மாறாத எழுத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2026
பார்வையிட்டோர்: 25 
வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்

“என்னப்பா, லிங்கம், எல்லாரும் இறங்கிட்டாங்களா? வண்டிய ஸ்டாண்டுல ஓரம் கட்டிடட்டுமா? ஒரு டீயைக் குடிச்சிட்டு, பின்னாடி ஷெட்டுக்கு எடுத்துட்டு போகலாம்.சரியா?” என்று நடத்துனர் லிங்கத்தை, பேரூந்து ஓட்டுநர் ஜெயசேகரன் கேட்டார்.

“நான் பார்த்த வரைக்கும் எல்லாரும் இறங்கிட்டாங்க அண்ணே, இருந்தாலும் இன்னொரு தடவை செக் பண்ணிடறேன்.வெயிட் செய்யுங்க” என்று சொல்லி லிங்கம் பேரூந்திற்குள் ஏறி ஒவ்வொரு இருக்கையாக பார்க்க ஆரம்பித்தான்.

பேரூந்திலிருந்து இறங்கி வண்டியின் முன் பக்கத்தில் உள்ள படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த ஜெயசேகரன், ” அண்ணே, அண்ணே, உள்ள வாங்க சீக்கிரமா, இங்கே வந்து பாருங்கண்ணே” என்ற லிங்கத்தின் அலறல் கேட்டு ” என்னடா, என்னாச்சு” என்று கூறியபடியே வேகமாக உள்ளே சென்று அவன் நின்று கொண்டிருந்த பேரூந்தின் கடைசிப்பகுதிக்கு சென்றார்.

அங்கே ஒரு இருபத்தைந்து வயதுக்குள் பெண் அரை மயக்கத்தில் உறக்கத்தில் இருந்தாள். ” இந்தாம்மா, பொண்ணு, நீ இறங்க வேண்டிய ஊர் வந்துடுச்சு. எழுந்திரி, ஹலோ” என்று கூவிக் கொண்டிருந்தான் லிங்கம்.

அருகே வந்து பார்த்த ஜெயசேகரன், ” லிங்கம் தண்ணீர் பாட்டில் எடுத்து வா, இந்த பொண்ணு பசி மயக்கத்தில சுருண்டிருக்கா. போ, சீக்கிரம் கொண்டா ” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணை கைத்தாங்கலாக நிமிர்ந்த நிலையில் உட்கார வைத்து பிடித்துக் கொண்டு நின்றார்.

தண்ணீர் பாட்டிலுடன் ஓடி வந்த லிங்கம் அவள் முகத்தில் தண்ணீரை இரண்டு மூன்று முறை வேகமாக தெளித்தான்.

“ம்ம், ஹும், ம்ம் ம்ம்” என்று முனகல்களுடன் கண் விழித்த அந்த பெண், ” ஆதிக்கரையூர் வந்துடுச்சா, அயம் சாரி, மயக்கமா வந்தது போல் இருந்தது.அப்படியே தூங்கிட்டேன் ஐயா” என்று பரிதாபமான மெல்லிய குரலில் அவர்களைப் பார்த்து சொன்னாள்.

“அது மட்டும் இல்லேம்மா. நீ கிட்டத்தட்ட ரெண்டு நாளா சாப்பிடலன்னு நினைக்கிறேன். மெதுவா கீழே இறங்கி வா. முதல்ல சாப்பிடு. அப்புறம் பேசிக்கலாம். நீ ஏதாவது பை, பெட்டி கொண்டு வந்திருக்கியா?” என்று கேட்டார் ஜெயசேகரன். அதற்குள் லிங்கம் ஒரு புதிதாக இருந்த

பயணப்பையை மேலிருந்து எடுத்து ” இது உன்னோட பேக்தானம்மா, நான் எடுத்து வரேன். நீ இறங்கு” என்றான்.

அந்தப் பெண் ” அதுதான் என் பேக், நானே எடுத்து வரேன்.” என்றாள்.

“நீ பேசாம என்னோட வா. சங்கடப்படாதே. அவன் எடுத்து வருவான் உன் பையை.நீ வந்து ஏதாவது சாப்பிட்டுட்டு பேசு” என்றார் ஜெயசேகரன்.

அருகே இருந்த தரமான உணவகத்தில் அவளை உட்காரச் சொல்லி, உணவு பரிமாறும் பணியாளரிடம், ஜெயசேகரன் பட்டியலில் உள்ள உணவு வகைகள் சிலவற்றை கொண்டு வரச் சொல்லி பணித்தார். பிறகு அந்தப் பெண்ணிடம் திரும்பி ” நீ போய் முகம் கழுவிட்டு வா.இப்போ டிஃபன் வந்துடும். பேஸ்ட், பிரஷ் வேணுமா?” என்று கேட்டார். ” வேண்டாம் ஐயா. என் பையில் இருக்கு” என்றாள். லிங்கம் அவன் கொண்டு வந்திருந்த பையை அவளிடம் கொடுத்து விட்டு ஜெயசேகரன் பக்கத்தில் அமர்ந்தான். அவள் அதிலிருந்து ஒரு துண்டு, பற்பசை இவைகளை எடுத்துக் கொண்டு உணவகத்தின் பின்புறம் சென்றாள்.

“ஏதாவது சொல்லிச்சா அண்ணே அந்த பொண்ணு? பாத்தா பாவமா இருக்கு. என்ன கஷ்டமோ தெரியலயே. மஞ்சளங்கிரிலேருந்து நம்ப பஸ் கிளம்பறதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி ஓடி வந்தது அண்ணே அந்த பொண்ணு. ஆதிக்கரையூர் போகணும். சீட் இருக்கான்னு கேட்டுச்சு. லாஸ்ட் ரோவிலதான் உக்காரணும்னேன்.சரின்னு ஏறிச்சு. நேத்து ஒண்ணும் ரொம்ப ஃபுல் ஆகாம இருந்துதா, அப்படியே கடைசி சீட்ல படுத்துடுச்சு. நானும் அப்டியே விட்டுட்டேன்.” என்று லிங்கம் விவரித்தான்.

