பாஞ்சான்
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 24, 2026
பார்வையிட்டோர்: 54
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பசி.
அவனுக்கு அகோரப் பசி.
மூண்டு நாட்களாய் அவனுக்கு ஆன சாப்பாடில்லை.
மூண்டு முறி அவிச்ச மரவள்ளிக் கிழுங்குதான் முந்தநாள் அவனுக்கு இராச்சாப்பாடு.
நேற்று முழுவதும் ஒரு பருக்கை சோறுதானுமில்லை.
உறவினர் வீடுகளில் மாத்திரம்தான் அவன் கை நனைப்பான்.
அவனுக்கு ஐந்தாறு நெருங்கிய உறவினர்கள்.
காலையில் எந்த உறவினர் வீட்டில் வேலை செய்கின்றானோ அந்த வீட்டில்தான் அவனுக்கு காலைச் சாப்பாடு.
மதியம் மற்றொரு சொந்தக்காரர் வீட்டில் வேலை செய்வான். அங்கு அவனுக்கு மத்தியானச் சாப்பாடு.
மாலையில் எந்த வீட்டில் வேலை செய்கின்றானோ அங்கு இராச்சாப்பாடு. அவன் சம்பளத்துக்கு வேலை செய்பவனல்ல. சாப்பாட்டுக்காகத்தான் அவன் வேலை செய்வான்.
தண்ணீர் இறைப்பு, விறகு கொத்தல், வீடுவளவு கூட்டித் துப்பரவு செய்தல், ஆடுமாடுகளுக்குத் தீன் போடுதல், கடைகண்ணிகள், சந்தைக்குப்போதல் போன்ற சில்லறை வேலைகள்தான் அவனது தினசரி கடமைகள்.
மாறிமாறி வேலை, மாறிமாறிச் சாப்பாடு.
அவனுக்கு இரண்டு சொந்த வீடுகள். ஆனால் கோயில்மடம், வாசிகசாலை விறாந்தை, சங்கக்கடை விறாந்தை போன்ற பொது இடங்களில் தான் அவனுக்கு இரவுப் படுக்கை.
அவன் தன்னுடைய சொந்த வீடுகளை விட்டு வெளியேறி இல்லையில்லை பலவந்தமாக வெளியேற்றப்பட்டு நான்கைந்து வருடங்களாகின்றன.
அவனுக்குத் தாய் தந்தை இல்லை. ஒரே ஒரு தங்கை மாத்திரம் தான். தங்கை கல்யாணம் கட்டி பத்து வருடங்களுக்கு மேலாகின்றது.
அவனும் கட்டியவன்தான். ஆனால் கல்யாணம் கட்டி ஆறு மாதங்களில் அவனது மனைவி அவனை வீட்டிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றி விட்டாள்.
அவன் கலியாணம் செல்வச் செழிப்பான தம்பர் குடும்பத்தின் வாரிசு. தம்பர் குடும்பம் அவ்வூரில் பணபலம், ஆட்பலம், காணிபூமியுள்ள நாட்டாமைக்குடும்பம். சுண்டியெடுத்த வெள்ளாளர்.
தம்பர் குடும்பத்துக்கென்று குடிமக்கள் குடும்பங்களுண்டு. கோவியன், வண்ணான், அம்பட்டன், பறையன், நளவன் போன்ற ஐந்து குடிமக்கள் குடும்பங்களுமுண்டு.
இந்த ஊரிலை எங்கட குடும்பம் மாத்திரம்தான் நாலு குடிமக்களை பரம்பரை பரம்பரையாக வைத்திருக்கிற ஒரேயொரு குடும்பமென்று அடிக்கடி பாஞ்சான் பெருமையாகக் கூறுவான்.
எங்கடை ஏழெட்டுக் குடும்பங்களைத் தவிர வேறை எந்த வீட்டிலையும் நாங்கள் தண்ணீர் செம்பெடுத்து கை அலம்ப மாட்டம் என்று பெருமையாகச் சொல்லித்திரிவான் பாஞ்சான்.
