கிரஹணம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 3,408
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவளுக்கு வரவே பிடிக்கவில்லை. “நான் இங்கேயே குழாயில் இரண்டு சொம்பு ஊற்றிக்கொண்டு விடுகிறேன். நீங்கள் போய் வாருங்கள்” என்றாள். ஆனால் அவர் தான் கேட்கவில்லை.
‘சூரிய கிரஹணம் சும்மா வருவதில்லை . தம்பதி ஸ்னாநம் ரொம்பப் புண்ணியமாக்கும். உனக்கு என்ன தெரியும்?”
ஆம்; அவளுக்குத் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரிய நியாயமுண்டு. இதுவரை இரண்டு மனைவியரை சமுத்திர ஸ்னாந்த்திற்கு அழைத்துப் போயிருக்கிறார். இவள் மூன்றாமவள்.
சமுத்திரம் சீறினால் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்றும் அவளுக்குத் தெரியாது. அந்த சுழிப்பும், வெறியும் அவள் கற்பனையையும் மீறியது. அவள் பட்டிக்காட்டுப் பெண். அவள் ஊரில் ஒருகுளம் உண்டு. பட்டணத்திற்கு வந்த புதிதில், கடல், அக்குளத்தைப்போல் ஒரு ஆயிரம் குள அகலமிருக்கும் என்று நினைத்திருந்தாள்.
ஆயினும் இம்மாதிரி ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை வியாபித்த இப்பெருவெகுளிக்கு அவள் ஒரு நாளும் தயாராயில்லை.
கடவுள் வகுத்த வரையை மீற இயலாது. ஆங்காரம் பிடித்த குழந்தை தன் ஆத்திரத்தைத் தன்மேலேயே தீர்த்துக் கொள்வது போல், சமுத்திரம் பொங்கிப் புழுங்கிப் பெருகியது. அலைகளுக்கப்பால் கடல் ஜலம் பெருமூச் செறிந்து கொண்டு விம்மி வடிந்தது. அதன் மனத்தின் கரிப்பு அதன் உப்பில் துப்பிற்று.
அலைகள் –
அத்துமீறிய மகன், அப்பனின் முகத்துக்கெதிரில் முஷ் டியையாட்டிப் பழிக்கும் லக்ஷணமாய், மங்கிச் சலித்த சூரிய னைச் சண்டைக்கிழுப்பது போல், எட்டி எட்டி ஆர்ப்பரித் தன. அடிக்க ஓங்கிய கைபோல், ஒவ்வொரு அலையும் அதன் முழு வீச்சுக்கு உயர்ந்தபின், நடுவில் பிளந்து அதினின்று வெண்ணுரை சொரிந்தது. அவை கரையண்டை வரும் போதே வாரி வாயில் போட்டுக் கொள்வதுபோல் தான் வந் தன. அவை எழும்பிவரும் பயங்கரத்தைக் காணச்சகிக்காமல் அவள் பின்னடைந்தாள். ஆயினும் அவள் கணவன் அவள் கையைப் பிடித்து அலைப்புறமாய் இழுத்தார். அன்று தான் புதிதாய்ப் பார்ப்பது போல். பயத்தால் வெறித்த அவள் கண்கள், அவள் கையைப் பிடித்த அவள் கணவன் கைமேல் பதிந்தன. ரொம்பவும் வயதாகாவிடினும் அவர் கையில் சதை சுண்ட ஆரம்பித்துவிட்டது. எலும்பும் நரம்பு முடிச்சு மாய் அவர் பிடி, சாவின் பிடிபோலவேயிருந்தது.
“அடி அசடே – என்ன பயம்? இத்தனை பேர் குளிக்கல்லே?”