“ஏதும் சொல்லலே இன்னும், நானும் எதுவும் கேக்கலை. முதல்ல அந்த பொண்ணு சாப்டட்டும். அப்புறமா கேக்கலாம். சரி, நீ பாத்ரூம் போறதுன்னா போய்ட்டு வா.அந்தப் பொண்ணு வந்துடட்டும். அப்புறமா போறேன்.” என்று ஜெயசேகரன் கூறி லிங்கத்தை அனுப்பினார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த பெண் வந்து உட்கார்ந்தாள். அவள் முன்னே, பழச்சாறு, இட்லி, பொங்கல், வடை இவைகள் இருந்த தட்டுகளை நகர்த்திக் கொண்டே ஜெயசேகரன் ” முதல்ல ஜூஸை சாப்டும்மா.எனக்குத்தெரியும். உன் வயிறு காலின்னு.அதுக்கப்றமா டிஃபன் எடுத்துக்கோ” என்றார்.

“சார், உங்களுக்கு ஏன் சிரமம்?” என்று ஏதோ பேச முயன்றவளை தடுத்து சாப்பிட சைகை காட்டினார் ஜெயசேகரன்.

அவள் பழச்சாறுஅருந்தி,மற்றஉணவுகளையும்உண்ணத்தொடங்கினாள்.அப்போது

லிங்கம் அங்கே வந்து உட்கார்ந்து அவனுக்கு வேண்டியவைகளை கொண்டு வரப்பணித்தான். ஜெயசேகரன் “லிங்கம், நான் முகம் கழுவிட்டு வரேன். அந்த பொண்ணுக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிடு. எனக்கு நான் சொல்லிட்டேன்.” என்று சொல்லி அவளை பார்த்து “நீ மெதுவா சாப்டும்மா. இப்ப வந்துடறேன்.” என்று சொல்லி விட்டு சென்றார்.

லிங்கம் அவள் சாப்பிடும் வேகத்தை கண்டு ‘அண்ணன் சொன்னது போல இது ரெண்டு மூணு நாளா சாப்டவே இல்லேன்னு நினைக்கிறேன்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

பிறகு அவளிடம் “சாப்டுட்டு சொல்லும்மா, என்ன வேணும்னு.அவசரமே இல்லை ” என்று சொல்லி விட்டு அவன் சாப்பிட ஆரம்பித்தான்.

அவள் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது முகம் கழுவிட்டு திரும்ப வந்து தன் இருக்கையில் அமர்ந்து ஜெயசேகரன் உணவருந்த ஆரம்பித்தார். இடையே அந்தப் பெண்ணைப் பார்த்து ” உன் பெயர் என்னம்மா? என்னை உன் அப்பா மாதிரி நெனைச்சுக்கோ. லிங்கத்தை உன் சகோதரன் மாதிரி நெனைச்சுக்கோ. உனக்கு என்ன பிரச்னை, கஷ்டம் எங்களை நம்பி சொல்லலாம். எங்களால முடிஞ்சா உதவி செய்றோம் உனக்கு” என்றார்.

அவள் “ஐயா, என் பேரு மோகனா. நான் மஞ்சளங்கிரி சிட்டி பக்கத்துல வில்வாபுரில வசிக்கறவ.என் பேரன்ட்ஸ், எல்டர் பிரதர் எல்லாரும் ஒண்ணாதான் இருக்கோம்.நீங்க சாப்டுட்டு வாங்க. நான் சொல்றேன் எல்லாத்தையும்.”

“சரி மோகனா, தோசை வேற ஏதாவது சாப்டறயா?” என்று லிங்கம் கேட்டான்.

“வேண்டாம் அண்ணா, இதுவே அதிகம் ஆயிடுச்சு” என்றாள் மோகனா.

“அப்போ சரி, லிங்கம் எல்லாருக்கும் ஒரு காஃபி சொல்லு. சரிம்மா, நீ போய் கை கழுவிட்டு வா. வந்து காஃபி சாப்டு” என்றார் ஜெயசேகரன்.

மோகனாவும் மற்ற இருவரும் காஃபியை அருந்தி விட்டு வெளிநடந்தார்கள்.

“ஐயா, நான் இந்த ஊருக்கு இதுவரை வந்ததே கிடையாது. பயந்தபடியே வந்தேன்.ஆனால் உங்க ரெண்டு பேரையும் பாத்ததுக்கப்றம் நல்ல மனுஷங்க இங்கே இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன். நீங்க சொன்ன மாதிரி நான் ரெண்டு நாளாக சாப்டல. என் வீட்டை விட்டு வெளியேறிட்டேன். என் சர்டிபிகேட், எனக்குன்னு இருந்த நகை, நான் சேர்த்த பணத்தில் கொஞ்சம், பாக்கி என்னோட துணிகள் இதை எடுத்துட்டு ஃப்ரெண்ட்ஸ்களோட டூர் போறதா சொல்லி வந்துட்டேன். ஆனால் முன்பின் தெரியாத என்னை உங்க மகளா நினைச்சு, லிங்கம் அண்ணா சகோதரியா நினைச்சு இப்படி உபசரிச்சதை பாத்து எனக்கு அழுகையா வருது ஐயா.” என்று கூறி ஜெயசேகரன் கையைப் பிடித்து அழுதவண்ணம் இருந்தாள் மோகனா.

“இதப்பாரும்மா மோகனா, நீ சின்னப் பொண்ணும்மா. இதைப் போல லைஃப்ல ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவமா இருக்கும்மா. சமாளிச்சு அல்லது பிரச்னைகளை தூசியா நினைச்சு, நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்கிற தன்னம்பிக்கையோட எதிர்நடை போடப் பழகிக்கோம்மா.உனக்கு புது வழி கிடைக்கும். அழவே கூடாது. நான் நினைக்கிறேன், நீ நல்லா படிச்சிருக்கே, ஆனால் ஏதோ ஒரு ஏமாற்றம் தாங்க முடியலே. அந்த கோபத்தில எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு கிளம்பிட்டே இல்லையா?”. ஆறுதல் வார்த்தைகள் தந்தார் ஜெயசேகரன்.

“நான் கொஞ்ச நேரம் உங்களோடு பேசணும். நாம எங்கேயாவது உட்கார்ந்து பேசலாமா? நான் முழுசா சொன்னாத்தான் உங்களுக்கு புரியும். யாருமே இல்லாத இந்த ஊர்ல என் பேர்ல இவ்வளவு அன்பு, பரிவு காட்டின உங்ககிட்ட சொல்லணும் போல தோணிச்சு. இல்லாட்டி நான் மாட்டும் இறங்கி எங்கேயாவது போயிருப்பேன்.உங்களுக்கு டைம் இருக்கா? ” என்று கேட்டாள் மோகனா.

