கொட்டு மேளம்
கதையாசிரியர்: தி.ஜானகிராமன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 12, 2026
பார்வையிட்டோர்: 152
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டாக்டர் வரும்போது ஒன்பதுமணிக்குமேல் ஆகிவிட் டது, கம்பவுண்டரின் முகத்தைப் பார்த்தார்.
“கல்யாணம் பண்ணிக்கப் போறவன் கடைக்குப் போனா, நேரந்தான் ஆவுது” என்றார் “என்ன தபாலா, மேஜைமேலே?” என்று கேட்டார்.
“ஆமாம், இன்னிக்கு மெயில் நானூறு நிமிஷம் லேட்டாம்.”
“நல்ல வேளை! நானூறு வருஷம்னு சொல்லாம இருந் தியே… அட ! கர்னல் சுந்தர தாண்டவனா!…ஏய் பாத்தி யாடா பத்திரிகையை? கர்னல் சுந்தரதாண்டவன் அனுப் பிச்சிருக்காரு. இவர் யார் தெரியுமா? எங்க அண்ணிக்கு அத்தை மகன். என்னைவிட ஒருவருஷம் சின்னவரு, மகளுக் குக் கல்யாணம் பண்றாராம். மருமவனும் லேசுப்பட்டவர் இல்லை; சப் கலெக்டர்; நீயும் நானும் இருக்கமே, அம்பது ரூபா சம்பளத்துக்கு நீ எங்கிட்டச் சேவகம் பண்ணுறே. நான் ஜெனரல் ஆஸ்பத்திரியும் இருபத்துமூணு டாக்டரும் இருக்கிற இந்த ஊரிலே இருநூறு ரூபாய்க்கு மோளம் அடிக்கிறேன். இவனைப் பார்த்தியா? கர்னல் ஆயிட் டான்…நீ ஏண்டா நிக்கறே? என் பேச்சைக் கேட்டுக் கிட்டு நின்னா, வயிறு ரொம்பிடுமா? போயிட்டு வா.”
புன் சிரிப்புச் சிரித்துக்கொண்டே ஜீவரத்தினம் போய்விட்டான்.
டாக்டர் உட்கார்ந்துவிட்டார். அவருடைய உற்சா கத்தில் பனி படர்ந்துவிட்டது. வரிசை வரிசையாக வந்த தோல்விகளின் ஏக்கம் அவரை அழுத்திற்று. அவரோடு படித்தவர்கள் அவரைப்போலச் சாண் ஏறி முழம் சறுக்காமல் முழம் முழமாக ஏறிவிட்டார்கள். அவரைச் சறுக்கி விட்டது எது என்று புரியவில்லை. சகபாடிகளின் முகங்களும் மலர்ச்சிகளும் அதிகாரமும் மோட்டர்களும் அவர் கண்முள் ஊர்ந்துகொண்டிருந்தன.
“என்ன டாக்டர் சார், திரும்பியே பாக்கமாட்டேங்க போல் இருக்கே.”
“அட, பார்வதியா! நீ எப்ப வந்தே?”
“நான் வந்து ரெண்டு நிமிஷமாச்சு. நீங்க திரும்பிப் பாக்கற வழியாயில்லே. கூப்பிட்டு விட்டேன்?”
“ஒண்ணும் இல்லே. என்னமோ யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.”
டாக்டர் முகம் சுண்டிக் கிடந்தது.
“முன்னுக்கு வரது எப்பன்னு யோசிச்சுக்கிட்டிருந் தேன்” என்று விளக்கினார்.
“வழி கிடைச்சுதா?”
“இன்னும் கிடைக்கவில்லை.”
கொட்டு மேளச் சத்தம் கேட்டது. வெறும் மேளச் சத்தம் அல்ல. நாயனக்காரன் என்ன வாசிக்கிறான் என்று புரியவில்லை. டடிம் டகு டகு, டடிம் டகு டகு என்று ஒரே சொல்லைத் திருப்பித் திருப்பி நாலைந்து தவுல் காரர்கள் சேர்ந்து அடித்துப் பிளந்துகொண்டு வந்தார்கள். தெருக் கோடியிலிருந்து டாக்டர் வீட்டு வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது சத்தம்.
டாக்டர் வீடு நல்ல ‘ஷகரில்’ இருந்தது. தெருவின் மேலக்கோடி வீடு அது. வாசற்படி இறங்கி, இரண்டடி மேற்கே நடந்தால் ராஜ வீதி, தெருவைப் பார்த்துக் கொண்டு வைகுண்ட நாதர் கோயில் கொண்டிருந்தார். பெருமாள் கொஞ்சம் பெரிய புள்ளி. முந்நூறு வேலி நிலம்,மூன்று நான்கு லக்ஷத்திற்கு நகைகள், இரண்டு பெரிய பிராகாரங்கள், வெள்ளி வாகனங்கள், தங்கத்தில் கருடவாகனம் – இவ்வளவு சம்பிரமங்களும் உண்டு. ஆறு கால பூஜை அவருக்கு நடந்ததில் ஆச்சரியம் இல்லை. நாக ஸ்வர வித்தைக்கே பிரமாணமாக விளங்கின கிருஷ்ணன், கோயில் மேளக்காரன். ஆறுகால பூஜைக்கும் அவன்தான் சேவகம் செய்வான். நாத வெள்ளமாகப் பொழிவான். பொழுது புலருவதற்கு முன்னால் அவன் வாசிக்கிற பெள்ளி ராகத்தையும் மலய மாருதத்தையும் கேட்டுக் கொண்டுதான் டாக்டர் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். மறுபடியும் ஒன்பது மணி பூஜை, உச்சிக் காலம், மாலை, இரண்டாம் காலம், அர்த்த ஜாமம்- எல்லா வேளைகளிலும் காலநியதியை ஒட்டி ராகங்களில் சஞ்சரித் துக்கொண் டிருப்பான். கல்யாண மண்டபத்தின் எதி ரொலியில் அந்தச்சங்கீதம் விம்மி வளர்ந்து, ஆகாய வெளி யெல்லாம் முழங்கும். மாலை வேளையில் கோயில் நகராக் காரன், மான்யத்திற்கு வஞ்சனை பண்ணிவிடாமல் அரை மணி நேரம் கெத்துவைத்து, ஊரையே கிடுகிடுக்க அடித்து விடுவான்.
