுத்துவுக்குத் தெரிலிக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
வகாப் சிந்தித்தார். அவர் ஏன் தயங்குகிறார் என்று சங்கர்லாலுக்குத் தெரியும், மற்றவர்களுக்குத் தெரியாது.
சங்கர்லால் சொன்னார். “வகாப், தனது மகள் மறைந்து போனாள் என்பதைக் கேட்டவுடனேயே சவரிமுத்து எப்படியாவது சிறைக் கூடத்திலிருந்து தப்பிவிடுவானே என்றுதானே அச்சம் கொள்கிறீர்கள்? அவன் சிறைக் கூடத்திலிருந்து தப்ப நாமே உதவி செய்ய வேண்டுமென்று நான் அப்போதே சொன்னேனே! இனிமேல் ஏன் தயக்கம்? சவரிமுத்து இந்த நேரத்தில் சிறையில் இருக்கக்கூடாது! தப்பிச் செல்ல விடுங்கள் அவனை!!” வகாப் தொலைபேசி இருக்குமிடத்தை நோக்கி நடந்தார்.
“அண்ணா, சவரிமுத்தைப் பல துன்பங்களை மேற்கொண்டு வகாப் சிறையில் தள்ளினார். அவன் தப்பிப் போகட்டும் என்று எளிதில் நீங்கள் சொல்லிவிட்டீர்களே!” என்றான் மாணிக்கம்.
“அவனை தப்பிப் போகவிட்டுவிட்டு மீண்டும் பிடித்தால், தப்பிப் போன குற்றத்திற்காக வேறு ஆணை கிடைக்குமல்லவா! இப்போது ஏழு ஆண்டுகள் என்பது பத்து ஆண்டுகளாகிவிடும்! அத்தான். இதுதானே உங்களுடைய எண்ணம்!” என்றாள் இந்திரா.
“சவரிமுத்துக்குப் பத்து ஆண்டுகளுக்குச் சிறை வாழ்வு கிடைப்பதால் எனக்கோ வகாபிற்கோ ஏது மிச்சம்!” என்று கேட்டார் சங்கர்லால்.
“எனக்குப் புரிகிறது! சவரிமுத்து களவாடிய பொருள்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் என்பது தெரியவில்லை. அவன் தப்பியதும், அவைகளை ஒளிந்து வைத்திருக்கும் இடத்திற்குப் போவான். அப்போது தொடர்ந்து போய், அவைகளைக் கைப்பற்றிக் கொள்ளலாம். இல்லையா?” என்றாள் கயல்விழி.
“சவரிமுத்து அவ்வளவு பெரிய முட்டாள் அல்ல! அவன் அவ்வளவு எளிதில் களவாடிய பொருள்களுடன் மீண்டும் சிறை திரும்ப மாட்டான் கயல்விழி! இந்த வழக்கில் எனக்கு இது வரையில் பிடி எதுவும் கிடைக்கவில்லை. பிடி கிடைக்காத வரையில் தொடர்ந்து எதையும் செய்வதற்கில்லை. வாய்ப்பு நம்மைச் சில வேளைகளில் தேடி வருகிறது. சில வேளைகளில் வாய்ப்பை நாம் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். வாய்ப்புக் கிடைக்காததால், அதை இப்போது நான் உண்டாக்கப் போகிறேன்” என்று சொன்னார் சங்கர்லால்,
“கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கிறது. எங்களுக்கு! எங்களுக்கு எதுவுமே புரியவில்லை” என்றாள் இந்திரா பொதுவாக!
வகாப், தொலைபேசியில் பேசிமுடித்து விட்டுத் திரும்பினார். அவர் மீண்டும் பழைய இடத்திலேயே வந்து உட்கார்ந்து கொண்டார். அப்போது –
பொன்னன் ஓடி வந்தான்.
அவன் ஓடி வந்ததைப் பார்த்ததும், “என்ன? என்ன?” என்றார் வகாப். அவருக்கு ஓர் அச்சம்! சவரிமுத்து சிறையிலிருந்து தப்பிவிட்ட சேதி தனக்குத் தெரியாமலே பொன்னன் மூலமாக வந்து விட்டதோ என்ற எண்ணம் அவருக்கு! அவருடைய மனமெல்லாம் அந்த நேரத்தில் சவரிமுத்து மீது பதிந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.
சங்கர்லால் தலையை மெல்லத் தூக்கிப் பொன்னனைப் பார்த்தார்.
பொன்னன் சொன்னான் : “எவனோ ஒருவன். அழுக்குத் துணி அணிந்திருக்கிறான். துணிக்குள் எதையோ மறைத்து வைத்துக் கொண்டு, தொலைவில் நின்றபடியே பேசுகிறான். கேட்டால் சங்கர்லாலை நேரில் பார்க்க வேண்டும் என்கிறான். கையில் என்ன என்பதைச் சொல்லமாட்டேன் என்கிறான்!”
வகாப் துடிப்புடன் எழுந்தார்.