உடனே ஜெயசேகரன்” இப்பதாம்மா டூட்டி முடிச்சு வரேன். இனிமேல் இன்னிக்கு நைட்டுதான். இங்கே பக்கத்தில ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில என் வீடு. என் வண்டிலயே வா. அங்கே போயே பேசலாம்.போற வழில ஒரு பார்க் இருக்கு. அங்கே வேணும்னாலும் உக்காந்து பேசலாம். உனக்குன்னு இல்லம்மா, உன் நிலையில யார் இருந்தாலும் அவங்களுக்கு உதவி செய்றது என் கடமையா நினைக்கிறேன் மோகனா.” என்றார் ஜெயசேகரன்.

இதையெல்லாம் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த லிங்கம் இப்போது, ” அண்ணன் எங்க எல்லாருக்கும் குரு மாதிரி. எங்க பஸ் ஸ்டேஷன்ல நாங்க எல்லாரும் அண்ணன் கிட்டதான் எங்க கஷ்டநஷ்டத்தை சொல்லி அட்வைஸ் கேப்போம்.அவரும் நல்ல விதமா சொல்லி எங்களுக்கு தைரியம் கொடுப்பார்.அதனால உனக்கும் ஒரு நல்ல வழி சொல்லுவாரு. அண்ணன் வீடு தாண்டி ரெண்டு தெரு தள்ளி என் வீடு இருக்கு. அண்ணே, நம்ம காய்கறிகார அம்மணி தங்கம்மா வீட்ல ஒருத்தருமே இல்லையே, ரெண்டு ரூம் சும்மாதான் இருக்கு. அங்கே வேணும்னா இந்த பொண்ணை தங்க வைக்கலாமே, நீங்க சொன்னா உடனே தங்கம்மா கேக்குமே!” என்றான்.

“ம்ம், அதுவும் நல்ல யோசனைதான் லிங்கம். சரி வா மோகனா. போய் பார்க்ல உக்காந்து பேசிட்டு வீட்டுக்கு போகலாம். தங்கம்மா கிட்ட சொல்லி உன்னை அங்கே தங்க ஏற்பாடு செய்றேன் ” என்றார் ஜெயசேகரன்.

“அதெல்லாம் எதுக்கு ஐயா, என் நிலைமைய புரிஞ்சு உடனே மனிதாபிமானத்தோட நடந்த உங்க ரெண்டு பேர் மேல எனக்கு மரியாதை வந்தது. அதனால உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். தங்கறதெல்லாம் பின்னாடி பாத்துக்கலாம் ஐயா” என்றாள் மோகனா.

“சரி வா, வண்டில ஏறு. ‘ பேக் ‘ எங்கிட்ட கொடு ” என்று கூறி மோட்டார் சைக்கிளை இயக்கினார் ஜெயசேகரன்.

மோகனா அமைதியாக பின்னால் ஏறிக் கொண்டாள்.

லிங்கம் தன் வண்டியில் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

போகும் வழியில் ‘வள்ளலார் பூங்கா’ என்றிருந்த பூங்கா முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு மூவரும் உள்ளே நுழைந்து அங்கிருந்த பெரிய வேப்பமரத்தின் அடியில் அமைத்திருந்த பெஞ்சில் உட்கார்ந்தனர்.

“ஐயா, நான் ஆட்டோமொபைல் இஞ்சினீரிங் படிச்சிருக்கேன். அது சம்பந்தப்பட்ட துறைல வேலை பார்க்கிறேன். என் அப்பா செல்லதுரை பிஸினஸ் மேன்தான். அம்மா மரகதவல்லி. அவங்களும் கிராஜுவேட். ஃபைனான்ஸ் விஷயம் எல்லாம் பாத்துக்கறாங்க.

அப்பா ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் சப்ளை, கார் வாஷிங் இதெல்லாம் செய்றார்.நான் வேலை செய்யற கம்பெனிக்கும் சப்ளை பண்றார். எங்க கம்பெனி கார் விற்பனை ஏஜன்சியில் ஒரு யங் பர்ஸன் மேனேஜர். அவர் அடிக்கடி எங்கள் ஆஃபீஸ்க்கு வேலை சம்பந்தமா வரும்போதும், ஒரு சில சமயங்களில் என் அப்பா வைத்திருக்கும் ஷாப்பிற்கு வரும்போதும் பழக்கம் ஏற்பட்டது எனக்கு. பிறகு நல்ல நட்பா மாறி, கொஞ்ச நாளில காதலிக்க ஆரம்பிச்சுட்டோம். முதல்ல எங்க அப்பா, அம்மாவுக்கு அது பிடிக்கலை. அப்புறமா அவரோட நடவடிக்கை, ஆட்டிட்யூட் எல்லாம் பாத்துட்டு அவங்க அல்மோஸ்ட் சம்மதம் சொல்ற நிலையில் இருக்கும்போது, இந்த லவ்வர் திடீர்னு ரெண்டு மாசமா, என்ன காரணமோ தெரியலே, எங்கிட்டேர்ந்து ஒதுங்க ஆரம்பிச்சுட்டாரு. என்னன்னு கேட்டா ‘ நாம நல்ல ஃப்ரெண்ட்ஸாவே இருக்கலாமே, நமக்குள்ள இதைத் தாண்டி எந்த பந்தமும் ஒத்து வராதுன்னு நினைக்கிறேன் ‘அப்டியெல்லாம் சொல்லிட்டு வேம்புச்சேரிக்கு பத்து நாளுக்கு முன்னாடி ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போய்ட்டாரு.ஃபோன் எடுக்கறதே இல்லை. நாலு நாள் முன்னாடி அந்த நம்பரும் போக மாட்டேங்குது. மாத்திட்டாரு போல் இருக்கு. ஆனால் அவரு ஒரு தடவை அவரு ஊர் ஆதிக்கரையூர், அப்பா இங்கே ஒரு பஸ் கம்பெனிலதான் வேலை பாக்கறாருன்னு சொல்லிருக்காரு.எந்த கம்பெனி, என்ன பேரு இதெல்லாம் எனக்கு தெரியாது. எங்க வீட்டுல தினந்தினம் இதப்பத்தி பேசி, ‘இதெல்லாத்தையும் மறந்துட்டு, உடனே வரன் பாக்கறேன் கல்யாணத்துக்குன்னு’ ஒரே டார்ச்சர். அதான் இந்த ஊருக்கு ஓடி வந்துட்டேன்.இப்போதைக்கு இவ்வளவுதான் என் கதை.இந்த ஊர்ல இருந்து எப்படியாவது அவங்க வீட்டை கண்டு பிடிச்சு, அவங்களைப் பாக்காம போகப்போறதில்லை.” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்த மோகனா, பையை எடுத்துக்கொண்டு கிளம்பத்தயாரானாள்.