டாக்டர் இருக்கிற தெருராஜவீதி நான்கிற்கும் மைய மானது. மேல வீதியையும் கீழ வீதியையும் இணைக்கும் வீதி அது. கல்யாண ஊர்வலங்கள் நாலு வீதியும் சுற்றக் கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. நாலு வீதி ஊர்வலம் வைகுண்டநாதருடைய தனி உரிமை. மனிதன், மனிதன்தான் என்று இடித்துக் காட்டுவதற்காக. கல் யாண ஊர்வலங்கள் நாலு வீதியையும் சுற்றாமல் டாக்டர் இருக்கிற மைய வீதிவழியாகப் போநவேண்டும் என்று வரையறை செய்து வைத்திருந்தார்கள். ஆக, நாலு வீதி யில் எந்த முடுக்கில் கல்யாணம் நடந்தாலும், அந்த ஊர் வலங்கள் டாக்டர் வீட்டு வாசலை மிதித்துத்தான் ஆக வேண்டும். ஊர் பெரிய ஊர். வருஷத்திற்கு ஐம்பது கல் யாணம் என்பது குறைந்த கணக்கு.
டாக்டருக்குக் கொட்டுமேளம் மூச்சுக் காற்றாக மாறி விட்டது. நாதக்கடலில் அவருடைய உள்ளம் ஆறு கால மும் முழுகிக் கிடந்தது. மற்ற வேளைகளில் நாதவெள்ளம் இல்லாவிட்டாலும் கொட்டு மேளமாவது அவர் காதை அறைந்துகொண் டிருக்கும். அவர் காது காய்ச்சுப் போய் விட்டது. கொட்டு மேளம் இல்லாவிட்டால் அவருக்கு வேலை ஓடுவதுகூடச் சந்தேகந்தான்;
திடீரென்று அந்தத் தவுல் சத்தத்துக் கிடையே ‘ஜே ஜே!” என்று கோஷம் எழுந்தது. டாக்டர் அசைந்து கொடுத்தார்.
“பார்வதி? அது என்ன சத்தம்? வேல் வேலா, ஜேஜேயா?”
பார்வதி உற்றுக் கேட்டாள். இரண்டுபேரும் மூச்சை அடக்கி மனத்தைச் செலுத்தினார்கள். புரியவில்லை.
“யாருக்கு ஜயகோஷம்? முருகனுக்கா. மனுஷனுக்கா?”
“இன்னிக்கிக் கிருத்திகைகூட இல்லையே! கிருத்திகை யாயிருந்தாலும் ராத்திரியா காவடி தூக்குவார்கள்?”
“ஸ்வாமி புறப்பாடோ என்னவோ?”
“அதுக்கு இத்தனை தவுல் என்னாத்துக்காம்?”
“அதுவும் சரிதான்!”
“இதைக் கண்டுபிடிக்க ஒரே வழிதான் தோணுது.”
“நானும் அதுதான் நெனச்சேன். வா.” – இருவரும் எழுந்து வாசலுக்குப் போனார்கள்.
தெருப்பாதியில் காஸ் விளக்குகள் வரிசையும் கும்ப லுமாக நகர்ந்து வந்துகொண்டிருந்தன. இருபது கஜத்துக்கு முன்னால், நாலு விளக்கை வைத்துக்கொண்டு, பொய்க்கால் குதிரை ஜோடி, டம் டிம் டகுடகு என்று திறுக்கட்டி ஒலித்த ஒற்றைக் கொட்டுக்கு இசைவாக ஆடிக்கொண்டிருந்தது.
“என்னாப்பா சத்தம்?” என்று வாசலில் ஓர் ஆளைப் பார்த்துக் கேட்டார் டாக்டர்
“எலக்ஸனுங்க!”
“ஆமாம், நம்ம விறகுவாடி மாரியப்பபிள்ளை ஜயிச்சுப்பிட்டாரு.”
“மாரியப்பபிள்ளை ஜயிச்சுப்பிட்டாரா'”
“ஆமாங்க.”
“போடு சக்கை!”
பொய்க்கால் ருதிரை போனதும், கொட்டு மேளம் வாசலுக்கு வந்துவிட்டது. நாயனம் நாலு ஜோடி; தவுல்காரர்கள் எட்டுப் பேர். அதே டடிம் டகுவைப் பிளந்து கொண்டே வந்தார்கள்.
வாத்தியக்காரர்களுக்குப் பின்னால் மாரியப்பருக்கு ஜே! மாரியப்பருக்கு ஜே!” என்று ஒரு பெரிய கூட்டம் கோஷம் போட்டுக்கொண்டு வந்தது. மாரியப்பபிள்ளை மோட்டாரில் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தைப் பூ மாலைக்கிடையே தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. புஸ்த் மீசை. ஜவ்வாதுப் பொட்டு. கையைப் பார்த்தால் ஜிப்பா தான் போட்டுக்கொண்டிருப்பார் போல் இருந்தது. டாக்டரைப் பார்த்து, ஒரு கும்பிடு போட்டார் மாரியப்பர். டாக்டர் அதைவிடப் பெரிய கும்பிடாகப் போட்டபோது இரண்டுகை நீளம் கிண்டலும் அதிலும் இருந்ததை மாரி யப்பர் அந்த நிலையில் கவனிக்கவில்லை.
ஊர்வலம், வந்த சுருக்கில் தேய்ந்துவிட்டது. காஸ் விளக்குகள் மறைந்ததும், இருள் சற்று அதிகமாகவே இருந்தது. அந்த இருளில் இன்னொரு கூட்டம் கூச்சல் போட்டுக் கொண்டே வந்தது.
முப்பது நாற்பது வாண்டுப் பயல்களும், சோதாக் களுமாகக் கூடிக்கொண்டு, “ஐராவதத்துக்கு ஜே! தியாகி ஐராவதத்துக்கு ஜே!” என்று கத்திக்கொண்டு வந்தார் கள். டாக்டர் வீட்டு, வாசல் விளக்கொளிக்கு முன் வந்த தும். “இருங்கடா, டாக்டர் ஐயாகிட்ட ரெண்டு வார்த்தை பேசிக்கிட்டு வரேன்” என்று பித்துக்கொளி ஐராவதம் நின்றான். கழுத்தில் ஏழெட்டு அரளிப்பூ மாலைகள். மார்பு நிறையச் சந்தனம். ஐராவதம் சிரித்தான்.
“டாக்டர் சார், கும்பிடறேன்!”
“என்ன, முதலியாரா, வாங்க.”
“அரளிப்பூ மாலையையும் சந்தனத்தையும் கண்டு, என்னவோ ஏதோன்னு பயந்திடாதிங்க. விரலுக்குத் தகுந்த வீக்கம். அவ்வளவுதான்.”
“ஒண்ணும் புரியல்லியே!”
”என்ன புரியலே? தியாகி ஐராவதத்துக்கு ஜேன்னு கூப்பாடு போடறாங்களேன்னு யோசிக்கிறீங்களா? ஆமாங்க டாக்டர், நான் மூளையைத் தியாகம் பண்ணி விட்டேன். மாரியப்பபிள்ளையைப் பாருங்க; என் னவோ பார்லிமென்டுக்குச் செலவு பண்றாப்போலப் பண் ணிக்கிட்டு வராரு. துக்கினியூண்டு ஊர்லே, துக்கினியூண்டு ஏழாவது வார்டுக்கு மெம்பர். எனக்குப் பாருங்க. செலவே இல்லாம எல்லாம் ஆயிடிச்சு. இந்த அரளிப் பூ மாலையெல்லாம் சத்தியமாத் தம்பிங்க வாங்கிப் போட் டதுதான். ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தெட்டாம் வருஷத்திலே மாரியப்பபிள்ளை கடையிலே நாலு மணு விறகு வாங்கினேன். ‘மீதி மூணரையணா சில்லறை இல்லே, அப்புறம் வா, தாரேன்’னாரு. இன்னம் கொடுக் கப் போறாரு. நான் அந்தக் கோவத்துனாலே அவருக்கு எதிராக நிக்கலே. உள்ளதைச் சொல்லிப்பிடணும் பாருங்க. சரி, நாளியாச்சு, நான் வரட்டுங்களா?”
“செய்யுங்க. எலெக்ஷனானதுக்குக் காபி கீபி ஒண்ணும் கிடையாதா?”
“அது நீங்கல்ல வாங்கிக் கொடுக்கணும்?” என்று கழுத்தை ஒடித்து நீட்டிக் கண்ணைச் சிமிட்டுவிட்டு, நகர்ந்தான் ஐராவதம்.
ஐராவதம் உண்மையாகவே பைத்தியமா என்று டாக்டருக்குச் சந்தேகம் வந்துவிட்டது.
உள்ளே வந்ததும், “பார்வதி, அதோ அந்தப் பீரோவைத் திறந்து, அடித் தட்டிலே சிகப்பாச் சின்னதா ஒரு நோட்டு இருக்கும். அதை எடேன்” என்று சாவியைக் கொடுத்தார்.
“பதினெட்டாவது பக்கத்தைப் புரட்டு, என்ன எழுதியிருக்கு?”
“மாரியப்பபிள்ளை – முந்நூறு ரூபாய்னு போட்டிருக்கு.”
“போட்டிருக்கறது என்ன? நான் எழுதினதுதான் அது. இந்த மாரியப்பன் என்னோட வாசிச்சவன். அஞ் சாங் கிளாஸ்மட்டும் வாசிச்சு விட்டுட்டான். நான் டாக் டர்னு போர்டு போட்டுத் தொழில் பண்ண ஆரம்பிச்சதுலேருந்து எங்கிட்டத்தான் வைத்தியம் பார்த்துக்கிட்டு வரான். ஆனா ஆச்சரியத்தைப் பாரு. காலணாக் காசு எனக்குக் கொடுக்கணும்னு அவனுக்குத் தோணினதே இல்லே.”
“ஏன் கொடுக்கலே?”
“வைகுண்டநாதரைத்தான் கேக்கணும்!”
“எலக்ஷன்லே ஏகச் செலவு பண்ணியிருக்கிறாரே.”
“எனக்குக் கொடுக்கத் தோணலை. அவ்வளவுதான்.”
“நீங்க முந்நூறு ரூவா ஆகிறவரையிலே அவரைச் சும்மாவா விட்டு வச்சிருந்தீங்க!”
“இன்னமும் சும்மாத்தான் விடப்போகிறேன்.'”
“எதுக்காக?”
“பார்வதி, நான் பணம் வரலைங்கிற கோபத்தினாலே சொல்லலே. மனிதன் எப்பேர்ப்பட்டவன்னு சொல்றதுக்காகத்தான் இதை எடுத்துக் காண்பிச்சேன்.”
“நீங்க கேக்கலையா?”
“பில் ஒழுங்கா அனுப்பிக்கறேன்.”
“இப்பவும் நீங்கதானே டாக்டரு அவருக்கு?”
“இப்பவும் நான்தான்.”
“அவர் வரபோது வாயைத் திறந்து கேட்கக் கூடாதா?”
“பில் அனுப்பிச்சாச்சு. வாயை வேறே திறக்கணுமா?”
“கடன், கேக்காம போக்சுன்னு வசனம் சொல்லு வாங்க. சில ஆளுங்க, கேட்டால் ஒழியக் கொடுக்கமாட்டாங்க.”
“மாரியப்பன் கேட்டாலும் கொடுக்கப்போகிறதில்லை. சாதாரணமாக டாக்டர் என்றால் இந்தக் காலத்திலே மதிப்பு அதிகந்தான். எந்த உயிரையும் கூண்டைவிட்டுப் போயிடாமல் பிடித்து நிறுத்துகிறவன் டாக்டர். சாமானிய மனிதர்களுக்கு இல்லாத சக்தியெல்லாம் அவருக்கு உண்டு. ரொம்பச் சின்ன டாக்டருக்குக்கூட இந்தப் பெருமை உண்டு. அப்படிப்பட்ட ஒரு டாக்டரை முந் நூத்துச் சொச்ச ரூபாய்க்கு நாமம் சாத்தலாம் என்று மாரியப்பன் முடிவு கட்டிவிட்டான். மாரியப்பன் என்ன கருமியா! ஐராவதம் சொன்னாப்போலே, துக்கினியூண்டு ஊரிலே துக்கினியூண்டு ஏழாவது வார்டுக்குப் பார்லி மென்டுக்குச் செலவு பண்றாப்போலப் பண்ணிவிட்டான். என்னைக் கண்டால் கொடுக்கவேண்டாம் என்று தோன்றி யிருக்கிறது அவனுக்கு. அவ்வளவுதான்.”
“உங்களைக் கண்டால் மாத்திரம் அப்படித் தோணுவானேன் அவருக்கு?”
“பார்வதி, அதிருஷ்டம் என்று சொல்லுகிறார்களே; அந்த வார்த்தை பல பேருக்குப் பிடிக்கிறதில்லை. சோம் பேறிகளின் மந்திரம் என்று நினைக்கிறார்கள். சோம்பேறி கள் சொல்லிச் சொல்லி அந்த வார்த்தைக்கே கெட்ட பெயர் வந்துவிட்டது, என்னைப்போன்ற சாமான்யமான மனிதர்களுக்கு அதிருஷ்டந்தான் தேவை. அசாதாரண மான திறமையும் சக்தியும் உள்ளவர்கள் சொந்த முயற்சி யால் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள். அப்படி இல்லாத த என்னைப்போல் ஒத்தவர்களுக்கு நான் சொன்ன, அதிருஷ் டந்தான் வேண்டும். அது எனக்குக் கிடையாது. இருந்திருந்தால் அது மாரியப்பன் காதில் போய், ‘எண்டா பயலே, டாக்டர் பணத்தை இன்னம் கொடுக்கலே?’ என்று கட்டாயமாகக் கேட்டிருக்கும்.”
“மாரியப்பப்பிள்ளை முந்நூறு ரூபாய் கொடுக்காவிட் டால் குடி முழுகிப் போய்விடாது, உங்களுக்கு என்ன அதிருஷ்டக் குறைவு வந்துவிட்டது இப்போது?”
“இதோ பாரு, கல்யாணப் பத்திரிகை வந்திருக்கிறது.”
“இது யாரு? கர்னல் சுந்தர தாண்டவனா?”
“அவன் மகளுக்குக் கல்யாணம். மருமவன் யாருன்னு பாத்தியா?”
“மருதவாணன் எம்.ஏ., ஐ.ஏ.எஸ்.; சப் கலெக்டர்.” “நீ என்ன நினைக்கிறே?”
“ரெண்டு இடமும் பெரிய இடந்தான்.”
“இந்தச் சுந்தரதாண்டவன் எனக்கு ஒரு வயசு சின்னவன். நாற்பத்திரண்டு வயசாகிறது. எங்க அண் ணன்தான் அவனுக்கு மிலிடரியிலே வேலை பண்ணி வச் சாரு. அவன் புத்திக்கும் சாமர்த்தியத்துக்கும் எடை போட்டு வேலை கொடுக்கறதுன்னு ஆரம்பிச்சா -அதை நான் சொல்லுவானேன்? ரெயில் போர்ட்டர் எல்லாம் சண்டைக்கு வந்திடுவாங்க. அதாவது அவன் அப்ப இருந்த நிலையிலே சொல்றேன். இப்ப அவன் கெட்டிக்காரனா மாறியிருக்கலாம்-என்ன சிரிக்கிறே? நீயானும் சிரிக்கிறே; இந்த மாதிரி வேடிக்கையாகப் பேசறேன்னு பேசிட் டுத்தான். நான் பெருமாள் கோயில். தேர்மாதிரி, இருந்த இடத்துலேயே உட்கார்ந்துக் கிட்டிருக்கேன். இல்லாட்டி, நானும் இப்பக் கர்னலாக இருக்கவேண்டியவன்தான்.”
“யாராவது ஆபீசரைப் பார்த்து ஏதாவது இந்த மாதிரி பேசினீங்களாக்கும்?”
“ஆபீசர் கிட்டப் பேசலே. ஆபீசர் பெண்சாதி கிட்டப் பேசினேன். பிடிச்சுது சனி. வேறே யாரும் இல்லே; என் கூடப் பிறந்த அண்ணன் பெண்ஜாதி கிட்டத்தான் பேசினேன். இந்தத் தாண்டவன் என் அண்ணிக்கு அத்தை மகன். அண்ணாரு, அப்ப, மீரத்திலெ இருந்தாரு. அண்ணி ஊருக்கு வந்திருந்தா, நான் இன்டர் பரீக்ஷைக்குப் போயிட்டே இருந்தேன். அண்ணி ஊருக்கு குக் கிளம்பற அன்னிக்கி, இந்தத் தாண்டவன் வந்து சேர்ந்தான். அவனையும் கூட அளச்சிக்கிட்டு அவனை மிலிட்டரியிலே சேர்த்து விடறதாக ஏற்பாடு பண்ணி யிருந்தாங்க அண்ணி. சாப்பிடறப்போ வேடிக்கையாப் பேசிக்கிட் டிருந்தேன் நான். ‘மிலிடரி டிபார்ட்டுமென்டே அண்ணி ஆளாகவே போயிடும்போல் இருக்கே’ன்னு சிரிச் சுக்கிட்டே சொன்னேன். உலகத்துலே எப்பவும் அண்ணிங் களே ஒரு தனி ஜாதின்னு எனக்கு எனக்கு எண் ண ம். கொழுந் தன் சொல்றதெல்லாம் அவுங்களுக்குத் தேனா இருக்கும். எங்க அண்ணியும் அப்படித்தான் இருப்பாங்க. ஆனா- அந்தச் சமயத்துலே அண்ணி சிரிக்கலே, மொலு மொலுன்னு அம்மாகிட்டப் போய்ப் பிடுங்கித் தின்னக் கிளம்பிட்டாங்க. ‘அம்மா, நாங்க என்னாம்மா பண்ணு வோம்? அவுங்க அவுங்க தலையெளுத்துப்படிதானே நடக் கும்? உங்க பெரிய புள்ளைக்குக் கத்தியும் கபடாவும் எடுத்துச் சண்டை போட்டுப் பொளைக்கணும்னு இருக்கு. எப்பிடியோ வயித்தை வளர்க்கிறோம். காக்கிச் சட்டை தான் எங்களுக்குக் குலதெய்வம், அதுதான் எங்களுக்குச் சோறு போடுது. எங்களுக்கு அது ஒண்ணும் ஈனாயமா. கௌரவக் குறைச்சலாப் படலே. அவுங்க மனுசங்களை அவுங்க அவுங்க கவனிச்சுக்கறதும் என்ன தப்பு? அந்த வேலை ஈனாயமுனு நெனச்சிக்கறவங்க, வேறே வேலைக்குப் போகட்டுமே. இந்த உலகம் எவ்வளவோ பெரிசு.’ அப்படி இப்படின்னு பொரிஞ்சு கொட்டிப் பிட்டா. நான் அப்படியே பிரமை புடிச்சாப்போலே உக்காந்துப்பிட்டேன். அப்ப, அம்மாகூட அண்ணிக்குச் சமாதானம் சொன்னாங்க. என்னையும் கண்டிச்சாங்க.
“அண்ணியை ரெயில் ஏத்தி விடும்போது மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். அண்ணி முகங்கொடுத்தே பேசலை, போய் என்ன பத்த வச்சாங்களோ? அண்ணன் ஆறு மாசம் காயிதமே போடலை. அப்பறமும் ஒரு வருசம் காத்துக்கிட் டிருந்தேன். சரி, காக்கிச் சட்டைக்கு நாம் கொடுத்து வைக்கலேன்னு டாக்டருக்குப் படிச்சேன். கர்னல் அதிருஷ்டம் மலை ஏறிடிச்சு,”
“அதிருஷ்டம் என்ன செய்யும்? நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாப் பேசியிருக்கணும்.”
“அந்த ஜாக்கிரதையைத்தான் நான் அதிருஷ்டம்னு சொல்றேன்.”
“சண்டை நடக்கிறபோது டாக்டரெல்லாம் போனாங்களே.”
”அதுவா? சண்டைக்கு முந்தியே எனக்குக் காக்கிச் சட்டை கசந்துபோச்சு, ஒரு தடவை இந்தியா முளுக்கச் சுத்தினேன். புனாப்பக்கம் போனேன். என் சிநேகிதன் ஒருத்தன் லெப்டினன்டா இருந்தான். ஒரு சிறு பையனைச் சிப்பாய் ஆஸ்பத்திரியிலே வேலைக்கு வச்சிருந்தான். அந்தப் பையன் திடீர்னு ஒரு நாளைக்கு அழுதுகொண்டு வந்தான். நானும் சிநேகிதனும் பேசிக்கிட் டிருந்தோம். இந்தப் பையன் வேஷ்டி கட்டிக்கிட்டு, அவன் ஆபீசர் -ஒரு மேஜர் – அவன் முன்னாலே போய் நின்னானாம். ‘என் னப்பா, கௌபீனம் கட்டிக்கிட்டு வரதுதானே! மரியாதை கெட்டவனே! ஆபீசருக்கு முன்னாடி வர டிரஸ்ஸாடா இது!’ன்னு கேட்டானாம் அந்த மேஜர். பையன் சுடச் சுடப் பதில் கொடுத்திருக்கான். மேஜர் ஐயா, நம்ம தேசத்துலே கௌபீனங் கட்டிக்கிட்டு அலையறவங்க ளுக்கு மதிப்பு அதிகம். அந்த மதிப்புக்கூட இந்த வேட் டிக்குக் கொடுக்க மாட்டேங்கறீங்களே!’ன்னு சொல்லி யிருக்கான் பையன். ‘வாயை மூடுடா! பிச்சைக்காரப் பயலே!’ன்னு கத்தினான் ஆபீசர்.
