காலத்தின் சிரிப்பு
கதையாசிரியர்: எம்.பாலமுரளி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2026
பார்வையிட்டோர்: 104

பணியிலிருந்து ஓய்வு பெறுவதை மிகுந்த மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து, ஓய்வுக் காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி பொழுதைப் போக்க வேண்டும் என அதீத கற்பனையில் இருந்தவன் முரளி.
ஆனால், கள யதார்த்தம் வேறு மாதிரி இருந்தது.
ரிடையர்மெண்ட்டில் வந்த பணங்கள், வாங்கி வைத்திருந்த கடன்களுக்கே செலவழிந்து விட்டன. வரும் பென்ஷன் போதவில்லை. மனைவியின் நச்சரிப்பு வேறு.
“சும்மா உட்கார்ந்திருந்தா மூளை துருப்பிடிச்சுப் போயிடும். உங்க பிரண்டு குமார் நல்லா பிசினஸ் பண்றார்ல? அவர்கிட்ட போய் வேலை கேளுங்க” என்று யோசனை வேறு.
ஓய்வு பெற்று ஒவ்வொரு நாளும் வீட்டில் இருப்பது நரகமாகிப் போனது. தினந்தோறும் சண்டை, சச்சரவுதான்.
முரளிக்கும் யோசிக்கும்போது, அவள் சொல்வது சரிதான் என்று தோன்றியது. ஏதாவது வேலையில் சேர்ந்தால் தேவலை என்று இருந்தது. குமாரிடம் போய்க் கேட்டு பார்க்கலாம் என்று தீர்மானித்தான்.
குமார் அவனுடன் பள்ளியில் இருந்து ஒன்றாகப் படித்தவன். அவன் வீட்டில் பால் வியாபாரம் செய்து வந்தார்கள். அவன் அப்பாவுக்கு, குமார் நன்றாகப் படித்து, அரசாங்க வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசை. ஆனால், குமாருக்குப் படிப்பு வரவில்லை.
அவனோட அப்பா, அவனை என்னோடு ஒப்பிட்டு அவனைத் திட்டிக்கொண்டே இருப்பார். இதனால் என்னவோ, அவனுக்கு என்னைப் பிடிக்காது.
அவனுக்கு திட்டு வாங்கிக் கொடுப்பதில் எனக்கு சந்தோஷமாக இருக்கும். அவன் குனிகுறுகி, கை கட்டி நிற்பதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
அவன் என்னைக் கோபத்துடன் பார்க்கும்போது, அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பது என் வழக்கம்.
டென்த்தில் குமார் பெயிலாகி விட்டான். அன்றைக்கு அவன் அப்பா அவனை அடித்த அடி இன்றைக்கும் மறக்க முடியாது. எங்க அம்மா ஓடிப் போய் அவனை எங்க வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்.
என்னோட அப்பா, அவன் அப்பாவிடம் சண்டைக்குப் போய்விட்டார்.
“என்ன சார், விட்டா அவனை அடிச்சே கொன்றுவீங்க போல. பெயிலானா என்ன?”
“உங்களுக்கு என்ன சார்? உங்க பையன் நல்லாப் படிக்கிறான். இவன் பெயிலாகி எனக்கு அவமானமா இருக்கு.”
“அப்படிச் சொல்லாதீங்க சார். இவனுக்குப் படிப்பைத் தவிர வேற வேலையில்லை. ஆனா, உங்க பையன் அப்படியா? நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். காலையில் இருந்து அவனை எவ்வளவு வேலை வாங்குறீங்க? பால் கறக்குறதுல இருந்து, ஒவ்வொரு வீட்டுக்கும் போய்ப் பால் விநியோகம் செய்றது, மாடு குளிப்பாட்டுறது வரை எவ்வளவு வேலை பார்க்குறான். இவ்வளவுக்கு நடுவுல அவன் படிக்கணும்னா எப்படி படிப்பான்? இவனை டென்த் பாஸ் பண்ண வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்று அவன் அப்பாவைச் சமாதானப்படுத்தினார்.
அவனுக்காக அப்பா பரிந்து பேசியது எனக்குப் பிடிக்கவில்லை.
ஒரு டுட்டோரியலில் சேர்த்து விட்டு, பத்தாவது படிக்க வைத்து, பாஸ் பண்ண வைத்தார். ஆனால், மேற்கொண்டு படிக்க குமார் மறுத்துவிட்டான்.
காலம் ஓடியது. நான் எம்.காம். படித்து, பேங்கில் வேலைக்குப் போய்விட்டேன். எனக்குப் பொண்ணு கொடுப்பதற்கு ஏகப்பட்ட போட்டி.
குமார் அம்மா அடிக்கடி என் அம்மாவிடம், “உங்க பையன் பெரிய வேலை பார்க்கிறான். பொண்ணு கொடுக்கப் போட்டி போடுறாங்க. என் பையன் மாடுதானே மேய்க்கிறான், யாரு பொண்ணு கொடுப்பா?” என்று அங்கலாய்த்துவிட்டுப் போவார்.
எனக்குப் பெருமையாக இருக்கும்.
கல்யாணம் பண்ணிட்டு வேற ஊருக்குப் போய்விட்டேன். இரண்டு பெண் குழந்தைகள்.
ஒரு தடவை ஊருக்குப் போனபோது, குமாரைச் சந்தித்தேன். குமார் இப்போது ஒரு டீக் கடை மற்றும் ஸ்வீட் ஸ்டாலுக்கு அதிபதி. அத்தைப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி, ஒரு பையன் பிறந்திருந்தான்.
அவன் அப்பா வழக்கம்போல், “என்னப்பா, நல்லா இருக்கயா? இவனைப் பாரு, என்னை போலவே குண்டு சட்டியிலே குதிரை ஓட்டிட்டு இருக்கான். உன்னை மாதிரி நல்லாப் படிச்சிருந்தா, நகரத்துக்கு வேலைக்குப் போயிருக்கலாம். ம்… எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்” என அங்கலாய்த்தார்.
குமாருக்குக் கடுப்பு.
“அப்பு, சும்மா இருக்க மாட்டிங்களா? எனக்கு என்ன தேவையோ அதைச் சம்பாதிக்கிறேன். எப்பப் பாரு, அவன் முன்னாடி என்னை ஏசிக்கிட்டு” என்று என்னை ஒரு முறை முறைத்தான்.
எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது. இனிமேல் ஊருக்கு வந்தாலும், இவனைப் பார்க்க வரக் கூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன்.
அப்பாவும் வீட்டை விற்றுவிட்டு என்னுடன் வந்து, சிறிது நாட்களில் இறந்துவிட்டார். ஊருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு சுத்தமாக அறுந்துவிட்டது.
பிள்ளைகளைப் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்து நிமிர்ந்தால், பணி ஓய்வு பெறும் வயது வந்துவிட்டது. ஒற்றைச் சம்பளத்தில் அனைத்து செலவுகளையும் செய்யத் தடுமாற்றமாகத்தான் இருந்தது. எல்லாக் கடன்களையும் வாங்க வேண்டியிருந்தது.
ரிடையர்மெண்ட் பணத்தில் ஓரளவு கடன்களைத் தான் கட்ட முடிந்தது. பாக்கிக்கு பென்ஷன் பணத்திலிருந்து வட்டி தான் கட்ட முடிந்தது. வாழ்க்கை திடீரெனப் பாரமாகிப் போனதுபோல் இருந்தது.
அப்போது ஒரு நாள், வீட்டு வாசலில் பெரிய கார். யாரென்று பார்த்தால், குமார்.
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
தடபுடலாக உள்ளே நுழைந்தான். கூட அவன் மனைவியும் அவன் பையனும்.
“என்னடா, என்னை அடையாளம் தெரியுதா? நான் தான் குமார். இவன் என் பையன். என்னோட பிசினஸ் பண்ணிட்டு இருக்கான். நாலாவது தலைமுறை. எல்லாம் பால் வியாபாரம் தான். மொத்தம் ஏழு இடத்துல டீக் கடையும், பலகாரக் கடையும் வச்சிருக்கேன். வியாபாரம் அமோகமாகப் போகுது. பையனுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். நீ தான் உன் பொண்ணுங்க கல்யாணத்துக்கு கூப்பிட மறந்துட்ட. உன் தகுதிக்கு நாங்க சம்மா இல்லைன்னு நினைச்சிட்டியே என்னவோ. ஆனா, நாங்க உன்னை மறக்கல. நம்ம ஊருலேயே அரசாங்க வேலைக்குப் போன முதல் ஆள் நீ. நீ வந்தா எங்களுக்கு கௌரவம்” என்று அடுக்கடுக்காகப் பேசிக்கொண்டே போனான்.
அவன் மனைவி, “ஆமாம் அண்ணே, என் மாமா உங்களைப் பத்திப் பெருமையா சொல்வார். அண்ணியோட அவசியம் கல்யாணத்துக்கு வரணும்” என்று பலகாரத் தட்டு, துணிமணிகளோடு பத்திரிகை வைத்தாள்.
என் மனைவிக்கு ஒரே ஆச்சரியம்.
போதாக்குறைக்கு, என் மனைவியைப் பார்த்து, “தங்கச்சி, இவனால எங்க அப்பாகிட்ட நிறைய திட்டு வாங்கியிருக்கேன். நல்லாப் படிப்பான். அவசியம் கல்யாணத்துக்கு வந்துடுமா” என்றான்.
அவன் வந்து போனது வீட்டில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியது.
“பேரு பெத்த பேரு, குடிக்கத் தண்ணி இல்லைன்னு சொல்வாங்க. இங்க காசுக்கு சிங்கி அடிச்சுக்கிட்டு இருக்கோம். இதில பெருமை வேற. அரசாங்க வேலையாம். பேசாம அவரை மாதிரி பால் வியாபாரம் பண்ணியிருக்கலாம்” என்று புலம்ப ஆரம்பித்தாள் என் மனைவி.
கல்யாணம் படு விமரிசையாக நடந்தது. அவன் மிகப் பெரிய வீடு கட்டியிருந்தான்.
“ஏங்க, உங்க பிரண்டுக்கு நிறைய வருமானம் போலயிருக்கு. பால் வியாபாரத்துல இவ்வளவு சம்பாத்யமா? நீங்களும் சம்பாதிச்சீங்களே, கைக்கும் வாய்க்கும் பத்தல” என்று ஒரே புலம்பல்.
எனக்கும் வேறு வழி தெரியவில்லை. சரி, மானம், அவமானம் பார்க்காமல் குமார் கிட்ட வேலை கேட்டுப் பார்ப்போம். அவனுக்குத்தான் பல பேரைத் தெரிஞ்சிருக்கே. யார்கிட்டயாவது சொல்லி வேலை வாங்கித் தருவான் என்ற நம்பிக்கையுடன் அவன் வீட்டுக்குச் சென்றேன்.
ஏற்கனவே இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். உள்ளிருந்து வந்தவன், “டேய், நீ எப்ப வந்த? இங்க எதுக்கு உட்கார்ந்திருக்க? வீட்டுக்குள் வாடா. மங்களம், யார் வந்திருக்கா பாரு” என மனைவியை அழைத்தான்.
எனக்குச் சங்கடமாக இருந்தது.
அவன் மனைவி பிரியத்துடன் என்னை வீட்டினுள் அழைத்துப் போனாள்.
சற்று நேரத்தில் குமார் உள்ளே வந்து, “என்னடா, திடீர்ன்னு? வீட்டுல சௌக்கியம்தானே? சாப்பிட்டயா? என்ன விஷயம்?” என்று கேட்டான்.
எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
என்னையும் அறியாமல் என் கைகளைக் கட்டிக்கொண்டு, மெதுவாகச் சீட்டின் நுனியில் அமர்ந்துகொண்டு, “ஒன்னும் இல்லை. நான் வேலையிலிருந்து ரிடையர் ஆகிட்டேன். ரிடையர்மெண்ட் பணம் பூரா, வீட்டுக்கும், பிள்ளைகளுக்கு வாங்கின கடன்களுக்கும் சரியாயிடுச்சு. வர்ற பென்ஷன் வட்டி கட்டவே பத்தல. அதான், ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம்னு, உனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி ஒரு வேலை வாங்கித் தர முடியுமான்னு ரிக்வெஸ்ட் பண்ணலாம்னு வந்தேன். தப்பா எடுத்துக்காத” என்று சொல்வதற்குள், உடம்பெல்லாம் குனிகுறுகிப் போய்விட்டது.
அவன் உதட்டில் ஒரு புன்னகை.
எழுந்து வந்து முரளியோட தோளை அழுத்தி, “டேய், எனக்கு ஏட்டு படிப்பு வரல. ஆனா, அனுபவப் படிப்பு நல்லா வந்தது. எங்க வீட்டு பால் வியாபாரத்தை எப்படி அதிகப்படுத்தணும்னு கத்துக்கிட்டேன். அடுத்து நாம் என்ன செய்யணும்னு முன்கூட்டியே தீர்மானம் பண்ணணும். இதையேதான் ஆங்கிலத்துல ‘பிரிப்பேர்ட்னெஸ்’னு சொல்வாங்க. இதுதான் எனக்கு அனுபவம் சொல்லிக் கொடுத்த பாடம்.
“காலம் மாறிக்கிட்டே இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி வியாபாரத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியிருக்கு. அதுக்காக நம்மைத் தயார் பண்ணிக்கணும்னு குறியா இருந்தேன். அதற்கான விஷயங்களை அப்பப்ப கத்துக்கிட்டே இருப்பேன். எல்லாம் கேள்வி ஞானம்தான்.
“நீயும் ரிடையர்மெண்ட்டுக்குப் பின்னாடி என்ன செய்யணும்னு முன்கூட்டியே தீர்மானம் பண்ணி, அதுக்கு ஏத்தாற்போல உன்னைத் தயார் பண்ணியிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது. ஒன்னும் பிரச்சினையில்லை. எப்படி வேலை வேணும்னு சொல்லு. நான் ஏற்பாடு பண்ணுறேன்” என்றான்.
மீண்டும் அவன் முகத்தைப் பார்த்தேன். அந்தச் சிரிப்பு…
“சே! சே! நிச்சயம் கேலிச் சிரிப்பாக இருக்காது” என்று நினைத்துக்கொண்டேன்.
இது காலத்தின் சிரிப்பு.
தொடர்புள்ள சிறுகதைகள்
ரயில் செல்வியும்… WAP 7 என்ஜினும்…
உரு.வளவன்
September 12, 2026
ராப்பிச்சை
மா.வீ.தியாகராசன்
September 12, 2026
மரணம் நம்மைப் பிரிக்கும் வரை
இரா.துரைமாணிக்கம்
September 12, 2026