“சரிம்மா மோகனா, எல்லாம் நல்லபடியா முடியும்மா. சரி நீ இப்ப எங்க கிளம்பற? எங்க கூட வீட்டுக்கு வாம்மா. நாங்களும் ஹெல்ப் பண்றோம் உனக்கு” என்று அவளைத் தடுத்தார் ஜெயசேகரன்.

“இல்லை ஐயா, எனக்கு என் விதிப்படி நடக்கட்டும். நான் தனியா போய் என் பிரச்னைய முடிக்க பாக்கறேன். நீங்க இவ்வளவு தூரம் ஆதரவு தந்ததே பெரிசு ஐயா. நான் உங்களுக்கு மேலும் சிரமம் கொடுக்க விரும்பலை. என்னால் உங்க ரெண்டு பேருக்கும் தொந்தரவுகள்தான் மிச்சமாகும். அதனால என்னை ஆசீர்வாதம் மட்டும் பண்ணி அனுப்புங்க ஐயா, லிங்கம் அண்ணே.” என்று இருவரையும் பார்த்து கைகூப்பி கெஞ்சிய குரலில் பேசினாள்.

ஜெயசேகரன், லிங்கம் இருவரும் சேர்ந்து “என்னிக்கும் உனக்கு எங்க ஆசீர்வாதம் உண்டம்மா. சரி, ஜாக்கிரதையா இருந்துக்கோ.” என்றார்கள்.

பிறகு ஜெயசேகரன்” இது உன் தனிப்பட்ட விஷயம் மோகனா. உன்னால் சமாளிக்க முடியாமல் இந்த ஊர்ல ஏதாவது ஹெல்ப் வேணும்னா எங்களை கூப்பிடு உடனே. லிங்கம், உன் நம்பரை கொடு. மோகனா ஃபோன் செய்யும்போது நான் ட்ரைவிங்ல இருந்தா எடுக்க முடியாமல் போய்டும். நீ உடனே எடுத்து பேசலாம். ” என்றார்.

லிங்கம் அவன் செல்லிடப்பேசியின் எண் தந்துவிட்டு “ஒரு மிஸ்டு கால் கொடு மோகனா” என்றான். அவள் அதைச் செய்து விட்டு நன்றி சொல்லி கிளம்பும்போது ஜெயசேகரன் கேட்டார் “அந்த பையன் பேரு என்னம்மா, ஏதாவது கான்டாக்ட் இருக்கா, ஏன்னா என் பையன் வேம்புச்சேரிலதான் இருக்கான். அவனால ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு பாக்கச் சொல்றேன்” என்றார்.

அதற்குள் மோகனா வாயிற் கதவு வரை சென்று திரும்பி பார்த்து ” அவர் பேரு விஷ்வம். நம்பர் எல்லாம் அப்புறம் தரேன்.” என்று சொல்லி அங்கு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிச் சென்றாள்.

ஜெயசேகரனும், லிங்கமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ” பாவம் நல்ல பொண்ணு. இப்படி எந்த தகவலும் தெரியாம இந்த ஊர்ல வந்து நிக்குதே” என்று சொல்லியபடி இருந்தார்கள்.

“அண்ணே, நாம ஹெல்ப் பண்ண நினைச்சோம்.இதுக்கு மேல் ஃபோர்ஸ் செய்ய முடியாது இல்லையா, கடவுள் கிட்ட வேண்டிப்போம் மோகனாவுக்காக.அதான் செய்ய முடியும் ” என்று சொன்னான் லிங்கம். ” ஆமாண்டா லிங்கம். சரி வீட்டுக்கு போவோம்.நான் நம்ம விசு கிட்ட சொல்லி ஐடியா கேக்கலாம்னு இருந்தேன். விடு, பசியோடு இருந்த ஒரு வயிறுக்கு சாப்பாடு போட்டாச்சு . அதுவரை மனசு நிம்மதியா இருக்கு” என்று சொன்னார் ஜெயசேகரன்.

இருவரும் வீட்டிற்கு சென்றனர். இரவு நேரப் பணிக்களைப்பால் உறங்கி விட்டார்கள்.அன்று பகல் உணவின் போது தன் மனைவி ரஞ்சிதத்திடம் ஜெயசேகரன் காலையில் நடந்ததைச் சொன்னார்.அதே போல் லிங்கமும் தன் மனைவி புவனாவிடம், மோகனாவின் விஷயத்தை விவரித்தான். “அவளோட நம்பர் இருந்ததுன்னா நாளைக்கு வேணும்னா ஃபோன் பண்ணி பாருங்க” என்று புவனா சொன்னாள். அதேபோல் ரஞ்சிதமும் ஜெயசேகரனிடம் கூறினாள்.


ஒரு வாரம் கடந்த பின் ஜெயசேகரன், லிங்கம் இருவரும் பகல் பணிக்காக தயாராகி பேரூந்து நிலையத்தில் நின்றிருக்கும்போது, அதே நிறுவனத்தில் வேலை செய்யும் சுந்தரமூர்த்தி அங்கே வந்து” ஜெய் அண்ணே, எப்படி இருக்கீங்க? ஒரு மாசத்துக்கு முன்னாடி பார்த்தது. அண்ணி சௌக்யமா? விசு எப்படி இருக்கான்? ” என்று வரிசையாக கேள்விகளை ஜெயசேகரனிடம் கேட்டார்.

“வாப்பா, சுந்தரம், நான் வந்துட்டுதான் இருக்கேன். உன்னத்தான் போன பத்து நாளா பாக்க முடியலே. யூனிஃபார்ம் எங்கே, மஃப்டில வந்திருக்கே இங்கே? என்ன லீவா? எங்க வீட்டுல எல்லாரும் நலம். உங்க வீட்ல எப்படி? உன் பொண்ணு படிப்பை முடிச்சிருப்பாளே, வேலை தேடுதா?” என்று ஜெயசேகரன் கேட்டார்.

“ஆமாண்ணே. ரெண்டு நாள் லீவுல இருக்கேன். நம்ம கம்பெனி டூரிஸ்ட் பஸ் டிரைவர் உடம்பு சரியில்லன்னு போனவாரத்துக்கு முந்திய நாள் ஆஸ்பத்திரியில் சேந்துட்டாரு. அதனால் அர்ஜண்டா கஸ்டமர்களை அழைச்சிட்டு சிங்கமலை, வெள்ளருவி, காணாந்தோட்டம் இந்த டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு ஒரு வாரம் அழைச்சிட்டு போய் சுத்திக் காமிக்க என்னை நியமிச்சுட்டாரு மேனேஜர். சரின்னு போய்ட்டு ரெண்டு நாள் முன்னாடி வந்தேன். வந்தா இங்கே வீட்ல குழப்பம், அநாவசிய பிரச்னை. சரின்னு இன்னும் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு இன்னிக்கு பேட்டாவை கலெக்ட் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன். லிங்கம் எங்கே, உங்க கூடதான் டூட்டியா? இல்லை நைட்டா?” என்று கேட்டார் சுந்தரமூர்த்தி.

“லிங்கம் என்னோடதான் வரான். வீட்ல என்ன பிரச்னை? சொல்லு, முடிஞ்சா தீர்த்து வைக்க நான் முயற்சி பண்றேன்.” ஜெயசேகரன் கேட்டார்.

சுந்தரமூர்த்தி, “அண்ணே, உங்களுக்கு தெரியும். என் வீடு ‘ விஷ்ணுபுரி ரெஸ்டாரன்ட் ‘பக்கத்த்துல இருக்குங்கறது. அங்கதான் லாட்ஜிங்கும் இருக்கே. அங்கே ஏதோ ஒரு பொண்ணு வந்து அஞ்சாறு நாள் முன்னாடி தங்கிருக்கா. என் பொண்ணு குமுதா, நீங்க சொன்னது போல படிப்பை முடிச்சவ, நல்ல வேலையா கிடைக்கற வரை அந்த ஹோட்டலில் டெம்பரரியா லாபில ஜூனியர் அசிஸ்டன்ட் வேலைல சேந்து ஒரு மாசம் ஆகுது. ஒரு நாள் அந்த கெஸ்ட் பொண்ணு வெளியே கிளம்பி போற நேரத்துல அவளோட ஐடி கார்டு, சின்ன பர்ஸ் இத லாபில உட்கார்ந்து இருந்தப்ப மறந்து விட்டுட்டா. குமுதா இதைப் பாத்து எடுத்து வச்சிருந்து அவ வந்தவுடனே திரும்பக் கொடுக்க, ரெண்டு பேரும், ரெண்டு மூணு நாளில நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க. முந்தாநாள் நான் டூட்டி முடிஞ்சு வர்றதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு வந்து, காஃபி சாப்டுட்டு, குமுதா கிட்ட அவ ஊர் அட்ரஸ், ஃபோன் நம்பர் எல்லாத்தையும் கொடுத்துட்டு நல்லபடியாத் தான் போயிருக்கா. ஆனால் நேத்து சாயந்திரம் போலீஸ் கிட்டேர்ந்து ஃபோன் வருது. அந்த பொண்ணு அதிகமா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சில ஈடுபட்டிருக்கா. அவளோட ஃபோன்ல உங்க பொண்ணு குமுதா நம்பர் இருக்கு. விசாரணைக்கு வரணும்னு. பொண்ணு பிழைச்சுட்டா. இருந்தாலும் நான், குமுதா உடனே ஆஸ்பத்திரியில் போய் அங்கே இருந்த இன்ஸ்பெக்டர பாத்து விவரங்கள் சொன்னேன். அப்போதான் அந்த பொண்ணை பாத்தேன். குமுதாவப்பாத்து லேசா சிரிச்சா. அவ பேரு மோகனாவாம். அவ ஃபோன்ல லிங்கம் நம்பர் இருந்ததால் அதைப் பாத்து ‘ லிங்கம் யாரு? உங்களுக்கு தெரியுமா’ அப்டின்னு என்னைக் கேட்டாரு. நான் தகவல் சொன்னேன். அதனாலதான் லிங்கம் எங்கன்னு கேட்டேன் அண்ணே. நாளைக்கு அந்த மோகனா பொண்ணு டிஸ்சார்ஜ் ஆகி பத்திரமா ஊருக்கு போனாத்தான் எனக்கும் குமுதாவுக்கும் நிம்மதி கிடைக்கும்.” என்று வருத்தம் தோய்ந்த குரலில் விவரித்தார்.

அப்போது அங்கே லிங்கம் வந்தான். “அண்ணே, இன்னிக்கு டூட்டி முடியாது அண்ணே. மோகனா ஏதோ ஆஸ்பத்திரியில் இருக்காம். போலீஸ் இன்ஸ்பெக்டர் கூப்பிட்டு உடனே வரச்சொல்ராறு. நேத்திலேர்ந்து கூப்டிருக்காரு.ராத்திரி சார்ஜ் போட மறந்துட்டேன். சைலன்ட்ல போட்டுட்டு தூங்கிட்டேன். இப்ப இங்க வந்து பாத்தப்பதான் தெரிஞ்சுது. அவர்ட்ட சொன்னேன். ஆனால் உடனே வரச்சொல்றாரு.எனக்கு டென்ஷனா இருக்கு அண்ணே” என்று பதற்றத்துடன் பேசினான்.

“லிங்கம், கவலைப்படாதே. ஒரு பிரச்னையும் இல்லை. இப்பதான் இந்த நிகழ்வோட வேற பக்கத்தை சுந்தரம் சொன்னான். நானும் வர்றேன். ரெண்டு பேரும் மேனேஜர் கிட்ட போய் சொல்லிவிட்டு மாற்று ஏற்பாடு பண்ணிக்கச் சொல்லிட்டு போகலாம்” என்றார் ஜெயசேகரன். பிறகு சுந்தரமூர்த்தியிடம் திரும்பி “சுந்தரம், எங்களுக்கு அந்த மோகனாவை ஒரு வாரம் முன்பே தெரியும். அந்த கதைய அப்புறம் சொல்றேன். எங்க ரெண்டு பேருக்கும் மாற்று ஏற்பாடு செய்ய ஏதாவது நீ ஹெல்ப் செய்வியா? முடியுமா?” என்று கேட்டார்.

” நீங்க மேனேஜர் கிட்ட பேசிட்டு வாங்க. அதுக்குள்ள நம்ப ராமலிங்கம் ஃப்ரீயாத்தான் இருக்கான் இன்னிக்கு. அவனையும் கண்டக்டர் துரையையும் ஏற்பாடு செஞ்சுடறேன்.” என்று சுந்தரமூர்த்தி உறுதியளித்தார்.

அடுத்த அரைமணி நேரத்தில் தங்களது பணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு மேலாளரிடம் அனுமதி பெற்று அதை சுந்தரமூர்த்தி உதவியுடன் சரிவரச் செய்துவிட்டு, ஜெயசேகரனும், லிங்கமும் மருத்துவமனை விரைந்தனர்.

இன்ஸ்பெக்டர் சோம்நாத் ஜெயசேகரன், லிங்கம் இருவரும் கூறிய விவரங்களை ஒரு காகிதத்தில் எழுதித் தரச் சொல்லி விட்டு, அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மோகனாவைப் பார்க்க அனுமதித்தார்.

கட்டிலில் சோர்வுடன் அமர்ந்திருந்த மோகனா இவர்களைக் கண்டதும் லேசான புன்னகையுடன் “வாங்கண்ணே, அயாம் ஸாரி. நான் இப்படி செஞ்சிருக்க கூடாது. என் வழில போய் தேடிப் பாத்துட்டு இருந்தேன். சில பஸ் கம்பெனிகள்ல போய் கூட கேட்டேன். விஷ்வம்கிற பையனோட அப்பா அப்படின்னா யாருக்கும் தெரியலே.அதை வச்சு எப்படி சொல்வாங்க, எனக்கும் புத்தில உறைக்கலே. உங்களோடயே வந்திருக்கலாம்.வீட்லேருந்து ஃபோன் மேல ஃபோன்.நான் எடுக்கவே இல்லை. போலீஸ் கம்ப்ளெய்ன்ட் கொடுக்கப் போறேன்னு அப்பா மெஸேஜ் அனுப்பினாரு. அதுக்கப்புறம் அசட்டுத்தனமா இப்டி ஒரு முடிவு எடுத்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க அண்ணாக்கள் ரெண்டு பேரும்” என்று கூறி அழுதாள்.

“அழாதே மோகனா. இப்பவாவது சொல்லு அந்த பையன் அட்ரஸ். ஃபோன் நம்பர், அவனோட ஃபோட்டோ இதையெல்லாம் கொடு. நான் என் மகன் விசுவுக்கு ஃபோன் பண்ணி இந்த பிரச்னைய முடிச்சு வைக்கறேன்.” என்று கூறிவிட்டு இன்ஸ்பெக்டரிடம் “சார், இது எனக்கு வேண்டப்பட்ட பொண்ணு சார். இனிமேல் எதுவும் நடக்காம இருக்க நான் கேரண்டி தரேன் சார். நீங்க என்ன ஸ்டேட்மெண்ட் எழுதி தரச்சொன்னாலும் நானும், லிங்கமும் எழுதித் தரோம் சார். கேஸ் எதுவும் வேண்டாம் சார்” என்று வேண்டினார்.

“ஓகே, ஐ அக்ரீ. உங்க பேர்ல எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் கேஸ் எதுவும் ஃபைல் பண்ணல. சாயந்திரம் ஸ்டேஷன் வந்து நடந்தது எல்லாத்தையும் ஒண்ணு விடாம எழுதி, அதுக்கு கீழே அந்த பொண்ணோட கையெழுத்தையும் வாங்கி கொடுத்துடுங்க. நோ பிராப்லம்” என்று கூறி சோம்நாத் கிளம்பினார்.

அதற்குள் அங்கே வந்த நர்ஸ்” சார், இன்னொரு ஸலைன் ஏத்தினதுக்கப்புறமா ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சு இவங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு. டாக்டரைப் போய் பாத்துட்டு பிரிஸ்க்ரிப்ஷன் வாங்கிக்கங்க சார்” என்று கூறி விட்டு சென்றாள்.

“சரிம்மா, தேங்க்ஸ்” என்று சொல்லி விட்டு மோகனா பக்கம் திரும்பி “நான் கேட்ட டீடெயில்ஸ் கொடு மோகனா, எங்களை நம்பு. வேற எதுவும் நான் சொல்லப் போனதில்லை உனக்கு” என்று சொன்னார் ஜெயசேகரன்.

“மன்னிச்சுக்கங்க ஐயா. இனிமேல் இது போல செய்ய மாட்டேன். இதை பாருங்க, இவங்கதான் என் அப்பா, அம்மா. இதுதான் நான் சொன்ன அந்த பையன். ஆதிக்கரையூர் பையன். இவரு நம்பரும் இதுலயே விஷ்வம்னு ஸ்டோர் பண்ணிருக்கேன்” என்று தன் கைபேசியைக் ஜெயசேகரனிடம் காண்பித்து மெல்லிய குரலில் பேசினாள்.

“அண்ணே, இதை” என்று ஏதோ சொல்லத் தொடங்கிய லிங்கத்தை கையமர்த்தி விட்டு, “மோகனா, ஊசி போட்ருக்காங்க. நீ ரெஸ்ட் எடு.உன் ஃபோன் மட்டும் கொடு. நான் இதை அனுப்பி என் பையன் கிட்ட பேசிட்டு அப்படியே உன்னை பெத்தவங்க கிட்டயும் பேசித் தகவல் சொல்லிட்டு வரேன். பத்திரமா ஊருக்கு உன்னை கொண்டு சேக்க வேண்டியது எங்க பொறுப்பு.” என்றார் ஜெயசேகரன்.

மிகவும் களைப்பாக இருந்த மோகனா கைபேசியை அவரிடத்தில் கொடுத்து விட்டு தூங்க ஆரம்பித்தாள்.

வெளியே வந்த லிங்கமும், ஜெயசேகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ” இப்ப என்னண்ணே செய்யப் போறீங்க” என்று கேட்டான் லிங்கம். “இரு முதல்ல விசுவைக் கூப்பிடுறேன்.” என்று மகனை அழைத்தார்.

விஸ்வேஸ்வரன் என்ற ஜெயசேகரனின் மகன் அவரது அழைப்புக்கு பதிலளித்து ” என்னப்பா இந்த நேரத்தில் கூப்டறீங்க? நார்மலா ஞாயிறு, இல்லேன்னா சாயந்திரம் வேளை இந்த மாதிரிதான் கூப்டுவீங்க. எல்லாம் ஓகே தானே அங்கே! அம்மா எப்படி இருக்காங்க? ” என்றான்.

ஜெயசேகரன் உடனே “அதெல்லாம் ஓகேதான்.போன வாரமே நீ வரேன்னு சொன்னே அப்புறம் அடுத்த மாசம் வரேன்னு மாத்திட்ட. ஆனால் இப்ப அர்ஜென்ட்டா நீ ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வரணும்னு நான் சொல்றேன். கிளம்பி வா. ஒண்ணும் பிரச்னை இல்லை. நீ பதறாம உடனே வா. வந்தா நீயே புரிஞ்சுக்க முடியும்” என்றார்.

“சரிப்பா, இன்னிக்கு நைட்டு கிளம்பி வரேன். மார்னிங் அங்கே இருப்பேன். என் பாஸ் கிட்ட அடுத்த வாரம் போறதா சொல்லிருந்தேன். அதனால பிராப்லம் ஏதும் இல்லை.காலைல அங்கே இருப்பேன்.” என்றான் விஸ்வேஸ்வரன்.

அதற்குப் பின்னர் மோகனாவின் பெற்றோர்களை அழைத்து அவள் நல்லபடியாக இருக்கிறாள் என்றும் ஜெயசேகரன் வீட்டில் இருக்கிறாள் என்றும் அவர்கள் நேரடியாக வந்தால் கையோடு அழைத்துப் போகலாம் என்று சொல்லி விட்டு, அவர்களுக்கு முகவரி அனுப்பிய பின்னர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“என்னண்ணே ரெண்டு பேருக்கும் ஃபோனைப் போட்டு வரச் சொல்லிட்டீங்க. அந்த மோகனா ஃபோன்ல நம்ம விசுவோட அவளும் சேர்ந்து நிக்கற ஃபோட்டோ இருக்கு. சம்பந்தம் பேசி முடிக்கப்போறீங்களா நாளைக்கே?” என்று வியப்புடன் கேட்டான் லிங்கம்.

” எல்லாம் நல்லதுக்குத்தான். நாளைக்கு காலைல நீ வா எங்க வீட்டுக்கு. அப்ப பேசலாம்.என் தரப்பிலேர்ந்து ஒரு மிஸ்டேக் நடந்துடுச்சு. நாளைக்கு நீயே தெரிஞ்சுப்பே.அதுவரை இந்த மோகனா கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்” என்றார் ஜெயசேகரன்.

அன்று மாலையே மோகனாவை மருத்துவமனையிலிருந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அதற்கு முன்னதாகவே மோகனா தூங்கிக்

கொண்டிருந்த போது ரஞ்சிதத்திடம் கைபேசி மூலம் விவரங்களைக் கூறி ‘ நாளைக்கு இதைப் பற்றி பேசலாம். இன்று வேண்டாம் ‘ என்றும் அறிவுறுத்தி விட்டார்.

மோகனாவை அன்புடன் வரவேற்று அவளுக்கென்று ஒதுக்கிய அறைக்கு அழைத்துப் போனாள் ரஞ்சிதம். ‘ இரு வரேன் ‘ என்று சொல்லிவிட்டு சென்றவள் காபி, ரஸ்க்குடன் திரும்ப வந்து அவளை உபசரித்தாள். மோகனாவிற்கு ரஞ்சிதத்தின் உபசரணை மிகவும் பிடித்தது.

அன்று இரவு சிறுதானிய தோசை, சட்னி இவைகளை மோகனாவுக்கு இரவுணவாக தந்துவிட்டு “நீ ரெகுலர் தோசைதான் அடிக்கடி சாப்பிடுவேன்னு நினைச்சு இப்படி சிறுதானியத்தில செஞ்சேன். சாப்பிடு.இன்னும் வேணும்னா கேளு” என்று புன்னகையுடன் சொன்னாள்.இந்த அனுபவத்தில் மோகனா தன் மனதில் ஜெயசேகரனையும், ரஞ்சிதத்தையும் மிக உயர்ந்த நிலையில் வைத்து விட்டாள். இரவு உணவை ரசித்து உண்ட மோகனா, மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு சீக்கிரமே நிம்மதியாக உறங்கிப் போனாள்.

மறுநாள் அதிகாலையில் விஸ்வேஸ்வரன் வந்து சேர்ந்தான். எப்போதும் அவனுக்கு முதல் தளத்தில் உள்ள அறைதான் பிடிக்கும்.இன்றும் அந்த அறைக்கு சென்று தன் பையை வைத்து விட்டு, உடனே கீழே வந்து “என்ன விஷயம் ப்பா? அவசரம்னீங்களே, சொல்லுங்க இப்போ!” என்றான்.

ஜெயசேகரன் “நீ ட்ராவல் பண்ணிட்டு வந்திருக்கே, கொஞ்சம் ஒன்பது மணிவரை ரெஸ்ட் எடு. அப்புறமா பேசலாம்.” என்று கூறி அவனை அறைக்கு அனுப்பினார்.

காலை எட்டரை மணிக்கே லிங்கம் தன் மனைவி புவனாவுடன் ஜெயசேகரன் வீட்டுக்கு வந்து விட்டான். ரஞ்சிதம் சூடான இட்லி, சாம்பார், மிளகாய் பொடி, காஃபி கொடுத்து அவர்களை உபசரித்த பின்னர் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது விஸ்வேஸ்வரன் வந்தான். லிங்கம், புவனா இருவரையும் பார்த்து வணக்கம் கூறிவிட்டு அவனும் காலை உணவை சாப்பிட்டான். இதற்குள் ஜெயசேகரன் உள் அறையில் சென்று, மோகனாவைப் பார்க்கச் சென்றார். அவள் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

ஜெயசேகரன் திரும்ப வந்தவுடன் பேசினார். “உங்கள் எல்லோருக்கும், குறிப்பாக விசுவுக்கும் சேர்த்து சொல்றேன். நான் ஏதோ ஒரு வேகத்தில் விசுவுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துட்டேன். அவன் என் பேச்சைத் தட்டமாட்டான்கற ஒரு நம்பிக்கைல, அதே சமயம் அவங்களுக்கும் எல்லாத்தையும் யோசிக்கற திறமை உண்டுங்கறதை மறந்துட்டு செஞ்சுட்டேன். விசு, ‘நான் ஒரு பொண்ண, கொஞ்சம் நம்ம விட வசதியான

