கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 9, 2026
பார்வையிட்டோர்: 64 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

அந்தச் சிறிய கிராமத்தில் இராமலிங்கத்தின் பிடிவாத குணம் அனைவருக்கும் தெரியும். தன் கருத்தே சரி என்று பிடிவாதம் பிடித்து, பலமுறை உறவுகளையும் நண்பர்களையும் இழந்திருக்கிறார்.”

ஒரு நாள், ஊர் பஞ்சாயத்தில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. ஊர் எல்லை வழியாகப் போகும் புதிய சாலைக்காக, எளிய நெசவுத் தொழிலாளியான கருப்பையாவின் சிறிய வீட்டை அகற்ற வேண்டும் என்று ஊர் பெரிய மனிதர் சொக்கலிங்கம் அறிவித்தார். 

கருப்பையாவிற்கு மாற்று நிலமோ, நஷ்டஈடோ வழங்கப்படாது என்றும், ஊர் நலனுக்காக அவன் தியாகம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. கருப்பையா அழுது புலம்பியும் யாரும் அவனுக்கு ஆதரவாகப் பேசவில்லை; அதிகாரத்திற்குப் பயந்து அனைவரும் அமைதி காத்தனர்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இராமலிங்கம் நடுவில் எழுந்து “ஒரு ஏழையின் வீட்டைப் பறித்து அமைக்கும் சாலை ஊருக்கு நன்மையைத் தராது. கருப்பையாவிற்கு முறையான நஷ்டஈடும் மாற்று இடமும் தராமல் இந்தச் சாலையை அமைக்க விடமாட்டேன்” என்று உரக்கச் சொன்னார்.

சொக்கலிங்கம் கோபத்துடன்,

“இராமலிங்கம், உனக்கு எப்போதும் பிடிவாதம் தான். ஊர் முடிவை எதிர்க்காதே!” என்றார்.

இராமலிங்கம் நிமிர்ந்து நின்று, “ஆம், எனக்குப் பிடிவாதம் தான். ஆனால் இத்தனை காலம் சுயநலத்திலும் அகந்தையிலும்தான் என் பிடிவாதத்தைக் காட்டினேன். அது தவறு என்று புரிந்துகொண்டேன்.

ஆனால், நீதியும் சமூக நீதியும் காக்கப்பட வேண்டும் என்பதில் பிடிவாதம் பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. கருப்பையாவிற்கு நியாயம் கிடைக்கும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தார். 

இராமலிங்கத்தின் இந்த நல்ல பிடிவாதம் ஊர் மக்கள் பலரின் மனதில் தூங்கிக்கொண்டிருந்த நியாய உணர்வைத் தட்டியெழுப்பியது. ஒவ்வொருவராக வந்து இராமலிங்கத்தின் பின்னால் நின்றார்கள். மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பைக் கண்ட சொக்கலிங்கம், தன் முடிவை மாற்றிக்கொண்டு கருப்பையாவிற்கு உரிய நஷ்ட ஈடும் மாற்று நிலமும் வழங்க ஒப்புக்கொண்டார்.

அன்று இராமலிங்கம் உணர்ந்துகொண்டார் – தன் முனைப்பிலும் கோபத்திலும் காட்டும் பிடிவாதம் அழிவைத் தரும்; ஆனால், பிறரின் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் காட்டும் பிடிவாதம் வாழ்க்கைக்குப் பெருமதிப்பைத் தரும்!

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *