காத்திருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 24, 2026
பார்வையிட்டோர்: 47 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“போய் வா மகன். பத்திரமாய் போய்வா”. 

வழியனுப்பி வைக்கின்றாள் செல்லம்மா. 

மகன் தவபாலன்மீது தாய் செல்லம்மாவிற்கு சொல்லொணாப் பற்று, பாசம். 

தவமாய் தவமிருந்து மகன் தவபாலனைப் பெற்றவளல்லவா செல்லம். 

ஐந்து பெண்பிள்ளைகளைப் பெற்றபின். 

ஆறு நாட்கள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் குடிக்காமல் கந்தசட்டி விரதம் தொடர்ந்து ஐந்து வருடங்களாய் பிடித்து கந்தன்ரை கருணையால் தவபாலனைப் பெற்றவளல்லவா செல்லம். 

மகன் தவபாலனைப் படிப்பில் சாதனை வீரனாய்ப் பார்க்க பேராவல் செல்லம்மாவிற்கு. 

அன்புச் சகோதரிகள் ஐவரும் தம்பி தவபாலன் மீது சொல்லொணாப் பாசம். 

அன்புச் சகோதரிகள் ஐவருக்கும் தவத்தைப் பாசத்துடன் வழியனுப்பி வைக்கின்றனர். 

தவபாலனின் தந்தை தலைசிறந்த சிற்ப ஆசாரி. 

ஆசாரியார் செல்லத்துரையர் தேர் செய்வதில் தலைசிறந்ததோர் சிற்பி. யாழ் பிரதேசத்திலுள்ள ஐந்தாறு சித்திரத்தேர்கள் செய்து பெரும் புகழீட்டியவர், செல்வாக்குள்ளவர். 

இலந்தைப்பழம் போன்ற பேரழகி செல்லம்மா. ஆசாரியார் செல்லத்துரையின் அன்பு மனவிை. செல்லத்துரை தம்பதியருக்கு ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து பெண்குழந்தைகள். 

தங்களுக்கு கொள்ளி போட ஒரேயொரு மகன் தேவையெண்டு வேண்டாத தெய்வங்களில்லை, பிடிக்காத விரதங்களில்லை. 

ஐந்து வருடங்கள் தொடர்ந்து ஆறு நாட்களும் தண்ணீர்கூடக் குடிக்காமல் கந்தசஷ்டி உபவாசமிருந்து பெற்றவர்களல்லவா புதல்வன் தவபாலனை. 

தவம் தங்களுடன்தான் இரவில் நித்திரை கொள்ளவேண்டும் என்று ஐந்து சகோதரிகளும் அடம்பிடிப்பு. தவத்தை யார் குளிப்பாட்டுவது, யார் சாப்பாடு தீத்துவது என்ற போட்டி அவர்களுக்கு. 

தந்தை செல்லத்துரையார் ஐந்தாம் வகுப்புவரை தன் தோளில் பாடசாலைக்கு துாக்கிச் செல்வார். பாடசாலைக்குச் சென்ற தன் தவப்புதல்வன் எப்போ வீடுதிரும்புவான் என்று வழிமேல்விழிவைத்துக் காத்திருப்பாள் செல்லம்மா. 

தவபாலன் படிப்பில் சாதனையாளன். அவனுடைய ஆசிரியர்கள் அவன்மீது அளவுகடந்த கரிசனை. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் திறமைச்சித்தி பெற்ற மூன்று மாணவர்களில் முதல்வன் தவபாலன். பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை தேடித்தந்த தவபாலனை ஆசிரியர்களும் ஊர்மக்களும் பாராட்டிக் கௌரவித்தனர். 

விளையாட்டுத்துறையிலும் தவபாலன் சாதனையாளன் தடகளப் போட்டியிலும், உயரம் பாய்தல் போட்டியிலும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தவபாலன் முதலாம் இடத்தைத் தட்டிக்கொண்டு பெருமை தேடியுள்ளான். 

பாடசாலை இல்லாத நாட்களில் தவபாலன் தந்தையாருடன் தேர் வேலை நடக்கும் கோவில் தலங்களுக்குச் செல்வான். தேரிலுள்ள சிற்பங்களை அவன் சிருஷ்டித்திறனுடன் வரைவான். 

மகனுடைய சிருஷ்டித்திறனையும், படைப்பாற்றலையும் பார்த்து தகப்பன் திகைப்படைவார். 

ஏ.எல்.தேர்வில் தவபாலன் நான்கு பாடங்களிலும் ‘ஏ’ எடுத்தான் ஆசிரியர்களினதும், பெற்றோரினதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அவர்களது பாராட்டுக்களையும் ஆசியையும் பெற்று சாதனையாளனானான். 

கணிதவியலில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு தவபாலன் தனது மூன்று நண்பாகளுடன் யாழ் நகரிலுள்ள ஒரு பிரசித்தி பெற்ற உயர்கல்வி நிலையத்திற்கு கல்விகற்கச் சென்று வருகின்றான். 

இன்றும் தவபாலன் கல்வி நிலையத்திற்கு புறப்படுகின்றான். 

“மகனே தவம் அவதானமாய் சென்றுவா”. 

அன்புச் செல்வத்தை வழியனுப்பி வைக்கின்றனர், அன்புத் தாய் செல்லம்மாவும், தந்தை செல்லத்துரையரும், ஐந்நு சகோதரிகளும். குடாநாட்டில் யுத்தம் உக்கிரம். 

குண்டுத் தாக்குதல்கள், ஷெல் அடிகள், சுற்றி வளைப்புக்கள் தேடுதல்கள், கைதுகள் சர்வசாதாரணம். 

யாழ் மக்கள் பழக்கப்பட்டு விட்டனர். யுத்தக் காற்றைச் சுவாசித்தபடியே பதற்ற நிலையிலும் மக்கள் தங்கள் நாளாந்த வேலைகளை செய்த வண்ணமேயிருக்கின்றனர். மாணவர்களும் பாடசாலைகளுக்கும், தனியார் கல்விநிலையங்களுக்கும் சென்று கல்வி கற்று வருகின்றனர். 

“மகனே அவதானமாய்ப் போய்வா”. 

தவபாலனும் அவனது நண்பர்கள் மூவரும் யாழ் நகரத்திலுள்ள பெயர்பெற்ற தனியார் கல்வி நிலையத்திற்குச் செல்கின்றனர். 

யாழ் ஆரியகுளம், நாற்சந்தி. 

சந்தியின் வடமேற்குப் பக்கமாய் புகழ்பெற்ற நாகவிகாரை. விகாரைக்கு எதிர்ப்புறமாய் இராணுவ முகாமும், சோதனைச் சாவடியும். 

பகலில் சோதனைச் சாவடியில் கடுமையான உடல் சோதனை. 

குறிப்பாக மாணவ மாணவிகளும், இளைஞர்களும் கடும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சிலர் தடுத்து வைக்கப்படுவர் 

பகலில் சோதனையும் கைதும். இரவில் சித்திரவதை, கூக்குரல், மரண அவஸ்த்தை அலறல், மரணிப்பு. 

இராணுவமுகாமுக்கு எதிராயுள்ள பிரமாண்டமன புத்தபகவான் சிலை கண்மூடித் தியானிப்பில். 

சோதனைச் சாவடியிலும். இராணுவமுகாமிலும் நடைபெறுகின்ற அக்கிரமங்களையும், அட்டூழியங்களையும் பார்க்கக்கூடாது என்ற தோரணையில் புத்தபகவான் கண்மூடித் தியானிப்பில் இருக்கின்றாரோ?. அன்று தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுகொண்டிருக்கின்ற தவபாலனையும் அவனது சகாக்கள் மூவரையும் ஆரியகுளச் சந்தியிலுள்ள சோதனைச் சாவடியில் தடுத்துவைக்கப்பட்டு உடற்சோதனைகு உட்படுத்தப் படுகின்றனர். 

காலை எட்டு மணிக்கு தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்ட நான்கு மாணவர்களும், இரவாகியும் அடுத்தநாளும், மாதங்களாகியும், பல வருடங்களாகியும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வரவேயில்லை. 

மகனே போய்வா என்று வழியனுப்பிவைத்த தாய்தந்தையர், அன்புச் சகோதரிகள் அனைவரும் தவபாலனின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர். தவபாலனின் தகப்பனார் செல்லத்துரையர் தனது அன்பு மகனைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலையில் தீராத நோயாளியாகி இறுதியில் தன் அன்புச் செல்வத்தைப் பார்க்காமலே இவ்வுலகை விட்டுச் சென்று விட்டார். 

தாயார் புத்தி பேதலித்து தான் ஈன்ற தவப்புதல்வனைப் பார்க்கமுடியாத சடமாய் இருக்கின்றாள். 

ஐந்து சகோதரிகளும் கன்னி கலையாமலே கிழமாகிவிட்டனர். தவபாலனும் மூன்று நண்பர்களும் எப்போ தங்களது வீடுகளுக்குத் திரும்புவார்கள்? 

தர்மிஸ்டரும் போய்விட்டார். 

சிந்தனையாளரும் வெற்றியாளராய் வந்து போய்விட்டார். 

நல்லாட்சியாளரும் இப்போ வந்துள்ளார். 

காணாமல் போன தவபாலனும் மூன்று நண்பர்களும் இனியாவது தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருவார்களா?. 

புத்தங் சரணம் கச்சாமி! 

– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *