குற்றம் பார்க்கின்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 5,047 
 
 

அபர்ணா, பீரோவில் இருக்கும் துணிகளை அடுக்கி வைத்து, ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். அவள் என்னதான் அழகாக அடுக்கி வைத்தாலும் , அவளுடைய கணவன் அருண், அவனுடைய உடைகளை எடுக்கும் போது அடுக்கி வைத்த துணிகளை எல்லாம் கலைத்துவிட்டுப் போய்விடுவான்.

அதற்காக அவள் அடிக்கடி அவனிடம் சண்டை கூடப் போட்டு இருக்கிறாள். அவள் அவனோடு சண்டை போடுகிறாளே என்று ,அதற்கு பிறகு ஒரு சில நாட்கள் மட்டும் துணிகள் கலைந்துவிடாமல் கவனமாக எடுப்பான். பிறகு திரும்பவும் அதே கதைதான். இப்படி அவள் கணவனைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்க , அவளது செல்போன் மணி ஒலிக்கவே, அவள் சிந்தனை கலைந்துபோனது.

உடனே அவள் அவசரமாகத் திரும்பி… கட்டிலின் மேலேவைத்திருந்த அலைபேசியை எடுக்க முயன்றாள். அப்போது அவள் அடுக்கிக்கொண்டிருந்த துணிகள் எல்லாம், அவளது கை பட்டு சரிந்து கீழே விழ ஆரம்பித்தது. துணிகள் கீழே விழுவதை அவளால் சட்டென தடுக்க முடியவில்லை.

செல்போனில் அருண் தான் பேசினான். அவன் ஆபீஸ் வேலையாக இரண்டு நாட்கள் பெங்களூரு சென்றுவிட்டு இன்றுதான் வருகிறான்.

“செல்லம், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிளம்பிட்டேன். கால் டாக்ஸியில் வீட்டுக்கு வந்துகிட்டிருக்கேன். இன்னைக்கு ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கு . அதனால வீட்டுக்கு வந்ததும் குளிச்சு ரெடியாயிட்டு உடனே கிளம்பணும். டிபன் எல்லாம் சீக்கிரமா ரெடி பண்ணிடு செல்லம் ” என்றான்.

“ம்ம்.. வாங்க. எல்லாம் தயாரா இருக்கு ” என்று சொல்லிவிட்டு ‘செல்போனை’ அணைத்தாள். அவளுக்கு பீரோவிலிருந்து கீழே விழுந்து, கலைந்து கிடக்கிற துணிகளைப் பார்க்கும்போது… சலிப்பாக இருந்தது.

‘அருண் வரும்போது இதைப் பார்த்தால் திட்டவே செய்வான். ‘துணியைக் கலைச்சு வைக்கிறேன்னு என்னை மட்டும் குற்றம் சொல்லுவியே! இப்ப நீ மட்டும் இப்படி வெச்சிருக்கே?!’என்று கேலி பேசுவான். அதுவுமில்லாமல் வந்ததும் ஆபீஸ் போக அவசரப்படுவான். அவனுக்கு லஞ்சுக்கு டிபன் வேற தயார் செய்ய வேண்டும்’ என்று நினைத்து, அவசர அவசரமாக… பீரோவில் அவனுடைய துணிகளை வைத்திருந்த பகுதியை மட்டும் , மளமளவென்று அடுக்கி சரிசெய்தாள்.

அப்போது துணிகளோடு சேர்ந்து ஒரு சிறிய தோல் பை ஓன்று அவள் கையில் தட்டுப்பட்டது . அவள் அதை வெளியே எடுத்துப் பார்த்தாள்.

அந்தப்பை சாம்பல் நிறத்தில், மிகவும் பழையதாக நைந்துப் போய் இருந்தது. அது பீரோவின் உள் பகுதியில், துணிகளுக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்ததால், அவள் அதை இதற்கு முன் பார்த்ததில்லை. பையும் சற்று கனமாக இருந்தது. அதில் என்ன இருக்கிறது என்கிற ஆர்வம் அவளுக்கு அதிகமாகவே, அதை திறந்துப் பார்த்தாள்.