இடம் ப்பா,அவளை விரும்பறேன். அவளுக்கும் திருமணத்துக்கு சம்மதம். ஆனால் அவங்க வீட்டில் எப்படி இதை வரவேற்பாங்கங்கறது இன்னும் புரியலப்பா ‘ அப்டின்னு ஒரு மெஸேஜ் எனக்கு அனுப்பினான். நான் “நம்ம லெவலுக்கு மேல ஒரு சம்மந்தம் ஏற்படுத்திக்கறது பின் வரும் நாளில பாதிப்புதான் வரும்னு நினைக்கிறேன். அதனால நான் உனக்கு என்ன சொல்றேன்னா அந்த விஷப் பரிட்சை எல்லாம் செய்யாமல் நமக்கு சமமா இருக்கற இடம், இல்லையா, இன்னும் ஏழைப் பட்ட குடுபத்தில சம்மந்தம் வச்சுக்கறது நல்லதுப்பா. என் அனுபவத்தில் சொல்றேன். வசதியா வாழ்ந்த அந்த பொண்ணு, நம்மள போல் மாத சம்பளத்தை நம்பற வாழ்க்கைய ரசிக்கற அளவுக்கு மனப்பக்குவம் கொண்டவளான்னு சொல்ல முடியாது விசு” அப்டின்னு எழுதினேன். விசுவுக்கு அது மனசுல நல்லா பட்டிருக்கு போல் தெரியுது. அந்த பொண்ணு கிட்டேர்ந்து ஒதுங்க ஆரம்பிச்சுட்டான் எதுவுமே சொல்லாம.அந்த பொண்ணு எவ்வளவு நல்லவளா இருக்கா, இவனை எந்த அளவுக்கு விரும்பியிருக்கா அப்டிங்கறதை எனக்கு உணர்த்த இப்படி ஒரு அனுபவத்தை விதி தந்திருக்கு” என்று நிறுத்தினார். விஷயத்தை லிங்கமும், புவனாவும் புரிந்து கொண்டு புன்னகைத்தனர்.

விஸ்வேஸ்வரன் “என்னப்பா சொல்றீங்க, எந்த அனுபவம், விதி என்ன கத்துக் கொடுத்தது? எனக்கு ஒண்ணும் புரியலே அப்பா. அம்மா, உங்களுக்கு ஏதாவது தெரியுமா, அப்பா ரொம்ப குழப்பிட்டாரு” என்று கேட்டான்.

அதற்கு ஜெயசேகரன் “நாம் என்னதான் முயற்சி செஞ்சாலும், எவ்வளவுதான் வாழ்க்கைய வேற மாதிரி எழுத நினைச்சாலும் நமக்குன்னு பிறக்கும் போதே எழுதின எழுத்து ஒண்ணு இருக்கு பாரு, தலையெழுத்து, அதான் விதியோட எழுத்து அது மட்டும் மாறாத எழுத்து. அதை மாதிரி உனக்கு ஆண்டவன் மோகனாவை முடிச்சு போட்ருக்கான்னா, அதை மாத்த நான் யார்டா விசு?” என்றார்.

” அப்பா, அந்த பொண்ணு மோகனான்னு நான் சொல்லவே இல்லையே. எப்படி உங்களுக்கு தெரியும்? என்ன ஒரே மர்மமான முறையில் பேசறீங்க?” என்று ஆச்சரியமாக கேட்டான் விசு.

கடந்த பத்து நாட்களாக நடந்தவைகளை ஜெயசேகரன், லிங்கம், ரஞ்சிதம், புவனா எல்லோரும் விசுவிடம் விவரித்தார்கள்.

“அப்பா, அவ எங்க இருக்கா இப்போ?” என்று கேட்ட நேரத்தில் ஒரு கார் வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து செல்லதுரையும், மரகதவல்லியும் இறங்கினார்கள். ஜெயசேகரன்சென்று வரவேற்று, உள்ளே அழைத்து வந்தார். உள்ளே வந்ததும், விஸ்வேஸ்வரனைப் பார்த்து “நீ எப்படி இங்கே? என்ன விஷயம்? மோகனா எங்கே?” என்று செல்லதுரை கேட்க, அவர்களை அமர வைத்து எல்லா விவரங்களையும் அவரிடமும் கூறி, விசுவுக்கே இப்போதுதான் இவைகள் தெரியும் என்பதையும் விளக்கினார் ஜெயசேகரன்.

அதற்குள் புவனாவும், ரஞ்சிதமும் சென்று, அப்போதுதான் கண் விழித்திருந்த மோகனாவை வெளிக்கூடத்திற்கு அழைத்து வந்தனர். தன் பெற்றோர்கள், விஷ்வம் இவர்களை ஒரு சேர இங்கே பார்த்தவள், ஜெயசேகரனை கேள்வி கேட்பது போல் பார்த்தாள். விசு, விஷ்வம் எனும் விஸ்வேஸ்வரன் அவள் அருகில் வந்து அனைத்தையும் கூறினான். மோகனா கண்ணீர் மல்க தன் அம்மா மரகதவல்லியிடம் தஞ்சம் அடைந்தாள்.

“என்னால்தான் இந்த தவறு நடந்தது மோகனா. நீ என்னை மன்னிச்சிடு” என்று ஜெயசேகரனும், “அவர் மேல் தப்பில்லை, நான் உங்கிட்ட ஒண்ணுமே சொல்லாம போனது என் தப்புதான்” என்று விஸ்வேஸ்வரனும், “அதெல்லாம் இல்லை, நாங்களும் இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி விஷ்வத்தை பார்த்து விவரம் கேட்ருக்கணும். அதை செய்யாம போனது எங்க தப்புதான்” என்று மோகனாவின் பெற்றோர்களும் அவரவரே பழியை அவர்கள் மீது போட்ட வண்ணம் இருந்தனர்.

இதைக் கண்ட லிங்கம் ” அதெல்லாம் முடிஞ்ச கதை. அதைப் பத்தி இனி பேச வேண்டாம்.மோகனா, நீ போய் குளிச்சு டிஃபன் சாப்டுட்டு நல்ல புது ட்ரெஸ் போட்டு ரெடியா இரு. விசு, உனக்கும் அதேதான். நான் இப்ப வெளியே போய் வெத்தலை பாக்கு பழமெல்லாம் வாங்கிட்டு வந்துடறேன். வந்தவுடனே வெத்தலை பாக்கு மாத்தி, கல்யாண தேதி குறிக்க வேண்டியதுதான். புவனா, அண்ணிக்கு வேண்டிய ஹெல்ப் பண்ணு. ” என்று கூறி வெளியே வேகமாக சென்றவனைத் தடுத்து. ஜெயசேகரன்” டேய், நானும் வரேண்டா” என்றவரைப் பார்த்து” நீங்க சம்மந்தி ஐயாவோட பேசிக்கிட்டிருங்க” என்று கூறி ஓடினான். செல்லதுரை ஜெயசேகரன் கைகளைப் பிடித்து” ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு ” என்று கூறினார்.

மோகனா ஜெயசேகரன் அருகில் வந்து” ஐயா, இல்லை, அப்பா, உங்களுக்குதான் நான் நன்றி சொல்லணும்.” என்று கூறி அவரை வணங்கினாள். கண்களில் நீர் சுரந்து வழிந்தது. அது ஆனந்தக்கண்ணீர் அன்றோ!

.

ரா.நீலமேகம் பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *