சங்கமிப்பு
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 24, 2026
பார்வையிட்டோர்: 53
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அவள் வருவாளா?”
“வருவா. நிச்சயமாய் வருவா.’
“அதை எப்பிடி நம்பிறது?
“ஐயோ செல்லம் அவதான் கட்டாயம் வாறதெண்டு சொன்னா. நிச்சயமாய் வருவா. நீ இருந்து பார்.”
“என்னால் நம்பேலாமல் கிடக்கு.”
“செல்லம் என்னை நந்தா அடை யாளம் கண்டபொழுது அவ துடிச்ச துடிப்பைப் பார்க்கவேணும்”
“நான் இப்பவே என்ர அக்காவையும் இரண்டு பெட்டைக்குஞ்சுகளையும் பாக்கவேணுமெண்டு துடிச்ச துடிப்பை நான் என்னெண்டு சொல்ல? ”
“நீ சொல்லுறாய். ஆனால் என்னாலை இதை நம்பேலாமல் கிடக்கே.’
“நந்தா எங்கட முகவரியைக் கேட்டு துடிச்ச துடிப்பை, அவஸ்த்தைப் பட்டதை நீ நேரில் பார்த்தால்தான் உனக்குப் புரியும்.”
நீர்கொழும்பு எல்லைப்புறத்தில் தன்னந்தனியனாய் ஏகாந்த நிலையில் நான் நிற்கின்றேன்.
கொழும்பு பஸ்ஸை நான் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்கின்றேன்.
மாலை மயக்கம்.
இயற்கை எழில்கோலம் கண்ணாமூச்சி விளையாடுகின்றது. வானத்தின் அடிவயிற்றில் செவ்வொளி மெதுமெதுவாய்ப் படர்ந்து ஆகாயத்தையும் பூமியையும் விழுங்கி ஏப்பமிடுவதுபோல தோன்றுகிறது.
நெடுஞ்சாலையில் கண்ணுக்கெட்டிய துாரத்தில் இரு சிறிய கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் வரவரப் பெரிதாகி இரு மனித உருவங்கள். ஒன்று நெட்டை,மற்றது குட்டை.
இரண்டு உருவங்களும் வரவர என்னை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. கிட்ட வந்ததும் நெடிய உருவம் என்னை உற்றுநோக்கு கிறது. அந்த நெடிய பெண் உருவத்தின் விழிகளில் ஆச்சரியம்!
பெண் உருவத்தைப் பார்த்ததும் எனக்கு வியப்பு!
“நீங்கள் என்ரை செல்லமக்காவின்ர கணவர்தானே?”
அந்தப் பெண்.
“நீங்கள் எங்களின்ரை நந்தா அக்காவா?”:
எங்கள் இருவருக்கும் பேராச்சரியம்.
எங்களால் நம்பேலாமல் கிடக்கு.
“எனக்கு இப்பவே என்ரை செல்லா அக்காவைப் பார்க்க வேணும் போல கிடக்கு.”
நந்தா துடிக்கின்றாள்.
நந்தாவுடன் நின்ற அந்தச் சிறுமி ஆச்சரியத்துடன் எங்கள் இருவரையும் பார்த்தபடியே நிற்கின்றாள்.
இருபது வருடங்களுக்குப்பிறகு அவள் துடித்ததுடிப்பைப் பார்க்க வேணுமே. இப்ப என்னாலை ஒண்டும் சொல்லேலாமல் கிடக்கு.
”நாளைக்கு காலமைக்கு என்ரை அருமை அக்காவையும் உங்களை இரண்டு பெட்டைக்குஞ்சுகளையும் பார்க்க கட்டாயம் வருவன்.”
“மறந்து போனன் உங்கடை முகவரியைத் தாங்கோ. நீங்கள் இப்பவும் கொழும்பிலைதானே?”.
“நாங்கள் கொழும்பிலைதான் புதிய முகவரியிலை இருக்கிறம்.”
நான் சொல்ல எங்கடை முகவரியை அவ தன்னுட டயறியில எழுதினா.
“நீங்கள் அவவடை முகவரியை கேட்டு எழுதினியளா?”
“இல்லை செல்லம்”
“ஏன்”
அதட்டலாய் செல்லம்.
“நான் அவவின்ரை முகவரியைக் கேட்டெழுதிறதுக்கிடையில பஸ் வந்திட்டுது. நான் என்ன செய்ய?”
பஸ் புறப்படுகிறது.
”நாளைக்குக் காலையிலை ஒன்பது மணிக்கு முந்தி என்ரை செல்லமக்காவைப் பாரக்க கட்டாயம் வருவன், ஓடோடி வருவன்.” அவள் உரத்துக் கத்துகிறாள்.
பஸ் புறப்படுகிறது.
“இப்ப எட்டு மணியாகப் போகுது. என்ர நந்தாவை இன்னும் காணேல் லையே?”
என்ரை மனைவி செல்லம் நெருப்பில் மிதித்தவளாய் அவஸ்த்தைப் படுகின்றாள்.
“செல்லம் இப்ப எட்டுமணிதானே. ஓன்பது மணிக்கிடையிலை தான் வாறனெண்டுதானே நந்தா சொன்னா. நீ கொஞ்சம் பொறுமையாய் இரு. நான் என்ரை செல்லம்மாவை அமைதிப்படுத்திறன்.”
“நந்தா நீர்கொழும்பிலையிருந்து வரவேணும்தானே? நேரமெடுக்கும்தானே”.
செல்லம் நந்தாவைப் பார்க்க ஏங்கித் தவித்து தடிதுடிக்கின்றா.
“இருபது வரியங்களுக்குப் பிறகு நான் என்ரை நந்தாவைப் பார்க்கப் போறன். ஆவள் எப்ப வரப்போறாளோ? ஏன்ரை செல்ல நந்தா எப்படியிருப் பாளோ?”
என்ர செல்லம்மா தவியாய் தவித்துக்கொண்டிருக்கின்றாள்.
தெஹிவளை காலி வீதியிலிருந்து சென் மேரிஸ் சேர்ச்சிற்கு வடக்குப்பக்க மாய் மிருகக் காட்சிச் சாலைக்குப் பின்புறமாய் செல்கின்றது குவாறி றோட்
குவாறி றோட்டின் முதலாவது வளைவில் சந்தி. ஐந்து றோட்டுக்கள் சங்கமிக்கும் ஐந்து சந்தி. சந்தியின் நட்டநடுவே இளம் அரசமரம் ஒன்று செழிப்பாய் நிற்கிறது.
மூன்று மாதங்களுக்குமுன்னர்தான் இந்த அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையொன்று முளைத்திருக்கின்றது.
புத்தர் சிலைக்குப் பாதுகாப்பாய் அரசமரமா அல்லது அரசமரத்திற்குப் பாதுகாப் பாய் புத்தர் சிலையா?
அரசமரத்திற்கெதிரே தென்புறமாய் எங்கள் வீடு.
வீட்டுவிறாந்தைக்கு முன்னால் நான்கு சதுர அடி கொங்றீட் சீமெந்துப்படி. படிக்கு இருபுறமுமாய் குறோட்டன் வேலி.
“இஞ்சேருங்கோ, கெதியாய் வாங்கோ.”
செல்லம் என்னை அவசரமாய் அழைக்கின்றாள்.
நான் விரைகின்றேன்.
“அங்கை பாருங்கோ”.
“என்ன?”
:அம்மன்.”
மேற்குத்திசையைச் சுட்டிக் காட்டுகிறா.
“ஒரு பெண் வந்துகொண்டிருக்கிறது ” என்று நான் கூறுகின்றேன்.
“நல்லாய்ப் பாருங்கோ. அது அம்மன்”.
செவ்வானம் பின்புலமாய், பச்சை உடையில் அப்பெண்.
அப்பெண் எம்மை நெருங்குகின்றாள். இருபது அல்லது இருபத்தைந்து வயதிருக்கும். கன்ன உச்சி புறித்து நீண்ட கருங்கூந்தல் இரட்டைப்பின்னல் நீளமாய் அசைந்தாடிக்கொண்டிருக்கிறது. தலையில் இடதுபுறமாய் வெள்ளைப்பூ.