ஆம்; எத்தனை பேர் ! எத்தனை தலை. எத்தனை கை , எத்தனை உறுப்புக்கள்! பலநாளின் விரகத்தை ஒரே நாளில் தணித்துக் கொள்வது போல் அலைகள் – கடலின் அத்தனை கைகள் போல், குளிப்பவரைத் தூக்கித் தரையில் விசிறியெறிந்து, ஆடைகளை அலங்கோலமாக்கி அணைத் தன . ஆடை நனைந்ததுமே அவரவர் உடலின் உருவகம் வெளிப்பட்டது. ஆனால் அவளைத் தவிர மற்றவர் அத்தனை பேரும் கிரஹண ஸ்நானத்தை அனுபவித்த வண்ணமாய்த் தானிருந்தனர். ‘குக் குக்குக்கூ – கெக்கெக் கெக்கே” எனும் அவர்களின் சிரிப்புதான் அவர்களின் குலைந்த மானத்தை மறைக்க முயன்றது.
“என்னை விட்டுடுங்கோ – நான் கரையிலேயே வெறு மென தீர்த்தத்தைத் தெளித்துக் கொண்டு விடுகிறேன் -“
“பைத்தியம்…. நாட்டுப்புறம்! இங்கே வந்து ரகளை பண்ணி மானத்தை வாங்கறது -“
“நான் மாட்”
வார்த்தை முடியவில்லை . அதற்குள் ஒரு அலை அவள் மேல் இடிந்து விழுந்து விட்டது. ‘வீல்’ என்று தொண்டை யினின்று எழுந்த வீறல் அப்படியே அமுங்கிப் போயிற்று. அலை வந்து விழுந்த வேகத்தில் அவள் கணவனின் பிடியினின்று அவளைப் பிடுங்கி, தன் வழியே அவளை இழுத்துக் கொண்டு போயிற்று.
அவளுக்கு எப்பவும் அச்சங்கலந்த ஒரு சந்தேகம் உண்டு. சாகுந்தறுவாயில் எப்படியிருக்கும்? அச்சமயம் மனம் எதை வேண்டும்? அவளுக்கு இப்பொழுது ஒன்றுதான் வேண்டும். மூச்சு.
அலை ஜலம் அவளை மேலும் கீழும் நாற்புறமும் சூழ்ந்து, வாய் கண் மூக்கிலேறி அமிழ்த்துகையில் அவள் வேண்டுவது மூச்சு – மூச்சு – மூச்சு – ஒரு நூலளவாயினும் மூச்சு!- அவள் தான் இறந்து போய் விட்டதாகவே நினைத்துக் கொண்டு விட்டாள். அலைகடந்து கலங்கிய அடி வண்டல் வெள்ளத்தில் அவள் கண்ணெதிரில் பல்லாயிரம் மணல்கள் பல்லாயிரம் உயிர் பெற்று நீந்தின.
செத்த பிறகும், ஒரு நூலளவு மூச்சுக்கு உயிர் ஊச லாடுமோ? கறுப்புக் கடிதாசுக் கூட்டுக்குள் எரியும் கைவிளக்குப் போல், சாவின் அந்தகாரத்துள் உள் நினைவிலிருந்து கொண்டு, ஒரு இழை – ஒரே இழை மூச்சுக்குத் தவிக்குமோ?
அவள் கைகள், அந்நூலிழை மூச்சையே தேடி, மூடி மூடித் திறந்தன. கண்ணிலும் வாயிலும் மூக்கிலும் அடைத்துக் கொண்டு உயிரையே குடிக்க முயன்ற ஜலத்தை உதற முயன்றாள், ஆனால் சமுத்திரம் அவள் அவஸ்தைக்கு இரக்கம் பார்க்கவில்லை. அதன் பெரும் கோஷம் ஒரு பெரும் சிரிப்பாயிருந்தது. அவளடியில் மணலைப் பறித்து அவளைத் தன் வழியே இழுத்தது. அப்படி அதன் வழியே உழன்று செல்கையில், சாவின் வழியே தான், ஆயிரம் மைல் போய் விட்டாற் போலிருந்தது. ஆனால் இம்மூச்சு?
மூச்சு! ஐயையோ ஒரு மூச்சே…
ஒரு யுகத்தின் முடிவில், தவிக்கும் கையில் ஒரு பிடி தட்டியது. தலையை முழுக்கிய அலை கழுத்தளவு வடிந்து சில்லென்று காற்று முகத்தில் மோதிற்று. இதென்ன பிரயாணம் முடிந்து, செத்தவர்களின் உலகத்திற்கு வந்து விட்டோமா? கண்ணைத் திறக்க முடிந்த பிறகு தான், தான் செத்துப் போய் விடவில்லை என்று அவளுக்குத் தெரிந்தது. எந்த உலகத்தில் அவள் முழுகினாளோ அதே உலகத்தில் தான் முழுகியெழுந்திருக்கிறாள். சுற்று முற்றும் அதே ஜனங்கள் தாம் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந் தனர். அதே துணிகலைந்த மார்புகளும், ஆடை நெகிழ்ந்த இடைகளும், நாண மற்ற கொக்கரிப்பும் கூக்குரல்களும்.
ஆனால் அவள் கையை அவள் கணவன் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அவள் உடலும் உள்ளமும் பதறிற்று. முன்பின் அறியாத எவனோ பிடித்துக் கொண்டிருந்தான்.
அவன் தலையில் குட்டையாய் வெட்டிய மயிர் சிலிர்த்து நின்றது. புஜங்களும் மார்பும், அலையும் கடலில் குளிக்கும் பயிற்சியில் புடைத்துப் பூரித்திருந்தன. முகம் ரத்த ஓட்டத்தின் வேகத்தில் சிவப்பேறியிருந்தது. ஜலம் உடல் மேல் முத்து முத்தாய்த் துளித்து நின்றது. சிவந்த கண்களில் குறும்பொளி வீசிற்று. பென்சிலால் கீறியது போல் ஒழுங்காய் ஒதுக்கிய மீசையினடியில் சிரிப்பில் அகன்ற வாயில் பற்கள் வரிசையாய் ஒளி வீசின. அவன் சிரிக்கையில், உரமேறி அகன்ற வாய் நரம்புகள் இறுகி கன்னத்தில் குழி விழுந்தது.
அவன் பிடி உடும்புப் பிடியாயிருந்தது.
“என்னை விடுடா பாபி -” என்று கூவ வாயெடுத்தாள். அதற்குள் மறுபடியும் ஒரு அலை ஒரு வண்டி செங்கல் போல் அவள் மேல் சரிந்தது. அலை அவளை அழுத்தும் வேகத்தில், சமுத்திரத்தின் ஆழத்தையே அவள் அறிந்து விடுவாள் போலிருந்தது. கிணற்றுள் எறிந்த கல் போல் அவள் பாட்டுக்கு அழுந்திக்கொண்டே போனாள். ஆனால் அவளைப்பிடித்த கைமாத்திரம் பாதாளக் கொலுசு மாதிரி அவளை விடாது பிடித்துக் கொண்டிருந்தது. இதென்ன மாயமா மந்திரமா? அந்தக் கை, கடல் எவ்வளவு ஆழமாயினும் அவ்வளவு தூரம் நீளுமா?
தொண்டையில் முள் மாட்டிக் கொண்டபின், மீன் ஓட ஓட நீளும் தூண்டிற் கயிறுபோல், அத்தனை ஆழத்திற்கும் அந்தக் கை இடம் கொடுத்துக் கொண்டே போயிற்று. அவளால் தப்பவே முடியவில்லை. ஆனால் தப்பவேணும் எனும் எண்ணம் உண்டோ எனும் சங்கை அவளுள் அவளுக்கே எழுந்தது.
கிறு கிறுவென்று மனம் மாத்திரம் அவள் படும் அத்தனை அவஸ்தையிலும் அதிவேகமாய் வேலை செய்து கொண்டேயிருந்தது. மேன்மேலும் பழைய ஞாபகங்களும் புதிய நினைவுகளும், ஒன்றுக்கொன்று ஒவ்வாத எண்ணங் களும் விசித்திரமாய் , அடுக்கடுக்காய்ப் படர்ந்து கொண்டே போயின. பலவர்ண நூல்கள் ஒன்றேறிய சிக்குப் போல் இருந்தது அவள் மனம்.
சாவு அவ்வளவு சுலப சாத்தியமாயில்லை. சாகத் துணிவெல்லாம் சமுத்திரக் கரை மட்டும் தான். சமுத்திரத்திலில்லை .
சாவு அவள் விரும்பவில்லை.
அவளுக்கு எதிலும் விருப்பமில்லை.
என்ன காரணமோ தெரியவில்லை. கலியாணமான பிறகு அவள் தன்னூருக்குப் போக நேர்ந்து, ஒரு நாள் குளத் துக்குக் குளிக்கப் போன இடத்தில், ஒரு கூழாங்கல்லைப் பொறுக்கியெடுத்த சம்பவம் நினைவு வந்தது. உருண்டை யாய் ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவிற்கு வழு வழுத்து, கெட்டியாய்ச் சில்லென்று வெளுப்பாய்…
அவளுக்கு அப்பொழுது திடீரென்று ஒரு எண்ணம் தோன்றிற்று. அவள் இதயம், அதே மாதிரி ஒரு விதமான உணர்வுமில்லாது உறைந்து போய்விட வேண்டுமென்று. அவளுக்குக் கலியாணமானதிலிருந்து எதைக் கண்டாலும் அவ்வளவு வெறுப்பேற்பட்டது.
இத்தனைக்கும் அவள் கணவன் வெகு நல்லவர் என்று அவளுக்குத் தெரியும். அவள் வார்த்தைக் கெதிர்வார்த்தை சொன்னதில்லை. இருந்தும் அவரைவிட யாரையேனும் அதிகம் வெறுத்தாளெனில் ஊர்வாய்க்குப் பயந்து தன்னை இளையாளாய்க் கட்டிக் கொடுத்து விட்ட தன் தந்தை தாயைத்தான். எல்லாவற்றையும் விடத் தன்னையே வெறுத்தாள். என்ன – எப்படியென்று சரியாய்த் தெரியாவிட்டாலும், தன்னை ஏதோ கட்டிக் கொடுத்து விட்டாற்போல் அவளுக்கு எல்லோர் மேலேயும் துவேஷம் விழுந்துவிட்டது.
உலகில் பெண்ணாய்ப் பிறந்த ஒரு காரணத்தாலேயே, இத்தனைக்கும் அடிப்படையாயிருக்கும் தன்னையே அவள் வெறுக்கும் பயங்கரம்- இப்பொழுது ஜலத்தடியில் மூச்சுத் திணறுகையில் பளிச்சென்று தெரிந்தது.
வாத்தியத்தின் தந்திகளுள் புதைந்த சங்கீதம் போல், தனக்குள் தான் பத்திரமாயிருக்கத்தான் அவளுக்கு இஷ்… ம். தன்னைத்தானே கண்டு பிடிக்காதபடி, தன் உள் தாபத்தைத் தன்னுள் புதைத்துவிட வேண்டும். அப்பொழுது தான், உலகத்தாருடன் ஒத்திருக்கலாம். தெய்வ பயமற்றிருக்க லாம். கணவன் கைபிடித்து ஸ்நானம் செய்து புண்ணியம் தேட வந்த இடத்தில், வேண்டியோ, வேண்டாமலோ பரன் கைபிடித்து ஸ்னாநம் பண்ணி நரகத்தைத் தேடிக் கொண் டிருந்தாலும், மனம் சிணுங்காதிருக்கலாம்.
என்னவிருந்தாலும் கிராமாந்தரத்திலிருந்து வந்த வளாதலால் தெய்வ பயம் மாத்திரம் அவளுக்கு உண்டு. அவள் கணவனை வெறுப்பதே அவளுக்கு பயமாயிருந்தது. நினைத்து நினைத்து மனம் புழுங்கினாள். மொத்தத்தில் நினைப்பு எனும் வினையே அலுப்பாயிருந்தது. கிராமத்தில் நினைக்க வேண்டிய காரியமே ஒன்றும் கிடையாது. எல் லாம் உணர்வு தான். காலையில் சாணி தெளிக்க எழுந்தது முதல், இரவில் மாட்டுக்கு வைக்கோலைப் போட்டுவிட்டு படுக்கும் வரை, இடுப்பொடிய வேலை இருப்பினும் ஏதோ ஒரு மஹாபோதை வசப்பட்டவர்போல், அவரவர் ஒருவருக்கொருவர்கூட அதிகமாய் வார்த்தையாடாமல் அவரவர் ஜோலியில், அழுந்தியிருப்பர். அங்கு நினைப்பிற்கு நேரம் கிடையாது. ஆனால் இங்கு வந்த பிறகு தன்னி னைவே தன்னைச் சுற்ற. அதில் உழன்று அவள் தவித்தாள்.
அவள் மேல் விழுந்த அலை வடிந்து பின் வாங்க ஆரம் பித்து விட்டது. அதுவும் தான் அவளைக் காட்டிக் கொடுக் கப் போகிறது என்று அவளுக்குத் தெரியும். தலை மயிர் பிரிபிரியாய்த் தொங்க, ஆடை உடலோடு ஒட்டிக் கொண்டு, இறக்கையும் சிறகும் பிய்த்தெறிந்த கோழிக் குஞ்சுபோல் அவலக்ஷணமாய், வெடவெடவென்று குளிரில் உதறிக் கொண்டு, தன்னைக் காணத் தனக்கே ஏற்படும் வெட்கத் திலும் வெறுப்பிலும் குன்றிப்போய் நின்றாள்.
அவன் கண்களில் இரக்கக்குறி ஏதும் காணோம். குறும்பு கலந்த வியப்பும், ஒரு அடிப்படையான ஆண் குரூரமும், பொறுமையற்றுச் சுளித்த ஒரு சிறு கோபமும்தான் தெரிந்தன.
அவள் கணவர், சுட்டகத்திரிக்காய் போன்று வதங்கிய சிறு தொந்தி தெறிக்க பதறியோடி வந்தார்.
“என்னடீ எங்கே போயிட்டே! உன்னை அலை வாரியடித்துக்கொண்டு போய்விட்டதோ என்று பயந்துவிட்டேன் – அப்பாடி!”
“இது யார் உங்க பெண்ணா? இந்த அம்மா சாக விருந்தாங்க. நல்ல வேளையாய் நான் பார்த்தேன். என்ன இந்தமாதிரி அஜாக்கிரதையாய் இருக்க -?”
திடீரென்று அவளுக்குச் சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது. அடிவயிற்றைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு இடி இடியென்று சிரித்தாள்; இருவரும் அவளை ஆச்சரியத்துடன் நோக்கினர்; அச்சிரிப்பைத் தொடர்ந்தாற் போலேயே அழுகையும் வந்தது. இதயமே வெடித்துக் கொட்டுவது போன்ற அழுகை. காற்றின் வயப்பட்ட சருகு போல் உடலை உச்சந் தலையினின்று உள்ளங்கால்வரை உலுக்கும் அழுகை.
“நா — ஆ – ஆன் – சமுத் – திரஸ்நா -ஆ – ஆநம் செய்தது – போ – ஓ – ஓ-தும் —என்னை – ஐ–ஐ -சீக்கிரம் – வீ ஈ-ஈட்டுக்கு — அழை- ஐ-ஐச்சு –ண்டு போய் -ய்-ய்-ய்ச் சேருங்கோ – ஓ – ஓ -“
– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.