தோட்ட வேலைகளுக்கு மாத்திரம்தான் நாங்கள் நளம் பள்ளுகளைக் கூலிக்குப் பிடிப்பம்.
தேங்காய் புடுங்க, வேலி அடைக்க, செத்தவீட்டு சவம் எரிக்கிற விறகு தறிக்க மாத்திரம்தான் நாங்கள் நளங்களை எங்கட வளவுக்கை வர விடுவம் என்று பாஞ்சான் அடிக்கடி பெருமையாகச் சொல்லித் திரிவான். பாஞ்சானுடைய ஊரில்தான் பெயர்பெற்ற பிள்ளையார் கோயில் இருக்குது. பிள்ளையார் கோயில் மணியகாரர் பாஞ்சானுடைய குடும்பத்துப் பரம்பரம்பரையைச் சேர்ந்தவர்கள். பாஞ்சான் பிள்ளையார் கோயில் திருத்தொண்டு இளம் பராயத்திலிருந்தே செய்துவருகின்றான்.
பிள்ளையார் கோயில் உள்வீதி நான்கையும் கூட்டிக் கழுவுவது, பூஞ்சோலையிலுள்ள பூமரங்களுக்குத் தண்ணீர் பாச்சுவது, பூசைநேரங்களில் சட்ட விளக்குகளில் எண்ணைவிட்டு விளக்கேற்றுவது, கோயில் கண்டா மணியை அடிப்பது போன்ற திருத்தொண்டுகளைத்தான் இளம்பராயத் திலிருந்தே பாஞ்சான் செய்துவருகின்றான்.
தினசரி கோயில் பூசை முடிந்ததும் கோயில் குருக்கள் பாஞ்சானுக்கு அமுது, மோதகம், வடை, வாழைப்பழம், பிரசாதம் என்பவற்றைக் கொடுப்பார். பாஞ்சானுடைய உறவினர் குடும்பங்கள் திவசம், மாசியம், கல்யாணம் போன்ற வைபவங்கள் நடக்கும் வேளைகளில் சாப்பாட்டுப் பந்திகள் வைப்பார்கள்.
பாஞ்சான் ‘தலைப்பந்தியில்’ உட்கார்ந்தான் என்றால் மூன்றாவது பந்தி முடிவில் பாயாசம் வடை சாப்பிட்டுவிட்டுத்தான் சபையை விட்டு எழுந்து கைகழுவுவான். பாஞ்சானுக்கு சாரைக் குடல்.
சாப்பாட்டுப் பந்தி வைக்கும் வீட்டுக்காரர்கள் மூண்டு சபைகளிலும் பாஞ்சான் தொடர்ந்து இருந்து சாப்பிடுவதை பெரிதும் பொருட்படுத்த மாட்டார்கள். காரணம் சமையலுக்கான விறகு முழுவதையும் பாஞ்சான் துண்டுதுண்டாகக் கொத்தி அடுக்கிவிடுவான். சாப்பாடு முடிந்ததம் சமையல் செய்த கிடாரங்கள், அண்டாக்கள் அனைத்தையும் செம்மையாகக் கழுவி சுத்தம் செய்து விடுவான்.
பாஞ்சான் இப்படி பொறுப்பில்லாமல் சொந்த பந்தங்களுக்கு தொட்டாட்டு வேலைகள் செய்துகொண்டு திரிவது தன்குடும்பத்திற்கு கௌரவக் குறைவென்று அவனுடைய தந்தை செல்லப்பர் பலதடவை சொல்லி கண்டித்து தடுக்க முற்பட்டார். அவருடைய முயற்சி பயனளிக்கவில்லை. இவனுக்குப் பொறுப்பான வேலைகள் செய்யக் குடுத்தால் வழிக்கு வருவான் என்று முடிவுக்கு வந்தார்.
“பொடியா இண்டைக்கு சுண்ணாகம் சந்தைக்குப் போகவேணுேம்”. செல்லப்பர் மகனுக்கு கூறுகின்றார்.