செந்தழலாய் நெற்றியில் குங்குமப் பொட்டு ஒயிலாய் நடந்து கொண்டிருக் கின்றாள். அவள் எம்மைக் கடந்து செல்லும்பொழுது உதட்டின் இடதுபுறமாய் சிறுமுறுவல். விழிகளில் நேசப்பிரவாகம்.
நாட்கணக்காய் மாதக் கணக்காய் என் மனைவியினதும் அப் பெண்ணினதும் சந்திப்புத் தொடர்கிறது. பேச்சல் பறச்சலில்லை. வெறும் புன்முறுவல் பரிமாற்றம்தான் இருவரும்
இவள்தான் முறையான தமிழ்ப் பெண் என்ற எண்ணம் செல்லத்திற்கும் எனக்கும்.
திடீரென ஒருநாள் அவள் என்மனைவியின் முன் வந்து நிற்கின்றாள்.
“அக்கா எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?”
ஆங்கிலத்தில் அவள்.
தமிழ் தெரியாத தமிழ்ப்பெண்ணா?
என் மனைவியின் மனதில் ஒரு சின்னக் கீறல். செல்லத்தின் மனோரதக் கோட்டை தகர்வு. முகபாவத்தில் சிறுமாற்றம்.
செல்லத்தின் முகபாவத்தின் மாற்றத்தைப் புரிந்துகொள்கின்றாள்.
“அக்கா நான் தமிழில்லை சிங்களம்”.
என் மனைவிக்கு வியப்பு.
சிங்களப்பெண்ணாயிருந்தும் தமிழ்ப் பெண்ணின் சாயலில் தன்னை உருவகித்துக்கொண்டு வாழுகின்ற இப் பெண்மீது என் மனைவிக்கு ஆதர்சம் ஏற்படுகிறது.
“உனக்கு என்ன உதவி வேணும்?”
செல்லம் கனிவாய்.
“நான் ஒரு தமிழ் கலியாண வீட்டுக்குப் போகவேணும் இந்த சாறியை நன்கு உடுத்தி இந்தப் பூ மாலையையும் என்ர கொண்டையில வைத்து விடு கின்றீர்களா?” மன்றாட்டமாய் அவள் கேட்கின்றாள்.
செல்லம் மனப்பூர்வமாய் சம்மதிப்பு.
இருவரும் அறைக்குள் செல்கின்றனர்.
அரைமணிநேரத்தில் இருவரும் வெளியே வருகின்றனர்
அவள் அசல் தமிழ்ப் பெண்ணாய் மிளிர்கின்றாள்.
எங்களுக்குப் பிரமிப்பு.
“அக்கா கலியாண வீட்டிலை எல்லாரும் என்னை தமிழ்ப் பெண் எண்டு நம்பீட்டினை எனக்கும். சரியான சந்தோசம்.”
முகப்பூரிப்புடன் அவள் அகமகிழ்ந்து கூறுகின்றாள்.
“அக்கா என்ற நிஜ வாழ்கையிலும் இபப்பிடி நடந்திருந்தால்….’ மேற்கொண்டு அவளால் பேச முடியவில்லை. கலங்கிய கண்களுடன் அவள் எம்மை விட்டகலுகிறாள்.
தினமும் அவள் எங்களைப்பார்க்கின்றாள், எங்களுடன் பேசுகின்றாள். ஆனால் அவள் தன் சோகக் கதையை எங்களுக்கு கூற முனையவில்லை.
நாங்களும் அதுபற்றி அவளைக் கேட்டு அவள் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை.
“அக்கா என்ர ஜெயம் என்னிட்டை இருந்து பறிக்கப்பட்டு பதின்மூண்டு வரியங்கள். இன்றுதான் அவற்றை நினைவுதினம்.”
கண்கலங்கியபடி திடீரென வந்து கூறுகின்றாள்.
எங்களுக்குத்திகைப்பு.
“இனிமேலும் அந்த சோகக்கதையை உங்களுக்கு என்னால சொல்லாமல் இருக்கேலாது”.