சங்கர்லால் அவரை, “உட்காருங்கள் வகாப்” என்றார். பிறகு, பொன்னனைப் பார்த்து. “பொன்னா, என்னைப் பார்க்க வருபவர்கள் எவராக இருந்தாலும், ஏழையானாலும் எளியவனாலும் தடுத்து நிறுத்த வேண்டாம்! அவன் கரத்திலே துப்பாக்கியோ, சுத்தியோ வைத்திருந்தால் அவன் நேரிடையாக வந்து அனுமதி கேட்டிருக்க மாட்டான். அச்சமின்றி உள்ளே அனுப்பு!” என்றார். பொன்னன் சல்யூட் ஒன்று அடித்து விட்டுப் போய் விட்டான்.
சற்று நேரம் கழித்து அந்த மனிதன் தோன்றினான். அழுக்கடைந்த வேட்டி கட்டியிருந்தான். உடலில் சட்டை பனியன் இல்லை. அவன் உடலிலே சில இடங்களில் கடல் மணல் ஒட்டிக் கொண்டிருந்தது. அவன் துணியில் எதையோ மறைத்து வைத்துக் கொண்டிருந்தான். அவன், சங்கர்லாலையும், வகாபையும், மற்றவர்களையும் பார்த்துவிட்டு, பேசாமல் நின்றாள்.
“யாரப்பா நீ?” என்றார் சங்கர்லால்,
“நான் ஒரு மீனவன். கடலிலே இதைக் கண்டெடுத்தேன். இந்தப் பாட்டிலுக்குள் இந்தக் கடிதம் இருந்தது. எனக்கு எழுதப் படிக்கத் தெரியும். அதனால் இந்தக் கடித்தைப் படித்ததும் இங்கு வந்தேன். இந்தாருங்கள் அந்தக் கடிதம்” என்று கையிலிருந்த கடிதத்தைச் சங்கர்லாலிடம் நீட்டினான்.
சங்கர்லால் அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்துவிட்டுச் சிரித்துக் கொண்டே வகாபிடம் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்த பிறகு வகாபின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றிய போதிலும், “சங்கர்லால், இது எவருடைய வேலையாக இருக்கும்? என் மகனையும் மணியரசையும் ஏன் ஏதோ ஒரு தீனில் அடைத்து வைக்க வேண்டும்? எந்தத் தீவு என்று குறிப்பிடவில்லையே!” என்றார்.
சங்கர்லால் சிரித்துக் கொண்டே. “உங்கள் மகன் அமீது எவ்வளவு கெட்டிக்காரன் என்பது இப்போது தெரிகிறதா! அவனைப் பற்றி நாம் மிகுதியாகக் கவலை கொள்ள வேண்டிய தேவை இல்லை!” என்றார்.
மீனவன் நின்று கொண்டிருந்தான்.
சங்கர்லால் இந்திராவைப் பார்த்து, “இந்திரா புட்டியைக் கொண்டு வந்தவனுக்கு நூறு ரூபாய் கொடு” என்றார்.
இந்திரா உள்ளே போய் இரும்புப் பெட்டியைத் திறந்து நூறு ரூபாய் கொண்டுவந்து கொடுத்தாள்.
மீனவன், ”நன்றி ஐயா” என்றான்.
“நன்றி கூற வேண்டியவர்கள் நாங்கள்” என்றார் சங்கர்லால்! அவன் சிரித்துக்கொண்டே போய்விட்டான்.
சங்கர்லால் எழுந்தார். “வாருங்கள் வகாப்” என்று சொல்லி வகாபையும் அழைத்துக்கொண்டு படிக்கும் அறைக்குச் சென்றார். அலமாரியைத் திறந்து, சென்னையின் சுற்றுப் புறத்துப் படத்தை எடுத்துப் போட்டார். அதில், சென்னையின் சுற்றுப் புறத்தில் இருந்த சின்னஞ்சிறு தீவுகளை மட்டும் பார்த்துக்கொண்டே வந்தார். சென்னையின் வடக்கே மாடி வீடு இருந்த தீவு ஒன்று இருந்தது. அதை வகாபிடம் காட்டியதும், “என்னூருக்குப் பக்கத்தில் அல்லவா இருக்கிறது இந்த இடம்?” என்றார் அவர்.
“ஆமாம் வகாப்! இப்போதே புறப்படுவோம்! நமக்குப் போலீஸ் படை ஒன்றும் வேண்டாம். மாணிக்கத்தை அழைத்துக்கொண்டு புறப்படுவோம். உங்களிடம் துப்பாக்கி இருக்கிறது. இல்லையா?” என்றார் சங்கர்லால்.
“என்னிடம் துப்பாக்கி இருக்கிறது. நீங்களும் ஒரு துப்பாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் வகாப்.
“தேவை இல்லை! புறப்படுங்கள்!” என்றார் சங்கர்லால். சற்றுநேரம் கழித்து –
சங்கரிலாலும், வகாபும், மாணிக்கமும் சங்கர்லாலின் பெரிய காரில் புறப்பட்டார்கள். காரை –
மாணிக்கம் ஓட்டிச் சென்றான். விரைவிற்குக் கேட்கவாவேண்டும்?
13
சங்கர்லால் காட்டிய வழியே மாணிக்கம் காரை விரைந்து செலுத்தினான். என்னூரைக் கடந்து, தீவை நெருங்கியதும், காரை ஓர் ஓரமாகச் செடிகளின் மறைவில் நிறுத்திலிட்டு, மூவரும் கீழே இறங்கினார்கள்.
தீவைச் சூழ்ந்திருந்த நீரைக் கடப்பதில் துன்பம் எதுவும் இல்லை. கரையின் ஓரத்திலேயே இருந்த படகு அவர்களைத் தாங்கிக்கொண்டு மறு கரையை அடைந்தது. மூவரும் தீவில் இறங்கினார்கள். முதலில் சங்கர்லால் நடந்தார். அந்தத் தீவில் –
பட்டப் பகலில்கூட அவ்வளவு அமைதி நிலவும் என்று எவரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அந்த அமைதியான சூழ்நிலை சங்கர்லாலுக்கு ஏனோ பிடிக்கவில்லை!
சங்கர்லாலின் பின்னால் வகாப் பின் தொடர்ந்து சென்றார். வகாபுடன் இணைந்தாற் போல் மாணிக்கம் சென்றான். வீட்டின் தாழ்வாரத்தில் –
எவரையும் காணோம். வீட்டின் கதவு பூட்டியிருந்தது. சங்கர்லால் சாவிக்கொத்தை எடுத்து ஒவ்வொரு சாவியாகப் போட்டார். ஒரே நிமிடத்தில் பூட்டு –
திறந்துகொண்டது. உள்ளே –
கூடத்தில் எவரும் இல்லை!
அது காலியாக இருந்தது. ஆனால், பெரிய கடிகாரத்தின் ஓரமாக விழுந்துகிடந்த பெல்ட்டை, சங்கர்லால் குனிந்து எடுத்தார். “இதைப் பாருங்கள்! உங்கள் மகன் அமீதின் பெல்ட் இல்லையா இது?” என்றார் சங்கர்லால்.
“ஆமாம் சங்கர்லால்!” என்றார் வகாப்.
சங்கர்லால், கூடம் முழுவதையும் கூர்ந்து கவனித்துவிட்டுத் திரும்பினார். பிறகு –
“மாடிக்குப் போவோம் வாருங்கள்” என்றார். மாடிக்குப் போவதற்குமுன், தோட்டத்தையும் தோட்டத்திலிருந்த குடிசையையும் பார்த்தார்கள்.
சங்கர்லால் மாடிக் கதவையும் திறந்தார். மாடியிலும் – எவரையும் காணோம்!’
சங்கர்லால் அந்தக் கூடம் முழுவதும் பார்த்தார். மேசை அறைகளைத் திறந்து பார்த்தார். சுவரில் மாட்டியிருந்த படங்களைப் பார்த்தார். சுவரில் மாட்டியிருந்த படங்கள் அத்தனையும் இயற்கைக் காட்சிகள்!
கைதேர்ந்த ஓவியர் எவரோ வரைந்த படங்கள் அவை. ஆனால்-
அவற்றில் ஒரே ஒரு படம் மட்டும் மற்றவற்றினின்றும் சிறிது மாறுபட்டிருந்தது. அதை வேறு ஒலியர் வரைந்திருக்க வேண்டும் என்று சங்கர்லால் புரிந்துகொண்டார். அந்தப் படத்தைச் சற்று உற்றுப் பார்த்தார்.
“என்ன சங்கர்லால்!” என்றார் வகாப், அமீதைக் காணாமல் தவிக்கும்போது, இயற்கைக் காட்சிப் படத்தையும் பார்க்கிறாரே சங்கர்லால் என்ற துன்பம் அவருக்கு!
சங்கர்லால் ஒன்றும் சொல்லாமல் அந்தப் படத்தைக் சுழற்றிக் கையில் எடுத்துக் கொண்டார்.
உதவி போலீஸ் கமிஷனர் வகாப் சங்கர்லாலின் பக்கத்தில் வந்து, அவர் கையிலிருந்த படத்தை வாங்கிப் பார்த்தார். அந்தப் படம் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தது. மலைமீதிருந்து நழுலி விழும் நீர் வீழ்ச்சியை எவரோ அப்படியே பார்த்து அழகாகச் சித்தரித்து இருந்தார்கள். அந்த படத்தை இன்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. ஆனாலும் –
சங்கர்லால் ஏன் அதை எடுத்துக் கொண்டார் என்று தான் வகாபிற்குப் புரியவில்லை! அமீதைக் காணோமே என்ற வருத்தம் ஒரு பக்கம். அமீதும் மணியரசும், எப்படி எங்கே போய்விட்டிருப்பார்கள் என்ற வியப்பு ஒரு பக்கம். இதற்கிடையில், சங்கர்லால் ஏன் அந்தப் படத்தை எடுத்துக்கொண்டார் என்று புரியாமல் திகைத்தார், “சங்கர்லால், எதற்காக இந்தப் படம். உங்கள் பங்களாவில் மாட்டப் போகிறீர்களா!” என்று கேட்டார். சங்கர்லால் சிரிப்புடன் மாணிக்கத்தைப் பார்த்து, “இதை வைத்துக்கொள்’ என்று சொல்லி வகாபிடமிருந்த படத்தை வாங்கி மாணிக்கத்தினிடம் கொடுத்தார். மாணிக்கமும் ஒன்றும் புரியாமல் அதை வாங்கி வைத்துக்கொண்டான்.
சங்கர்லால் வகாபைப் பார்த்து, “இந்தப் படத்தை நம்முடைய பங்களாவில் மாட்டப் போவதில்லை. இங்கே நாம் வந்து போனதற்குச் சான்றாக, இந்தப் படம் நம்மிடம் இருக்கட்டுமே” என்று சொல்லிவிட்டு. “வாருங்கள் போகலாம்” என்றார்.
வகாப் ஏமாற்றத்துடன் திரும்பி முன்னால் நடந்தார். அவர் பின்னால் மாணிக்கம் நடந்தான். சங்கர்லால் கதவை மூடிப் பழையபடியே பூட்டிவிட்டு நடந்தார்.
மூவரும் படகை நோக்கி நடந்தார்கள்.
சிறிது நேரத்தில் படகு மூவரையும் ஏற்றிக்கொண்டு அடுத்த கரையை நோக்கி சென்றது. மாணிக்கம் துடுப்பைப் போட்டு வேகமாகத் தள்ளினார்.
அடுத்த கரையை அடைந்ததும், சங்கர்லால் கீழே இறங்கி நின்று, அந்தத் தீவைப் பார்த்தபடி சிறிது நேரம் சிந்தித்தார். அவருடைய பார்வை எல்லாப் பக்கங்களிலும் சுழன்றது.
அவர்கள் நின்றிருந்த கரை ஓரமாக, சுமார் இரண்டு பர்லாங்குத் தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்தக் குடிசையில் எவராவது இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. குடிசையின் கதவு மட்டும் இலேசாகத் திறந்திருந்தது.
சங்கர்லால் மாணிக்கத்தைப் பார்த்தார். “மாணிக்கம், நாங்கள் காரிலேயே உட்கார்ந்திருக்கிறோம். நீ மெல்ல நடந்துபோய்க் குடிசையில் எவராவது இருக்கிறார்களா என்று பார்த்துவா, அமீதையும் மணியரசையும் இந்தத் தீவிலிருந்து எவர் எப்போது அழைத்துச் சென்றார்கள் என்று தெரிந்தால் நமக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
மாணிக்கம் தலையை ஆட்டியபடி, கையிலிருந்த படத்தைக் காரில் வைத்துவிட்டு மெல்ல நடந்தான்.
சங்கர்லாலும் வகாபும் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு மாணிக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மாணிக்கம் குடிசையை நெருங்கினான். குடிசையின் கதவைத் திறந்து உள்ளே பார்த்தான் பிறகு-
குடிசைக்குள் மறைந்து விட்டான், நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது!
சங்கர்லால் அமைதியுடன் உட்கார்ந்திருந்தார். அவருடைய கண்கள் மட்டும் குடிசையின் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தன.
வகாப் துடிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். மாணிக்கம் மறைந்த சில நிமிடங்கள் கழித்து, “எங்கே மாணிக்கம்? இன்னும் வெளியே வரவில்லையே?” என்றார்.
சங்கர்லால் ஒன்றும் சொல்லாமல் குடிசையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சுமார் பத்து நிமிடங்களுக்குப் பின் மாணிக்கம் வெளியே வந்தான். அவன் குடிசையைவிட்டு வெளியே வந்ததும் சுற்றிலும் பார்த்துவிட்டுக் காரை நோக்கி நடந்தான்.
சங்கர்லாலும் வகாபும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
குடிசையின் வாயிலில், கறுத்த மனிதன் ஒருவன் தோன்றினான். அவன் மாணிக்கத்தைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றான். பிறகு, மீண்டும் குடிசைக்குள் போய்விட்டான்.
மாணிக்கம் சங்கர்லால் இருக்குமிடத்திற்கு வந்ததும், “யார் அந்த கறுத்த மனிதன்!” என்று சங்கர்லால் கேட்டார்.
“அவன் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டான். பல பெயர்களில், பல தடவைகள் அவன் சிறைக்குச் சென்றிருப்பான் என்று எண்ணுகிறேன். அதனால் உண்மையான பெயர் அவனுக்கே சுவனம் வரவில்லை! அவனைப் பார்த்தால் பெரிய திருட்டுகளில் ஈடுபடுவான் என்று தெரியவில்லை!” என்றான் மாணிக்கம்.
“அவன் ஏன் இங்கு இருக்கிறான்? சென்னையைவிட சிறந்த இடம் அவனுக்கு வேறு எங்கும் இருக்க முடியாதே!” என்றார் வகாப்,
“இவன் கொஞ்சம் மூளை உள்ளவன், சென்னையில் இருந்தால் செலவு மிகுதி என்று எண்ணி, தனிமையான ஓர் இடத்தில் குடிசை போட்டுக்கொண்டு வாழ்கிறான், குடிசையிலிருந்து சிறிது தொலைவில் புகைவண்டிப் பாதை செல்லுகிறது. அந்த இடத்தில் ஒரு பெரிய திருப்பம். புகைவண்டி இந்த இடத்தில் கொஞ்சம் மெல்லத்தான் போக வேண்டும். மெல்லப் போகும்போது ஏறவும் இறங்கவும் இவனுக்கு வாய்ப்பு இருப்பதால், எப்போதும் இவன் புகைவண்டியில்தான் போவான் போலிருக்கிறது. என்னைக் கேட்டால், இவனுடைய திருட்டுகள்கூட அனேகமாகப் புகைவண்டியில்தான் நடக்கும் என்று எண்ணுகிறேன்!” என்றான் மாணிக்கம்.
சங்கர்லால் மாணிக்கம் சொன்னவற்றை அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
மாணிக்கம் தொடர்ந்து சொன்னான் : “இந்தத் தீவைப் பற்றியும், தீவிலிருக்கும் வீட்டைப் பற்றியும் கேட்டேன். அதைப் பற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என்றும், இப்போது அந்த வீடு எவருக்குச் சொந்தமானது என்று கூடத் தெரியாது என்றும் சொல்லிவிட்டான். அவனிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டைச் கொடுத்தேன். அவன் அதை வாங்கி மகிழ்ச்சியுடன் சட்டைக் கையிடுக்கில் செருகிக்கொண்டான். பிறகு, என்ன வேண்டும் என்றான். அமீது மணியரசு என்ற இரண்டு பையன்களைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டேன். ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்தக்கரை ஓரமாக ஒரு கார் வந்ததாகவும், அதிலிருந்து எவரோ இறங்கிப் படகில் போனதாகவும், சிறிது நேரம் கழித்துப் படகில் இரண்டு பையன்களுடனும் ஒரு கிழவனுடனும் திரும்பி வந்து காரில் ஏறிப் போய்விட்டதாகவும் சொன்னாள். காரில் வந்த மனிதரை அவனுக்குத் தெரியுமா என்று கேட்டேன். அது பெரிய இடத்துச் செய்தி என்று சொல்லிவிட்டான். எவ்வளவு மிரட்டினாலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதைச் சொல்லமாட்டான் போலிருக்கிறது! நான் இதுவரையில் பேசியதற்கும். நீங்கள் கொடுத்த பத்து ரூபாய்க்கும் சரியாகப் போய்விட்டது என்றான். அதற்குமேல் பேசினால், என்றாவது ஒருநாள் அவன் நாக்குத் துண்டிக்கப்பட்டு விடும் என்றும் அதைவிடப் பேசவில்லை என்ற ஒரே காரணத்திற்காகப் போலீசார் அவனை அழைத்துச் சென்று ஆறு மாதம் சிறையில் போட்டாலும் பாதகமில்லை என்றும் சொல்லிவிட்டான்! அமீதையும் மணியரசையும் கடத்திச் சென்றவன் பெரிய புள்ளி போலிருக்கிறது! இப்போது என்ன செய்ய வேண்டும்?”
மாணிக்கம் இப்படிக் கேட்டதும், “காரில் ஏறி உட்கார்” என்றார் சங்கர்லால்
வகாப் துடித்தார். “சங்கர்லால், குடிசையிலிருப்பவனை னே கைது செய்துகொண்டு போனால் என்ன? போலீஸ் இலாகாவில் அவனைப் பேச வைக்கப் பல வழிகள் உண்டு. உங்களுக்குத் தெரியாததா சங்கர்லால்? அமீதையும் மணியரசையும் கடத்திச் சென்றவன் எவன் என்று தெரிந்துவிட்டால், பிறகு அவர்களைக் கண்டுபிடிப்பது எளிது இல்லையா?” என்றார்.
சங்கர்லால் சொன்னார் : நீங்கள் எந்த முறையைக் கையாண்டாலும் அவனைப் பேசவைக்க முடியாது. அப்படியே அவன் பேசினாலும், அவன் சொல்லுவது உண்மைதான் என்று எப்படி உறுதிகொள்ள முடியும்? அதற்கு இப்போது தேவையும் இல்லை!
மாணிக்கம் காரைக் கிளப்பினான்.
முல்லைவன மலைத் தோட்டத்தை நோக்கிப் பறந்தது கார்.
மலைப் பாதையில் கார் ஓடியது, சங்கர்லாலின் காரைக் கண்டதும், பங்களா தாழ்வாரத்திலேயே இந்திராவும் கயல்விழியும், கத்திரிக்காயும், மைனாவும் நின்றிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் அமீதையும் மணியரசையும் காணவே அங்கு நிற்கிறார்கள் என்பதைச் சங்கர்லால் உணர்ந்து கொண்டார். ஆனால் –
மாதுவைக் கானோமே!
அவன் காரைக் கண்டதுமே தேநீர்க் கொண்டுவர உள்ளே போய்விட்டான்.
கார் நின்றதும் சங்கர்லால் இருந்த பக்கம் ஓடிவந்து பொன்னன் கதவைத் திறந்தான். சங்கர்லால் கீழே இறங்கியதும் இந்திராவைப் பார்த்து நாங்கள் ஒரு மணி நேரம் தாமதமாகப் போனோம். அதனால் அமீதையும் மணியரசையும் பார்க்க இயலாமல் போய்விட்டது!” என்றார்.
சங்கர்லால் சொன்ன இச்செய்தி எல்லாருக்குமே பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
மாணிக்கத்தினிடம் இருந்த படத்தைப் பார்த்ததும் கயல்விழி, “இந்தப்படம் எவ்வளவு அழகாக இருக்கிறது! இதை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள். எங்கள் அறையில் மாட்டி வைக்கிறோம்” என்றாள்.
சங்கர்லால் சிரித்துக்கொண்டே, “அந்தப் படத்திற்கு உரியவனிடம் அனுமதி கிடைக்கும் வரையில் அதை எப்படி நாம் உரிமையாக்கிக்கொள்வது? படத்திற்கு உரியவன் யார் என்று தெரிந்தால், படமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாலும் சொல்லிவிடுவாய்!” என்றார்.
கயல்விழி ஏமாற்றத்துடன் மாணிக்கத்தைப் பார்த்தாள். மாணிக்கம் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லுவதைப்போல் தலையைச் சாய்த்து உதட்டைப் பிதுக்கினான்!
எல்லாரும் உள்ளே சென்றார்கள். மாது, தேநீர்க் கோப்பைகளைக் கொண்டு வந்தான். வகாப் தேநீர் குடித்துவிட்டுப் போக உட்கார்ந்துவிட்டார்!
சங்கர்லால் வகாபைப் பார்த்து, அமீதும் இளவரசும் தன்னால் வந்து விடுவார்கள் என்று எண்ணுகிறேன். ஆகையால் கவலையை விட்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்” என்று உற்சாகப்படுத்தினார்.
வகாப் புறப்பட்டார்.
14
மறுநாள், காலை மணி பத்து.
சங்கர்லால் கூடத்தில் உட்கார்ந்து இந்திராவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது –
வகாபின் கார் வரும் ஓசை கேட்டது.
இந்திரா சன்னல் பக்கம் பார்த்துவிட்டு, “உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப் வருகிறார். பழைய வழக்கைப் பற்றிப் பேச வருகிறாரா, அல்லது புதிய வழக்கு ஏதாவது கொண்டுவருகிறாரா, தெரியவில்லை!” என்றாள்.
சங்கர்லால் மென்சிரிப்புடன் அமைதியாகவே காணப்பட்டார். அவர் ஒன்றும் சொல்லவில்லை.
சிறிது நேரத்திற்கெல்லாம். “வணக்கம் சங்கர்லால்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் வகாப்.
“வணக்கம். வாருங்கள்” என்றார் சங்கர்லால்,
வகாப், சங்கர்லாலின் எதிரில் உட்கார்ந்தார். இந்திரா சங்கர்லாலின் பக்கத்தில் உட்கார்ந்தாள். “வகாப், உங்கள் மகன் அமீது வந்துவிட்டானா?” என்று கேட்டாள் இந்திரா.
”அவன் வந்திருந்தால், அவனையும் அழைத்துக் கொண்டல்லவா வந்திருப்பேன்? பக்கத்து வீட்டு மணியரசின் அப்பா வேறு, நான் வீட்டிலிருக்கும் போதெல்லாம் வந்து என் உயிரை வாங்குகிறார்!” என்று சொல்லிலிட்டு வகாப் சங்கர்லாலைப் பார்த்தார்.
சங்கர்லால் வகாபையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
“சங்கர்லால் சவரிமுத்து சிறையிலிருந்து தப்பிவிட்டானாம்! இப்போது தான் தொலைபேசியில் செய்தி வந்தது! உடனே புறப்பட்டு ஓடிவந்தேன்!” என்றார் வகாப்.
சங்கர்லால் சிரித்துக்கொண்டே, “இதில் வியப்பு ஒன்றுமில்லையே! எதிர் பார்த்ததுதானே!” என்றார்.
“என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள்! இவ்வளவு விரைவில் அவன் தப்பி விடுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லையே, அவனைத் தப்ப விடுவது என்றால், அவனைத் தொடர்ந்து செல்ல ஒரு நிழலைப் போடவேண்டாமா?” என்றார்.
“சவரிமுத்தை எவராவது தொடர்ந்து சென்றால், செயல் கெட்டுப்போகும்! அதனால்தான் நான் பேசாமல் இருந்துவிட்டேன். இப்போது ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சென்னையின் எல்லைப் புறங்களில் மட்டும் போலீசாரைக் கொஞ்சம் கவனமுடன் இருக்கும்படி சொல்லுங்கள். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்!”
வகாப் வியப்புடன் உட்கார்ந்து விட்டார். சவரிமுத்து தப்பிவிட்டான் என்று கேள்விப்பட்டதும், சங்கர்லால் உடனே புறப்பட்டு வருவார் என்று எண்ணிய வகாப் வியப்படையாமல் என்ன செய்ய முடியும்!
மாது தேநீர் கொண்டுவந்து கொடுத்தான். சங்கர்லால் தேநீரை உறிஞ்சிக் குடித்துக்கொண்டே, “சவரிமுத்து எப்படித் தப்பிவிட்டான்?” என்று கேட்டார்.
“சிறைக்கூடத்தின் சன்னலையோ, கம்பிகளையோ உடைக்காமல், மிக எளிய முறையில் தப்பி ஓடியிருக்கிறான்! அவனுடைய மகள் பேரழகி மறைந்துவிட்டாள் என்று பின் கேள்விப்பட்ட சில மணி நேரங்களுக்குப் ஓடிவிட்டிருக்கிறான்!” என்றார் வகாப்,
“எப்படித் தப்பினான் என்று சொல்லவேயில்லையே!” என்று துடிப்புடன் கேட்டாள் இந்திரா.
“காலையில் எட்டு மணிக்குமேல் சிறைக் கூடத்திலிருந்து குப்பைகளை வாரிப்போகக் குப்பை வண்டி ஒன்று வந்து போகும். சவரிமுத்து எப்படியோ அந்தக் குப்பை வண்டிக்குள் ஏறிக் குப்பையிலேயே புதைந்து மறைந்துபோய் விட்டிருக்கிறான்! போலீஸ்காரர்கள் சிறைச்சாலை வாயிலில், குப்பை வண்டியைச் சோதனை போட்டுக்கூடப் பார்த்தார்களாம். அவன் எப்படி ஒளிந்து போயிருக்க முடியும் என்று அவர்களுக்கே தெரியவில்லையாம்!” என்றார் வகாப்.
“குப்பை வண்டி வந்தபோது சவரிமுத்து என்ன செய்து கொண்டிருந்தானாம்?” என்று கேட்டார் சங்கர்லால்.
“மற்றக் கைதிகளுடன் அவனும் சேர்ந்து குப்பையை வாரிப்போட்டிருக்கிறான். வண்டிபோன பத்து நிமிடங்களுக்குப் பிறகுதான் சவரிமுத்து மறைந்துபோன செய்தி தெரிந்தது!” என்று முடித்தார் வகாப்,
“வண்டியை ஓட்டி வந்தவன் வழக்கமாக வருபவன் தானே?” என்று கேட்டார் சங்கர்லால்.
“ஆமாம்” என்றார் வகாப்.
“நான் சொன்னதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சவரிமுத்து, சென்னையின் எல்லையைவிட்டுக் கடக்க முயன்றால் மட்டுமே கைது செய்யுங்கள். சென்னையில் அவனைப் போலீஸ் இலாகாவைச் சேர்ந்த எவராவது பார்க்க நேர்ந்தால், சவரிமுத்தின் போக்கைக் சுவனிக்கவேண்டுமே தவிர, எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனைக் கைது செய்யவேண்டாம்!” என்றார் சங்கர்லால்,
வகாப் தயங்கினார். பிறகு –
“ஆகட்டும் சங்கர்லால்” என்று சொல்லிவிட்டு, காலிக்கோப்பையை வைத்துவிட்டு எழுந்து கொண்டார்.
15
ஒரு பெரிய கார், சென்னை மவுண்ட் ரோடில் மெல்லச் சென்றுகொண்டிருந்தது.
காரின் உள்ளே யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரியாதபடி பட்டுத் திரைகள் தொங்கின. வெளியேயிருந்து பார்ப்பதற்குக் காரோட்டி மட்டுமே தெரிந்தான்.
பின் சீட்டில்-
திரைக்குப் பின்னால், மூன்று பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மூவரில் ஒருவர் சின்னத்துரை, அவருக்குப் பக்கத்தில் அமீதும் மணியரசும் உட்கார்ந்திருந்தார்கள்.
சின்னத்துரை கையில் சிறிய துப்பாக்கி ஒன்று வைத்திருந்தார். “இதோ பாருங்கள். நீங்கள் இருவரும் தப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் கொஞ்சம் கூச்சல் போட்டாலும் சுட்டுத் தள்ளிவிடுவேன்! நான் சொல்லுவதைக் கவனமாகக் கேளுங்கள். அதோ ஒரு பாங்கு தெரிகிறது. அந்தப் பாங்கில் நூற்றுக் கணக்கான மனிதர்கள் வந்து போகிறார்கள். அவர்களில் எவராவது உங்களுக்குத் தெரியுமா என்று பாருங்கள். உங்களிடமிருந்து பார்சலை வாங்கிச் சென்ற மனிதனைக் கண்டால் உடனே செல்லுங்கள். அப்புறம் உங்களை நான் விட்டுவிடுகிறேன்!” என்றார்.
‘சரி’ என்று தலையை ஆட்டினான் அமீது. மணியரசு ஒன்றும் சொல்லாமலேயே தலையை ஆட்டினான்.
சின்னத்துரை, காரை ஓரமாக நிறுத்தும்படி சொல்லிலிட்டு திரையை இலசோக விலக்கினார்.
பாங்குக்கு எவ்வளவோ பேர்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
மணி அப்போது –
12-45
கார்களும் சைக்கிள்களும் வந்து நிற்பதும் போவதுமாக நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது, இருந்தன. ஆனால் –
அமீதும் மணியரசும் எதிர்பார்த்த மனிதனை மட்டும் காணோம் –
மணி –
1-10
வாடகைக் காரிலிருந்து ஒரு மனிதர் இறங்கி வேகமாகப் பாங்குக்குள் நுழைந்தார். அவருடைய கையில் தோல்பை ஒன்று இருந்தது. அவரைப் பார்த்ததும் –
சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் “அதோ அந்த மனிதர்! அந்த மனிதரேதான்!” என்றான்
“ஆமாம், விடாதீர்கள்” என்றான் மணியரசு. “இங்கேயே இருங்கள்!” என்று சொல்லிவிட்டு. சின்னத்துரை துப்பாக்கியைக் கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு கீழே இறங்கி நடந்தார்.
இதற்குள் அமீது குறிப்பிட்ட மனிதர், பாங்கினுள் நுழைந்து மறைந்துவிட்டார்! அவரைக் காண, சின்னத்துரையும் உள்ளே சென்றுவிட்டார்.
மணி –
1-15
பக்கத்திலிருந்து பள்ளிக்கூடம் விடப்பட்டது. பள்ளியிலிருந்து நூற்றுக்கணக்கான பிள்ளைகள் ஓடி வந்தார்கள். எதிரே பள்ளிக்கூட உணவு விடுதி வேன் வந்து நின்றது. அதில் எல்லாகும். ஏறிக்கொண்டிருந்தார்கள். இதுதான் சரியான வேளை என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த அமீது மெல்ல மணியரசுக்குச் சாடை காட்டிவிட்டு, கதவைத் திறந்து கொண்டு வெளியே பாய்ந்தான். மணியரசும் அவனைத் தொடர்ந்தான். பள்ளிக்கூடப் பிள்ளைகளின் மத்தியில் அவர்கள் மறைந்து, வேனில் ஏறிக்கொண்டார்கள்!
சின்னத்துரையின் காரோட்டி விழிப்புடன் இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்தபோதே வேன் புறப்பட்டது!
சற்றுத் தொலைவு அமீதையும் மணியரசையும் பார்த்த மற்றப் பையன்கள், “யார் நீங்கள்? எப்படி இதில் ஏறிக் கொண்டீர்கள்!” என்று கேட்டார்கள்.
அமீது கொஞ்சம் அமைதியுடனே பதில் சொன்னான். ‘உங்களுக்கு மனமில்லா விட்டால் எங்கள் இருவரையும் இறக்கிவிடுங்கள்! நாங்களும் உங்களைப்போல் பள்ளிப் பிள்ளைகள்தாம்!”
இதற்குள் ஒரு பையன் சொன்னான் : “உங்களை இங்கே இறக்கி விடப்போவதில்லை, போலீஸ் ஸ்டேஷனில் இறக்கி விடுகிறோம்! அப்போது அங்கே பதில் சொல்லுங்கள்!”
“நல்லதாகப் போய்விட்டது! நாங்கள் இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் போகவேண்டும்!” என்றான் அமீது.
அவன் கேலியாகவே பதில் சொல்லுகிறான் என்று எண்ணிய பையன்கள், காரோட்டியிடம் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஓட்டச் சொன்னார்கள்.
வேன் போலீஸ் ஸ்டேஷனில் நின்றது. அமீதையும் மணியரசையும் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்துவிட்டுக் காரோட்டி வேனை ஓட்டிக்கொண்டு போய்விட்டான்.
இன்ஸ்பெக்டர் அமீதையும் மணியரசையும் பார்த்து “நீங்கள் யார்?” என்று கேட்டார்.
“நாங்கள் யார் என்பது அப்புறம் இருக்கட்டும். இப்போது உடனே நான் உதவிப் போலீஸ் கமிஷனர் வகாபுடன் பேச வேண்டும்” என்றான் அமீது.
இன்ஸ்பெக்டர் சிரித்தார். “ஏது? இன்னும் சிறிது நேரம் போனால் ‘சங்கர்லாலைத் தொலைபேசியில் அழையுங்கள்!’ என்று சொல்லுவாய் போலிருக்கிறதே!” என்றார்.
“உண்மையில், இந்த நிமிடத்தில் நான் சங்கர்லாலுடன் பேச வேண்டும். எதற்கும் உதவிப் போலீஸ் கமிஷனரிடம் கொஞ்சம் பேசிவிட்டு அப்புறம் சங்கர்லாலிடம் பேசலாம். என்றிருக்கிறேன்!” என்று சொல்லிக்கொண்டே தொலைபேசியை எடுக்கப் போனான் அமீது.
இன்ஸ்பெக்டர் என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று பேசாமல் இருந்தார். தொலைபேசியில் உதவிப் போலீஸ் கமிஷனர் வகாபை அழைத்தான் அமீது. அவர் குரல் வந்ததும், “அப்பா! நானும் மணியரசும் எழும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம். உடனே வாருங்கள்! சங்கர்லாலையும் அழைத்து வந்தால் பெரும் உதவியாக இருக்கும்!” என்றான்.
“அங்கேயே இருங்கள்! இதோ நான் வருகிறேன். எல்லாருமாகச் சங்கர்லால் பங்களாவுக்குப் போவோம்” என்றார் வகாப்.
“ஆகட்டும் அப்பா!” என்றான் அமீது. அவன் தொலைபேசியை வைத்ததும், “உதவிப் போலீஸ் கமிஷனர் மகனா நீ? நாங்கள், உங்கள் இருவரையும் எத்தனை நாட்களாகத் தேடுகிறோம்? அப்போதே சொல்லக் கூடாதா? உட்காருங்கள் இருவரும்!” என்றார் இன்ஸ்பெக்டர்.
ஐந்தே நிமிடத்தில் காரில் வந்த வகாப், இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு முல்லைவன மலைத் தோட்டத்திற்குப் பறந்தார்.
– தொடரும்…
– சங்கர்லால் வந்துவிட்டார்! (மர்ம நாவல்), சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 20, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 20, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
June 17, 2026