கிரகணம்
கதையாசிரியர்: அ.வேளாங்கண்ணி
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2026
பார்வையிட்டோர்: 171

“ஏங்க ரொம்ப கவனமா இருங்க. இன்னைக்கு நைட்டு சந்திர கிரகணம். உங்க ராசிக்கு அவ்ளோ நல்லா இல்லையாம்”
“யார் சொன்னாங்க?”
“யூடியூப்ல பார்த்தேங்க”
“அவங்க பொத்தாம் பொதுவா சொல்வாங்க. அதெல்லாம் ஒத்துக்க முடியாது. நம்மோட பிறந்த ஜாதகத்த வச்சு நமக்கே நமக்குனு பார்த்தாத்தான் சரியா இருக்கும்”
“எதுக்கும் கவனமா இருங்க. நம்ம நல்லதுக்குத்தானே சொல்றாங்க”
“எது நல்லதுக்கு சொல்றாங்களா! அவங்க சொல்ற விஷயத்துல 80 சதவீதம் எதிர்மறையாவே இருக்கும்”
“நான் சொன்னா நீங்க கேட்க மாட்டீங்கன்னு தெரியும். இருந்தும் சொல்லிவச்சேன்”
“அதான் கேட்கமாட்டேனே! அப்பறம் ஏன் சொல்ற?”, எனச் சொன்ன அடுத்த நொடி என் செல் அடித்தது.
அழைத்தது மேனேஜர்.
“ராம். இன்னும் ரெண்டு அவர்ல நம்ம கோவை பிராஞ்சுக்கு கிளம்ப முடியுமா? ரொம்ப முக்கியமான டாக்குமென்ட். நானே போயி எடுத்துட்டு வரலாம்னு இருந்தேன். இப்போனு பார்த்து என் வொய்புக்கு ரொம்ப உடம்பு சரியில்லாமப் போச்சு. இப்பத்தான் ஆஸ்பிட்டல சேர்த்தேன். டிரிப்ஸ் ஏறிக்கிட்டு இருக்கு. புட் பாய்ஸன் ஆகிடுச்சு”
“அச்சச்சோ சார். இப்ப எப்படி இருக்காங்க?”
“வீட்டுல இருந்ததுக்கு இப்பக் கொஞ்சம் தெளிவாகிட்டே வர்றாங்க. அப்பறம் நீங்க கோவை போக ரெடி தானே! உங்களை விட்டா எனக்கு வேற நம்பிக்கையான ஆளு யாருயிருக்கா சொல்லுங்க?”
‘போட்டாலும் போட்டார் பெரிய ஐஸ் குண்ட. மறுத்தா சொல்ல முடியும்?’
“நிச்சயமா ரெடி சார். நீங்க என் மேல வச்சிருக்கற நம்பிக்கைக்கு ரொம்ப நன்றிங்க சார்”
“அப்ப நான் எனக்கு புக் பண்ணி வச்சிருக்கற பிரைவேட் பஸ்ல பேசிடறேன். உங்க பேருக்கு என் டிக்கெட்ட மாத்தச் சொல்றேன். எனக்கு கன்பார்மா தெரிஞ்சவுடனே உங்களுக்கு வாட்ஸ் அப் பண்றேன்”
“ஓகே சார்”
“கோயம்புத்தூர்ல உங்களுக்கு அதிக அலைச்சல் ஏதும் இருக்காது. அங்க போனவுடனே அவங்க கொடுக்கற சூட்கேஸ வாங்கிட்டு நீங்க ரிட்டெர்ன் உடனே கிளம்பி வந்திடலாம். சரி தானே?”
“சரிங்க சார். அப்ப நான் ரெடி ஆகறேன் சார்”
“சரிங்க ராம்”
‘நான் டெலிபோனில் பேசுவதையே முழு நேரமும் பார்த்துக்கொண்டிருந்த என் மனைவிக்கு, விஷயம் நான் சொல்லாமலேயே முழுதும் புரிந்து இருக்கவேண்டும்’
போனை வைத்ததுமே புலம்ப ஆரம்பித்தாள்.
“இந்தா இப்பத்தான் கிரகணம் கிரகணம் கவனமா இருங்கன்னு சொன்னேன். அதுக்குள்ள அந்த மேனேஜர் காதுல விழுந்துருச்சு போல”
“ஓ எல்லாமே கேட்டுட்டியா?”
“நீங்கதான் அவர் என்ன சொன்னாலும் தலைய ஆட்டற கேஸாச்சே! எங்கேயோ போயி எதையோ வாங்கிட்டு வாங்கன்னு சொல்லி இருப்பார். நீங்களும் இதோ இப்பவே கிளம்பறேன் சாருனு சொல்லி இருப்பீங்க. அதானே!”
“அதே தான்”
“அப்பறம் கிரகணம் நடக்கற டைம்ல எங்கேயும் வெளியே போகாம வீட்டுலேயே இருங்கன்னும் சொல்ல வந்தேன். அதுக்குள்ள உங்க மேனேஜர் அதே கிரகணம் டைம்ல கெளம்புங்கன்னு சொல்றார். என்னத்தச் சொல்ல?”
“நீ என்னத்தச் சொல்ல முடியும்? சம்பளம் தர்றவர் ரொம்ப நம்பிக்கையான ஆளுனு ஒரு வேலையைச் சொல்றார். முடியாதுனா சொல்ல முடியும்?”
“சார் இன்னைக்கு கிரகணம். இன்னைக்கு விட்டுட்டு நாளைக்கு கெளம்பவானாவது கேட்டு இருக்கலாம்ல?”
“அதெல்லாம் அவர் நம்ப மாட்டாரு புள்ள. அவரே இன்னைக்குத்தான் அவருக்கு புக் பண்ணி வச்சிருந்திருக்கார். அவர் வொய்புக்கு ரொம்ப முடியாமப் போயி ஆஸ்பிட்டல்ல அட்மிட ஆகற அளவுக்கு போகவும் தான் எங்கிட்ட கேட்டிருக்கார்”
“ஓகோ. எதோ நல்லா ப்ளான் பண்ணிட்டார்”
“அப்படியெல்லாம் சொல்லாதடி. ஒன்டே ட்ரிப் தான். நாளைக்கு நைட் வந்திடுவேன்”
“சரி சரி. மேனேஜர் சொன்னப்பறம் நான் சொன்னத எங்க கேட்கப்போறீங்க? பயணம் முழுதும் ரொம்ப கவனமா இருங்க. என்னால அத மட்டும் தான் சொல்லமுடியும். கிரகணம். கிரகணம். ஜாக்கிரதை”
“சரி. இந்தக் கிரகணத்தையே எத்தனவாட்டி சொல்வ? நான் ரொம்ப கவனமா இருப்பேன். கவலைப்படாதே”
அடுத்த ரெண்டு மணி நேரத்தில் தனியார் குளிர்சாதன சொகுசு பேருந்தில் அமர்ந்திருந்தேன். பேருந்துக்குள் மிக மென்மையாகவும், வியக்கும் வகையிலும் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மெல்லிய நறுமணம் பேருந்து முழுவதும் பரவி அங்கே இருந்தவர்களை மயக்கிக் கொண்டு இருந்தது. இளையராஜாவின் மனதை மயக்கும் பாடல்கள் மிகக்குறைந்த ஒலியில் தொடர்ந்து ஒலிக்க சூழல் மிக ரம்யமாக இருந்தது.
கண்களை அப்போதுதான் மூடி தூக்கத்தில் மூழ்கி இருப்பேன்.
“சார் சார்”, என்றொரு தேன் குரல்.
‘புஷ்பக விமானத்தில் பறந்து கொண்டிருப்பதைப் போன்ற நினைப்பில் தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு தேவதையின் குரல் கேட்டால் எப்படி இருக்கும்?’
‘கண்களைத் திறந்து பார்த்தேன். ஆம். ரெக்கை இல்லாத ஒரு தேவதை தான் அங்கே நின்று கொண்டிருந்தாள்’
“கொஞ்சம் கைய எடுத்துக்கிறீங்களா? இது என்னோட சீட். கொஞ்சம் அவசரப்பயணம். இந்த ஒரு சீட்டுத்தான் இருக்கு. பக்கத்து சீட்டுல ஜென்ஸ் இருப்பாங்க. பரவாயில்லையானு கேட்டாங்க. பரவாயில்லேனு சொல்லிட்டு வந்து பார்த்தா ஒரு ஜென்டில்மேனே இருக்கீங்க”
‘அறைகுறையாய் உலவிக் கொண்டிருந்த தூக்கமும் அந்த நொடியில் அதிரடியாய் ஓடிப்போனது’
‘ஒரு புன்னகை உதிக்க என் கைகளை அந்த சீட்டிலிருந்து எடுத்துவிட்டு தேவதை அமர இடம் கொடுத்தேன்’
“சாரி சார். கொஞ்சம் அதிகப்படியா பேசி இருந்தேனா! நான் எப்பவும் அப்படித்தான்”
“இல்லேங்க. சாரிலாம் வேண்டாம். நீங்க சொன்னாலும் சொல்லலேனாலும் நான் ஜென்டில்மேன் தான்”
‘புஷ்பகவிமானம் மீண்டும் பறக்கத் தொடங்கியது. இதுவரை தனியாகப் பயணித்தவன், இப்போது ஒரு தேவதையுடன் பயணித்துக் கொண்டிருந்தேன்’
“சார். வாங்க போங்கெல்லாம் வேண்டாம். நான் ரொம்ப சின்னப்பொண்ணு. பேரு ரம்யா. நீங்க என்னை பேர் சொல்லி ரம்யானே கூப்பிடலாம்”
‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சூழல் மிக ரம்யமா இருந்ததுனு சொன்னேன்ல. அத அழிச்சிருங்க. இப்ப இப்பத்தான் சூழல் நிஜமாவே ரம்யாவா சாரி ரம்யமா இருக்கு’
‘ஒரு டேரி மில்க் சாக்லேட்டை எடுத்தவள் பாதி எனக்குக் கொடுத்தாள்’
‘அமுதம் கிடைத்ததாய் ஆனந்தமாய் வாங்கிக்கொண்டேன்’
‘இப்போதா என் மனைவியின் நினைப்பு வரவேண்டும்? ஆனாலும் வந்தது. அவள் சொன்ன கிரகணம் கிரகணம். கவனம் கவனம். ஜாக்கிரதையெல்லம் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தது’
‘எதோ கிரகணம் அது இதுனு சொல்லி என்னை எப்படி பயமுறுத்தினா! இப்ப அதுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரியில்ல இந்தப்பயணம் அமைச்சிருக்கு’
‘புஷ்பகவிமானம், சிம்மாசனம், அருகில் ராணி. ஆகா என்னவொரு ஆனந்தம்!’
‘சற்று நேரத்தில் தூங்க ஆரம்பித்த தேவதை, என் மேலேயே சாய்ந்து கொண்டாள்’
‘எனக்கெங்கே தூக்கமா வரும்? அவள் தூங்கி விழாமல் வருகிறாளா என்று பார்த்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தவன் எப்போது தூங்கினேன் என்று தெரியாது’
‘விடியும் நேரம் சட்டென விழிப்பு வர, கண் திறந்து பார்த்தால் பக்கத்திலிருந்த தேவதையைக் காணவில்லை’
‘செல்லமா பாய் சொல்லிட்டுப் போனாளா பாரு’ என உள்மனம் கோவம் கொள்ள, பாக்கெட்டில் கை தானாய் போக, பாக்கெட் கனம் குறைந்ததாய் இருந்தது’
‘அதிர்ச்சியுடன் கைவிட்டுப் பார்க்க, பாக்கெட்டில் வைத்திருந்த மூவாயிரம் ரூபாயைக் காணவில்லை. ஒரே ஒரு ஐம்பது ரூபாய் மட்டும் இருந்தது. பக்கத்தில் ஒரு சின்ன பேப்பர் மடித்து வைக்கப்பட்டு இருந்தது’
அதில், ‘சாரி சார். எனக்கு அவசரத் தேவை. அதனால் அன்புடன் எடுத்துக் கொள்கிறேன். அடுத்த முறை சந்திக்கும் போது திருப்பித்தருகிறேன்’ என எழுதி இருந்தது.
‘என்ன அடுத்த முறையா? படுபாவி அன்புடன் எடுத்துக் கொண்டாளாமே!’
‘என்ன இருந்தாலும் தேவதை ஒரு கண்ணியமான திருடி போல. என் செல்போன எடுக்கல, சூட்கேஸ எடுக்கல. முழுப்பணத்தையும் எடுக்கல. பஸ்ஸுக்கும் டீக்கும் ஐம்பது ரூபாய மிச்சம் வச்சிட்டுப் போயிருக்கா. நடந்த விஷயங்களை நானா வீட்டுல சொல்லப் போறதில்ல. நீங்களும் சொல்லிடாதீங்க’
‘கிரகணம் கிரகணம். கவனம் கவனம்’
– பிப்ரவரி 2026, தினமலர் வாரமலர் திருச்சி பதிப்பு.
![]() |
அ.வேளாங்கண்ணி என்பவர் நவீன தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாவல்களை எழுதி வரும் ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் புதுக்கோட்டையில் பிறந்து, கரூரில் வளர்ந்தவர். அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்: இலக்கியப் பங்களிப்பு: 'துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய்' மற்றும் 'நீங்காத எண்ணம் ஒன்று' போன்ற நூல்களை எழுதியுள்ளார். சிறுவர் கதைகள் முதல் சமூகம் சார்ந்த புனைவுகள் வரை பல படைப்புகளைப் படைத்துள்ளார். [1, 2,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சுமதி என் சுந்தரி
முனைவர் வெங்கடேஷ் கணபதி
July 17, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
July 17, 2026
அட… மெல்ல நட!
கல்பனா ராஜகோபால்
July 17, 2026