அதற்குள் கசங்கிய பாலிதீன் கவரில் சுற்றியபடி சில பொருள்கள் இருந்தன. அவள் அந்தக் கவரை பிரித்துப் பார்க்க … அந்த பொருள்கள் எல்லாம் அவளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தந்தன.

‘அருண் இதையெல்லாம் எதற்கு இப்படி பாதுகாத்து வைத்திருக்கிறான்?!’ என்று யோசிக்கவே … அவளுக்கு அதிர்ச்சியோடு சேர்ந்து கோபமும் வந்தது.

அப்போது அழைப்பு மணி அழுத்தும் ஓசை கேட்டது .

‘அடடா அருண் வந்தாச்சு போலிருக்கே!. ” என்று நினைத்தபடி, அந்தப் பையை அதிலிருந்த பொருள்களோடு கட்டிலின் மேல் வைத்து, அதை ஒரு போர்வையைப் போர்த்தி மறைத்து விட்டு, வாசல்கதவை திறக்கப் போனாள் .

அவள் கதவைத் திறந்ததும்,

“குட்மார்னிங்” என்று சொல்லி விட்டு புன்னகையுடன் அருண் நின்றிருந்தான்.

அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் … அவனை முறைத்துப் பார்த்து விட்டு … முகத்தைத் தோளில் இடிப்பது போல “ம்கூம்” சொல்லி விட்டு அபர்ணா திரும்பி வீட்டுக்குள் நடந்தாள்.

அவளுக்குப் பின்னாடியே வீட்டிற்குள் வந்த அருணுக்கு, அவள் முறைத்ததையும், அவனுடைய குட்மார்னிங்க்கு பதில் சொல்லாமல் அவள் போவதையும் பார்த்து குழப்பமாக இருந்தது.

“ஹலோ டியர் … என்ன ஆச்சு?!” என்றான்.

“ஒன்றுமில்லைங்க சார் … நீங்க ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க …டிபன் ரெடியாக இருக்கு… சாப்பிடுவீங்களாம் ” என்று அதே விறைப்புடன்சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமலே சமையல் அறைக்குப் போனாள்.

“ஓஒ … என்னமோ விஷயம் நடந்திருக்கு… அதான் சாமி மலையேறிடுச்சு போல… ஒருவேளை, என் அம்மா ஏதும் போன் பண்ணி, இவளுக்கு அட்வைஸ் கொடுத்திருப்பாங்களோ ..?! இல்ல…. ஒருவேளை இன்னைக்கு நம்ம கல்யாண நாளோ ?!… இருக்காது அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே! இவளோட கோபத்துக்கு என்ன காரணமுன்னு கண்டுபிடிச்சு சமாதானம் பண்ணி பண்ணியே எனக்கு முடியெல்லாம் கொட்டிடும் போலயே!. இப்ப என்ன பிரச்சனைன்னு தெரியலையே!.”

இப்படி பல யோசனைகளோடு, அருண்… அவசர அவசரமாக குளித்து விட்டு , தலையை டவலில் துடைத்துக்கொண்டே …பெட் ரூம் வந்தான் .

அங்கே அபர்ணா… பராசக்தி போல … சூலத்திற்குப் பதில் கையில் ஏதோ ஒரு பையை வைத்துக்கொண்டு , அவனையே முறைத்துப்பார்த்தபடி நின்றிருந்தாள்.