“ஏனணை அப்பு”
“எங்கடை வாழையுக்கை மூண்டு வாழைக்குலையள் முத்திக் கிடக்கு”.
“அதுக்கென்னணை அப்பு”.
“வெள்ளையப்பரவையின்ர வண்டில் சுண்ணாகம் சந்தைக்குப்போகுது. அதிலை நீ எங்கடை மூண்டு வாழைக்குலையளையும் கொண்டுபோய் வித்துப்போட்டு வா”.
பாஞ்சானுக்கு தலைகால் தெரியாத புழுகம்.
“சரியணை அப்பு நான் போறன்” பாஞ்சான்.
“எழுபத்தைஞ்சு ரூபா கேட்டால் மூண்டு குலையளையும் குடு”.
“ஓமணை அப்பு”
சுண்ணாகச் சந்தைகூடி களைகட்டி விட்டது. வியாபாரம் உச்சத்தில்.
வாழைக்குலைகள் விற்பனை செய்யும் பகுதி. ஆயிரக்கணக்கான வாழைக்குலைகள் அடுக்கிவைக்கப்படடிருக்கின்றன. சில்லறை வியாபாரம் ஒருபக்கம், மொத்த விற்பனை மறுபக்கம்
பாஞ்சான் சில்லறை வியாபாரப்பகுதியில் குந்தி இருக்கின்றான். அவன்முன் மூன்று கதலி வாழைக்குலைகள்.
“மூண்டு குலையளுக்கும் அறுபது ரூபா தாறன்”. ஒரு வியாபாரி கேட்கின்றான்.
“இல்லை தரேலாது”. பாஞ்சான் மறுக்கின்றான்.
“சரி, அறுபத்திரண்டு”
“அறுபத்தைஞ்சு”
“இல்லை”. இண்டைக்கு வாழைக்குலை சரியான மலிவு”. தரகன் தந்திரமாக பாஞ்சானை மடக்கப் பார்க்கிறான்.
“தரேலாது என்றன் நீயேன் என்னைத் தொந்தரவு செய்யிறாய்? உனக்கு நான் வாழைக்குலை தரமாட்டன். போ உன்ர பாட்டிலை”. எரிச்சலுடன் கத்துகின்றான் பாஞ்சான்.
“இண்டைக்கு நீ இஞ்சை உன்ர குலையை வித்துப்பார் பாப்பம். உன்னை நான் ஒரு கை பார்த்துத் தாறன்”. தரகன் பாஞ்சானை மிரட்டிவிட்டுச் செல்கின்றான்.
“எழுபது ரூபா”. இன்னெரு வியாபாரி.
“எழுபத்திரண்டு”
“இல்லை”
“எழுபத்து மூண்டு”
“தரமாட்டன் போ”.
“எண்பது ரூபா”. வேறொரு வியாபரி.
“எண்பத்தைஞ்சு” இன்னொருவர்.
“இல்லை எண்பது ரூபா”. அடுத்த வியாபாரி.
“ஏன். ஏழுபது ரூபாய்க்கு கேளன்”. ஏளனத்துடன் பாஞ்சான் வியாபாரியை கேலி பண்ணுகின்றான்.
‘இவன் சரியான உலுத்தனாய்க்கிடக்கு. இவனிலை எங்கடை பயறு அவியாது போல கிடக்கு’. அந்த இடத்தைவிட்டகல்கின்றான் வியாபாரி. நேரம் சென்றுகொண்டிருக்கின்றது. சந்தை கலையும் நேரம் கிட்டுகிறது. ‘அறுபது ரூபா”. ஒரு வியாபாரி.
“என்ன அறுபதோ? ஏன் ஐம்பது கேளன் தாறன்”. பாஞ்சான் கேலியாய்.
“அறுபத்தைஞ்சு”. அதே வியாபாரி.
“இல்லை”.
“எழுபது”.
“தரமாட்டன்”. பாஞ்சான்.
“எழுபத்தைஞ்சு”
பாஞ்சானுக்கு நல்ல சந்தோசம்.
