கிளிப்பேச்சு – ஒரு பக்க கதை
நெருக்கடியான நகரப் போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை.வாகனங்கள் அனைத்தும் பரபரப்பை,சத்தங்களோடு விரைந்து கொண்டிருந்தன. அதில் புதிதாய் வாங்கிய மாருதி-800 ல் இன்னும் ஒரு மாதத்தில் நடக்கவிருக்கும் கல்யாணம் பற்றிய நினைவுகளோடு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தாள் ஹனு. வருங்காலக் கணவன்,வாங்க நினைக்கும் நகைகள், சேலைகள் என வண்ண வண்ண கனவுகளின் ஒத்திகையோடு அவள் சென்றுகொண்டிருந்த போது திடீரென ஒரு வளைவில் வேகமாய் வந்த லாரி அவள் கார் மீது மோத அவள் தூக்கி எறியப்பட்டாள். சாலையோரம் இருந்த இரும்புக்கம்பியில் அவள் கழுத்து அடிபட்டு விழுந்தாள். கூட்டம் கூடியது.
பிறகு…
சோலை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு. டாக்டர்கள், நர்சுகள் என துரிதமாய் செயல்பட அவளுடைய முகவரியறிந்து வீட்டுக்கு தகவல் சொல்லப்பட இரு வீட்டாரும் வந்து அழுகையும், பயமுமாய் தவித்து கொண்டிருந்தனர்.
சாயங்காலம் டாக்டர் அழைத்தார்.
“பெரிசா பயப்பட ஒண்ணுமில்ல.ஆனா இரும்பு கம்பில மோதி பலமா அடிபட்டதால இனி பேசுரதுங்கிறது கொஞ்சம் கஷ்டம். ஆனா பேச்சே வராதுங்கிறது இல்ல. பேசி பேசி பழகனும்” என்றார். நிச்சயம் செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பத்திரிக்கைகள் எல்லாம் கொடுத்தாகி விட்டது.
இரண்டு வாரங்களுக்கு பின் ஹனு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று ஊஞ்சல் நாற்காலியில் ஆடியபடியே பழைய நினைவுகள், கல்யாணம், விபத்து என்று சோகமாய் இருந்தாள்.
அப்போது “ஹனு…ஹனு…” என்று கூண்டுக்கிளி அழைத்தது.
அவள் அதை பார்த்தாள். தான் இருக்கும் நிலையை போல, சொல்ல முடியாத சோகங்களோடு தானே அந்தக் கிளியும் இருக்கும் என்று நினைத்தாள். அதை அடைத்து வைக்க கூடாது. சுதந்திரமாய் அது பறந்து திரியட்டும் என எழுந்து சென்று கூண்டை திறந்து விட்டாள். கிளி வெளியே போக மறுத்தது.
ஹனுவை பார்த்து “அம்மா…அம்மா…” என்றது… பிறகு” அப்பா…அப்பா..” என்று சொன்னது.
அவை,அந்த வார்த்தைகள் ஆசையோடு அந்த கிளியை வாங்கி வந்து ஹனு சொல்லி கொடுத்த வார்த்தைகள்.
கிளி மீண்டும் “அம்மா…அம்மா..” என்றது.
ஹனு கண்களில் நீர் திரள “அ….அம்….மா…” என்று பேச பழகினாள்.