எதுவித பீடிகையுமில்லாமல் அவள் சொல்லுகின்றாள்.
“நான் கொழும்பு அரசாங்க பொது வைத்தியசாலையில் வேலை செய்கின்றேன் என்பது உங்களுக்குத் தெரியும்தானே?”
“ஆமாம் தெரியும்.”
“ஜெயசிங்கமும் என்னுடன்தான் வேலை செய்தார். நான் அவரை ஏழு வருடங்களாய் நேசித்து வந்தேன். அவரும் என்னை மனப்பூர்வமாய் விரும்பினார்.
ஐந்து வருடங்களாகியும் நாம் எமது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை.
என் பெற்றோர் எனக்கு கலியாணம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கினர். இனிமேலும் தாமதிக்கமுடியாதநிலை எமக்கு.
நாம் இருவரும் ஏக காலத்தில் எமது காதலை முதலில் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தினோம்.
என்னுடன் வேலை செய்கின்ற ஜெயவீரசிங்கம் என்பவரை நான் விரும்புவதாக பெற்றோருக்குச் சொன்னேன். ஆரம்பத்தில் அவர்கள் என் காதலை எதிர்த்தனர். ஆனால் எனது உறுதியான நிலைப்பாட்டால் அவர்கள் எனது விருப்பத்திற்கு விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
எங்கள் திருமண நாளும் குறித்தாகிவிட்டது. இன்னும் ஏழு நாட்களில் எங்களுக்குத் திருமணம்.
எழுபத்தி மூனண்டாம் ஆண்டு எங்கட சிங்கள இனவெறிபிடித்த அசுரனால் இனக்கலவரம் துாண்டிவிடப்பட்டது.
அப்பாவித் தமிழர் அநேகர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் என் அன்பிற்கினியவனும் ஒருவன். எனக்கு வாழ்கையே வெறுத்துவிட்டது. நான் எனது தொழிலிருந்து ஓய்வு பெறுகின்றேன்.
சிறிது காலத்தின்பின் எனது பெற்றோர் திருமணப்பேச்சை மீண்டும் ஆரம்பிக்கின்றனர்.
எங்கையாவது கண்காணாத இடத்திற்குப் போகவேண்டும்போல் இருக்கிறது. எனது சக ஊழியர் ஒருத்தி நீர்கொழும்பில் இருக்கின்றாள்.எவருக்கும் தெரியாமல் நான் நீர்கொழும்பிற்குச் செல்கின்றேன்.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட பத்துவயதிற்குட்பட்ட ஏழு சிறுவர்களுடன் ஒரு சிறுவர் பராமரிப்பு இல்லத்தை ஆரம்பிக்கின்றேன். நீர்கொழும்பிலுள்ள சில சிங்கள தமிழ் நலன் விரும்பிகளால் எமது சிறுவர் பராமரிப்பு இல்லம் வளர்ச்சிகண்டது.
பத்து வயதிற்குற்பட்ட எமது சிறுவர் இல்லத்தில் இப்போ முப்பது சிறுவர்கள். எங்கள் நிலையத்திலிருந்தவர்களில் இப்பொழுதும் அநேகர் பணமாகவோ பொருளாகவோ தங்கள் இயல்பிற்கேற்ற வகையில் உதவிக்கொண்டுதானிருக்கின்றனர்.
நேற்று நீர்கொழும்பு எல்லைப்புற்திலுள்ள பஸ் நிலையத்தடியால் நான் எங்கள் நியைத்தைச் சேர்ந்த சிறுமியொருத்தியுடன் சென்று கொண்டிருக் கின்றேன். அதிஷ்டவசமாக எதிர்பாராமலே என் செல்லம் அக்காவின் கணவரைச் சந்திக்கின்றேன். இன்று காலை அவர் கொடுத்த முகவரி யிலுள்ள என்னருமைச் செல்லமக்காவிடம் விரைந்து கொண்டிருக் கின்றேன். என்னருமை நந்தாவிற்குப் பிடித்தமான ரவா தோசையும் உருளைக் கிழங்குப் பிரட்டல்கறியும் தாழித்த பச்சைமிளகாய் சட்னியும் செய்து வைத்திருக் கின்றேன்.
தோசை சூடாறப் போகுதே -என்னாசை நந்தாவை இன்னும் காணேல் லையே.
இருபது வருடங்களுக்குப்பின், எனதருமை செல்லமக்காவைப் பார்க்கப் போகின்றன் என்கின்ற தவிப்புடன் விரைந்து கொண்டிருக்கின்றாள் நந்தா. எட்டரை மணியாகப்போகிறது.
செல்லம்மாக்காளின் தொடர்மாடி வீட்டு வாசலில் நந்தா.
தான் ஆவலுடன் எதிர்பார்த்த நந்தா வந்துகொண்டீருக்கின்றாள்.
இருவரும் பேராவலுடன் ஓடிச்சென்று ஒருவரையொருவர் ஆரத்தழுவு கின்றனர்.
எவ்வளவு நேரம்தான் அப்படி நின்றார்களோ? அவர்களிருவரது இதயங்களிலுமுள்ள தவிப்பு, பேரானந்தமிர்தம் பொங்கிப்பிரவாகிக்கின்றது. சற்று நேரத்தில் இருவரும் தங்களை ஆசுவாசப்படுத்துகின்றனர். சிறுமிகளாயிருந்த செல்வத்தின் பெண்கள் இருவரும் பொங்கிப்பரவாகிக்கும் பருவ எழிலுடன் நிற்கின்றனர்.
நந்தா அவர்களிருவரையும் தன் சொந்தப் புதல்விகளாய் ஆரத்தழுவிப் பூரிப்படைகின்றாள்.
“கொஞ்சிக்குலாவினது போதும் நந்தா றவா தோசை சூடாறப்போகுது வா சாப்பிட’
செல்வம் நந்தாவை இங்கிதமாய் அழைக்கின்றாள்.
நந்தாவிற்கு வியப்பு.
“எனக்கு என்ன சாப்பாடு விருப்பமெண்டதை செல்லம்மாக்கா இருபது வருடங்களாய் உள்மனதில் புதைத்து வைத்துள்ளாயே, உன் இதய தாகத்தை நான் என்னவென்று சொல்வது?”
எல்லோரும் அகமகிழ்வுடன் காலையுணவை சுவைத்துக் கொண்டிருக் கின்றனர்.
“செல்லமாக்கா. எனக்கொரு மகனிருந்தால் உன்ர தேவதைகள் இரண்டிலை ஒன்றை கட்டிக் கொடுத்திருப்பேனே. என்ன செய்யிறது? எனக்கு அந்தக்கொடுப்பனவு இல்லையே!.”
ஆதங்கப்பட்டு கூறுகிறாள் நந்தா.
“நந்தா, உனக்குப்பிடித்தமான பிரியாணிதான் மத்தியானச் சாப்பாடு. இரவுக்கு இடியப்பம், கத்தரிக்காய் பொரிச்சகுழம்பும், பால்சொதியும்.”
“போதும்போதும், இந்தமாதம் முழுவதும் எனக்கு என்ன சாப்பாடு என்று பட்டியலிடுவாய் போலகிடக்கு”
எல்லோரும் சிரிக்கின்றனர்.
“செல்லம்மாக்கா நீ குடுத்து வச்சவள். அன்புக் கணவன, இரண்டு தேவதைகள் கல்யாண வயதில். ஆனால் நான்?”
நீண்ட பெருமூச்சு விடுகின்றாள் நந்தா.
கூடியிருந்த எல்லோருக்கும் ஆதங்கம்.
“செல்லம்மாக்கா”
“என்ன நந்தா தயங்காமல் சொல்லு.”
“என்ர அன்புக்கினிய ஜெயாவைப்போல ஒருவர் முன்வந்தால்…..’
“வந்தால் என்ன சொல்லுறாய்?’
செல்லம்மா வியப்படன்.
“நான் அவரை என்ர வாழ்கைத் துணைவனாக ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறன்”.
– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 28, 2026
மாறாத எழுத்து
ரா.நீலமேகம்
August 28, 2026
பூவரசு பூத்திருக்கு
குரு அரவிந்தன்
August 28, 2026