‘ஒரு ஆபீசர் வாயிலிருந்து வர வார்த்தையா இது?’ன்னு பையன் கேட்டிருக்கான். உடனே அந்த ஆபீசர் எளுந்து’ பளார் பளார்னு இரண்டு கையா லேயும் மாறி மாறி அந்தப் பையனைக் கன்னத்துே இழுத்துப்பிட்டான், பையன் அழுதுகொண்டே ஓடி வந்துவிட்டான். அதற்கு என் சிநேகிதன் என்ன சொன் னான் தெரியுமா? ‘போடா போக்கத்த களுதை! அவன் சொன்னானாம். இவன் எதிர்த்துப் பேசினானாம். மேலே இருக்கறவங்க சொன்னா என்னாடா குடிமுளுகிப் போச்சு! உனக்கு வேலை பண்ணி வச்சதுக்கு நல்ல கைம்மாறுடா! ஏண்டாலே! எதிர்த்துப் பேசினயே, உனக்கு வேலைக்குச் சிபார்சு பண்ணினேனே நான்; என்னைப்பத்தி அவன் என்ன நினைச்சுப்பான்னு யோசிச்சியாடா? பிச்சைகாரப் பயலே!’ன்னு ஒரு மணி நேரம் குலைச்சுத் தள்ளிப்பிட்டான்.
“புழுத்த நாய் குறுக்கே போகாது, அந்த மாதிரி வசவுகள்! நான் அப்படியே அதிர்ந்து போயிட்டேன். பையனும் இடிந்துபோய் நின்றான். என் நண்பன் எப்படி இவ்வளவு மூர்க்கனானான்? ராணுவத்து வெள்ளைக்காரன் சகவாசமா? அப்புறம் அந்தப் பையன் தனியாக என் னிடம் வந்தான். ‘ஸார், உங்க சிநேகிதர் தான் வேலை பண்ணி வச்சாரு. ஊர்லே இவருதானே எனக்கு எல்லாம்? இவர்கூட இப்படிப் பேசிப்பிட்டாரு பாத்தீங்களா? நான் சின்னப் பையன் தான். ஆனா எனக்கும் சின்னதா ஒரு நெஞ்சு, சின்னதா ஒரு சுயமரியாதை எல்லாம் இருக்கு. தால்லியா?’ என்று என்னிடம் வந்து, வேதனைகளைச் சொல்லித் தீர்த்துக்கொண்டான். மறு நாளைக்கே கால் கடுதாசையும் நீட்டிவிட்டு, நான் வரும்போது என்னோடு ஊருக்குக் கிளம்பி வந்திட்டான். அன்னிக்கு முடிவுகட்டி னேன், இந்தக் காக்கிச் சட்டை போடக்கூடாதுன்னு. அந்தப் பையன் யார் தெரியுமா? நம்ப கம்பவுண்டர் ஜீவரத்தினந்தான்.”
“நம்ப கம்பவுண்டரா! ஜீவரத்தினமா!”
“ஆமாம்.”
“அவரும் சோடைதான்னு சொல்லுங்க,”
“ஏன்?”
“இல்லை. இவ்வளவு துடியாயிருந்தவரா மாரியப்ப பிள்ளையை அறஞ்சு பணத்தை வாங்காம இருக்கார்,, இன்னமும்?”
“பார்வதி,ஜீவரத்தினத்தை மருந்து கலக்கிற வேலைக்குத்தான் வச்சிருக்கறேன். கணக்கும் நிலுவையும் என் வேலை.”
“உங்க அதிருஷ்டத்தை யாராவது சரிப்படுத்திடப் போறாங்களேன்னு பயமாக்கும் உங்களுக்கு!”
“மாரியப்பனை ஒரு கோடியாகத்தானே காட்டினேன்? நம்ம அதிருஷ்டம் மாரியப்பனுக்கு அந்தப் புத்தியைக் கொடுத்திருக்கறப்போ, ஜீவரத்தினமா அதை மாற்றிவிட முடியும்? அப்புறந்தான் நான் சறுக்காமல் ஏறியிருக்கக் கூடாதா? நானும், பெரிய டாக்டர் வேலைக்கெல்லாம் எழுதிப் போட்டேன். ஆனா என் அதிருஷ்டம் எனக்கு முந்தியே ரெயில் ஏறிப் போக ஆரம்பிச்சுது. வைகுண்ட நாதருக்கு என்னை விட இஷ்டமில்லேன்னு தெரிஞ்சுக் கிட்டேன். இந்த ஊர்தான், இந்த வீடுதான் நமக்குச் சரின்னு தங்கிப்பிட்டேன். பேப்பரைப் பார்க்கற போது கொஞ்சம் நப்பாசை தட்டும், அடிக்கடி. ஆனா ஓர் ஆச்சரி யம் பாரு. எந்த வேலைக்கும் நம்மைவிட ஒண்ணு ரெண்டு வயசு குறைச்சலாகவே கேட்பாங்க எல்லோரும். இந்தப் பய எங்கேயாவது அப்ளிகேஷன் போட்டுறப் போறா னோன்னு பயந்துக்கிட்டே விளம்பரம் கொடுத்தாப்போலத் தோணும். ஆச்சுடாப்பா, நானும் நாளைக் கடத்திப்பிட் டேன். இன்னமே இந்த நப்பாசையே வராது. முப்பத் தஞ்சு இல்லாட்டி, நா ற்பது வயசுக்கு மேலே ஒருத்தருமே வாண்டாமாம் இப்ப” என்று இடி இடிக்கிறாற்போலக் சிரித்தார் டாக்டர். அவர் முகம் மலர்ந்துவிட்டது.