‘வழக்கமாக அவன் வெளியூர் போய் விட்டு வரும் போது … அபர்ணா குளித்து தயாராகி விட்டு …சிம்பிளா ஒரு மேக்கப்பில்… பளிச் என்ற புன்னகையோடு அவனை வரவேற்பாள். பிறகு பிரியமாக கொஞ்சிப் பேசுவாள். அவன் இல்லாத இந்த இரண்டு நாளும் ஒரே போராக இருந்தது என்று புலம்புவாள். அப்புறம் அக்கம் பக்கத்தில் என்னென்ன நடந்தது என்று பேசுவாள்.

ஆனால் அதை எல்லாம் கேட்க இவனுக்கு நேரமில்லாமல் ,

“அதெல்லாம் அப்புறம் பேசலாம். சீக்கிரம் டிபன் ரெடி பண்ணு… ஆபீஸ் கிளம்பணும்..” என்று அவசரப்படுத்துவான்.

‘ஆனால் இன்று காற்று திசை மாற்றி வீசுதே’ என்று நினைத்தபடி.. அருண் மெல்ல ஒரு புன்னகையோடு அவளை நெருங்கி…

“செல்லத்துக்கு என்னாச்சு… இவ்வளவு நாளா , இப்படி கோபமா உன்னை நான் பார்த்ததில்லையே…” என்றபடி அவள் கையை பிடித்தான்.

“நீ சொல்லி அனுப்பியது ஏதாவது வாங்கிட்டு வர மறந்துட்டேனா?!.. ” என்று பொறுமையாக அன்போடு கேட்டான் .

அபர்ணா, அவனிடம் இருந்து கையை வெடுக் என்று விடுவித்துக்கொண்டு… அவள் கையில் வைத்திருந்த பையிலிருந்த பொருள்களை கட்டில் மீது கொட்டினாள்.

அருணுக்கு அதைப் பார்த்ததும் அவனுடைய கண்கள் இரண்டும் வெளியே பிதுங்கிக் கொண்டு வந்தது. அவன் அதிர்ச்சியோடு அவளைப்பார்த்தான்.

அங்கே இருந்த பொருள்களில் ஒவ்வொன்றாக எடுத்து அவனது முகத்துக்கு முன்னால் காட்டினாள். அது ஹேர் கிளிப், ஸ்டிக்கர் பொட்டு, ரிப்பன் என்று எல்லாம் பெண்கள் சமாச்சாரமாக இருந்தது .

“இதெல்லாம் என்ன?!” என்பது போல அவள் பார்க்க… இந்தப் பொருள்களை எல்லாம், இதுநாள் வரை அவனுடைய மனைவிக்குக் காண்பிக்காமல், அவன் ரகசியமாக வைத்திருந்தான். இப்போது அது அவள் கண்ணில் பட்டுவிட்டது. அவளுடைய கோபத்துக்குக் காரணம் இதுதான், என்பது அவனுக்கு புரிந்து விட்டது. ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று அவனது மூளை யோசித்தது.

அருண் உடனே அவனது முக பாவனையை மாற்றி… மீண்டும் புன்னகையுடன்…

“அட… இதுதான் உன் கோபத்துக்குக் காரணமா… இது வேற ஒண்ணும் இல்லைடா. என்னோட பழைய நினைவுகள். உன்னை எனக்கு நிச்சயம் பண்ணின பிறகு… உன்னைப் பார்க்கணும், பேசணும்ன்னு இரண்டு மூணு தடவை உன் வீட்டுக்கு வந்தேன் இல்லையா! அப்ப உன்னுடைய பொருள்கள் சிலதை… உன்னோட ஞாபகார்த்தமா இருக்கட்டுமேன்னு எடுத்துட்டு வந்தேன். அப்புறம் நம்ம கல்யாணத்திற்குப் பிறகு, அதையெல்லாம் எங்கே வைச்சேன்னு மறந்திட்டேன். இப்ப அது உன் கையில் கிடைச்சிடுச்சி…அதான் ”

என்று சொல்லிவிட்டு அவள் கன்னத்தைத் தொட்டான்.

உடனே அபர்ணா அவன் கையைத் தட்டிவிட்டு… “இந்தக் கிளிப் என்னோடதில்லை!” என்றாள் காட்டமாக.