“எடு குலையை. காசைத் தா’.
வியாபாரி காசைக் கொடுத்துவிட்டு குலைகளின் தாரை வெட்டி அடையாள மிடுகின்றான்.
பாஞ்சான் வெற்றி வீரனைப் போல தன் தகப்பனாரின் முன்னால் நிற்கிறான். “பொடியா வந்திட்டியே? வாழைக்குலையள் மூண்டையும் வித்திட்டியே? என்ன விலை?’.
அவசர அவசரமாய்க் கேட்கின்றார்.
“அப்பு நீ சொன்னமாதிரி எழுவத்தைந்து ரூபாய்க்கு வித்தனான்”. பெருமையாய்ச் சொல்லுகிறான் பாஞ்சான்.
‘கெட்டிக்காரன் இண்டைக்குத்தான் நீ உருப்படியாய் ஒரு வேலை செய்திருக்கிறாய். இனி பொறுப்பெல்லாத்தையும் உன்னிட்டை ஒப்படைத்து விட்டு நான் நிம்மதியாய் இருப்பன்.”. தகப்பன் கூறுகின்றார்.
“அப்பு அவங்கள் தொண்ணூறு ரூபா கேட்டவங்கள் நான் குடுக்கேல்லை. நீ சொன்ன மாதிரி எழுவத்தனஞ்சு ரூபாய்க்குத்தான் குடுத்தன்”.
“எடே பாழ்படுவானே” கோபாவேசமாய் கத்தியபடியே துள்ளி எழுகின்றார். கிடுகுச் செத்தையில் செருகியிருந்த துவரங் கட்டையை எடுக்கின்றார். “எழுவத்தைஞ்சு ரூபா வந்தால் குடு எண்டு நீதானே சொன்னனி? அதுதான் குடுத்தன்”.
தகப்பனாரின் கையிலுள்ள துவரங் கம்பு பாஞ்சானுடைய முதுகைப் பதம் பார்க்கிறது. பாஞ்சான் ஓலமிட்டபடி அவருடைய பிடியிலிருந்து கடுமையாகப் போராடி தன்னை விடுவித்தக்கொண்டு தப்பி ஓடுகின்றான். இரவு நடுச்சாமம் மெதுவாய் சத்தம் செய்யாமல் வந்து வீட்டுத்திண்ணையில் படுத்திருந்தான்.
மகன் சுருண்டு படுத்திருப்பதைக் காலையில் எழுந்து பார்க்கின்றார். மகனுடைய முதுகெல்லாம் அடித்தழும்புகள்.
“என்ரை பிள்ளை பாவம். அது வேணுமெண்டு செய்ததே?. நான்தான் ஈனஇரக்கமில்லாமல் மோட்டுத்தனமாய் அடிச்சுப்போட்டன். அதுவும் தாயில்லாப் பிள்ளை”.
அவரது மனம் வெம்புகிறது.
“அதை நாங்கள் எவ்வளவு சொகுசாய் வளர்த்தம்? என்ரை அண்ணர் அம்பலவாணர் என்ரை மகனிலை சரியான வாரப்பாடு”.
“என்ரை பிள்ளை எங்கை போனாலும் கோயில் குளம், திருவிழா, கூத்துக்கள் எது எங்கை நடந்தாலும் அண்ணர் தான் அவனைக் கூட்டிச்செல்வார். விளையாட்டுச் சாமான்கள், உடுப்புக்கள் எண்டு அவன் கேட்ட எல்லாத்தையும் வாங்கிக் குடுப்பார்.”
“ஒரு நாள் மூண்டாம் வகுப்பு வாத்தியார் அவனை அடிச்சுப்போட்டார். அண்ணன் அந்த வாத்தியாரைக் கண்டபடி பேசி சண்டை பிடிச்சதோட, கோபத்திலை என்ரை மகனை பள்ளிக்குடத்துக்குப் போகாமல் மறிச்சுப் போட்டார்.
என்ர அண்ணர் கல்யாணம் கட்டேல்லை. என்ரை மகனை அவர் தன்ர சொந்த மகனாய்த்தான் வளர்த்தார். அவர் தன்ர வீடுவளவு பத்துப் பரப்பு, தோட்டக்காணி பதினாறு பரப்பு, வயல்நிலம், பனங்காணி, வாழைத்தோட்டம் எல்லாவற்றையும் என்ர மோன்ரை பேரிலை எழுதி வச்சிட்டு செத்துப் போனார்.
“என்ரை மோனுக்கும் சரியான கவலை. மூண்டு நாலு மாதங்களாய் அவன் இரவு பகலாய் பெரியப்பா பெரியப்பா எண்டு பிதற்றிக் கொண்டு திரிஞ்சான்.
“நானும் அவனைச் செல்லமாய்த்தான் வளர்த்தன். தாயில்லாப் பிள்ளை எண்டு அவனைப் பாசமாய் வளர்த்தன். விளையாட்டுச்சாமான்கள், உடுபுடைவைகள் உட்பட அவன் கேட்டதெல்லாம் தாரளமாய் வாங்கிக் கொடுத்தன். ஒருநாளும் நான் அவனை ஏசியதோ அடிச்சதோ இல்லை. ஆனா இண்டைக்கு கோவத்திலை மோட்டுத் தனமாய் அடிச்சுப்போட்டன்”.
பாஞ்சானுடைய தகப்பன் மனம்குமுறிக் கவலைப்படுகின்றார்.
பாஞ்சான் ஒரு குறையுமில்லாமல் செல்லமாய் வளர்ந்தான்.
ஓரு வேலையும் செய்யாமல் அந்தக் குறிச்சியிலுள்ள இளவட்டங்களோடை எந்த நேரமும் அலைந்து திரிந்தான். எந்த ஊரில் திருவிழா நடந்தாலும் அங்கு பாஞ்சானைக் காணலாம். நல்லுார் கந்தசாமி கோயில், வல்லிபுரக் கோயில், சன்னதி முருகன் கோயில், மாவிட்டபுர கந்தசாமி கோயில் திருவிழாக்களில் எல்லா இடங்களிலும் அவன் நிற்பான். இந்த இடங்களுக்கெல்லாம் அவன் கால்நடையாகத்தான் சென்று வருகின்றான். பாஞ்சானுக்கு நீண்ட கைகள், நீளமான கால்கள். அவன் கால்களை நீட்டி பாய்வதுபோல நடப்பான். அதனால் அவனுடைய நண்பர்கள் அவனைப் பாஞ்சான் என்றுதான் அழைப்பார்கள்.
பாஞ்சானுடைய ஊரின் வடமேற்கில் ஓதுக்கப்புறமாய் தாழ்த்தப்பட்ட சாதியினரின் குடியிருப்பு. இங்குள்ள இளவட்டங்கள் சிலர் ஒரு வாசிகசாலை யைக் கட்டினார்கள்.
பாஞ்சானின் தலைமையில் அக்குறிச்சியிலுள்ள இளசுகள் பட்டப்பகலில் நெருப்புவைத்து எரித்துச் சாம்பலாக்கினர். இரண்டாம் தடவை அங்கு வாசிக சாலையைக் கட்டிய பொழுது அதையும் எரித்துச் சாம்பலாக்கினர். காலகதியில் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நாவலடி சனசமுக வாசிகசாலை நிர்மாணிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் திறமையாக நடாத்தப்பட்டு வருகின்றது. பாஞ்சானுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் மனதிற்குள் இது பெரும் நெருடலாக இருக்கின்றது. ஆனால் அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.
பாஞ்சானுடைய தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துபோனார். எதுவித குடும்பப் பொறுப்புமில்லாமல் விட்டேத்தியாய் திரிந்த பாஞ்சானுக்கு என்ன செய்வதெனறே தெரியவில்லை
எப்போ சந்தர்ப்பம் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சகோதரியின் கணவன் செல்லையாவின் கைக்கு வீட்டு நிர்வாகம் சொத்துப் பராமரிப்பு செல்கின்றது.
பாஞ்சானுக்குக் கால்கட்டு போட்டுவிட்டு அவனுடைய சொத்து எல்லாவற்றை யும் அபகரிக்கத் திட்டமிடுகின்றார் செல்லையா வாத்தியார்.
செல்லையர் ஐஞ்சு சிறி வாத்தி. ஐந்து லட்சம் கட்டி வாத்தி வேலை எடுத்தவர்களில் இவர் முன்னோடி.
செல்லையா வாத்திக்கு படிப்பித்தலில் எள்ளளவும் அக்கறையில்லை. கலைமகள் சனசமூக நிலைய தலைவர் பதவி, பலநோக்குக் கூட்டுறவுச் சங்க தலைவர் பதவி, ஐக்கிய நாணய சங்க செயலாளர் பதவிபோன்ற பல பொது ஸ்தாபனங்களின் தலைமையைக் கைப்பற்றி அதிகாரத்தை முழுமையாகத் தன்கையில் வைத்துக்கொண்டு பணமோசடிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
தற்பொழுது பிரதேச சபைத் தலைவர் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார் ஐஞ்சு சிறி வாத்தி.
பாஞ்சானுடைய அனைத்துச் சொத்துக்களையும் கையகப்படுத்துவதற்கு நொத்தாரிசு சிற்றம்பலத்தின் உதவியை நாடுகின்றார். நொத்தாரிசின் கிளாக்கர் நொண்டிக்கால் முருகேசன். கள்ள உறுதி எழுதி நொத்தாரிசின் உதவியோடு உறுதியைப் பதிவு செய்வதற்கு கிடைக்கும் கொமிசனில் நொண்டிக்காலுக்கும் கணிசமான பங்கை கையகப்படுத்தி வருகின்றார்.
பாஞ்சானுக்கு ஆசை வார்த்தை கூறி அவனுடைய சொத்தெல்லாவற்றையும் பராமரிக்கும் பொறுப்பை எடுப்பதாகக் கூறி, முருகேசரின் உதவியுடன் இரகசியமாகக் கள்ள உறுதி எழுதி அதைக் கச்சேரியில் பதிவு செய்து பாஞ்சானின் சொத்துக்கள் எல்லாவற்றிற்கும் ஏக உரிமையாளராகி விட்டார். விபரம் எதுவும் தெரியாமல்தான் பாஞ்சானும் உறுதியில் கையொப்பமிட்டான். காலம் செல்லத்தான் இந்த விசயம் அம்பலத்துக்கு வந்தது. உறவினர் களுக்கும் ஊரவர்களுக்கும் தெரியவந்தததும் செல்லையனைத் திட்டித் தீர்த்ததேயொழிய அவனை அவர்களால் ஒன்றும் செய்யமுடிய வில்லை. பாஞ்சானின் சொத்துக்கள் அனைத்தும் சட்டபூர்வமாக அவனுடைய சகோதரியினுடையதாக மாறி ஆறு மாதங்களில் அவன் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றான்.
பாஞ்சானின் உறவினர்களும் அவ்வூரிலுள்ள பெரிய மனிதர்களும் அவனுக்காக அனுதாபப்படத்தான் செய்தனர். ஆனால் வெளிப்படையாக செல்லையரை எதிர்த்து எதுவும் செய்ய முன்வரவில்லை. காரணம் அவரது பணபலம், ஆட்பலம், அதிகாரபலம்.
ஊரில் பெரும் பிரமுகராகிவிட்ட செல்லையா வாத்திக்கு பாஞ்சான் ஊரிலிருப்பது அவமானமாகப் பட்டது. பாஞ்சானின் உறவினர்களை அணுகுகின்றார்.
பாஞ்சானுக்கு வயிற்றிலடி.
பாஞ்சானுக்கு இரகசியமாக உணவு கொடுத்த உறவினர்களை நேரடியாக மிரட்டுகின்றார் செல்லையா வாத்தியார்.
நேற்றிலிருந்து பாஞ்சானுக்கு வேலையுமில்லை சாப்பாடுமில்லை. கோயில் குருக்கள் கூட மணியகாரனின் மிரட்டலினால் முந்த நாளையிலிருந்து பாஞ்சானுக்கு பிரசாதம் கொடுக்கவில்லை. அவர் பாஞ்சானுடைய அவல நிலையை எண்ணி பெரும் கவலை கொள்கின்றார்.
பாஞ்சான் கோயில் கிணற்றில் நன்றாகக் குளிக்கின்றான். வயிறு நிறைய தண்ணீரைக் குடித்துவிட்டு மடத்தில் சாய்கின்றான். நல்ல நித்திரை.
மாலை ஆறு மணியளவில் பாஞ்சான் நித்திரைவிட்டு எழுகின்றான். வயிறில் பசித் தீ.
“இப்பென்ன செய்ய?’.
பாஞ்சானின் மனதில் கேள்வி. நாவலடி சனசமுக நிலையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு. விழாக் கொண்டாட்டம் முடிவுக்கு வர இருக்கின்றது. நாவலடிச் சனசமுக நிலையம் பிள்ளையார் கோவிலிலிருந்து கல்லெறி துாரத்தில்.
சனசமுகநிலைய விழாவில் என்ன நடக்கின்றது என்று அறிவதற்கு பாஞ்சான் வருகின்றான்.
இப்பொழுது எல்லாருக்கும் சிற்றுண்டி வழங்கப்படும்”. ஒலிபெருக்கியில் கூறப்படுகிறது.
கிராமசபைத் தலைவர் செல்லையரும் நான்கு உயர் வெள்ளாளச் சாதிப் பிரமுகர்களும் சனசமுக நிலைய மண்டபத்திலிருந்துவெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.
கிராம சபையின் நான்காம் வட்டார உறுப்பினர் மாணிக்கவாசகர், சரஸ்வதி மகாவித்தியாலய அதிபர் சண்முகசுந்தரம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்க செயலாளர் சுந்தரமூர்த்தி, ஐக்கிய நாணய சங்கப் பொருளாளர் விநாயகமூர்த்தி ஆகிய சுண்டி எடுத்த வெள்ளாளப் பிரமுகர்கள் சனசமுக நிலைய மண்டபத்திலிருந்து செல்லையருடன் வெளியே வந்துகொண்டிருக் கின்றனர்.
பாஞ்சான் மண்டபத்தை நோக்கி வந்துகொண்டீருக்கின்றான்.
“எங்கையடா போறாய்?’.
பாஞ்சானின் மைத்துனர் கேட்கின்றார்.
பாஞ்சான் பதிலேதும் கூறாமல் நிதானமாய் நடந்துகொண்டிருக்கின்றான். நில்லடா”.
கிராமத்தலைவர் செல்லத்துரையர் பாஞ்சானுடைய கையைப் பிடித்து இழுக்கின்றார்.
“விடடா என் கையை’
உரத்துக்கத்தியபடியே உதறித் தன்கையை விடுவிக்கிறான் பாஞ்சான். மைத்துனர் செல்லையர் அவனைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றார். ரௌத்திரமூர்த்தியாய் எரித்து விடுவதுபோல செலலையரை பாஞ்சான் பார்க்கின்றான்.
திகைத்தவராய் நிற்கின்றார் தலைவர் செல்லத்துரையர்.
அங்கு கூட நின்றவர்கள் இருவரையும் அதிர்ந்துபோய் பார்க்கின்றனர்.
பாஞ்சான் மண்டபத்திற்குள் நிதானமாகச் செல்கின்றான்.
– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பழமொழியாம் பழமொழி..!
வளர்கவி
August 28, 2026
ஒற்றைகால் காக்கைக்கு ஒரேயொரு கால்
இடலாக்குடி ஹஸன்
August 28, 2026
அலையரசி!
மா.சித்திவினாயகம்
August 28, 2026