பார்வதி, “அது சரி, மாரியப்பனை ஒரு கோடியாய்க் காட்டினேன்னு சொன்னீங்களே. வேற ஏதாவது வர வேண்டியது இருக்கா!” என்றாள்.
“இன்கம் டாக்ஸ்காரன் மா திரி கணக்குக் கேக் கிறியே. கல்யாணம் ஆறத்துக்கு முந்தியே இப்படிக் கணக்குக் கேக்கக் கிளம்பிட்டா, அப்பறம் நான் எங்கே போறது! பேசாம, கல்யாணப் பெண்ணா லக்ஷணமா வெட்கப்பட்டுக்கிட்டு இருப்பியா? அதோ பாரு, அந்தச் சேப்பு நோட்டு முளுக்க, வராத கடன் எல்லாம் எளுதி ன் வச்சிருக்கேன். பத்துப் பதினஞ்சுன்னு வராத கேசு ஐந்நூறு இருக்கும். சேர்மன் மாரியப்பபிள்ளைக்கு அடுத்தாப்பலே பாரு; இருக்கா? எவ்வளவு?”
“நாலாயிரம்.”
“விச்வலிங்கமையர் தானே?’
“ஆமாம்.”
“பத்திரிகை நடத்தப் போறேன்னு நாலாயிரம் கைமாத்துக் கேட்டாரு; கொடுத்திருக்கேன். அதுதான் நல்ல புள்ளி.”
“கைமாத்தாவா!”
“கைமாத்துத்தான்.”
“பத்திரம் கித்திரம் கிடையாதா?”
“இந்தா, சும்மா இரேன். ரொம்ப அவசரம்னு கேட்டாரு. கொடுத்தேன். ஆறு வருஷமாச்சு. நான் பட்டணம் போற போதெல்லாம் அவரைப் போய்ப் பார்க்க ஒழியறதில்லை. போன வருஷம் போனபோது நேரம் இருந்திச்சு. போனேன். ஆபீஸ்கிட்டப் போறப்போ, பணத்துக்கு வந்திருக்கானோன்னு பயந்துக்கப் போறாரேன்னு திரும்பிட்டேன்.”
“நீங்க பயப்படலி யாக்கும்!”
“கேளேன். ரெண்டு மாசம் முந்தி, பேச்சு வாக்கிலே, நீங்க ஒரு கார் வாங்கப்படாதான்னு கேட்டியா? எனக்கும் அது சரீன்னுதான் பட்டுது. போன வாரம் ஜீவரத்தினம் பட்டணம் போயிட்டு வந்தான் பாரு. அப்ப ஒரு வார்த்தை கேளுடாப்பான்னு சொல்லியிருந்தேன். போய்க் கேட்டானாம். ‘டாக்டர் பணம் பத்திரமா இருக்குன்னு சொல்லு. என் பிராணன் போறதுக்குள்ள நான் கொடுத்திடப் போறேன்’னு சொன்னாராம்” என்று டாக்டர் இடிச்சிரிப்புக் சிரித்துக்கொண்டே, “அவரு தீர்க்காயுசா இருக்கட்டும். காரில்லாமே காலா ஒடிஞ்சு போச்சு! எப்படியாவது பத்திரிகை நடந்தாச் சரி” என்று முடித்து, மூச்சுவிட்டார். மறுபடியும் சிரித்தார். பார்வதிக்கு அமிருத பானம் செய்கிறமாதிரி இருந்தது அந்தச் சிரிப்பு.
“அந்த நோட்டுத்தான் உனக்கு ஸ்ரீதனம். நீ எடுத்துக்க.”
“நீங்கள் எனக்கு ஸ்ரீதனம் கொடுக்க வாண்டாம். நான் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இந்தச் சேப்பு நோட்டையோ உங்க அதிஷ்ருடத்தையோ கல்யாணம் பண்ணிக்க வரலை.”
“அப்படி வா வழிக்கு! அப்ப நிச்சயமா என்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு முடிவு பண்ணிப்பட்டியா?”
பார்வதி, நாணத்தால் தலை குனிந்து, ஸ்டெத்தாஸ் கோப்போடு விளையாடிக்கொண் டிருந்தாள்.
“என்னமோ பிரசங்கம் பண்ணிவிட்டேன்னு நெனச்சுக்காதே. ஏதுக்குச் சொல்ல வந்தேன்னா, முன்னுக்கு வரதுங்கறது சில ஆட்களுக்குத்தான் முடியும். மாரியப்பன் மாதிரி, தானே கொட்டு மேளம் கொட்டிக்கணும். இல்லாட்டி இன்னொருத்தரை விட்டு, இவரு இந்திரன் சந்தி ரன்னு கொட்டச் சொல்லணும். மாரியப்பன் மாதிரி நம்மாலே செஞ்சுக்க முடியாது. எங்க அண்ணாரும் எனக் காகக் கொட்டமாட்டேன்னிட்டாரு. நான் சொல்றது சரிங்கறதுக்குச் சாட்சி பாரு. கோயில்லே கொட்டுமேளம் கொட்டுது; அர்த்த ஜாமக் கொட்டு மேளம். நம்மைப் படைச்ச பெருமாளுக்கே கொட்டு மேளம் கொட்ட வேண்டியிருக்கு. இல்லாட்டி அவரு காலமே எளுந்திருக்கறதும் தூங்கப் போறதும் யாருக்குத் தெரியும்? நாம் பாட்டுக்குத் தூங்கிக்கிட்டே கிடப்போம். கொட்டு மேளம் கொட்டினாத்தான் ஜயிக்கலாம். ஜயிச்சாலும் கொட்டு மேளம் கொட்டலாம்.”
“அப்பன்னா, நீஞ்க தோல்வி யடைஞ்சவரா?”
“நான் இப்ப அந்த மாதிரியா பேசறேன்? கொட்டு மேளம், ஆண்டவனுக்குத்தான் வேணும். எனக்கு வேண்டியதில்லே; நான் அவரைவிட உசத்தி! தெரியுமா?”
டாக்டர், அகந்தையே உருக்கொண்டு ஒங்கி நின்றார். உலகத்தின் சிறுமையெல்லாம் அவர் காலடியில் கிடந்தது. பார்வதி, அவரையே பார்த்துக்கொண்டு – விசுவரூபம் எடுத்து நின்ற அவருடைய வெற்றியைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அர்த்தஜாமக் கொட்டு மேளம் திடீ ரென்று ஓய்ந்தபோதுதான் அவள் விழித்துக்கொண்டு, “டாக்டர் நான் உங்களுக்குத் தகுதியாளவன்தானா” என்று தழுதழுத்தாள்.
“சீ சீ பைத்தியம்! இந்தப் பொம்மனாட்டித் தனந் தானே வாணாம்னு சொல்றேன்!” என்று டாக்டர் அவள் முகத்தைத் தட்டிக்கொடுத்தார்.
டாக்டருக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்கவில்லை. உடலிலும் அயர்வு இல்லை. எழுச்சிகொண்டு, மொட்டை மாடிக்குப் போய், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். வராத கடன், சறுக்கல்கள், கிட்டாத வாழ்வு – எல்லாத் தோல்விகளும் திரண்டு வந்து, வெற்றியாகவே காட்சி யளித்தன. அண்ணியிடம் போய், ‘அண்ணி, நான் பைத்தியக்காரன். குழந்தை மாதிரி உளறிவிட் டேன்’ என்று மன்னிப்புக் கேட்க வேண்டும்போல் இருந்தது. விசுவலிங்க ஐயரிடம் போய், ‘உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். கவலைப்படாதீங்க’ என்று சொல்ல வேண்டும்போல் தோன்றிற்று. நிறைவும் திருப்தியும் நக்ஷத்திரங்களைப் போல அவருடைய நெஞ்சு வெளியை நிறைத்துக்கொண் டிருந்தன. அவர் நெஞ்சு பொங்கி வழிந்தது. ‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி, விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி!’ என்று பிலகரி ராகத்தில் வீர ரசத்துடன் பாடிக்கொண்டிருந்தார்.
அவர் ராகத்திற்குக் கீழ்ப்படிந்து பொழுதும் புலர்ந்து விட்டது. சற்றுமுன், கறுத்து, மங்கி நின்ற கருமேகத் துண்டுகள், அவருடைய தோல்வி, வெற்றியானதுபோல, கதிரொளி பட்டுத் தகதகவென்று தங்கமாகக் கனிந்தன.
கல்யாணப் பதிவு ஆபீஸை விட்டு, வெளியே வரும் போது டாக்டருக்குக் கொஞ்சம் மனசு சிரமமாகத்தான் இருந்தது. கனிந்த குரலில் சொன்னார்: “பார்வதி, ஆய் ளிலேயே கல்யாணம் முக்கியமான கட்டம். அதுக்குக் கூடக் கொட்டுமேளம் இல்லாமல் போயிடிச்சு பாத்தியா! பார்வதி அவர் முகத்தைப் பார்த்தாள்.
“அந்தக் கல்யாணத்தைக்கூடக் கொட்டுமேளம் இல்லாமல், நடத்திவிட்டோம் என்று நான் அகம்பாவப் பட்டுக்கிட்டிருக்கேன். நீங்க அங்கலாய்க்கிறீங்க!”
“சபாஷ்!” என்றார் டாக்டர்.
“என்ன சபாஷ! தோத்துப்போன பேச்சுப் பேசி விட்டுச் சபாஷாம்!”
“நானா தோத்துப் போயிட்டேன்? பார்வதி? இதைப் பாரு; மாரியப்பனுக்குச் சேர்மனாயிடுச்சாம். இன்னிக்கி அதுக்காக மறுபடியும் ஊர்வலம் விடப்போறாங்களாம். என்ன செய்யறேன் பாரு!”
“என்ன செய்யப் போறீங்களாம்?”
“பாரேன்.”
இரவு, சேர்மன் மாரியப்பபிள்ளை ஊர்வலம் போகும் போது ‘தர்ம வைத்தியசாலை’ என்று டாக்டர் வீட்டு வாசலில் வெளிச்சப் பலகை தொங்குவதைப் பார்த்து, பிள்ளைவாள் யோசனையில் ஆழ்ந்துவிட்டார்.
மொட்டை மாடியில், டாக்டரும் பார்வதியும் அந்த முகத்தைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
“மாரியப்பன் யோசிக்கிறான் பாத்தியா?”
“டாக்டர் ஐயா பிழைக்கத் தெரியாதவர்னு யோசிக்கிறாரு!” என்று பார்வதி சிரித்தாள்.
– இரட்டைக் கதைகள் (வெள்ளிவிழா வெளியீடு), முதற்பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
பிடிவாதம்
இரா.கலைச்செல்வி
September 9, 2026
புத்தகம் சுமக்க வேண்டிய கைகள்
எஸ்.மதுரகவி
September 9, 2026
கள்வர் தலைவன்
பம்மல் சம்பந்த முதலியார்
September 9, 2026