“ஓ… அப்படியா? இத உங்க வீட்டில இருந்துதான் எடுத்தேன். ஒருவேளை இது உங்க அண்ணியோடதோ?! அப்ப இந்த ஸ்டிக்கர் பொட்டு கூட உன்னுடையது இல்லையா!?… அப்படின்னா!… அந்த சமயத்தில உங்க வீட்டுக்கு வந்த உறவுக்காரங்களோடதா இருக்குமோ?!” என்று அவன் குழப்பமான முக பாவனையோட சொன்னான்.

அபர்ணா மேலும் ஒரு சிறிய கவரைக் காட்டினாள் . அதில் காய்ந்து தூளாகி விட்ட நிலையில் ஒரு ரோஜாப்பூ இருந்தது. அதைப் பார்த்தும் ,அருணுக்கு முகமெல்லாம் வேர்த்து விட்டது . இருந்தாலும் உடனே திரும்ப யோசித்து விட்டு..

“செல்லம் ..இங்க பாரு .. ஒரு உண்மைய சொல்றேன் கேட்டுக்கோ. நான் உன்னை பொண்ணு பார்க்க வந்த போதே .. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதிலிருந்து உன்மேல எனக்கு ரொம்ப காதலாகிடுச்சு. எப்ப உன்னை கல்யாணம் பண்ண போறேன்னு , ஒவ்வொரு நாளும் தவிச்சிட்டு இருந்தேன். அதுதான் ஆர்வ கோளாறில், உன் தலை முடியில் இருந்து விழுந்த ரோஜாப்பூவைக் கூட உன்னோட நினைவா இருக்கட்டுமேன்னு… இப்படி கிறுக்குத்தனமா..பண்ணிட்டேன்.”

அருண் படபடப்போடு, அபர்ணாவிடம் பேசவும், அவளோ அவனுடைய பேச்சை நம்பாமல், கண்களைச் சுருக்கிப் பார்த்து அவனை முறைத்தாள்.

“ஏம்மா…உனக்கு என் மேல ஏதும் சந்தேகமா?! … நான் உன்னை தவிர வேறு யாரையும் நினைச்சி கூட பார்த்ததில்லை தெரியுமா?!”

என்று அருண் அப்பாவித்தனமாக பேச .. அவன் பேசிய முறையை பார்த்து, பார்த்த அபர்ணாவுக்கு , அந்த கோபத்திலும் சிரிப்பு வரவே… அதை அடக்கிக்கொண்டு மீண்டும் முறைத்தாள். ஆனால் அவள் முகத்தில் தெரிந்த சிரிப்பை அருண் கவனித்துவிட்டான்.

அதுவரை லைசென்ஸ் இல்லாம ட்ராபிக் போலீசிடம் மாட்டின நிலமையில இருந்த அருணுக்கு, அவள் சிரிப்பைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதி ஆனது. அதனால் உடனே பேச்சை மாற்றினான்.

“அச்சச்சோ.. நேரமாயிடுச்சே! ஆபீஸ் போகணும் ..செல்லம் . சீக்கிரம் போய் டிபன் ரெடி பண்ணு, நான் டிரஸ் பண்ணிட்டு வரேன் “. என்று சொல்லிவிட்டு அவசரமாக நகர்ந்தான் .

‘அப்பாடா ஒரு வழியா நான் சொன்னதை நம்பிட்டா! இதெல்லாம் காலேஜ் படிக்கும் போது, என்னோட கிளாஸ்மேட் அமலாவ விரும்பிக் காதலிச்சப்போ, அவளோட பொருளை எல்லாம் இப்படி சேர்த்து வச்சேன். அது ஒரு தலை காதல் தான்!. ஆனா அவள் என்னை விரும்பல. அதனால காலேஜ் முடிந்ததுமே, அவள் மேல இருந்த காதலும் முடிஞ்சுடுச்சு. இந்த உண்மைய அபர்ணாகிட்டே சொன்னா… என்ன ஆகும்.?! . நான் உண்மையை சொல்ல நினைச்சாலும் … அதை இவள் எப்படி எடுத்துக்குவாளோன்னு நினச்சா… பயமா இருக்கே!’

இப்படி மனசுக்குள் நினைத்தபடியே… அருண் ஆபிசுக்கு கிளம்ப தயாரானான்.

அந்த நேரத்தில் அபர்ணாவின் மனசிலும், அருணை பற்றிய யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது.

‘அருண், இதுக்கு முன்னாடி யாரோ ஒரு பொண்ணை காதலிச்சிருக்கணும். அதனால இந்த பொருளையெல்லாம் அவள் நினைப்பாக எடுத்து வைத்திருக்கணும் . இப்ப என்கிட்ட மாட்டினதும் சமாளிக்க என்னென்னவோ பேசறார்’

“நீங்க சொல்றது நம்பற மாதிரி இல்ல அருண்!” என்று சத்தமாக கத்திப் பேசி அவனோடு சண்டை போட வேண்டும் என்று அவளுக்கு மனசு துடித்தது.

ஆனால் அப்படி அவளுடைய மனசு இப்படி நினைத்தாலும், அவளுக்கு புத்தி வேற மாதிரி யோசித்தது.

‘அருண் சொல்வது உண்மையாக இருந்தாலும் அல்லது பொய் என்றாலும், ஒருத்தர் மனசுக்குள்ள என்ன இருக்குதுன்னு அவங்களாக சொல்லாம, இன்னொருத்தரால கண்டுபிடிக்க முடியாது!. அருண் இதுவரைக்கும் அவள் கூட அன்பாகத்தான் நடந்து கொள்கிறான். அவள் சில சமயங்களில் சட்டென கோபப்பட்டு பேசினால் கூட பொறுமையாக, அவளை அனுசரித்து நடந்து கொள்கிறான்.

ஒருத்தரோட கடந்த கால வாழ்க்கையில் நடந்த தவறுகளுக்கு காரணம் அந்த வயதின் தடுமாற்றங்களாக கூட இருக்கலாம். இந்த காலகட்டத்தில், பெரும்பாலும் இது மாதிரியான சூழ்நிலை, சந்தர்ப்பங்களை கடந்து வராமல் யாரும் இருக்க முடியாது. அந்த சம்பவங்கள் இப்போ இருக்கிற குடும்ப வாழ்க்கைக்கு தொந்தரவாக இல்லைன்னா, அப்போ இருந்த எண்ணங்கள்

இப்போதும் தொடராம இருந்தாலோ…. அதை கண்டுக்காம கடந்து போறதுதான்…. குடும்பத்துக்கும் உறவுக்கும் நல்லது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. அந்த பழைய கதையைக் கிளறி, அவனை சங்கடப்படுத்திப் பேசி, அது ஒரு பிரச்சனையாக மாறினால்… கணவன் மனைவிக்குள்ள மனகஷ்டம் ஏற்பட்டு, இப்ப இருக்கிற நெருக்கம் குறைந்து ஒரு இடைவெளி வந்து விடும்.

எப்போதோ நடந்த ஒரு விஷயத்தை பேசி… இப்ப இருக்கிற சந்தோசமான வாழ்க்கையை ஏன் கெடுத்துக்கணும்.!’ என்று நினைத்த அபர்ணா, அவன் சொன்ன கதையை நம்பியது போல , அருணை பார்த்து, ஒரு புன்னகையை செய்து விட்டு, அவனுக்கு டிபன் எடுத்து வைத்து பரிமாறினாள் .

அவள் எடுத்த இந்த முடிவால் , அவளுடைய மனசு சமாதானமானது போல் இருந்தது.

கலைமகள், ஜனவரி 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *